இதுவு மது. பெயர் : மறம்வீங்கு பல்புகழ். 1 - 3 வயவர்............வேந்தே. உரை : வயவர் வீழ - வீரர்கள் தோற்று நிலத்தே விழுமாறு; வாள் அரில் மயக்கி - வாட்போரைச் செய்து; இடம் கவர் கடும்பின் அவர்தம் நாட்டைக் கவர்ந்து கொள்ளும் சுற்றத்தாரையுடைய; அரசு தலை பனிப்ப - அரசர்கள் தலைநடுங்கி வணங்க; கடம்பு முதல் தடிந்த - அவர்தம் காவல்மரமாகிய கடம்பினை அடியோடு வெட்டியழித்த; கடும்சினவேந்தே - மிக்க சினத்தையுடைய சேரவேந்தே; வயவர், வலிமைப் பொருட்டாய உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயர். எனவே, இவர் தமது வலியாற் பல போர்களைச்செய்து வெற்றி பெற்ற வீறுடைய ராதல் பெற்றாம். ஆகவே, இத்தகையாருடன் போருடற்றுவதே ஆண்மைக்குச் சிறப்பாதல்பற்றி, “வயவர் வீழ வாளரில் மயக்கி” என எடுத்தோதினார். இருதிறத்து வீரரும் தம் வாட்படையால் தம் தொழிற்றிறந் தோன்றப் பொருதலின், அப்போரை “வாளரில்” என்றார்; “வாள்மயங்கு கடுந்தார்” (பதிற். 36) எனப் பிறரும் கூறுதல் காண்க. “இடஞ்சிறி தென்னும் ஊக்கந் துரப்ப” (புறம். 8) எழுந்த தம் வேந்தர்க்குத் துணையாய் மண்ணசையெஞ்சா மனமாண்புடைய ராதல் தோன்ற, “இடங்கவர் கடும்பின்” என்றும், தாம் கருதும் இடம் கவர்ந்தபின் னல்லது மடங்கா மறமுடைய அக் கடும்பு சூழவிருந்தும் நின் வலிமிகுதி யுணர்ந்து உளம் தளர்ந்து உடல் நடுங்கினரென்பார், “அரசுதலை பனிப்ப” என்றும், அவர் அன்னராக, நீ அவர் தம் காவல் மரத்தைக் கடிந்தனை யென்பார், “கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின |