மறப்புகழ் மற்றைப் புகழினும் மிக்க பல்புகழ்” என்றும், “இச் சிறப்பானே இதற்கு மறம்வீங்கு பல்புக ழென்று பெயராயிற்” றென்றும் கூறினார். 9 - 14. நின்செல்வம்............ஒக்கல் உரை : நின் செல்வம் கேட்டொறும் - நின் செல்வத்தைக் கேள்விப்படுந்தோறும்; காண்டல் விருப்பொடு - நின்னைக் காண்டல்வேண்டுமென் றுந்திய விருப்பத்தால், வாடாப் பைம்மயிர் - உதிராத பசிய மயிரினையும்; இளைய - இளமைத் தன்மைக் கொத்த; ஆடு நடை - அசைந்த நடையினையுமுடைய; அண்ணல் மழகளிறு - பெருமை பொருந்திய இளங்களிற்றினை மொய்க்கும்; அரி ஞிமிறு - வண்டு ஞிமிறு முதலியவற்றை; கமழும் குளவி - மணங்கமழும் காட்டு மல்லிகையால்; ஓப்பும் - ஓட்டுகின்ற; கன்று புணர் பிடிய - கன்றோடுகூடிய பிடிகளையுடைய; குன்று பல நீந்தி வந்து - குன்றங்கள் பலவற்றைக் கடந்து வந்து; அவண் இறுத்த இரும் பே ரொக்கல் - தங்குதற்குரிய அவ்விடத்தே தங்கிய கரிய பெரிய என் சுற்றத்தார்; செல்வத்தைப் புகழொடு கூட்டிப் பின் அதனையே வருவித்தலினும், அதனையே கேட்டொறும் என்பதற்கு முடிபாக வருவித்தல் சிறப்பாதல் பற்றி வேறு கொள்ளப்பட்டது. மறம்வீங்கு பல்புகழைக் கேட்குந்தோறும் செல்வமிகுதி தானே பெறப்படுதலின், அதனைக் கேட்டொறும் காண்டல் வேண்டு மென்ற விருப்பெழுந்து என் சுற்றத்தைத் துரப்ப தாயிற் றென்றார். பகைப்புலத்து வென்று பெறும் செல்வம் இரவலர்க் வழங்கப்படுதலின், மறப்புகழ் கேட்ட இரவலர்க்குக் காண்டல் வேட்கை கிளர்ந்தெழுதலியல்பாதலின், “கேட்டொறும் காண்டல் விருப்பொடு” என்றார். களிற்றின் இளமைச் செவ்வி இனிது தோன்ற, மயிர் வாடாமையும் அசைநடையும் விதந்து, “வாடாப் பைம்மயிர் இளைய வாடுநடை” யென்றும், காமச்செவ்வி தோன்ற, “அண்ணல் மழகளிறு” என்றும் கூறினார். இக்களிற்றின் பாலொழுகும் மதநீரை யுண்டற்கு மொய்க்கும் வண்டினத்தை, “அரிஞிமிறு” என்றார.் அரி, வண்டு, “அரிக்கண மொலிக்கும்” (முருகு 76) என வருதல் காண்க. ஞிமிறு, வண்டின் வகை. அரிஞிமி றென்றே கொண்டு, கோடுகளையுடைய வண்டெனினு மமையும். இவ்வண்டினத்தை, காதலன்புடைய கன்றைத் தழீஇச் செல்லுமிடத்தும் களிற்றின்பாலுள்ள கழிகாதலால், குளவியைப் பிடுங்கி அதனை யோப்பு மென்பார், “கமழும் குளவி யரிஞிமி றோப்பும்” என்றார். குளவியாலென ஆலுருபு விகாரத்தாற்றொக்கது. குளவியையுடைய குன்றென்று கூறுதலு முண்டு. பாணர் முதலிய இரவலர் அரசன்பால் வந்தவிடத்து அவரனைவரும் ஒருபுறத்தே தங்க, அவருள் தலைவனாவான் முதற்கட் சென்று அரசன் செவ்வி யறியும் இயல்பு தோன்ற, “குன்றுபல நீந்தி வந்தவண் இறுத்த ஒக்கல்” என்றும், வறுமைத் துயராலும், வழிநடை வருத்தத்தாலும் மேனி வாடிக் கரிந்திருத்தல் பற்றியும், பலராதல் பற்றியும், “இரும்பே ரொக்கல்” என்றும் கூறினார். |