15 - 25. தொல்பசி...........மகிழ்வே உரை : தொல் பசி யுழந்த பழங்கண் வீழ - (என்னுடைய அவ்வொக்கல்) நெடுநாட்களாகப் பசியால் வருந்திய வருத்தம் கெட; எஃகு போழ்ந்து அறுத்த - அரிவாளாற் பிளந்து அறுக்கப்பட்ட; வால் நிணக் கொழுங்குறை - வெள்ளிதாகிய ஊனினது கொழுவிய இறைச்சியும்; மை ஊன் பெய்த வெண்ணெல் வெண்சோறு - ஆட்டிறைச்சி பெய்து சமைத்த வெண்ணெல்லின் வெண்மையான சோறும்; நனையமை கள்ளின் தேறலொடு மலரரும்பு பெய்து பக்குவம் செய்யப்பட்ட கட்டெளிவுடனே; மாந்தி - உண்டு; நீர்ப்படு பருந்தின் ஈர்ஞ்சிறகு அன்ன - மழையால் நனைந்த பருந்தினுடைய ஈரிய சிறகை யொப்பக் கிழிந்த; நிலம் தின் சிதாஅர் - மண்படிந்து மாசேறிய கந்தையாகிய உடையை; களைந்த பின்றை - நீக்கிய பின்பு; நூலாக் கலிங்கம் நூற்கப்படாத நூலாகிய பட்டாலியன்ற ஆடை தந்து; வால் அரைக் கொளீஇ - வாலிதாக அரையில் உடுத்துக்கொண்டு; வணர்இருங் கதுப்பின் - (தம்மில்) கடை குழன்ற கூந்தலையும்; வாங்கு அமைமென்றோள் - வளைந்த மூங்கில் போலும் தோள்களையுமுடைய; வசையில் மகளிர் - குற்றமில்லாத மகளிர்; வயங்கு இழை அணிய - விளங்குகின்ற அணிகளை அணிந்து கொள்ளவே; அமர்பு நின்னை மிக விரும்பி; மெய் ஆர்த்தசுற்றமொடு - நின்மெய்யோடு ஆர்க்கப்பட்டாற்போற்சூ ழவிருக்கும் நின் சுற்றத்தாருடன்; நின் பெருங் கலி மகிழ்வு - வீற்றிருக்கும் நினது பெரிய திருவோலக்க வின்பம்; நுகர்தற்கு இனிது - கண்டு மகிழ்தற்கு இனிதாக வுளது எ - று. என் ஒக்கலுற்ற வறுமைத்துன்பம் பன்னெடு நாட்களுக்கு முன்னர்த் தோன்றி வருத்துவ தென்றற்கு, “தொல்பசி யுழந்த பழங்கண்” என்றும், அஃதினித் தோன்றாவாறு கெட்டதென்பார் “வீழ”என்றும் அதன் வீழ்ச்சி நிலை கூறலுற்று, வானிணக் கொழுங்குறையும் வெண் சோறும் கட்டெளிவும் உண்டதும் கூறினார். மை யூன் - ஆட்டிறைச்சி. “மையூன் மொசித்த வொக்கல்” (புறம். 96) என்றார் பிறரும். சோற்றோடு ஊன் கலந்து அட்டுண்டல் பண்டை வழக்கு; “நெய்குய்ய வூனவின்ற, பல சோற்றான் இன்சுவைய” (புறம். 382) என்று சான்றோர் கூறுதல் காண்க. நனையமை கள்ளின் தேறலாவது, தேனை மூங்கிலிடத்தே பெய்து, அதனுள் இஞ்சிப்பூ முதலியவற்றை யிட்டுப் பக்குவம் செய்து தெளி்வித்துக்கொள்ளும் கட்டெளிவு. “தேறுகள் நறவுண்டார்” (கலி. 147) என்றும், “நீடமை விளைந்த தேக்கட்டேறல்” என்றும் சான்றோர் உரைப்பது காண்க. மண்மாசு படிந்து கிழிந்து கந்தையாகிய வுடைக்கு நனைந்த பருந்தின் சிறகு நிகராதலை, “கூதிர்ப் பருந்தின் இருஞ்சிற கன்ன, பாறிய சிதாஅரேன்” (புறம் 150) என ளஆசிரியர் வன்பரணரும் கூறுகின்றனர். பட்டு, கையால் நூற்கப்படாமை பற்றி, நூலாநூல் எனப்பட்டது. நூலாநூற் கலிங்கமென்பது நூலாக்கலிங்க மெனத் தொக்கு முடிதல் தமிழ்மர பன்மையின், அதன் பொருந்தாமை கண்டே பழையவுரைகாரர், “தொகுத்துக் கூறினா னென்பாரு |