தொடுத்தணிந்து விளையாட்டயர்பவாதலின், அவர் துணங்கையாடி விளையாடுமிடம் ஆம்பல் மிடைந்து கிடத்தலால், “துணங்கை யாடிய மருங்கின், வளைதலை மூதா ஆம்பலார்நவும்” என்றார். கலிகெழு துணங்கை யென்றதனால் வாச்சிய வொலியே யன்றி, இளையமகளிர் விளையாட்டொலியும் பெற்றாம் “அளிய தாமே சிறுவெள் ளாம்பல்..........இளைய மகாத் தழைய யினவே”(புறம். 248) என்பதும் இதனை வலியுறுத்தும். முதுமை யெய்தியவழி மக்களும் விலங்கும் தலைசாய்தல் இயல்பாதலின், “வளைதலை மூதா” என்றார். இதுகாறும், முல்லையும் குறிஞ்சியுமாயவை நல்வளம் நல்கும் மருதவயலாகி மாண்புற்று விளங்கும் திறங்கூறிய ஆசிரியர், அதன்கண் நிற்கும் மரவகையும் நீர்நலமும் கூறலுற்று, “ஒலி தெங்கின் இமிழ் மருதின்” என்றும், “புனல் வாயிற் பூம் பொய்கை” யென்றும் கூறினார். இமிழ் மருதெனவே, இமிழ்தற்குரிய வினைமுதல் வருவிக்கப்பட்டது பொய் கைக்கண்ணுள்ள நீர் சென்று வயல்களிற் பாய்ந்து பயன் விளைக்கும் வாயிலாதலின், கால்வாயைப் “புனல் வாயில்” என்றார். “வயலமர் கழனி வாயிற் பொய்கை” (புறம். 354) என்று பிறரும் கூறுதல் காண்க. இவ்வாறு நீர்வளம் மிகுந்து செல்வம் சிறத்தலால் புலவர் பாடும் புகழ் பெறுவதாயிற்றென்பார், “பாடல்சான்ற பயங்கெழுவைப்பின் நாடு” என்றார். வைப்பு - ஊர்கள். இவ்வண்ணம் கவின்மிக்கு விளங்கும் நாடு, சேரலாதனைப் பகைத்தமையா லெய்தும் அழிவினை இனிக் கூறுகின்றார். 10 - 19. நாடு கவினழிய...............பாழாயினவே. உரை : நாடு கவின் அழிய - (மேற்கூறிய) நாடுகள் தம் அழகு கெடுமாறு; நாமம் தோற்றி - அந்நாட்டிடத்து உயிர்கட்கு அச்சத்தைத் தோற்றுவித்து; நீ சிவந்து இறுத்த - நீ வெகுண்டு தானையுடன் தங்கி முற்றுகையிட்டதனால்; கூற்று அடூஉநின்ற யாக்கை போல-கூற்றுவனால் அடப்படும் யாக்கை புல்லெனத் தோன்றிப் பொலிவழிவது போல; நீர்அழி பாக்கம் - தம் நீ்ர்மை யழிந்த பேரூர்கள்; விரிபூங் கரும்பின் கழனி - விரிந்த பூவையுடைய கரும்பு விளையுங் கழனிகள்; புல்லென - புல்லென்று தோன்ற; திரிகாய் விடத்தரொடு - முறுக்கியது போலும் காயையுடைய விடத்தேரை மரங்களுடன்; கார் உடை போகி - கரிய உடையென்னும் மரங்கள் நெடிது வளர்ந்தோங்க; கவைத்தலைப் பேய்மகள் கழுது ஊர்ந்து இயங்க - கவைத்த தலைமயிரினையுடைய பேய்மகள் கழுதினை யூர்ந்து திரிய; ஊரிய நெருஞ்சி - பரந்த நெருஞ்சி முள் மிகுந்து; நீறாடு பறந்தலைத்தாது எரு மறுத்த நீறுபட்ட போர்க்களத்தின் புழுதிபடிந்து பொலிவிழந்த; கலியழி மன்றத்து - மக்களும் மாவும் செய்யும் ஆரவாரம் இல்லையாயழிந்த ஊர் மன்றத்தின்கண்; ஊக்குநர் உள்ளம் அழிய - செல்லுமாறு கருதுவோர் மனவெழுச்சி அச்சத்தால் அழிய; உள்ளுநர் மிடல் தபுத்துப் பனிக்கும் |