அழிய ஊக்குநர் மிடல் தபுத்து உள்ளுநர் பனிக்கும் பாழென்றது, அம்மன்றிலே போதற்கு உள்ளம் அழியச்செய்தே பின்னும் தம் கருமவேட்கையாற் போக மேற்கொண்டவருடைய வலியைக் கெடுத்தலானே பின்பு போக நினைப்பார் நடுங்குதற்குக் காரணமாகிய பாழ் என்றவா” றென்றும் கூறுவர். 20 - 28. காடே.........................காத்தநாடே. உரை : பெரும - பெருமானே; காடு கடவுள் மேன - காடுகள் முனிவர் விரும்பி வாழும் இடமாக; புறவு - முல்லைக் கொல்லைகள்; ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன - ஒள்ளிய இழையணிந்த மகளிரொடு மள்ளர்கள் உறையும் இடமாக; ஆறு-காடும்புறவுமல்லாதபெருவழியானது; அவ் வனைத்து - அவற்றைப்போலச் செல்வோர் இனிது செல்லும் இயல்பிற்றாக; அன்றியும் - இவை யல்லாமலும்; ஞாலத்துக் கூலம் பகர்நர் குடிபுறந்தரா அ நிலத்தே விளையும் எண்வகைக் கூலங்களையும் விற்கும் வணிகர் குடியைப் பேணி; குடிபுறந் தருநர் பாரம் ஓம்பி - குடிமக்களைப் பாதுகாக்கும் காணியாளர் சுற்றத்தைச் சிறப்புற வோம்பி; அழல் சென்ற மருங்கின் வெள்ளி யோடாது - செவ்வாய் சென்றவிடத்து வெள்ளி செல்லாமையால்; மழை வேண்டுபுலத்து மாரி நிற்ப - வேண்டும் புலங்களில் வேண்டுங்காலத்து மழை பொழியாநிற்க; நீ காத்த நாடு - நீ காத்தோம்பும் நாடு; நோயொடு பசியிகந்து ஒரீஇ - நோயும் பசியும் இல்லையாக நீங்கி; பூத்தன்று - பல்வளமும் நிரம்பியுள்ளது எ - று. உலகியல் நெறி நில்லாது கடவுள் நெறி நிற்றலின், முனிவர் கடவுளெனப்பட்டனர்; “தொன்முது கடவுட் பின்னர் மேய” (மதுரை. 41) என்றாற்போல. அரசன் கோல் செவ்விதாயவழி மாதவர் நோன்பு இனிதியலுதல் பற்றி, ‘காடு கடவுள் மேன” என்றும், புறவங்களில் மள்ளர் மகளிரொடு இயங்கினும் அவர்தம் கற்புக் கெடுவ தின்மையின், “புறவே ஒள்ளிழை மகளிரொடு மள்ளர்மேன” என்றும் கூறினார். “மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவ லின்றெனி லின்றால்” (மணி. 22; 208-9) என்று சாத்தனார் கூறுதல் காண்க. போரின்மையின் மள்ளர் புறவங்களில் தொழில் செய்கின்றனரென வறிக. புறவுகளாவன; வரகு, சோளம், துவரை முதலிய கூலங்கள் விளையும் கொல்லைகள்; ஈண்டுச் சிறுசிறு காடுகளும் உண்டு; ஆங்கு இடையர் தம் ஆனிரைகளை மேய்ப்பர். காட்டிடத்தே முனிவரரும் புறவங்களில் மள்ளரும் இருத்தலின் வழிச்செல்வோர்க்கு ஆறலை கள்வராலும், பிற விலங்குகளாலும் இடையூ றின்மையின், அவ்வந்நிலத்து வழிச்செல்லும் பெருவழிகள் இனியவாயின வென்பார். “ஆறே அவ்வனைத்து” என்றார். அவ்வென்னும் சுட்டு, காட்டையும் புறவையும் சுட்டிநின்றது. “காடே கடவுள் மேன என்றது, நின் நாட்டுப் பெருங்காடான இடங்களெல்லாம் முதற்காலத்துக் கோயில்களான எ - று; புறவு மகளிரொடு மள்ளர் மேன என்றது சிறு காடான இடங்களெல்லாம் நின் படையாளர்கள் மகளிரொடு உரையும் படைநிலைகளாயின எ - று; ஆறே அவ்வனைத் தென்றது, காடும் புறவுமல்லாத பெருவழிகளும் ஆறலை கள்வரும் பிற |