பெயர் முதலியன குறிக்கப்பெற்றும், ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பாடினோர் பெயரும் பாடப்பட்டோர் பெயரும், “இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு முற்றும்” என்றாற்போலக் குறிக்கப் பெற்றும் உள்ளன. இக் குறிப்புக்களை நோக்குமிடத்து, பதிற்றுப்பத்துப் பாட்டுக்களைத் தொகுத்தோரால் வண்ணம், தூக்கு, துறை, பெயர் முதலியன வகுக்கப்பெற்றிருக்கலா மென்றும், அவர்க்குப்பின் வந்த சான்றோர் ஒருவரால் பதிகங்கள் பாடிச் சேர்க்கப்பெற்றிருக்கலாமென்றும், உரைகாரர், அவற்றிற்கும் உரை வகுத்திருக்கலா மென்றும் கருதுதற்கு இடமுண்டாகிறது டாக்டர். திரு. ஐயரவர்களும், “ஒவ்வொரு செய்யுளின் பின்னும் அமைந்துள்ள துறை, வண்ணம், தூக்கு, பெயரென்பவைகள் உரையில்லாத மூலப் பிரதிகளிலெல்லாம் இருத்தலின், அவை உரையாசிரியரால் எழுதப்பட்டனவல்லவென்றும், நூலாசிரியர்களாலோ தொகுத்தோராலோ எழுதப்பட்டனவென்றும் பதிகங்கள் உரைப் பிரதிகளில் மட்டும் காணப்படுகின்றமையால் அவற்றை இயற்றினோர் நூலாசிரிய ரல்லரென்றும் தெரிகின்றன. ஆசிரியர் நச்சினார்க்கினியராலும் அடியார்க்கு நல்லாராலும் தத்தம் உரைகளில் எடுத்தாளப் பெற்றிருத்தலின், இப்பதிகங்கள் அவர்கள் காலத்திற்கு முந்தியவை யென்று தோற்றுகின்றது” என்று கூறுவது நோக்கத்தக்கது. சுமார் பதினைந்து ஆண்டுகட்குமுன் சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் தேர்வுக்குச் செல்வோர் சிலருக்கு இப் பதிற்றுப்பத்தினைக் கற்பிக்கவேண்டிய கடமை எனக்கு உண்டாயிற்று. அக்காலத்தே அவர்கட்கு இதனைக் கற்பித்து வருகையில், இதற்கொரு விரிவுரை யிருப்பின் நலமாகுமெனும் எண்ணமுண்டாக, என் நண்பர் சிலர் வாயிலாகப் பதிற்றுப்பத்தின் ஏடுகள் இரண்டு பெற்று அச்சுப்படியையும் அவற்றையும் ஒப்பு நோக்குவது முதற்கண் செயற்பாலதென உணர்ந்து செய்ததில் சில பாடவேறுபாடுகளும், சில பாடங்களிற் காணப்பட்ட ஐயங்கட்குத் தெளிவும் கிடைத்தன. பின்னர் இவ்வுரைப்பணியை மேற்கொண்டு செய்துவருங்கால், திருவையாற்று அரசர்கல்லூரிப் பேராசிரியரும் என் வணக்கத்திற்குரிய ஆசிரியருமாகிய கரந்தைக் கவியரசு திரு.R.வேங்கடாசலம் பிள்ளையவர்கள் தாம் எழுதி வைத்திருந்த உரையினையும் தந்து உதவினார்கள். யான் எழுதிவைத்திருந்த உரையை நாவலர் திரு. ந. மு. வேங்கடசாமி |