இடையூறுமின்றி முன் சொன்ன கடவுளும் மள்ளரும் உறையுமிடமாயின எ - று. இனி, ஆறு முன்சொன்ன அவ்வனைத்தாவதுமன்றி, ஆறலை கள்வரின்றிக் கூலம்பகர்வார் இயங்கும்படியான வழக்காலே அந்தக் கூலம் பகர்வார் குடிகளைப் புறந்தந்தென்றும், குடிபுறந்தருநர் பாரத்தை ஓம்பி மழைவேண்டிய புலத்து மாரி நிற்ப வென்றும் கூலம் பகர்நர் குடிபுறந்தருதலை ஆற்றின் தொழிலாகவும், குடிபுறந்தருநர் பாரமோம்பு தலை மழையின் தொழிலாகவும் கூட்டியுரைப்பாரு முளர்” என்பது பழையவுரை. இந்நாட்டில் கூலம் விளைப்போரும் விற்போரும் பெரும்பாலராதலின், இவரை விதந்து “கூலம் பகர்நர்” என்றும், “குடிபுறந்தருநர்” என்றும் அவரவர் தொழின்மேல் வைத்துரைத்தார். குடிபுறந்தருநர், உழுவிப்போரும் குடிகள், உழுவோருமாவர். குடிபுறந்தருவாரின் கீழ்க் குடிகள் மிகப் பலராய் அவரைச் சுற்றி வாழ்தலின், அச்சுற்றத்தைக் “குடிபுறந்தருநர் பாரம்” என்றார்; “பகடுபுறந் தருநர் பாரமோம்பி” (புறம். 35) என்று பிறரும் கூறுதல் காண்க. பண்டம் விளைப்போரும் அதனைப் பிற நாடுகட்குக் கொண்டுசென்று மாறுவோரும் நாட்டின் நல்வாழ்விற்குத் துணைவராதலைத் தேர்ந்து நடாத்தும் அரசியற் சிறப்பு இப் பாட்டால் வெளிப்படுமாறு காண்க. செவ்வாயும் வெள்ளியும் சேர்ந்தால் மழை பெய்யா தென்பவாகலின், “அழல்சென்ற மருங்கின் வெள்ளி யோடாது” என்றார். செங்கோல் கோடின், இக்கோள்கள் நிலைதிரியு மென்ப; திரியின் நோயும் பசியு முளவாமாதலின், “நோயொடு பசியிகந் தொரீஇப் பூத்தன்று பெரும நீ காத்த நாடு” என்றார். பெரும, பிறழ்நவும் உழாது வித்துநவும், எருமைநிரை தடுக்குநவும், ஆம்பலார்நவும், தெங்கும் மருதும் பொய்கையும், வைப்புமுடைய நாடுகள், நின்னைப் பகைத்தமையின், நீ சிவந்த நீரழிபாக்கம் கழனி புல்லென, காருடை போக, பேய்மகள் இயங்க, உள்ளுநர் பனிக்கும் பாழாயின; நீ காத்த நாடு காடு கடவுள் மேன வாக, புறவு, மள்ளர் மேனவாக, ஆறு, அவ்வனைத்தாக, கூலம் பகர்நர் குடிபுறந்தராஅக், குடிபுறந்தருநர் பாரம் ஓம்பி, வெள்ளி யோடாவகைப் பசியிகந்து ஒரீஇப் பூத்தன்று என இயையும். கூற்றடூஉ நின்ற யாக்கை போல, நாடுகவி னழிய, நாமம் தோற்றி, நீ சிவந் திறுத்த நீரழி பாக்கங்கள், கழனி புல்லெனக், காருடை போக, கழுதூர்ந் தியங்க, பாழாயின; நீ காத்த நாட்டிற் காடு கடவுளால் மேவப்பட்டன; அந்நாட்டுப் புறவுகள் மள்ளரால் மேவப்பட்டன; அந்நாட்டு ஆறு அவ்வனைத்தாயிற்று; அன்றியும், கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக், குடிபுறந் தருநர் பார மோம்பி, நீ காத்தநாடு மழைவேண்டு புலத்து மாரி நிற்ப, நோயொடு பசியிகந் தொருவப் பூத்தது எனக் கூட்டி வினைமுடிவு செய்க வென்பர் பழைய வுரைகாரர். இதன்கண் பகைவர் நாடழிவு கூறுமுகத்தால் சேரலாதனது வெற்றிச் சிறப்பும், தன்னாடு காத்தல் கூறுமாற்றால் அரசியற் சிறப்பும் கூறப்பட்டமையின், இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்பும், தன் நாடுகாத்தற் சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று” என்பர் தொறுத்த வய லாரல் பிறழ்நவும், ஏறு யொருத செறு வுழாது வித்துநவும் என்பனவும், “ஒலிதெங்கி னிமிழ்மருதின், புனல்வாயிற் பூம்பொய்கை” யென்பனவுமாகிய நான்கும் வஞ்சியடியும், ஏனைய அளவடியு மாதலின், இப்பாட்டு வஞ்சித்தூக்கும் செந்தூக்குமாயிற்று. “ஆசிரிய நடைத்தே வஞ்சி” (தொல். செய். 107) என்றலின், ஆசிரியப் பாட்டின்கண் |