துறை : செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : நிரையவெள்ளம். உரை : மழை தவழ்பு தலைஇய மதில் மரம் முருக்கி - மேகம் தவழ்ந்து தங்கும் மதிற்சுவர்களையும் அதனை யடுத்த காவற்காடுகளையும் அழித்து; நிரை களிறு ஒழுகிய - வரிசையாகக் களிறுகள் செல்லும்; நிரைய வெள்ளம் - பகைவர்க்கு நிரயத் துன்பத்தைத் தரும் நின் படைவெள்ளமானது; பரந்து - நாற்றிசையும் பரந்து சென்று;ஆடு கழங்கு அழிமன் - தாம் ஆடிக் காணும் கழங்கால் உள்ளமழிந்து அகநகர்க் கண்ணே மடிந்துறையும் மன்னருடைய; மருங்கு அறுப்ப - சுற்றமாகிய தானையினைக் கெடுக்க; வேண்டு புலத்து யாண்டு தலைப் பெயர இறுத்து - நீ அழிக்கக் கருதிய நாட்டில் ஓர் யாண்டு கழியு மளவும் தங்கி; முனை எரி பரப்பிய - போர் முனைப்பட்ட ஊர்களில் தீப்பரவக் கொளுத்தி யழிக்க வெழுந்த; துன்னருஞ் சீற்றமொடு - நெருங்குதற்கரிய சினத்துடன்; கால் பொர - காற்று மோதுதலால்;கொடிவிடு குரூஉப் புகை பிசிர - கொடிவிட்டெழும் நிறமமைந்த புகை பிசிராக வுடைந்து கெட; அழல் கவர் மருங்கின் - இட்ட தீப்பட்டு வெந்தழிந்த இடங்களைப்போல; உருவறக் கெடுத்து அத் தீப் பரவாத விடங்களைத் தம் முருக்குலைய நீ அழித்தலால்; தொல் கவின் அழிந்த - பழைய அழகிய நிலை யழிந்த; கண்ணகன் வைப்பின் - இடமகன்ற ஊர்களையும், நிரைய வெள்ளம் மன்மருங் கறுப்ப, சீற்றமொடு நீ உருவறக் கெடுத்தலால் தொல் கவின் அழிந்த வைப்பின் எனக் கூட்டுக. பகை மேற் செல்வோர் போர்வினை செய்தற்குரிய காலமும் இடமும் வாய்ப்ப வெய்துங்காறும் இறுத்தல் வேண்டுதலாலும், அதற்குரிய காலமும் ஓர் யாண்டாதலாலும், “யாண்டுதலைப் பெயர வேண்டு புலத் திறுத்து” என்றார் |