நாட்டாரவர்கள் பார்வையிட்டு இப்போது வெளியாகி யிருக்கும் இந்த முறையைக் காட்டி இவ் வகையில் இவ்வுரையை யமைக்குமாறு தெரிவித்தார்கள். இவ்வுரையின் அமைதியை நேரிற் கண்டு ஊக்கியதோடு விரைய அச்சிடுவது நலமென்று தெருட்டிய எங்கள் அரும்பெறல் ஆசிரியர் திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள், இதன் பதிகங்கள் ஆராய்ச்சிக்கு இடமாக வுள்ளனவாதலால், அவற்றிற்கு உரை வேண்டாவெனப் பணித்தமையின், இந்நூற்கண் பதிகங்கட்கு உரை யெழுதப்படவில்லை. மேலும், இதன் முதற் பத்து கிடைக்காமையின், இதற்கு முன்னணியில் கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்று இருந்திருக்கு மென்றும், “எரியெள்ளுவன்ன நிறத்தன்” எனத் தொடங்குவதும், தொல்காப்பியப்பொருளதிகார வுரையில் உரைகாரராற் காட்டப்படுவதுமாகிய பாட்டை இப் பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்துச் செய்யுளாகக் கோத்து உரை யெழுதுமாறும் அவர்கள் உரைத்தார்கள். உரை முழுதும் அச்சாகி வெளிவரும் இந்நாளில் அவர்கள் இல்லாமை என் மனத்தை வருத்துகிறது. இனி, இந்நூலின் பதிகங்களுக்கு உரை யெழுதப்படாமையால், இவற்றின் கருத்து விளங்க ஒரு கோவைப்படுத்தி வரலாற்று முறையில் ஒரு கட்டுரை யெழுதிச் சேர்ப்பது நலமென இவ்வுரையைக் கண்ட அறிஞர் கூறினர். இவ்வரலாற்றுத் துறையில் யான் அறிந்த நாண்முதல் உழைத்துப் பெரும்பயன் தமிழுலகிற்களித்து வருபவர் என் அரும்பெறல் நண்பர் திரு. T. V. சதாசிவப் பண்டாரத்தா ரவர்களாதலால், அவர்களை இதனைச் செய்யுமாறு வேண்டிக்கொண்டேன். அவர்களும் தமக்குள்ள அலுவல்கட்கிடையே உடல் வலியின்மையும் பொருட்படுத்தாது பதிகப் பகுதி பற்றிய சிறந்த ஆராய்ச்சியுரையினை வழங்கி யுள்ளனர். அவர்கட்கு என் மனங்கெழுமிய நன்றி யுரியதாகின்றது. இனி, யான் எழுதிய உரையை யானே ஆராய்ந்து நலந் தீங்கு காண்பதென்பது சிறிது அருமையாக இருந்தமையின், உரைகண்ட என்னைப்போலவே பல ஆண்டுகள் வித்துவான் தேர்வுக்குச் செல்வோர்க்கு இதனைக் கற்பிக்கும் பணி மேற்கொண்டு கூர்த்த புலமையால் சிறந்து நிற்கும் என் அரிய நண்பர் திரு. க. வெள்ளைவாரண ரவர்களை உரைபற்றியதொரு கட்டுரை தருமாறு கேட்டுக்கொண்டேன். அதனை மறாது ஏற்று அழகிய கட்டுரை தந்த அவர்கட்கும் என் மனமார்ந்த நன்றி யுரியதாகின்றது. பல்லவர், சோழர், பாண்டியர் என்ற இவ் வேந்தர்களைப் பற்றிய வரலாறுகளேனும் ஓரளவில் மக்கள் அறிந்து கோடற்கேற்ற வகையில் நூல்வடிவில் வெளியாகி இருக்கின்றன; பண்டைநாளைச் சேர மன்னர் |