பக்கம் எண் :

80

உழவின்     புல்லாள்    வழங்கும் - புலால்   நாறும்   வில்லேந்தி
உயிர்க்கொலை  புரியும்  புல்லிய  மறவர்  உறையும்; புல்லிலை மூதில்
வைப்பின்   -   பனையோலை   வேய்ந்த  பாழ்  வீடுகளே  யுள்ள
ஊர்களையுடைய;   புலஞ்   சிதை  அரம்பின்  -  பகைப்புலங்களை
யழிக்கும்  நின்  மறமாண்  பினை;  அறியாமையால்  மறந்து  - தம்
அறியாமையாலே  நினையாது;  நின்  துப்பெதிர்ந்த  பகைவர் - நின்
பகைமையை   யேறட்டுக்கொண்ட   பகைவருடைய;   நாடும்  கண்டு
வந்திசின் - நாடுகளையும் பார்த்து இங்கே வந்தேன். எ - று.
  

புல்லிலை     மூதில்  வைப்பின்  நாடு,  நின் பகைவர் நாடு என
இயைக்க.  இவ்வைப்பின்கண் வாழ்வோர்  நீங்கிவிட்டமையின், வீடுகள்
பாழ்படுதலால்,   அவற்றில்  வேளையும்  சுரையும்  தழைத்து  வளர,
கூரையில் பீர்க்கங்கொடி ஏறிப் படர்ந்திருக்க, உழுதொழித்த சால்களில்
மழை   பெய்தபோது  முளைத்து  மலர்ந்த   காந்தள்  நீரற்றமையின்
வேரோடு   புலர்ந்தமை  கூறுவார்,  “நீரறு  நிறைமுதல்  சிதைசிவந்த
காந்தள்”    என்றார்.    வேளைப்பூ   வெள்ளிதாதலை,   “வெண்பூ
வேளையொடு  சுரை  தலை  மயக்கிய, விரவு மொழிக் கட்டூர்” (பதிற்.
90)  என்று  பிறரும்  கூறுதல்  காண்க.  “நீரறு  நிறைமுதற்  சிவந்த
காந்தள்” என்பதற்கு, நீர் அற்றுப்  புலர்ந்தமையின், வளர்ச்சி நிறைந்த
அடிமுதல்   வாடிச்   சிவந்த    காந்தள்  என்றுரைத்து,  நிறைமுதல்
உடையதாயினும்,   நீரறுதலால்   தாங்காது   சிதைந்தமை   தோன்ற,
“நிறைமுதற்  சிவந்த  காந்தள்  முதல்சிதை  மூதில்”  என்றும்,  செங்
காந்தள்   என்னாது   சிவந்த  காந்தளென்றதனால்,  முதல்நிறைவுற்ற
போழ்து சிவப்பேறிய காந்தளென்றும்  கூறுதலுமுண்டு. ஆள் வழக்கற்ற
இல்லங்களைக்  கூறியவர்.  இனி,  இம்மையில்   இசையும். மறுமையிற்
றுறக்க  வின்பமும்  விரும்பும்  மறவர்  போலாது ஆறலைத்தொழுகும்
கொடுவினை  மாக்களுறையும்   இல்லங்களைக்  கூறலுற்று,  அவரைப்
“புலவுவில்     லுழவிற்     புல்லா”     ளென்றும்,    தீவினையாற்
கொள்ளும்பொருள்   வாழ்விற்கு   நலம்   பயவாமையால்,  அவர்தம்
இல்லங்கள்  இலம்பாட்டிற்  குறையுளாய்ப்  புல்லிலை வேயப்பட்டுள்ள
வென்பார்,  “புல்லிலை வைப்பு” என்றும் கூறினார்.  பழையவுரைகாரர்,
“புல்லிலை   வைப்பென்றது,   புல்லிய   இலைகளாலே  வேயப்பட்ட
ஊரென்றவாறு;  இதனை நூலாக் கலிங்கம் (பதிற். 12) என்றது போலக்
கொள்க”   என்றும்,  “புல்லா  ளென்றது,  புல்லிய  தொழிலையுடைய
ஆறலை கள்வரை” யென்றும் கூறுவர்.
  

இவ்   விருவகை வைப்பினையுமுடைய நாடு பகைவர் நாடென்றும்,
அவர்   சேரலாதன்   தன்னைப்   பகைத்தார்  புலங்களில்  செய்யும்
அரம்பின்,   திறத்தை  யறியின்  அடிவணங்கி   அவன்  அருள்நாடி
யிருப்ப  ரென்றற்கு, “அறியாமையால் மறந்து”  என்றும், அம்மறதியின்
பயனே   இக்   கேடென்றும்    கூறினாராயிற்று.   அரம்பு  செய்தல்,
துன்புறுத்தல்.  அரம்பு  செய்தலைப் பகைவர்க்  கேற்றி, அச்செயலால்
“நின்  துப்பு  அறியாமையால்  மறந்து  எதிர்ந்து” கெட்டனர் என்றலு
மொன்று.   துப்பு,   பகைமை;   “துப்பெதிர்ந்  தோர்க்கே  யுள்ளாச்
சேய்மையன்” (புறம். 380).