பக்கம் எண் :

81

16 - 24: கடலவும்........................சேரலாத.  

உரை : கடலவும் - கடல்படு   பொருளும்;  கல்லவும் - மலைபடு
பொருளும்;   யாற்றவும்  -  ஆறு  பாயும்  முல்லை  மருதம்  என்ற
நிலங்களி   லுண்டாகும்   பொருளும்;பிறவும்   -   வேறு   நாட்டுப்
பொருள்களுமாகிய;   வளம்   பலநிகழ்   தரும்  -  வளம்  பலவும்
பெறப்படும்;  நனந்தலை  நன்னாட்டு  - அகன்ற நல்ல நாட்டிலுள்ள;
விழவு  அறுபு  அறியா - இடையறாத விழாக்களைச் செய்யும்்்; முழவு
இமிழ்  மூதூர்  -  முழவு  முழங்கும் மூதூர்களில்; கொடி நிழற் பட்ட
பலவகைக்  கொடிகளின் நிழலிலேயிருக்கும்; பொன்னுடை நியமத்து -
பொன்னை   மிகவுடைய  கடை  வீதிகளிலே;  சீர்பெறு  கலி  மகிழ்
இயம்பும்   முரசின்   -   சிறப்புப்பெற்ற   வெற்றியும்   கொடையும்
தெரிவிக்கும்  முரசு  முழங்கும்;  வயவர்  -  வலிமிக்க  வீரர்களுக்கு;
வேந்தே   -   அரசே;   பரிசிலர்   வெறுக்கை   -  பரிசிலருடைய
செல்வமாயுள்ளோனே;  தார்  அணிந்து  - மாலையணிந்து; எழிலிய -
உயர்ந்த;  தொடி  சிதை மருப்பின் - பூண்கெட்ட கோட்டினையுடைய;
போர்வல்     யானை     -     போரில்     வல்ல
யானைகளையுடைய;சேரலாத-நெடுஞ்சேரலாதனே எ-று.

நானிலத்துப்     படும்  பொருளனைத்தும்   கூறலுற்றுக்  கடலால்
நெய்தலும்,  கல்லால்  குறிஞ்சியும்  கூறினமையின்,  ஏனை  முல்லை
மருதங்களை   “யாற்றவும்”   என்றதனாற்   பெறவைத்தார்.   இவை
யனைத்தும்   தன்னாட்டிற்   படுவனவாதலின்,  வேறுநாடுகளிலிருந்து
வந்திருப்பனவற்றைப்   “பிறவும்”   என்றதனால்  தழீஇக்கொண்டார்.
கடவுளர்க்கு  விழாவும்  மக்கட்குத்  திருமண விழாவும் இடையறாதது
நிகழ்தலின்,  “விழவறு பறியா முழவிமிழ் மூதூர்” என்றார். பொன்னும்
பொருளும்  நிறைந்திருத்தலால்  “பொன்னுடை  நியமத்து”  என்றார்;
“திருவீற்  றிருந்த  தீ  துதீர்  நியமம்” (முருகு. 70) என்று நக்கீரனார்
கூறுதல்   காண்க.   இக்  கடைத்  தெருக்களில்  வெற்றி  குறித்தும்,
விழாக்குறித்தும்  கள்,  ஊன் முதலியன விற்பது குறித்தும் பல்வகைக்
கொடிகள்    எடுக்கப்படுவது   உணர்த்துவார்.   “கொடி   நிழற்பட்ட
நியமத்து” என்றார்; “ஓவுக்கண் டன்ன விருபெரு நியமத்துச், சாறயர்ந்
தெடுத்த உருவப் பல்கொடி, வேறுபல் பெயர வாரெயில் கொளக்கொள,
நாடோ றெடுத்த நலம்பெறு புனைகொடி, புகழ்செய் தெடுத்த விறல்சால்
நன்கொடி,   கள்ளின்   களிநவில்   கொடியொடு  நன்பல,  பல்வேறு
குழூஉக்கொடி  பதாகை  நிலைஇப்,  பெருவரை மருங்கின் அருவியின்
நுடங்க”  (மதுரை. 365-74) என்று பிறரும் கூறுதல் காண்க. வீரர் தாம்
போரிலே  பெற்ற வெற்றியும், ஆங்குப் பெற்ற பொருளை இரவலர்க்கு
வழங்கும்  கொடையும் தெரிவிப்பாராய் முரசு முழக்குதலின், “சீர்பெறு
கலிமகிழ்    இயம்பும்    முரசின்    வயவர்”    என்றார்.   இனிப்
பழையவுரைகாரர்,   “சீர்பெறு  கலிமகிழ்  இயம்பும்  முரசின்   வயவ
ரென்றது,  வெற்றிப்  புகழ்பெற்ற  மிக்க  மகிழ்ச்சியானே  ஒலிக்கின்ற
முரசினையுடைய  வீரரென்றவா” றென்பர். கலிமகிழ், வெற்றி குறித்துக்
கொடை வழங்கும் ஆரவாரத்தோடு கூடிய பெருஞ்சிறப்பு; விழாவுமாம்.
வயவர்க்கு  வேண்டுஞ்  சிறப்பளித்து  நன்கு ஓம்புவதனால், “வயவர்
வேந்தே”    என்றார்.   பரிசிலர்க்குப்   பெருஞ்   செல்வம்   நல்கி
இன்புறுத்துவது பற்றிப் “பரிசிலர் வெறுக்கை”