9

களைப்பற்றிய  வரலாற்றினைச்  செவ்வே அறிந்துகோடற்கு வேண்டும்
கருவிகளாகச்  சங்கத்தொகை நூல்கட்கு வேறாக யாதும்  கிடைத்திலது.
இடைக்காலக்   கல்வெட்டுக்கள்  பண்டைச்  சங்க  காலத்துச்  சேரர்
வரலாற்றுக்குத்  துணை  செய்வனவாக இல்லை. சேரநாட்டு மொழியும்
நடையும்     ஒழுகலாறும்     பலவேறு     மக்கள்    கூட்டுறவால்
வேறுபட்டொழிந்தமை  இதற்குக்  காரணமாம்;  ஆயினும்,  இன்றைய
கேரள நாட்டின் பண்டைய வரலாற்றினை ஆராய்ந்தறிதற்கு வேண்டும்
கருவிகளும்   கிடைத்தில;  கிடைக்கச்  செய்தாருமில்லை.   அதனால்
இவ்வுரைக்கண்  தெளிவிக்கப்படும்  வரலாற்றுக்  குறிப்புக்கள்  முடிந்த
முடிபாகக்   கோடற்கு   இடமில்லை   யென்பது  தெளிவாம்.  வேறு
ஆராய்ச்சிகளால்  விளக்கமாகுங்காறும், இவற்றை மேற்கோடல் தக்கது.
இம்முயற்சிக்குத்  துணைசெய்த  நண்பரும், 1941-ல்  வடவார்க்காட்டில்
சில்லாக்கல்வித்  தலைவராக  இருந்தவருமான  திரு. இராமன் மேனன்
அவர்கட்கு என் நன்றியுரியதாகும்.

இவ்வுரை     யெழுதி   முடிக்கப்பெற்றது  சில பல ஆண்டுகட்கு
முன்பேயெனினும்,  இரண்டாவது  உலகப்போர் காரணமாக, அச்சேற்றி
வெளியிடுவதென்பது அரிய செயலாயிற்று. அந் நெருக்கடி  இப்போதும்
தீர்ந்து    பண்டுபோல்    ஒழிந்திலதாயினும்,    இத்தகைய    சீரிய
செந்தமிழ்நூல்  வெளியீடுகளில்  சலியாது உழைத்துத்  தமிழகத்துக்கும்
தமிழ்மொழிக்கும்   பெருந்தொண்டு  புரிந்து  சிறக்கும்  தென்னிந்திய
சைவசித்தாந்த   நூற்பதிப்புக்  கழகம்,  இவ்வுரையினை   வெளியிடச்
சமைந்தது   குறித்துப்  பொதுவாக  அதற்கும்,  சிறப்பாக  அதனைப்
பலவகை  உயர்பணிகளில்  ஈடுபடுத்தி  அவ்வாற்றால் அஃது உலவாப்
பெரும்புகழ்  உண்மைத் தமிழ் நிலையமாகத் திகழச்செய்து  மேம்படும்
கழகச்   செயல்முறைத்   தலைவர்,    திரு.  வ.  சுப்பையாப்பிள்ளை
யவர்கட்கும்   தமிழகத்தின்   சார்பில்  என்   உளம்  நிறைந்தெழும்
நன்றியினைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

இங்கே குறித்த திருவாளர்களேயன்றி வேறுவகையில் துணைசெய்த
பலர்க்கும்     என்    நன்றியைச்   செலுத்தும்   கடமையுடையேன்.
பல்வகையிலும்   குறைபாடுடையனாகிய   என்னை,  என்  அருமைத்
தமிழன்னைக்குத்   தொண்டனாக்கி    ஆட்கொண்டருளும்   எந்தை,
தில்லை மன்றில்நின்று திருவருட்  கூத்தியற்றும் ஆடலரசன் திருவடிப்
போதுகளை மன மொழி மெய்களாற் பரவியமைகின்றேன்.
 

அண்ணாமலை நகர்
31-3-1949
      ஒளவை. சு. துரைசாமி