முகப்பு    

 கூகை 


22
22.வென்றிச் சிறப்பு

சினனே, காமம், கழி கண்ணோட்டம்,
அச்சம், பொய்ச் சொல், அன்பு மிக உடைமை,
தெறல் கடுமையொடு, பிறவும், இவ் உலகத்து
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும்:
தீது சேண் இகந்து, நன்று மிகப் புரிந்து,  
5
கடலும் கானமும் பல பயம் உதவ;
பிறர் பிறர் நலியாது, வேற்றுப் பொருள் வெஃகாது,
மை இல் அறிவினர் செவ்விதின் நடந்து, தம்
அமர்துணைப் பிரியாது, பாத்து உண்டு, மாக்கள்
மூத்த யாக்கையொடு பிணி இன்று கழிய;  
10
ஊழி உய்த்த உரவோர் உம்பல்!
பொன் செய் கணிச்சித் திண் பிணி உடைத்துச்
சிரறு சில ஊறிய நீர் வாய்ப் பத்தல்,
கயிறு குறு முகவை மூயின மொய்க்கும்
ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த,
15
வேல் கெழு தானை, வெருவரு தோன்றல்!
உளைப் பொலிந்த மா,
இழைப் பொலிந்த களிறு,
வம்பு பரந்த தேர்,
அமர்க்கு எதிர்ந்த புகல் மறவரொடு,
20
துஞ்சுமரம் துவன்றிய, மலர் அகன் பறந்தலை,
ஓங்கு நிலை வாயில் தூங்குபு தகைத்த
வில் விசை மாட்டிய விழுச் சீர் ஐயவி,
கடி மிளைக் குண்டு கிடங்கின்,
நெடு மதில் நிரைப் பதணத்து,
25
அண்ணல்அம் பெருங் கோட்டு அகப்பா எறிந்த,
பொன் புனை உழிஞை வெல் போர்க் குட்டுவ!
போர்த்து எறிந்த பறையால் புனல் செறுக்குநரும்,
நீர்த்தரு பூசலின் அம்பு அழிக்குநரும்,
ஒலித் தலை விழவின் மலியும் யாணர்  
30
நாடு கெழு தண் பணை சீறினை ஆதலின்,
குட திசை மாய்ந்து, குண முதல் தோன்றி,
பாய் இருள் அகற்றும், பயம் கெழு பண்பின்,
ஞாயிறு கோடா நன் பகல் அமையத்து,
கவலை வெண் நரி கூஉம் முறை பயிற்றி,
35
கழல்கண் கூகைக் குழறு குரற் பாணிக்
கருங் கண் பேய்மகள் வழங்கும்
பெரும் பாழ் ஆகும்மன்; அளிய, தாமே!

துறை:வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு:செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்:கயிறு குறு முகவை 

உரை
 
44
44.மன்னனை 'நெடுங் காலம் வாழ்க' என
    வாழ்த்துதல்

நிலம் புடைப்பன்ன ஆர்ப்பொடு, விசும்பு துடையூ,
வான் தோய் வெல் கொடி தேர் மிசை நுடங்க,
பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்ற
அரிய என்னாது ஓம்பாது வீசி,
கலம் செலச் சுரத்தல் அல்லது, கனவினும்,  
5
'களைக' என அறியாக் கசடு இல் நெஞ்சத்து,
ஆடு நடை அண்ணல்! நின் பாடு மகள் காணியர்
காணிலியரோ  நிற் புகழ்ந்த யாக்கை
முழு வலி துஞ்சும் நோய் தபு நோன் தொடை:
நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை  
10
சேணன்ஆயினும், 'கேள்' என மொழிந்து,
புலம் பெயர்ந்து ஒளித்த களையாப் பூசற்கு,
அரண்கள் தாவுறீஇ, அணங்கு நிகழ்ந்தன்ன
மோகூர் மன்னன் முரசம் கொண்டு,
நெடுமொழி பணித்து, அவன் வேம்பு முதல் தடிந்து,
15
முரசு செய முரச்சி, களிறு பல பூட்டி,
ஒழுகை உய்த்தோய்! கொழு இல் பைந் துணி
வைத்தலை மறந்த துய்த் தலைக் கூகை
கவலை கவற்றும் குரால்அம் பறந்தலை,
முரசுடைத் தாயத்து அரசு பல ஓட்டி,
20
துளங்கு நீர் வியலகம் ஆண்டு, இனிது கழிந்த
மன்னர் மறைத்த தாழி,
வன்னி மன்றத்து விளங்கிய காடே.

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:நோய் தபு நோன் தொடை

உரை
 

    மேல்