முகப்பு    

 உன்னமரம் 


23
23.வென்றிச் சிறப்பு

அலந்தலை உன்னத்து அம் கவடு பொருந்திச்
சிதடி கரைய, பெரு வறம் கூர்ந்து,
நிலம் பைது அற்ற புலம் கெடு காலையும்,
வாங்குபு தகைத்த கலப்பையர் ஆங்கண்
மன்றம் போந்து, மறுகு சிறை பாடும்  
5
வயிரிய மாக்கள் கடும் பசி நீங்க,
பொன் செய் புனைஇழை ஒலிப்ப, பெரிது உவந்து,
நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட,
சிறு மகிழானும் பெருங் கலம் வீசும்,
போர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ!   
10
நின் நயந்து வருவேம் கண்டனம்: புல் மிக்கு,
வழங்குநர் அற்றென, மருங்கு கெடத் தூர்ந்து,
பெருங் கவின் அழிந்த ஆற்ற, ஏறு புணர்ந்து
அண்ணல் மரையா அமர்ந்து இனிது உறையும்
விண் உயர் வைப்பின காடு ஆயின  நின்
15
மைந்து மலி பெரும் புகழ் அறியார் மலைந்த
போர் எதிர் வேந்தர் தார் அழிந்து ஒராலின்
மருது இமிழ்ந்து ஓங்கிய நளி இரும் பரப்பின்
மணல் மலி பெருந் துறைத் ததைந்த காஞ்சியொடு
முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை,
20
நந்து நாரையொடு செவ் வரி உகளும்
கழனி வாயிற் பழனப் படப்பை,
அழல் மருள் பூவின் தாமரை, வளை மகள்
குறாஅது மலர்ந்த ஆம்பல்,
அறாஅ யாணர் அவர் அகன்தலை நாடே.
25

துறை:வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம
தூக்கு:செந்தூக்கு
பெயர்:ததைந்த காஞ்சி   

உரை
 
40
40.கொடைச் சிறப்பு

போர் நிழல் புகன்ற சுற்றமொடு ஊர்முகத்து
இறாஅலியரோ, பெரும! நின் தானை!
இன் இசை இமிழ் முரசு இயம்பக் கடிப்பு இகூஉ,
புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப,
காய்த்த கரந்தை மாக் கொடி விளை வயல்  
5
வந்து இறைகொண்டன்று, தானை: 'அந்தில்,
களைநர் யார் இனிப் பிறர்?' எனப் பேணி,
மன் எயில் மறவர் ஒலி அவிந்து அடங்க,
ஒன்னார் தேய, பூ மலைந்து உரைஇ,
வெண் தோடு நிரைஇய வேந்துடை அருஞ் சமம்
10
கொன்று புறம்பெற்று, மன்பதை நிரப்பி,
வென்றி ஆடிய தொடித் தோள் மீ கை,
எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து,
பொன்அம் கண்ணி, பொலந் தேர் நன்னன்
சுடர் வீ வாகைக் கடி முதல் தடிந்த
15
தார் மிகு மைந்தின், நார்முடிச் சேரல்!
புன் கால் உன்னம் சாய, தெண் கண்
வறிது கூட்டு அரியல் இரவலர்த் தடுப்ப,
தான் தர உண்ட நனை நறவு மகிழ்ந்து,
நீர் இமிழ் சிலம்பின் நேரியோனே:
20
செல்லாயோதில், சில் வளை விறலி!
மலர்ந்த வேங்கையின் வயங்கு இழை அணிந்து,
மெல் இயல் மகளிர் எழில் நலம் சிறப்ப,
பாணர் பைம் பூ மலைய, இளையர்
இன் களி வழாஅ மென் சொல் அமர்ந்து,
25
நெஞ்சு மலி உவகையர் வியன் களம் வாழ்த்த,
தோட்டி நீவாது, தொடி சேர்பு நின்று,
பாகர் ஏவலின், ஒண் பொறி பிசிர,
காடு தலைக் கொண்ட நாடு காண் அவிர் சுடர்
அழல் விடுபு, மரீஇய மைந்தின்,
30
தொழில் புகல் யானை நல்குவன், பலவே.

துறை:விறலி ஆற்றுப்படை
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:நாடு காண் அவிர் சுடர் 

உரை
 
61
61.வென்றிச் சிறப்பொடு படுத்து, அவன் கொடைச்
   சிறப்புக் கூறுதல்

'பலாஅம் பழுத்த பசும் புண் அரியல்
வாடை தூக்கும் நாடு கெழு பெருவிறல்,
ஓவத்து அன்ன வினை புனை நல் இல்,
பாவை அன்ன நல்லோள் கணவன்,
பொன்னின் அன்ன பூவின், சிறியிலை,
5
புன் கால், உன்னத்துப் பகைவன், எம் கோ,
புலர்ந்த சாந்தின், புலரா ஈகை,
மலர்ந்த மார்பின், மா வண் பாரி
முழவு மண் புலர, இரவலர் இனைய,
வாராச் சேண் புலம் படர்ந்தோன்; அளிக்க' என,
10
இரக்கு வாரேன்; எஞ்சிக் கூறேன்;
'ஈத்தது இரங்கான்; ஈத்தொறும் மகிழான்;
ஈத்தொறும் மா வள்ளியன்' என நுவலும் நின்
நல் இசை தர வந்திசினே   ஒள் வாள்
உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை,
15
நிலவின் அன்ன வெள் வேல் பாடினி
முழவில் போக்கிய வெள் கை
விழவின் அன்ன, நின் கலி மகிழானே.

துறை: காட்சி வாழ்த்து
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:புலாஅம் பாசறை  

உரை
 

    மேல்