கழுவுள் 


71.வென்றிச் சிறப்புக் கூறி, மன்னனுக்குப் பகைவர்மேல்
   அருள் பிறப்பித்தல்

அறாஅ யாணர் அகன் கண் செறுவின்
அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து,
செறு வினை மகளிர் மலிந்த வெக்கை,
பரூஉப் பகடு உதிர்த்த மென் செந்நெல்லின்
அம்பண அளவை உறை குவித்தாங்கு,
5
கடுந் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும்
செழுங் கூடு கிளைத்த இளந்துணை மகாஅரின்,
அலந்தனர், பெரும! நின் உடற்றியோரே:
ஊர் எரி கவர, உருத்து எழுந்து உரைஇ,
போர் சுடு, கமழ் புகை மாதிரம் மறைப்ப,   
10
மதில்வாய்த் தோன்றல் ஈயாது தம் பழி ஊக்குநர்
குண்டு கண் அகழிய குறுந் தாள் ஞாயில்
ஆர் எயில் தோட்டி வௌவினை; ஏறொடு
கன்றுடை ஆயம் தரீஇப் புகல் சிறந்து,
புலவு வில் இளையர் அங்கை விடுப்ப,
15
மத்துக் கயிறு ஆடா வைகல் பொழுது நினையூஉ,
ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க,
பதி பாழாக வேறு புலம் படர்ந்து,
விருந்தின் வாழ்க்கையொடு பெருந் திரு அற்றென,
அருஞ் சமத்து அரு நிலை தாங்கிய புகர் நுதல்
20
பெருங் களிற்று யானையொடு அருங் கலம் தராஅர்,
மெய் பனி கூரா, அணங்கு எனப் பராவலின்,
பலி கொண்டு பெயரும் பாசம் போல,
திறை கொண்டு பெயர்தி; வாழ்க, நின் ஊழி!
உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி,
25
அறிந்தனை அருளாய்ஆயின்,
யார் இவண், நெடுந் தகை! வாழுமோரே?

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:குறுந் தாள் ஞாயில்

உரை
 

   

88.கொடைச் சிறப்பும் காம இன்பச் சிறப்பும் உடன்
   கூறி, வாழ்த்துதல்

வையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாது,
கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து,
தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து,
தம் பெயர் போகிய ஒன்னார் தேய,
துளங்கு இருங் குட்டம் தொலைய, வேல் இட்டு;
            5

அணங்குடைக் கடம்பின் முழுமுதல் தடிந்து;
பொரு முரண் எய்திய கழுவுள் புறம் பெற்று;
நாம மன்னர் துணிய நூறி,
கால் வல் புரவி அண்டர் ஓட்டி,
சுடர் வீ வாகை நன்னற் தேய்த்து,
                       10

குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோடு
உரு கெழு மரபின் அயிரை பரைஇ,
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய,
கொற்றம் எய்திய பெரியோர் மருக!
வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில்!
              15

விரவுப் பணை முழங்கும், நிரை தோல் வரைப்பின்,
உரவுக் களிற்று வெல் கொடி நுடங்கும் பாசறை,
ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை
நார் அரி நறவின் கொங்கர் கோவே!
உடலுநர்த் தபுத்த பொலந் தேர்க் குருசில்!
                20

வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந!
நீ நீடு வாழிய, பெரும! நின்வயின்
துவைத்த தும்பை நனவுற்று வினவும்
மாற்று அருந் தெய்வத்துக் கூட்டம் முன்னிய
புனல் மலி பேரியாறு இழிதந்தாங்கு,
                     25

வருநர் வரையாச் செழும் பல் தாரம்
கொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப,
ஓவத்து அன்ன உரு கெழு நெடு நகர்,
பாவை அன்ன மகளிர் நாப்பண்,
புகன்ற மாண் பொறிப் பொலிந்த சாந்தமொடு
             30

தண் கமழ் கோதை சூடி, பூண் சுமந்து,
திருவில் குலைஇத் திருமணி புரையும்
உரு கெழு கருவிய பெரு மழை சேர்ந்து,
வேங்கை விரிந்து, விசும்புறு சேட்சிமை,
அருவி அரு வரை அன்ன மார்பின்
                    35

சேண் நாறு நல் இசைச் சேயிழை கணவ!
மாகம் சுடர மா விசும்பு உகக்கும்
ஞாயிறு போல விளங்குதி, பல் நாள்!
ஈங்குக் காண்கு வந்தனென், யானே
உறு கால் எடுத்த ஓங்கு வரல் புணரி                  
40

நுண் மணல் அடை கரை உடைதரும்
தண் கடல் படப்பை நாடு கிழவோயே!

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:கல் கால் கவணை

உரை