குட்டுவன்  


23.வென்றிச் சிறப்பு

அலந்தலை உன்னத்து அம் கவடு பொருந்திச்
சிதடி கரைய, பெரு வறம் கூர்ந்து,
நிலம் பைது அற்ற புலம் கெடு காலையும்,
வாங்குபு தகைத்த கலப்பையர் ஆங்கண்
மன்றம் போந்து, மறுகு சிறை பாடும்  
5
வயிரிய மாக்கள் கடும் பசி நீங்க,
பொன் செய் புனைஇழை ஒலிப்ப, பெரிது உவந்து,
நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட,
சிறு மகிழானும் பெருங் கலம் வீசும்,
போர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ!   
10
நின் நயந்து வருவேம் கண்டனம்: புல் மிக்கு,
வழங்குநர் அற்றென, மருங்கு கெடத் தூர்ந்து,
பெருங் கவின் அழிந்த ஆற்ற, ஏறு புணர்ந்து
அண்ணல் மரையா அமர்ந்து இனிது உறையும்
விண் உயர் வைப்பின காடு ஆயின  நின்
15
மைந்து மலி பெரும் புகழ் அறியார் மலைந்த
போர் எதிர் வேந்தர் தார் அழிந்து ஒராலின்
மருது இமிழ்ந்து ஓங்கிய நளி இரும் பரப்பின்
மணல் மலி பெருந் துறைத் ததைந்த காஞ்சியொடு
முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை,
20
நந்து நாரையொடு செவ் வரி உகளும்
கழனி வாயிற் பழனப் படப்பை,
அழல் மருள் பூவின் தாமரை, வளை மகள்
குறாஅது மலர்ந்த ஆம்பல்,
அறாஅ யாணர் அவர் அகன்தலை நாடே.
25

துறை:வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம
தூக்கு:செந்தூக்கு
பெயர்:ததைந்த காஞ்சி   

உரை
 

   

29.வென்றிச் சிறப்பு

அவல் எறி உலக்கை வாழைச் சேர்த்தி,
வளைக் கை மகளிர் வள்ளை கொய்யும்,
முடந்தை நெல்லின் விளைவயல் பரந்த
தடந் தாள் நாரை இரிய; அயிரைக்
கொழு மீன் ஆர்கைய மரம்தொறும் குழாஅலின்,
5
வெண் கை மகளிர் வெண் குருகு ஓப்பும்,
அழியா விழவின், இழியாத் திவவின்,
வயிரிய மாக்கள் பண் அமைத்து எழீஇ,
மன்றம் நண்ணி, மறுகு சிறை பாடும்
அகன் கண் வைப்பின் நாடு  மன் அளிய! 
10
விரவு வேறு கூலமொடு குருதி வேட்ட
மயிர் புதை மாக் கண் கடிய கழற,
அமர் கோள் நேர் இகந்து, ஆர் எயில் கடக்கும்
பெரும் பல் யானைக் குட்டுவன்
ஆவரம்பு இல் தானை பரவா ஆங்கே.
15

துறை:வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:வெண் கை மகளிர்  

உரை
 

   

42.கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும்

இரும் பனம்புடையல், ஈகை வான் கழல்,
மீன் தேர் கொட்பின் பனிக் கயம் மூழ்கிச்
சிரல் பெயர்ந்தன்ன நெடு வெள் ஊசி
நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின்,
அம்பு சேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது
5
தும்பை சூடாது மலைந்த மாட்சி,
அன்னோர் பெரும! நன்னுதல் கணவ!
அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ!
மைந்துடை நல் அமர்க் கடந்து, வலம் தரீஇ;
இஞ்சி வீ விராய பைந் தார் பூட்டி,  
10
சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்குஇருக்கை,
தீம் சேறு விளைந்த மணி நிற மட்டம்
ஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்து;
கோடியர் பெருங் கிளை வாழ, ஆடு இயல்
உளை அவிர் கலிமாப் பொழிந்தவை எண்ணின் 
15
மன்பதை மருள, அரசு படக் கடந்து,
முந்து வினை எதிர் வரப் பெறுதல் காணியர்,
ஒளிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்து
மான மைந்தரொடு மன்னர் ஏத்த, நின்
தேரொடு சுற்றம் உலகு உடன் மூய,
20
மா இருந் தெண் கடல் மலி திரைப் பௌவத்து,
வெண் தலைக் குரூஉப் பிசிர் உடைய,
தண் பல வரூஉம் புணரியின் பலவே.

துறை:
செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:தசும்பு துளங்கு இருக்கை

உரை
 

   

43.மன்னனின் செல்வ மகிழ்ச்சி

கவரி முச்சி, கார் விரி கூந்தல்,
ஊசல் மேவல், சேயிழை மகளிர்
உரல் போல் பெருங் கால், இலங்கு வாள் மருப்பின்,
பெருங் கை, மதமாப் புகுதரின், அவற்றுள்
விருந்தின் வீழ் பிடி எண்ணு முறை பெறாஅ:
5
கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை
வட திசை எல்லை இமயம் ஆக,
தென்அம் குமரியொடு ஆயிடை அரசர்
முரசுடைப் பெருஞ் சமம் ததைய, ஆர்ப்பு எழ,
சொல் பல நாட்டைத் தொல் கவின் அழித்த
10
போர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ!
இரும் பணை திரங்கப் பெரு பெயல் ஒளிப்ப,
குன்று வறம் கூரச் சுடர் சினம் திகழ,
அருவி அற்ற பெரு வறற் காலையும்,
அருஞ் செலல் பேர் ஆற்று இருங் கரை உடைத்து,
15
கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய,
வரைவு இல் அதிர்சிலை முழங்கி, பெயல் சிறந்து,
ஆர் கலி வானம் தளி சொரிந்தாஅங்கு,
உறுவர் ஆர ஓம்பாது உண்டு,
நகைவர் ஆர நன் கலம் சிதறி,  
20
'ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரல்
பாடு விறலியர் பல் பிடி பெறுக!
துய் வீ வாகை, நுண் கொடி உழிஞை,
வென்றி மேவல், உரு கெழு சிறப்பின்,
கொண்டி மள்ளர் கொல் களிறு பெறுக!
25
மன்றம் படர்ந்து, மறுகு சிறைப் புக்கு,
கண்டி நுண் கோல் கொண்டு, களம் வாழ்த்தும்
அகவலன் பெறுக, மாவே!' என்றும்,
இகல் வினை மேவலை ஆகலின், பகைவரும்
தாங்காது புகழ்ந்த, தூங்கு கொளை முழவின்,
30
தொலையாக், கற்ப!   நின் நிலை கண்டிகுமே!
நிணம் சுடு புகையொடு கனல் சினம் தவிராது,
நிரம்பு அகல்பு அறியா ஏறா ஏணி,
நிறைந்து நெடிது இராத் தசும்பின், வயிரியர்
உண்டெனத் தவாஅக் கள்ளின்  
35
வண் கை வேந்தே! நின் கலி மகிழானே.

துறை:
இயல்மொழி வாழ்த்து
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:றா ஏணி 

உரை
 

   

46.கொடைச் சிறப்பு

இழையர், குழையர், நறுந் தண் மாலையர்,
சுடர் நிமிர் அவிர் தொடி செறித்த முன்கை,
திறல் விடு திருமணி இலங்கு மார்பின்
வண்டு படு கூந்தல் முடி புனை மகளிர்
தொடை படு பேரியாழ் பாலை பண்ணி,  
5
பணியா மரபின் உழிஞை பாட,
இனிது புறந்தந்து, அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின்
சுரம் பல கடவும் கரை வாய்ப் பருதி
ஊர் பாட்டு எண் இல் பைந் தலை துமிய,
பல் செருக் கடந்த கொல் களிற்று யானை,
10
கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டு
உடை திரைப் பரப்பின் படு கடல் ஓட்டிய
வெல் புகழ்க் குட்டுவன் கண்டோர்
செல்குவம் என்னார், பாடுபு பெயர்ந்தே.

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது

பெயர்:கரை வாய்ப் பருதி 

உரை
 

   

47.கொடையினையும் அக் கொடைக்கு வருவாயாகிய
    பகைவரைக் கோறலையும் உடன் கூறுதல்

அட்டு ஆனானே குட்டுவன்; அடுதொறும்,
பெற்று ஆனாரே, பரிசிலர் களிறே;
வரை மிசை இழிதரும் அருவியின், மாடத்து
வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில்,
சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின்,  
5
பாண்டில் விளக்குப் பரூஉச் சுடர் அழல,
நல் நுதல் விறலியர் ஆடும்
தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே.

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது

பெயர்:நல் நுதல் விறலியர் 

உரை
 

   

49.மன்னவனது வரையா ஈகை

யாமும் சேறுகம்; நீயிரும் வம்மின்,
துயலும் கோதைத் துளங்கு இயல் விறலியர்!
கொளை வல் வாழ்க்கை நும் கிளை இனிது உணீஇயர்!
களிறு பரந்து இயல, கடு மா தாங்க,
ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப;
5
எஃகு துரந்து எழுதரும் கை கவர் கடுந் தார்,
வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து,
மொய் வளம் செருக்கி, மொசிந்து வரு மோகூர்
வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி,
நெய்த்தோர் தொட்ட செங் கை மறவர்  
10
நிறம் படு குருதி நிலம் படர்ந்து ஓடி,
மழை நாள் புனலின் அவல் பரந்து ஒழுக,
படு பிணம் பிறங்க, பாழ் பல செய்து,
படு கண் முரசம் நடுவண் சிலைப்ப,
வளன் அற, நிகழ்ந்து வாழுநர் பலர் பட,
15
கருஞ் சினை விறல் வேம்பு அறுத்த
பெருஞ் சினக் குட்டுவன் கண்டனம் வரற்கே.

துறை:விறலி ஆற்றுப்படை
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:செங் கை மறவர்

உரை
 

   

90.மன்னவனது தண்ணளியும், பெருமையும், கொடையும்,
சுற்றம் தழாலும், உடன் கூறி வாழ்த்துதல்

மீன் வயின் நிற்ப, வானம் வாய்ப்ப,
அச்சற்று, ஏமம் ஆகி, இருள் தீர்ந்து
இன்பம் பெருகத் தோன்றி, தம் துணைத்
துறையின் எஞ்சாமை நிறையக் கற்று,
கழிந்தோர் உடற்றும் கடுந் தூ அஞ்சா                    5

ஒளிறு வாள் வய வேந்தர்
களிறொடு கலம் தந்து,
தொன்று மொழிந்து தொழில் கேட்ப,
அகல் வையத்து பகல் ஆற்றி,
மாயாப் பல் புகழ் வியல் விசும்பு ஊர்தர,                 10

வாள் வலியுறுத்து, செம்மை பூஉண்டு,
அறன் வாழ்த்த நற்கு ஆண்ட
விறல் மாந்தரன் விறல் மருக!
ஈரம் உடைமையின், நீர் ஓரனையை;
அளப்பு அருமையின், இரு விசும்பு அனையை;             15

கொளக் குறைபடாமையின், முந்நீர் அனையை;
பல் மீன் நாப்பண் திங்கள் போல,
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை
உரு கெழு மரபின் அயிரை பரவியும்,
கடல் இகுப்ப வேல் இட்டும்,                           20

உடலுநர் மிடல் சாய்த்தும்,
மலையவும் நிலத்தவும் அருப்பம் வௌவி,
பெற்ற பெரும் பெயர் பலர் கை இரீஇய
கொற்றத் திருவின் உரவோர் உம்பல்!
கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே!                     25

மட்டப் புகாவின் குட்டுவர் ஏறே!
எழாஅத் துணைத் தோள் பூழியர் மெய்ம்மறை!
இரங்கு நீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந!
வெண் பூ வேளையொடு சுரை தலை மயக்கிய
விரவு மொழிக் கட்டூர் வயவர் வேந்தே!                  30

உரவுக் கடல் அன்ன தாங்கு அருந் தானையொடு,
மாண் வினை! சாபம் மார்புற வாங்கி,
ஞாண் பொர விளங்கிய வலி கெழு தடக் கை,
வார்ந்து புனைந்தன்ன ஏந்து குவவு மொய்ம்பின்,
மீன் பூத்தன்ன விளங்கு மணிப் பாண்டில்,                35

ஆய் மயிர்க் கவரிப் பாய் மா மேல்கொண்டு,
காழ் எஃகம் பிடித்து எறிந்து,
விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மை,
காஞ்சி சான்ற வயவர் பெரும!
வீங்கு பெருஞ் சிறப்பின் ஓங்கு புகழோயே!               40

கழனி உழவர் தண்ணுமை இசைப்பின்,
பழன மஞ்ஞை மழை செத்து ஆலும்,
தண் புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி,
வெம் போர் மள்ளர் தெண் கிணை கறங்க,
கூழுடை நல் இல் ஏறு மாறு சிலைப்ப,                  45

செழும் பல இருந்த கொழும் பல் தண் பணைக்,
காவிரிப் படப்பை நல் நாடு அன்ன,
வளம் கெழு குடைச்சூல், அடங்கிய கொள்கை,
ஆறிய கற்பின், தேறிய நல் இசை,
வண்டு ஆர் கூந்தல், ஒண்தொடி கணவ!                 50

'நின் நாள் திங்கள் அனைய ஆக! திங்கள்
யாண்டு ஓரனைய ஆக! யாண்டே
ஊழி அனைய ஆக! ஊழி
வெள்ள வரம்பின ஆக! என உள்ளி,
காண்கு வந்திசின், யானே செரு மிக்கு                  55

உரும் என முழங்கும் முரசின்,
பெரு நல் யானை, இறை கிழவோயே!

துறை:காட்சி வாழ்த்து
வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்:வலி கெழு தடக் கை

உரை