நார் முடிச் சேரல  


39.கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும்

பிறர்க்கு என வாழ்தி நீ ஆகன் மாறே,
எமக்கு 'இல்' என்னார், நின் மறம் கூறு குழாத்தர்
துப்புத் துறைபோகிய வெப்புடைத் தும்பை,
கறுத்த தெவ்வர் கடி முனை அலற,
எடுத்து எறிந்து இரங்கும் ஏவல் வியன் பணை   
5
உரும் என அதிர்பட்டு முழங்கி, செரு மிக்கு,
அடங்கார் ஆர் அரண் வாடச் செல்லும்,
காலன் அனைய, கடுஞ் சின முன்ப!
வாலிதின், நூலின் இழையா நுண் மயிர் இழைய
பொறித்த போலும் புள்ளி எருத்தின்
10
புன் புறப் புறவின் கண நிரை அலற,
அலந்தலை வேலத்து உலவைஅம் சினை
சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின்,
இலங்கு மணி மிடைந்த பசும் பொன் படலத்து
அவிர் இழை தைஇ, மின் உமிழ்பு இலங்கச்  
15
சீர் மிகு முத்தம் தைஇய
நார்முடிச் சேரல்! நின் போர் நிழல் புகன்றே.

துறை:வாகை
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:வல் வியன் பணை  

உரை
 

   

40.கொடைச் சிறப்பு

போர் நிழல் புகன்ற சுற்றமொடு ஊர்முகத்து
இறாஅலியரோ, பெரும! நின் தானை!
இன் இசை இமிழ் முரசு இயம்பக் கடிப்பு இகூஉ,
புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப,
காய்த்த கரந்தை மாக் கொடி விளை வயல்  
5
வந்து இறைகொண்டன்று, தானை: 'அந்தில்,
களைநர் யார் இனிப் பிறர்?' எனப் பேணி,
மன் எயில் மறவர் ஒலி அவிந்து அடங்க,
ஒன்னார் தேய, பூ மலைந்து உரைஇ,
வெண் தோடு நிரைஇய வேந்துடை அருஞ் சமம்
10
கொன்று புறம்பெற்று, மன்பதை நிரப்பி,
வென்றி ஆடிய தொடித் தோள் மீ கை,
எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து,
பொன்அம் கண்ணி, பொலந் தேர் நன்னன்
சுடர் வீ வாகைக் கடி முதல் தடிந்த
15
தார் மிகு மைந்தின், நார்முடிச் சேரல்!
புன் கால் உன்னம் சாய, தெண் கண்
வறிது கூட்டு அரியல் இரவலர்த் தடுப்ப,
தான் தர உண்ட நனை நறவு மகிழ்ந்து,
நீர் இமிழ் சிலம்பின் நேரியோனே:
20
செல்லாயோதில், சில் வளை விறலி!
மலர்ந்த வேங்கையின் வயங்கு இழை அணிந்து,
மெல் இயல் மகளிர் எழில் நலம் சிறப்ப,
பாணர் பைம் பூ மலைய, இளையர்
இன் களி வழாஅ மென் சொல் அமர்ந்து,
25
நெஞ்சு மலி உவகையர் வியன் களம் வாழ்த்த,
தோட்டி நீவாது, தொடி சேர்பு நின்று,
பாகர் ஏவலின், ஒண் பொறி பிசிர,
காடு தலைக் கொண்ட நாடு காண் அவிர் சுடர்
அழல் விடுபு, மரீஇய மைந்தின்,
30
தொழில் புகல் யானை நல்குவன், பலவே.

துறை:விறலி ஆற்றுப்படை
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:நாடு காண் அவிர் சுடர் 

உரை