12.
|
வயவர்
வீழ வாளரின் மயக்கி
இடங்கவர் கடும்பி னரசுதலை பனிப்பக்
கடம்புமுத றடிந்த கடுஞ்சின வேந்தே
தாரணி யெருத்தின் வாரல் வள்ளுகிர் |
5 |
அரிமான்
வழங்குஞ் சாரற் பிறமான்
தோடுகொ ளினநிரை நெஞ்சதிர்ந் தாங்கு
முரசுமுழங்கு நெடுநக ரரசுதுயி லீயாது
மாதிரம் பனிக்கு மறம்வீங்கு பல்புகழ்
கேட்டற் கினிதுநின் செல்வங் கேட்டொறும் |
10 |
காண்டல்
விருப்பொடு கமழுங் குளவி
வாடாப் பைம்மயி ரிளைய வாடுநடை
அண்ணன் மழகளி றரிஞிமி றோப்பும்
கன்றுபுணர் பிடிய குன்றுபல; நீந்தி
வந்தவ ணிறுத்த விரும்பே ரொக்கற் |
15 |
றொல்பசி
யுழந்த பழங்கண் வீழ
எஃகுபோழ்ந் தறுத்த வானிணக் கொழுங்குறை
மையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு
நனையமை கள்ளின் றேறலொடு மாந்தி
நீர்ப்படு பருந்தி னிருஞ்சிற கன்ன |
20 |
நிலந்தின்
சிதாஅர் களைந்த பின்றை
நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ
வணரிருங் கதுப்பின் வாங்கமை மென்றோள்
வசையின் மகளிர் வயங்கிழை யணிய
அமர்புமெய் யார்த்த சுற்றமொடு |
25
|
நுதர்தற்
கினிதுநின் பெருங்கலி மகிழ்வே. |
இதுவுமது.
பெயர் - மறம்வீங்கு பல்புகழ் (8)
(ப
- ரை) 7. துயிலீயாதென்பது துயிலாதென்னும் வினைத்திரி
சொல்; துயிலாமலெனத் திரிக்க; இனித்திரியாது, 'யாறுநீ ரொழுகாது கிடந்தது' என்னும்
வழக்குப்போல இடத்து நிகழ்பொருளின்
தொழிலை இடத்திற்கேற்றி, மாதிரமானது அரசு துயிலீயாது பனிக்குமென அம்மாதிரத்தின்
வினையொடு முடிப்பினும் அமையும்.
8.
மறம்வீங்கு பல்புகழென்றது அரசர்க்குச் சிறந்த மறப்புகழ்
1மற்றைப் புகழினும் மிக்க பல்புகழென்றவாறு.
இச்சிறப்பானே
இதற்கு, 'மறம்வீங்கு பல்புகழ்'
என்று
பெயராயிற்று.
8
- 9. நின் செல்வம் இனிது; யாது இனிதெனிற் பல்புகழ்
கேட்டற்கு இனிதென முடிவுகொள்க.
9.
கேட்டொறு மென்பதற்கு அச்செல்வத்தையென வருவிக்க.
21.
நூலாக்கலிங்கமென்றது ஒருவர் நூலாநூலாகிய பட்டுநூல் முதலாயவற்றாற் செய்த கலிங்கமென்றவாறு.
நூலாமை
யென்னும் தொழில் கலிங்கத்துக்குச் சினையாகிய
நூல் மேலதாலெனின், அச்சினையோடு முதற்குள்ள ஒற்றுமைபற்றிச் சினை வினையை முதல்மேலேற்றி
வழுவமைதியாற் கூறினானென்க. இனி நூலாநூற் கலிங்கமென்பான் நூலென்பதனைத் தொகுத்துக்
கூறினானென்பாரும் உளர்.
25.
நுகர்தற்கு இனிது நின் பெருங்கலிமகிழ்வே யென்றது
நின் பெரிய ஆரவாரத்தையுடைய 2ஓலக்கத்துச் செல்கின்ற வினோத
மகிழ்ச்சி அனுபவித்தற்கு இனிதென்றவாறு.
வேந்தே
(3), நின்செல்வம் (9) புகழ் (8) கேட்டற்கினிது (9),
நின் பெருங்கலி மகிழ்வு நுகர்தற்கினிது (25) என வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் வென்றிச் சிறப்பும் அவனது
ஓலக்க வினோதச் சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1 - 3. வயவர் வீழ - வீரர்கள் இறந்துபட. வாள்
அரில் மயக்கி - வாள்வீரரது நெருக்கத்தைக் கலக்கி (பதிற்.
36 : 6).
இடம் கவர் -தனக்குரிய இடத்தைக் கவர்ந்த. கடும்பின் அரசு -
மந்திரி முதலிய சுற்றத்தையுடைய பகையரசர். பனிப்ப - நடுங்க.
கடம்புமுதல் - கடம்பின் அடிமரத்தை; கடம்பைத் தடிந்தது: பதிற்.
11: 12 - 4, குறிப்புரை.
மயக்கி,
பனிப்ப, தடிந்த வேந்தே.
4
- 9. தார் பிடரிமயிர் போலும். எருத்து - கழுத்து. வாரல்
நீட்சி. அரிமான் - சிங்கம். பிறமான் - யானை முதலிய வேறு
விலங்கினங்கள். தோடு - தொகுதி. நெடுநகர் - பகைவருடைய
பெரிய நகரங்கள். துயிலீயாது - தூங்காமல். மாதிரம்
- திசைகளில்.
மறம் வீங்கு பல்புகழ் - வீரத்தின் மிகுதியால் வந்த பல புகழ்.
சேரனுக்குச் சிங்கமும் பகையரசருக்குப் பிற விலங்கினங்களும்
உவமை. மறம் வீங்கு பல் புகழ்: "வென்றிப் பல்புகழ்" (மலைபடு.
544); "மறப்புகழ் நிறைந்த மைந்தினோன்" (புறநா.
290 : 6)
9
- 10. நின் செல்வத்தைக் கேட்குந்தோறும் அதனைக்
காண்கின்ற விருப்பத்தோடு.
10
- 13. குளவி - காட்டு மல்லிகையையுடைய. பைம் மயிரும்
நடையும் களிற்றுக்கு அடை. அரி ஞிமிறு - கோடுகளையுடைய
வண்டுகள்; களிறு, பிடியைச் சுற்றிய வண்டுகளை ஓட்டியது.
குளவியையும் பிடிகளையும் உடைய குன்று.
14
- 20. அவண் - சேரனது முன்னிலையை. இரும்பேரொக்கல்
- வறுமையால் கரிய பெரிய சுற்றத்தார் (சிறுபாண்.
139, ந.). ஒக்கலது
பழங்கண் என்க; பழங்கண்-துன்பம். தொல் பசி - தொன்றுதொட்டு
வந்த பசி (பெரும்பாண். 25). எஃகு
- இங்கே அரிவாள்;
அரிவாளால் பிளந்து அறுத்த வெள்ளிய நிணத்தோடு சேர்ந்த
காழுவிய துண்டாகிய ஆட்டின் மாமிசம்; மை - ஆடு. வெண்ணெல்
- ஒருவகை நெல். நனை அமை கள்ளின் தேறல் - அரும்பினால்
அமைத்த கள்ளின் தெளிவு. நீர்ப்படு - மழை நீரில் வருந்திய. நிலம்
தின் சிதார் - மண்ணால் அரிக்கப்பட்ட கந்தை. சிதாருக்குப்
பருந்தின் சிறகு உவமை; புறநா. 150: 1
- 2.
வீழ,
மாந்தி, களைந்த பின்றையென்க.
21.
நூலாத நூலா னியன்ற கலிங்கமென ஒற்றுமை நயம்பற்றிச் செயப்படுபொருள் மேல் நின்றது.
(தொல். வினை. 37, ந;
இ. வி.
243)
21
- 5. நூலாக்கலிங்கம் - நூற்கப்படாத ‘நூலாலியன்ற
ஆடை ; பட்டாடை. வால் அரைக் கொளீஇ - வெள்ளிய அரையில் உடுத்தி; வெண்மை: இன்மையைக்
குறித்தது. வணர் இருங்கதுப்பின் - வளைந்த கரிய கூந்தலையுடைய. மகளிரென்றது விறலியரை.
விறலியர்
உபகாரிகளால் தரப்பெற்ற இழையை அணிதல்:
பொருந. 159-62, குறிப்புரை; மலைபடு.
569 - 70. அமர்பு - மனம்
பொருந்தி. மெய் ஆர்த்த சுற்றம் - உண்மையைத் தம்மிடத்தே
கட்டிய மந்திரி முதலிய சுற்றத்தார். நுகர்தற்கு - கலந்து மகிழ்தற்கு.
சுற்றமொடு மகிழ்வென இயைக்க.
கொளீஇ,
அணிய, மகிழ்வு இனிது என்க.
(பி
- ம்) 5. சோலைப் பிறமான். 11. இழையவாடு நடை.
(2)
1மற்றைப்புகழ்
- கல்வி, ஈகை முதலியவற்றால் வரும் புகழ்.
2ஓலக்கம்
- அரசிருக்கைக்குரிய இடம். செல்கின்ற - நடந்து
வருகின்ற. வினோதம் - பொழுதுபோக்கு.
|