முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
13. தொறுத்தவய லாரல்பிறழ்நவும்
ஏறுபொருதசெறு வுழா துவித்துநவும்
கரும்பின் பாத்திப்
பூத்த நெய்தல்
இருங்க ணெருமையி னிரைதடுக் குநவும்
 5 கலிகெழு துணங்கை யாடிய மருங்கின்
வளைதலை மூதா வாம்ப லார்நவும்
ஒலிதெங்கி னிமிழ்மருதிற்
புனல்வாயிற் பூம்பொய்கைப்
பாடல் சான்ற பயங்கெழு வைப்பின்
 10 நாடுகவி னழிய நாமந் தோற்றிக்
கூற்றடூஉ நின்ற யாக்கை போல
நீசிவந் திறுத்த நீரழி பாக்கம்
விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத்
திரிகாய் விடத்தரொடு காருடை போகிக்
 15 கவைத்தலைப் பேய்மகள் கழுதூர்ந் தியங்க
ஊரிய நெருஞ்சி நீறாடு பறந்தலைத்
தாதெரு மறுத்த கலியழி மன்றத்
துள்ள மழிய வூக்குநர் மிடறபுத்
துள்ளுநர் பனிக்கும் பாழா யினவே
20 காடே கடவுண் மேன புறவே
ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன
ஆறே யவ்வனைத் தன்றியு ஞாலத்துக்
கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக்
குடிபுறந் தருநர் பார மோம்பி
25 அழல்சென்ற மருங்கின் வெள்ளி யோடாது மழைவேண்டு புலத்து மாரி நிற்ப
நோயொடு பசியிகந் தொரீஇப்
பூத்தன்று பெருமநீ காத்த நாடே.

     துறை - செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் - ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். பெயர்
- பூத்த நெய்தல் (3)

     (ப - ரை) பிறழ்ந (1) எனவும் வித்துந (2) எனவும் தடுக்குந
(4) எனவும் ஆர்ந (6) எனவும் வந்தன. 1வினைப்பெயர்த் திரிசொல்.

     3 - 4. நெய்தல் எருமையின் நிரை தடுக்குநவுமென்றது
நெய்தலானது அக்கரும்பு முதலாய 2மற்றோரிரையின் பாங்கரிற்
செல்லாது தன்னையே நின்று தின்னும்படி தான் போதவுண்ட
எருமை நிரையைத் தடுக்கும் இடங்களுமென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'பூத்த நெய்தல்' என்று பெயராயிற்று.

     6. மூதா ஆம்பலார்நவுமென்றது புறத்துப் போய் இரை
3தெவிட்டாத முதிய ஆக்கள் துணங்கையாடிய இடத்து நின்று (5)
ஆம்பலையே தின்னும் இடங்களுமென்றவாறு.

     என்றது பெருக ஆம்பல் சூடித் துணங்கையாடுவாரை
உடையனவென அவ்விடங்களின் செல்வச் சிறப்புக் கூறியவாறாயிற்று.

     7. இமிழ் மருதென்றதற்குப் புள்ளிமிழ் மருதென்று ஒரு பெயர்
வருவிக்க.

     8. புனல்வாயில் - 4வாய்த்தலை.

     1 - 10. ஒலிதெங்கென்னும் பெயர்க்கு முன்னின்ற பெயர்கள்
எண்ணும்மையோடு நின்றமையால் அவற்றையுடைய நாடென
இரண்டாவதன் தொகையாய், அச்சொல் (?)
...................அவற்றையெல்லாம் எழுவா
யாக்க நாட்டிற்கு அவ்விடங்கள்
சினையாகலின், நாடு கவினழியவென்னும் முதற் பயனிலையோடு
5வழுவமைதியாக முடிக்க.

     10 - 11. கூற்றடூஉ நின்ற யாக்கைபோல நாடு கவினழியவென
மாறிக் கூட்டிக் கூற்றுவனாலே கொல்லப்படாநின்ற யாக்கை ஒரு
காலைக்கு ஒருகால் அழகழியுமாறுபோல, நாடு அழகழியும்படியென
உரைக்க.

     இனி, மாறாதே போலும்படி யென, போலவென்பதனை
வினையெச்ச நீர்மையாக்கி, போல்கின்றது மேல்வருகின்ற பாக்கமாக
உரைப்பினும் அமையும். 6இனி, கூற்றுவனை அட்டுநின்ற யாக்கையை
உடையானொருவன் உளனாயினும் அவனைப்போல நீ
சிவந்தென்றுரைப்பாரும் உளர்.

     12. நீரழி பாக்கமென்றது 7வெள்ளத்தான் அழிவுபடினல்லாது
பகைவரான் அழியாத பாக்கமென்றவாறு.

     பாக்கமென்றது நெய்தனிலத்து ஊர்க்கேயன்றி, 8"கட்கொண்டிக்
குடிப்பாக்கத்து, நற்கொற்கை" (மதுரைக். 137-8) என்று வந்தமை யான்
ஒரோவழி 9அரசனிருப்புக்கும் பெயராமாகலின் ஈண்டு பாக்கமுடைய
பேரூர்களெனப்பட்டது.

     14. உடைபோகவெனத் திரிக்க.

     17-9. மன்றத்து உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து
உள்ளுநர் பனிக்கும் பாழென்றது அம்மன்றிலே போதற்கு உள்ளம்
10அழியச் செய்தே பின்னும் தம் கரும வேட்கையாற் போக
மேற்கொண்டவருடைய வலியைக் கெடுத்தலானே பின்பு போக
நினைப்பார் நடுங்குதற்குக் காரணமாகிய பாழென்றவாறு.

     18. தபுத்து: தபுக்கவெனத் திரிக்க.

     20. காடே கடவுள் மேனவென்றது நின் நாட்டுப் பெருங்காடான
இடங்களெல்லாம் (முதற்காலத்துக்) கோயில்களான வென்றவாறு.

     மேயினவென்பது மேனவென்று இடைக் குறைந்தது.

     20-21. புறவு மகளிரொடு மள்ளர்மேனவென்றது சிறுகாடான
இடங்களெல்லாம் நின்படையாளர்கள் மகளிரொடு உறையும் 11படை நிலைகளாயின வென்றவாறு.

     22. ஆறே அவ்வனைத்தென்றது காடும் புறவும் அல்லாத
பெருவழிகளும், ஆறலைகள்வரும் 12பிற இடையூறுமின்றி
முன்சொன்ன கடவுளும் மள்ளரும் உறையும் இடமாயின வென்றவாறு.

     அனைத்தென்னாது அவ்வனைத்தென்று சுட்டு இரட்டித்தது
அந்த அந்தத் தன்மையதென முன்நின்றவற்றின் பன்மை
தோற்றற்கென்பது.

     23. தாராவென்பது தராவெனக் குறுகிற்று.

     24. குடிபுறந்தருநரென்றது தம் 13கீழ்க்குடிகளாகிய
வரிசையாளரைப் புறந்தரும் மேற்குடிகளாகிய காணியாளரை.

     பாரமோம்பி (24) நீ காத்த (28) என மாறிக் கூட்டுக.

     வெள்ளி யோடாமல் (25) எனவும் பசியிகந்தொருவ (27)
எனவும் திரிக்க.

     22-6. இனி, ஆறு முன் சொன்ன அவ்வனைத்தாவதுமன்றி
ஆறலை கள்வரின்றிக் கூல் பகர்வார் இயங்கும்படியான வழக்காலே
அந்தக் கூலம் பகர்வார் குடிகளைப் புறந்தந்தென்றும், குடிபுறந்தருநர்
பாரத்தை ஓம்பி மழைவேண்டு புலத்து மாரிநிற்பவென்றும், கூலம்
பகர்நர் குடிபுறந்தருதலை ஆற்றின் தொழிலாகவும் குடிபுறந்தருநர்
பாரமோம்புதலை மழையின் தொழிலாகவும் கூட்டி உரைப்பாரும்
உளர்.

     கூற்றடூஉநின்ற யாக்கைபோல (11) நாடுகவினழிய நாமந்தோற்றி
(10) நீ சிவந்திறுத்த நீரழி பாக்கங்கள் (12) கழனி புல்லெனக் (13)
காருடைபோகக் (14) கழுது ஊர்ந்து இயங்கப் (15) பாழாயின (19); நீ
காத்த நாட்டிற் (28) காடு கடவுளான் மேவப்பட்டன (20); அந்நாட்டுப்
புறவுகள் மள்ளரான் மேவப்பட்டன. (21); அந்நாட்டு ஆறு
அவ்வனைத்தாயிற்று; அன்றியும் (22) கூலம்பகர்நர் குடிபுறந்தராக்(23)
குடிபுறந்தருநர் பாரமோம்பி (24) நீ காத்த நாடு (28), மழைவேண்டிய
புலத்து மாரிநிற்ப (26) நோயொடு பசியிகந்தொருவப் (27) பூத்தது (28)
எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்பும் தன்
நாடுகாத்தற் சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று.

     'தொறுத்த' (1) என்றும், 'ஏறுபொருத' (2) என்றும், ஒலிதெங்கின்'
(7) என்றும், 'புனல்வாயில்' (8) என்றும், இருந்த நான்கடியும்
வஞ்சியடியான் வந்தமையான், வஞ்சித்தூக்குமாயிற்று.

     (கு - ரை) 1-10. பகைவர் நாட்டின் பழையநிலை கூறப்படும்.

     1. தொறுத்த வயல்-ஆட்டுக்கிடைகட்டிய வயல்கள்; தொறு -
ஆடு. ஆரல் பிறழ்ந - தம்பால் நீர் நிரம்பி நிற்றலின், ஆரல்மீன்
உகளுவதற்கு இடமாயிருப்பவை.

     2. ஏறு தம்முட் பொருதமையினாலே வயல் சேறு பட்டு
உழவேண்டாதனவாயின; செறு-வயல் (பெரும்பாண். 210-11)

     3. பாத்தியின்கண் பூத்த நெய்தல். கரும்பின் பாத்தி; குறுந்.
262 : 7, குறிப்புரை

     4. எருமையின் நிரை - எருமையின் வரிசை.

     5-6. ஆரவாரம் மிக்க துணங்கைக் கூத்தை மகளிர் ஆடிய
இடங்களில் அவர்கள் அணிந்து வீழ்த்திய ஆம்பல்மலர்களை
வளைந்த தலையை யுடைய முதிர்ந்த பசுக்கள் உண்டன. துணங்கை;
"மகளிர் தழீஇய துணங்கை யானும்" (குறுந். 31 : :2) என்பதன் உரை
முதலியவற்றைப் பார்க்க.

     7. ஒலித்தல் - தழைத்தல் என்பதற்கு மேற்கோள் (சீவக,
653, ந.)

     7-10. ஒலி தெங்கு- தழைத்த தென்னை. இமிழ் மருது - கிளி
முதலிய பறவைகள் ஒலிக்கின்ற மருதமரம். வைப்பு - ஊர்கள். கவின்
- அழகு. நாமம்-அச்சம்.

     1-10. பிறழ்ந, வித்துந, தடுக்குந, ஆர்ந: வினையாலனையும்
பெயர்கள். பிறழ்ந முதலியவற்றையும், தெங்கையும், மருதையும்,
பொய்கையையும், வைப்பையும் உடைய நாடு.

     11-9. பகைவர் நாடு அழிந்தபின் நின்ற நிலை கூறப்படும்.

     11. கூற்றால் அடப்பட்டு நின்ற உடலைப்போல; என்றது
பிணத்தை.

     12. சிவந்து-கோபித்து, நீரழி பாக்கம்: உரையைப் பார்க்க; தமது
இயல்பான நீர்மை அழிந்த ஊர்கள் எனலும், நீர்நிலைகள் அழிந்த
ஊர்கள் எனலும் ஆகும். சிவப்பென்னும் உரிச்சொல்
வெகுளிப்பொருளில் வருவதற்கு மேற்கோள் (தொல். உரி. 74, ந.)

     13. புல்லென-பொலிவழிய.

     14. திரிந்த காயையுடைய விடத்தேரையென்னும் முள்மரத்தோடு
கரிய உடைமரமும் வளரப்பெற்று; விடத்தர், உடை : முள்
மரவகைகள். விடத்தர் என்பது விடத்தேர், விடத்தேரை, விடத்தே
தொடரி எனவும் வழங்கும் (பெரும்பாண். 184 - 5, ந. குறிப்புரை).
போகல் என்னும் உரிச்சொல் நெடுமையை உணர்த்துதற்கு மேற்கோள்
(தொல். உரி. 19, 91, ந.)

     15. 'கவைத்தாட் பேய்மகள்' என்பது பெருவழக்கு. பேய்மகள்
பேயை ஊர்ந்து செல்ல. பேய்மகளும் கழுதும் பரந்து செல்ல எனலும்
ஆம்.

     16. ஊரிய-பரந்த. நெருஞ்சியை யுடைய பறந்தலை, நீறாடு
பறந்தலை என்க; நீறு-புழுதி. பறந்தலை-வறுங்களம்.

     17. சாணம் இல்லையான, ஆரவாரம் அழிந்த மன்றம்; மன்றம்
பசுக்கள் தங்கும் இடம். முன்பு தாதெரு நிறைந்து கலிமிக்க மன்றமாக
இருந்தது. இப்பொழுது அவ்விரண்டும் இலதாயிற்று.

    18. உள்ளம்-மனவெழுச்சி. மிடல் தபுத்து வலியை அழித்து.

    19. பனிக்கும்-நடுங்கும்.

    11-9. பாக்கம் யாக்கைபோல, போகி, இயங்க, பறந்தலையையும்
மன்றத்தையுமுடைய பாழ்நிலமாயின; உரையாசிரியர்வேறு முடிபு
கூறுவர்.

    20-28. சேரமன்னனாற் பாதுகாக்கப்பட்ட நாட்டின் நிலை
கூறப்படும்.

    20. காடு-பெருங்காடு. மேன - மேயின = விரும்பப்பட்டன.
புறவு - சிறுகாடு.

    21. மள்ளர்-வீரர்.

    20-21. சீவக. 2578, ந. மேற்.

    22. ஆறு-பெருவழி. அவ்வனைத்து : முற்று.

    23. கூலம் பகர்நர்-நெல் முதலிய பண்டங்களை விற்கும்
வணிகர். புறந்தரா-பாதுகாத்து.

     24. குடிபுறந்தருநரென்றது வேளாளரை. பாரம் இங்கே
குடும்பத்தைக் குறித்தது; "பகடுபுறந் தருநர் பார மோம்பி"
(புறநா. 35 : 32)

    25. அழல்-செவ்வாய். வெள்ளி-சுக்கிரன். செவ்வாயும் சுக்கிரனும்
சேர்ந்தால் மழை இலதாகும் என்பது சோதிட நூற்றுணிபு.

    26. புலம்-இடம். மாரி நிற்ப- மழை பெய்ய.

    27. நோயும் பசியும் நீங்கல் ஒரு நாட்டுக்கு இலக்கணம்
(குறள், 734; சிலப். 5 : 72; மணி. 1 : 71). இகந்து ஒரீஇ - விட்டு
நீங்க; ஒரீஇ : எச்சத்திரிபு.

    28 பூத்தன்று-பொலிவு பெற்றது.

    23-8. புறந்தரா, ஓம்பி, காத்த நாடு, ஓடாது நிற்ப ஒரீஇப்
பூத்தன்று.

     மு. 'இதனுள் மறத்திற் சென்று நாட்டை அழித்தவாறும்,
அறத்திற்றிரிந்த வேந்தனை அழித்து அவன் நாட்டைக் குடியோம்பிக்
காத்தவாறும் கூறிற்று' (தொல். புறத். 20, ந.)

     (பி - ம்) 1. தொறுத்தகு நீள்வயல். 16. ஊறிய நெருஞ்சி. 24.
குடிபுறந்தாரா.                                     (3)


     1 வினைப்பெயர் - வினையாலணையும் பெயர்.

     2 “செலல் விலங்குதேன்" (தக்க. 360) என்பதும், 'தன்னை
விட்டுப் போகையை விலக்கும் தேன்' என்னும் அதன் உரையும்
இதனோடு ஒப்பிடற்பாலன.

     3 தெவிட்டாத - உண்டு அசைபோடாத. 'இரைதேர மாட்டாத'
என்றிருப்பின் நலம்.

     4 வாய்த்தலை - வாய்க்காலின் தலைப்பு; வாத்தலை என
இப்பொழுது வழங்கும்.

     5 வழுவமைதி என்றது சினைப்பெயர்கள் முதற்பயனிலையோடு
முடிந்தமையை.

     6 இப்பொருள் சிறப்புடையதன்று.

     7 “செந்நீர்ப் பூச வல்லது, வெம்மை யரிதுநின் னகன்றலை
நாடே”
(பதிற். 28 : 13 - 4), “தண்புனற் பூச லல்லது நொந்து,
களைகவாழி வளவ வென்றுநின், முனைதரு பூசல் கனவினு மறியாது”.

(புறநா. 42 : 7 - 9) என்பவற்றை இவ்வுரை நினைப்பிக்கின்றது.

     8 இங்கே காட்டிய பகுதிக்கு நச்சினார்க்கினியர், 'கள்ளாகிய
உணவினையுடைய இழிந்த குடிகளையுடைய
சீறூர்களையுமுடைய
நன்றாகிய கொற்கை' என உரை வகுத்தார்.

     9 அரசனிருப்பு - இராசதானி

     10 அழியச் செய்தே - அழிந்துகொண்டிருக்கும்போதே;
இச்சொல் அழியச்சே என வழங்கும்.

     11 படைநிலை - படை தங்குமிடம்; இதனைப் பாடி என்றும்,
கைந்நிலை என்றும் வழங்குவர்.

     12 பிற இடையூறுகளாவன: இடி வீழ்ச்சி, அரவு, காட்டுவிலங்கு
முதலியவற்றால் வருந்துன்பங்கள்
(பெரும்பாண். 39 - 43; சிலப்.
13 - 5 - 9)

     13 கீழ்க்குடிகளென்றது உழுதுண்ணும் வேளாளரையும்,
மேற்குடிகளென்றது உழுவித்துண்ணும் வேளாளரையும் குறித்தன.
வரிசையாளர்-வாரம் முதலிய பகுதி தருபவர்; காணியாளர் -
நிலத்துக்குரியோர். இவ்விரு வகையினரையும், “வீழ்குடி யுழவர்”

(சிலப். 5 : 43) என இளங்கோவடிகளும் குறித்தனர்.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

3. பூத்த நெய்தல்
 
13.தொறுத்தவய1 லாரல்பிறழ்நவும்
ஏறுபொருதசெறு வுழாதுவித்துநவும்
கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்
இருங்க ணெருமையி னிரைதடுக் குநவும்
 
5கலிகெழு துணங்கை யாடிய மருங்கின்
வளைதலை மூதா வாம்ப லார்நவும்
 

 

ஒலிதெங்கி னிமிழ்மருதிற்
புனல்வாயிற் பூம்பொய்கைப்
பாடல் சான்ற பயங்கெழு வைப்பின்
 
10நாடுகவி னழிய நாமந் தோற்றிக்
கூற்றடூஉ நின்ற யாக்கை போல
நீசிவந் திறுத்த நீரழி பாக்கம்
விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத்
திரிகாய் விடத்தரொடு காருடை போகிக்
 
15கவைத்தலைப் பேய்மகள் கழுதூர்ந் தியங்க
வூரிய
2 நெருஞ்சி நீறாடு பறந்தலைத்
தாதெரு மறுத்த கலியழி மன்றத்து
உள்ள மழிய வூக்குநர் மிடறபுத்(து)
உள்ளுநர் பனிக்கும் பாழா யினவே
 
20காடே கடவுண் மேன புறவே
ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன
ஆறே யவ்வனைத் தன்றியு ஞாலத்துக்
கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக்
3
குடிபுறந் தருநர் பார மோம்பி
 
25அழல் சென்ற மருங்கின் வெள்ளி யோடா(து)
மழைவேண்டு புலத்து மாரி நிற்ப  
நோயொடு பசியிகந் தொரீஇப்
பூத்தன்று பெருமநீ காத்த நாடே
 

துறை : செந்துறைப் பாடாண்பாட்டு.
வண்ணம் : ஒழுகுவண்ணம்.
தூக்கு : செந்தூக்கும்வஞ்சித்தூக்கும்.
பெயர் : பூத்தநெய்தல்.

 1 - 10. தொறுத்தவயல்.............நாடு.

உரை : தொறுத்த வயல் - ஆனிரைகள் புல்மேயும் கொல்லைகள்;
ஆரல்   பிறழ்நவும்  -  ஆரல்மீன்  பிறழ்ந்துலாவும்,  நீர்  நிரம்பிய
வயல்களாயினவும்;  ஏறு  பொருத  செறு  -  பன்றிகள்  தம்முடைய
மருப்புக்களாற்  கிண்டிப்  புழுதியாக்கிய  புலம்; உழாது வித்துநவும் -
ஏரான்       உழுதலை      வேண்டாது   காலாற்  குழப்பி விதை
விதைக்கும்      வயல்களாயினவும்;      கரும்பின்     பாத்திப்
பூத்த  நெய்தல்  -  கரும்பு  நிற்கும்  பாத்திகளிற்  பூத்த   நெய்தல்;
இருங்கண் எருமையின் நிரை தடுக்குநவும் - பெரிய கண்களையுடைய
எருமைக்    கூட்டத்தைப்   பிறவிடத்திற்கு   மேய்ச்சல்   வேண்டிச்
செல்லாவாறு தடுக்கும் வயல்களாயினவும்; கலிகெழு துணங்கை ஆடிய
மருங்கின்  -  இளையமகளிர் கூடி ஒலிமிக்க துணங்கைக்கூத்  தயரும்
இடங்கள்;  வளைதலை  மூதா  -  வளைந்த  தலையையுடைய முதிய
ஆக்கள்;  ஆம்பல்  ஆர்நவும்  -  அவர்  தழையுடையினின்றுதிர்ந்த
ஆம்பலை  மேயும்  இடங்களாயினவும்;  ஒலி  தெங்கின்  - தழைத்த
தென்னைகளும்;   இமிழ்  மருதின்  -  புள்ளினம்   கூடியொலிக்கும்
மருதமரங்களும்; புனல் வாயிற் பூம்பொய்கை - கால்வாய்களையுடைய
பூம்பொய்கைகளு முடைமையால்; பாடல் சான்ற பயம்கெழு வைப்பின்
-  புலவர்  பாடும் புகழ்பெற்ற செல்வம் பொருந்திய வூர்களையுடைய;
நாடு - நாடானது,
 

புல்லும்     தழையும் நிறைந்து ஆனிரைகட்கு மேய்கொல்லையாக
இருந்தவை,    நெல்    விளையும்   நன்செய்களாயின   வென்பார்,
“தொறுத்தவயல்  ஆரல் பிறழ்நவு” மென்றும், கிழங்கு தேர்ந்துண்ணும்
இயல்பினவாகலின், கேழற்பன்றிகள் தம்முடைய  மருப்புக்களாற் கிண்டி
நிலத்தையுழுது  விடுவதால் உழவர்  ஏரான் உழுதல் வேண்டாவாயின
வென்றற்கு,   “ஏறு   பொருத  செறு  உழாது  வித்துநவும்” என்றும்
கூறினார்,  “கடுங்கட்  கேழ  லுழுத பூமி, நன்னாள் வருபத நோக்கிக்
குறவர்,  உழாது  வித்திய  பரூஉக்குரற்  சிறுதினை” (புறம். 168) என
வருதல்  காண்க.  “பன்றி புல்வாய் உழையே கவரி, என்றிவை நான்கு
மேறெனற்   குரிய”   (தொல்.   பொரு.   593)  என்றதனால் பன்றி
ஏறெனப்பட்டது.     இதனாற்     காடழிந்து     நாடாகிய   முறை
தெரிவித்தாராயிற்று.   இனி,   ஏறு  பொருத  செறு  உழாது வித்துந
என்பதற்கு,  ஏறுகள்  தம்முட்  பொருதமையினாலே வயல் சேறுபட்டு
உழவேண்டாதனவாயின வென்றுரைத்து, “பைஞ்சாய் கொன்ற மண்படு
மருப்பின்,   காரேறு   பொருத   கண்ணகன்   செறுவின்,  உழாஅ
நுண்டொளி நிரவிய வினைஞர். முடிநா றழுத்திய நெடுநீர்ச் செறுவின்”
(பெரும்பாண்.  209-12) என்பதனைக் காட்டலுமொன்று.  கரும்புநிற்கும்
பாத்தியில்  நீர்  இடையறா  திருத்தலின், நெய்தல் உளதாயிற்று; அது
தேன்மிக்குத்   தன்னை   மேயும்   எருமை   யினத்தை   வேறிடம்
செல்லாவாறு  பிணித்தலின், “எருமையின் நிரைதடுக்குநவும்” என்றார்;
“கரும்புநடு   பாத்தியிற்   கலித்த   வாம்பல்,  சுரும்புபசி  களையும்
பெரும்புன  லூர”  (ஐங்.  65)  எனப்  பிறர்  கூறுவது  இக்கருத்தோ
டொருபுடையொத்தல்  காண்க. கரும்புநடு பாத்தியிற் கலித்த நெய்தல்,
தன்பால்  நிறைந்துள்ள  நறுவிய  தேனின்  சுவையொடு  பொருந்திய
இரையாகி,  அருகு  நிற்கும்  கரும்பினை நாடாவாறு செய்யுமுகத்தால்
அக்   கரும்பினைக்  காக்கும்  இயற்கையழகு  விளங்கத்  தெரிக்கும்
சிறப்பினைப்  பாராட்டி,  இப்பாட்டினைப்  ‘பூத்த நெய்தல்’ என்றனர்.
பழையவுரைகாரரும், “இச்சிறப்பானே பூத்த நெய்தலென்று பெயராயிற்”
றென்றார்.    இளையமகளிர்   இடையில்   ஆம்பற்றழை   யுடுத்து,
கண்ணியும்        மாலையும்    அவ்வாம்பலே    தொடுத்தணிந்து
விளையாட்டயர்பவாதலின்,            அவர்       துணங்கையாடி
விளையாடுமிடம்  ஆம்பல் மிடைந்து கிடத்தலால், “துணங்கை யாடிய
மருங்கின்,  வளைதலை  மூதா  ஆம்பலார்நவும்”  என்றார். கலிகெழு
துணங்கை  யென்றதனால்  வாச்சிய வொலியே யன்றி, இளையமகளிர்
விளையாட்டொலியும்    பெற்றாம்    “அளிய    தாமே   சிறுவெள்
ளாம்பல்..........இளைய  மகாத்  தழைய யினவே”(புறம். 248)  என்பதும்
இதனை  வலியுறுத்தும்.  முதுமை  யெய்தியவழி  மக்களும் விலங்கும்
தலைசாய்தல் இயல்பாதலின், “வளைதலை மூதா” என்றார். இதுகாறும்,
முல்லையும்   குறிஞ்சியுமாயவை   நல்வளம்  நல்கும்  மருதவயலாகி
மாண்புற்று  விளங்கும்  திறங்கூறிய  ஆசிரியர்,  அதன்கண்  நிற்கும்
மரவகையும்  நீர்நலமும்  கூறலுற்று,  “ஒலி தெங்கின் இமிழ் மருதின்”
என்றும்,  “புனல்  வாயிற் பூம் பொய்கை” யென்றும் கூறினார். இமிழ்
மருதெனவே,  இமிழ்தற்குரிய  வினைமுதல்  வருவிக்கப்பட்டது பொய்
கைக்கண்ணுள்ள  நீர் சென்று வயல்களிற் பாய்ந்து பயன் விளைக்கும்
வாயிலாதலின்,  கால்வாயைப்  “புனல்  வாயில்”  என்றார்.  “வயலமர்
கழனி வாயிற் பொய்கை” (புறம். 354) என்று பிறரும் கூறுதல்  காண்க.
இவ்வாறு  நீர்வளம் மிகுந்து செல்வம் சிறத்தலால் புலவர் பாடும் புகழ்
பெறுவதாயிற்றென்பார்,   “பாடல்சான்ற   பயங்கெழுவைப்பின்  நாடு”
என்றார். வைப்பு - ஊர்கள்.
 

இவ்வண்ணம்  கவின்மிக்கு   விளங்கும்   நாடு,   சேரலாதனைப்
பகைத்தமையா லெய்தும் அழிவினை இனிக் கூறுகின்றார்.

10 - 19. நாடு கவினழிய...............பாழாயினவே.

உரை : நாடு  கவின் அழிய - (மேற்கூறிய)  நாடுகள்  தம் அழகு
கெடுமாறு;  நாமம் தோற்றி - அந்நாட்டிடத்து உயிர்கட்கு அச்சத்தைத்
தோற்றுவித்து;  நீ சிவந்து இறுத்த - நீ வெகுண்டு தானையுடன் தங்கி
முற்றுகையிட்டதனால்; கூற்று அடூஉநின்ற யாக்கை போல-கூற்றுவனால்
அடப்படும்  யாக்கை  புல்லெனத்  தோன்றிப்  பொலிவழிவது போல;
நீர்அழி பாக்கம் - தம் நீ்ர்மை யழிந்த பேரூர்கள்; விரிபூங்  கரும்பின்
கழனி - விரிந்த பூவையுடைய கரும்பு விளையுங்  கழனிகள்; புல்லென
-  புல்லென்று தோன்ற; திரிகாய் விடத்தரொடு - முறுக்கியது போலும்
காயையுடைய  விடத்தேரை  மரங்களுடன்; கார் உடை போகி - கரிய
உடையென்னும்   மரங்கள்   நெடிது  வளர்ந்தோங்க;  கவைத்தலைப்
பேய்மகள்  கழுது  ஊர்ந்து இயங்க - கவைத்த தலைமயிரினையுடைய
பேய்மகள்  கழுதினை  யூர்ந்து  திரிய;  ஊரிய  நெருஞ்சி  -  பரந்த
நெருஞ்சி முள் மிகுந்து; நீறாடு பறந்தலைத்தாது எரு மறுத்த நீறுபட்ட
போர்க்களத்தின்  புழுதிபடிந்து  பொலிவிழந்த;  கலியழி  மன்றத்து -
மக்களும்   மாவும்   செய்யும்   ஆரவாரம்  இல்லையாயழிந்த  ஊர்
மன்றத்தின்கண்; ஊக்குநர் உள்ளம் அழிய - செல்லுமாறு  கருதுவோர்
மனவெழுச்சி   அச்சத்தால்   அழிய;   உள்ளுநர்  மிடல்   தபுத்துப்
பனிக்கும் பாழாயின   -  கருதிச்  செல்வோருடைய  மன  வலியைக்
கெடுத்து உடல் நடுங்கச் செய்யும் பாழிடங்களாயின,
 

நாடுகவினழிய, தோற்றி, இறுத்த, நீரழிபாக்கம், கழனி, விடத்தரொடு
காருடை   போகி,   பேய்மகள்  இயங்க,  நெருஞ்சி  மன்றத்தின்கண்
ஊக்குநர்  உள்ளம்  அழிய,  உள்ளுநர்  மிடல்  தபுத்துப்  பனிக்கும்
பாழாயின   என   வினைமுடிவு   செய்க.   உடைபோக   வென்பது
போகியென    நின்றது.    நாடுகவினழிதற்குப்   போர்வினை   ஒரு
காரணமாயினும்,   நாட்டு   மக்கள்   மனத்தே  அச்சம்  பிறப்பித்து,
உள்ளத்திட்பத்தைச்  சிதைத்தல்  பெருங் காரணமாதலை விளக்குவார்
“நாமம்   தோற்றி”   என்றார்.   இஃது   அண்மையில், மேனாட்டுச்
சருமானியர்  (Germans) செய்த போர்ச் சூழ்ச்சிகளுள் தலையாயதாக
விருந்ததை  நாம்  கண்டோம்.  சேரலாதன் பெருவெகுட்சியுடன் தன்
பெரும்படைகொண்டு  தங்கியதனால்,  நாட்டு மக்கள் அஞ்சி யலமந்து
நீங்கினாராக, பேரூர்கள் காவலின்மையின் தம் செல்வநலமும் சிறப்பும்
குன்றின  வென்பார்,  “நீரழிபாக்க”  மென்றும்,  நாள் செல்லச்செல்ல
அவற்றின்  பொலிவும்  தேய்ந்து பாழாயிற்றென்பார், “கூற்றடூஉ நின்ற
யாக்கை   போல,   விரிபூங்  கரும்பின்  கழனி  புல்லென” என்றும்
கூறினார்.   ‘நீர்முற்றி   மதில்பொரூஉம்   பகையல்லால்   நேராதார்,
போர்முற்றென  றறியாத  புரிசைசூழ்  புனலூர”  (கலி.  67) என்பதை
யுட்கொண்டு. “நீரழிபாக்க மென்றது, வெள்ளத்தான் அழிவுபடி னல்லது
பகைவரான்  அழியாத  பாக்கம் என்றவாறு” என்றும், கூற்றடூஉ நின்ற
யாக்கை   போல  நீ  சிவந்து  எனக்  கூட்டி,  “இனிக்  கூற்றுவனை
யட்டுநின்ற     யாக்கையையுடையா    னொருவன்    உளனாயினும்,
அவனைப்போல  நீ  சிவந்து என்றுரைப்பாரு முளர் என்றும் கூறுவர்
பழைய வுரைகாரர். இறுத்த என்னும் பெயரெச்சம் காரணப் பொருட்டு.
விடத்தர்,  விடத்தேரை யென்னும் மரம். உடை, ஒரு வகை  முள்மரம்
கருநிறத்தாதலின்   “காருடை”  யெனப்பட்டது.  போகுதல்,  உயர்தல்.
பாழிடத்தே   கழுதும்  பேயும்  வாழு  மென்பவாதலின்,  “பேய்மகள்
கழுதூர்ந்   தியங்க”   என்றார்.  பேய்மகளின்  தலைமயிர்  காய்ந்து
செம்பட்டையாய்  இருபிளவாய்  நிமிர்ந்து  நிற்றலின்  “கவைத்தலைப்
பேய்மகள்”  என்றார். இன்றும் தலைமயிர் எண்ணெயும் நீரும் படாது
நெடுநாள்   விட்டவிடத்து,  நுனி  பிளவுபடுதல்  கண்கூடு.  ஆகவே,
தலையென்பது  ஆகுபெயராதல் காண்க ஊர்தல், பரத்தல்; பிறைநுதல்
பசப்பூரப் பெருவிதுப் புற்றாளை” (கலி. 99) என்றாற்போல. பறந்தலை,
போர்க்களம்.   போர்வீரர்   தம்முட்  கலந்து  போருடற்று  மிடத்து.
அக்களம்  புழுதிமிக்கு  நீறாதலின்,  “நீறாடு  பறந்தலை”  யென்றும்,
ஊர்ப்புறத்தே   போர்   நிகழ்தலின்,  ஆண்டெழும்  புழுதி  சென்று
மன்றத்திற்  படிந்து  மாசு படுத்துதலால். “நீறாடு பறந்தலைத் தாதெரு
மறுத்த  கலியழி  மன்றத்து”என்றும்  கூறினார.் தாது, எரு; நுண்ணிய
புழுதி.  மறு,  குற்றம்;  அழுக்கு.  மறுத்த,  மறுவினை  யுடைத்தாகிய
என்றவாறு.    மாவும்    மாக்களும்   வழங்குதலின்றிப்   பாழ்பட்ட
மன்றத்திற்குட்  செல்ல ஒருவர் விரும்பின், அவர் உள்ளம் எழாவகை
அச்சம் தோன்றி அதனை அழிவித்தலின், “உள்ளம் அழிய” என்றும்
ஒருகால்  துணிந்து செல்லக் கருதின் அவர்தம் மனத்திட்பம் சிதைந்து
கெடுதலின்,    “ஊக்குநர்    மிடல்தபுத்து”    என்றும்    கூறினார்.
தபுத்தல்வினை    பனிக்கும்   என்பதனோடு   இயைய   வேண்டிப்
பழையவுரைகாரர்   “தபுத்   தென்பதனைத்   தபுக்க  வெனத்திரிக்க”
என்றும்,  “மன்றத்து  உள்ளம்  அழிய    ஊக்குநர்  மிடல்  தபுத்து
உள்ளுநர் பனிக்கும் பாழென்றது, அம்மன்றிலே  போதற்கு   உள்ளம்
அழியச்செய்தே   பின்னும்   தம்     கருமவேட்கையாற்     போக
மேற்கொண்டவருடைய    வலியைக்   கெடுத்தலானே  பின்பு போக
நினைப்பார்  நடுங்குதற்குக்  காரணமாகிய பாழ் என்றவா”  றென்றும் 
கூறுவர்.
 

20 - 28. காடே.........................காத்தநாடே.

உரை : பெரும - பெருமானே;  காடு   கடவுள்  மேன - காடுகள்
முனிவர்  விரும்பி  வாழும் இடமாக; புறவு - முல்லைக் கொல்லைகள்;
ஒள்ளிழை  மகளிரொடு  மள்ளர்  மேன  -  ஒள்ளிய  இழையணிந்த
மகளிரொடு        மள்ளர்கள்          உறையும்        இடமாக;
ஆறு-காடும்புறவுமல்லாதபெருவழியானது;    அவ்    வனைத்து    -
அவற்றைப்போலச்   செல்வோர்   இனிது   செல்லும்  இயல்பிற்றாக;
அன்றியும்   -   இவை   யல்லாமலும்;  ஞாலத்துக்  கூலம்  பகர்நர்
குடிபுறந்தரா  அ  நிலத்தே  விளையும்  எண்வகைக்  கூலங்களையும்
விற்கும்  வணிகர்  குடியைப்  பேணி; குடிபுறந் தருநர் பாரம் ஓம்பி -
குடிமக்களைப்   பாதுகாக்கும்   காணியாளர்   சுற்றத்தைச்   சிறப்புற
வோம்பி;  அழல்  சென்ற  மருங்கின் வெள்ளி யோடாது - செவ்வாய்
சென்றவிடத்து  வெள்ளி செல்லாமையால்; மழை வேண்டுபுலத்து மாரி
நிற்ப - வேண்டும் புலங்களில் வேண்டுங்காலத்து மழை பொழியாநிற்க;
நீ  காத்த நாடு - நீ காத்தோம்பும் நாடு; நோயொடு பசியிகந்து ஒரீஇ -
நோயும்   பசியும்   இல்லையாக  நீங்கி;  பூத்தன்று  -  பல்வளமும்
நிரம்பியுள்ளது எ - று.

உலகியல்     நெறி நில்லாது  கடவுள் நெறி  நிற்றலின்,  முனிவர்
கடவுளெனப்பட்டனர்;  “தொன்முது  கடவுட் பின்னர் மேய”  (மதுரை.
41)  என்றாற்போல.  அரசன் கோல் செவ்விதாயவழி மாதவர் நோன்பு
இனிதியலுதல்  பற்றி,  ‘காடு  கடவுள்  மேன”  என்றும், புறவங்களில்
மள்ளர்    மகளிரொடு   இயங்கினும்   அவர்தம்   கற்புக்   கெடுவ
தின்மையின்,  “புறவே ஒள்ளிழை மகளிரொடு மள்ளர்மேன”  என்றும்
கூறினார்.   “மாதவர்   நோன்பும்  மடவார்  கற்பும்,  காவலன் காவ
லின்றெனி  லின்றால்”  (மணி.  22; 208-9) என்று சாத்தனார் கூறுதல்
காண்க.    போரின்மையின்    மள்ளர்    புறவங்களில்    தொழில்
செய்கின்றனரென   வறிக.  புறவுகளாவன;  வரகு,  சோளம்,  துவரை
முதலிய   கூலங்கள்   விளையும்   கொல்லைகள்;  ஈண்டுச்  சிறுசிறு
காடுகளும்  உண்டு;  ஆங்கு இடையர் தம்  ஆனிரைகளை மேய்ப்பர்.
காட்டிடத்தே   முனிவரரும்   புறவங்களில்   மள்ளரும்  இருத்தலின்
வழிச்செல்வோர்க்கு   ஆறலை   கள்வராலும்,  பிற  விலங்குகளாலும்
இடையூ  றின்மையின்,  அவ்வந்நிலத்து  வழிச்செல்லும்  பெருவழிகள்
இனியவாயின    வென்பார்.    “ஆறே   அவ்வனைத்து”   என்றார்.
அவ்வென்னும்  சுட்டு,  காட்டையும் புறவையும் சுட்டிநின்றது.  “காடே
கடவுள் மேன என்றது, நின் நாட்டுப் பெருங்காடான இடங்களெல்லாம்
முதற்காலத்துக்  கோயில்களான  எ  -  று; புறவு மகளிரொடு மள்ளர்
மேன  என்றது  சிறு  காடான இடங்களெல்லாம் நின் படையாளர்கள்
மகளிரொடு உரையும் படைநிலைகளாயின எ - று; ஆறே அவ்வனைத்
தென்றது, காடும் புறவுமல்லாத பெருவழிகளும் ஆறலை கள்வரும் பிற
இடையூறுமின்றி       முன்     சொன்ன    கடவுளும்   மள்ளரும்
உறையுமிடமாயின    எ    -    று.   இனி,   ஆறு  முன்சொன்ன
அவ்வனைத்தாவதுமன்றி,   ஆறலை   கள்வரின்றிக்   கூலம்பகர்வார்
இயங்கும்படியான  வழக்காலே  அந்தக்  கூலம் பகர்வார் குடிகளைப்
புறந்தந்தென்றும்,  குடிபுறந்தருநர்  பாரத்தை  ஓம்பி  மழைவேண்டிய
புலத்து   மாரி  நிற்ப  வென்றும்  கூலம்  பகர்நர்  குடிபுறந்தருதலை
ஆற்றின் தொழிலாகவும், குடிபுறந்தருநர் பாரமோம்பு தலை மழையின்
தொழிலாகவும்   கூட்டியுரைப்பாரு   முளர்”   என்பது  பழையவுரை.
இந்நாட்டில்  கூலம் விளைப்போரும் விற்போரும் பெரும்பாலராதலின்,
இவரை  விதந்து “கூலம் பகர்நர்” என்றும், “குடிபுறந்தருநர்” என்றும்
அவரவர்     தொழின்மேல்     வைத்துரைத்தார்.    குடிபுறந்தருநர்,
உழுவிப்போரும்  குடிகள், உழுவோருமாவர். குடிபுறந்தருவாரின் கீழ்க்
குடிகள்  மிகப்  பலராய்  அவரைச் சுற்றி வாழ்தலின், அச்சுற்றத்தைக்
“குடிபுறந்தருநர்  பாரம்”  என்றார்;  “பகடுபுறந்  தருநர் பாரமோம்பி”
(புறம்.  35) என்று பிறரும் கூறுதல் காண்க. பண்டம் விளைப்போரும்
அதனைப்  பிற  நாடுகட்குக்  கொண்டுசென்று மாறுவோரும் நாட்டின்
நல்வாழ்விற்குத்   துணைவராதலைத்   தேர்ந்து  நடாத்தும் அரசியற்
சிறப்பு   இப்   பாட்டால்   வெளிப்படுமாறு   காண்க.  செவ்வாயும்
வெள்ளியும் சேர்ந்தால் மழை பெய்யா தென்பவாகலின், “அழல்சென்ற
மருங்கின்   வெள்ளி   யோடாது”   என்றார்.  செங்கோல் கோடின்,
இக்கோள்கள்    நிலைதிரியு   மென்ப;   திரியின்   நோயும்  பசியு
முளவாமாதலின், “நோயொடு பசியிகந் தொரீஇப் பூத்தன்று பெரும நீ
காத்த நாடு” என்றார். 
  

பெரும,  பிறழ்நவும் உழாது வித்துநவும், எருமைநிரை தடுக்குநவும்,
ஆம்பலார்நவும்,  தெங்கும்  மருதும்  பொய்கையும்,  வைப்புமுடைய
நாடுகள்,  நின்னைப்  பகைத்தமையின், நீ சிவந்த நீரழிபாக்கம் கழனி
புல்லென,  காருடை  போக,  பேய்மகள் இயங்க, உள்ளுநர் பனிக்கும்
பாழாயின;  நீ  காத்த  நாடு  காடு கடவுள் மேன வாக, புறவு, மள்ளர்
மேனவாக,  ஆறு,  அவ்வனைத்தாக, கூலம் பகர்நர் குடிபுறந்தராஅக்,
குடிபுறந்தருநர்  பாரம்  ஓம்பி,  வெள்ளி  யோடாவகைப்  பசியிகந்து
ஒரீஇப் பூத்தன்று என இயையும்.

கூற்றடூஉ நின்ற யாக்கை போல, நாடுகவி னழிய, நாமம் தோற்றி, நீ
சிவந்  திறுத்த  நீரழி  பாக்கங்கள், கழனி புல்லெனக், காருடை போக,
கழுதூர்ந்  தியங்க,  பாழாயின;  நீ  காத்த  நாட்டிற்  காடு கடவுளால்
மேவப்பட்டன;   அந்நாட்டுப்  புறவுகள்  மள்ளரால்   மேவப்பட்டன;
அந்நாட்டு  ஆறு  அவ்வனைத்தாயிற்று;  அன்றியும்,   கூலம் பகர்நர்
குடிபுறந்  தராஅக்,  குடிபுறந்  தருநர்  பார  மோம்பி,  நீ காத்தநாடு
மழைவேண்டு  புலத்து  மாரி  நிற்ப,  நோயொடு  பசியிகந் தொருவப்
பூத்தது   எனக்   கூட்டி   வினைமுடிவு  செய்க  வென்பர்  பழைய
வுரைகாரர்.

இதன்கண் பகைவர் நாடழிவு கூறுமுகத்தால் சேரலாதனது வெற்றிச்
சிறப்பும்,   தன்னாடு   காத்தல்    கூறுமாற்றால்  அரசியற்  சிறப்பும்
கூறப்பட்டமையின்,  இதனாற் சொல்லியது அவன்  வென்றிச் சிறப்பும்,
தன் நாடுகாத்தற் சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று” என்பர்

தொறுத்த   வய லாரல்  பிறழ்நவும், ஏறு யொருத  செறு வுழாது
வித்துநவும்  என்பனவும்,  “ஒலிதெங்கி  னிமிழ்மருதின்,  புனல்வாயிற்
பூம்பொய்கை”  யென்பனவுமாகிய  நான்கும்  வஞ்சியடியும்,  ஏனைய
அளவடியு  மாதலின்,  இப்பாட்டு வஞ்சித்தூக்கும் செந்தூக்குமாயிற்று.
“ஆசிரிய நடைத்தே வஞ்சி” (தொல். செய். 107) என்றலின், ஆசிரியப்
பாட்டின்கண் வஞ்சித்தூக்கு     வந்ததென     வறிக.   பிறாண்டும்
இவ்வாறு வருவனவற்றை அமைத்துக்கொள்க. 
  


1. தொறுத்தகு நீள்வயல் - பாடம்.
2. வூறிய - பாடம் 
3. குடிபுறந்தாரா - பாடம்.

 மேல்மூலம்