முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
16. கோடுறழ்ந் தெடுத்த கொடுங்க ணிஞ்சி
நாடுகண் டன்ன கணைதுஞ்சு விலங்கற்
றுஞ்சுமரக் குழாஅந் துவன்றிப் புனிற்றுமகள்
பூணா வையவி தூக்கிய மதில
 5 நல்லெழி னெடும்புதவு முருக்கிக் கொல்லு
பேன மாகிய நுனைமுரி மருப்பிற்
கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி
மரங்கொன் மழகளிறு முழங்கும் பாசறை
நீடினை யாகலிற் காண்குவந் திசினே
 10 ஆறிய கற்பி னடங்கிய சாயல்
ஊடினு மினிய கூறு மின்னகை
அமிர்துபொதி துவர்வா யமர்த்த நோக்கிற்
சுடர்நுத லசைநடை யுள்ளலு முரியள்
பாய லுய்யுமோ தோன்ற றாவின்று
 15 திருமணி பொருத திகழ்விடு பசும்பொன்
வயங்குகதிர் வயிரமோ டுறழ்ந்துபூண் சுடர்வர
எழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்துப்
புரையோ ருண்கட்
டுயிலின் பாயல்
பாலுங் கொளாலும் வல்லோய் நின்
 20 சாயன் மார்பு நனியலைத் தன்றே.

     இதுவுமது. பெயர் - துயிலின் பாயல் (18)

     (ப - ரை) 1. கோடுறழ்ந்து எடுத்த கொடுங்கணிஞ்சி யென்றது மலையுள்ள இடங்களிலே 1அம்மலைதானே மதிலாகவும் மலையில்லாத
இடங்களிலே மதிலே அரணாகவும் இவ்வாறு மலையொடு மாறாட
எடுத்த வளைந்த இடத்தையுடைய புறமதிலென்றவாறு.

     உறழவெனத் திரிக்க. 'கோடுபுரந்தெடுத்த' என்பது பாடமாயின்,
மதிலில்லாத இடங்களை மலை காவலாய்ப் புரக்கவெடுத்தவென்க.

     2. நாடுகண்டன்ன 'கணைதுஞ்சு விலங்கலென்றது நெடுநாட்பட 2அடைமதிற்பட்ட காலத்தே விளைத்துக் கோடற்கு வயலும் குளமும் உளவாகச் சமைத்துவைத்தமையாற் கண்டார்க்கு நாடுகண்டாற்
போன்ற 3அப்புக்கட்டுக்கள் தங்கும் மலைபோன்ற
இடைமதிலென்றவாறு.

     விலங்கல் போறலின் விலங்கலெனப்பட்டது.
நாடுகண்டாலொப்பது அம்மதிலையடைந்தவிடமென்னின்,
அவ்விடவணுமைபற்றி அதன் உவமையை அம்மதில்மேலதாகக்
கூறிற்றெனக் கொள்க.

     3. துஞ்சு மரமென்றது மதில்வாயிலில் தூங்கும்
கணையமரங்களை; இனிக் கழுக்கோலாக நாட்டிய மரமென்பாரும்
உளர்.

     4. ஐயவியென்றது கதவிற்குக் காவலாகப் புறவாயிலிலே
தூக்கப்படும் துலாமரத்தை; அப்புக்கட்டென்பாரும் உளர். ஈண்டு
மதிலென்றது உண்மதிலை.

     கொடுங்கணிஞ்சியையும் (1) விலங்கலையுமுடைய (2) மதில் (4)
எனக் கூட்டுக.

     இனி, இடையில் விலங்கலென்றதனை மாற்றார் படையை
விலங்குதலையுடையவென்றாக்கி, முன்னின்ற கொடுங்கணிஞ்சியென்ற
தொன்றுமே மதிலதாக, ஐயவி தூக்கிய மதிலென்றதனை
ஆகுபெயரான் ஊர்க்குப் பெயராக்கி, நாடுகண்டன்ன ஊரென
மாறியுரைப்பாரும் உளர்.

     13. 4உள்ளலும் உரியளென்றது யான் குறித்த நாளளவும்
ஆற்றியிருக்கவென்ற நின்னேவல் பூண்டு நின்னை
உள்ளாதிருத்தலேயன்றி நீ குறித்த நாளுக்கு மேலே
நீட்டித்தாயாகலின் (9) நின்னை நினைந்து வருந்துதலும்
உரியளென்றவாறு.

     14 - 5. தாவின்று திருமணி பொருத திகழ்விடு
பசும்பொனென்றது வலியில்லையானபடியாலே அழகிய மணிகளொடு
பொருத ஒளிவிடுகின்ற பசும்பொனென்றவாறு.

     ஈண்டுத் 5தாவென்றது வலி; பொன்னுக்கு வலியாவது
உரனுடைமை. இன்றென்பதனை இன்றாகவெனத் திரித்து
இன்றாகையாலெனக் கொள்க. என்றது ஒளியையுடைய மணிகளொடு
பொரவற்றாம் படி ஓட்டற்ற ஒளியையுடைய பசும்பொனென்றவாறு.

     15 - 6. பூண், பசும்பொன் வயிரமொடு உறழ்ந்து
சுடர்வரவெனக் கூட்டி, பூணான பசும்பொன் தன்னிடை அழுத்தின வயிரங்களோடு மாறுபட்டு விளங்கவென உரைக்க.

     18. புரையோரென்றபன்மையாற் காதன்மகளிர் பலரெனக்
கொள்க.

     17 - 8. அகலப் பாயலென இருபெயரொட்டாக்கி, அத்தை
6அல் வழிச்சாரியை என்க. துயிலினிய பாயலென உரைக்க.

     அகலத்தை மகளிர்க்குப் பாயலெனச் சிறப்பித்தமையான்
இதற்கு, 'துயிலின் பாயல் என்று பெயராயிற்று.

     19. பாலுங் கொளாலும் வல்லோயென்றது அவ்வகலப்பாயலை
7வேற்றுப்புலத்து வினையில்வழி நின்மகளிர்க்கு நுகரக்கொடுத்தற்கு
நின்னிடத்தினின்றும் பகுத்தலையும், வினையுல்வழி
அம்மகளிர்பால்நின்றும் வாங்கிக் கோடலையும் வல்லோயென்றவாறு.

     பாசறைக்கண் நீ (8) நீடிணையாகலின் நின்னைக்
காணவந்தேன் (9); நின் தேவியாகிய அசைநடை நின்னை
நினைத்தலும் உரியள் (13); ஆனபின்பு அவள் பாயல்வருத்தத்திற்கு
உய்யுமோ (14)? உய்யாளன்றே; தோன்றல், அகலப் (17) பாயல் (18)
பாலும் கொளாலும் வல்லோய், நின் (19) மார்பு மிக அவளை
வருத்திற்றுக்காண் (20); 8நீ அவள்பாற் கடிதெழுகவென வினைமுடிவு
செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்பும் குலமகளோடு நிகழ்த்த இன்பச்சிறப்பும் உடன்கூறியவாறாயிற்று.

     (கு - ரை) பாசறைக்கண் தங்கியிருந்த அரசன்பால்
மாதேவியினிடமிருந்து தூது சென்றோன் கூற்றாக அமைந்தது
இச்செய்யுள்.

     1 - 4. மதிலின் சிறப்பு.

     1. மலைகளொடு மாறுபடக் கட்டிய வளைந்த
இடங்களையுமுடைய புறமதில். மதிலுக்கு மலை : பதிற். 62 : 10;
மலைபடு. 92; கலித். 2: 12; பெருங். 3. 27 : 46.

     2. கணை - அம்பு. விலங்கல் - இடைமதில்; ஆகுபெயர்.

     3-4. துவன்றி - செறிந்து. புனிற்று மகள் - ஈன்ற
அணிமையையுடைய பெண். அவள் வெண்சிறுகடுகை அரைத்துப்
பூசிக்கொள்ளுதல் மரபு. ஐயவி - துலாமரம். வெண்சிறுகடுகை
விலக்க, "புனிற்று மகள் பூணா வையவி" என்றார். இது வெளிப்படை
நிலை. 5-8. களிற்றின் இயல்பு.

     4-5. மதிலவாகிய புதவுகள்; புதவு - கதவு; அவற்றைக்
களிறுகள் கொம்பால் இடித்தன. முருக்கிக் கொல்லுபு - இடித்து
அழித்து.

     6. ஏனமாகிய - பன்றியின் கொம்பைப்போலாகிய; ஏனம் -
ஆகுபெயர்.

     7. பொத்தி - மூண்டு.

     9. நீடினை - குறித்த காலத்தே வாராமல் தாமதித்தாய்.
காண்கு வந்திசின் - நின்னைக் காணவந்தேன்; காண்கு: செய்கென்னும்
வாய்பாட்டு முற்று; வந்திசின் என்னும் முற்றோடு முடிந்தது.

     10-14. சேரன்மாதேவியின் நிலை.

     10. ஆறிய கற்பின் - அறக்கற்பினையுடைய. இதனை அடங்கிய
கற்பென்றுங் கூறுவர் (குறுந். 338 : 7). ஆறிய கற்பு : பதிற். 90 : 49;
சிலப். பதி. 38 - 54, அடியார். அடங்கிய சாயல் - அடங்கி நின்ற
மென்மையை உடைய. இவ்வடி, 'நீடினையாயினும் பெருந்தேவி தன்
கற்பினாலும், அடக்கத்தினாலும் பிரிவுத் துன்பத்தை ஆற்றி நின்றாள்'
என்னும் குறிப்புடையது.

     12. அமிர்தென்றது எயிற்றில் ஊறிய நீரை (குறுந். 14 : 1 - 2,
குறிப்புரை). துவர்வாய் - செவ்வாய். அமர்த்த நோக்கின் - விரும்பிய
பார்வையையுடைய; அமர்த்த - மாறுபட்ட எனலுமாம் (குறள். 1083
- 4, பரிமேல்)

     13. அசைநடை - தளர்ந்த நடையையுடையவள்.

     11-3. இனிய கூறுதல் முதலியன பெருந்தேவியின் ஆறிய
கற்புக்கு அடையாளங்கள்.

     14. பாயல் உய்யுமோ- படுக்கையின்கண் படும்
வருத்தத்தினின்றும் தப்புவாளோ. பின்னர்க்கூறும் துயிலின்
பாயலாகிய அகலத்தையே விரும்புபவளாதலின் பாயல்
உய்யாளாயினாள். தோன்றல்: விளி.

     15. பொருத - நிறத்தால் மாறுபட்டுத் தோன்றிய. திகழ் - ஒளி;
ஆகுபெயர்.

     16. சுடர்வர - விளங்க.

     15. எழுமுடி என்றது ஏழு அரசர்களை வென்றுகொண்ட ஏழு
முடிகளாற் செய்த ஆரத்தை (பதிற். 14 : 11, குறிப்புரை). ஞெமர்தல்
- பரத்தல்.

     18. உயர்ந்த மகளிர் மையுண்ட கண்கள் துயிலுவதற்கு
இனிதாகிய படுக்கை.

     17-8. சேரனது மார்பையே பாயலென்றார்; தலைவியர் தலைவர்
மார்பில் துயிலுதல் இயல்பு (நற். 20 : 2, 171 : 11; ஐங். 14 : 3 - 4,
205 : 4 - 5)

     19. பாலுங் கொளாலும் - பகுத்து அளித்தலையும் கொடாது
வாங்கிக் கொள்ளுதலையும்.

     20. சாயல் - மென்மை. நனி அலைத்தன்று - அண்மையில்
இல்லாமையின் மிக வருத்தாநின்றது. (6)


     1மலை இயற்கையரணாகவும், மதில் செயற்கையரணாகவும்
பயன்பட்டன; "மணிநீரு மண்ணு மலையு மணிநிழற், காடு முடைய
தரண்" (
குறள். 742) என்பதையும் அதன் உரையையும் பார்க்க.

     2அடைமதிற்பட்ட காலம் - பகைவர் முற்றுகையிட்டமையால் மதில் அடைக்கப்பட்டுக் கிடக்கும் சமயம்

     3அப்புக்கட்டு - அம்புக்கட்டு.

     4உம்மை இறந்தது தழீஇய எச்சஉம்மை.

     5தா - கேடு எனலுமாம்.

     6அல்வழிச்சாரியை - வேண்டாவழிச்சாரியை.

     7வேற்றுப் புலத்து வினை - பகைவர் நாட்டிற் சென்று செய்யும்
போர்.

     8இக்கருத்து குறிப்பாற் கூறப்பட்டது.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

6. துயிலின் பாயல்
 
16.கோடுறழ்ந் தெடுத்த கொடுங்க ணிஞ்சி
நாடுகண் டன்ன கணைதுஞ்சு விலங்கல்
துஞ்சு மரக்குழாந் துவன்றிப் புனிற்றுமகள்
பூணா வையவி தூக்கிய மதில
 
5நல்லெழி னெடும்புதவு முருக்கிக் கொல்லுபு
ஏன மாகிய நுனைமுரி மருப்பின்
கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி
மரங்கொன் மழகளிறு முழங்கும் பாசறை
நீடினை யாகலிற் காண்குவந் திசினே
 
10ஆறிய கற்பி னடங்கிய சாயல்
ஊடினு மினிய கூறு மின்னகை
அமிர்துபொதி துவர்வா யமர்த்த நோக்கிற்
சுடர்நுத லசைநடை யுள்ளலு முரியள்
பாய லுய்யுமோ தோன்ற றாவின்று
 
15திருமணி பொருத திகழ்விடு பசும்பொன்
வயங்குகதிர் வயிரமோ டுறழ்ந்துபூண் சுடர்வர
எழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்துப்
புரையோ ருண்கட் டுயிலின் பாயல்
பாலும் கொளாலும் வல்லோய்நின்
 
20சாயன் மார்பு நனியலைத் தன்றே.
 

துறை  : செந்துறைப்பாடாண்பாட்டு.
வண்ணம் : ஒழுகுவண்ணம்.
தூக்கு  : செந்தூக்கு.
பெயர்  : துயிலின் பாயல்.
 

1 - 9. கோடு................................வந்திசினே.

உரை : கோடு உறழ்ந்து  எடுத்த - மலைச் சிகரங்களுடன் மாறாட
எடுத்த; கொடுங்கண் இஞ்சி - வளைந்த  இடத்தையுடைய புற மதிலும்;
நாடுகண்  டன்ன - அகன்ற நாட்டைக் கண்டாற் போலப் பேரிடத்தை
அகத்தேகொண்ட;    கணை   துஞ்சு   விலங்கல்   அம்புக்கட்டுகள்
பொருந்திய  இடைமதிலும்; துஞ்சு மரக்குழாம் துவன்றி - கதவிடத்தே
கிடக்கும் கணையமரங்கள் பல செறிந்து; புனிற்றுமகள் பூணா ஐயவி -
இளமகள்  அரைத்துப்  பூசிக்  கொள்ளும்  ஐயவியாகிய  வெண் சிறு
கடுகல்லாத  ஐயவித்  துலா மரங்கள்; தூக்கிய மதில - நாலவிடப்பட்ட
மதிலினுடைய;  நல்  எழில்  நெடும்  புதவு  - நல்ல அழகிய நெடிய
கதவுகளை;  முருக்கிக் கொல்லுபு - தாக்கிச் சிதைத்தலால்; நுனை முரி
மருப்பின்  -  நுனி  முரிந்து  குறுகிய  மருப்பினை யுடையவாதலால்;
ஏனம்  ஆகிய - பன்றியைப் போலத் தோன்றும்; கடாஅம் வார்ந்து -
மதம்  சொரிந்து; கடும் சினம் பொத்தி - மிக்க சினம் கொண்டு; மரம்
கொல்  கணையமரம் காவல்மரம் முதலியவற்றை யழிக்கும்; மழ களிறு
முழங்கும்  பாசறை  -  இளங்  களிறுகள் பிளிறும் பாசறைக்கண்ணே;
நீடினை யாகலின் - நெடிது தங்கிவிட்டாயாதலின்; காண்கு வந்திசின் -
நின்னைக் காண்டற்கு வந்தேன் எ - று.

கோடு,     மலையுச்சி,   மலையுள்ள   விடத்தே   அம்மலையே
அரணாதலின்,    அஃதில்லாதவிடத்து    மலையினும்   உயர்ச்சியும்
திண்மையு   முடைத்தாக  வெடுத்த  அரண்  என்றற்கு,  “கோடுறழ்ந்
தெடுத்த”   என்றும்,   அதுவும்  வளைந்து  வளைந்து   கிடத்தலின்,
“கொடுங்கண்   இஞ்சி”  யென்றும்  கூறினார்.  “கோடுறழ்ந் தெடுத்த
கொடுங்கண்    இஞ்சி    யென்றது,    மலையுள்ள    இடங்களிலே
அம்மலைதானே   மதிலாகவும்,  மலையில்லாத  இடங்களில்  மதிலே
யரணாகவும்   இவ்வாறு   மலையோடு   மாறாட   எடுத்த வளைந்த
இடத்தையுடைய  புறமதில்” என்பர் பழையவுரைகாரர்; அவரே “கோடு
புரந்  தெடுத்த”  எனப்  பாடமொன்று உளதாதல் கண்டு, “கோடுபுரந்
தெடுத்த”   என்பது   பாடமாயின்,  மதிலில்லாத  இடங்களை மலை
காவலாய்ப்   புரக்க  எடுத்த”  என்று  உரைக்க  என்பர்.  கொடுமை,
வளைவு,    கண்,    இடம்    உறழ்ந்து,    உறழவெனத்    திரிக்க.
அடைமதிற்பட்டவழி  அகத்தோர்  யாதொரு குறைவுமின்றிகத் தமக்கு
வேண்டுவன   அமைத்தும்   விளைத்தும்  கோடற்குரிய  இடப்பரப்பு
வேண்டியிருத்தலின்,  “நாடு கண்டன்ன விலங்கல்” என்றும், புறத்தார்
அணுகாவாறு   தடுத்தற்குரிய   கணை  முதலிய  படையும்  எந்திரப்
பொறிகளும்  பொருந்தியிருப்பது  தோன்ற,  “கணைதுஞ்சு விலங்கல்”
என்றும்  புறமதிலைக்  கடந்து போதருவார்க்குக் குறுக்கே மலைபோல்
நிற்றலின்,     “விலங்கல்”     என்றும்     கூறினார்.    ஆசிரியர்
திருவள்ளுவனாரும்,   “சிறுகாப்பிற்  பேரிடத்ததாகி  யுறுபகை,  யூக்க
மழிப்ப  தரண்”  என்றும்,  “கொளற்கரியதாய்க் கொண்ட கூழ்த் தாகி
அகத்தார்,  நிலைக்கெளிதாம்  நீர  தரண்” (குறள். 744-745) என்றும்
கூறுதல்  காண்க.  “நாடுகண்  டன்ன கணை துஞ்சு விலங்கல் என்றது,
நெடுநாட்பட அடைமதிற்பட்ட காலத்தே வளைத்துக் கோடற்கு வயலும்
குளமும்   உளவாகச்   சமைத்துவைத்தமையால்   கண்டார்க்கு  நாடு
கண்டாற்போன்ற      அப்புக்கட்டுகள்     தங்கும்    மலைபோன்ற
இடைமதில்” என்றும், “இனி, இடையில் விலங்க லென்றதனை மாற்றார்
படையை  விலங்குதலையுடைய  என்றாக்கி,  முன்னின்ற கொடுங்கண்
இஞ்சி  என்ற தொன்றுமே மதிலதாக, ஐயவி தூக்கிய மதிலென்றதனை
ஆகுபெயரான்  ஊர்க்குப்  பெயராக்கி  நாடு  கண்டன்ன  வூர்  என
மாறியுரைப்பாருமுளர்”     என்றும்     பழையவுரை      கூறுகிறது,
மாறியுரைப்பவர்    கூற்றுப்படி,   இப்பகுதி   “கோடுறழ்ந்   தெடுத்த
கொடுங்கண்  இஞ்சி,  கணை  துஞ்சு  விலங்கல்,  துஞ்சு  மரக்குழாம்
துவன்றிப்  புனிற்றுமகள்  பூணா ஐயவி தூக்கிய, நாடுகண்டன்ன மதில்
நல்லெழில்  நெடும்புதவு  முருக்கிக்  கொல்லுப”  என  வரும். இதன்
பொருள்:  மலையொடு  மாறாட  வெடுத்த வளைந்த இடத்தையுடைய
மதில்களையும்,  கணைமரங்கொண்டு  மாற்றாரை விலங்குதலையுடைய,
அப்புக்கூடுகள்  நிறைந்த,  இளமகளிர் பூணாத ஐயவித்துலாம் தொங்க
விடப்பட்ட       மதிற்கதவுகளையுமுடைய,     நாடுகண்டாற்போன்ற
ஊர்களினுடைய  நல்ல  உயர்ந்த  நெடிய  கதவுகளைத்  தாக்கி  என
வரும்.  மதில்  வாயிற்  கதவுகளில்  சேர  நாட்டியிருக்கும்  கணைய
மரங்களின்  பன்மை  குறித்து, “துஞ்சுமரக் குழாம்” என்றார். துவன்றி
யென்னும்  வினையெச்சம்  மதில  வென்புழி மதி லிடத்தவாகியவென
விரியும்   ஆக்கவினை  கொண்டது.  புனிற்றுமகள்  பூணா  வையவி
யென்றது,  வெளிப்படையாய்  ஐயவித்  துலாம்  என்னும் பொறியைக்
குறித்துநின்றது.  “ஐயவி  யப்பிய  நெய்யணி  முச்சி”  (மணி. 3: 134)
என்பவகாலின்,  “புனிற்று  மகள் பூணா வையவி” எனச் சிறப்பித்தார்.
உயரிய மணிகள் இழைத்த நெடிதுயர்ந்த கதவென்றற்கு “எழில் நெடும்
புதவு”   என்றார்.   இத்துணை  வலிய  கதவினைத்  தாக்கி  மருப்பு
முரிதலின்  வடிவின்  சிறுமை, நீளம் முதலியவற்றால் பன்றி மருப்பை
நிகர்த்தல்   கொண்டு,  “முருக்கிக்  கொல்லுபு  ஏனமாகிய”  என்றும்,
அங்ஙனமாதற்கு  நாணாது  மறஞ்  செருக்கிச்  சினம் மிகுந்து ஏனை
மரங்களைச்  சாய்த்தலின், “மழகளிறு” என்றும், பெருங்குர லெடுத்துப்
பிளிறுதலால்  “முழங்கும்”  என்றும் கூறினார். வினை முடித்து இன்ன
பருவத்தே  வருவலெனத்  தன் மனைவிக்குக் குறித்த பருவம் வந்தும்
மீளலுறாது    பாசறைக்கண்ணே   தங்கினானாதலின்,   சேரலாதனை,
“நீடினையாகலின்  காண்கு  வந்திசின்”  என்றார்.  காண்கு:  தன்மை
வினைமுற்று;  இது  வந்திசி  னென்னும்   வினைகொண்டு  முடிந்தது.
“அவற்றுள்,  செய்கென்  கிளவி, வினையொடு முடியினும்,  அவ்வியல்
திரியா தென்மனார் புலவர்” (தொல். சொல். 204) என்பது விதி.
 

10 - 13. ஆறிய......................உரியள்.

உரை : ஆறிய  கற்பின் - ஆறிய   கற்பும்;  அடங்கிய சாயல் -
அடக்கம்  பொருந்திய  மென்மையும்;  ஊடினும்  இனிய கூறும் இன்
நகை  -  ஊடற்காலத்தும்  இன்மொழியே  பகரும் இனிய முறுவலும்;
அமிர்துபொதி   துவர்வாய்  -  அமுதம்  நிரம்பிய  சிவந்த  வாயும்;
அமர்த்த   நோக்கின்  -  அமர்த்த  கண்களையும்;  சுடர்  நுதல்  -
ஒளிவிளங்கும்  நெற்றியும்;அசை  நடை-அசைந்த நடையுமுடைய நின்
தேவி;  உள்ளலும்  உரியள்  -  நின்னை  நினைத்து  வருந்துதற்கும்
உரியளாவாள் எ - று.
 

சீறுதற்குரிய     காரண முள்வழியும் சீற்றமுறாது தணிந்தொழுகும்
அறக்    கற்புடையா   ளென்றற்கு,   “ஆறிய   கற்பின்”   என்றும்,
மென்மையும்   அடக்கத்தாற்   சிறப்புறுதலின்,  “அடங்கிய  சாயல்”
என்றும்  கூறினார்.  அடக்க மில்வழி, மென்மை, வன்மையாகிச் சீறிய
கற்பாதற்    கேதுவாமென்பது   கருத்து.   ஊடற்காலத்தே   புறத்தே
வெம்மையும்     அகத்தே     தண்மையு    முடைய    சொற்களே
மொழிபவாயினும்,  நின்  தேவிபால்  அக்காலத்தே அவை யிருபாலும்
இனிமைப்  பண்பேயுடையவாம்  என்பார்,  “ஊடினும்   இனிய கூறும்
இன்னகை” யென்றார். துவர்வாயின் வாலெயிறூறும் நீர் அமிழ்துபோல்
மகிழ்செய்வ   தென்றற்கு   “அமிர்து  பொதி  துவர்வாய்”  என்றும்,
உள்ளத்து   வேட்கையை   ஒளிப்பின்றிக்   காட்டுவன   வென்றற்கு,
“அமர்த்த  கண்”  என்றும்,  அழிவில்  கூட்டத்து  அயரா  வின்பம்
செறிதலால்   “சுடர்  நுதல்”  என்றும்,  பூங்கொம்பு  நடைகற்பதென
நடக்கும் அழகு தோன்ற, “அசை நடை” யென்றும் கூறினார். பிறரும்,
“அடங்கிய  கொள்கை,  ஆறிய  கற்பின்  தேறிய நல்லிசை, வண்டார்
கூந்தல்”   (பதிற்.   90)   என்பது   காண்க.  வினையே  ஆடவர்க்
குயிராதலின்,   அவர்  அதன்மேற்  சென்றவழி,  அவர்  தெளித்துச்
செல்லும்   சொல்லைத்   தேறியிருத்தல்   தனக்குரிய  அறமாயினும்,
அவரை நினைத்தற்குரிய குறிப்புத் தோன்றியவழி, “வேந்துபகை தணிக
யாண்டுபல     நந்துக”    (ஐங்.    6)    என்றாற்போல    வேட்ட
நெஞ்சினளாதலேயன்றி,  குறித்த  பருவம்  கழியப்  பிரிந்த  கணவன்
வாராது  நீட்டிப்பின் வருந்துதற்கும் உரியளாம் என்னும் இயைபுபற்றி,
“உள்ளலும்  உரியள்”  என்றார்.  இனி,  “உள்ளலும் உரிய ளென்றது,
யான்  குறித்த  நாளளவும் ஆற்றியிருக்கவென்ற நின் னேவல் பூண்டு
நின்னை   யுள்ளாதிருத்தலேயன்றி   நீ   குறித்த  நாளுக்கு  மேலே
நீட்டித்தாயாதலின் நின்னை நினைத்து வருந்துதலும் உரியள்” என்பர்
பழைய வுரைகாரர்.

14 - 20. பாயல்.........யலைத்தன்றே.

உரை : தோன்றல் - சேரர்  குடித்தோன்றலே; திருமணிபொருத -
அழகிய  மணிகள் இழைத்த; தாவின்று திகழ்விடு பசும்பொன் பூண் -
ஓட்டற்று  விளங்கும்  பசிய பொன்னாலாகிய பூணாரம்; வயங்கு கதிர்
வயிரமொடு  -  விளங்குகின்ற  கதிர்களையுடைய வயிர மணிகளுடன்;
உறழ்ந்து  - மாறுபட்டு; சுடர் வர - ஒளிவிட்டு விளங்க; புரையோர் -
கற்பால் உயர்ந்த நின் காதல் மகளிர்; எழு முடி கெழீஇய திரு ஞெமர்
அகலத்து  -  அரசர்  எழுவர் முடிப்பொன்னாற் செய்த ஆரமணிந்த
திருவீற்றிருந்த விரிந்த நின் மார்பாகிய; உண்கண் துயில்இன் பாயல் -
மைதீட்டிய   கண்கள்   உறங்குதற்கினிய  பாயலிடத்தை;  பாலும்  -
வினைமேற்  செல்லுமிடத்து  நீக்குதலும்;  கொளாலும் - மனைவயின்
இருக்குங்காலத்து  நீக்காது  கோடலும்; வல்லோய் - வல்லவனே; நின்
சாயல் மார்பு - நினது மென்மையமைந்த மார்பு; நனி அலைத்தன்று -
அவளது  உள்ளத்தை  வருத்துகின்றதாதலால்;  பாயல்  உய்யுமோ  -
படுக்கைக்கண்கிடந்துவருந்தும்    வருத்தத்தினின்றும்    உய்வாளோ;
உய்யாளாதலால் விரைந்து சென்று அடைக எ - று.
 

தோன்றல்,   வல்லோய், அசைநடை (13) நின் மார்பு நனி யலைத்
தன்றாதலால்   பாயல்  உய்யுமோ  என  இயைக்க.  பசும்பொன்பூண்
வயிரமொடு  உறழ்ந்த  சுடர்  வர  அகலத்துப்  பெறும்  பாயல் என
இயையும். திருமணி,  மாணிக்கமணி.  திருமணியிழைத்த  பொற்பூணும்
வயிரமாலையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டு ஒளி செய்தலால்,“திருமணி
பொருத  திகழ்விடு   பசும்பொற்   பூண்வயங்கு  கதிர்   வயிரமொடு
உறழ்ந்து   சுடர்வர”  என்றார்.  இவ்வணிகளை மகளிர்க்கேற்றுக.

இனிப்      பழையவுரைகாரர்,   மணியினையும்   வயிரத்தையும்
பொற்பூணுக்கே   ஏற்றி,   “தாவின்று   திருமணிபொருத   திகழ்விடு
பசும்பொன் என்றது, வலியில்லையானபடியாலே அழகிய மணிகளோடு
பொருத   ஒளிவிடுகின்ற  பசும்பொன்  என்றவாறு”  என்றும்,  “பூண்
பசும்பொன்  வயிரமொடு  உறழ்ந்து  சுடர்வர வெனக் கூட்டி, பூணான
பசும்பொன்  தன்னிடை யழுத்தின வயிரங்களொடு மாறுபட்டு விளங்க
என வுரைக்க” என்றும் கூறுவர்.

பசும்பொன்னைத்      தாவின்று   திகழ்விடு  பசும்பொன்னெனச்
சிறப்பித்தது,  அது  மணிகளோடு பொரத்தக்க ஒளிபெறுதற் கென்பார்,
“ஈண்டுத்  தா  வென்றது வலி; பொன்னுக்கு வலியாவது உரனுடைமை;
இன்றென்பதனை  இன்றாக  வெனத்  திரிந்து  இன்றாகையா  லெனக்
கொள்க   என்றது,   ஒளியையுடைய  மணிகளோடு  பொரவற்றாம்படி
ஓட்டற்ற    ஒளியையுடைய    பசும்பொன்    என்றவாறு”   என்பர்
பழையவுரைகாரர்.  பொன்,  தன்  வலியிழந்து மென்மை யெய்தியவழி
மெருகுற்று    ஒளிபெருகும்    நலம்    உடைமைபற்றி,   “ஓட்டற்ற
ஒளியையுடைய  பொன்”  னென்று  உரைத்தா  ரென வறிக. ஓட்டற்ற
பொன்   நன்றாதலை,   “தாவில்  நன்பொன்”  (அகம்.  212)  என்று
சான்றோர் கூறுதல் காண்க.

உரிமை   மகளிர் பலராதல்பற்றி, “புரையோர்” எனப் பன்மையாற்
கூறினார்.   புரை,   உயர்ச்சி;  அஃதாவது  கற்பாலுளதாகும்  சிறப்பு.
ஞெமர்தல்,  விரிதல்.  “இலம்படு  புலவர் ஏற்றகை ஞெமரப் பொலஞ்
சொரி வழுதி” (பரி. 10) என்று சான்றோர் கூறுதல் காண்க.

காமக்கலப்பிற்  களிக்கும் மகளிர், தம் கணவனது விரிந்த மார்பின்
கட்கிடந்து  உறங்குவதைப்  பெரிதும்  விரும்புவாராதலின், “அகலத்து
உண்கண் துயிலின் பாயல்” என்றார். “நாடன் மலர்ந்த மார்பிற் பாயல்,
துஞ்சிய வெய்யள்” (ஐங். 205) என்று சான்றோர் கூறுமாற்றாலறிக.

வினைமேற்செல்லுமிடத்து     மகளிரை   யுடன்கொண்டு  சேறல்
மரபன்மையின்,   அக்  காலையில்  அவர்பாற்  சென்ற  உள்ளத்தை
அரிதின்    மீட்டு   மேற்கொண்ட   வினைமேற்   செலுத்தவேண்டி
யிருத்தல்பற்றியும்,     வினைமுடித்துப்    போந்தவழி,    மேற்செய்
வினைக்கண்  உள்ளம்  சென்ற  வழியும்  அம் மகளிர்க்குக் கூட்டம்
இடையறவின்றி  யெய்த நல்கும் இயல்புபற்றியும், “பாலும் கொளாலும்
வல்லோய்”   என்றார்.   “இனித்   தன்   சாயல்   மார்பிற் பாயல்
மாற்றி............செல்லும் என்னும்” (அகம். 210) என்று பிறரும் கூறினார்.
பழையவுரைகாரர்க்கும்  இதுவே  கருத்தாதலை,  “பாலும் கொளாலும்
வல்லோய்   என்றது,   அவ்வகலப்   பாயலை   வேற்றுப்  புலத்து
வினையில்வழி  நின்  மகளிர்க்கு  நுகரக்  கொடுத்தற்கு நின்னிடத்து
நின்று  பகுத்தலையும்,  வினையுள்வழி  அம்  மகளிர் பால் நின்றும்
வாங்கிக் கோடலையும் வல்லோய் என்றவாறு” என்பதனா லறிக.
 

திருஞெமரகலத்துப் பாயல் என்பதற்குப் பழையவுரைகாரர், “அகலப்
பாயல் என இருபெயரொட்டாக்கி, அத்தை அல்வழிச் சாரியை யென்க;
துயில்   இனிய   பாயல்   என   வுரைக்க”  என்றும்,  “அகலத்தை
மகளிர்க்குப் பாயலெனச் சிறப்பித்தமையான், இதற்கு, துயிலின்  பாயல்
என்று  பெயராயிற்று”  என்றும்  கூறுவர்.  அகலத்தைப்  பாயலெனச்
சிறப்பித்தல், “மலர்ந்த மார்பிற் பாயல்” “சாயல்மார்பிற் பாயல்” எனப்
பயில  வழங்கும்  வழக்கால்  அறிக.  இனி, திருவீற்றிருக்கும் அவன்
மார்பிடத்தே, அதுகுறித்துப் புலவாது, தம் புரையால், திருவின் இருப்பு
ஆள்வினை  யாடவர்க்கு  அழகென்று  தேறி,  அம்மார்பிற்  கிடந்து
பெறும்   பாயலே  இனிதாம்  எனக்  கருதி  விழையப்படும்  சிறப்பு
நோக்கித்  “துயிலின்  பாயல்”  என்று  சிறப்பித்தமையின்,  இதற்குத்
“துயிலின்  பாயல்” என்பது பெயராயிற்றெனினும் ஆம். துயில்வார்க்கு
ஊற்றின்பம்  பயந்து மென்மையுற்று நிலவுவதால், அவன் மார்பினைச்
“சாயல்  மார்பு”  என்றார்.  “ஊரன்  மார்பே,  பனித்துயில் செய்யும்
இன்சா  யற்றே”  (ஐங்.  14)  என்றும்  “யாம் முயங்குதொறு முயங்கு
தொறு  முயங்க  முகந்துகொண்,  டடக்குவ மன்றோ தோழி,.......நாடன்
சாயல் மார்பே” (அகம். 328) என்றும் சான்றோர் கூறுதல் காண்க.

பாசறைக்கண்   நீ நீடினையாதலின் நின்னைக் காணவந்தேன்; நின்
தேவியாகிய  அசைநடை,  நின்னை நினைத்தலும் உரியள்; தோன்றல்,
வல்லோய்,  நின்  மார்பு  நனி  யலைக்கின்றதாதலால், அவள் பாயல்
உள்ளாள்;  ஆதலால்,  நீ  விரைந்து  சென்று அவளை அடைக என
வினைமுடிவு    செய்துகொள்க.   ஆதலால்   என்பது   முதலாயின
குறிப்பெச்சம்.

இதனாற் சொல்லியது : அவன்  வெற்றிச்  சிறப்பும்  குலமகளோடு
நிகழ்ந்த இன்பச் சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று.


 மேல்மூலம்