முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
18. உண்மின் கள்ளே யடுமின் சோறே
எறிக திற்றி யேற்றுமின் புழுக்கே
வருநர்க்கு வரையாது பொலங்கலந் தெளிர்ப்ப
இருள்வண ரொலிவரும் புரியவி ழைம்பால்
 5 ஏந்துகோட் டல்குன் முகிழ்நகை மடவரற்
கூந்தல் விறலியர் வழங்குக வடுப்பே
பெற்ற துதவுமின் றப்பின்று பின்னும்
மன்னுயி ரழிய யாண்டுபல துளக்கி
மண்ணுடை ஞாலம் புரவெதிர் கொண்ட
 10 தண்ணிய லெழிலி தலையாது மாறி
மாரி பொய்க்குவ தாயினும்
சேரலாதன் பொய்யல னசையே.

     துறை - இயன்மொழி வாழ்த்து. வண்ணம் -
ஒழுகுவண்ணம், தூக்கு - செந்தூக்கு. பெயர் - கூந்தல்விறலியர்
(6)

     (ப - ரை) 2. திற்றி - இறைச்சி.

     வருநர்க்கு வரையாது (3) வழங்குக அடுப்பு (6) என முடிக்க;
வரையாமல் எனத் திரித்து வரையாதொழியும்படியெனக் கொள்க.

     பொலங்கலந் தெளிர்ப்ப (3) என்பதனையும் வழங்குக (6)
என்பதனோடு முடிக்க.

     6. கூந்தல்விறலியர் வழங்குக அடுப்பென்றது வந்தார்க்குச்
சோறு கடிதின் உதவுதற்பொருட்டு அடுப்புத்தொழிற்குரியரல்லாத
1வரிசை மகளிரும் அடுப்புத்தொழிலிலே வழங்குகவென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'கூந்தல் விறலியர்' என்று
பெயராயிற்று.

     ஐம்பாற் (4) கூந்தல் (6) என மாறிக்கூட்டுக; இனி மாறாது
கூந்தல் விறலியரென்றதை 2ஒரு பெயராக உரைப்பினும் அமையும்.

     நீயிர் கள்ளினையுண்மின்; அதுவேயன்றி உண்டற்குச்
சோற்றையடுமின்; அதுவேயன்றித் (1) தின்றற்குத் திற்றியையறுமின்;
அதுவேயன்றித் தின்றற்குப் புழுக்கப்படுமவற்றை
அடுப்பிலேயேற்றுமின் (2); வருநர்க்கு வரையாதே கடிதின்
உதவுதற்பொருட்டுக் (3) கூந்தல் விறலியர் அடுப்பிலே வழங்குக (6);
இன்னும், வருநர்க்குச் சோறிடுதலேயன்றி அவன்பால் நாம்
பொருளாகப் பெற்றது கொடுமின்; இவ்வாறு எல்லாங் கொடுத்தாலும்
பின்னுக்குக் காரியத்தில் தப்பில்லை (7); அதற்கு யாது
காரணமெனின், மன்னுயிரழிய (8) மாரி பொய்த்தாலும், (11)
சேரலாதன் நசைபொய்யலன் (12); அதுகாரணமென வினைமுடிவு
செய்க.

     இதனாற்சொல்லியது அவன்கொடைச் சிறப்புக்
கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 2. திற்றி எறிக - தின்றற்குரிய மாமிசத்தை
அறுத்திடுக; திற்றி - தசை; "அழித்தானாக் கொழுந்திற்றி" (மதுரைக்.
217).
புழுக்கு - புழுக்குதற்குரிய பருப்புவகை.

     3. தெளிர்ப்ப - ஒலிக்க (ஐங். 24 : 4)

     4. இருண்ட வளைந்த தழைத்தல் பொருந்திய ஐந்து
பகுதிகளையுடை; ஐம்பாலாவன: குழல், அளகம், கொண்டை,
பனிச்சை, துஞ்சை யென்பன (சீவக. 2437. ந.)

     5. கோடு - பக்கம். 6. அடுப்பு வழங்குக - சமையலைச் செய்க.
     
     7. தப்பு இன்று - பிழை இல்லை.

     8. யாண்டு பல துளக்கி - பல ஆண்டுகளாக நடுங்கச்செய்து.

     9. ஞாலம் புரவு எதிர்கொண்ட - உலகத்தைப் பாதுகாத்தலை ஏற்றுக்கொண்ட.

     9. தண்ணிய இயல்பையுடைய மேகம் பெய்யாமல் மாறி.

     9-10. "உலகத்து, மழைசுரந் தளித்தோம்பு நல்லூழி" (கலித்.
99 : 4 - 5)

     12. நசை பொய்யலன் - விரும்பிய பரிசிற்பொருளைத் தருதலிற்
பொய்த்தல் செய்யான்; "இரவலர்க் குள்ளிய, நசைபிழைப் பறியாக்
கழறொடி யதிகன்" (அகநா. 162 : 17 - 8)

     பின் நமக்கு இலதாகுமே என அஞ்சாமற் பெற்றதை உதவுமின்;
அவன் பின்னும் பொய்யாது தருவானென்றபடி.

     (பி - ம்) 7. பெற்ற வுதவுமின். 8. மன்னுயி ரொழிய. 12. பொய்
யிலனசையே. (8)


    1பரிசில் பெறுதற்குரிய மகளிர்.

    2கூந்தல் விறலியரென்றது அனைத்தும் ஒரு பெயராகி இடுகுறி
மாத்திரையாய் நின்றது; ஐம்பாலென்று முன்னர் வந்ததைக்
கூந்தலென்னும் பொருளுடையதாக்கி, இங்குள்ள கூந்தலென்பதைப்
பொருளில் அடையாக்கின் இங்ஙனம் இலக்கணம் கூறுக.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

8. கூந்தல் விறலியர்
 
18.உண்மின் கள்ளே யடுமின் சோறே
எறிக திற்றி யேற்றுமின் புழுக்கே
வருநர்க்கு வரையாது பொலங்கலந் தெளிர்ப்ப
இருள்வண ரொலிவரும் புரியவி ழைம்பால்
 
5ஏந்துகோட் டல்குன் முகிழ்நகை மடவரல்
கூந்தல் விறலியர் வழங்குக வடுப்பே
பெற்ற துதவுமின் றப்பின்று பின்னும்
மன்னுயி ரழிய யாண்டுபல துளக்கி
மண்ணுடை ஞாலம் புரவெதிர் கொண்ட
 
10தண்ணிய லெழிலி தலையாது மாறி
மாரி பொய்க்குவ தாயினும்
சேர லாதன் பொய்யல னசையே.
 

துறை  : இயன்மொழி வாழ்த்து.
வண்ணம்  : ஒழுகுவண்ணம்.
தூக்கு  : செந்தூக்கு.
பெயர்  : கூந்தல் விறலியர்.

 1 - 2. உண்மின்........புழுக்கே.

உரை : கள்  உண்மின் - கள்ளை  யுண்பீராக; சோறு அடுமின் -
சோற்றைச்  சமைப்பீராக; திற்றி எறிக - தின்னப்படும்  ஊன்  கறியை 
அறுப்பீராக;  புழுக்கு  ஏற்றுமின்  -  புழுக்குதற்குரிய  கறிவகைகளை
உலையில் ஏற்றுவீர்களாக, 
  

பருகுதற்குரியதாகலின்    கள்ளைப் பொதுவினை  வாய்பாட்டால்
“உண்மின்   கள்ளே”  என்று  பரிசுபெற்ற பாண  னொருவன்  தன்
சுற்றத்தார்க்கும் பாடன் மகளிர்க்கும் கூறுகின்றான். சோறு, நெற்சோறு;
திற்றி,  தின்றற்குரிய  இறைச்சி;  நன்கு மென்று தின்னப்படுவதுபற்றித்
திற்றி யெனப்பட்டது போலும். புழுக்கப்படுவது புழுக்காயிற்று.

தான் பெற்ற பெருவளத்தைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லாற் கூறாது
தன்  ஈகையால் உணர்த்தக் கருதிய பாணர் தலைவன்,  வந்தோர்க்குச்
சோறு  சமைத்தற்குள்  பசியால்  தளர்வோர்க்குக்   கள்ளை  வழங்கி
யுண்பித்தலின்,  “உண்மின்  கள்ளே”  என்றும்,  விரையச் சமைத்தல்
வேண்டி,  “அடுமின்  சோறே” யென்றும் கூறினான். சோற்றுணவுக்குத்
துணையாகத்  திற்றியும்  புழுக்கலும்  இடக்  கருதி,  அவற்றுள் திற்றி
சிறந்தமையின்  “எறிக திற்றி” யென்றும், “ஏற்றுக புழுக்கே” யென்றும்
உரைத்தான்.

3 - 6 வருநர்க்கு....................அடுப்பே.

உரை : இருள் வணர் ஒலிவரும் புரியவிழ் ஐம்பால் இருண்டு கடை
குழன்று    தழைத்து   முடியவிழ்ந்து   ஐவகையாய்   முடிக்கப்படும்
கூந்தலையும்;  ஏந்து  கோட்டு  அல்குல் - உயர்ந்த பக்கத்தையுடைய
அல்குலையும்;  முகிழ்  நகை  -  முகிழ்த்த நகையினையும்; மடவரல்
இளமையினையுமுடைய;  கூந்தல்  விறலியர்  - வரிசை பெறும் தகுதி
சான்ற  விறலிகளே;  வருநர்க்கு  வரையாது  - மேலும் வருவோர்க்கு
வரையாது  வழங்குதற்  பொருட்டு;  பொலங்  கலம் தெளிர்ப்ப நீவிர்
அணிந்துள்ள     `  பொற்றொடிகள்   ஒலிக்க;   அடுப்புவழங்குக -
உண்டற்குரியவற்றைப் பெருகச் சமைப்பீர்களாக,

தம்முடைய     ஆடல் பாடல்களால்  அரசனான சேரலாதன்பால்
வரிசைபெற்ற   மகளிராதலின்,  அவருடைய  கூந்தல்  முதலியவற்றை
விதந்தோதிச்   சிறப்பித்தான்.   கூந்தல்    விறலியராதலின்,  அவர்
கூந்தலையே  முதற்கண்  எடுத்து, “இருள்வண   ரொலிவரும் புரியவி
ழைம்பால்”   என்று   கூறினான்.   வரிசைக்கு   வருந்தும்   பரிசில்
மாக்களாயினும், தம்பால்  வருநர்பால் அவ்வாறு   வரிசைநோக்காமை
தோன்ற,   “வருநர்க்கு  வரையாது” என்றும்,  வேந்தன்பால் பரிசாகப்
பெற்றமையின், “பொலங்கலம் தெளிர்ப்ப” என்றும் உரைத்தான்.அடுப்பு
வழங்குக  என்றது.  இடையற  வின்றிச்   சமைத்தவண்ணமே இருக்க
என்றவாறு.  “வானின் றுலகம் வழங்கி   வருதலால்”    (குறள்.   11)
என்புழிப்போல, வழங்குதல் இடையறாது நிகழ்தற்பொருட்டு. வருநர்க்கு
வரையாது  வழங்குக அடுப்பே    என  முடிக்க. பழையவுரைகாரரும்,
“வரையாமல் எனத்திரித்து  வரையா தொழியும்படி  யெனக்  கொள்க”
என்பர். தெளிர்ப்பவென்னும்  வினையெச்சம்   வழங்குக     என்னும்
வினைகொண்டது.
 

இக்     கூந்தல்  மகளிர்  வரிசைக்  குரியரே  யன்றிச் சமைத்தற்
குரியரல்ல   ரென்றும்,   சோறு   மிக   வேண்டியிருத்தல்  தோன்ற,
அவரையும்    சமைக்க    வேண்டுகின்றா    னென்றும்   கூறுவார்,
பழையவுரைகாரர்,  “வந்தார்க்குச்  சோறு  கடிதின் உதவுதற்பொருட்டு
அடுப்புத்தொழிற் குரியரல்லாத வரிசை மகளிரும் அடுப்புத்தொழிலிலே
வழங்குக   என்றவாறு”   என்றும்,   எனவே,   அடுப்புத்   தொழிற்
குரியரல்லாத    கூந்தல்    விறலிரை   அத்தொழிற்கண்   விடுக்கும்
சிறப்பினால்,    இப்பாட்டு    இப்பெயர்   பெறுவதாயிற்   றென்பார்,
“இச்சிறப்பானே  இதற்குக்  ‘கூந்தல்  விறலியர்’  என்று  பெயராயிற்”
றென்றும்  கூறினார்.  “புரியவிழ்  ஐம்பால்”  என்பதனைக் கூந்தற்கே
யேற்றி,  “ஐம்பாற்  கூந்தல் என  மாறிக் கூட்டுக” என்று கூறி, “இனி
மாறாது   கூந்தல்   விறலிய ரென்பதை  ஒருபெயராக  உரைப்பினும்
அமையும்”  என்று  உரைப்பர். ஐம்பாற் கூந்த லென்றற்கு, ஐம்பாலாக
முடிக்கப்படும் கூந்தல் என்று உரைத்துக்கொள்க.

7 - 12. பெற்றது....................நசையே.

உரை : பெற்றது  உதவுமின் - உணவு பல உதவுவதேயன்றி நீவிர்
பெற்ற  செல்வத்தையும்  வந்தோர்க்கு உதவுவீர்களாக; தப்பு இன்று -
அவ்வாறு      செய்வதால்      குறைவொன்றும்      இல்லையாம்;
மண்ணுடைஞாலம் - மண் திணிந்த நிலவுலகத்தை; புரவு எதிர்கொண்ட
தண்ணியல்    எழிலி    -    காப்பதை   மேற்கொண்ட  தண்ணிய
இயல்பினையுடைய  முகில்கள்;  தலையாது  மாறி - மழைபெய்தலைத்
தலைப்படாது   மாறி;   மன்  உயிர்  அழிய  நிலைபெற்ற  உயிர்கள்
நீரின்மையால்   அழிவெய்துமாறு;   பல   யாண்டு  துளக்கி  -  பல
ஆண்டுகள்காறும்   வருத்தி;   மாரி   பொய்க்கினும்  -  மழையைப்
பெய்யாது     பொய்த்தாலும்;    சேரலாதன்    -    இமயவரம்பன்
நெடுஞ்சேரலாதன்; பின்னும் நசை பொய்யலன் - பின்னும் நீர் அவன்
பால்  செல்லின்  நும்  விருப்பம் பழுதாகாவண்ணம் வேண்டியவற்றை
நிரம்ப நல்குவன் எ - று.

பெற்றதைப்   பிறர்க்குப் பெருக வழங்கின், தம்பால் பொருளழிவும்
இன்மையும்   உளவாமென்று  மனம்  தளராமை  குறித்து,  “பெற்றது
உதவுமின்”  என்றும்,  அவ்வுதவி குற்றமாகா தென்றற்குத் “தப்பின்று”
என்றும், அதற்குக் காரணம் கூறுவானாய்ச் சேரலாதனது கொடைமடம்
கூறலுற்று, “மாரி  பொய்க்குவ  தாயினும்,   சேரலாதன்  பொய்யலன்
நசையே” யென்றும் கூறினான்.  

ஞாலத்    துயிர்கட்கு வேண்டும் உணவுப்பொருள் விளைதற்குரிய
நிலப்பகுதியாதலின்,   அதனை   “மண்ணுடைய   ஞாலம்”  என்றும்,
கைம்மாறு   கருதாது   மன்னுயிர்களைக்   காத்தலே   கடப்பாடாகக்
கொண்டமையின் “புரவெதிர் கொண்ட எழிலி” யென்றும், இருதிணைப்
பொருளையும்  குளிர்ப்பிக்கும்  இயல்புபற்றித்  “தண்ணியல்   எழிலி”
யென்றும்,    உயிர்கள்   நிலைபேறுடையவாயினும்    மழையின்றேல்
அழியும்    என்றற்கு   “மன்னுயிரழிய”    என்றும்,   அவ்வழிவுக்கு
மழையின்மை  பல யாண்டுகள் நிலவ வேண்டுமாதலின், “யாண்டு பல
துளக்கி” யென்றும் கூறினார்.
 

அறம்புரி     செங்கோலனாகிய   சேரலாதன்   நாட்டில்   மழை
பொய்க்குவதின்மை   தோன்ற,   “பொய்க்குவ  தாயினும்”   என்றும்,
நச்சியடைந்தோர்   நசை   பழுதாகாது  நச்சியவாறே  நல்கும்  நலம்
தோன்ற, “நசை பொய்யலன்” என்றும் கூறினார்.

பாண்  மக்கள், கள் உண்மின்; அடுமின்; எறிக; ஏற்றுமின்; கூந்தல்
விறலியர்   அடுப்பு   வழங்குக;   பெற்றது   உதவுமின்;  தப்பின்று;
சேரலாதன்,  மாரி  பொய்க்குவதாயினும்,  பின்னும் நசை பொய்யலன்
என்று வினைமுடிவு செய்க.

சேரலாதனது  கொடைச் சிறப்பையே எடுத்தோதினமையின், இஃது
இயன்மொழி     வாழ்த்தாயிற்று.   அடிபிறழாது  அளவடியானியன்ற
நேரிசையாசிரியப்பா    வாகலின்,   ஒழுகுவண்ணமும்    செந்தூக்கு 
மாயிற்று.


 மேல்மூலம்