முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
19. கொள்ளை வல்சிக் கவர்காற் கூளியர்
கல்லுடை நெடுநெறி போழ்ந்துசுர னறுப்ப
ஒண்பொறிக் கழற்கான் மாறா வயவர்
திண்பிணி யெஃகம் புலியுறை கழிப்பச்
 5 செங்கள விருப்பொடு கூல முற்றிய
உருவச் செந்திணை குருதியொடு தூஉய்
மண்ணுறு முரசங் கண்பெயர்த் தியவர்
கடிப்புடை வலத்தர் தொடித்தோ ளோச்ச
வம்புகளை வறியாச் சுற்றமோ டம்புதெரிந்
 10




தவ்வினை மேவலை யாகலின்
எல்லு நனியிருந் தெல்லிப் பெற்ற
அரிதுபெறு பாயற் சிறுமகி ழானும்
கனவினு ளுறையும் பெருஞ்சால் பொடுங்கிய
நாணுமலி யாக்கை வாணுத லரிவைக்
 15




கியார்கொ லளியை
இனந்தோ டகல வூருட னெழுந்து
நிலங்கண் வாட நாஞ்சில் கடிந்துநீ
வாழ்த லீயா வளனறு பைதிரம்
அன்ன வாயின பழனந் தோறும்
 20




அழன்மலி தாமரை யாம்பலொடு மலர்ந்து
நெல்லின் செறுவி னெய்தல் பூப்ப
அரிநர் கொய்வாண் மடங்க வறைநர்
தீம்பிழி யெந்திரம் பத்தல் வருந்த
இன்றோ வன்றோ தொன்றோர் காலை
 25


நல்லம னளிய தாமெனச் சொல்லிக்
காணுநர் கைபுடைத் திரங்க
மாணா மாட்சிய மாண்டன பலவே.

     துறை - பரிசிற்றுறைப் பாடாண்பட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணமும் சொற் சீர் வண்ணமும். தூக்கு - செந்தூக்கு.
பெயர் - வளனறு பைதிரம் (18)

     (ப - ரை) 1. கவர் கால் - செலவை விரும்பின கால். 2.
சுரன் - வழியில் அருமை.

     4. எஃகம் புலியுறை கழிப்பவென்றது 1எஃகினைப் புலியுறை
கழித்துக் 2கடைவன கடைந்தும் அல்லன 3வாய்கீறியும்
போர்க்குரியவாம்படி பண்ண என்றவாறு.

     6. கூலம் முற்றியவென்றது பண்டமாக முற்றியவென்றவாறு;
இனிப் பலிக்குரிய மற்றைப்பண்டங்கள் குறைவறக்கூடின வென்பாரும்
உளர்.

     9. வம்பு - 4கைச்சரடு. சுரனறுப்பப் (2) புலியுறை கழிப்பத் (4)
தோளோச்ச (8) அவ்வினை மேவலை (10) என முடிக்க.

     11. எல்லு நனியிருந்தென்றது 'பகற்பொழுதின் கண்ணே ஒரு
5வினோதமும் இன்றி நெடுக வருந்தியிருந்தென்றவாறு.

     பெற்ற (11) மகிழ் (12) என முடிக்க.

     அரிது பெறுதலைப் பாயன்மேல் ஏற்றுக. ஈண்டுப் பாயல்
உறக்கம்.

     ஊருடனெழுந்து இனந்தோடகல (16) எனவும், நாஞ்சில்
கடிந்து நிலங்கண் வாட (17) எனவும் கூட்டுக. ஊரெழுந்தென்னும்
முதல் வினையை வழுவமைதியால் இனந்தோடகல வென்னும்
அதன் சினை வினையொடு முடிக்க.

     தோடகலக் (16) கண்வாட (17) அன்னவாயின (19) என முடிக்க.
ஈண்டு ஆயினவென்பது 6தொழிற்பெயர்.

     17-8. நீ வாழ்தலீயாவென்றது நீ பண்டுபோலே குடியேறுக
வென்று வாழ்வுகொடாதவென்றவாறு.

     'வாழ்தலீயா' என்ற அடைச்சிறப்பான் இதற்கு, 'வளனறு
பைதிரம்' என்று பெயராயிற்று.

     20. தாமரை மலரவெனத் திரிக்க.

     22. கொய்வாள் மடங்கவென்றது நெற்றாளின் பருமையாலே
கொய்யும் அரிவாட்கள் தங்கள் வாய் மடியவென்றவாறு.

     23. எந்திரமென்றது ஆலையை. எந்திரமென்னும்
முதலெழுவாயை வழுவமைதியாற்பத்தல் வருந்தவென்னும் அதன்
சினை வினையோடு முடிக்க. பத்தல் வருந்தலாவது பலகாலும்
சாறோடி 7நனைந்து சாதல்.

     தாமரை மலர (20) நெய்தல் பூப்ப (21) வாள் மடங்கப் (22)
பத்தல் வருந்த (23) நல்ல (25) என முடிக்க.

     27. மாணா மாட்சிய மாண்டனவென்றது மாட்சிமைப்படத்
திருத்தினும் மாட்சிமைப்படாத அழகையுடையவாய்ப் பின்னைத்
திருந்தாதவளவேயன்றி உரு மாய்ந்தனவென்றவாறு. மாணாதவற்றை
மாட்சிய வென்றது பண்டு அழகிய ஊரும் வயலுமாய்த்
தான்றிக்கிடந்த பண்புபற்றி எனக் கொள்க. மாட்சியவென்பது
வினையெச்சமுற்று.

     இனி மாணாமாட்சியவென்பதற்குமாணாமைக்குக் காரணமாக
8பெருக்கு முதலாயவற்றின் மாட்சிய என்பாருமுளர்.

     பலவாகிய (27) நீ (17) வாழ்தலீயா வளனறு பைதிரம் (18)
ஊருடனெழுந்து இனம் தோடு அகல (16) நாஞ்சில் கடிந்து
நிலங்கண் வாட (17) அன்ன வாயினவை பழனந்தோறும் (19) தாமரை
ஆம்பலொடு மலர (20) நெல்லின்செறுவில் நெய்தல் பூப்ப (21) அரிநர்
கொய்வாள் மடங்க அறைநர் (22) எந்திரம் பத்தல் வருந்தத் (23)
தொன்றோர்காலை (24) நல்லமன் அளியதாமெனச் சொல்லிக் (25)
காணுநர் கைபுடைத்திரங்க (26) மாணாமாட்சிய மாண்டன (27) எனக்
கூட்டுக. பைதிரம் (18) என்னும் எழுவாய்க்கு மாண்டன (27) என்றது
பயனிலை; அன்னவாயின (19) என்னும் பெயரும் இடையே ஒரு
பயனெனப்படும்.

     அன்னவாயின (19) மாணாமாட்சிய மாண்டன (27) என்றது
பைதிரங்கள் (18) ஊருடனெழுதல் (16) முதலாய வறுமையையுடைய
அளவாய் நின்றன; பின் அவ்வளவினவன்றித் திருத்தவும் திருந்தா நிலைமையவாய் நின்றன; பின் அவ்வளவுமன்றி 9ஊரும் வயலும்
தெரியாதபடி உருவம் மாய்ந்தன (27) என்றவாறு.

     நீ அவ்வினை மேவலையாயிருந்தாய்; நீ வினையை
மேவுகின்றபடியால் (10) கனவினுள் உறையும் (13) நின்னரிவைக்கு (14)
நீ யார் கொல் (15)? நீ அவள்பால் வாராமைக்குக் காரணம் யாது? நீ
அழிக்க என்று அழிந்த நாடுகள் அழிந்து அற்றால் வருவலெனின்,
ஆம்; அழிக்க அழிந்து நீ பின் வாழ்தலீயாத பைதிரம் (18) காணுநர்
கைபுடைத் திரங்க (26) மாணாமாட்சியவாய் மாண்டன (27); அதனால் அது குறையன்று: நின் அன்பின்மையே குறை; இனி நீ அவள்பாற் கடிது எழுகென வினைமுடிவு செய்க10.

     இதனாற் சொல்லியது அவன்வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச்சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று.

     பாணன் பாசறைக்கண் வந்து தேவி ஆற்றாமை கூறி இனி அவள்பாற் போகவேண்டுமென்று இரந்தமையாற் பரிசிற்றுறையாயிற்று.

     'அவ்வினை மேவலை யாகலின்' (10) எனவும், 'யார்கொ
லளியை' (15) எனவும் சொற்சீர் வந்தமையாற் சொற்சீர் வண்ணமும்
ஆயிற்று.

     (கு - ரை) பாசறையிலிருந்த மன்னன்பால் தூதுவந்த
பாணனது கூற்றாக அமைந்தது இச்செய்யுள்

     1. கொள்ளை வல்சி - வழிப்பறித்த பொருள்களை
உணவாகவுடைய. கவர் - விரும்பும் (தொல். உரி. 64). கூளியர்
- மறவர். கொள்ளை வல்சிக் கூளியர் : புறநா. 23 : 5 - 7.

     2. துறுகற்களையுடைய நீண்ட வழியை அகழ்ந்து அருவழியை வரையறுக்க. கற்களையுடைமையானும் அருவழியாதலானும் படை
செல்லும் பொருட்டு வழியை ஒழுங்கு செய்தனர்.

     3. ஒண்பொறிக் கழற்கால் - தாங்கள் செய்த அரிய போர்த் தொழில்களைப் பொறித்தலையுடைய ஒள்ளிய கழற்கால் (பதிற்.
34 : 2, உரை).மாறா-வீரத்தினின்றும் மாறுபடாத. வயவர் - வீரர்.

     4. எஃகம் - வேல். புலித்யுறைகழிப்ப - புலித்தோலாற்
'செய்யப்பெற்ற உறையை விட்டு எடுக்க. வேலையும் உறையிற்
செறித்தல் மரபு (பதிற். 24 : 2; புறநா. 323 : 7).5. செங்கள
விருப்பொடு - இரத்தத்தாற் சிவக்கும் போர்க்களத்திற்குச்
செல்லும், விருப்பத்தோடு. கூலம் முற்றிய - கூலமாக நிறைந்த;
கூலம் - தானியம்.

     6. உருவச் செந்தினை - சிவந்த நிறத்தையுடைய தினையை.
குருதியொடு தூஉய் - இரத்தத்தோடு தூவி (பதிற். 29 : 11 - 2).
தினையையும் குருதியையும் தூவிப் பூசித்தல் வழக்கம் (முருகு. 242;
அகநா. 22 : 10). வீரமுரசத்தை இரத்தத்தைக் கொண்டு பூசித்தல்:
பதிற். 29. 11 - 2; புறநா. 50 : 5, மணி. 1 : 30 - 31.

     7. மண்ணுறு முரசம் - நீராட்டப்பெற்ற வீரமுரசம்.
கண்பெயர்த்து -அடிக்கும் பக்கத்தைத் திறந்து. இயவர் - வள்ளுவர்
முதலியோர்.

     8. கடிப்பு - குறுந்தடி; தோள் ஓச்ச- தோளால் அடிக்க;
தோள் - கை.

     9. வம்பு களைவு அறியா - கைச்சரடு களைதலை அறியாத.
சுற்றம் - படைவீரர். அம்பு தெரிந்து - அம்புகளை ஆராய்ந்து.

     10. அவ்வினையென்றது போரை, மேவலை - விரும்புதலை
உடையாய்.

     கூளியர் சுரனறுப்பவும் வயவர் எஃகத்தை உறையினின்றும
் கழிப்பவும் இயவர் தோள் ஒச்சவும் நீ சுற்றத்தோடு
அவ்வினையினிடத்தே விருப்ப முடையாயாயினாய்.

     11-4. சேரன் மாதேவியினது நிலைமை கூறப்படும்.

     11, எல்லு - பகலில். நனி இருந்து - நன்றாக நின் பிரிவை
ஆற்றியிருந்து; இருத்தல் - இங்கே ஆற்றியிருத்தல் (தொல். அகத்.
14). எல்லி - இரவில்.

     12. அரிதிற் பெறுகின்ற துயிலின்கண் உண்டாகும் சிறுமகிழச்சிக்
காலத்தும்.

     11-3. பகலெல்லாம் ஆற்றியிருந்து இரவிற் சிறிதுநேரம்
துயின்றாலும் அந்நேரத்தும் கனவு கண்டு வருந்தினாளென்றபடி.

     13-4. பெருஞ்சால்பினால் ஒடுங்கிய யாக்கையையும், நாணுமலி
யாக்கை யையும் உடைய அரிவை.

     15. யார்கொல் - என்ன உறவுடையை? என்றது அவள்பால்
அன்பிலன்போலப் பிரிவு நீட்டித்தாயென்ற குறிப்பினது.

     16. இதுமுதல் சேரனுடைய பகைவர் நாட்டின் நிலை
கூறப்படும்.

      ஊரினர் ஒருங்கே எழுந்து இனத்தினரும் பசு முதலிய
தொகுதியும் விட்டு நீங்க.

     17. உழுவாரின்றிக் கலப்பைகள் வெறுக்கப்பட்டு அதனால்
நிலம் வளப்பமின்றிப் பொலிவழிய; "நாடுவறங் கூர நாஞ்சி றுஞ்ச"
(அகநா. 42 : 5)

     18. வளன் அறு பைதிரம் - வளப்பம் அற்ற பகைவர் நாடுகள்.

     19. அன்னவாயின - அகலவும், வாடவும் பெற்ற
அந்நிலையினவாயின. பழனம் - வயலைச் சார்ந்த பொய்கை.

     
20. அழல்மலி : மலி, உவம உருபு; அழல்போன்ற மிக்க
தாமரை எனலும் ஆம். தாமரைக்கு நெருப்பு உவமை: பதிற் 23 : 23;
பெரும்பாண். 289 - 90. குறிப்புரை. 21. செறு - வயல்.

     22. கொய்வாள் - அரிவாள். அறைநர் - கரும்பை
வெட்டுதலுடையோர்; அறை - வெட்டுதல்; "அறைக் கரும்பு"
(பொருந. 193)

     23. தீம்பிழி எந்திரம் - இனிய சாற்றை எடுக்கும் கரும்பாலை.
பத்தலென்றது கரும்பின் சாறு விழும் கூனை; அது சாற்றின்
மிகுதியால் வருந்தியது.

     24. இன்றோ அன்றோ: ஓகாரங்கள் அசைநிலை.

     25. தாம் நல்லமன்; மன் ஒழியிசையின்கண் வந்தது.

     27. மாணாமாட்சிய - மாட்சிமைப்படாத தன்மையை
யுடையவாயின. மாண்டன பல - முன்பு மாட்சிபெற்றிருந்தனவாகிய
பல பைதிரங்கள்.

     மாண்டன பல ஒருகாலை நல்ல, அளிய எனச்சொல்லி்இரங்க,
மாணாமாட்சியவாயின வென்க; உரையாசிரியர் வேறுவிதமாக முடிப்பர்.

     (பி - ம்.) 4, கழிப்பிச். 12. சிறுமதிமானும். 23.பத்தர் வருந்த.
(9)


     1எஃகென்றது ஆயுதப் பொது.

     2கடைவன அம்புகள்

     3வாய்கீறுதல் - தீட்டுதல்; வேலும் வாளும் தீட்டற்குரியன.
பண்ண - சித்தம் செய்ய.

     4கைக்கு அணியும் தோலாலாகிய கவசம்.

     5வினோதம் - பொழுதுபோக்குக்குரிய விளையாட்டு.      

     6தொழிற்பெயர் - வினையாலணையும் பெயர்.     

     7நைந்து சாதலென்றிருப்பின் சிறக்கும்.

     8பெருக்கு - மிக்க வெள்ளம்.

     9"ஊரறிய லாகா கிடந்தனவே" (முத்)

     10இம்முடிவில் உரையாசிரியர் பல செய்திகளை
இசையெச்சத்தால் வருவித்து உரைத்தனர்.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

9. வளனறு பைதிரம்
 
19.கொள்ளை வல்சிக் கவர்காற் கூளியர்
கல்லுடை நெடுநெறி போழ்ந்து சுரனறுப்ப
ஒண்பொறிக் கழற்கால் மாறா வயவர்
திண்பிணி யெஃகம் புலியுறை கழிப்ப
 
5செங்கள விருப்பொடு கூல முற்றிய
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்
மண்ணுறு முரசங் கண்பெயர்த் தியவர்
கடிப்புடை வலத்தர் தொடித்தோ ளோச்ச
வம்புகளை வறியாச் சுற்றமொ டம்புதெரிந்து
 
10அவ்வினை மேவலை யாகலின்
எல்லும் நனியிருந் தெல்லிப் பெற்ற
அரிதுபெறு பாயற் சிறுமகி ழானும்
கனவினு ளுறையும் பெருஞ்சால் பொடுங்கிய
நாணுமலி யாக்கை வாணுத லரிவைக்
 
15கியார்கொ லளியை
இனந்தோ டகல வூருட னெழுந்து
நிலங்கண் வாட நாஞ்சில் கடிந்துநீ
வாழ்த லீயா வளனறு பைதிரம்
அன்ன வாயின பழனந் தோறும்
 
20அழன்மலி தாமரை யாம்பலொடு மலர்ந்து
நெல்லின் செருவி னெய்தல் பூப்ப
அரிநர் கொய்வாண் மடங்க வறைநர்
தீம்பிழி யெந்திரம் பத்தல் வருந்த
இன்றோ வன்றோ தொன்றோர் காலை
 
25நல்லம னளிய தாமெனச் சொல்லிக்
காணுநர் கைபுடைத் திரங்க
மாணா மாட்சிய மாண்டன பலவே.
 

துறை  : பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு.
வண்ணம் : ஒழுகுவண்ணமும்சொற்சீர்வண்ணமும்.
தூக்கு  : செந்தூக்கு.
பெயர்  : வளனறு பைதிரம்.

1 - 10 கொள்ளை......................மேவலை.

உரை : கொள்ளை வல்சிக் கவர்காற்  கூளியர் - பகைப்புலத்தைச்
சூறையாடுதலாற் பெற்ற உணவும் மேற்செலவையே விரும்பும் கால்களு
முடைய  கூளிப்  படையினர்;  கல்லுடை நெடுநெறி போழ்ந்து கற்கள்
பொருந்திய  நெடிய  வழிகளை  வெட்டி;  சுரன்  அறுப்ப - சுரத்தில்
அகன்ற   வழிகளைச்  செய்தமைக்க;  ஒண்பொறிக்  கழற்கால்  மாறா
வயவர்   -   ஒள்ளிய  பொறிகளையுடைய  கழலணிந்த  அடி  முன்
வைத்தது பின்னே

பெயர்த் தறியாத போர்மறவர்; திண் பிணி எஃகம் - திண்ணிதாய்க்
காம்பொடு செறிக்கப் பெற்ற வாட்படையை; புலி யுறை கழிப்ப - புலித்
தோலாற் செய்த உறையினின்றும் எடுத்து வினைக்குரியவாகச் செம்மை
செய்ய;   செங்கள  விருப்பொடு  -  சிவந்த  போர்க்களத்தே  புகும்
விருப்பத்தால்;  கூலம்  முற்றிய  உருவச்   செந்தினை - கூலங்களுள்
ஒன்றாக  நிரப்பிய  நிறம்  பொருந்திய  செந்தினையை;  குருதியொடு
தூஉய்  -  குருதியொடு  கலந்த  தூவிப் பலியிட்டு; மண்ணுறு முரசம்
கண்பெயர்த்து - நீராடி வார்க்கட்டமைந்த முரசத்தின் கண்ணில் குருதி
பூசி;  கடிப்புடை வலத்தர் - வலக்கையில் கடிப்பினை யேந்தி; இயவர்
-  முரசு  முழக்கும் வீரர்; தொடித் தோள் ஓச்ச - தொடியணிந்த தம்
தோளோச்சி்ப்  புடைத்து  முரசினை  முழக்க;  வம்பு  களை வறியாச்
சுற்றமொடு  - கைச் சரடுகளை நீக்குதலில்லாத போர்வீரருடன்; அம்பு
தெரிந்து  -  அம்புகளை ஆராய்ந்து; அவ் வினை மேவலை - செய்து
முற்றிய அப் போரினையே மேலும் விரும்பி யுறைகின்றாய் எ - று.

பகைப்     புலத்தே சென்று சூறையாடிப்  பெற்ற பொருள்களைக்
கொண்டு  உண்பன வுண்டு வாழும் இயல்பின ரென்றற்கு, “கொள்ளை
வல்சி”  யென்றும்,  தம்மைப்  பின்னே  தொடர்ந்துவரும் தானைக்கு
நெறியமைக்கும் தொழிலால் யாண்டும் தங்காது மேற்சென்று கொண்டே
யிருப்பதால்“கவர்காற்  கூளியர்” என்றும்  கூறினார். “கூர்நல் லம்பிற்
கொடுவிற்கூளியர்,           கொள்வது                கொண்டு
கொள்ளாமிச்சில்”            (புறம். 23)                 என்று
பிறரும்     கூறுவர்.     எனவே,    இக்    கூளிப்படையினர்க்குப்
பகைப்புலத்தைச்  சூறையாடுவதும்  நெறி  சமைத்தலும்  தொழிலாதல்
பெற்றாம்  சூறையாடுவது  கூறவே,  நெறி  சமைக்க  வரும்  தம்மை,
யெதிர்த்துப்   போருடற்ற   வரும்  பகைவரை    யதிர்த்தடர்த்தலும்
பெறப்படும். “கவர்வு விருப்பாகும்” (தொல். சொல், 362)  என்பதனால்,
கவர்தல்   விருப்பமாயிற்று.  பழையவுரையும்,  “செலவை  விரும்பின
கால்” என்று கூறுகின்றது. கொள்ளை வல்சியுடையார்க்கு மேன்மேலும்
அதன்பால் விருப்ப முண்டாதல் பற்றிக் கவர்கால் என்றா ரென்றுமாம்
கல்லும் முள்ளும் நிறைந்த நாடு கடந்து செல்லும் தானைக்கு  முன்னே
செல்லும் இக் கூளிப்படை, அத் தானை வருந்தாது விரைந்து சேறற்கு
நல்ல   நெறியினை   யமைக்கின்றதென்பார்,   “கல்லுடை நெடுநெறி
போழ்ந்து   சுரன்   அறுப்ப”   என்றார்.  கல்லுடை  நெறி மேடும்
பள்ளமுமாய்    நேராகச்   செல்வதற்கு   அமையாமையின்,  நெறி
நேர்மையும்   சமமும்  பொருந்துதல்  வேண்டி,  பள்ளத்தை நிரப்பி
மேட்டினை   வெட்டி  யமைக்கும்  செயலை,  “கல்லுடை நெடுநெறி
போழ்ந்து”  என்றும், இந்நெறி செலவரிதாகிய சுரத்தினை ஊடறுத்துச்
செல்வதுபற்றி, “சுரன் அறுப்ப” என்றும் கூறினார். “முரண்மிகு வடுகர்
முன்னுற மோரியர், தென்றிசை மாதிரம் முன்னிய வரவிற்கு, விண்ணுற
வோங்கிய பனியிருங் குன்றத்; தொண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த,
அறை”  (அகம்.  281) என  வரும் பாட்டு இச் செயலை விளக்குதல்
காண்க.   இப்   பாட்டில்   வடுகர்  விரவிய   படையில் மோரியர்
கூளிப்படையினராய்த்  தொழில்  செய்வது காண்க.  இக் கூளிப்படை
இக்காலத்தே பயனீர் (Pioneers) என்றும், சாப்பர் மைனர் (Sappers
and Miners) என்றும் வழங்கும். 
 

“ஒண்பொறிக்  கழற்கால்” என்றதனால், வீரரணியும் கழல் ஒள்ளிய
அருப்புத்தொழி  லுடைமை  பெற்றாம்.  கழல்,  வீரரணியும்  காலணி.
இனிப்  பழையவுரைகாரர்,  “ஒண்பொறிக் கழற்கால்” (பதிற். 34) என்ற
பாட்டில்,  “ஒண்பொறிக்  கழல்கா  லென்றது,  தாங்கள் செய்த அரிய
போர்த்  தொழில்களைப்  பொறித்தலையுடைய  கழற்கால் என்றவாறு”
என்று கூறுவர்.  இத் தொடரினும் “வளனறு பைதிரம்” என்றது சீரிதாக
இருத்தல்பற்றி,   இதனால்  இப்பாட்டிற்குப் பெயர் குறித்திலர் போலும்.
முன்வைத்த    காலைப்  பின்வைத்தலையும்  தோல்வியாகக்  கருதும்
மானமுடைய    ரென்பது   பட,   “கழல்  மாறா  வயவர்”  என்றார்.
காம்பினின்றும்   எளிதிற்  கழலாவாறு  அதன்கண்  திணித்து  வலிய
பூணிட்டிருத்தல்    பற்றி,  திண்பிணி  யெஃகம்  என்றும்,  அதனைப்
புலித்தோலாற்  செய்த  உறையிலிட்டு  வைத்தல்  தோன்ற, “புலியுறை
கழிப்ப”    என்றும்    கூறினார்.    வினைக்குரிமை   செய்தலாவது
செவ்வையாய்த் தீட்டி  நெய்பூசி வைத்தல். இதனைப் பழையவுரைகாரர்
“கடைவன  கடைந்தும்  அல்லன வாய் கீறியும்  போர்க்குரிய வாம்படி
பண்ணுதல்” என்பர். “புலியுறை கழித்த புலவுவா  யெஃகம்” (பதிற். 24)
எனப்  பிறரும்  கூறுதல்  காண்க. இனி, இவ் வெஃகத்தை வேலென்று
கொள்ளினு  மமையுமாயினும்  வாள்  எனக் கோடல் சிறப்புடைத்தாத
லறிக.
 

போர்க்களத்தே     அறப்போருடற்றிப்   பெறும்  புகழ்விருப்பால்
அதனை  நாடிச்  செல்லும்  வீரர்,  முதற்கண் தம்  வென்றி முரசிற்கு
வார்க்கட்டினைச்  செவ்விதாக  அமைத்துச்  செந்தினையும்  குருதியும்
பலியாகத்   தூவி,   குருதியால்   அதன்   கண்ணைத்   துடைத்துக்
கடிப்புக்கொண்டு முழக்கும் மரபுபற்றி, “செந்தினை குருதியொடு தூஉய்
மண்ணுறு   முரசம்   கண்பெயர்த்து,  இயவர்  கடிப்புடை   வலத்தர்
தொடித்தோள்  ஓச்ச”  வென்றார். கூல வகைகளுள் தினையும் ஒன்றா
யமைய,  “கூலம்  முற்றிய உருவச் செந்தினை”என்றார். போரிற் பட்டு
விழும்   உயிர்களின்   குருதியால்   போர்க்களம்   சிவப்பது  பற்றி
“செங்களம்”   என்றார்.  போரெனிற்  புகலும்  மறவராதல்  தோன்ற,
“செங்கள   விருப்பொடு”  என்றா  ரென  வறிக.  ஒடு,  ஆனுருபின்
பொருட்டு  வழிபடுதற்கு  முன்  முரசத்தை  நீராட்டுவது மரபாதலால்,
“மண்ணுறு முரச” மெனல் வேண்டிற்று.

இனி,  சேரலாதனது செயலைக் கூறுவார், தன்னொடு சூழவிருக்கும்
போர்வீரர்  கணந்தோறும்  போரை  யெதிர்நோக்கித் தம் கையிலிட்ட
சரடுகளை  நீக்காது  மனமெழுந்து நிற்ப, அவன் அவர் மனநிலையிற்
குறைவின்றி, அம்புகளை யாராய்ந்து தெரிந்துகொண்டும் போர்வினைக்
குரியவற்றைச்  சூழ்ந்துகொண்டும்  இருத்தலின்  “வம்பு களைவறியாச்
சுற்றமொடு  அம்பு  தெரிந்து  அவ்வினை மேவலை” என்றார். வம்பு,
கைச்சரடு;  ஏந்திய  படை  கை வியர்த்தலால் நெகிழாமைப்பொருட்டு
அணிவது. மேவல், விரும்புதல்.

இனி,   கூலம் முற்றிய வென்றதற்குப் பழையவுரைகாரர்,“பண்டமாக
முற்றிய  வென்றவாறு”  என்றும்,  “பலிக்குரிய பண்டங்கள் குறைவறக்
கூடினவென்பாரு   முளர்”  என்றும்  கூறுவர்.  அவ்வினை,   செய்து
முற்றிய அப்போர்வினை.

கூளியர்  சுரனறுப்ப, வயவர் புலியுறை கழிப்ப, இயவர் தோளோச்ச
நீ அம்புதெரிந்து  அவ்வினை  மேவலை  யென்று  முடித்துக்கொள்க.
பிரிநிலை யேகாரம் விகாரத்தால் தொக்கது.

10 - 15 ஆகலின்.............அளியை.

உரை : ஆகலின்   -   நீ   அவ்வாறு          வினைமேவிய
உள்ளத்தானாதலால்;  எல்லு  நனி  இருந்து - பகலில் நின் பிரிவைப்
பெரிதும்  ஆற்றியிருந்து;  எல்லி - இரவின்கண்; அரிதுபெறு பாயல் -
அரிதாகப்   பெறுகின்ற   உறக்கத்தினால்;   கனவினுற்    பெற்ற  -
கனவின்கண்   தானுற்ற;   சிறு  மகிழான்  -   சிறுமகிழ்ச்சியேதுவாக;
உறையும்  - உயிர் தாங்கி மனைக்கண்ணே யுறையும்; பெருஞ்சால்பு -
பெரிய சால்பும்; ஒடுங்கிய நாணுமலி யாக்கை - உடல் சுருங்கியதனால்
எழும்  அலரால்  நாணம் நிறைந்த உடம்பும்; வாணுதல் அரிவைக்கு -
ஒளி  பொருந்திய  நுதலுமுடைய  அரிவையாகிய  நின் மனைவிபால்;
யார்கொல் - நினைவு கொள்ளாமையால் நீ யாராயினை; அளியை - நீ
அளிக்கத் தக்காய் எ - று.

மெய்யால் வீரரொடு  கலந்து அம்புகளை யாராய்தலும்,  மனத்தால்,
அவ்  அம்புகொண்டு   செய்யும் போர்வினையை விரும்புதலும்  செய்
தொழுகுதலால்,       நின்பால்      நின்னையின்றி      யமையாக்
காதலுற்றிருக்கும்  மனைவியைப்பற்றிய  எண்ணம்  சிறிதும்  எழுந்தில
தென   அவன்   ஆண்மையை  ஒருபுடை  வியந்து  கூறுவார்போல்,
“வம்புகளை  வறியாச்  சுற்றமொடு  அம்புதெரிந் தவ்வினை மேவலை
யாகலின்”   என்றார்.  வினைமேற்  செல்லும்  ஆடவர்  அவ்வினை
முடிந்துழியல்லது  தம்  காதல்  வாழ்வை  நினையாமை  அவர்கட்குச்
சிறப்பாதலின்,  அதனை  யெடுத்தோதினார். ஆயினும், ஈண்டு எடுத்த
வினைமுற்றிய     பின்னும்    மீளக்    கருதாது    அவ்வினையே
மேவியிருப்பதுபற்றி     அவனுள்ளத்தை     ஆசிரியர்     மாற்றக்
கருதுகின்றாரென வறிக.
 

வினைமுடித்தற்கு     வேண்டும்     மறம்,   அது   முடிந்தபின்
வேண்டாமையின்,  அதனை  மாற்றி  அன்பும் அருளும்  உள்ளத்தே
நிலவுவித்தல்    அறவேர்   கடனாதலாலும்,   அவற்றிற்கு   வாயில்,
இல்லிருந்து     நுகரும்     இன்பமும்     ஆண்டிருந்து    புரியும்
அறமுமாதலாலும்,  இல்லாள்கண்  பெறும்  இன்பத்திடத்தே  அவற்கு
நினைவு   செல்லவேண்டி   அவளது   பிரிவாற்றாமையைப்   பாரித்
துரைக்கின்றார்.

பகற்போதின்கண்     அவன் வற்புறுத்திப் போந்த  காலத்தையும்
தெளிந்துரைத்த   சொற்களையும்   தேறி,   உடனுறையும்  தோழியர்
கூட்டமும்  பிறவும் கண்டு ஒருவாறு ஆற்றியிருத்தல் தோன்ற, “எல்லு
நனியிருந்து”  என்றார்.  எல்,  பகல்,  எல்லி, இரவு. ஆற்றியிருத்தற்கு
வேண்டும்   வன்மையினைப்   பெரிதும்    பெய்துகொண்டிருத்தலின்,
“நனியிருந்து”  என்றல்  வேண்டிற்று.  எல்லி  அரிது  பெறு  பாயல்,
கனவினுள்  பெற்ற  சிறுமகிழான்  என  இயைக்க,  “காலை யரும்பிப்
பகலெல்லாம்  போதாகி  மாலை  மலரும்” மாண்புடைய காதற் காமம்,
இரவுப் போதில் அவளை   வருத்துதலால்   உறக்கம்      மிகுதியும்
இலளாயினாள்     என்பார், “எல்லி அரிது பெறு பாயல்”   என்றார்.
அரிது பெறு பாயல், சிறுதுயில். இது கண்டுயில் மறுத்தல். அரிதுபெற்ற
பாயலின்கண்,    நின்னைக்    கனவிற்   காண்டலால்   உண்டாகும்
சிற்றின்பமே  அவள்  உயிர் வாழ்தற்குத் துணையாயிற்று;  அதுதானும்
இலதாயின்  அவள்  உயிர்  வாழாள்  என்பார்,  “கனவினுள்,  பெற்ற
சிறுமகிழான்   உறையும்”   என்றார்.  “நனவினால்  நல்கா  தவரைக்
கனவினாற்,   காண்டலி   னுண்  டென்னுயிர்”  (குறள்.  1213)  எனச்
சான்றோர்  கூறுதல்,  கனவிற்  பெற்ற  சிறுமகிழ் உயிர் உளதாதற்குச்
சான்றாதல் காண்க. உம்மை, இசைநிறை.

இனிப்     பழையவுரைகாரர்,   “எல்லுநனி    யிருந்   தென்றது,
பகற்பொழுதின்கண்ணே    ஒரு    வினோதமும்    இன்றி   நெடுக
வருந்தியிருந்தென்றவாறு”  என்றும்,  “பெற்ற  மகிழ்  என   முடிக்க”
என்றும்,  “அரிது  பெறுதலைப்  பாயன்மே லேற்றுக; ஈண்டுப் பாயல்
உறக்கம்” என்றும் கூறுவர்.

கற்பும் காமமும் நற்பா லொழுக்கமும் பொறையும் நிறையும் பிறவும்
நிறைந்திருத்தல்பற்றி,   “பெருஞ்சால்பு”   என்றும்,   அதனால்  நின்
பிரிவாலுளதாகிய       வருத்தத்தைத்       தன்       சால்பினால்
ஆற்றியிருந்தாளாயினும்,  உண்டியிற்  குறைந்து உடம்புநனி  சுருங்கித்
தோன்றுதலால்,  “ஒடுங்கிய  நாணுமலி  யாக்கை” யென்றும் கூறினார்.
காதலன்  தன்னை யன்பின்றி மறந்தானென்று தன் மெலிவு காண்பவர்
கூறும்  அலர்க்கு  நாணி  ஒடுங்கியிருக்குமாறும் தோன்ற, “நாணுமலி
யாக்கை” யென்றார். இது புறஞ்சொல் மாணா     நிலைமை.   நுதல்
பசந்திருத்தலைக்   குறிப்பு  மொழியால் “வாணுதல்” என்றார். இவை
யனைத்தும் அரசிபால் நிகழ்ந்த அழிவில் கூட்டத்தவன் பிரிவாற்றாமை.
 

இவ்வாறு     அரிவையாவாள்     நின்னையின்றி     யமையாப்
பெருங்காதலளாக,  நீயோ  அவளை  நினைத்தலன்றி  வினைமேவிய
வுள்ளமுடையனாதலின்,   நினக்கு  அவள்பாலுற்ற  அன்புத்தொடர்பு
இனிது  விளங்கிற்றன்று  என்பார்,  “அரிவைக்கு யார்கொல்” என்றும்,
இது  மிக்க  அளிக்கத்தக்க நிலையாம் என்றற்கு, “அளியை” என்றும்
இசைக்கின்றார்.

இவ்வண்ணம்     சேரலாதனது   உள்ளத்து   அன்பு  நிலையை
எழுப்பியவர்,   அவனது   அருணிலையைப்   பகைவர்   நாட்டழிவு
வகையினை விரியக் கூறிக் கிளர்ந்தெழுவிக்கின்றார்.

16 - 19. இனந்தோ டகல.........அன்னவாயின.

உரை : ஊர் உடன் எழுந்து-நின் பகைவர் நாட்டு ஊரவரெல்லாம்
அச்சத்தால் கூட்டமாய்த் திரண்டெழுந்து ஓடிவிடுவதால்; இனம் தோடு
அகல  -  அவர்  ஓம்பிய ஆனினங்கள் தொகுதி தொகுதியாய் வேறு
வேறு  திசைகளில்  பரந்தோட; நாஞ்சில்  கடிந்து  -  உழு கலப்பை
முதலியவற்றை அவர் எறிந்துவிட்டொழிந்தமையின்; நிலம்கண் வாட -
நிலங்கள்  விளைநிலம்  கெட்டழிய;  நீ  வாழ்தல்  ஈயா - ஒருவரும்
இருந்து   வாழ்தற்குரிய   வாய்ப்பினை   நீ  நின்  போர்வினையால்
நல்காமையால்;  வளன்  அறு பைதிரம் -வளப்பம்    அழிந்த   நின்
பகைவர்  நாடுகள்; அன்ன வாயின -    அவ்வியல்பினை யடைவன 
வாயினகாண் எ - று.

எழுந்தமை     இனம்  அகலுதற்கும்,   கடிந்தமை   வாடுதற்கும்
காரணமாயின.  இனங்களின்  உண்மையும், நிலங்களின் விளைநலமும்,
நாட்டின்   வளத்துக்கும்  மக்கள்  வாழ்விற்கும்  காரணமாதலால்,  நீ
செய்யும்  போர்வினை அவற்றைச் சிதைத்து மக்களை அல்லலுறுத்திற்
றென்பார்,  “நீ  வாழ்த  லீயா  வளனறு  பைதிரம்  அன்ன வாயின”
என்றார்.     எழுந்து     கடிந்தென்னும்       செய்தெனெச்சங்கள்
காரணப்பொருட்டு.  அகல,  வாட  ஈயா  வளனறு பைதிரம்் அன்ன
வாயின  எனக்  கூட்டி  முடிக்க. இனிப் பழையவுரைகாரர், “ஊரெழுந்
தென்னும்    முதல்    வினையை    வழுவமைதியால்    இனந்தோ
டகலவென்னும்   அதன்   சினை  வினையொடு  முடிக்க”  என்றும்,
“தோடகலக்  கண்வாட  அன்ன  வாயின  என முடிக்க” என்றும், “நீ
வாழ்தலீயா  வென்றது,  நீ  பண்டு போலே குடியேறுக என்று வாழ்வு
கொடாத  என்றவாறு”  என்றும்  உரைப்பர்.  மேலும், அவர், “வாழ்த
லீயா  என்ற  அடைச்சிறப்பானே  இதற்கு  வளனறு  பைதிர மென்று
பெயராயிற்” றென்பர்.

19 - 27. பழனந்தோறும்...........பலவே.

உரை : பழனந்தோறும் - நீர்   நிலைகளிலெல்லாம்;  அழல்மலி
தாமரை  ஆம்பலொடு  மலர்ந்து  - நெருப்புப்போன்ற தாமரைகளும்
ஆம்பல்களும் மலர; நெல்லின் செறுவின் - நெல் விளையும்  இனிய
வயல்களில்;     நெய்தல்   பூப்ப  -   நெய்தல்கள்  மலர;  அரிநர்
கொய்வாள்  மடங்க  - விளைந்த நெல்லையரியுமிடத்துத் தொழுவரது
அரிவாள்  வாய்  மடங்கவும்;  அறைநர் தீம் பிழி எந்திரம் - கரும்பு
வெட்டுவோருடைய  அதனையாட்டிச்  சாறுபிழியும்  எந்திரம்; பத்தல்
வருந்த  -  கருப்பஞ்சாறு  விழும்  கூன்வாய்  வளையவும்; இன்றோ
அன்றோ தொன்றார் காலை நல்ல மன் - இன்று நேற்றன்று தொன்று
தொட்டே இவ்வளங்களால்  இந்நாடுகள்  நல்லனவாய்  இருந்தனவே;
என   - என்று;   சொல்லி   -  வாயாற்  சொல்லி;  காணுநர்  கை
புடைத்துஇரங்க  -  இப்போது  காண்போர்  கைகொட்டிப்  பிசைந்து
வருந்த;  பல  மாண்டன - பலவகையாலும் மாட்சிமை யுற்றிருந்த இந்
நாடுகள்; மாணா  மாட்சிய -கெட்டழிந்த  தன்மையை யுடையவாயின
எ - று.
 

“வளனறு  பைதிரம்     அன்ன  வாயின”  எனத்  தாம்  கண்ட
காட்சியைப்    பொதுவகையாற்    பட்டாங்குக்   கூறிய   ஆசிரியர்,
கண்டார்மேல்   வைத்து,   அவற்றின்   வாழ்தற்குரிய   வளங்களின்
இயல்பைச்  சிறப்பு  வகையாற்  கூறுகின்றார் முதற்கண் நீர்வளத்தைச்
சிறப்பிப்பார்,  தாமரையும்  ஆம்பலும்  செவ்வி  தவறாது  மலர்ந்தன
என்றற்கு,  “அழன்மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து” என்றார். ஒடு,
எண்ணொடு,  நிலவளம்  நெல்லாலும்  கரும்பாலும் அழகுபெறுதலின்,
அவற்றை  “அரிநர்  கொய்வாள்  மடங்க அறைநர் தீம்பிழியெந்திரம்
பத்தல்  வருந்த”  என்றார்.  அரிவாள்  மடங்க என்றது, நெற்பயிரின்
சிறப்பும், எந்திரம் பத்தல் வருந்த என்றது, கரும்பின் சிறப்பும்  உணர
நின்றன.     அரிநர்,  நெல்லறுப்போர்.  அறைநர் - கரும்பு  வெட்டி
எந்திரத்திட்டு  அறைப்பவர்  . நெல்லின  நலம்  வியந்து,   அதனை
விளைவிக்கும்  நிலத்தை, “இன்செறு”  என்றார்.  மலர,   மலர்ந்தென
நின்றது.  நெல்வயலில் நீர் இடையறாமையின் நெய்தல்  பூப்பதாயிற்று.
இன்றோ    அன்றோ  என்புழி,   ஓகாரம்   அசைநிலை.    பத்தல்,
எந்திரத்திலுள்ள   சாறு விழும்  தூம்பு.  சாற்றின்  மிகுதி   தோன்ற,
“வருந்த” என்றார்.

“கொய்வாள்     மடங்க  வென்றது,  நெற்றாளின்  பருமையாலே
கொய்யும்  அரிவாட்கள்  தங்கள்  வாய் மடிய என்றவாறு”  என்றும்,
“எந்திரமென்னும்     முதலெழுவாயை  வழுவமைதியாற்     பத்தல்
வருந்தவென்னும்  அதன்  சினை  வினையோடு  முடிக்க”   என்றும்,
“பத்தல்   வருந்த   என்றது,  பலகாலும் சாறோடி  நனைந்து   சாத”
லென்றும் பழையவுரைகாரர் கூறுவர்.

பண்டு    பல்வளத்தாலும் மாட்சியுற்றிருந்தவை இன்று அம்மாட்சி
யழிந்தனவென  வருந்திக்  கூறுதலின்,  “மாணா  மாட்சிய”  என்றார்.
பண்டு  பலவாய் மாண்ட மாட்சி பெற்றிருந்தமை தோன்ற, “மாண்டன
பலவே”   யென்றும்,    அம்   மாட்சி   இப்போது  மாணாமையின்
“மாணாமாட்சிய”  என்றும் கூறல் வேண்டிற்று. மாண்ட மாட்சி, செய்த
செயல்  என்பது   போல்வது. இதன் மறுதலை, செய்யாச் செயல்போல
மாணாமாட்சி   யென்றாயிற்று.   இனிப்   பழையவுரைகாரர்,  மாண்ட
மாட்சியுடையவை  இன்று  சேரனது  போர்வினையால்  மாணாமாட்சி
யெய்தின; அவை இப்போதும் மாண்புறுத்தவழி. மாண்ட மாட்சியவாம்
போலும்   என்று   ஐயமுறாவாறு, “மாணா      மாட்சிய மாண்டன”
என்று                      கொண்டு,        “மாட்சிமைப்படத்
திருத்தினும்   மாட்சிமைப்படாத   அழகையுடையவாய்ப்   பின்னைத்
திருந்தாத   வளவேயன்றி   யுருமாய்ந்தன   வென்றவாறு”  என்றும்,
“மாணாதவற்றை   மாட்சிய   வென்றது   பண்டு   அழகிய  ஊரும்
வயலுமாய்த்  தோன்றிக் கிடந்த பண்புபற்றி யெனக் கொள்க” என்றும்,
“மாட்சிய  வென்பது  வினையெச்சமுற்று”  என்றும் கூறுவர். எனவே,
மாண்டன   என்பது   மாளுதல்  என்னும்  வினையடியாகப்  பிறந்த
வினைமுற்றாதல்  அவர்  கருத்தாதல்  காண்க.  இனி, அவரே, “இனி
மாணா  மாட்சிய வென்பதற்கு மாணாமைக்குக் காரணமாகிய பெருக்கு
முதலாயவற்றின்    மாட்சிய   வென்பாரு   முளர்”   என்று   பிறர்
கூறுவதையும் எடுத்தோதுகின்றார்.
 

இதுகாறும்  கூறியவாற்றால், ஆசிரியர் சேரலாதன் வினை செய்யும் 
இடம்  அடைந்து,  ஆங்கு  எடுத்த வினைமுற்றியும் மீளக் கருதாமை
கண்டு, “அரசே, கூளியர் சுரனறுப்ப, வயவர் புலியுறை கழிப்ப, இயவர்
தோளோச்சத்   தான்  சுற்றமொடு  அம்பு  தெரிந்து  அவ்வினையே
மேவலை   யாகலின்  (10), எல்லு  நனியிருந்து,  எல்லி  அரிதுபெறு
பாயற்கண்  கனவினுள்  பெற்ற  சிறுமகிழான் உறையும் அரிவைக்கு நீ
யார்கொல், அளியை (15)” என்று கூறி வினைமேவிய அவன் மறத்தை
இல்லுறையும்   மனைவியின்  காதல்  நிலை  காட்டி  மாற்றி  அன்பு
தோற்றுவித்து, “நீ வாழ்த லீயா வளனறு பைதிரம் அன்னவாயின (19);
பலவாய்    மாண்டனவாகிய   அப்   பைதிரங்கள்,  பழனந்தோறும்
தாமரையும்     ஆம்பலும்     மலர,     செறுவில் நெய்தல் பூப்ப,
அரிநர்வாள்     மடங்க,    தொன்றோர்   காலை நல்லமன் அளிய
(25) எனக்       காணுநர்        கைபுடைத்திரங்க,       மாணா
மாட்சிய  வாயின  காண்”  (27)  என்றுரைத்து,  அவன்  உள்ளத்தே
அருள் தோற்றுவித்து அமையுமாறு பெறுகின்றாம்.

இனி,    பல  (27)  வாகிய  நீவாழ்த  லீயா  வளனறு  பைதிரம்
அன்னவாயின  (19)வை  மாணா மாட்சியவாய் மாண்டன எனக் கூட்டி
முடித்த    பழையவுரைகாரர்,    “பைதிர   மென்னு   மெழுவாய்க்கு
மாண்டனவென்பது  பயனிலை;  அன்னவாயின   வென்னும் பெயரும்
இடையே  யொரு  பயனெனப்படும்” என்றும், “அன்னவாயின மாணா
மாட்சிய மாண்டன வென்றது, பைதிரங்கள் ஊருட னெழுதல் முதலாய
வறுமையையுடைய   அளவாய்   நின்றன;  பின்  அவ்வளவினன்றித்
திருத்தவும்  திருந்தா நிலைமையவாய் நின்றன; பின் அவ்வளவுமன்றி
ஊரும் வயலும் தெரியாதபடி உருவம் மாய்ந்தன என்றவாறு” என்றும்
கூறுவர்.

இனி,   இப்பாட்டினை ஆசிரியர் கூற்றாக்காது, பாசறைக்குத் தூது
சென்ற  பாணனொருவன்  கூற்றாக்கி,  “நீ  அவ்வினை  மேவலையா
யிருந்தாய்;  நீ  வினையை  மேவுகின்றபடியால்  கனவினுள் உறையும்
நின்னரிவைக்கு  நீ யார்கொல்; நீ அவன்பால் வாராமைக்குக் காரணம்
யாது?   நீ  அழிக்க  என்று  அழிந்த  நாடுகள்  அழிந்து  அற்றால்
வருவலெனின்,  ஆம்,  அழிக்க  அழிந்து  நீ  பின்  வாழ்த  லீயாத
பைதிரம்  காணுநர் கைபுடைத் திரங்க மாணா மாட்சியவாய் மாண்டன;
அதனால்,  அது  குறையன்று;  நின்  னன்பின்மையே குறை; இனி நீ
அவள்பாற்  கடிதெழுக என வினைமுடிவு செய்க” என்றும், “இதனாற்
சொல்லியது   அவன்   வென்றிச்சிறப்பும்   குலமகளோடு  நிகழ்ந்த
இன்பச்சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று” என்றும் கூறுவர்.
 

பாசறைக்கட்   சென்று தேவியின் பிரிவாற்றாமை கூறி, இனி அவள்
பாற்சென்று  அமைதலே  வேண்டுவ தென்பதுபட  நின்றமையின், இது
பரிசிற்றுறையாயிற்று.

பெரும்பான்மையும்       ஒழுகுவண்ணமும்,        “அவ்வினை
மேவலையாகலின்”  எனவும்,  “யார்கொ லளியை” யெனவும்  சொற்சீர்
வந்தமையின் சொற்சீர் வண்ணமும் இப்பாட்டில் உளவாயின.


 மேல்மூலம்