முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
20. நுங்கோ யாரென வினவி னெங்கோ
இருமுந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச் சென்று
கடம்புமுத றடிந்த கடுஞ்சின முன்பின்
 5 நெடுஞ்சேர லாதன் வாழ்கவவன் கண்ணி
வாய்ப்பறி யலனே வெயிற்றுக ளனைத்தும்
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே
கண்ணி னுவந்து நெஞ்சவிழ் பறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பறி யலனே
 10 கனவினும், ஒன்னார் தேய வோங்கி நடந்து
படியோர்த் தேய்த்து வடிமணி யிரட்டும்
கடாஅ யானைக் கணநிரை யலற
வியலிரும் பரப்பின் மாநிலங் கடந்து
புலவ ரேத்த வோங்குபுகழ் நிறீஇ
 15 விரியுளை மாவுங் களிறுந் தேரும்
வயிரியர் கண்ணுளர்க் கோம்பாது வீசிக்
கடிமிளைக் குண்டுகிடங்கின்
நெடுமதி னிலைஞாயில்
அம்புடை யாரெயி லுள்ளழித் துண்ட
 20 அடாஅ வடுபகை யட்டுமலர் மார்பன்
எமர்க்கும் பிறர்க்கும் யாவ ராயினும்
பரிசின் மாக்கள் வல்லா ராயினும்
கொடைக்கட னமர்ந்த கோடா நெஞ்சினன்
மன்னுயி ரழிய யாண்டுபல மாறித்
 25 தண்ணிய லெழிலி தலையா தாயினும்
வயிறுபசி கூர வீயலன்
வயிறுமா சிலீயரவ னீன்ற தாயே.

     துறை - இயன்மொழி வாழ்த்து. வண்ணம் -
ஒழுகுவண்ணமும் சொற்சீர் வண்ணமும். தூக்கு - செந்தூக்கும்
வஞ்சித்தூக்கும். பெயர் - அட்டுமலர் மார்பன் (20)

     (ப - ரை) 3. 1முரணியோரையென விரியும் 'இரண்டாவதனைத்
தலைச்சென்றென்பதற்கு இடத்திலே சென்றென்பது பொருளாக்காது
முடிவிலே சென்றென்பது பொருளாக்கி, அதற்குப் போந்தபொருள்
முடிவு செயலாக்கி அதனொடு முடிக்க.

     மேலே கொடைக்கடனமர்ந்த கோடா நெஞ்சினன் (23) என்று
கொடை கூறுகின்றான் ஈண்டு ஓம்பாது வீசி (16) என்று கொடை
கூறியதற்குக் காத்தற்குச் 2சென்றவிடைக் கொண்டவற்றைக்
3
களம்பாடச் சென்றோர்க்குக் கொடுக்கும் கொடையென வுரைக்க.

     20. அடா அடுபுகை - ஊர்சுடு புகை. அட்டுமலர்
மார்பனென்றது, பகைவரைக் கொன்று அச்செருக்கானே அகன்ற
மார்பனென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'அட்டுமலர் மார்பன்' என்று
பெயராயிற்று.

     21. எமர்க்கும் பிறர்க்குமென நின்றவற்றைக்
கொடைக்கடனமர்ந்த வென்பதனோடு முடித்து, எமர்க்கென்றது
தன் பாணராகிய எமர்க்கென்றும், பிறர்க்கென்றது தன்பாணரல்லாத
பிறர்க்கென்றும் உரைக்க.

     21-2. பரிசின்மாக்கள் யாவராயினும் வல்லாராயினுமெனக்
கூட்டிப் பரிசின்மாக்களென்றதற்கு முன்சொன்ன எமர்க்கும் பிறர்க்கு
மெனப்பட்டாரையே ஆக்கி யாவராயினுமென்றதற்குக் கண்டார்
மதிக்கப்படும் தோற்றமிலராயினுமெனவும், வல்லாராயினுமென்றதற்கு
ஒரு கல்வி மாட்டா ராயினுமெனவும் உரைக்க.

     யாவராயினுமென்ற உம்மை இழிவுசிறப்பு; 4வல்லவராயினுமென்ற
உம்மை எதிர்மறை.

     நடந்து (10) கடந்து (13) நிறீஇ (14) வீசி (16) என நின்றவற்றை
நெஞ்சினன் (23) என்னும் முற்றுவினைக் குறிப்பொடு முடிக்க.

     26. வயிறுபசிகூரவீயலனென 5மூன்றாவதும் கொடை கூறியதற்கு,
மழை

     பெய்யா விளைவில்காலைத் தன் 6பரிகரமாயுள்ளார்க்கு
அவர்கள் பசித்து வருந்தாமல் வேண்டும் பொழுதுகளிலே
வேண்டுவன கொடுக்குமென்று ஓர் கொடைநிலையாக வுரைக்க.

     நுங்கோ யாரென வினவின், எங்கோ (1), சேரலாதன், அவன்
கண்ணி வாழ்க (5); அவனியல்பிருக்குமாறு சொல்லின், மற்றோர்
தேஎத்து மாறிய வினையே (7) வெயிற்றுகளனைத்தும் வாய்த்தலறியான்
(6); பொய்த்தலறியான் (9); அட்டுமலர்மார்பன் (20),
கொடைக்கடனமர்ந்த கோடாநெஞ்சினன் (23); கோடையிடத்து எழிலி
தலையாதாயினும் (25) வயிறுபசிகூரவீயலன் (26); ஆதலான்,
அவனையீன்றதாய் வயிறுவிளங்குவாளாக (27) என வினைமுடிவு
செய்க.

     இதனாற் சொல்லியது அவன்றன் செல்வப் பொலிவு கண்டு நீ
யாருடைய பாணனென்று வினவியாற்கு, யான் இன்னாருடையேனென்று
சொல்லிமுடிக்க, அவன் குணங்கள் இன்ன கூறிப் பின் அவனை
வாழ்த்தி, முடித்தவாறாயிற்று.

     'இருமுந்நீர்' (2) எனவும், 'முரணியோர்' (3) எனவும், 'கடிமிளை'
(17) எனவும், 'நெடுமதில்' (18) எனவும் எழுந்த நான்கடியும் வஞ்சியடி
யாகலான் வஞ்சித்தூக்குமாயிற்று.

     கனவினுமென்பது கூன்.

     (கு - ரை) சேரலாதனாற் சிறப்புப் பெற்ற பாணன் ஒருவன்
தன் எதிரே வந்த பாணன் ஒருவனுக்கு அச்சேரலாதனது
பெருமையைக் கூறி வாழ்த்தியதாக அமைந்தது இச்செய்யுள்.

     1. நும் கோ - உம்முடைய இறைவன். நும் என்றது தன்
சுற்றத்தினரையும் உளப்படுத்தியது. மு. புறநா. 212 : 1.

     2. கடலிடையே உள்ள குறைநிலத்தில்

     3. முரணியோர் - பகைவர்

     4, கடம்பு முதல் தடிந்த - கடம்பினது அடிமரத்தை வெட்டிய
(பதிற். 11: 12 - 4, குறிப்புரை). முன்பு - வலி. எங்கோ (1)
நெடுஞ்சேரலாதன் (5) என்க.

     5.கண்ணி - அடையாள மாலை; இது தலையிற் சூடுவது.

     6-7. மாற்றோர் தேத்துமாறிய வினை வெயில் துகளனைத்தும்
வாய்ப்பு அறியலன் - பகைவரது நாட்டிற் சென்று செய்த போரிற்
பின் வாங்குதலை வெயிற்கதிரிலே தோற்றும் அணுவளவேனும்
பொருந்து தலையறியான்; மேற்கொண்ட வினையை முடித்தல்லது
மீளான் என்பது கருத்து. வெயில் துகள் - சூரியன் கதிரினிடையே
தோற்றும் தூசி; இதனைச் சிறுமைக்கு உவமை கூறுதல் மரபு;
"இன்னுழை கதிரின் றுன்னணுப் புரையச், சிறிய வாகப் பெரியோன்"
(திருவா. திருவண்டப். 5 - 6)

     8-9. கண்ணின் உவந்து - கண்ணின் முன்னர் உவப்பை
வெளிப்படுத்தி; நெஞ்சு அவிழ்பு அறியா - உட்கோளை
வெளிப்படுத்துதலையறியாத; புறத்தே மகிழ்வுடையாரைப் போலக்
காட்டி அகத்தே பகைப்பாரைச் சுட்டியது. பொய்ப்பு - பொய்த்தல்.
தேஎத்தும் : உம்மை உயர்வு சிறப்பு; அரசியல் அடைவாற் பொய்கூற
வேண்டிய செவ்வி நேருமாயினும் அப்பொழுதும் பொய்த்தலறியான் என்றபடி, இக்குணம் தருமபுத்திரர் செயலால் அறியப்படும்.

     9-10. கனவினும் பொய்ப்பு அறியலன் எனக் கூட்டுக.

     பகைவர் அழியும்படி எழுச்சியோடு எடுத்துச் சென்று.

     11. படியோர் - பகைவர்; இச்சொல் பிரதியோர் என்பதன்
திரிபென்பர். (அகநா. 22 : 5, உரை); "படியோர்த் தேய்த்த
பணிவிலாண்மை" (மலைபடு. 423) என்றவிடத்து வணங்காதார்
எனப்பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். படியோர்த் தேய்த்தல்
களிற்றுக்கு அடை. வடிமணி - வடித்துச் செய்த மணி; "வடிமணிப்
புரவி" (பட்டினப். 232). இரட்டும் - மாறி யொலிக்கும்.

     12. கடாஅ யானை - மதம் மிக்க யானை. அலற என்றமையின்
இவை பகைவர் படையிலுள்ள யானையெனக் கொள்க.

     13. வியலிரும் பரப்பின் - மிக்க பெரிய பரப்பையுடைய.
கடந்து - வஞ்சியாது எதிர் நின்று வென்று.

     14. நிறீஇ - நிறுத்தி.

     15. விரியுளை மா - விரிந்த தலையாட்டத்தையுடைய குதிரை.

     16. வயிரியர் - கூத்தர். கண்ணுளர் - சாந்திக் கூத்தர் (சிலப்.
5 : 49, அடியார்.). ஒம்பாது வீசி - தனக்கென்று பாதுகாவாமல்
வழங்கி.

     15-6. பரிசிலர்க்கு யானை முதலியன வழங்குதல்: சிறுபாண்.
142 - 3, குறிப்புரை.

     17-9. மிக்க காப்பையுடைய காவற்காட்டையும், ஆழமாகிய
அகழியையும், உயர்ந்த புறமதிலையும், நிலையான மதிலுச்சியையும்,
அம்புக் கட்டுக்களையுமுடைய அழித்தற்கரிய மதிலை உட்புக்கு
அழித்து, கடி - காவல். குண்டு - ஆழம். எயில் - அரண். ஒப்பு:
மதுரைக். 64 - 7; புறநா. 21 : 2 - 6.

     19-20. அடாஅ அடு புகை - சமையல் செய்தலால்
உண்டாகாத ஊர் சுடு புகை. உண்ட மார்பன், புகையையுடைய
மார்பன் என்க. எயிலை அழித்துப் பின்னர் அவ்வெயிற்குள்ளிருந்து
உண்ணுதல் ஒரு மரபு (பதிற். 58; 6. 7; பு. வெ. 117; புறத்திரட்டு,
1327). நாட்டைச் சுட்ட புகை மார்பில் வந்து தவழ்ந்தது (புறநா.
6 : 21 - 2)

     22. வல்லாராயினும் - எவ்விதக் கலையிலும்
வன்மையில்லாராயினும் (அகநா. 152 : 19; புறநா. 57 - 1); தமக்கு
வேண்டியதைச் சொல்லும் ஆற்றலிலராயினும் எனலும், தாம்
கற்றவற்றை மனங்கொள்ளக் கூற மாட்டாராயினும் (மலைபடு. 78, ந.)
எனலுமாம்.

     23. கொடுத்தலாகிய கடமையை விரும்பிய ஒருபால் கோடாத
நெஞ்சையுடையோன்; நம்மவரென்றும் பிறரென்றும் பாராமையின்
கோடா நெஞ்சினன் என்றார்.

     24. மாறி - நீங்கி.

     25. தண்ணிய இயல்பையுடைய மேகம் பெய்யாமற் போயினும்.

     26. தன்னைச் சார்ந்தார் வயிறு பசி மிகும்படி ஈயாமல் இரான்;
பசி கூர்தல் ஈயாமையின் விளைவு. 24-6. பதிற். 18 : 8 - 12.

     27.அவனைப் பெற்ற தாய் வயிறு குறையின்றி விளங்குவாளாக.

     (பி - ம்) 10. ஒருங்கு நடந்து, ஓங்கு நடந்து 21. எமக்கும் (10)

     8. இதன் பதிகத்து யவனர்ப்பிணித்தென்றது யவனரைப்போருள்
அகப்படுத்தியென்றவாறு.

     9. நெய் தலைப்பெய்து கைபிற்கொளீஇ யென்பதற்கு
அக்காலத்துத் தோற்றாரை நெய்யைத் தலையிற் பெய்து கையைப்
பிறகு பிணித்தென்றுரைக்க.

     10. அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டென்றது அந்த
யவனரைப் 7பின்தண்டமாக அருவிலைநன்கலமும்
வயிரமுங்கொண்டென்ற வாறு.


     1பகைவரை முடிவு செய்து எனப் பொருள் கொள்க;
தகரவொற்று விரிந்திருத்தலின் இவ்வாறு பொருள் கொண்டார். தலைச்
சென்று - முடித்து. இத்தொடர் 'தலைக்கட்டி' என்பது போல நின்றது.

     2சென்ற இடை - சென்ற இடத்தில்.

     3களம்பாடச் சென்றவர் பொருநரும் பாணரும்.    

     4வன்மையுடையாருக்கும் கொடுப்பான் என்பது பெறப்படுதலின்
எதிர்மறை உம்மையாயிற்று.

     5வீசி (16) எனவும், கொடைக்கடனமர்ந்த (23) எனவும்
இருமுறை கொடை கூறினமையின் இங்கே மூன்றாவது என்றார்.

     6பரிகரம் - ஏவலர் முதலிய சுற்றத்தார் : இக்காலத்துப்
பரிகலமென்றுவழங்கும்.

     7பின்தண்டம் - சிறைகொண்டாரை விடுத்தற்பொருட்டுக்
கொள்ளும் திறை.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

10. அட்டுமலர் மார்பன்
 
20.நுங்கோ யாரென வினவி னெங்கோ
இருமுந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச்சென்று
கடம்புமுத றடிந்த கடுங்சின முன்பின்
 
5நெடுஞ்சேர லாதன் வாழ்கவவன் கண்ணி
வாய்ப்பறி யலனே வெயிற்றுக ளனைத்தும்
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே
கண்ணி னுவந்து நெஞ்சவிழ் பறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பறி யலனே
 
10கனவினும்,
ஒன்னார் தேய வோங்கி நடந்து
படியோர்த் தேய்த்து வடிமணி யிரட்டும்
கடாஅ யானைக் கணநிரை யலற
வியலிரும் பரப்பின் மாநிலங் கடந்து
 
15புலவ ரேத்த வோங்குபுகழ் நிறீஇ
விரியுளை மாவுங் களிறுந் தேரும்
வயிரியர் கண்ணுளர்க் கோம்பாது வீசிக்
கடிமிளைக் குண்டு கிடங்கின்
நெடுமதி னிலைஞாயில்
 
20அம்புடை யாரெயி லுள்ளழித் துண்ட    
அடாஅ வடுபுகை யட்டுமலர் மார்பன்
எமர்க்கும் பிறர்க்கும் யாவ ராயினும்
பரிசின் மாக்கள் வல்லா ராயினும்
கொடைக்கட னமர்ந்த கோடா நெஞ்சினன்
 
25மன்னுயி ரழிய யாண்டுபல மாறித்
தண்ணிய லெழிலி தலையா தாயினும்
வயிறுபசி கூர வீயலன்
வயிறுமா சிலீஇயரவ னீன்ற தாயே.

துறை : இயன்மொழிவாழ்த்து.
வண்ணம் : ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும்.
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்.
பெயர் : அட்டுமலர் மார்பன்.

1 - 5. நுங்கோ.................கண்ணி.

உரை : நுங்கோ யார் என வினவின் - உங்கட்கு இறைவன்  யார்
என்று   வினவுவீராயின்;   எங்கோ   -  எங்கட்கு  இறைவனாவான்;
இருமுந்நீர்த் துருத்தியுள் - கரிய  கடலிலுள்ள     தீவில்   வாழ்ந்த;
முரணியோர்த் தலைச் சென்று -  பகைவரை யழித்தல் வேண்டி யவர்
வாழ்ந்த தீவுக்குச் சென்று; கடம்பு முதல் தடிந்த  -  அவர்தம் காவல்
மரமாகிய கடம்பினை     அடியோடு    வெட்டிவீழ்த்தி  அவரையும்
வென்றழித்த;       கடுஞ்சின        முன்பின் - மிக்க    சினமும்
மெய்வன்மையுமுடைய;          நெடுஞ்           சேரலாதன்  -
நெடுஞ்சேரலாதனாவான்; அவன்  கண்ணி  வாழ்க  - அவன் சூடிய
கண்ணி வாழ்வதாக எ - று.

கோ  என்றது, ஈண்டுப் புரப்போர் மேற்று. சேரலாதன்பாற் சென்று
பெருவளம்   பெற்று வரும் தம்மைக் கண்டோர் வியந்து நோக்குவதன்
குறிப்பறி்ந்து   கூறுதலின்,  “நுங்கோ  யாரென  வினவின்”  என்றார்.
பிசிராந்தையாரும்    இவ்வண்ணமே    கோப்பெருஞ்    சோழனைச்
சிறப்பித்துரைக்கும்    கருத்தால்,    “நுங்கோ   யாரென   வினவின்
எங்கோ.....கோழியோனே  கோப்பெருஞ்  சோழன்” (புறம். 212) என்று
கூறுதல்    காண்க.      துருத்தி,     நாற்புறமும்   நீர்    சூழ்ந்த 
நிலப்பகுதி.     இத்தகைய      பகுதி    ஆற்றின்     இடையிலும்
கடலினிடையிலும்         உண்டு.         இக்          கடம்பர்
கடலிடத்தேயுள்ள  தீவிலிருந்துகொண்டு பகைமை விளைத்து வந்தமை
தோன்ற,  “இருமுந்நீர்த்  துருத்தியுள்  முரணியோர்” என்றார். பெரும்
படையுடன்   அவர்   உறையும்   தீவுக்கே  சென்று  மண்டி  அவர்
குடிமுழுதும்    அழியப்    பொருதமை   விளங்க,   “தலைச்சென்று
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்  பின் சேரலாதன்” என்றார். இனி,
தலைச்சென்     றென்பதற்கு      அழித்தென்பது    பொருளாமாறு,
“முரணியோரை   யென   விரியும்   இரண்டாவதனைத்  தலைச்சென்
றென்பதற்கு  இடத்திலே  சென்றென்பது  பொருளாக்காது  முடிவிலே
சென்றென்பது   பொருளாக்கி,  அதற்குப்  போந்த  பொருள்  முடிவு
செயலாக்கி    அதனொடு    முடிக்க”   என்பர்   பழையவுரைகாரர்.
அரசரையோ  செல்வரையோ  நேரிற்சென்று  காணினும்,  பிறாண்டுப்
பெயர்  கூறினும்  வாழ்த்தும்  மரபினால்  கண்ணி  முதலியன வாழ்க
என்றல்  இயல்பாதலால்,  “வாழ்க  அவன்  கண்ணி” என்றார்; இஃது
அவன் நீடு வாழ்க என்னும் குறிப்பிற்று. 

6 - 10. வாய்ப்பறி...............கனவினும்.

உரை : மாற்றார்தேஎத்து மாறிய வினை - பகைப்புலத்தே தனக்கு
மாறாக  அவராற்  செய்யப்படும்  பகை  வினைகள்;  வெயில்  துகள்
அனைத்தும் -  வெயிலிடத்தே காணப்படும் மிகச் சிறிய அணுவளவும்;
வாய்ப்பு   அறியலன்   -   தன்   வினைத்திறத்தால்   அவர்கட்குப்
பயன்படுதலையறியான்;  கண்ணின்  உவந்து  -  தன்  கண்ணெதிரே
நட்டார்போலத் தோன்றி;  நெஞ்சு  அவிழ்பு  அறியா  - தம் நெஞ்சு
மலர்ந்து அன்பு செய்யாத; நண்ணார் தேஎத்தும் - உட்பகை கொண்ட
பகைவரிடத்தேயும்; கனவினும் - கனவின் கண்ணும்; பொய்ப்பறியலன்
- பொய் கூறுதலை யறியான் எ - று.

மாறிய வினை யெனவே, பகைவர் செய்யும் பகைவினை  யென்பது
பெற்றாம்  மாற்றார்  தம்  நிலத்தே  பகைவர்க்  கஞ்சி வஞ்சனையும்
சூதும்   கலந்த   சூழ்ச்சிகள்  பல  செய்தற்கும்,  அவை  தப்பின்றி
வாய்ப்பதற்கும்      போதிய       இடனுண்மையின்,    “மாற்றார்
தேஎத்து     மாறிய வினை”   யென்றார்.    ஒற்றாலும் உரைசான்ற
நூலாலும்   அவர்   செய்யும்  சூழ்ச்சி  யனைத்தும்  முன்னுணர்ந்து
அவற்றை   யறவே   சிதைத்தற்குரிய  வினைகளை  நாடி வாய்ப்பச்
செய்தலால்,     அவர்தம்     மாறிய    வினைகள்   அவர்கட்குப்
பயன்படாமையின், “வெயிற்றுகளனைத்தும் வாய்ப்பறியலன்”  என்றார்.
வாய்ப்பு,  மெய்யாய்ப்  பயன்படுதல்.  அனைத்து  அளவின் மேற்று.
வெயிற்றுக     ளனைத்தும்     என்றது    எள்ளளவும்   என்னும்
வழக்குப்போல்வது.

இனி,    மாறிய வினை யென்பதற்குப் பகைவர்க்கு மாறாகத் தான்
செய்யும்   சூழ்ச்சிகளை  யென்றும்,  வாய்ப்பறியலன்  என்பதனோடு
கனவினும்   என்பதைக்   கூட்டிக்   கனவிலும்   வாய்   வெருவிப்
புலப்படுத்துவானல்லன்  என்றும்  கூறுவர்; பறிதல், வெளியாதல். இது
வினைமேற்   கொண்டாரனைவர்க்கும்  இருத்தற்குரிய  பண்பாதலால்,
இதனை  யெடுத்தோதுவதில்  சிறப்பின்மை யறிக. இனி, மாறிய வினை
யென்றது,   பின்   வாங்குதலென்றும்,   வாய்ப்பென்றது பொருந்துத
லென்றும் கூறுவர்; இதனாலும் பொருள் சிறவாமை யறிக.

“முகத்தின்     இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சர்” (குறள். 824)
என்றற்கு,  “கண்ணி  னுவந்து நெஞ்சவிழ் பறியா நண்ணார்” என்றார்.
அவர்க்கு    அஞ்சியொழுகு    மிடத்துப்   பொய்த்தல்  ஓராற்றால்
நன்றாயினும்,  அதனையும் கனவிலும் நெடுஞ்சேரலாதன் செய்வதிலன்
என்றற்கு,   “கனவினும்   பொய்ப்பறி   யலனே”   யென்றார். இந்த
“நண்ணார்” தொடர்பு கனவினும் இன்னாதாதலின், கனவினும் என்றார்.
“கனவினும்  இன்னாது  மன்னோ”  (குறள்.  819)  என்று  சான்றோர்
கூறுதல்   காண்க.   “மிகச்செய்து   தம்மெள்ளுவாரை   நகச்செய்து,
நட்பினுள்  சாப்புல்லற் பாற்று” (குறள். 829) என்பதனால், பொய்த்தல்
நன்றாதல் உணர்க. 

11 - 21. ஒன்னார்................மார்பன்.

உரை : ஒன்னார் தேய - பகைவர் கண்டு அஞ்சி உளம்  குலைய;
ஓங்கி   நடந்து  -  பெருமிதத்துடன்  நடந்து;  படியோர்த்  தேய்த்து
பகைவரையழித்து;  வடி  மணி  இரட்டும்  கடாஅ யானைக் கணநிரை
யலற    -    வடித்த   ஓசையினைச்   செய்யும்   மணியொலிக்கும்
மதத்தையுடைய     கூட்டமாகிய      யானைப்படை      ஆற்றாது
பிளிறிக்கொண்டு ஓட; வியல் இரும் பரப்பின் மாநிலம் கடந்து அகன்ற
பெரிய பரப்பினையுடைய பகைவரது பெரிய நிலத்தை வென்று கடந்து;
புலவர்  ஏத்த  ஓங்கு  புகழ் நிறீஇ - இயற்புலவர் போந்து பாடிப்பரவ
அவர்கட்கு  வேண்டுவன நல்கி ஓங்கிய புகழை நிலைநாட்டி; வயிரியர்
கண்ணுளர்க்கு - வயிரியர் கண்ணுளர் என்ற இருவகைக்  கூத்தர்க்கும்;
விரியுளை  மாவும்  களிறும்  தேரும்  - விரிந்த தலையாட்ட மணிந்த
குதிரைகளையும்   களிறுகளையும்  தேர்களையும்;  ஓம்பாது  வீசி  -
தனக்கென்று  கருதாமல் மிகுதியாய் நல்கி; கடி மிளை -  காவற்காடும்;
குண்டு கிடங்கின் - ஆழ்ந்த கிடங்கும்; நெடு மதில் - நெடிய மதிலும்;
நிலை  ஞாயில்  - நிலைபெற்ற ஞாயிலும்; அம்புடை ஆர் எயில் உள்
அழித்து - அப்புக்கட் டுடைமையால் கடத்தற்கரிய  அகமதிலுமுடைய
அகநகரை     யழித்து;  அடாஅ    அடுபுகையுண்ட  -    ஊர்சுடு
புகைபடிந்த;  அட்டு மலர் மார்பன் - பகைவரை யட்ட செருக்கினால்
விரிந்த மார்பினையுடையன் எ - று.

ஓங்கி  நடந்து, மாநிலம் கடந்து. ஓங்கு புகழ் நிறீஇ, ஓம்பாது வீசி,
உண்ட  மலர்  மார்பன்  என இயைத்துக்கொள்க. தேய்த்து. இரட்டும்
கணநிரை  யலற என இயைக்க. வயிரியர், கூத்தர், கண்ணுளர், சாந்திக்
கூத்தாடுபவர்.   ஞாயில்,  மதிலுச்சி.  எந்திர  வில்லும்  ஏப்புழையும்
உடைமைபற்றி,   “அம்புடை   யாரெயில்”  எனப்பட்டது.   அடாஅ
அடுபுகை, ஊர்சுடு புகைக்கு வெளிப்படை.

எதிர்நின்று   பொரும்பகை மன்னர், தம் ஆற்றலிழந்து கெடுதலால்,
அவர்   நாணும்   உட்கு   மெய்த,  அரியேறு  போல  நடந்தேகும்
பெருமிதத்தை, “ஒன்னார் தேய வோங்கி நடந்து” என்று சிறப்பித்தார்.
இகழ்வார்  முன்  ஏறுபோற்  பீடுநடை  கோடல் ஆடவர்க்கு இயல்பு.
படியோர்,   பகைவர்.   “படியோர்த்   தேய்த்த  பணிவி  லாண்மை”
(மலைபடு.  423)  என்றார்  பிறரும்.  வடி  மணி,  வடித்துச்  செய்த
மணியென்றும்   கூறுப.   யானைக்   கணம்   என்றொழியாது  நிரை
யென்றதனால்,  யானைப்படை  யாயிற்று.  யானைப்படை  யுடையவே
ஏனைய படைகள் அழிந்தமை சொல்லவேண்டாவாயிற்று.

இவ்வண்ணம்   நால்வகைப் படையும் கெடுத்து விரிந்து கிடக்கும்
நாட்டைக்  கடந்து  சென்று  தலைநகரை யடைந்து பொருது அதனுட்
சேறல்வேண்டி  யிருத்தல்பற்றி “வியலிரும் பரப்பின் மாநிலம் கடந்து”
என்றார்.  வியலிரும் பரப்புடையதாயினும், அதனை வஞ்சனையின்றிப்
பொருது கடந்தமை தோன்ற, பரப்பை விசேடித்துக் “கடந்து” என்றார்.
இவ்வாறு    செய்யும்   அறப்போர் இயற்புலவர்க்கு மிக்க இன்பமும்
அன்புமுண்டாக்குதலின்,  அவர் அச் செயலைப் பாட்டிடை வைத்துப்
பாராட்டுவது  பற்றி,  “புலவ  ரேத்த  வோங்குபுகழ்  நிறீஇ” என்றார்.
ஏனைப்  புகழ்கள்  எல்லாவற்றினும்  புலவர் பாடும்  புகழ் பொன்றா
நிலைமைத்  தாதலால்,  அதனை  வியந்  தோதினார்.  அப்  புலவர்
வியந்து  புகழும்  பாட்டுக்களைப் பாணரும் கூத்தரும் முறையே பாடி
யாடுதலின்,  அவர்க்கு அவன் வழங்கும் திறத்தை, “விரியுளை மாவும்
களிறும்   தேரும்   ஓம்பாது   வீசி”   என்றார்.   “ஓம்பாது  வீசி”
யென்றதனால்,   அவை   பகைப்  புலத்தே  கவர்ந்தமை  பெற்றாம்.
“மன்றம்  போந்து  மறுகுசிறை  பாடும், வயிரிய மாக்கள்” (பதிற். 23)
என்று  பிறரும்  கூறுதல்  காண்க. கண்ணுளர்,  கூத்தர்;. “நலம்பெறு
கண்ணுள  ரொக்கல்  தலைவ”  (மலைபடு.  50) என வருதல் காண்க.
கண்ணுளர்   சாந்திக்   கூத்தாடுபவரென்றும்   அடியார்க்கு  நல்லார்
உரைப்பர்  (சிலப்.  5;  49 உரை.) அஃதாவது, கடுஞ்சின முன்பினால்
அரும்போருடற்றி வென்றி யெய்தும் வேந்தர்க்கு அச்சினம் தணிதற்கு
அவற்குரிய  இன்பம்  பொருளாக  ஆடும்  கூத்து. “சாந்திக் கூத்தே
தலைவ  னின்பம்,  ஏந்தி  நின்  றாடிய  ஈரிரு  நடமவை, சொக்கம்
மெய்யே  அவிநயம் நாடகம், என்றிப் பாற்படூஉம் என்மனார் புலவர்”
என வரும். வினோதக் கூத்தும் ஈண்டைக்குப்     பொருந்துமாயினும்,
சிறப்புப்பற்றி   சாந்திக்   கூத்தாடுவோரை   விதந்தோதினார். இவர்
மதங்கரென்றும் கூறப்படுவர். 

இவர்கட்கு     மாவும் களிறும் தேரும் வழங்குதற்கும், “கொடைக்
கடனமர்ந்த  கோடா  நெஞ்சின”  னென்று கூறுதற்குரிய கொடைக்கும்
வேறுபாடு காட்டலுற்ற பழையவுரைகாரர், “மேலே கொடைக்கடனமர்ந்த
கோடா  நெஞ்சினன்  என்று  கொடை கூறுகின்றான். ஈண்டு ஓம்பாது
வீசி   என்று   கொடை  கூறியதற்குக்  காத்தற்குச்  சென்ற  விடைக்
கொண்டவற்றைக்    களம்    பாடச்    சென்றார்க்குக்   கொடுக்கும்
கொடையென வுரைக்க” என்பர்.

இனி,     பகைவர் தலைநகரை யடைந்து செய்யும்    போர்த்திறம்
கூறுவார்,  காவற்காட்டை யழித்து, கிடங்கினைக் கடந்து மதின்மேலேறி
எயிலிடத்தே   பொருது,   அகநகர்க்குட்   புகுந்து   ஆண்டெதிர்ந்த
வீரரையழித்து   எரியிட்டுச்  சூறையாடினா  னென்பார்,   “கடிமிளைக்
குண்டு   கிடங்கின்,   நெடுமதினிலைஞாயில்,   அம்புடை    யாரெயி
லுள்ளழித்  துண்ட,  அடாஅ  வடுபுகையட்டுமலர்  மார்பன்” என்றார்.
மிளை முதலியவற்றின் நலம் கூறியது, அவற்றாற்  பயனின்மை தோன்ற
நின்றது.  “அருங்குழு  மிளைக்  குண்டு கிடங்கின், உயர்ந்  தோங்கிய
நிரைப்  புதவின், நெடுமதி னிரைஞாயி, லம்புமிழயிலருப்பந்  தண்டாது
தலைச் சென்று கொண்டு நீங்கிய விழுச்சிறப்பு” (மதுரை. 64-9)  என்று
பிறரும் கூறுதல் காண்க.

உள்ளழித்     துண்ட மலர் மார்பன் என்பதற்கு, எயிலை யழித்து
அகநகரைக்  கைக்கொண்  டல்லது  உணவு  கொள்வதி்ல்லை.  யென
வஞ்சினம்  செய்து,  அவ்வாறு  அழித்தபின்  உணவு  உண்ட  மலர்
மார்பன்  என்று  கூறலுமாம். இதனை, “இன்றினிது நுகர்ந்தன மாயின்
நாளை,  மண்புனையிஞ்சி  மதில்கடந்  தல்லது,  உண்குவ  மல்லேம்
புகாவெனக்  கூறிக், கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்” (பதிற். 58)
என்பதனாலுணர்க.    அகநகரையெரித்தலால்   எழும்   புகை   தன்
மார்பிடத்தே   பரவ,   முன்னின்று   வினையாற்றுவதால்,  “அடாஅ
அடுபுகை    யட்டுமலர்    மார்பன்”    என்றார்.    அட்டென்னும்
வினையெச்சம், மலர்த லென்னும் வினைகொண்டது. 

22 - 24. எமர்க்கும்...............நெஞ்சினன்.

உரை : எமர்க்கும் பிறர்க்கும் பரிசின்   மாக்கள்   யாவராயினும்
எம்மைச்  சேர்ந்த  பாணர்க்கும்,  பிற  பொருநர் கூத்தர் புலவராகிய
பிறர்க்கும்  இவரின் வேறாகிய பரிசிலர் யாவராயினும்; வல்லாராயினும்
-    தாம்   பரிசு   பெறற்குரிய   கலையில்   வன்மையிலராயினும்;
கொடைக்கடன் அமர்ந்த  எல்லார்க்கும்  கொடுப்பதைக்  கடமையாக
விரும்பிய;  கோடா  நெஞ்சினன்  -  செம்மை திறம்பாத நெஞ்சினை
யுடையன் எ - று.

கூற்று     நிகழ்த்துவோன் பாண னாதலால், எமர்க்கு   மென்றது
அவனைச்  சேர்ந்த பாணர்க்காயிற்று; ஆசிரியர் கூற்றாயின், அவரைச்
சேர்ந்த   புலவர்   பெருமக்களைக்   கொள்க.   பொருநர்,  கூத்தர்
முதலாயினாரைப் பிறர் என்றான்.       புலவர்    பாணர் விறலியர்
பொருநர்   கூத்தர் எனப் பலரும் பல்வேறு வகையில் பரிசில் பெறற்
குரியராதலின்,  அவரவர் வரிசை யறிந்து கொடுத்தலை விரும்பினவன்
என்றற்கு, “பரிசின் மாக்கள் யாவ ராயினும்” என்றான். வன்மையின்றி
அதனைப்  பெறும்  பயிற்சிநிலைக்கண்ணேயிருப்பார்க்கும் கொடுக்கும்
சிறப்பை  வியந்து,  “வல்லா  ராயினும்”  என்றான். வன்மையிலார்க்கு
வழங்கின,்  அவர்  மேலும்  அத்துறையில் வன்மை பெறற்கு ஊக்கம்
மிகுவ   ரென்ற   கருத்தால்   வழங்குகின்றா   னென்பார், “கோடா
நெஞ்சினன்”  என்றார்.  வல்லார்  என்றற்கு  ஒரு கல்வியும் மாட்டார்
என்று   பொருள்கொண்டு,   அவர்க்குக்   கொடைபுரிதல்  இல்லை
யென்பதுபட  நிற்றல்  தோன்ற,  “வல்லா  ராயினு  மென்ற  வும்மை
எதிர்மறை” யென்று பழையவுரைகாரர் கூறுவர்.

இனி,     அப்  பழையவுரைகாரர்,  ‘எமர்க்கும்  பிறர்க்கும்  என
நின்றவற்றைக்   கொடைக்கட   னமர்ந்த   வென்பதனோடு  முடித்து,
எமர்க்கென்றது  தன்  பாணராகிய  எமர்க் கென்றும், பிறர்க் கென்றது
தன்  பாணரல்லாத  பிறர்க்  கென்றும்  உரைக்க”  என்றும், “பரிசின்
மாக்கள்   யாவராயினும்   வல்லாராயினும்  எனக்  கூட்டிப்  பரிசின்
மாக்கள்    என்றதற்கு    முன்    சொன்ன   எமர்க்கும்   பிறர்க்கு
மெனப்பட்டாரையே   ஆக்கி,   யாவராயினுமென்றதற்குக்   கண்டார்
மதிக்கப்படும்    தோற்றமில    ராயினும்   எனவும்,   வல்லாராயினு
மென்றதற்கு  ஒரு  கல்வி  மாட்டாராயினுமெனவு  முரைக்க; யாவரினு
மென்ற வும்மை இழிவு சிறப்பு” என்றும் கூறுவர

25 - 28. மன்னுயிர்..........தாயே.

உரை : தண் இயல் எழிலி -குளிர்ப்பினைச் செய்யும் மழை முகில்;
மன்னுயிர்  அழிய  - நிலைபெற்ற உயிர்கள் அழியுமாறு; பல யாண்டு
மாறி  -  பல  யாண்டுகள் பெய்து  குளிர்ப்பிக்கும்  செயலின் நீங்கி;
தலையாதாயினும்  -  மழையினைப் பெய்யா தொழியுமாயினும்; வயிறு
பசிகூர  ஈயலன்  -  தன்னை  யடைந்தார்க்கு வயிற்றிற் பசித் தீ மிக்
கெழுமாறு குறைபடக் கொடுத்தல் இலன், பசித் தீத் தலைகாட்டாவாறு
நிரம்பக் கொடுப்ப னாதலால்;  அவன்  ஈன்ற  தாய்  -   அவனைப் 
பெற்ற     தாய்;   வயிறு   மாசு   இலீஇயர்  -  வயிறு குற்றமின்றி 
விளங்குவாளாக எ - று. 

தண்ணிய     லெழிலி என்றவிடத்துத் தண்ணென்றதைப் பெயர்ப்
படுத்துத்    தட்பத்தைச்    செய்யும்    என   முடிக்க;   தண்ணிய
இயல்பினையுடைய   எழிலி  எனினுமாம்  சில  யாண்டு  மாறினாலே,
உயிர்கள்  உடலோடு  கூடியிருத்த  லமையா தாகலின், “யாண்டு பல
மாறி”  யென்றது,  உயிர்கள்  தாம் நின்ற உடலின் நீங்காது நிற்றலும்,
இறந்தவை   மீளத்   தோன்றுதலும்  முற்றவும்  இலவா  மென்றற்கு;
உயிர்த்தொகை   குன்று  மென்றற்கு,  “மன்னுயிர்  அழிய”  என்றும்
கூறினார்.  மாறுதல்,  பெய்து  குளிர்ப்பித்தலைச் செய்யாது நீங்குதல்;
நாட்டில்  வெப்பம்  மிகுவித்தல். ஒருகால் அடங்கியிருக்கும் வயிற்றுத்
தீ   சிறிது  கொடுத்தவழி  மிக்கெழுந்து  வருத்துமாதலின்,  நிறையக்
கொடுக்குமாறு தோன்ற, “வயிறுபசி கூரஈயலன்”  என்றான்.    தலை
யாதாயினும்   என்புழி,   உம்மை யெதிர்மறை.

இனி,     ஓம்பாது வீசி யென்றும், கொடைக்கட னமர்ந்த என்றும்
இருமுறை  கூறியதனோ  டமையாது,  வயிறு  பசிகூர  ஈயலன்  என
மூன்றாமுறையும்   கொடையினை   விதந்து   கூறியதற்குக்  காரணம்
கூறலுற்ற  பழையவுரைகாரர்,  “மூன்றாவது கொடை கூறியதற்கு, மழை
பெய்யா  விளைவில்  காலைத்  தன்  பரிகரமாயுள்ளார்க்கு அவர்கள்
பசித்து   வருந்தாமல்,   வேண்டும்   பொழுதுகளிலே   வேண்டுவன
கொடுக்கும் என்று ஒரு கொடைநிலையாக வுரைக்க” என்று கூறுவர்.

தாயர்   தம் வயிற்றிற் பிறந்த மக்களால் தகாதன நிகழ்ந்தவழி, தம்
வயிற்றை   நொந்து கொள்ளலும், சான்றோர் அம் மக்களின் செயலால்
விளையும்  நலந் தீங்கு கண்டு தாயர் வயிற்றை வியத்தலும் பழித்தலும்
பண்டை  மரபு;  அதுபற்றி,  ஈண்டு  ஏனோர் வயிற்றுப் பசி தீர்த்துக்
குளிர்ப்பிக்கும்  சேரலாதனது  நலங்  கண்டு  வியந்து  கூறலுற்றோன்,
அதனை யீன்ற தாய் வயிற்றைச் சிறப்பி்த்து, “வயிறு  மாசிலீஇய ரவன்
ஈன்ற   தாயே” என்றான். தன் மகன், போர்க்களத்தே,  எறிந்த வேல்
யானையோடு  ஒழிய,  வெறுங்  கையொடு மனைக்குப் போந்தானாகக்
கண்டு  மனம்  நொந்து,  “புகர்முகக் குஞ்சரம் எறிந்த எஃகம், அதன்
முகத்தொழிய  நீ போந்தனையே, எம்மில் செய்யா அரும்பழி  செய்து,
கல்லாக்  காளைநின்  னீன்ற வயிறே” (புறத் 1406) என்றும், போரிடை
வீழ்ந்து  புகழ் பெற்றது கண்டு, “ஈன்ற வயிறோ விதுவே, தோன்றுவன்
மாதோ  போர்க்களத்  தானே”  (புறம்.  86)  என்றும் தாயர் கூறுதல்
காண்க.  மகட்கொடை  பொருளாகப்  போர் நிகழக் கண்ட சான்றோர்,
அம்  மகளை  “மரம்படு  சிறு  தீப்  போல, அணங்கா யினள் தான்
பிறந்த  வூர்க்கே”  (புறம்.  349) என்போர், அவளைப் பெற்ற தாயை
நொந்து,   “குவளை   யுண்கண்  இவளைத்  தாயே,  ஈனா  ளாயின்
நன்றுமன்” (புறம். 348) என்றும், “அறனிலள் மன்ற தானே............பகை
வளர்த்  திருந்தவிப்  பண்பில்  தாயே”  (புறம்.336) என்றும் கூறுதல்
காண்க.

நுங்கோ  யாரென வினவின், எங்கோ சேரலாதன்; அவன் கண்ணி
வாழ்க,     அவன்    பகைவர்    மாறிய    வினைவாய்ப்பறியலன்,
பொய்ப்பறியலன்,   அட்டு   மலர்   மார்பன்,  கோடா  நெஞ்சினன்,
வயிறுபசி கூர ஈயலன்,அதனால்,  அதனை  யீன்ற தாய் வயிறு மாசிலீ
இயர் என  இயைத்து முடித்துக் கொள்க. 

“இதனாற்     சொல்லியது அவன்றன் செல்வப்பொலிவு கண்டு, நீ
யாருடைய  பாணன்  என்று  வினவியாற்கு,  யான்  இன்னாருடையே
னென்று  சொல்லி  முடிக்க,  அவன்  குணங்கள் இன்ன எனக் கூறிப்
பின் அவனை வாழ்த்தி முடித்தவா றாயிற்று” என்பது பழையவுரை.

இருமுந்நீ   (2) ரெனவும், முரணியோ (3) ரெனவும், கடிமிளை (17)
யெனவும்    நெடுமதில்    (18)    எனவும்   எழுந்த   நான்கடியும்
வஞ்சியடியாகலான் வஞ்சித்தூக்கு மாயிற்று.

கனவினும் என்பது கூன்.


 மேல்மூலம்