முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
23. அலந்தலை யுன்னத் தங்கவடு பொருந்திச்
சிதடி கரையப் பெருவறங் கூர்ந்து
நிலம்பை தற்ற புலங்கெடு காலையும்
வாங்குபு தகைத்த கலப்பைய ராங்கண்
  5 மன்றம் போந்து மறுகுசிறை பாடும்
வயிரிய மாக்கள் கடும்பசி நீங்கப்
பொன்செய் புனையிழையொலிப்பப் பெரிதுவந்து
நெஞ்சுமலி யுவகைய ருண்டுமலிந் தாடச்
சிறுமகி ழானும் பெருங்கலம் வீசும்
  10 போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ
நின்னயந்து வருவேங் கண்டனம் புன்மிக்கு
வழங்குந ரற்றேன மருங்குகெடத் தூர்ந்து
பெருங்கவி னழிந்த வாற்ற வேறுபுணர்ந்
தண்ணன் மரையா வமர்ந்தினி துறையும்
  15 விண்ணுயர் வைப்பின காடா யினநின்
மைந்துமலி பெரும்புக ழறியார் மலைந்த
போரெதிர் வேந்தர் தாரழிந் தொராலின்
மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின்
மணன்மலி பெருந்துறைந் ததைந்த காஞ்சியொடு
  20 முருக்குத்தாழ் பெழிலிய நெருப்புற ழடைகரை
நந்து நாரையொடு செவ்வரி யுகளும்
கழனி வாயிற் பழனப் படப்பை
அழன்மருள் பூவின் றாமரை வளைமகள்
குறாஅது மலர்ந்த வாம்பல்
  25 அறாஅ யாணரவ ரகன்றலை நாடே.

     துறை - வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. பெயர் - ததைந்த காஞ்சி
(19)

     (ப - ரை) 1. அலந்தலையெனல் விகாரம்.

     15. விண்ணுயர் வைப்பின காடென்றது மரங்கள் விண்ணிலே
செல்ல வோங்கி.....................; மாறியுரைப்பாரு முளர்.

     19. ததைந்த காஞ்சியென்றது 1விளையாட்டுமகளிர் பலரும்
தளிரும் முறியும் தாதும் பூவும் கோடலாற் சிதைவுபட்டுக் கிடக்கின்ற
காஞ்சியென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'ததைந்த காஞ்சி' என்று
பெயராயிற்று.

     23-4. வளைமகள் குறாஅது மலர்ந்த ஆம்பலென்றது
விளையாட்டு மகளிர் குறுதற்கு எட்டாமையாலே மலர்ந்த
ஆம்பலென்றவாறு.

     குறாமலெனத் திரிக்க.

     குட்டுவ (10), போரெதிர் வேந்தர் தாரழிந்து ஓராலின் (17),
அவர் அகன்றலை நாடு (25) காடாயின (15); அதனை நின்னயந்து
வருவேம் கண்டனம் (11) எனக்கூட்டி வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக்
கூறியவாறாயிற்று.

     போரெதிர்வேந்தர் தாரழிந்து ஓராலின் (17), நாடு (25)
காடாயின (15) என எடுத்துச்செலவினை மேலிட்டுக் கூறினமையால்
2வஞ்சித்துறைப் பாடாணாயிற்று.

     (கு - ரை) 1. அலந்தலை = அலந்த தலை - இலையின்றி
வறிதாகிய தலை; "அலந்தலை வேலத்து" (பதிற். 39 : 12). உன்னம்
- இலவென்பர். கவடு - கிளை.

     2. சிதடி - சிள்வீடென்னும் வண்டு. வறம் - வறுமை.

     3. பைது-பசுமை. புலங்கெடு காலையும் - விளைநிலங்கள்
விளைவின்றிக் கெட்ட காலத்தும்.

     4. நரம்பை இழுத்துக்கட்டிய யாழ்முதலிய இசைக் கருவிகளைக்
கொண்டபையினை உடையராகி; கலம் - யாழ் முதலிய
இசைக்கருவிகள்.

     5. மன்றம் - பரிசிலர் தங்கும் பொது இடம். மறுகு சிறைபாடும்.
சென்று மீளும் பக்கமாகிய இசைத் துறைகளைப் பாடும்; மறுகு
சிறையென்றது ஆரோகண அவரோகணக் கிரமம் போன்ற ஓர் இசை
முறைபோலும்.

     6. வயிரிய மாக்கள் - கூத்தரும் பாணரும்; கடும்பசி - மிக்க
பசி.

     5-6. பாடுவார் மன்றம் நண்ணிமறுகு சிறை பாடுதல் : பதிற்.
29 : 8 - 9, 43 : 26 - 8.

     7. புனையிழை - அலங்கரிக்கப்பெற்ற ஆபரணம். இது
சேரனால் அணியப் பெற்றது.

     8. உண்டு மலிந்து ஆட - கள்ளையுண்டு மகிழ்ச்சி மிக்கு
ஆடுதலைச் செய்ய. உண்டாட்டு என்னும் சொல் இங்கே
அறிதற்குரியது.

     9 - 10. சிறிய அளவினையுடைய கள்ளுண்டு மகிழ்ச்சிபெற்ற
காலத்தும் பெரிய ஆபரணங்களை வழங்குகின்ற; சிறுசோறு,
பெருஞ்சோறு எனபன போலச் சிறியகள், பெரியகள் என
அளவுபற்றிக் கூறுதல் மரபு (புறநா. 235 : 1-2); கள்ளுண்டு மகிழும்
மகிழ்ச்சியை, மகிழ் என்று சொல்லுதல் வழக்காதலின், சிறுமகிழ்
என்றது சிறிய கள்ளுண்ட மகிழ்ச்சி என்பதைக் குறித்தது. கள்ளுண்ட
காலத்துப் பெருங்கொடை வழங்குதல் உபகாரிகளுக்கு இயல்பு.
இங்கே சிறுகள்ளுண்டு பெருங்கலம் வீசுதல் இயல்பாகவே அவன்
கொடையிற் சிறந்தவன் என்பதைப் புலப்படுத்தியது. "நாட்கள் ளுண்டு
நாண்மகிழ் மகிழின், யார்க்கு மெளிதே தேரீ தல்லே, தொலையா
நல்லிசை விளங்கு மலையன், மகிழா தீத்த விழையணி நெடுந்தேர்,
பயன்கெழு முள்ளூர் மீமிசைப் பட்ட மாரி யுறையினும் பலவே"
(புறநா. 123) என்பதும் அதன் உரை முதலியனவும் இக்கருத்தைத்
தெளிவுறுத்தும்.

     10. பொலந்தார் - பொன்னரிமாலை.

     1-10. நிலவளம் அற்ற வறுமைக்காலத்தும் சேரன்
பெருங்கொடை வழங்குவான் என்றபடி.

     11. நின் நயந்து-நின்னைக் காண விரும்பி. புல் மிக்கு -
அறுகம்புல் முதலியவை மிக வளரப்பெற்று.

     12. வழங்குநர் - வழிச்செல்வோர்.

     13. ஆற்ற - வழிகளையுடைய. ஏறு புணர்ந்து -
ஆண்மரையோடு கூடி. ஆற்ற (13) காடாயின (15) என்க.

     14. அண்ணல் மரையா - தலைமையையுடைய மரையா.
அமர்ந்து - விரும்பி.

     16. மைந்து மலி பெரும் புகழ் - வன்மையினால் மிக்க பெரிய
புகழை. அறியாராய் மலைந்த என்க.

     17. போர் எதிர் வேந்தர் - போரை ஏற்றுக்கொண்ட அரசர்.
தார் அழிந்து ஓராலின் - தூசிப்படை கெட்டொழிய நீங்குதலால்.

     18-9. மருது இமிழ்ந்து - மருதமரம் தன்னிடத்தே பறவைகள்
ஒலிக்க; இமிழ்ந்து - இமிழ; எச்சத்திரிபு. மருதுமலி பெருந்துறை:
"துறைநணி மருதமேறி" (பதிற். 27 : 6); "உயர்சினை மருதத்
துறையுறத் தாழ்ந்து", "துறைநணி மருதத்து" (புறநா. 243 : 6, 344 : 3).
நளியிரும் பரப்பின் - செறிந்த பெரிய பரப்பினையுடைய. ததைந்த -
சிதைந்த. காஞ்சி - காஞ்சியென்னும் மரம்.

     20. முருக்கு தாழ்பு எழிலிய - முள்ளுமுருங்கையின் பூக்கள்
நீரிலே தங்குதலால் அழகு பெற்ற. நெருப்பு உறழ் அடைகரை -
நெருப்பை ஒத்த நீரை அடைந்த கரையில். முள்ளுமுருங்கையின்
பூவிற்கு நெருப்பு உவமை. "பொங்கழன் முருக்கி னொண்குரல்"
(அகநா. 277 : 17)

     21. நந்து - சங்கு

     22. பழனப் படப்பை - பொய்கையை அடுத்த
விளைநிலத்திலுள்ள.

     23. அழல் மருள் - நெருப்பை ஒத்த. தாமரைப் பூவிற்கு
நெருப்பு உவமை: பதிற், 19 : 20, குறிப்புரை. பூவின் தாமரை :
முதலுக்கேற்ற அடை.

     24. குறாஅது - பறிக்கப்படாமல்.

     23-4. தாமரையும் ஆம்பலும்.

     25. அறாஅ யாணர் - இடையறாத புதிய வருவாயையுடைய,
அகன்றலை நாடு............அகன்ற இடத்தையுடைய நாடுகள் (3)

     (பி - ம்) 15. காடாயினவே.


     1மகளிர் காஞ்சி கொய்தல்: "கொய்குழை யகைகாஞ்சித்
துறையணி நல்லூர"
(கலித். 74 : 5)

     2பதிற். 22, உரை.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

3. ததைந்த காஞ்சி
 
23.அலந்தலை யுன்னத் தங்கவடு பொருந்திச்
சிதடி கரையப் பெருவறங் கூர்ந்து
நிலம் பைதற்ற புலங்கெடு காலையும்
வாங்குபு தகைத்த கலப்பைய ராங்கண்
 
5மன்றம் போந்து மறுகுசிறை பாடும்
வயிரிய மாக்கள் கடும்பசி நீங்கப்
பொன்செய் புனையிழை யொலிப்பப் பெரிதுவந்து
நெஞ்சுமலி யுவகைய ருண்டுமலிந் தாடச்
சிறுமகி ழானும் பெருங்கலம் வீசும்
 
10போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ
நின்னயந்து வருவேங் கண்டனம் புன்மிக்கு
வழங்குந ரற்றென மருங்குகெடத் தூர்ந்து
பெருங்கவி னழிந்த வாற்ற வேறுபுணர்ந்
தண்ணன் மரையா வமர்ந்தினி துறையும்
 
15விண்ணுயர் வைப்பின காடா யினநின்
மைந்துமலி பெரும்புக ழறியார் மலைந்த
போரெதிர் வேந்தர் தாரழிந் தொராலின்
மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின்
மணன்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு
 
20முருக்குத்தாழ் பெழிலிய நெருப்புற ழடைகரை
நந்து நாரையொடு செவ்வரி யுகளும்
கழனி வாயிற் பழனப் படப்பை
அழன்மருள் பூவின் றாமரை வளைமகள்
குறாஅது மலர்ந்த வாம்பல்
 
25அறாஅ யாணரவ ரகன்றலை நாடே.
 

துறை  : வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு.
வண்ணம் : ஒழுகுவண்ணம்.
தூக்கு  : செந்தூக்கு.
பெயர்  : ததைந்தகாஞ்சி. 

 4 - 10. அலந்தலை.............குட்டுவ.

உரை : அலந்தலை    உன்னத்து     அங்கவடு   பொருந்தி  -
இலையில்லாமல்  உலர்ந்த  தலையினையுடைய  உன்ன மரத்தின் சிறு
சிறு   கிளைகளைப்  பொருந்தி  யிருந்து;  சிதடி  கரைய  -  சிள்வீ
டென்றும்  வண்டுகள் ஒலிக்க; பெரு வறம் கூர்ந்து - பெரிய வற்கடம்
மிகுதலால்  நிலம்  பசுமையற்ற;  புலம்  கெடு  காலையும் - வயல்கள்
உலர்ந்து கெட்டகாலத்தும்;   கலம்  வாங்குபு   தகைத்த பையர் -
இசைக்    கருவிகளைத்    தொகுத்துக்     கட்டிய     பையினை
யுடையராய்;   மன்றம்    போந்து -    ஊர்  மன்றத்தை  யடைந்து; 
ஆங்கண்    மறுகு     சிறை    பாடும்     வயிரிய      மாக்கள்
-  அவ்விடத்தே  தம்  இசைக்  கருவிகளைச்  செம்மையுறப் பண்ணி
ஊரிடத்து   மறுகுகளின்  சிறைக்கண்ணே  நின்று  பாடும்  கூத்தரும்
பாணருமாகிய  பரிசிலர்கள்;  கடும் பசி நீங்க உண்டு மலிந்து - தமது
மிக்க  பசி  நீங்குமாறு  உண்பனவுண்  டமைந்து;  பொன் செய்புனை
யிழை  யொலிப்ப  -  பரிசிலாகப்  பெற்ற  பொன்னாற் செய்யப்பட்ட
அழகிய  இழைகள்  ஒலிக்குமாறு;  நெஞ்சு  மலி  உவகையர்  பெரிது
உவந்து  ஆட  - நெஞ்சு நிறைந்த உவகையினை யுடையராய் மிகவும்
மகிழ்ந்து  கூத்தாட;  சிறு  மகிழானும்  -  தான் நறவு சிறிதே யுண்டு
அதனாற் பிறந்த சிறு மகிழ்ச்சியெய்திய போதும்; பெருங் கலம் வீசும்
-    பெரு    விலையினையுடைய    அணிகலன்களை    வழங்கும்;
போரடுதானைப்  பொலந்தார்க் குட்டுவ  -  போரிலே  வெல்லுகின்ற
தானையினையும்    பொன்னாற்   செய்த    மாலையினையுமுடைய
குட்டுவனே எ - று.

தழங்கு    குரல், தழங் குரல் என வருதல் போல, அலந்த தலை
அலந்தலை யென வந்தது; “அலந்தலை யிரத்தி” (புறம். 325) என்றும்
“அலந்தலை  வேலம்”  (பதிற்.  39)  என  இந்  நூலுள்ளும் வருதல்
காண்க.  பழையவுரைகாரரும், “அலந்தலை யெனல் விகாரம்” என்பர்.
பல்லாறாகக்  கிளையும் கவடும் கொண்டு, கணுக்கடோறும் பொருக்கும்
குழியும்  பெற்றுப்  பல்வகைப்  பூச்சிகள்  பொருந்தி  யிருத்தற்கேற்ற
அமைதியுடையதாதலால்,   “உன்னத்து      அங்கவடு   பொருந்திச்
சிதடி”    கரைவதாயிற்      றென்க.      சிள்     வீடு  கறங்கும்
ஓசை    வண்டிசைபோல்    இன்பந்    தருவதன்மையின்,   “சிதடி
கரைய”   என்றார்.  சிதடி  -  சிள்வீ  டென்னும்  வண்டு.  பெருவற
மெனவே  சிற்றுயிரும்  உணவு  பெறாது  வருந்தும்  கால  மென்பது
பெற்றாம்.  கூர்ந் தென்னும் வினையெச்சம் காரணப் பொருட்டு. நிலம்
பைதற்ற காலை யென் றொழியாது புலங் கெடு காலை யென்றது, மழை
யின்மையால்    வற   முண்டாக   நிலம்   பசுமையற்றதே   யன்றி,
நிலத்திடத்தே  கிணறுகள் எடுத்து நீர் இறைத்து உழவு செய்வார்க்கும்
கிணறுகள்  நீர்  வற்றி  விடுதலால் புலங்களும் திண்மையுறக் காய்ந்து
உழவுக் கமையா வாயின என்பது உணர்த்துதற்கு.
 

வாங்குதல்,    சேரத் தொகுத்துக் கொள்ளுதல்; “கல்சேர்பு ஞாயிறு
கதிர்வாங்கி   மறைதலின்”  (கலி.  134)  என்றாற்  போல.  வழிநடை
எளிதிலமைவது   குறித்து   எல்லா  இசைக்கலங்களையும்  பைக்குள்
வைத்துக்   கட்டிச்  சுமந்து  செல்ப  வாதலால்,  “வாங்குபு  தகைத்த
கலப்பையர்”  என்றார்.  இசைக்  கருவிகளை  இவ்  வயிரியர் சுமந்து
செல்லும்  திறத்தை  ஆசிரியர்  பரணர், “வணரமை நல்யா ழிளையர்
பொறுப்ப,   பண்ணமை   முழவும்  பதலையும்  பிறவும்,  கண்ணறுத்
தியற்றிய தூம்பொடு சுருக்கிக், காவில் தகைத்த துறைகூடு கலப்பையர்”
(பதிற்.  41)  என்பது  காண்க.  வயிரிய மாக்கள், கூத்தர். இக் கூத்தர்
முதற்கண் ஊர்மன்றத்தை யடைந்து தம் இசைக் கருவியை  இசைத்துத்
தம்  வரவு  தெரிவித்தல்  மரபாதலின்,  “மன்றம்  போந்து” என்றும்,
பின்பு    நெடிய      மாடங்கள்
 நிற்கும்     மறுகுகளில்    உள்ள 
சிறைகளிற்     புகுந்து     நின்று    பாடுபவாகலின்,   “மறுகுசிறை
பாடும்  வயிரிய     மாக்கள்”     என்றும்    குறித்தார்.     சிறை,
மாடங்களின்       முற்றத்தே        தாழ          விட்டிருக்கும்
முகப்பிடம்.   இதன்   இருமருங்கும்  சிறை  யெனப்படும்.  அதனை
யொட்டிப்  புறந்திண்ணையிருக்கும்.  “மன்றம்  படர்ந்து மறுகுசிறைப்
புக்குக்,  கண்டி  நுண்கோல்  கொண்டு  களம் வாழ்த்தும், அகவலன்”
(பதிற்.  43)  எனப்  பிறரும்  கூறுவது காண்க. மறுகு சிறை யென்பது
இசைத்  துறையுள் ஒன்று போலும் எனக் கருதுவாரு முளர்.  பழுமரம்
நாடிச் செல்லும் பறவை போலச் செல்வரை நாடிச் சென்று அவர்  தம்
செல்வத்தைப்    பெற்று    அமைந்திருப்பதை    விடுத்துத்   தாம்
பெற்றதனைப்   பெறார்க்கும்   பகுத்தளித்துப்   பிற்றைநாளிற்  றமது
நிலையை   நினையாது  வாழ்பவ  ராதலால்,  இவர்பால்  பசியுண்மை
இயல்பாயினும்  நிலம்  பைதற்ற புலங்கெடு காலை யாதலின் கடும் பசி
நிற்பதாயிற்று.   அது   நின்ற   காலத்தும்,   இவர்கள்  பசி   நீக்க
மொன்றையே  கருதுவதன்றிப்   பொருளீட்டம்  கருதாமை  தோன்றக்
“கடும்பசி நீங்க” என்றும்,அப் பசி  நிலையறிந்து குட்டுவன் பேருணவு
இனிதளித்தலால்,    “உண்டு   மலிந்து”   என்றும்,    “பெரிதுவந்து
நெஞ்சுமலியுவகைய”   ரென்றும்  கூறினர்.  பெரிதுவந்து  நெஞ்சுமலி
உவகையராய் ஆட என இயையும். உவகையராய் ஆடுகின்றனரெனவே
முன்னைய   பசித்   துன்பத்தை    மறந்ததே  யன்றி,  வரும்  நாள்
எய்தவிருக்கும்  இன்மையை  நினையாமையும்,   அப்போதைய  பசித்
துன்பம்  நீங்கப்  பெற்ற  மகிழ்ந்தமையும்  பெற்றாம்.  குட்டுவன் பசி
நீங்கப்  பேருணவு  தந்ததோடு  உயர்ந்த  அணிகலங்களும் நல்கினா
னென்பார்,   “பொன்செய்   புனையிழை   யொலிப்ப”  என்பதனாற்
குறித்தார்.

பாணர்    முதலியோர்க்குச் செய்யும் விருந்தின்கண் அவர்கட்குக்
கள்வழங்க,  வேந்தன்  களிப்பில்லாத  நறவினை  யுண்பன்; அதனை
யுண்ட   சிறு   களிப்பினால்  பெருங்கலம்  நல்குகின்றா  னென்பார்,
“சிறுமகிழானும்   பெருங்கலம்  வீசும்  குட்டுவ”  என்றார். வேந்தன்
உடனுண்ணும் இயல்பை,
 “தெண்கள்     வறிகூட்   டரிய லிரவலர்த்
தடுப்ப, தான்தரவுண்டநனைநறவு   மகிழ்ந்து”   (பதிற்.  43) என்றும்,
“நாட்கள்  ளுண்டு நாண்மகிழ்  மகிழின்,  யார்க்கு  மெளிதே  தேரீ
தல்லே,  தொலையாநல்லிசை   விளங்கு  மலையன்,  மகிழா  தீத்த
விழையணி   நெடுந்தேர்,பயன்  கெழு   முள்ளூர்  மீமிசைப்  பட்ட,
மாரியுறையினும் பலவே” (புறம்.  123) என்றும் சான்றோர் கூறுமாற்றா
லறிக. சிறுமகிழ், சிறு உண்டாட்டுச் சிறப்பென்றுமாம். 
 

புலங்கெடு   காலையும், சிறு மகிழானும் என நின்ற உம்மை சிறப்பு.
எனவே, பெருங்கலம் நல்காமைக்குரிய காலமும் காரணமும் உளவாகிய
வழியும்  அவற்றை   நோக்காது,  அடைந்தார்  பசித் துன்பம் நீக்கும்
பண்பு இச் சேரமான்பால் சிறந்து நிற்றல் இதனால் தெரிவித்தாராயிற்று.

18 - 25. மருதிமிழ்ந் தோங்கிய............நாடே.

உரை : மருது இமிழ்ந் தோங்கிய - மருத மரங்கள் தம் பால் பல
புள்ளினம்  தங்கி  யொலிக்க  வோங்கி நிற்கும்; நளி இரும் பரப்பின்
செறிவினையுடைய பெரிய பரப்பிடமாகிய; மணல் மலி பெருந் துறை -
மணல்  மிக்க  பெருந்துறைக்கண்;  ததைந்த  காஞ்சியொடு  சிதைந்த
காஞ்சி  மரங்களுடன்;  முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்புறழ் அடை
கரை  -  முருக்க  மரங்கள் தாழ்ந்து பூக்களைச் சொரிதலால் உயர்ந்த
நெருப்புப்  போலத்  தோன்றும்  அடைகரையில்;  நந்து நாரையொடு
செவ்வரி    உகளும்    -    சங்குகளும்   நாரைகளும்   செவ்விய
வரிகளையுடைய  நாரையினத்துப்  புள்ளினங்களும்  உலவும்;  கழனி
வாயில் பழனப் படப்பை கழனிகட்கு வாயிலாக வுள்ள பொய்கையைச்
சார்ந்த  விளைநிலத்தில்;  அழல் மருள் பூவின் தாமரை - நெருப்புப்
போலும்  பூவினையுடைய  தாமரையும்;  வளைமகள்  குறாது மலர்ந்த
ஆம்பல் - வளையணிந்த விளையாட்டுமகளிர் பறிக்காமையால் தானே
மலர்ந்த ஆம்பலும்; அறா அ யாணர் - நீங்காத புது வருவாயுமுடைய;
அவர்   அகன்றலை   நாடு   -   அப்   பகைவருடைய   அகன்ற
இடத்தையுடைய நாடுகள் எ - று.

பெருந்துறைத்    ததைந்த காஞ்சியொடு முருக்குத் தாழ்பு எழிலிய
அடைகரையில்   நாரையொடு   செவ்வரி   உகளும்  படப்பைக்கண்
தாமரையும்  ஆம்பலும் அறாயாணருமுடைய அவர் அகன்றலை நாடு
காடாயின  எனக்  கூட்டி முடிக்க. பகைவரது நாடு மருதவளஞ் சான்ற
மாண்புடைய   நாடு   என்பது,  “மருதிமி்ழ்ந்  தோங்கிய  நளியிரும்
பரப்பின்”   என்பதனாற்   பெறப்படும்.   கிளி   முதலிய  புள்ளும்
வண்டினமும்  இனிதிருந்து மகிழும் நன்மரம் என்றற்கு, “மருதிமிழ்ந்”
தென்றார்.  சிறப்புடைய  மருதினைக்  கூறினமையின்,  ஏனை மாவும்
தெங்கும்  பிறவும்  கொள்ளப்படும். இவற்றாற் செறிவும், இடப்பரப்பும்
ஒருங்குடைமை  தோன்ற, “நளியிரும் பரப்பெனச் சிறப்பித்துரைத்தார்.
பரப்பினையுடைய  பெருந்துறை  யென்றுமாம்.  முன்னைய முடிபிற்கு
இன்னென்பது    சாரியை.   பெருந்துறைப்   பரப்பில்   நிற்பனவும்
நிகழ்வனவும்  கூறி, அதன் நில வியல்பை மணல் மிக்க துறையென்று
கூறினார்.
 

மாவும்     மாக்களும் வழங்குதலால் பூ முதலியனவின்றி மணலே
விளங்கித்   தோன்றுமாறு   காட்டுவார்,   “மணல்மலி  பெருந்துறை”
யென்றார்.  காஞ்சியும்  முருக்கமரம்  போலத்  தாழ  நின்று  மாலை
போலப்    பூக்கம்   இயல்பிற்றாதலின்,   அதன்   பூவும்   தளிரும்
விளையாட்டு  இள  மகளிரால்  பறிக்கப்படுதலால், “ததைந்த காஞ்சி”
யென்றும்,  முருக்கம் பூ அவ்வாறு கொள்ளப்படுவ தன்மையின்,  அது
வீழ்ந்து  கிடக்குமாறு  தோன்ற  “முருக்கத்தாழ் பெழிலிய நெருப்புறழ்
அடைகரை”  யென்றும்  கூறினார்.  ததைதல், சிதைதல்; “அருஞ்சமந்
ததைய  நூறி” (புறம். 18) என்றாற்போல. பழையவுரைகாரர், “ததைந்த
காஞ்சி  யென்றது,  விளையாட்டு  மகளிர்  பலரும்  தளிரும் முறியும்
தாதும்     பூவும்   கோடலாற்    சிதைவு    பட்டுக்    கிடக்கின்ற
காஞ்சியென்றவா”றென்றும்,  “இச்   சிறப்பானே  இதற்குத்   ததைந்த
காஞ்சி யென்று பெயராயிற்”   றென்றும் கூறுவர்.   அடைகரை துறை
யன்மையின்,     அங்கே முருக்கின்    கிளை    தாழ்ந்து பூக்களைச்
சொரிதலால்,  அப்  பூக்களே  பரந்து  கிடத்தலாலும் அவற்றின் நிறம்
நெருப்புப்போன்  றிருத்தலாலும், “நெருப்புறழ் அடைகரை” யென்றும்,
முருக்க  மரங்கள்  மிக  வோங்கி வளராது தாழ நின்று கிளை பரந்து
நெருப்பெனப்  பூத்துள்ள  பூக்களைச் சொரிதலால் அடைகரை  நீரும்
நெருப்பும்   தம்முள்   உறழ்ந்து   காட்சி   வழங்குவது  போறலின்
“முருக்குத்தாழ்  பெழிலிய நெருப்புற ழடைகரை” யென்றும் குறித்தார்.
முருக்கம்பூ  நெருப்புப்போல்வ  தென்பதனைப்  பிறரும், “பொங்கழல்
முருக்கினொண்குரன்  மாந்திச், சிதர் சிதர்ந் துகுத்த செவ்வி”  (அகம்.
277)  என்பர்.  நீர்  இடையறாமையின்  தமக்கு  வேண்டும் இரையை
நிரம்பப்   பெறுதலின்,  ஆக்கமுறும்  நாரை  யினத்துடன்  செவ்வரி
யென்னும் நாரை யினமும் கலந்துறையும் என்பார். “நந்து நாரையொடு
செவ்வரி  யுகளும்”  என்றார்;  “பொய்கை  மேய்ந்த செவ்வரி நாரை”
(புறம். 351) என்பதனால், செவ்வரி நாரையாதல் காண்க.

பழனம்     கழனிக்கு வாயில் போறலின்,  “கழனிவாயிற்  பழனம்”
என்றார்;  “வயலமர்  கழனிவாயிற்  பொய்கை”  (புறம்.  354)  எனப்
பிறரும் கூறுதல் காண்க. இனிப் பழனத்தின் வாயிலாகக் கழனிக்கு நீர்
பாய்தலின்   இவ்வாறு  கூறினா  ரென்றுமாம்.  பழனத்தைச்  சார்ந்த
படப்பைக்கண்  தாமரை  மிக்கிருத்தல்  தோன்றப் “பழனப்  படப்பை
யழன்மருள்  தாமரை”  யென்றார்.  படப்பை,  பழனத்தைச்   சார்ந்த
தோட்டக்கால்.   படப்பையில்  மலர்ந்த  தாமரைப்பூவைப்  பறித்துத்
தலையிற்   சூடி  அதன்  நாளத்தை  வளையாக  அணிந்து  மகளிர்
விளையாடுபவாகலின்,     அவ்வாறு    விளையாடும்    இளமகளை
“வளைமகள்”  என்றும்,  அவள்  பழனத்தில்  மலர்ந்த  ஆம்பலைப்
பறிக்கமாட்டாது  விடுப்ப  அது  தானே  மலரும்  என்பார்  “குறாது
மலர்ந்த   ஆம்பல்”   என்றும்  கூறினார்.  விளையாடும்  பருவத்து
இளமகளிரை    “வளையவ”    ரென்பது   பண்டையோர்  வழக்கு;
“வளைபவர் வண்டல்போல் வார்மணல் வடுக்கொள்” (கலி. 29) என்ற
விடத்து,     வளையவர்      என்றதற்கு        நச்சினார்க்கினியர்
“வளையினையுடைய   இளையோர்”   என்றுரைப்பது காண்க.  இவ்
வளைமகள்  குறுதற்  கெட்டுமளவி  லிருப்பின்,  நீரிடத்தே அதனை
மலரவிடாது    பறித்திருப்பள்   என்றவாறு,    பழையவுரைகாரரும்
“வளைமகள்     குறாஅது  மலர்ந்த ஆம்பல் என்றது, விளையாட்டு
மகளிர்  குறுதற்  கெட்டாமையாலே  மலர்ந்த  ஆம்பல்  என்றவாறு”
என்பர்.  இன்ன  புது நலங்கள் இடையறாத நாடுகள் என்றற்கு “அறா
அ யாணர்” என்றார்.
 

இனி,     அவர் நாட்டு இளையவர்  மலர்ந்த தாமரையைப் பயன்
கொண்டு  குவிந்த  ஆம்பலை  வாளாது விடுவ ரென்றது, செல்வத்திற்
சிறந்தாரைப்  பயன்கொண்டு மெலிந்தாரைப் புறக்கணித்தனர்; அதுவும்
அவர்   நாட்டழிவுக்குக்  காரணமா  மென்பது  கூறியதாகக்  கொள்க.
வளையோர்    மலர்ந்த   தாமரையைப்    பயன்கொண்டது   போல,
இந்நாட்டரசராகிய   பகை   வேந்தர்   நின்னை   வணங்கிப்  பயன்
கொள்ளாது,   மகளிர்  தமக்கெட்டாத  ஆம்பலைக்  குறாது  விட்டது
போலத்  தமக்  கெய்தலாகாத வென்றியை யெய்த முயன்று கெட்டனர்
என வேறோ ரேதுக் காட்டி நின்ற தெனினுமாம்.

11 - 17. நின்னயந்து.................ஒராலின்.

உரை : நின் மைந்து மலி பெரும் புகழ் அறியார் -நினது வலியால்
நிறைந்த புகழ் நிலையை யறியாராய்; போர் எதிர் வேந்தர் நின்னொடு
பொருதலை  யேற்று  எதிர்நின்  றழிந்த  பகைவேந்தர்; தார் அழிந்து
ஒராலின்  -  நின்  தூசிப்  படைக்  குடைந்து  ஓடுதலால்; வழங்குநர்
அற்றெனப்   புல்   மருங்கு   கெடத்  தூர்ந்து  -  மக்கள் போக்கு
வரவற்றபடியால்  புல் நிறைந்து சிற்றிடமுமின்றி முட்செடிகள் மண்டித்
தூர்ந்து;  பெருங்  கவின்  இழந்த  -  தமது பெரிய அழகை யிழந்த;
ஆற்ற  -  வழிகளையுடையவாய்; விண்ணுயர் வைப்பின - வானளாவ
உயர்ந்த   நெடுநிலை  மாடங்கள்  பொருந்திய  வூர்கள்;  அண்ணல்
மரையா  ஏறு  புணர்ந்துறையும் காடாயின - பெரிய காட்டுப் பசுக்கள்
ஏறுகளுடன்  கூடி  யுறையும்  காடுகளாயின;  நின்  நயந்து வருவேம்
கண்டனம்   -   நின்னைக்   காண்டலை   விரும்பிவரும்  யாங்கள்
அவற்றைக் கண்டேம் எ - று.

அகன்ற  நாடுகள், பெருங்கவின் இழந்த ஆற்றவாய்க் காடுகளாயின
வென்க.   மைந்து   -   வலிமை.  மைந்துடையார்க்கே  போர்ப்புகழ்
மிகவுண்டாகுமாதலின்,  “மைந்துமலி  பெரும்புகழ்”  என்றும், இதனை
முன்பறிந்தாரேல்  பகைவர் போரில் எதிர்தலைக் கருதியிரார் என்பார்,
“அறியார்   மலைந்த   போரெதிர்   வேந்தர்”   என்றும்  கூறினார்.
நின்னுடைய    அகப்படையும்   மூலப்படையும்   காணாது   தூசிப்
படையினை   யெதிர்ந்த   அளவிலே   ஆற்றாது  உடைந்தமையின்,
“தாரழிந்  தொராலின்” என்றார். தார் என்புழி நான்கனுருபு தொக்கது.
இனி,   தாரென்றது  பகைவரது  தூசிப்படையாக்கி,  பகைவர்  தமது
தூசிப்படை    யழிந்து    உடைந்தோடினமையின்   என்றுரைப்பினு
மமையும்.  தாரழிந்  தொராலின் என்றதற்கு, தாரும் குடையும் முரசும்
பிறவும்   இழந்தனரெனக்   கோடலுமொன்று.  எனவே,  நின்னுடைய
மைந்துமலி   பெரும்   புகழ்   அறியாது  பகைவர்  செய்த  குற்றம்
அவர்கட்கு   இக்   கேட்டைப்   பயந்ததோடு   அவர்  நாட்டையும்
பாழ்படுத்திற்  றென்பார், “அவர் அகன்றலை நாடு காடாயின” என்று
இரங்கிக் கூறினார்.
 

அறாஅ     யாணரால் பண்பட்டு, சிறந்த வளஞ் சுரந்த  நாடுகள்
இற்றைப்போதில்  மக்கள்  அனைவரும் வேறுநாடுகட்  ககன்றமையின்
வழக்கொழிந்தன  வென்பார்,  “வழங்குந ரற்றென” என்றும், அதனால்
வழிகள்  ஒதுக்கிடமின்றி  யாண்டும் புல்லும் முட்புதலும் செறிந்து எம்
மருங்கும்    மூடிக்கொண்டன    வென்பார்,   “புல்மிக்கு   மருங்கு
கெடத்தூர்ந்து”  என்றும்  குறித்தார்.  “பெருங்கவின்  இழந்த ஆற்ற”
எனவே,   முன்பு   அவ்வழியிடங்கள்   முழுதும்   நறும்   புனலும்
தண்ணிழலும்   பொருந்திய   பழகுடையவாயிருந்தனவென்றும்,  புல்
மிக்குள்ளவிடம்   நெல்   மிக்கும்,   வழங்குந  ரற்ற  வழி  எனவே,
இடையறவின்றி     மக்கள்     வழங்கும்     வழக்கு     மிகுந்தும்
விளங்கினவென்றும்   கொள்ளப்படும்.   கணவரொடு  கூடிக்  கற்புக்
கடம்பூண்ட   மகளிர்  இருந்த  அவ்விடங்களிலே  ஏற்றொடு  கூடிய
மரையா இனி துறையாநிற்கு மென்பார், “ஏறுபுணர்ந் தண்ணல் மரையா
அமர்ந்தினி  துறையும்”  என்றார்; மரையா, காட்டுப்பசு; “மலைத்தலை
வந்த  மரையான்  கதழ்விடை”  (மலைபடு. 331) என்றாற்போல. இனி,
மான்   பிணையென்று   கொள்வாருமுண்டு.   வானளாவ   உயர்ந்த
நெடுநிலை    மாடங்கள்    நின்ற    அந்    நாடுகள்   இப்போது
காடாயினவென்றலின்,     “விண்ணுயர்   வைப்பின      காடாயின”
என்றார்.      இனிப்        பழையவுரைகாரர்,       “விண்ணுயர்
வைப்பின  காடென்றது,       மரங்கள்      விண்ணிலே   செல்ல
வோங்கி நிற்கும் காடுகளாயின வென்றவா” றென்பர்.

இதுகாறுங்     கூறியது பெருவறங் கூர்ந்து புலங்கெடு  காலையும்
வயிரிய  மாக்கள்  உண்டு  மலிந்தாடப்  பெருங்கலம்  வீசும் குட்டுவ,
காஞ்சியொடு  முருக்குத்தாழ்  பெழிலிய  அடைகரைக்கண்  நாரையும்
செவ்வரியும்  உகளும்  படப்பையில்  தாமரையும் வளைமகள் குறாது
மலர்ந்த   ஆம்பலும்   அறாயாணருமுடைய   அகன்றலை  நாடுகள்
பெருங்கவின்  இழந்த  ஆற்றவாய், காடாயின; அவற்றை நின் நயந்து
வருவேம்  கண்டனம்  என்பதாம்.  இனி, பழையவுரைகாரர், “குட்டுவ,
போரெதிர்   வேந்தர்  தாரழிந்தொராலின், அவர்  அகன்றலை  நாடு
காடாயின;  அதனை  நின் னயந்து வருவேம் கண்டனம் எனக் கூட்டி
வினை முடிவு செய்க” என்பர்.

“இதனாற்     சொல்லியது   :   அவன்   வென்றிச்   சிறப்புக்
கூறியவாறாயிற்று.   போரெதிர்  வேந்தர்  தாரழிந்  தொராலின்  நாடு
காடாயினவென   எடுத்துச்  செலவினை  மேலிட்டுக்  கூறினமையால்
வஞ்சித்துறைப் பாடா ணாயிற்று.”


 மேல்மூலம்