24. |
நெடுவயி
னொளிறு மின்னுப்பரந் தாங்குப்
புலியுறை கழித்த புலவுவா யெஃகம்
ஏவ லாடவர் வலனுயர்த் தேந்தி
ஆரரண் கடந்த தாரருந் தகைப்பிற் |
5 |
பீடுகொண்
மாலைப் பெரும்படைத் தலைவ
ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்தல்
ஈத லேற்றலென் றாறுபுரிந் தொழுகும்
அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி
ஞால நின்வழி யொழுகப் பாடல்சான்று |
10 |
நாடுடன்
விளங்கு நாடா நல்லிசைத்
திருந்திய வியன்மொழித் திருந்திழை கணவ
குலையிழி பறியாச் சாபத்து வயவர்
அம்புகளை வறியாத் தூங்குதுளங் கிருக்கை
இடாஅ வேணி யியலறைக் குருசில் |
15 |
நீர்நிலந்
தீவளி விசும்போ டைந்தும்
அளந்துகடை யறியினு மளப்பருங் குரையைநின்
வளம்வீங்கு பெருக்க மினிதுகண் டிகுமே
உண்மருந் தின்மரும் வரைகோ ளறியாது
குரைத்தொடி மழுகிய வுலக்கை வயின்றோ |
20 |
றடைச்சேம்
பெழுந்த வாடுறு மடாவின்
எஃகுறச் சிவந்த வூனத் தியாவரும்
கண்டுமதி மருளும் வாடாச் சொன்றி
வயங்குகதிர் விரிந்து வானகஞ் சுடர்வர
வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி |
25 |
பயங்கெழு
பொழுதோ டாநிய நிற்பக்
கலிழுங் கருவியொடு கையுற வணங்கி
மன்னுயிர் புரைஇய வலனேர் பிரங்கும்
கொண்டற் றண்டளிக் கமஞ்சூன் மாமழை
காரெதிர் பருவ மறப்பினும் |
30 |
பேரா
யாணர்த்தால் வாழ்கநின் வளனே. |
துறை
- இயன்மொழி வாழ்த்து. வண்ணம் -
ஒழுகுவண்ணம். தூக்கு -சந்தூக்கு. பெயர் - சீர்சால் வெள்ளி
(24)
(ப
- ரை)
4 - 5. தாரருந் 1தகைப்பிற் பீடுகொண்
மாலைப்
பெரும் படையென்றது தார்ப்படைக்கு அழித்தற்கரிய மாற்றார்
படைவகுப்பிலே வென்றிசெய்து பெருமைகொள்ளும் இயல்பையுடைய
அணியாய் நிற்கும் பெருபடை யென்றவாறு.
6.
அவை பிறர்ச்செய்தலென்புழிப் பிறரையென விரியும்
இரண்டாவதனை அவை செய்தலென நின்ற
செய்தலென்னந்தொழிலைப் போந்த பொருளாற் செய்வித்தலென்னும்
தொழிலாக்கி அதனோடு முடிக்க.
12.
குலையழிபு அறியாச் சாபமென்றது போர்வேட்கையான்
இன்ன பொழுது போருண்டாமென்று அறியாதே எப்பொழுதும்
நாணியேற்றியே கிடக்கும் வில்லென்றவாறு.
13.
அம்பு களைவறியாவென்றது போர்வேட்கையான்
எப்பொழுதும் கையினின்றும் அம்பைக் களைதலறியாவென்றவாறு.
தூங்கு துளங்கு இருக்கையென்றது படை 2இடம்படாது செறிந்து
துளங்குகின்ற இருப்பென்றவாறு.
14.
இடா ஏணி - அளவிடப்படாத எல்லை. இயலென்றது
பாசறைக்குள்ள இயல்பை; பாசறை அறையெனத் தலைக்குறைந்தது.
18.
உண்மாரும் தின்மாருமென்பன குறுகி நின்றன;
உண்மாரையும் தின்மாரையுமென்னும் இரண்டாவது 3விகாரத்தால்
தொக்கது. அறியாதென்பதனை அறியாமலெனத் திரிக்க.
24-5.
வறிது வடக்கு இறைஞ்சி சீர் சால் வெள்ளி பயம்கெழு
பொழுதோடு ஆநியம் நிற்பவென்றது சிறிது வடக்கிறைஞ்சின புகழான்
அமைந்த வெள்ளி மழைக்குப் பயன்படும் மற்றைக் கோட்களுடனே
தான் நிற்கும் நாளிலே நிற்கவென்றவாறு.
4பொழுதென்றது
அதற்கு 5அடியாகிய கோளை.
வறிது
வடக்கிறைஞ்சியவென்னும் அடைச்சிறப்பான் இதற்கு
'சீர்சால் வெள்ளி' என்று பெயராயிற்று.
பெரும்படைத்தலைவ
(5), திருந்திழை கணவ (11) குருசில்
(14), நீர்நிலமுதலைந்தினையும் (15) அளந்து முடிவறியினும் பெருமை
அளந்தறி தற்கரியை (16); நின் செல்வமிக்க பெருமை இனிது
கண்டேம் (17); அஃது எவ்வாறு இருந்ததென்னின், வாடாச்சொன்றி
(22), மழை (28) காரெதிர் பருவ மறப்பினும் (29), பேரா யாணர்த்து;
அப்பெற்றிப்பட்ட நின்வளம் வாழ்க (30) என வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் பெருமையும் கொடைச்சிறப்பும்
கூறி வாழ்த்தியவாறாயிற்று.
(கு-ரை)
1. உயர்ந்த ஆகாயத்திடத்தே விட்டு விளங்கம்
மின்னல் பரந்தாற்போல்.
2.
புலித்தோலாற்செய்த உறையினின்றும் நீக்கிய புலால்
நாற்றத்தை யுடைய வேலை (பதிற். 19 4)
1-2.
வேலுக்க மின்னல் உவமை; புறநா. 42 : 4.
3.
ஏவல் ஆடவர் - அரசனது ஏவலிற் செல்லும் வீரர்கள்.
வலன் உயர்த்து-வலப்பக்கத்தே உயரத்தூக்கி; வெற்றிகளத்தே
தூக்கி எனலுமாம்; "வலவயி னுயரிய" (முருகு.
152) என்ற விடத்து
நச்சினார்க்கினியர் 'வெற்றிக்களத்தே
எடுத்த' என உரை எழுதினர்.
"அடுகளத் துயர்கநும் வேலே" (புறநா. 58 :
29) என்பதில்
போர்க்களத்தில் வேலுயர்த்த்லைக் கூறல் காண்க.
4-5.
ஆரரண்கடந்த - பிறரால் அழித்தற்கரிய பகைவர்
அரணங்களை வென்ற. தூசிப்படையால் அழித்தற்கரிய பகைவரது
அமைப்பின் கண் வெற்றியாற் பெருமையைக்கொண்ட. தகைப்பு
என்றது இங்கே அணிவகுப்பை.
மாலை - இயல்பு (தொல். உரி, 15),
ஏந்தியென்னும் சினைவினை கடந்த என்னும் முதல் வினையோடு
முடிந்தது.
6.
ஓதல் - வேதத்தை ஓதுதல். வேட்டல் - யாகம் செய்தல்.
அவை பிறர்செய்தலாவன ஓதுவித்தலும் வேட்பித்தலும்.
7.
ஏற்றல் - கொள்ளத்தகும் பொருளைப் பெற்றுக்கொள்ளுதல்.
ஆறு புரிந்து - ஆறு தொழில்களைச் செய்து.
8.
அறம்புரி அந்தணர் - தருமத்தை விரும்புகின்ற அந்தணர்;
"அந்தண ரென்போ ரறவோர்" (குறள். 30).
அந்தணர்பாற் பணிவான
வார்த்தைகளைச் சொல்லி; "பார்ப்பார்க் கல்லது பணிபறியலையே"
(பதிற். 63 : 1) என்றலின் இங்ஙனம் கூறினார்.
வழி மொழிதல் :
புறநா. 239 : 6.
6-8.
அந்தணர் அறுதொழில் : "அறுவகைப்பட்ட பார்ப்பனப்
பக்கமும்" (தொல்.
புறத். 20); ‘’இருமூன் றெய்திய வியல்பினின்
வழாஅது ................இருபிறப் பாளர்’’ (முருகு.
177 - 82) அந்தணர்க்குக்
கூறிய பொதுத் தொழில்கள் ஆறென்புதற்கு மேற்கோள் தொல்.
புறத்.
20,ந ;
9.
பாடல்சான்று - புலவர் புகழும் பாடல்கள் அமைந்து; இது
நல்லிசைக்கு அடை.
10.
நாடு உடன் விளங்கும் - நாடு முழுவதும் விளங்கிய. நாடா
நல் இசை - ஐயுற்று ஆராயப்படாத உலகறிந்த நல்ல புகழையுடைய
(சிறுபாண். 82, ந.). பாடல் சான்றமையால்
புகழ் நாடுமுழுவதும்
விளங்குவதாயிற்று.
11.
திருந்திய இயல்மொழி - பிறர் திருத்த வேண்டாதே
இயல்பாகவே குற்றத்தினின்றும் நீங்கித் திருந்திய மொழி. திருந்திழை
கணவ : பதிற். 14 : 15, குறிப்புரை. இத்தொடர்
அனைத்தும் ஒரு
பெயராக நின்றது.
12.
நாணியை வளைத்தலினின்றும் இறக்குதலை அறியாத
வில்லையுடைய வீரர். "கொடுந்தொழில் வல்விற் குலைஇய கானவர்"
(முருகு. 194) என்ற பாடத்திற்கு உரை கூறும்பொழுது
குலைஇய
என்னும் சொல்லுக்கு வளைத்த என நச்சினார்க்கினியர்
பொருளுரைத் தாராதலின், இங்கே வளைத்தலினின்றும் நீங்குதலை
அறியாத வில் எனலுமாம்.
13.
தூங்கு - செறிந்த. துளங்கு இருக்கை - வீரர்களின்
மிகுதியால் அசைகின்ற இடங்களையுடைய.
14.
அளவிடப்படாத எல்லையாகிய இயல்பையுடைய
பாசறைக்கண் தங்கும் உபகாரியே. ஏணி - எல்லை (புறநா.
35 : 1)
12-4.
வயவர் அம்பு களைதலை அறியாத இருக்கையையுடைய
அறையென்க.
15-6.
ஓடு: எண்ஓடு. கடை அறியினும் - எல்லையை
அறிந்தாலும். அளப்பரியை; குரை : அசைநிலை. ஐந்து பூதங்களை
அளவுப்பெருமைக்கு எடுத்துரைத்தல் மரபு (பதிற்,
14 : 1 - 2,
குறிப்புரை).
17.
கண்டிகும் - கண்டோம்.
18.
வரைகோள் அறியாது - எல்லை அறியாது; தடைசெயப்
படுதலை அறியாமலெனலும் ஆம்.
'என்பார்
என்மரெனத் திரிந்தது, உண்மருந் தின்மரும் என்றாற்
போல' (சீவக. 1843, ந.)
19.
ஒலித்தலையுடைய பூண்மழுங்கிய உலக்கைகளையுடைய
இடந்தோறும்.
உணவுக்கு வேண்டிய நெல்லைக் குற்றிக் குற்றி
உலக்கையின் பூண் மழுங்கியது.
20.
இலையையுடைய சேம்பு மேலே வருகின்ற சமையல்
செய்தற்குரிய மடாவினையும். இலையென்றது முதலுக்கு அடை.
சேம்பு என்றது இங்கே உணவுக்குப் பயன்படும் அதன் தண்டையும்
கிழங்கையும் அவற்றை வேகவைத்தலின் மேலே எழுந்தன. ஆடு -
அடுதல். மடாவென்பது மிடா வெனவும் வழங்கும்.
21.
அரிவாள் செத்தும் பொருட்டுப் பட இரத்தத்தாற் சிவந்து
தோற்றும் இறைச்சியையும் உடைய.
22.
வாடாச்சொன்றி - என்றும் குறைவுபடாத உணவு. சொன்றி
யென்றது இங்கே உணவுப் பொதுவினைக் குறித்தது.
18-22.
"யாவர்க்கும், வரைகோ ளறியாச் சொன்றி" (குறுந்.
233 : 5 - 6)
23.
சுடர்வர - விளங்க. "விரிகதிர் வெள்ளி" (சிலப்.10
: 103).
ஆதலின் இங்ஙனம் கூறினார்.
24.
வறிது - சிறிதளவு. வடக்குத்திசையின் கண்ணே தாழ்ந்த
சிறப்புச் சான்ற வெள்ளியென்னும் கோள். மழைக் கோளாகிய
வெள்ளி வடக்கிறைஞ்சின் மழையுண்மையும், தெற்கெழுந்தால்
மழையின்மையும் நேரும்; 'விளங்குகின்ற வெள்ளியாகிய மீன் தான்
நிற்றற்குரிய வடதிசையில் நில்லாமல் தென்றிசைக் கண்ணே
போகினும்' (பட்டினப். 1 - 2, ந.) என்பதையும்
மதுரைக். 108
உரையின் அடிக் குறிப்பையும் பார்க்க. மழை பெய்தற்குக்
காரணமாதலின் சீர்சால் வெள்ளியென்று சிறப்பித்தார்.
வறிதென்னும்
உரிச்சொல் சிறிதென்னும் குறிப்புணர்த்தும்
(தொல். உரி. 38, ந.)
25.
பயன்பொருந்திய மற்றைக் கோள்களோடு தனக்குரிய நல்ல
நாளிலே நிற்க.
24-5.
"நிலம்பயம் பொழியச் சுடர்சினந் தணியப், பயங்கெழு
வெள்ளி யாநிய நிற்ப" (பதிற். 69 : 13
- 4)
26.
கலங்கி வருகின்ற நீர்முதலிய தொகுதியோடு பக்கத்திற்
பொருந்த இறங்கி; மழை அமரர்கண் முடியும் ஆறில் ஒன்றாதலின்
(தொல் புறத். 26, ந.) கையினால் மிக
வணங்க எனலுமாம்; வணங்கி
- வணங்க.
27.
உலகில் நிலைபெற்ற உயிர்கள் உயரும் பொருட்டு
வானத்தில் வலமாக எழுந்து முழங்கும்.
28.
கொள்ளுதலையுடைய தண்ணிய துளிகளாகிய நிறைந்த
சூலையுடைய கரியமேகத்தின் மழை.
29.
காரை எற்றுக்கொள்ளும் கார்காலத்திற் பெய்தலை
மறந்தாலும்.
30.
மாறாத புதுவருவாயையுடையது. வளன் - செல்வச் சிறப்பு.
சொன்றி (22) பேராத யாணர்த்து (30) என்க.
நின்
வளத்தின் மிகுதியைக் கண்டோம்; அது பேரா யாணர்த்து;
அவ்வளன் வாழ்கவென வாழ்த்தினார். (4)
1தகைப்பு
என்பது கட்டப்பட்ட மாளிகைக்கு ஆவதுபோல
இங்கே வகுத்து அமைக்கப்பட்ட படையணிக்கு ஆயிற்று.
2இடம்படாது
- இடம்பற்றாமல் (புறநா. 62
: 10 - 11)
3உயர்திணை
மருங்கின் ஒழியாது வரவேண்டு மாதலின்
(தொல். தொகைமரபு,
15) விகாரத்தால் தொக்கதென்றார்.
4பொழுதென்றது
இங்கே ஆகுபெயர்.
5அடி-
காரணம்.
|