முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
25.



மாவாடியபுல னாஞ்சி லாடா
கடாஅஞ் சென்னிய கடுங்கண் யானை

இனம்பரந்த புலம் வளம்பரப் பறியா
நின்படைஞர், சேர்ந்த மன்றங் கழுதைபோகி
  5 நீ, உடன்றோர் மன்னெயி றோட்டி வையா
கடுங்கா லொற்றலிற் சுடர்சிறந் துருத்துப்
பசும்பிசி ரொள்ளழ லாடிய மருங்கின்
ஆண்டலை வழங்குங் கானுணங்கு கடுநெறி
முனையகன் பெரும்பா ழாக மன்னிய
  10 உருமுறழ் பிரங்கு முரசிற் பெருமலை
வரையிழி யருவியி னொளிறுகொடி நுடங்கக்
கடும்பரிக் கதழ்சிற ககைப்பநீ
நெடுந்தே ரோட்டியபிற ரகன்றலை நாடே.
  

     துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு - செந்தூக்கும்
வஞ்சித்தூக்கும். பெயர் - கானுணங்கு கடுநெறி (8)
          
     (ப - ரை) 2. கடாச்சென்னியென்னும் ஒற்று மெலிந்தது.

     4. கழுதை போகியென்பதனைப் போகவெனத் திரிக்க.

     5. தோட்டி - காவல். 7. அழல் - காட்டுத்தீ.

     8. கானுணங்கு கடுநெறி யென்றது மழையின்மையாற் கானம்
தீந்த கடிய வழியென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, ‘கானுணங்கு கடுநெறி’ என்று
பெயராயிற்று.

     9. முனை- ஆறலைகள்வர் செய்யும் போர்.

     12. செலவின் கடுமை ஆற்றல் தோன்றப் பறவையாகக்
கூறுவான் உபசார வழக்குப்பற்றிச் சிறகு அகைப்பவென்றானென்க.

     முரசினொட (10) என ஒடு விரித்து அதனைத் தேரோட்டிய
(13) என்பதனோடு முடிக்க.

     நீ (12) தேரோட்டிய பிறர்நாடு (13) அழிந்தவாறு சொல்லின்,
நாடு நின் மா வழங்கினவயல் பின்பு கலப்பை வழங்கா (1); நின்
யானையினம் பரந்த வயல் பின் செல்வம் பரத்தலையறியா (3); நின்
படையாளர் சேர்ந்த மன்றம் கழுதையாலுழப்பட (4), நீ உடன்ற
அரசர்தம் நகரிகள் பின்பு தமக்கு அரணாகக் காவலாளரை
வைக்கப்படா (5); இவ்வாறு அழிந்தபடியேயன்றிச் சில்லிடங்கள்
கடுங்கால் ஒற்றலின் (6); அழலாடிய மருங்கினையுடைய (7)
கானுணங்கு கடுநெறியினையும் (8) முனைகளையுமுடைய அகன்ற
பெரும்பாழாக நின்றன (9) எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன்வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று.

     தேரோட்டிய பிறர்நாடு இவ்வாறு அழிந்ததென எடுத்துச்
செலவினை மேலிட்டுக் கூறினமையால் வஞ்சித்துறைப் பாடாணாயிற்று.

     'மாவாடிய' (1) என்பது முதலாக மூன்றும் வஞ்சியடியாக
வந்தமையால் வஞ்சித் தூக்குமாயிற்று.

     'நின்படைஞர்' (4) எனவும் 'நீ' (5) எனவும் அடிமுதற்கட் சீரும்
அசையும் கூனாய் வந்தன.

     (கு - ரை) 1. நின் படையிலுள்ள குதிரைகள் சென்ற
பகைவருடைய வயல்களில் கலப்பைகள் உழா.

     2-3. மதத்தைத் தலையிலேயுடைய வன்கண்மையையுடைய
யானைப்படை பரந்துசென்ற வயல்கள் வளம்பரவுதலை அறியா. கடாச்
சென்னியவென்பது மெலிந்தது. கடாஅஞ் சென்னிய யானை: "கமழ்
கடாஅத், தளறு பட்டநறுஞ்சென்னிய. . . வினைநவின்ற பேர்யானை"
(மதுரைக். 44 - 7)

     4. படைஞர் - போர்வீரர். மன்றம் - பொதுவிடம். கழுதை
போகி - கழுதைகள் செல்ல; பகைவர் நாட்டு ஊர்களிற்
கழுதைகளைக் கொண்டு உழுவித்தல் மரபாதலின் இங்ஙனம்
கூறினார்; "வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ்செய்
தனையவர் நனந்தலை நல்லெயில்" (புறநா. 15 : 2 - 3) என்பதையும்
அதன் அடிக்குறிப்பையும் பார்க்க.

     5. உடன்றோர் - போர்செய்த பகையரசரது. எயில்களில்
மக்கள் இன்மையின் காவல்கள் வைக்கப்படா.

     6. கடியென்னும் உரிச்சொல் மிகுதிப் பொருளில் வந்தது
(தொல். உரி. 87, தெய்வச்.) 7. அழலாடுதல்: பதிற். 15 : 7.

     6-7. மிகுதியான காற்று அடித்தலால் சுவாலை மிக்குக்
கோபித்துப் பசிய பிசிரையுடைய ஒள்ளிய நெருப்பு வழங்கிய
இடங்களையும்.

     8. ஆண்டலை யென்னும் புள் வழங்குகின்ற, மரங்களடர்ந்த
காடு தீந்து போன கடியவழிகளையும் உடைய. ஆண்டலை-
ஆண்மகன் தலை போன்ற தலையையும் புள்ளினைப் போன்ற
உடலையுமுடையதொரு பறவை. இது பாலைக்குரியது.

     9. ஆறலைப்பவர் போர்செய்யும் இடங்கள் அகன்ற பெரிய
பாழ் வெளிகளாக நிலைபெற்றன.

     10. இடியை ஒத்து ஒலிக்கும் வெற்றி முரசோடு.

     10-11. பெரியமலையின் பக்கத்தினின்றும் 'ஒழுகும் அருவியைக்
போல விளங்குகின்ற கொடி அசைய. கொடிக்கு அருவி: மதுரைக்
373 - 4, குறிப்பிரை.

     12. விரைவாகிய செலவையுடைய பறைவையை ஒப்ப. பரி -
செலவு கதழ் - விரையும். சிறகு - பறவை; ஆகுபெயர். மலர்த்த
வென்னும் பொருளையுடைய அகைப்பவென்னும் சொல் இங்கே
உவமவாசகமாக நின்றது.

     13. பிறரென்றது பகைவரை. 12-3. குறுந். 203 : 2 - 3. நாடு
(13) பாழாக மன்னிய (9)

     மு. இது புலவன் பொருள் நச்சிக் கூறலிற் பாடாண்
கொற்றவள்ளை (தொல். புறத். 34, ந.).

     (பி - ம்) 12. சிறைகைப்ப. (5)





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

5. கானுணங்கு கடுநெறி
 
25.மாவா டியபுல நாஞ்சி லாடா
கடாஅஞ் சென்னிய கடுங்கண் யானை
இனம்பரந்த புலம் வளம்பரப் பறியா
நின்படைஞர், சேர்ந்த மன்றங் கழுதை போகி
 
5நீ, உடன்றோர் மன்னெயில் தோட்டி வையா
கடுங்கா லொற்றலிற் சுடர்சிறந் துருத்துப்
பசும்பிசி ரொள்ளழ லாடிய மருங்கின்
ஆண்டலை வழங்குங் கானுணங்கு கடுநெறி
முனையகன் பெரும்பா ழாக மன்னிய
 
10உருமுறழ் பிரங்கு முரசிற் பெருமலை
வரையிழி யருவியி னொளிறுகொடி நுடங்கக்
கடும்பரிக் கதழ்சிற ககைப்பநீ
நெடுந்தே ரோட்டியபிற ரகன்றலை நாடே.
 

துறை  : வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு.
வண்ணம் : ஒழுகுவண்ணமும்சொற்சீர்வண்ணமும்.
தூக்கு  : செந்தூக்கும்வஞ்சித்தூக்கும்.
பெயர்  : கானுணங்கு கடுநெறி.

10 - 13. உருமுறழ்பு.............நாடே.

உரை : உரும்  உறழ்பு  இரங்கும் முரசின்- இடிபோல முழங்கும
முரசத்தோடு;    பெரு    மலை      வரையிழி       அருவியின்
ஒளிறு       கொடி நுடங்க -பெரிய மலையின் பக்கத்தே   இழியும்
அருவிபோல்  விளங்கும் துகிற்  கொடிகள்  அசைய;   கடும்   பரி
கதழ்      சிறகு       அகைப்ப   -    விரைந்த    செலவாகிய
சிறகுகளையுடைய குதிரையாகிய புள் பறந்தோட; நீ நெடுந்     தேர
ஓட்டிய  -  நீ   நின்   நெடிய  தேர்களைச்     செலுத்திய; பிறர்
அகன்றலை நாடு -    பகைவருடைய    அகன்ற  இடத்தையுடைய
நாடுகள் எ - று.

முரசின்     முழக்கிற்கு இடி முழக்கை யுவமங் கூறல் மரபு;  “படு
மழையுருமின்  இரங்கு முரசு”(புறம். 350) என்று ஏனைச் சான்றோரும்
கூறுதல்  காண்க.  முரசின் என்புழி ஒடு வுருபை விரித்து முரசினொடு
தேர்  ஓட்டிய  என இயைக்க. பழைய வுரைகாரரும், முரசினொடு என
ஒடு  விரித்து அதனைத் தேரோட்டிய என்பதனோடு முடிக்க” என்பர்.
இனி,      இன்னென்றதனை        அல்வழிச்      சாரியையாக்கி,
முழங்கவென    ஒருசொல்       வருவித்து,      முரசு    முழங்க,
கொடி           நுடங்க,      சிறககைப்ப   தேரோட்டிய    என
இயைத்து     முடிப்பினுமாம்.  தேரிற்    கட்டிய   துகிற்  கொடிக்கு,
பெருமலை    வரையிழி    அருவியை   யுவமங்    கூறினாராதலின்,
அதற்கேற்பத் தேரை “நெடுந்தேர்” என்றார். குதிரையின் செலவினைச்
சிற  கென்றமையின்,  அஃது ஆகுபெயராய்ப் புள்ளுக்காய்க் குதிரைக்
குவமையாயிற்று.  “புள்ளியற்  கலிமா”  (ஐங்.  486) எனச்  சான்றோர்
கூறுவது  காண்க.  அகைதல்,  மிகுதல்;  ஈண்டுச்  செலவின்  கடுமை
மிகுதிமேற்று. பழையவுரைகாரர், “செலவின் கடுமை யாற்றல் தோன்றப்
பறவையாகக்  கூறுவான்,  உபசார  வழக்குப்பற்றிச்  சிறகு  அகைப்ப
வென்றான்”  என்பர்.  பணிந்து திறை பகர்ந்து நட்புப்பெற்றொழியாது
இகலி   முரண்கொண்டு  பொருதழிந்தமையின்  பகைவரைப்  “பிறர்”
என்றார்.
 

1 - 9. மாவாடிய.........................மன்னிய.

உரை : மா ஆடிய புலம் நாஞ்சில்  ஆடா - நின்  குதிரைப்படை
சென்று  பொருத  வயல்கள் கலப்பைகள் சென்று உழக் கூடாதனவாய்
அழிந்தன;  கடா அஞ் சென்னிய யானையினம் பரந்த புலம் -  மதஞ்
சொரியும்  தலையும்  கடுத்த  பார்வையுமுடைய யானைப்படை பரந்து
நின்று  பொருத  வயல்கள்;  வளம்  பரப்பு  அறியா  - வளம் மிகப்
பயத்தல்  இலவா  யழிந்தன;  நின் படைஞர் சேர்ந்த மன்றம் -  நின்
காலாட்படைகள்  நின்று  பொருத  ஊர் மன்றங்கள்;  கழுதை போகி
(பாழாயின)   -  கழுதை  யேர்  பூட்டிப்  பாழ்  செய்யப்பட்டன;  நீ
உடன்றோர்    மன்னெயில்    தோட்டி    வையா   -   நின்னைப்
பகைத்தோருடைய பெரிய நகர் மதில்கள் வாழ்வா ரின்மையான் கதவு
முதலிய  காப்பு வைக்கப்படா தழிந்தன; கடுங் கால் ஒற்றலின் - மிக்க
காற்றெழுந்து  மோதுதலால்; சுடர் சிறந் துருத்து - சுடர்விட் டெழுந்து
மிக்குற்று  வெதுப்ப; பசும் பிசிர் ஒள்ளழல் ஆடிய மருங்கின் - பசிய
பொறிகளையுடைய  ஒள்ளிய  காட்டுத்  தீ பரந்த பக்கத்தோடு கூடிய;
ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி காட்டுக்கோழி யுலவும்
காடுகள் தீய்ந்து போன கடிய வழிகளும்; முனையகன் பெரும் பாழாக
மன்னிய  -  ஆறலைப்போர்  தங்கி  வழிச்  செல்வோரை வருத்தும்
முனையிடமுமாகிய அகன்ற பெரிய பாழிடங்களாய அழிவுற்றன எ -று.

போகி யென்னும் வினையெச்சத்தைப் பாழாயின வென ஒரு சொல்
வருவித்து   முடிக்க.   மருங்கினோடு   கூடிய   கடு  நெறியினையும்
முனையினை   யுமுடைய   அகன்  பெரும்  பாழ்  என   வியையும்.
படைக்குதிரைகள் பந்தி பந்தியாய்ச் சென்று வலமும் இடமும்  சுழன்று
பொருதலால் வயல்கள் உழவர் ஏரால் உழுது பயன்கொள்ளா வகையிற்
பாழ்பட்டன  வென்பார், “நாஞ்சில் ஆடா” என்றார்; ஆடல் முன்னது
பொருதலும்   பின்னது   உழுதலுமாம்.   யானைகளின்   காலடியால்
மென்புலமாகிய   வயல்   அழுந்தி  வன்னிலமாய்  வளம்   பயக்கும்
பான்மை  சிதைந்து போதலால். “யானையினம் பரந்தபுலம்  வளம்பரப்
பறியா”  என்றார்.  சென்னிய வென்னும் பெயரெச்சக் குறிப்பு  யானை
யென்னும் பெயர் கொண்டது. கடாச்சென்னி, கடாஞ் சென்னிய  வென
மெலிந்தது;   பழையவுரை, “கடாச்    சென்னி   யென்னு   மொற்று
மெலிந்த”  தென்று  கூறுகிறது.  நாடு  வயல்  நாஞ்சி  லாடா,  புலம்
பரப்பறியா   என்பன  கண்ணன்  கை  முறிந்தான்,  கண்ணொந்தான்
என்றாற்போலச்  சினைவினை  முதன்மேனின்றன. “படைஞர்  சேர்ந்த
மன்றம்   கழுதை   போகி”   யென்றதனால்,  படைவீரர்  ஊரிடத்து
மன்றங்களிற்  சென்று  தங்கி,  ஆண்டுத்  தம்மை  யெதிர்த்த  பகை
வீரரை  வென்று  அம்  மன்றங்களையும் கழுதை யேர் பூட்டி  யுழுது
பாழ்   செய்து  விட்டன  ரென்பது  பெற்றாம்.  இது  பண்டையோர்
மரபாதல்,   “வெள்வாய்க்  கழுதைப்  புல்லினம்  பூட்டிப்,  பாழ்செய்
தனையவர்  நனந்தலை  நல்லெயில்” (புறம்: 15) என்று பிற சான்றோர்
கூறுதலாலும் அறியப்படும்.  
 

பகைவருடைய    பெரிய காவலமைந்த நகரிகள் பகைவர்க்  கஞ்சி
வாழ்வோர்  வேறு  புலம் நோக்கிச் சென் றொழிந்தமையின், காவலும்
கவினுமிழந்து   கெட்ட   வென்றற்கு,  “நீ  உடன்றோர்  மன்னெயில்
தோட்டி  வையா” வென்றார். வையா: செயப்பாட்டு வினைப்பொருட்டு.
தோட்டி,   கதவு;   “நாடுடை  நல்லெயில்  அணங்குடைத்  தோட்டி”
(மதுரை.  693)  என்றாற் போல மதிலாகிய யானைக்குக் கதவு தோட்டி
போறலின், தோட்டி யென்ப. மதிலைக் காத்தற்கு வலிய  காவலாதலால்,
தோட்டி   காவற்பொருளுந்   தருவதாயிற்று;   “ஆரெயில்   தோட்டி
வௌவினை”  (பதிற்.  71)  என  இந்  நூலுள்ளும்  வருதல்  காண்க.
தம்மைப்  புரப்போர் போரில் அழிந்தமையின், நகர்க்கண்  வாழ்வோர்
அங்கே  யிராது வேற்றிடம் போய்விடுவர்; “வளனற நிகழ்ந்து வாழுநர்
பலர்பட” (பதிற். 49) எனப் பிறரும் உரைப்பர்.

இவ்  வண்ணம் நின் பகைவர் நாட்டின் பெரும்பகுதி யழிவுற்றதாக,
ஏனைக்  காடும்,  காடு  சார்ந்த நிலமும் மழையின்மையாலும்  பெருங்
காற்றெழுந்து  மோதுவதாலும்  தீப்பிறந்து சுடர்விட்டெரிய நிலமுற்றும்
வெந்து  கரிந்து கிடக்கின்ற தென்பார்,“கடுங்கா லொற்றலின் சுடர்சிறந்
துருத்துப்,  பசும்பிசிர்  ஒள்ளழல்  ஆடிய மருங்கின்” என்றார்.  பிசிர்,
தீப்பொறி,  ஆடுதல்,  பரந்தடுதல்.  இவ்விடங்களில் ஏனைப் புள்ளும்
மாவும்    வழங்குதல்    அருகினமையின்,    காட்டுக்   கோழிகளே
காணப்படுகின்றன வென்றற்கு, “ஆண்டலை வழங்கும்” என்றார். கடுங்
காற்றால்  தீ  சிறந்து  காட்டைச்  சுட்டழித்தமையின்,  கரிந்து கெட்ட
கூடிய  நெறிகளிடத்தே  கள்வர்  தங்கி அரசு காவலி்ன்மையால் ஆறு
செல்வோரை  யழிக்கும்  பெரும்  பாழாயினவென்பார்,  “முனையகன்
பெரும்  பாழாக  மன்னிய”  என்றார்;  “அத்தஞ் செல்வோர் அலறத்
தாக்கிக்,  கைப்பொருள்  வௌவுங்  களவேர் வாழ்க்கைக், கொடியோ
ரின்றவன்  கடியுடை வியன்புலம்” (பெரும். 39-41) என்பதனால்  அரசு
காவலுள்வழி,  முனையகன் பெரம் பாழாதல் இன்மை யறிக.  இவ்வாறு
காட்டுத்  தீயால்  வெந்து  கிடக்கும்  நிலத்திற்  செல்லும்  வழியைக்
கானுணங்கு   கடுநெறி   யென்றும்   நிற்க   நிழலும்   தண்ணென்ற
மண்ணுமின்றிச்  செல்வோர்க்கு  அச்சமும்  துன்பமுமே  பயக்குமாறு
தோன்ற நெறியைக் கானுணங்கு கடுநெறியென மிகுத்துரைத்தலின், இப்
பாட்டும்     இத்     தொடராற்    பெயர்பெறுவதாயிற்று.   இனிப்,
பழையவுரைகாரர்,  “கானுணங்கு கடுநெறியென்றது, மழை யின்மையாற்
கானம்  தீய்ந்த  கடிய  வழி  யென்றவா” றென்றும், “இச் சிறப்பானே
இதற்குக் கானுணங்கு கடுநெறி யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர்.
 

இதுகாறுங்     கூறியது,  நீ  தேரோட்டிச்  சென்றதனால்,   பிறர்
அகன்றலை   நாடுகள்,   நாஞ்சிலாடா.   வளம்   பரப்பறியா,  எயில்
தோட்டிவையா,   கடுநெறி   பெரும்பாழாக   மன்னிய   வென்பதாம்.
பழையவுரைகாரர்,   “நீ   தேரோட்டிய   பிறர்   நாடு  அழிந்தவாறு
சொல்லின்,  நாடு  நின் மா வழங்கின வயல் பின்பு கலப்பை வழங்கா;
நின் யானையினம் பரந்த வயல் பின் செல்வம்  பரத்தலையறியா,  நின்
படையாளர் சேர்ந்த மன்றம் கழுதையாலுழப்பட, நீ உடன்ற  அரசர்தம்
நகரிகள்   பின்பு   தமக்கு  அரணாகக்  காவலாளரை  வைக்கப்படா;
இவ்வாறு  அழிந்தபடியேயன்றிச்  சில்லிடங்கள்  கடுங்கா லொற்றலின்,
அழலாடிய    மருங்கினையுடைய   கானுணங்கு    கடுநெறியினையும்
முனைகளையுமுடைய அகன்ற பெரும் பாழாக நின்றன வெனக்  கூட்டி
வினைமுடிவு செய்க” என்பர்.

இதன்கண்     தேரும் கொடியும் முரசும் விதந்தோதி,   மாவாலும்
களிற்றாலும்  படைவீரராலும்  பகைவர்  நாடுகள்  அழிந்த   திறத்தை
விளக்கிக் கூறுதலின், அடுத்தூர்ந் தட்ட கொற்றமாயிற்று. இவ்வாறு பல
துறையும்  விரவிவரத்  தொடுத்தமையின்,  இப் பாட்டு வஞ்சித்துறைப்
பாடாணாயிற்று,  “தேரோட்டிய  பிறர்  நாடு  இவ்வாறு  அழிந்ததென
எடுத்துச்   செலவினை   மேலிட்டுக்  கூறினமையால்  வஞ்சித்துறைப்
பாடாணாயிற்”  றென்பது  பழையவுரை. “மாவாடிய வென்பது முதலாக
மூன்றும்  வஞ்சியடியாக  வந்தமையால்  வஞ்சித்தூக்கு மாயிற்று.  நின்
படைஞர்  எனவும்,  நீ  யெனவும்  அடிமுதற்கட்  சீரும்    அசையும்
கூனாய் வந்தன.”

இப்  பாட்டினாற்      சொல்லியது:    சேரமானது     வென்றிச
சிறப்பென்பது கூறியவாறாயிற்று.


 மேல்மூலம்