26. |
தேஎர்
பரந்தபுல மேஎர் பரவா
களிறா டியபுல நாஞ்சி லாடா
மத்துர றியமனை யின்னிய மிமிழா
ஆங்குப், பண்டுநற் கறியுநர் செழுவள நினைப்பின் |
5 |
நோகோ
யானே நோதக வருமே
பெயன்மழை புரவின் றாகிவெய் துற்று
வலமின் றம்ம காலையது பண்பெனக்
கண்பனி மலிர்நிறை தாங்கிக் கைபுடையூ
மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூரப் |
10 |
பீரிவர்
வேலிப் பாழ்மனை நெருஞ்சிக்
காடுறு கடுநெறி யாக மன்னிய
முருகுடன்று கறுத்த கலியழி மூதூர்
உரும்பில் கூற்றத் தன்னநின்
திருந்துதொழில் வயவர் சீறிய நாடே. |
இதுவுமது.
பெயர் - காடுறு கடூநெறி (11)
(ப
- ரை)
1. தேர்பரந்த புலம் ஏர் பரவாவென்றது ஒருகால்
தேர் பரந்த வயல் அத்தேர் பரந்த மாத்திரையாற் சேறாய்ப் பின்பு
உழுதற்கு ஏர் பரவாவென்றவாறு.
2.
களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடாவென்றது பன்றிகள்
உழுத 1கொல்லைத்தறை அவை உழுத மாத்திரையானே புழுதியாகிப்
பின்பு கலப்பை வழங்காவென்றவாறு.
3.
மத்து உரறிய மனை இன்னியம் இமிழாவென்றது மத்து
ஒலிக்கின்ற மனைகள் அம்மத்தொலியின் மிகுதியானே இனிய
இயங்களின் ஒலி கிளராவென்றவாறு.
8.
கட்பனியென்னும் ஒற்று மெலிந்தது.
10-11.
நெருஞ்சியின் அடர்ச்சியை நெருஞ்சிக்காடெனக் கூறிய
அடைச்சிறப்பான் இதற்கு,
'காடுறு கடுநெறி'
என்று பெயராயிற்று.
மூதூர்போல
(12) என உவம உருபு விரித்து, அதனை வயவர்
சீறிய (14) என்னும் வினையொடு முடிக்க. இனிப் போலுமென விரித்து
வயவர் சீறிய நாடெனலும் ஒன்று. இனி மூதூர்க்கூற்றமெனக் கூட்டிக்
கூற்றுவன் கொடுமை மிகுதி கூறலுமொன்று.
13.
உரும்பில் கூற்றென்பது 'பிறிதொன்றால் நலிவுபட்டு மனக்
கொதிப்பில்லாத கூற்றமென்றவாறு. 2உருப்பென்னும் ஒற்று
3மெலிந்தது.
நின்
(13) வயவர் சீறியநாடு அவ்வயவர் சீறுதற்குமுன்பு
இருக்கும்படி சொல்லின் (14). தேர் பரந்த புலம் ஏர் பரவா (1);
களிறாடிய புலம் நாஞ்சிலாடா (2); மத்து உரறிய மனை இன்னியம்
இமிழா (3); அவ்வாறு வளவியது இப்பொழுது காடுறு கடுநெறியை
உடைத்தாகா நின்றது (11); அதன் செழுவளத்தைப் பண்டு நற்கறியுநர்
நினைப்பின் (4) நோதக வரும்; நோவேன் யான் (5) என மாறிக்
கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக்
கூறியவறாயிற்று.
நின்
வயவர் சீறிய நாடு இவ்வாறு அழிந்ததென எடுத்துச்
செலவினை மேலிட்டுக் கூறினமையால் வஞ்சித்துறைப்பாடாணாயிற்று.
'தேஎர்பரந்த'
(1) என்பது முதலாக மூன்றடி வஞ்சியடியாக
வந்தமையால் வஞ்சித்தூக்குமாயிற்று.
'ஆங்கு'
(4) என்பது அடிமுதற் கூன்.
(கு
- ரை) 1 - 3. இவ்வடிகளில் பகைவர்நாட்டின்
பழையநிலை கூறப்படும்.
1.
புலம் - விளை நிலங்கள். பரவா - எதிர்மறை வினைமுற்று.
2.
களிறு - பன்றி; "கேழற் கண்ணுங் கடிவரை யின்றே"
(தொல். மரபு. 34). நாஞ்சில் - கலப்பைகள்;
பன்றிகள் உழுதமையால்
வயல்கள் பின்பு உழுதல் வேண்டாதனவாயின; ‘’கடுங்கட் கேழ லுழுத
பூழி, நன்னாள் வருபத நோக்கிக் குறவர், உழாஅது வித்திய பரூஉக்
குரற் சிறுதினை" (புறநா.168 : 4 - 6)
3.
மத்து உரறிய மனை - தயிர்கடையும் மத்துக்கள் ஒலித்த
வீடுகள்.இன்னியம் இமிழா - இனிய வாத்தியங்களின் ஓசைகள்
கேட்கப்படா.
4.
பண்டு நற்கு அறியுநர் - பழைய நிலைமையை நன்றாக
அறிபவர். நற்கு - நன்கென்பதன் விகாரம் (மலைபடு,
392, ந.)
4-5.
நினைப்பின் நோதக வரும் என்க. யான் நோகு - நான்
வருந்துவேன். ஓ : அசைநிலை.
6.புரவு
இன்றாகி - உலகத்தைக் காத்தல் இல்லையாகி.
வெய்துற்று வெம்மையுற்று.
7.
காலையது பண்பு வலம் இன்று என - சூரியனுடைய
வெம்மை நன்மையை யுடையதன்று என்று.
8.
கண்பனி மலிர்நிறை தாங்கி - கண்களில் பனிக்கின்ற
நீரைத்தாங்கி.
8-9.
கை புடையூ சிறுமை கூர - கைகளைப் புடைத்துத்
துன்பத்தை மிக அடைய.
10.
பீர் இவர் வேலி - பீர்க்கங்கொடி படர்ந்த
வேலியையுடைய; பாழ்மனையில் பீர்க்கங்கொடி படர்தல்: "ஊரெழுந்
துலறிய பீரெழு முது பாழ்", "முனைகவர்ந்து கொண்டெனக் கலங்கிப்
பீரெழுந்து, மனைபாழ்பட்ட" (அகநா. 167
: 10, 373 : 1 - 2).
பாழ்மனை நெருஞ்சி: "பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்துச்,
சிறுபூ நெருஞ்சியோடறுகை பம்பி" (பட்டினப்.
255 - 6); "பாழூர்
நெருஞ்சி" (புறநா. 155 : 4)
11.
மன்னிய - நிலைபெற்றன.
12.
முருகு உடன்று கறுத்த - முருகக்கடவுள் மாறுபட்டுக்
கோபித்த; முருகு - தெய்வத்தன்மை; முருகக்கடவுளுக்கு ஆகுபெயர்
(மதுரைக். 181, ந.). கலி அழி மூதூர் -
ஆரவாரம் அழிந்த பழைய
ஊரைப்போல.
13.
உரும்பு இல் கூற்றத்து அன்ன - பிறிதொன்றால் கொடுமை
இல்லாத கூற்றுவனைப்போன்ற.
14.
திருந்துதொழில் வயவர் - பின்னிடாத
போர்த்தொழிலையுடைய வீரர்; 'திருந்தடி - பிறக்கிடாத அடி'
(புறநா. 7 : 2, உரை). சீறிய நாடு - கோபித்து
அழித்த நாடுகள்.
வயவர்
சீறிய நாடு (14) சிறுமைகூர (9) நெருஞ்சிக் (10)
காடுறுகடு நெறியாக மன்னிய (11); அறியுநர் செழுவளம் நினைப்பின்
(4) நோதக வரும்; யான் நோவேன் (5) என முடிக்க.
(பி
- ம்.) 4 ஆங்கப். 7.வலனின்றம்ம. 9.நெலிவுடை
11.கடுநெறியாகு. (6)
1கொல்லைத்தறை-தரிசாய்க்
கிடந்த காடு.
2உருப்பு-வெம்மை;
நெருப்பெனச் சிவந்த வுருப்பவி ரங்காடு"
(அகநா. 11
: 2).
3திருந்துதொழில்
வயவரென்பது நோக்கி மெலிந்தது.
|