முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
27. சிதைந்தது மன்றநீ சிவந்தனை நோக்கலிற்
றொடர்ந்த குவளைத் தூநெறி யடைச்சி
அலர்ந்த வாம்ப லகமடி வையர்
சுரியலஞ் சென்னிப் பூஞ்செய் கண்ணி
  5 அரிய லார்கைய ரினிதுகூ டியவர்
துறைநணி மருத மேறித் தெறுமார்
எல்வளை மகளிர் தெள்விளி யிசைப்பிற்
பழனக் காவிற் பசுமயி லாலும்
பொய்கை வாயிற் புனல்பொரு புதவின்
  10 நெய்தன் மரபி னிரைகட் செறுவின்
வல்வா யுருளி கதுமென மண்ட
அள்ளற் பட்டுத் துள்ளுபு துரப்ப
நல்லெருது முயலு மளறுபோகு விழுமத்துச்
சாகாட் டாளர் கம்பலை யல்லது
  15 பூச லறியா நன்னாட்
டியாண ரறாஅக் காமரு கவினே.

     துறை - செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. பெயர் - தொடர்ந்த
குவளை (2).

     (ப - ரை) 2. தொடர்ந்த குவளை - ஆண்டுகள்தோறும்,
இட்டு ஆக்க வேண்டாது 1தொண்டு இட்டதே ஈடாக எவ்வாண்டிற்கும்
இடையறாது தொடந்துவரு மென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'தொடர்ந்த குவளை' என்று
பெயராயிற்று.

     மடிவையரென்பதனை (3) வினையெச்ச முற்றாக்கி, அதனைத்
தெள்விளி யிசைப்பின் (7) என்னும் வினையொடு முடிக்க.

     மகளிர் (7) தெறுமார் (6) இசைப்பின் (7), காவிற் பசுமயில்
ஆலும் (8) என்றது வயலிற் புகுந்து உழக்காதிருத்தற் பொருட்டு
அவ்வயற் புள்ளோப்பும்

     உழவர்மகளிர் அதனைக் கடியவேண்டித் தெள்விளியிசைப்பின்,
2இயவர் இயங்களின் ஒலிகேட்ட பழக்கத்தானே தன்னைக் கடிகின்ற
ஒலியையும் அவற்றின் ஒலியாகக் கருதி மயில் ஆலுமென்றவாறு.

     10. நெய்தல் மரபின் நிரை கட் செறுவென்றது நெய்தல்
இடையறாது பூக்கும் மரபினையும் நிரைத்த வண்டினையுமுடைய
செறுவென்றவாறு. 3கள்ளென்பது வண்டு.

     வல்வாயுருளி (11) அள்ளற்பட்டு (12) மண்ட (11) எனக் கூட்டுக.

     12. துள்ளுபுதுரப்பவென்றது சாகாட்டாளர் துள்ளித்
துரக்கையாலே யென்றவாறு.

     13. அளறுபோகு விழுமமென்றது அளற்றைக் கழியப் போகின்ற
காலத்து வருத்தமென்றவாறு.

     நன்னாட்டுக் (15) கவின் (16) நீ சிவந்தனை நோக்கலின்
சிதைந்தது (1) என வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக்
கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1. நீ சிவந்தனை நோக்கலின் - நீ கோபித்துப்
பார்த்தலினால். மன்ற சிதைந்தது - நிச்சயமாக அழிந்தது; மன்ற :
தேற்றப் பொருளில் வந்த இடைச்சொல்.

     2. இடையறாது மலருங் குவளையின் தூய புறவிதழொடித்த
மலரைக் கூந்தலிற் செருகி. முழுநெறி - புறவிதழொடித்த முழுப்பூ;
"தீநீர்ப் பெருங் குண்டு சுனைப்பூத்த குவளைக், கூம்பவிழ் முழுநெறி"
(
புறநா. 116 : 1 - 2). அதனை மகளிர் கூந்தலிலே செருகுதல்
வழக்கம்; "குவளைத், தேம்பா யொண்பூ நறும்பல வடைச்சிய, கூந்தல்"
(அகநா. 308 : 11 - 3)

     3. மலர்ந்த ஆம்பற்பூவின் அகவிதழால் அமைத்த தழையை
அணிந்தவராகி; மடிவை - தழையென்னும் ஆடை; "அகலு ளாங்க
ணம்பகை மடிவைக் குறுந்தொடி மகளிர்" (அகநாத. 226 : 3 - 4)
என்ற விடத்து 'இப்பாட்டினுள் மடிவையென்றது தழையை' என ஒரு
பழங்குறிப்பு உள்ளது. இங்கே 'ஆம்ப லம்பகை மடிவையர்' என்ற
பாடம் இருப்பின் ஓசையும் பொருளும் சிறக்கும். அம்பகை
மடிவையரென்பதற்கு ஒன்றற்கொன்று மாறாகத் தொடுத்த அழகிய
தழையாடையை யுடையாரெனப் பொருள் கொள்க; "அயவெள் ளாம்ப
லம்பகை நெறித்தழை, தித்திக் குறங்கி னூழ்மாறலைப்ப, வருமே
சேயிழை' (குறுந். 203 : 5 - 7) என்பதையும் அதன் உரை
முதலியவற்றையும் பார்க்க.

     4-5 சுழிந்த மயிரையுடைய தலையையும் பூவாற் செய்த
கண்ணியையும் கள்ளாகிய உணவையும் உடையராகிச் சுருதியோடு
இனிதே கூடுகின்ற வாத்தியத்தையுடையோர்; இவர் உழவர்.

     5-7. இயவரையுடைய துறையென்க. நீர்த்துறைக்கு அணித்தாக
உள்ள மருதமரத்தில் ஏறி; ஏறியவை மயில்கள். மயில்களை ஓட்டும்
பொருட்டு

     ஒளியையுடைய வளையையணிந்த மகளிர் தெளிந்த ஓசையைச்
செய்தால். துறைநணி மருதம் : பதிற். 23 : 18 - 9;புறநா. 243 : 6
- 7. 344 : 3.

     8. வயல்களை அருகிலுடைய சோலைகளில் பசிய மயில்
ஆடும். தம்மை ஓட்டும்பொருட்டு மகளிர் செய்யும் ஓசையைப்
பாட்டென மருண்டு ஆடின.

     6-8. மருதமேறி மயில் ஆலின. அவை நெற்கதிரை
உண்ணாதிருத்தற் பொருட்டு மகளிர் ஓசை செய்தனர்; "சென்நெ
லுண்ட பைந்தோட்டு மஞ்ஞை, செறிவளை மகளி ரோப்பலிற்
பறந்தெழுந்து, துறை நணி மருதத்திறுக்கு மூரொடு" (புகநா. 344: 1
- 3)

     9. பொய்கையின் நீர் வருதற்குரிய வாய்த்தலையும் அதன் கண்
நீர் வந்து மோதுகின்ற கதவினையும் உடைய.

     10. பண்டே தொடர்ந்துவந்த நெய்தற் பூக்களையும் வரிசையாக
உள்ள வண்டுகளையும் உடைய வயலில்.

     11. வலிய வாயையுடைய சக்கரம் விரைவிலே நெருங்க.
வாயென்றது சக்கரத்தின் பட்டத்தை.

     12. சேற்றிலே புதைந்து; புதைந்து மண்டவெனக் கூட்டுக.
துள்ளுபு துரப்ப - துள்ளிச் செலுத்துகையினாலே.

     13. நல்ல எருதுகள் முயலுகின்ற, சேற்றினின்றும் நீங்குகின்ற
துன்பத்தையுடைய.

     14. வண்டியை ஓட்டுவோரது முழக்கத்தையன்றி சாகாடு
வண்டி.

     12-4. "அள்ளற் றங்கிய பகடுறு விழுமம், கள்ளார் களமர்
பெயர்க்கு மார்ப்பே" (மதுரைக். 259 - 60) என்பதையும் அதன்
அடிக்குறிப்பையும் பார்க்க. 15. பூசல் - ஆரவாரம்.

     16. புதுவருவாய் இடையறாத விருப்பம் பொருந்திய அழகு.     

     நன்னாட்டுக்கவின் நீ சிவந்தனை நோக்கலின் சிதைந்து.

     (பி - ம்.) 6. துறையணி. 11. மண்டி. (7)


     1தொண்டு - தொன்று.

     2"தெருவி னார்ப்புறும் பல்லியந் தேர்மயில்" (கம்ப. ஆறுசெல்.
42)

     3"கள்ளின மார்த்துண்ணும்" (திருச்சிற். 295) என்பதன்
உரையில், 'கள்ளென்பது வண்டினுள் ஒரு சாதி யென்பாரும் உளர்'
என்று
பேராசிரியர் எழுதியது இங்கே கருதற்குரியது. தேனென்பது
வண்டுக்கும் தேனுக்கும் ஆதல்போல இதனையும் கொள்க.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

7. தொடர்ந்த குவளை
 
27.சிதைந்தது மன்றநீ சிவந்தனை நோக்கலின்
தொடர்ந்த குவளைத் தூநெறி யடைச்சி
அலர்ந்த வாம்ப லகமடி வையர
கரியலஞ் சென்னிப் பூஞ்செய் கண்ணி
 
5அரிய லார்கைய ரினிதுகூ டியவர்
துறைநணி மருத மேறித் தெறுமார்
எல்வளை மகளிர் தெள்விளி யிசைப்பிற்
பழனக் காவிற் பசுமயி லாலும்
பொய்கை வாயிற் புனர்பொரு புதவின்
 
10நெய்தன் மரபி னிரைகட் செறுவின்
வல்வா யுருளி கதுமென மண்ட
அள்ளற் பட்டுத் துள்ளுபு துரப்ப  
நல்லெருது முயலு மளறுபோகு விழுமத்து
சாகாட் டாளர் கம்பலை யல்லது
 
15பூச லறியா நன்னாட்
டியாண ரறாஅக் காமரு கவினே.
 

துறை  : செந்துறைப் பாடாண் பாட்டு.
வண்ணம் : ஒழுகுவண்ணம்.
தூக்கு  : செந்தூக்கு.
பெயர்  : தொடர்ந்த குவளை. 

உரை : எல் வளை மகளிர் - விளங்குகின்ற   வளையினையணிந்த
இள  மகளிர்;  தொடர்ந்த  குவளைத்  தூநெறி  அடைச்சி - இடையற
வின்றித்  தொடர்ந்து  மலரும்  குவளையின் முழுப் பூவைச்  சேர்த்து;
அலர்ந்த  ஆம்பல்  அகமடிவையர்  -  ஆம்பலின்  மலர்ந்தபூக்களை
அவற்றின்   இடையே  அகப்படத்  தொடுத்த  தழையினை   யுடுத்து;
சுரியல்  அம்  சென்னிப்  பூஞ் செய் கண்ணி அரியல் ஆர்  கையர் -
சுரிந்த   தலைமயிரிற்   பூவாற்   றொடுக்கப்பட்ட  கண்ணி  யணிந்து
கள்ளுண்ணும்  இயல்பினரான;  இனிது  கூடு இயவர் - இசை  இனிது
கூட விசைக்கும் இயவர் தங்கியிருக்கும்; துறை நணி மருதம்    ஏறி -
நீர்த்துறைக்கண்ணிற்கும்    மருத   மரத்தின்மேல்   ஏறி;  தெறுமார்-
நெற்கதிர்களை   மேயும்   புட்களை  யோப்புதற்காக;  தெள்   விளி
இசைப்பின் -  தெளிந்த  தம் விளிக்குரலையெடுத்து இசைப்பா ராயின்;
பழனக் காவில் பசு  மயில்  ஆலும்  (கம்பலையும்) - வயலருகேயுள்ள
பொழில்களில்  தங்கும்  பசிய  மயில்கள்  அம் மகளி ரிசைக் கொப்ப
ஆடுதலா லெழும் ஆரவாரமும்;  பொய்கை   வாயில்  புனல்  பொரு
புதவின்- பொய்கையின் வாயிலிடத்தே யமைந்து புனலால் தாக்கப்படும்
கதவின் கசிகால்களிற் பூக்கும்; நெய்தல் மரபின் நிரைகள்  செறுவின் -
நெய்தற் பூவை யூதும் முறைமையினை யுடையவராய் நிரை    நிரையா
யிரைத்துச்    செல்லும்    வண்டினம்   நிறைந்த        நன்செய்ப்
புலத்திற் செல்லும்;   வல்      வாய்  உருளி -   பண்டியின் வலிய
வாயையுடைய    உருளையானது;   அள்ளற்பட்டுக்கதுமெனமண்ட  -
சேற்றின் கண் இறங்கிச் சட்டென அழுந்தி விடுதலால்; சாகாட்டாளர் -
அப்பண்டியைச்  செலுத்துவோர்;  துள்ளுபு  துரப்ப  -  துள்ளியுரப்பி
எருதுகளைச்   செலுத்த;   நல்   லெருது   முயலும்  அளறு  போகு
விழுமத்துக்  கம்பலை  யல்லது  -  நல்லெருதுகள் முயன்று  ஈர்த்துச்
சேற்றினின்று  கழிந்  தேகும்  வருத்தத்திடைப்  பிறக்கும்  ஆரவாரமு
மல்லது;   பூசல்   அறியா   நன்னாட்டு   -  வேறே  போராரவாரம்
கேட்டறியாத  நல்ல  நாட்டின்; யாணர் அறா அக்காமரு கவின் - புது
வருவாய்  குன்றாத  விருப்பம் பொருந்திய அழகானது; நீ சிவந்தனை
நோக்கலின்  - நீ வெகுண்டு சீறிப் பார்த்ததனால்; மன்ற சிதைந்தது -
தெளிவாகச் சிதைந் தழிவதாயிற்று, காண் எ - று. 

எல்     வளை  மகளிர்  மடிவையராய்த்  தெறுமார்   மருதமேறி
இசைப்பின்  என  இயைக்க  ஆண்டு  முழுதும்  தொடர்ந்து  மலரும்
இயல்பிற்றாதலின்.  குவளையைத்  “தொடர்ந்த  குவளை”   யென்றார்.
இனி,   குவளையின்   தூநெறிகள்   சாம்பி  யுதிர்ந்தவழிப்   புதியன
தொடுத்து  இடையறலின்றி  யஃது  இருக்குமாறு செய்தலின்  இவ்வாறு
கூறினா    ரென்றும்,   தொடுப்போர்   தொடர்புறுத்தத்   தொடரும்
குவளையைத்  தொடர்ந்த  குவளையென்றா ரென்றும் கூறுவர்.  இனிப்
பழையவுரைகாரர்,  “ஆண்டுகள்  தோறும்  இட்டு  ஆக்க வேண்டாது
தொண்டு (பண்டு) இட்டதேயீடாக எவ்வாண்டிற்கும் தொடர்ந்து வரும்”
என்றும்,  “இச்  சிறப்பானே  இதற்குத்  தொடர்ந்த  குவளை யென்று
பெயராயிற்”  றென்றும்  கூறுவர்.  புறவித  ழொடித்த   முழுப்பூவைத்
தூநெறி யென்றார். குவளை, செங்கழுநீருமாம். குவளையும்  ஆம்பலும்
பைந்தழையும்   விரவித்  தொடுக்கப்படும்  தழை யுடையில்  ஆம்பற்
பூவை  இடையிட்டு  ஏனையவற்றை அதனைச் சூழத்  தொடுத்த தழை
யுடை  ஈண்டு  “ஆம்ப  லக மடிவை” யெனப்பட்டது.  இவ்வாறன்றிப்
பல்வகைப்   பூக்களையும்   வண்ணம்  மாறுபடத்  தொடுக்கப்படுவது
பகைத் தழை யெனப்பட்டது; இருவகையும் ஒருங்கமையத்  தொடுப்பது
முண்டு;  அதனை, “அம்பகை மடிவைக் குறுந்தொடி மகளிர்”  (அகம்.
226)  என்று  சான்றோர்  கூறுதல்  காண்க. இனி,  டாக்டர் உ வே.
சாமிநாதைய  ரவர்கள் “அலர்ந்த வாம்ப லம்பகை மடிவையர்”என்று
பாடங்   கொள்ளினும்   பொருந்து   மெனக்  கூறுவர்.  குவளையும்
ஆம்பலும்  பிறவும்  விரவித் தொடுக்கப்படுதலின், “குவளைத் தூநெறி
யடைச்சி,   அலர்ந்த  ஆம்பல்  அகம்படத்  தொடுத்த  மடிவையர்”
என்றார்.  அடைச்சி  யென்னும்  வினையெச்சத்தை அகம்  என்புழித்
தொக்குநின்ற  வினையொடு  முடிக்க.  குவளையும்  தழையுடைக்கண்
விரவித் தொடுக்கப்படுதலை,“குவளைக் கூம்பவிழ் முழுநெறி  புரள்வரு
மல்குல்”(புறம். 116) என்று சான்றோர் கூறதலா லறிக. இனி,  குவளைத்
தூநெறியைக்   கூந்தலில்   அடைச்சி  யென்று  கொண்டு  பொருள்
கூறுவாரு முளர்.

இயவர்     தம்  சென்னியிற்  கண்ணி  சூடலும்  கள்ளுண்டலும்
உடையராதலின்,  “சுரியலஞ்  சென்னிப்  பூஞ்செய்  கண்ணி,  அரிய
லார்கையர்”என யென்றும்,   பொற்பூவாற்  செய்யப்பட்ட   கண்ணி
யன்றென்பதற்குப் “பூஞ்செய்  கண்ணி” யென்றும்   கிளந் தோதினார்.
இசையைக்  கேள்வியொடு   (சுருதி)   கூட்டிக் கேட்டார்க்கு  இன்ப
முண்டாகப்  பாடுதலின்,  “இனிது    கூடியவர்”    என்றார்.  இவர்
உழவரினத்து இயவர் இவர்    தாம்    நீர்த் துறையிடத்து   நிற்கும்
பொழிலகத்தே யுறைபவராதலின்,  அத் துறை  “இயவர் துறை” எனக்
கிழமை கூறப்பட்டது. 

நெற்கதிரை     மேயும் மயிலினத்தை இவ் விளமகளிர் ஒப்பியவழி,
அவை  சென்று  துறை  யருகிருக்கும்  மருத  மரத்தில்  தங்குதலின்,
இவர்கள்   தம்   மருதத்தி்லேறி   அவற்றை   யோப்புவா  ராயினர்.
“செந்நெலுண்ட பைந்தோட்டு மஞ்ஞை, செறிவளை மகளி ரோப்பலின்
பறந்தெழுந்து,  துறைநணி மருதத் திறுக்கு மூதூர்” (புறம். 344) என்று
பிறரும்   கூறுவர்.   வளையணிந்த   மகளிரெனவே   இளையராதல்
பெற்றாம்.  கவணும் தட்டையும் பிறவும் கொண்டு புட்களை யோப்பும்
திறம்   இலராதலின்,   இம்   மகளிர்  தம்  குரலெடுத்து  விளித்தும்
இசைத்தும்   பாடினரென்றும்,   அப்   பாட்டிசைதானும்    இயவரது
இயவொலி  போறல்  கண்டமயில்,  அவ்  வொலிக்  கேற்ப  ஆடுதல்
செய்ததேயன்றி   நீங்கிற்  றன்று;  அதனைக்  காண்போர்   செய்யும்
ஆரவாரத்தை,  “பழனக்காவில்  பசுமயிலாலும்  கம்பலை”  யென்றார்.
இனி,   பழையவுரைகார்,   “மகளிர்  தெறுமார்  இசைப்பின்,  காவிற்
பசுமயில்  ஆலும் என்றது, வயலிற் புகுந்து உழக்காதிருத்தற்பொருட்டு
அவ்வயற்  புள்ளோப்பும்  உழவர்மகளிர், அதனைக் கடிய  வேண்டித்
தெள்விளி    யெடுப்பின்,    இயவர்   இயங்களின்   ஒலி   கேட்ட
பழக்கத்தானே  தன்னைக் கடிகின்ற ஒலியையும் அவற்றின்  ஒலியாகக்
கருதி  மயில்  ஆலு  மென்றவாறு”  என்பர். மயில் ஆலும் கம்பலை,
அளறு  போகும்  விழுமத்துக்  கம்பலை யல்லது பூசலறியா நன்னாடு
என இயையும்.

பொய்கையிடத்து மிக்க நீர்கழிவது குறித்துச் செய்துள்ள வழியினை
“வாயில்”  என்றும்,  மிக்குற்று  விரைந்து  நீங்கும்  நீரைத்  தடுத்தற்
பொருட்டு  அவ்  வாயிலில், நிறுத்த கதவு நீரால் தாக்குண்டு எதிர்த்து
நிற்கும்  இயைபு  தோன்றப், “புனல்பொரு புதவின்” என்றும்,  அதன்
வழிப்  பொசிந்தோடு  நீரால்  மருங்குள்ள வயல்களி்லும் கால்களிலும்
நெய்தல்கள்  நிரம்பப்  பூத்திருத்தலால்  அவற்றின் தாதூதி முரலுதல்
கள்ளுண்  வண்டிற்கு  முறைமையாயிற்  றென்பார், “நெய்தல் மரபின்
நிரைகள்”   என்றும்  கூறினர்;  வயலின்கண்  எழும்  கம்பலையைக்
கூறுவார்,  வண்டினம் கூட்டம் கூட்டமாய் நிரைத்துச் சென்று தேனை
யுண்டல்  பற்றி, அவற்றை “நிரைகள்” ளென்றார். இனி, இரவெல்லாம்
தாமரை  முதலிய  பூக்களில்  துஞ்சிய வண்டினம், விடியலில் எழுந்து
போந்து    தேனுண்ணுமாறு    மலரும்   மரபிற்றாகிய   நெய்தலின்
புதுத்தேனை  நாடி  யுண்டலை மரபாக வுடைமைபற்றி வண்டினத்தை
இவ்வாறு  கூறினாரெனினும்  அமையும். “வைகறை மலரும் நெய்தல்”
(ஐங்.  188) எனப் பிறரும் கூறுப. பழையவுரைகாரர், “நெய்தல் மரபின்
நிரைகட்   செறு   என்றது,   இடையறாது   பூக்கும்   மரபினையும்
வண்டினையுமுடைய  செறு”  என்றும்,  கள்ளென்பது  வண்டென்றும்
கூறுவர்.

வண்டு, மூசும் செறுவின்கட் புக்கதும் சாகாட்டின் ஆழி, சட்டெனச்
சேற்றிற்  புதைந்து  விடுதலால்,  “கதுமென மண்ட” என்றார்; எனவே,
செறுவும் ஆழ வுழப்பட்டுச் சேறு மிகப் பொருந்தியிருத்தல்  பெற்றாம்.
அவ்வாறு ஆழ்தற்கேற்ற திண்மையும் வன்மையும் ஆழிக்கு  உண்மை
தோன்ற,   “வல்வாயுருளி”   என்றார்.  உருளி,  ஆழி உருளியானது
அள்ளற்பட்டுக் கதுமென மண்டலும், சாகாட்டினை யீர்த்தேகும்  எருது
மாட்டாமையால்    திருகலி்ட்டு    மயங்குதலால்,    அம்   மயக்கந்
தீர்தற்பொருட்டுச்  சாகாட்டாளர்  துள்ளிக் குதித்துப் பேரிரைச்சலிட்டு
அவ்  வெருதுகளை  யூக்கித் தூண்டுதலின் ‘துள்ளுபு துரப்ப’ என்றும்,
மாட்டாது   மடங்கிப்   படுக்கும்ஏனை   வலியில்லாத  எருதுகளைப்
போலாது    தம்   வன்மை   முழுதும்   செலுத்தி   மூக்கொற்றியும்
தாளூன்றியும்   அள்ளற்  சேற்றினின்றும்  நீங்க  வலிக்கும்   முயற்சி
நலமுடைமையின்  “நல்லெருது”  என்றும், அளற்றின் நீங்கிக்  கழியப்
போகுமிடத்துச்     சிறிது     தாழ்ப்பினும்    முன்போல்    ஆழப்
புதையுமென்பது  கருதிப்  பேராரவாரம்  செய்தூக்கிச்  செலுத்தாலால்,
“அளறு போகு விழுமத்துச் சாகாட்டாளர் கம்பலை” என்றும் கூறினார்.
கம்பலை   நிகழ்தற்கு  விழுமம்  இடமாயினும்,  நிகழ்த்துவோர்  இவ
ரென்றற்குச்   சாகாட்டாளரையெடுத்தோதினார்.   விழுமம்   துன்பம்.
“அள்ளல்  தங்கிய  பகடுறு  விழுமம்,  கள்ளார்  களமர் பெயர்க்கும்
ஆர்ப்பே” (மதுரை. 259-60) என்று பிற சான்றோரும் கூறுதல் காண்க. 

அந்   நன்னாட்டில் மக்களிடையே பகையும் நொதுமலும் அச்சமும்
இன்மையின்,  அவை  காரணமாகப்  பிறக்கும்  போர்ப்பூசல் இல்லை
யென்பார்,  “சாகாட்டாளர்  கம்பலை  யல்லது  பூசலறியா  நன்னாடு”
என்றார்.  இறந்தது  தழுவிய  வெச்சவும்மை  விகாரத்தாற்  றொக்கது.
இன்ன    நன்னாட்டில்    நாளும்   புது   வருவாய்   நிலவுவதால்
எந்நிலத்தவரும்  விரும்பும் ஏற்றமும் அழகும் இதன்பால்  உளவாயின
என்பார்,  “யாணர்  அறாஅக்  காமரு  கவின்”  என்றும்,  தன்னைத்
தெறுமார்  மகளி ரெடுத்த தெள்விளி கேட்டு ஆலும் பசுமயில் போல,
இந்  நாட்டவர் நி்ன் போர்ப் பூசல் கேட்டுப் பணிந்து திறை செலுத்தி,
அருள்  பெறாது  கெட்டன ரென்பார், “சிதைந்தது மன்றநீ சிவந்தனை
நோக்கலின்”  என்றும்  கூறினார்.  “சிவந்தனை நோக்கலின்” என்றது
குட்டுவனது    சினத்தின்   கடுமை   தோற்றி   நின்றது.   பகைவர்
நாட்டழிவின்  மிகுதிநோக்கி,  “சிதைந்தது  மன்ற” என்றார். “துள்ளுபு
துரப்ப  வென்றது,  சாகாட்டாளர்  துள்ளித்  துரக்கையாலே  என்றும்,
அளறு போகு... வருத்தமென்றும்” பழையவுரைகாரர் கூறுவர்.

இதுகாறும்     கூறியது,  பழனக்  காவில்   பசுமயில்    ஆலும்
கம்பலையேயன்றிச்  செறுவின்கட்  சாகாட்டாளர்  கம்பலையு மல்லது
வேறு   பூசலறியாத   நன்னாட்டுக்  காமரு  கவின்,  நீ  சிவந்தனை
நோக்கலின்    சிதைந்தது    மன்ற   என்பதாம்.   பழையவுரையும்,
“நன்னாட்டுக்  கவின்  நீ  சிவந்தனை  நோக்கலின்  சிதைந்தது என
வினைமுடிவு செய்க” என்றது.

வழங்கியன்   மருங்கின் வகைபட நிலைஇப், பரவலும் புகழ்ச்சியும்
கருதிய  பாங்கினும் (தொல். பொ. 82) என்பதனால் இஃது அரசனைப்
புகழ்தற்கண்      வந்த      பாடாண்பாட்டாய்ச்       செந்துறைப்
பாடாண்பாட்டாயிற்று.

இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.


 மேல்மூலம்