28. |
திருவுடைத்
தம்ம பெருவிறற் பகைவர்
பைங்கண் யானைப் புணர்நிரை துமிய
உரந்துரந் தெறிந்த கறையடிக் கழற்காற்
கடுமா மறவர் கதழ்தொடை மறப்ப |
5 |
இளையினிது
தந்து விளைவுமுட் டுறாது
புலம்பா வுறையு ணீதொழி லாற்றலின்
விடுநிலக் கரம்பை விடரளை நிறையக்
கோடை நீடக் குன்றம் புல்லென
அருவி யற்ற பெருவறற் காலையும் |
10 |
நிவந்துரை
யிழிதரு நனந்தலைப் பேரியாற்றுச்
சீருடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇயர்
உவலை சூடி யுருத்துவரு மலிர்நிறைச்
செந்நீர்ப்
பூச லல்லது
வெம்மை யரிது நின் னகன்றலை நாடே.
|
துறை
- நாடுவாழ்த்து. வண்ணமும் தூக்கும் அது. பெயர்
- உருத்துவரு மலிர்நிறை (12)
(ப
- ரை)
3. கறையடியென்றது
குருதிக்கறையினையுடைய
அடி யென்றவாறு.
4-5.
மறவர் கதழ் தொடை மறப்ப இளை இனிது தந்தென்றது
நின்வீரர் போரில்லாமையால் விரைந்து அம்புதொடுத்தலை
மறக்கும்படி நாடு காவலை இனிதாகத் தந்தென்றவாறு.
இளை
- காவல். விளைவில் முட்டுறாமலெனத் திரிக்க.
6.
புலம்பா உறையுட்டொழிலென மாறிக் கூட்டுக.
7.
கரம்பை விடர் அளை நிறையவென்றது முன்பு நீரேறாத
கரம்பை வயல்களிற் 1கமர்வாய் நீர்நிறைய வென்றவாறு.
விடரளை
நிறைய (7) வாய்பரந்து மிகீஇயர் (11) என முடிக்க.
கோடை
நீடுகையாலே குன்றம் புல்லெனும்படி (8) அருவியற்ற
காலை (9) எனக் கூட்டியுரைக்க.
11.
வாய் பரந்து மிகீயரென்றது இடத்திலே பரந்து நீர்தான்
தன்னை மிகுக்க வேண்டி என்றவாறு.
12.
உவலை சூடி உருத்துவரும் மலிர்நிறையென்றது
தழைகளைச் சூடித் தோற்றிவரும் வெள்ளமென்றவாறு.
தன்னை
வயல் பொறுக்குமாறு காணவென்று போர்வேட்டு
வருவாரைப் போலுமென்று கூறிய இச்சிறப்பானே இதற்கு,
'உருத்துவரு மலிர் நிறை' என்று பெயராயிற்று.
வாய்பரந்து
மிகீஇயர் (11) உருத்துக் (12) கரையிழிதரும்
நனந்தலைப் பேரியாற்று (10) மலிர்நிறைச் (12) செந்நீர் (13) என
மாறிக் கூட்டுக.
பெருவறற்காலையும்
(9) நின் அகன்றலைநாடு (14), புலம்பா
வுறையுட் டொழிலை நீ ஆற்றலின் (6) திருவுடைத்து (1) எனக் கூட்டி
வினை முடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் நாடுகாத்தற் சிறப்புக்
கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1 - 6. சேரனது அரசாட்சிச்சிறப்பு இவ்வடிகளிற் கூறப்படும்.
1.
பெருவிறற்பகைவர் - முன்பு பெரிய வெற்றியையுடைய
பகைவரது; 'வென்றிக்களிறு - முன்பு வெற்றியையுடைய களிறு'
(சீவக. 14, ந.)
2.
பைங்கண் யானைப் புணர்நிரை துமிய - பசிய
கண்ணையுடைய யானையினது, தம்மிற் கூடின வரிசை அழியும்படி.
3.
உரம் துரந்து எறிந்த - வன்மையினால் செலுத்தி
வேலையெறிந்த. கறையடி - இரத்தக் கறையையுடைய அடி; இது
மறவருக்கு அடை.
4.
கதழ் தொடைமறப்ப- விரைந்து அம்பு தொடுத்தலை
மறக்கும்படி.
5.
நாடுகாவலை இனிமையாகச் செய்து பயிர்விளைவுகள்
குறையாமல்.
6.
வருந்தாத இருப்பிடங்களிலே நீ தொழிலைச் செய்தலால்
புலம்பா உறையுள் என்றது குடிமக்கள் பகை பசி பிணி என்னும்
துன்பங்கள் இன்றி அமைதியாக உறையும் இடங்களை. தொழில்
என்றது அம் மூன்று வருத்தங்களையும் போக்கிப் புரக்கும்
தொழிலை.
7-13.
ஆற்று நீரின் சிறப்பு. 7. விளைவின்றி விடப்பட்ட
நிலத்தினையுடைய தரிசுகளிலுள்ள வெடிப்புக்களில் நீர் நிறையும்படி.
8-9.
கோடைத்தன்மை நீட்டித்திருத்தலின் மலைகள் பொலி
வழிய, அருவி ஒழுகாது அற்றுப்போன பெரிய வறட்சிக் காலத்திலும்;
"கல் காயும் கடுவேனிலொடு" (மதுரைக்.
106)
10.
மிக்குக் கரையின்கண்ணே இறங்குகின்ற அகன்ற
இடத்தையுடைய பெரிய ஆற்றினது. பேரியாறு -
சேரநாட்டிலுள்ளதோர் ஆறு எனலுமாம்; "பெருமலை விலங்கிய
பேரியாற் றடைகரை" (சிலப். 25 : 22);
பேரியாற்றினது மலிர் நிறை
(12) என முடியும்.
11.
சிறப்பையுடைய அகன்ற வயல்களிடத்திலே பரவி மிகும்
பொருட்டும்.
12.
தழைகளை மேலே போர்த்துத் தோற்றிவருகின்ற
வெள்ளத்தினது. உவலை - தழை.
13.
சிவந்த நீரினாலுண்டாகம் ஆரவாரம் அல்லாமல்; வெள்ளம்
கண்ட உழவரது ஆரவாரமும் நீர்விளையாட்டுச் செய்வார்
ஆரவாரமும் ஒருங்கு கொள்க.
7-12.
அளை நிறையவும் புலம் மிகவும் வருகின்ற மலிர்நிறை.
14.
வெம்மை அரிது - பகைவரால் உண்டாகும் கொடுமை
இல்லாதது.
12-4.
பதிற். 13 : 12, உரை. நீர்ப்பூசலல்லது
பகைவர்களால்
உண்டாகும் பூசல் இல்லையென்பார் அந்நீர்ப் பூசலைப் பகைவர்
பூசல் போலத் தோற்றும்படி சொற்றொடர் அமைத்தார். உவலைக்
கண்ணியைச் சூடிக் கோபித்து வருகின்ற வெள்ளத்தின் சிவந்த
நீர்மையையுடைய பூசல் என ஒரு பொருள் தோற்றியது. வீரர்
உவலைக்கண்ணி சூடுதல்; "உவலைக்கண்ணி வன்சொ லிளைஞர்"
(மதுரைக் 311). "உருத்தெழு வெள்ளம்"
(பதிற். 72 : 10) என்பதற்கு,
'கோபித்தெழு வெள்ளம் என உரையாசிரியர் எழுதிய உரை
இங்கே கருதற்குரியது.
நின்
அகன்றலை நாடு மறவர் தொடை மறப்ப, நீ ஆற்றலின்
வெம்மை யரிது; ஆதலால் திருவுடைத்து,
(பி
- ம்.) 5. வினையினிது. 10. கரையழிதரு, (8)
1கமர்
- வெடிப்பு.
|