முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
29. அவலெறிந்த வுலக்கை வாழைச் சேர்த்தி
வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்
முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த
தடந்தா ணாரை யிரிய வயிரைக்
  5 கொழுமீ னார்கைய மரந்தொறுங் குழாஅலின்
வெண்கை மகளிர் வெண்குரு கோப்பும்
அழயா விழவி னிழியாத் திவவின்

வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ
மன்ற நண்ணி மறுகுசிறை பாடும்
  10 அகன்கண் வைப்பி னாடும னளிய
விரவுவேறு கூலமொடு குருதி வேட்ட
மயிர்புதை மாக்கண் கடிய கழற
அமர்கோ ணேரிகந் தாரெயில் கடக்கும்
பெரும்பல் யானைக் குட்டுவன்
  15 வரம்பி றானை பரவா வூங்கே.

     துறை - வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு. வண்ணமும்
தூக்கும் அது. பெயர் - வெண்கை மகளிர் (6)

     (ப - ரை) 3. முடந்தை நெல்லென்றது கதிர்க்கனத்தாலே
வளைந்து முடமான நெல்லென்றவாறு; முடந்தையென்பது
பெயர்த்திரிசொல்; இனிப் பழவழக்கென்பது மொன்று.

     5. கொழுமீனார்னாகய வென்றது..........................

     6. இச்சிறப்பானே இதற்கு, 'வெண்கைமகளிர்' என்று
பெயராயிற்று. இனி வெண்சங்கணிந்த கையென்பாருமுளர்; இனி
1அடுகை முதலாகிய தொழில் செய்யாத கையென்பாருமுளர்.

     7. திவலையுடைய யாழ் திவவெனப்பட்டது.

     குட்டுவன் வரம்பில் தானை பரந்த இப்பொழுது அழிந்து
கிடக்கின்ற இந்நாடுகள், குட்டுவன் (14) வரம்பில் தானை பரவாவூங்கு
(15) முடந்தை நெல்லின் விளைவயற்பரந்த (3) நாரையிரிய (4)
வெண்கை மகளிர் வெண்குரு கோப்புதலையுடையவாய் (6) அழியாத
விழவினையும் இழியாத திவவினையு முடையவாய் (7) வயிரியமாக்கள்
எழீஇ (8) மன்ற நண்ணி மறுகு சிறைபாடும் (9), இப்பெற்றிப்பட்ட
சிறப்பையுடைய அகன்கண் வைப்பினாடு இப்பெற்றியெல்லாமழிந்து
கண்டார்க்கு அளித்தலையுடைய (10) என வினை முடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக்
கூறியவாறாயிற்று.

     வரம்பிறானை பரவாவூங்கென எடுத்துச்செலவினை மேலிட்டுக்
கூறினமையால் வஞ்சித்றைப் பாடாணாயிற்று.

     (கு - ரை) 1. பச்சை அவலை இடித்த உலக்கையை
அருகிலுள்ள வாழை மரத்தில் சார்த்திவிட்டு. 2. வளையைக்
கையிலே அணிந்த மகளிர் வள்ளையைக் கொய்தற்கு இடமாகிய.

     1-2. "பாசவ லிடித்த் கருங்கா ழுலக்கை, ஆய்கதிர் நெல்லின்
வரம்பணைத் துயிற்றி ஒண்டொடிமகளிர் வண்ட லயரும்" (குறுந்.
288 : 1 - 3)

     3. கதிரின் கனத்தால் வளைவையுடைய நெல்லையுடைய
விளையும் வயல்களிடத்திலே பரவியுள்ள; மடத்தையுடையாள்
மடந்தையானாற் போல முடத்தையுடையது முடந்தையாதயிற்று;
"முடந்தைநெல்" (பதிற். 32 ; 13)

     4, இரிய - நீங்க.

     4-5. அயிரையாகிய கொழுவிய மீனை உண்ணுதலை
யுடையனவாய் மரந்தோறும் கூடித் தங்குதலால்.6. வெண்குருகு -
வெள்ளிய பறவைகள்.

     4-6. குருகு ஒப்பிய ஒலியால் நாரைகளும் இரிந்தன: வெண்
குருகு என்பதைச் சுட்டுப் பொருளதாக்கி முற்கூறிய நாரைகள் என்று
பொருள்கொள்ளுதலும் ஒன்று; நாரை அயிரைமீன் உண்ணுதல்;
குறுந்
.
128 : 1 - 3, ஒப்புமைப்.

     7. அழியா விழவு: பதிற். 15 : 18. இழியாத் திவவின் -
சுருதியிறங்காத நரம்புக்கட்டுக்களோடு கூடிய யாழையுடைய. திவவு
இங்கே யாழுக்கு ஆயிற்று; ஆகுபெயர். இது வயிரிய மாக்களுக்கு
அடை.

     8. வயிரிய மாக்கள் - கூத்தர். பண்ணமைத்து எழீஇ -
பண்களை நன்றாக அமைத்து இசையை எழுப்பி.

     9. மன்றம் - பொதுவிடம். 8-9. பதிற். 23 : 5 - 6, உரை.

     10. அகன்கண் வைப்பின் நாடு - அகன்ற இடத்தையுடைய
ஊர்களையுடைய பகைவர் நாடுகள். அளிய - இரங்கத்தக்கன. மகளிர்
குரு கோப்புதற்கு இடமானவும் விழவினையுடையனவும்
வயிரியமாக்கள் பாடுவதற்கு இடமானவும் ஆகிய வைப்பையுடைய
நாடுகள் என்க.

     11. கலந்த பலவகைப்பட்ட தானியங்களோடு இரத்தத்தைப்
பலியாக விரும்பிய.

     12. மயிரொடு கூடிய தோல்போர்த்த முரசினது கரிய அடிக்கும்
பக்கம் கடுமையாக முழங்க. "மயிர்க்கண் முரசு" (சிலப். 5 : 88)
என்பதும், 'புலியைப் பொருது கொன்று நின்று சிலைத்துக்
கோட்டுமண் கொண்ட ஏறு இறந்துழி அதன் உரிவையை மயிர்
சீவாமற் போர்த்த முரசு" என்னும் அதனுரையும் இங்கே
அறிதற்பாலன. 11-2. பதிற்.19:6, உரை.

     13. அமர்கோள் நேர்இகந்து - போரை விரும்பிக்
கொள்ளுதலில் ஒப்புமை நீங்க; இகந்து-இகப்ப. ஆரெயில் கடக்கும்
- பகைவரது அரிய மதிலை வஞ்சியாது எதிர்நின்று வென்று
கைக்கொள்ளும்.

     14. பெரும்பல் யானை: பதிற். 77 : 11 - 2 . பல்யானைச்
செல்கெழு குட்டுவனென்பது இப்பத்தின் பாட்டுடைத் தலைவனான
சேரனது பெயர்.

     15. தானை-சேனை. பரவாவூங்கு - பரவிச் செல்லுதற்கு முன்பு.

     குட்டுவன் (14) தானை பரவாவூங்கு (15) வயிரிய மாக்கள் (8)
மறுகு சிறைபாடும் (9) அகன்கண் வைப்பின் நாடு மன் அளிய (10)
என முடிக்க.

     மு. 'இதில் இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு
குட்டுவனைப் பாலைக் கௌதமனார் துறக்கம் வேண்டினாரென்பது
குறிப்புவகையாற் கொள்ளவைத்தலின் இது வஞ்சிப்பொருள்வந்த
பாடாணாயிற்று' (தொல். புறத் .25, ந.)

     (பி - ம்.) 1. அவலெறியுலக்கை. 5. குமுறலின், குழறலின். (9)


          1பதிற்.18: 6, உரை பார்க்க.




பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

9. வெண்கை மகளிர்
 
29.அவலெறிந்த வுலக்கை வாழைச் சேர்த்தி
வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்
முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த
தடந்தா ணாரை யிரிய வயிரைக்
   
5கொழுமீ னார்கைய மரந்தொறுங் குழாஅலின்
வெண்கை மகளிர் வெண்குரு கோப்பும்
அழியா விழவி னிழியாத் திவவின்
வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ
மன்ற நண்ணி மறுகுசிறை பாடும்
 
10அகன்கண் வைப்பி னாடும னளிய
விரவுவேறு கோலமொடு குருதி வேட்ட
மயிர்புதை மாக்கண் கடிய கழற
அமர்கோ ணேரிகந் தாரெயில் கடக்கும் 
பெரும்பல் யானைக் குட்டுவன்
 
15வரம்பி றானை பரவா வூங்கே.

துறை  : வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்  : வெண்கை மகளிர்.  

உரை : வேறு விரவு கூலமொடு -  வேறு  வேறாக  விரவிய  பல
கூலங்களுடன்;  குருதி  வேட்ட மயிர் புதை மாக்கண் - குருதிப்  பலி
யூட்டிய  வட்டமான  மயிர்  மறையும்படியாகப்  போர்த்த கரிய  கண்
ணமைந்த முழவானது; கடிய கழற - சேணிடத்தேயிருந்து கேட்டார்க்கு
அச்ச  முண்டாகுமாறு முழங்க; அமர் கோள் நேர் இகந்து -  பகைவர்
போரில்  நேர்படுதலை  யஞ்சாது  முன்னேறிச்  சென்று;  ஆர் எயில்
கடக்கும்  பெரும்  பல்  யானைக் குட்டுவன் அவரது அரிய மதிலைக்
கடக்கும்  பெரிய  பல் யானைகளையுடைய குட்டுவனுடைய;  வரம்பில்
தானை   பரவா   வூங்கு   -  எல்லையில்லாத  தானைகள்  சென்று
பரந்தழிப்பதன்  முன்னே; அவலெறிந்த உலக்கை வாழைச்  சேர்த்தி -
அவலிடித்த  உலக்கையை வாழைமரத்தில் சார்த்தி விட்டு;  வளைக்கை
மகளிர்    வள்ளை    கொய்யும்   -   வளையணிந்த    இளமகளிர்
வள்ளையினது பூவைப் பறிக்கும்; முடந்தை நெல்லின் விளை  வயல் -
விளைந்து   தலைசாய்ந்து   கிடக்கும்   நெல்  வயலிடத்தே;  பரந்த
தடந்தாள்   நாரை   இரிய   -   பரந்து   நின்று   மேயும்  பெரிய
கால்களையுடைய  நாரைகள் அவ் வயல்களினின்றும் நீங்க;  அயிரைக்
கொழுமீன்     ஆர்கைய     -     அயிரையாகிய      கொழுவிய
மீன்களையுண்பவையான  கொக்கு  முதலிய  குருகுகள்;  மரந்தொறும்
குழா  அலின் - வயலருகே நிற்கும் மரங்கள்தோறும் கூடியிருத்தலால்;
வெண்கை  மகளிர்  வெண்குருகு  ஓப்பும்  -  வளை யணியாத மிக்க
இளம்  பெண்கள்  வெள்ளிய  சிறு  பறவைகளை  யோப்பித் திரியும்;
அழியா  விழவின்  - இடையறாத விழாக்களையுடைமையால்; இழியாத்
திவவின்  வயிரிய  மாக்கள்  குற்றமில்லாத  திவவு  யாழினையுடைய
வயிரியர்;   பண்ணமைத்   தெழீஇ - அவ் வியாழைப் பண்ணொடு
பொருந்த       வெழுப்பி;        மன்றம்           நண்ணி  -
ஊர்மன்றத்தையடைந்து;    மறுகுசிறை    பாடும்   -    மறுகுகளின்
சிறைக்கண்ணே நின்று பாடிச் செல்லும்; அகன்கண்  வைப்பின் நாடு -
அகன்ற  இடத்தையுடைய  ஊர்கள்  பொருந்திய   நாடுகளாயிருந்தன;
அளியமன்  - இப்பொழுது  அவை  அழிந்து கண்டார்  இரங்கத்தக்க
நிலையை யடைந்தன, காண் எ - று. 
  

நெற்கதிரைப் பிசைந்தெடுத்த பசிய நெல்லைக் குற்றி அவலெடுப்பது
விளையாடும்  பருவத்து இளமகளிர்க்கு இன்றும்   இயல்பாயிருத்தலின்,
அவலெறிந்த   வுலக்கையை   விதந்தோனினார்.   நெல்   வயலருகே
வாழைகள்   நிற்றலின்,  அவற்றைச்  சார்ந்தவிடத்தில்   விளையாடும்
மகளிர்   அவலெறிந்த  வுலக்கையை  வாழைமரத்திற்   சார்த்திவிட்டு
வயற்குட்  புகுந்து ஆங்கு மலர்ந்திருக்கும் வள்ளைப்பூவைப்  பறிக்கும்
செயலை,  “  “அவலெறிந்த  வுலக்கை வாழைச் சேர்த்தி,  வளைக்கை
மகளிர்  வள்ளை  கொய்யும்” என்றார். “வளைக்கை மகளிர்” எனவே,
விளையாடும்    பருவத்து    இளமகளிர்    என்பது    பெறப்படும்.
நென்மணியின்  கனத்தைத்  தாங்கமாட்டாது தாள் சாய்ந்து  வளைந்து
கிடக்கும்  நெல்லை,  “முடந்தை  நெல்” என்றார்; மடம் உடையாளை
மடந்தை   யெனல்போல  “முடந்தை  நெல்லின்  கழையமல்  கழனி”
(பதிற்.  32)  என்று பிறரும் கூறுதல் காண்க. நெல் விளையும் வயலில்
நீர்   இடையறாது   நிற்றலின்  பல்வகை  மீன்களும்   வாழ்தல்பற்றி,
அவற்றைக்  கவர்ந்  துண்பது குறித்து நாரை முதலிய குருகுகள் வயல்
முழுவதும்  பரந்து  நின்று  மேயுமாறு  தோன்ற, “விளைவயற் பரந்த
தடந்தாள்  நாரை” யென்றார். மகளிர் வள்ளை கொய்தற்காக வயற்குட்
புக்கதும்,  நாரையினம்  அஞ்சி  நீங்குதலின், “நாரை யிரிய” என்றும்,
வாய்த்தலையினும்  வரம்புகளினும் நின்று அயிரை முதலிய  மீன்களை
யுண்ணும்  கொக்கும்  புதாவும்  உள்ளலும்  பிறவும்  அருகே நிற்கும்
மருதினும்   மாவினும்  காஞ்சியினும்  குழீஇயிருத்தலின்,   “அயிரைக்
கொழுமீன்  ஆர்கைய மரந்தொறும் குழாஅலின்” என்றார். குழுவலின்
எனற்பாலது  “குழாஅலின்”  என  வந்தது.  ஏனைய  அன்னங்களும்
நீர்க்கோழிகளு  மாகியவற்றை  வளையணியும்  பருவத்தரல்லாத மிக்க
இளைய  மகளிர்  துரத்தி  யோப்புவ  ரென்பார்,  “வெண்கை மகளிர்
வெண்குரு  கோப்பும்”  என்றார்.  கொய்யு  மென்னும்   பெயரெச்சம்
வயலென்னும்  பெயர்கொண்டது.  வெண்குரு  கோப்பும்  நாடு, மறுகு
சிறை  பாடும்  நாடு  என இயையும். வெண்கை, வளையணியாத  கை;
வெறிதாய   இடத்தை  வெளில்  என்பது  போல,  வளை  யணியாத
வெறுங்கை  வெண்  கை  யெனப்பட்டது,  வெறிதாய  இள மகளிரின்
மென்  கையை “வெண்கை” யென்றும், அதனையுடைய சிறு  மகளிரை
“வெண்கை  மகளிர்” என்றும் சிறப்பித்ததனால், இப்பாட்டு  வெண்கை
மகளிர்  எனப்  பெயர்  பெறுவதாயிற்று. பழையவுரைகாரர், வெண்கை
யென்றதற்கு,   “வெண்  சங்கணிந்த  கை  யென்பாரு  முளர்;  இனி,
அடுகை   முதலாகிய  தொழில்  செய்யாத  கை  யென்பாரு  முளர்”
என்றும்,  “முடந்தை  நெல்  லென்றது  கதிர்க் கனத்தாலே வளைந்து
முடமான  நெல்  லென்றவாறு;  முடந்தை யென்பது பெயர்த்திரிசொல்;
இனிப் பழ வழக்கென்பது மொன்று” என்றும் கூறுவர்.

நாடோறும்     மண  விழாவும்  பிற  விழாவும்   இடையறவின்றி
நிகழ்தலால்  “அழியா  விழ”  வென்றார். திவவையுடைய யாழ் திவவு
எனப்பட்டது;    ஆகுபெயர்.    பழையவுரைகாரரும்      இவ்வாறே
கூறுவர். யாழிற்கு   இழிவு  செயற்பாட்டிலும்   இசை     நயத்திலும்
குற்றமுடைமையாதலின்,   குற்றமில்லாத  யாழை,  “இழியாத்  திவவு”
என்றார்.  விழாக்  காலத்து  வழங்கப்படும்  சோற்றை நச்சி  வயிரியர்
கூட்டம்  நிறைந்திருக்குமாறு  தோன்ற,  விழாவினை  விதந்து வயிரிய
மாக்களின்   உண்மையை   யெடுத்தோதினார்.   “பேரூர்ச்  சாறுகழி
வழிநாள்  சோறுநசை  யுறாது”  வேறுபுல  முன்னிய விரகறி பொருந”
(பொருந.   1-3)   என   முடத்தாமக்   கண்ணியார்  மொழிவதனால்
இவ்வுண்மை   துணியப்படும்.  இவர்கள்,  மன்றம்  புகுந்து  யாழைப்
பண்ணமைத்து இசையை யெழுப்பி, மறுகுகளின் சிறையிடத்தே  நின்று
பாடுதலின், “பண்ணமைத்தெழீஇ, மன்றம் நண்ணி மறுகுசிறை  பாடும்”
என்றார். 
    

நல்ல     பரப்பும் செறிந்த வூர்களுமுடைய  நாடாதல்   தோன்ற,
“அகன்கண் வைப்பின் நாடு” என்றார். வைப்பு, ஊர்,  அச்சிறப்பழிந்து,
காண்போ    ருள்ளத்தே    இரக்கம்    தோன்றத்தக்க   பாழ்நிலை
யெய்திற்றென்பதுபட நிற்றலின், மன் ஒழியிசை.

பல்வேறு    கூலங்களைக் கொண்டு முரசிற்குக் குருதிப் பலியூட்டி,
வழிபட்டுப்   போர்முழக்கம்   செய்வது  மரபாதலால்,  விரவு  வேறு
கூலமொடு  குருதி வேட்ட மாக்கண்” என்றார். கண்ணையுடைய முரசு
“கண்”   ணெனப்பட்டது.   கொல்லேற்  றுரிவையின்  மயிர்  சீவாது
அகத்தே  அம்  மயிர்  மறையும்படியாகப்  போர்த்த முரசு என்றற்கு,
“மயிர் புதை மாக்கண்” என்றார். முரசின் முழக்கம், கேட்கும் பகைவர்
உள்ளத்தே  அச்சம்  பயந்து,  பணிந்து  திறை பகராதவழிக் கொன்று
குவிப்பேனெனும்  வேந்தனது  குறிப்பை  வெளிப்படுத்தலின்,  “கடிய
கழற”  என்றார்.  இவ்வாறு  கழறவும் கேளாது போர் நேரும் பகைவர்
செய்யும் போரினைப் பொருள் செய்யாது எளிதில் மலைந்து அவர்தம்
காதல்   மிக்க  அரணைக்  கைப்பற்றலின்,  “அமர்கோள்  நேரிகந்து
ஆரெயில்  கடக்கும்”  என்றும்,  அவ்வாறு  கைப்பற்றும் குட்டுவனது
தானைப்  பெருமையை,  “பெரும்பல்  யானைக்  குட்டுவன் வரம்பில்
தானை”  யென்றும்  கூறினார். எனவே, பகைவர் தானை வரம்புடைய
தென்றும்,   அதுவே   அப்பகைவரழிவுக்கு   ஏதுவாயிற்   றென்றும்
உணர்த்தியவாறாம்.  பரந்து  சென்று  பகைவரை  வென்று  அவர்தம்
வளம்  சிறந்த  நாட்டை  யழித்த தென்பார், “பரவா வூங்” கென்றும்,
பரவியபின்,   அந்நாடு   அழிவுற்றுக்   கிடக்கும்   நிலையைக்  கூற
நினைக்கின்,  உள்ளத்தே  அந் நாட்ட தழிவு அளியைப்  பிறப்பித்துச்
சொல்லெழாவாறு செய்தலின், “அளியமன்” என்றும் கூறினார்.

இதுகாறும்  கூறியது வளைக்கை மகளிர் அவலெறிந்த உலக்கையை
வாழையிற்  சேர்த்தி,  வள்ளைப்  பூவைக்  கொய்யும் நெல்வயற்கண்,
பரந்து   மேயும்   நாரை  யிரிய,  கொழுமீ னார்கைய  மரந்தொறும்
குழாஅலின்  வெண்கை  மகளிர்  வெண்குரு  கோப்புவதும், வயிரிய
மாக்கள்   பண்ணமைத்   தெழீஇ   மன்றம்  நண்ணி  மறுகு  சிறை
பாடுவதுமாகிய  அகன்கண் வைப்பின் நாடுகளாய் இருந்தன, மாக்கண்
கடிய  கழற, ஆரெயில்  கடக்கும்  குட்டுவன்  தானை பரவா வூங்கு;
இப்போது   அளிய   மன்   என்பதாம்.  இனிப்  பழையவுரைகாரர்,
“குட்டுவன்  வரம்பில் தானை பரந்த இப்பொழுது அழிந்து கிடக்கின்ற
இந்  நாடுகள், குட்டுவன்  வரம்பில்  தானை பரவா வூங்கு முடந்தை
நெல்லின்  விளைவயற்   பரந்த  நாரை  யிரிய,  வெண்கை  மகளிர்
வெண்குரு   கோப்புதலை   யுடையவாய்,  அழியாத  விழவினையும்,
இழியாததிவவினையுமுடையவாய்,   வயிரிய மாக்கள் எழீஇ,  மன்றம்
நண்ணி  மறுகு   சிறைபாடும்,  இப்பெற்றிப்பட்ட    சிறப்பையுடைய
அகன்கண்  வைப்பின்    நாடு    இப்   பெற்றியெல்லா   மிழந்து
கண்டார்க்கு அளித்தலையுடைய என வினைமுடிவு செய்க”  என்பார்.
 

இதனால் குட்டுவனது  வென்றிச்    சிறப்புக்    கூறியவாறாயிற்று.

வரம்பில்   தானை   பரவா  வூங்கென   எடுத்துச்   செலவினை
மேலிட்டுக் கூறினமையால், இப்பாட்டு வஞ்சித்துறைப்  பாடாணாயிற்று.


 மேல்மூலம்