முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
30. இணர்ததை ஞாழற் கரைகெழு பெருந்துறை
மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தற்
பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை
வாலிணர்ப் படுசினக் குருகிறை கொள்ளும்
  5 அல்குறு கான லோங்குமண லடைகரை
தாழடும்பு மலைந்த புணரிவளை ஞரல
இலங்குநீர் முத்தமொடு வார்துகி ரெடுக்கும்
தண்கடற் படப்பை மென்பா லனவும்
காந்தளங் கண்ணிக் கொலையில் வேட்டுவர்
  10 செங்கோட்ட டாமா னூனொடு காட்ட
மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு
பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும்
குன்றுதலை மணந்த புன்புல வைப்பும்
கால மன்றியுங் கரும்பறுத் தொழியா
  15 தரிகா லவித்தப் பலபூ விழவிற்
றேம்பாய் மருத முதல்படக் கொன்று
வெண்டலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும்
பலசூழ் பதப்பர் பரிய வெள்ளத்துச்
சிறைகொள் பூசலிற் புகன்ற வாயம்
  20 முழவிமிழ் மூதூர் விழவுக்காணூஉப் பெயருமூ
செழும்பல் வைப்பிற் பழனப் பாலும்
ஏன லுழவர் வரகுமீ திட்ட
கான்மிகு குளவிய வன்புசே ரிருக்கை
மென்றினை நுவணை முறைமுறை பகுக்கும்
  25 புன்புலந் தழீஇய புறவணி வைப்பும்
பல்பூஞ் செம்மற் காடுபய மாறி
அரக்கத்தன்ன நுண்மணற் கோடு கொண்
டொண்ணுதன் மகளிர் கழலொடு மறுகும்
விண்ணுயர்ந்த தோங்கிய கடற்றவும் பிறவும்
  30 பணைகெழுவேந்தரும்வேளிருமொன்று மொழிந்து
கடலவுங் காட்டவு மரண்வலியார் நடுங்க
முரண்மிகு கடுங்குரல் விசும்படை பதிரக்
கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத்
தருந்திறன் மரபிற் கடவுட் பேணியர்
  35 உயர்ந்தோ னேந்திய வரும்பெறற் பிண்டம்
கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க
நெய்த்தோர் தூஉய நிறைமகி ழிரும்பலி
எறும்பு மூசா விறும்பூது மரபிற்
கருங்கட் காக்கையொடு பருந்திருந் தார
  40 ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்காற்
பெருஞ்சமந் ததைந்த செருப்புகன் மறவர்
உருமுநில னதிர்க்குங் குரலொடு கொளை புணர்ந்து
பெருஞ்சோ றுகுத்தற் கெறியும்
கடுஞ்சின வேந்தேநின் றழங்குகுரன் முரசே.

     துறை - 1பெருஞ்சோற்றுநிலை. வண்ணமும் தூக்கும் அது.
பெயர் - புகன்றவாயம் (19)

     (ப - ரை) 2. மணிக்கலமென்றது நீலமணியாலே செய்த
பாத்திரம். மணிக்கலத்தன்ன கழி (3) எனக்கூட்டி நெய்தற்பூவின்
கருமையானும் அதன் பாசடைக்கருமையானும் மணிக்கலம் போன்ற
கழியென வுரைக்க.

     5. கானலென்றது தன்னிடத்து வந்து இரைகொள்ளுவதற்குக்
குருகு தங்கி வாழும் கானலென்றவாறு.

     6. புணரி வளை ஞர்லவென்றது கடல் கொண்டுவந்த சங்கு
திரையிலே துவண்ட வருத்தத்தாலே ஈனுகைக்கு மெய்வருந்திக்
கதறவென்றவாறு.

     7. முத்தமொடு வார் துகிரெடுக்குமென்றது கரை நின்றோரில்
வளைநரலக் (6) கேட்டார் அம்முத்தெடுக்க வென்று வந்து
முத்தையன்றி அதனோடு பவளத்தையும் எடுக்குமென்றவாறு.

     பலபூவிழவினையுடைய (15) வைப்பு (21) எனக் கூட்டுக.

     17. புனல் பரந்தென்றதனைப் பரக்கவெனத் திரிக்க.

     18. பலசூழ் பதப்பரென்றது பல புரியாலும் சூழப்பட்ட மணற்
கோட்டையென்றவாறு.

     19. புகன்ற ஆயமென்றது முன்புமணலணைக்கு நில்லாத
பெரு வெள்ளத்தின் அணைசெய்து முடித்த விருப்பத்தையுடைய
ஆயமென்றவாறு.

     இச்சிறப்புப் பற்றி, இதற்கு 'புகன்ற வாயம்' என்ற
பெயராயிற்று.

     27-8. மணற்கோடு கொண்டென்றது 2மணற்கோட்டைக்
கழலாடுதற்கு இடமாகக் கொண்டென்றவாறு.

     இனிக் கழலென்றதனைக் 3கழலையுடைய தலைமகன்காலாக்கி
அக்காலொடு தலைமகளிர் புணர்ந்து உடன்போமென்பாருமுளர்.

     29. பிறவுமென்றது அவ்வாறு ஒருநிலமாகச் சொல்லப்படாத
பல நிலப்பண்புமுடைய இடங்களுமென்றவாறு.

     முன்பு எண்ணிநின்ற நிலங்களெல்லாம் ஆகுபெயரான்
அந்நிலத்து வாழ்வார் மேலனவாகக் கொள்க.

     30. ஒன்றுமொழிந்தென்றது ஒருவர் துணிந்ததே காரியமாக
அனைவரும் துணிந்து சொல்லியென்றவாறு.

     கடுஞ்சினங் கடாஅய் (33) எறியும் (43) முரசு (44) என
முடிக்க.
  

     33. முழங்கு மந்திரமென்றது முழங்க உச்சரிக்கப்படும் மந்திர
மன்றவாறு.

     மந்திரத்தானென உருபு விரித்து அதனைப் பேணியர்(34)
என்பதனோடு முடிக்க. 34. கடவுளென்றது முரசுறை கடவுளை.

     கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க (36)
உயர்ந்தோனேந்திய அரும்பெறற் பிண்டம் (35) எறும்புமூசா
இறும்பூது மரபின் (38) நெய்த்தோர் தூஉய நிறைமகிழ் இரும்பலி
(37) கருங்கட்காக்கையொடு பருந்து இருந்தார (39) எனக் கூட்டுக.

     இறும்பூது மரபிற் (38) பலி (37) என மாறிக் கூட்டுக.

     பேய்மகளும் (36) எறும்பும் அஞ்சிச் செல்லாத (38) பலிகளைக்
(37) காக்கையொடு பருந்திருந்தார (39) என்றது, அம்முரசுறை கடவுள்
தன் ஆணையால் தன்பலிகளை மேல் தன்னருளாலே போர்வென்றி
விளைவது அறிவித்தற்கு நிமித்தமாகக் காக்கையும் பருந்தும் இருந்து
ஆரவென்றவாறு.

     இவ்விடத்துக்குப் பிறவாறு கூட்டியுரைப்பாருமுளர்.

     41. பெருஞ்சமம் ததைந்த செருவென்றது பகைவர் செய்யும்
பேர் சிதையும்படி செய்யும் போரென்றவாறு.

     41-2. மறவர் குரலெனக் கூட்டுக.

     ஆகுபெயரான் உருமுநிலனதிர்க்குங் குரலோடு ஒத்த மறவர்
குரலை உருமுநிலனதிர்க்கும் குரலென்றானாகக் கொள்க.

     43-4. எறியு முரசென்க.

     மென்பால் (8) முதலாகக் கடறு ஈறாக 'எண்ணப்பட்ட ஐவகை
நிலத்து மக்களும் பிறவும் (29) அந்நிலத்து வேந்தரும் வேளிரும்
தங்களிலே ஒன்று மொழிந்து (30) அரண்வலியாதே நடுங்காநிற்கும்படி
(31) கடுங்குரல் விசும் படைந்து அதிரும்படி (32) கடுஞ்சினத்தைக்
கடாவிப் (33) பேய்மகள் கை புடையூஉ நடுங்க (36)
உயர்ந்தோனேந்திய பிண்டத்தினையும் (35) எறும்பு மூசா மரபின்
(38) நெய்த்தோர் தூஉய நிறைமகிழ் இரும்பலியினையும் (37)
கருங்கட்காக்கையொடு பருந்திருந்து ஆராநிற்கச் (39) செருப்புகள்
மறவரது (41) குரலொடே கோட்பாடு பொருந்திப் (42) பெருஞ்சோறு
உகுத்தற்கு எறியப்படா நின்றது. (43) நின்முரசு (44) என வினை
முடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக்
கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1-8. நெய்தல் நிலத்தின் இயல்பு.

     1. இணர் ததை ஞாழல் - பூங்கொய்தலால் சிதைந்த ஞாழல்
என்னும் மரத்தையுடைய. மகளிர் கொய்தலால் சிதைந்தது. ஞாழல்-புலி
நகக் கொன்றை. ஞாழலையுடைய கரை.

     2. நீலமணியாற் செய்த பாத்திரத்தைப் போன்ற கரிய
இதழையுடைய நெய்தலினது. நெய்தற்பூவிற்கு நீலமணியுவமை:
மதுரைக். 282; அகநா. 240 : 3. 3. பசிய இலையையும்
குளிர்ச்சியையுமுடைய கழியைத் துழாவி. துழாவியது இரையின்
பொருட்டு.

     3-4. புன்னைமரத்தின் வெள்ளிய பூங்கொத்தையுடைய
நீரிற்படும் கிளையில் நாரை முதலிய பறவைகள் தங்குகின்ற.

     5. தங்கதற்குரிய கடற்கரைச் சோலை ஓங்கிய மணலடைந்த
கரையினிடத்து.

     6. மணலிலே தாழ்ந்த அடம்பங்கொடியை அணிந்த கடலில்
சங்குகள் ஒலிக்க; மலைந்த-மோதிய எனலுமாம்.

     7. இலங்குநீர் முத்தம்-விளங்குகின்ற தன்மையையுடைய முத்து;
விலங்குநீர் முத்தமெனக் கொண்டு, மாறுபட்ட அலைகளிலுள்ள முத்து
எனப் பொருள் கொள்ளுதலுமாம். வார் துகிர் எடுக்கும் - நீண்ட
பவளத்தின் கொடியை வேண்டுவார் எடுத்தற்கிடமாகிய.

     8. குளிர்ந்த கடற்பக்கத்தையுடைய நெய்தல் நிலத்திலுள்ள
மக்களும். நெய்தலும் மருதமும் மென்பாலெனக் கூறப்படும் (புறநா.
42 : 17-8 , உரை)

     கழி துழைஇச் சினையில் குருகு இறைகொள்ளும் கானல்
பொருந்திய கரையினிடத்து வளை ஞரலத் துகிர் எடுக்கும் மென்பால்
என்க.

     9-13. பாலைநிலத்து இயல்பு.

     9. காந்தட்பூவாற் செய்தகண்ணியையும் கொலை செய்யும்
வில்லையும் உடைய வேடர். 10. சிவந்த கொம்பையுடைய காட்டுப்
பசுவின் இறைச்சியோடு. காட்ட - காட்டிலுள்ள.

     11. வன்மையையுடைய யானையினது வெள்ளிய தந்தத்தையும்
கொண்டு.

     12. செல்வத்தையுடைய கடைத்தெருவில் தாம் வாங்கும்
கள்ளுக்கு விலையாக் கொடுக்கும். ஆமான் ஊனையும் வேழத்து
வெண் கோட்டையும் கள்ளுக்கு விலையாக் கொடுத்தனர். "அண்ணல்
யானை வெண்கோடு கொண்டு, நறவுநொடை நெல்லி னாண்மகி
ழயரும்", "வல்லி லிளையர் தலைவர்......................அரிய லாட்டிய
ரல்குமனை வரைப்பின், மகிழ்நொடை பெறாஅ ராகி நனைகவுட்,
கான யானை வெண்கோடு சுட்டி" (அகநா. 61 : 9 - 10,
245 : 7 - 11). பிழி-கள் நொடை - விலை.

     13. குன்றுகள் கலந்த புல்லிய பாலைநிலத்து மக்களும். வைப்பு:
ஆகுபெயர்.

     14-21. மருத நிலத்தின் இயல்பு.

     14. கரும்புதான் முற்றிவிளையும் காலத்தல்லாமலும்,
எப்பொழுதும் அறுத்து முடியாமல்; என்றது என்றும் கரும்பு
அறுக்கும் பாங்குடையதாயிற்று என்றபடி.

     15.அரி கால் அவித்து-நெல்லின் சூட்டை அவியச் செய்து.
பல பூ விழவின்-பல பூக்களால் கடவுளை வழிபடும் விழாவையுடைய;
"இந்திர விழவிற் பூவி னன்ன" (ஐங். 62 : 1) என்றலின் இவ்விழா
இந்திரனை நோக்கிச் செய்யப்பெறுவதுபோலும்.

     16-7. இனிமை பரவிய மருதமரத்தின் அடி விழும்படி மோதி
நுரையாகிய வெள்ளிய தலையையுடைய சிவந்த புதுப்புனல் எங்கும்
பரந்து தான் புகும் இடங்களை மிக்க வளமுடையதாகச் செய்யும்.
வெண்டலைச் செம்புனல்: பதிற். 87 : 2 - 3.

     18. பலசூழ் பதப்பர் பரிய-பல வைக்கோற்புரிகள் சூழ்ந்த
மணற்கோட்டை கரைய; மணற்கோட்டை வெள்ளத்துக்கு
அணைபோடும் பொருட்டு இடப்பட்டது.

     19. அணை இடுகின்ற ஆராவாரத்தோடு விருப்பம் கொண்ட
மக்கட்டொகுதி.

     20. முழவு ஒலிக்கின்ற பழைய ஊரில் நிகழும் விழாவைக்
கண்டு தம் இடத்திற்குத் திரும்பிச் செல்லுகின்ற. மூதூர் விழவு:
பதிற்.
15 : 18, 29 : 7.

     15-20. மணற்கோட்டை நீங்குதலால் மேலும் ஆரவாரஞ்செய்து
அணை கோலிய மக்கள் பின்னர் மூதூருக்குச் சென்று விழாவைக்
கண்டு பெயர்ந்தனர். மூதூர் என்றது இராசதானிநகரம் போலும்.

     21. வளத்தையுடைய பல ஊர்களையுடைய மருதநிலத்தின்
பகுதியிலுள்ள மக்களும்.

     22-5. குறிஞ்சி நிலத்தியல்பு கூறப்படும்.

     22-3. தினைக் கொல்லையை உழுவோர் வரகின்மேலே இட்ட
நறுமணம் மிக்க காட்டுமல்லி - கையையுடைய வன்மை பொருந்திய
இருப்பிடங்களில். வரகு மீதிட்ட-வரகின் வைக்கோலை மேலே
வேய்ந்த எனலுமாம்.

     24. மெல்லிய தினைமாவை முறைப்படியே விருந்தினர்க்குப்
பகுத்து அளித்துண்ணும். மென்திணை நுவணை: மலைபடு. 445 ;
ஐங்
.285 : 2.

     25. புல்லிய நிலங்களைத் தழுவிய காட்டை அணிந்த
இடங்களில் உள்ளோரும்.

     26-9. முல்லைநிலத்தின் இயல்பு கூறப்படும்.

     26. பலபூக்களின் வாடலையுடைய காடு தான் அளிக்கும்
பயன்கள் வேறுபட்டு. 27. செவ்வரக்கைப்போன்ற நுண்ணிய
மணலையுடைய குன்றுகளைத் தன்னிடத்தே கொண்டு.

     26-7. "அரக்கத் தன்ன செந்நிரப் பெருவழிக், காயாஞ்
செம்மறாஅய்" (அகநா. 14 : 1 - 2) 28. கழலொடு
மறுகும்-கழற்சிக்காயோடு திரியும்.

     29. வானத்திலே உயர்ந்து வளர்ந்த மரங்களையுடைய
காடுகளை யுடைய முல்லை நிலத்திலுள்ளாரும். கடறு - காடு.

     28-9. காலென்பதற்குச் செருப்பென்று பொருள்கூறி
இவ்வடிகளை மேற்கோள் காட்டினர் (சீவக, 1648, ந.)

     30. முரசைப் பெற்ற முடியுடை மன்னரும் குறுநிலமன்னரும்
வஞ்சினங் கூறி. வேந்தரும் வேளிரும் : பதிற். 88 : 13.

     31. கடலிலுள்ளனவும் காட்டிலுள்ளனவுமாகிய அரண்களால்
நன்மை பெறாராய் நடுங்கும்படி.

     32. போரை மிகுவிக்கின்ற கடிய (முரசினது) முழக்கம்
வானத்தை அடைந்து அதிரும்படி.

     33. கடுஞ்சினங் கடாஅய்-மிக்க சினத்தைச் செலுத்தி.
முழங்கும் மந்திரத்து - உரக்க உச்சரிக்கப்படுகின்ற மந்திரங்களால்.

     34. கடவுள் பேணியர்-முரசில் உறையுங் கடவுளை வழிபடும்
பொருட்டு.

     35. உயர்ந்தோன் - முரசுறை கடவுளை வழிபடுவோன்.

     36. கொடிய கண்ணையுடைய பேய்மகள் கையை அடித்து
நடுங்க. அப்பலியைக் கொள்ளமாட்டாமையின் நடுங்கியது. கருங்கட்
பேய் மகள் : பதிற். 22 : 37.

     37. நெய்த்தோர்-இரத்தம். நிறை மகிழ் இரும்பலி-நிறைந்த
கள்ளை யுடைய பெரிய பலி; பதிற். 19 : 6, உரை.

     38. முரசுறை கடவுள் விரும்புதலால் எறும்பும் மொய்யாத
வியப்பைத் தரும் முறையினால்.

     34-9. முரசுறை கடவுளுக்குப்பலியாக ஓச்சிய பிண்டத்தைப்
பேய் மகளும் எறும்பு முதலியனவும் பெறாமல் இருப்ப, காக்கையும்
பருந்தும் உண்டன.

     40. புறங்கொடுத்து ஓடாத கொள்கையையும், தாங்கள் செய்த
அரிய போர்த்தொழில்களைப் பொறித்தலையுடைய கழற்காலையும்
உடைய. ஒண்பொறிக் கழற்கால் : பதிற். 34 : 2.

     41. பெரிய போரிலே பகைவரைச் சிதைத்த, மேலும் போரை
விரும்பும் வீரரது.

     42. இடி பூமியை அதிரச் செய்யும் குரலைப்போன்ற
ஆரவாரத்தோடு. கொளை புணர்ந்து-யாழிசை சேரப் பெற்று; கொளை
- நரம்புக்கட்டு; அது யாழுக்காகி இங்கே யாழிசைக்காயிற்று.
கோட்பாடென்பர் உரையாசிரியர்.

     43. போர்வீரருக்கு மிக்க சோற்றை அளித்தற்கு ஒலிக்கும்.
பெருஞ்சோறு உகுத்தல் : புறநா. 2 : 16, குறிப்புரை.

     43-4. தழங்கு-ஒலிக்கும். முரசு எறியும் என்க; எறியும்; முற்று.
மு. 'வேந்தன் போர்தலைக் கொண்ட பிற்றைஞான்று போர் குறித்த
படையாளரும் தானும் உடன் உண்பான் போல்வதோர் முகமன்
செய்தற்குப் பிண்டித்து வைத்த உண்டியைக் கொடுத்தல் மேயின
பெருஞ்சோற்று நிலை' (தொல். புறத். 8, ந.)

     (பி - ம்.) 1. இணர்த்ததை. 38. இறும்பூதுபிரப்பின். (10)

     3. இதன் பதிகத்து அகப்பாவெறிதலைப் பகற்றீ வேட்டற்கு
அடை யாக்கியுரைக்க.

     4-5. முதியரை மதியுறழ்மரபிற்றழீஇ மண்வகுத்தீத்தெனக்
கூட்டித் 4தன் குலத்தில் தனக்கு முதியாரை மதியோடொத்த தன்
தண்ணளியால் தழீஇக்கொண்டு அவர்க்குத் தன்னாட்டைப் பகுத்துக்
கொடுத்தென உரைக்க.

     7. இருகடலுமென்றது தன்னதாய மேல்கடலும் பிறநாட்டதாய்ப்
பின்பு தான் பொருதுகொண்டு தன்னாடாக்கிய நாட்டிற்
கீழ்கடலுமென்றவாறு.

     6-7. கருங்களிற்றியானைப் புணர்நிரைநீட்டி இருகடனீரும்
ஒரு பகலாடியென்றது அவ்விருமுந்நீரும் ஒருபகலிலே வரும்படி
யானைகளை நிரைத்து அழைப்பித்து ஆடியென்றவாறு.

     8. அயிரை பரைஇயென்றது தன்னாட்டு 5அயிரையென்னும்
மலையில் வாழும் கொற்றவைக்கடவுளைத் தன்குலத்துள்ளார் செய்து
வரும் வழிபாடு கெடாமல் தானும் வழிபட்டென்றவாறு.

     ஆற்றல்சான் முன்போடு (8) காடுபோந்த (10) எனக்கூட்டுக.

     10. நெடும்பாரதாயனார் முந்துறக் காடுபோந்தவென்றது தன்
புரோகிதராகிய நெடும்பாரதாயனார் தனக்குமுன்னே துறந்து காடு
போக அதுகண்டு தானும் துறவுள்ளம் பிறந்து துறந்து காட்டிலே
போன வென்றவாறு.


     1தொல். புறத். 8; பு. வெ. 58.
     2மகளிர் மணலில் கழல் முதலியன விளையாடுதல் இயல்பு; பெரும்பாண். 327 - 35; புறநா. 36 : 4 - 5.
     3உடன் போக்கினை நினைத்துக் கூறியது இது.

     4இங்ஙனம் தன் குலத்து முதியோருக்கு நாட்டைப் பகுத்துக்
கொடுத்து ஆளச் செய்யும் வழக்கம் பிற்காலத்துச் சோழ மன்னர்
சிலரிடத்தும் இருந்ததென்பது அவர்கள் மெய்க் கீர்த்திகளால்
அறியப்படுகின்றது.

     5"கடவு ளயிரையி னிலைஇ" (பதிற். 79 : 18, உரை)





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

10. புகன்ற வாயம்
 
30.இணர்ததை ஞாழற் கரைகெழு பெருந்துறை
மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தற்
பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை
வாலிணர்ப் படுசினைக் குருகிறை கொள்ளும்
 
5அல்குறு கான லோங்குமண லடைகரை
தாழடும்பு மலைந்த புணரிவளை ஞரல
இலங்குநீர் முத்தமொடு வார்துகி ரெடுக்கும்
தண்கடற் படப்பை மென்பா லனவும்
காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர்
 
10செங்கோட டாமா னூனொடு காட்ட
மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு
பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும்
குன்றுதலை மணந்த புன்புல வைப்பும்
கால மன்றியுங் கரும்பறுத் தொழியா
 
15தரிகா லவித்துப் பலபூ விழவிற்
றேம்பாய் மருத முதல்படக் கொன்று
வெண்டலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும்
பலசூழ் பதப்பர் பரியவெள் ளத்துச்
சிறைகொள் பூசலிற் புகன்ற வாயம் 
 
20முழவிமிழ் மூதூர் விழவுக்காணூஉப் பெயரும்
செழும்பல் வைப்பிற் பழனப் பாலும்
ஏன லுழவர் வரகுமீ திட்ட
கான்மிகு குளவிய வன்புசே ரிருக்கை
மென்றினை றுவணை முறைமுறை பகுக்கும்
 
25புன்புலந் தழீஇய புறவணி வைப்பும்
பல்பூஞ் செம்மற் காடுபய மாறி
அரக்கத் தன்ன நுண்மணற் கோடுகொண்
டொண்ணுதன் மகளிர் கழலொடு மறுகும்
விண்ணுயர்ந் தோங்கிய கடற்றவும் பிறவும்
 
30பணைகெழு வேந்தரும் வேளிருமொன்றுமொழிந்து
கடலவுங் காட்டவு மரண்வலியார் நடுங்க
முரண்மிகு கடுங்குரல் விசும்படை பதிரக்
கடுஞ்சினக் கடாஅய் முழங்கு மந்திரத்
தருந்திறன் மரபிற் கடவுட் பேணியர்
 
35உயர்ந்தோ னேந்திய வரும்பெறற் பிண்டம்
கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க
நெய்த்தோர் தூஉய நிறைமகி ழிரும்பலி
எறும்பு மூசா விறும்பூது மரபிற்
கடுங்கட் காக்கையொடு பருந்திருந் தார
 
40ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்காற்
பெருஞ்சமந் தனதந்த செருப்பதன் மறவர்
உருமுநில னதிர்க்குங் குரலொடு கொளை புணர்ந்து
பெருஞ்சோ றுகுத்தற் கெறியும்
கடுஞ்சின வேந்தேநின் றழங்குகுரன் முரசே.

துறை  : பெருஞ்சோற்று நிலை.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்  : புகன்ற வாயம்.

1 - 8. இணர்ததை..........................பாலனவும்.

உரை : இணர்   ததை    ஞாழல்    கரைகெழு    பெருந்துறை
பூங்கொத்துக்கள்    கொய்யப்பட்டுச்    சிதறிக்கிடக்கும்   ஞாழல்கள்
நின்றுகரை  பொருந்திய பெரிய நீர்த்துறை யாகிய; மா இதழ் நெய்தல்
கரிய   இதழ்களையுடைய   நெய்தலின்;  பாசடை  மணிக்கலத்தன்ன
பனிக்கழி   -   பசிய   இலைகள்   நிறைந்த  நீலமணியாற்  செய்த
கலம்போன்ற  குளிர்ந்த  கழிக்கண்;  துழைஇ  -  மீன்  வேட்டமாடி;
புன்னை வாலிணர்ப் படுசினை - புன்னையின் வாலிய இணர் செறிந்த
கிளைகளிடத்தே;  குருகு  இறை  கொள்ளும்  -  மீனுண்  குருகுகள்
தங்கும்;  அல்குறுகானல்  ஓங்குமணல்  அடைகரை - மக்கள் சென்று
தங்குதற்குரிய  கானற்சோலையின்  உயர்ந்த  மணலடைந்த கரையில்;
தாழ்  அடும்பு  மலைந்த  புணரி  வளை  ஞரல  -  தாழ்ந்திருக்கும்
அடும்பங் கொடியை யலைத்த  திரையால் ஒதுக்கப்பட்ட சங்கு  கிடந்
தொலிக்க;  இலங்கு  நீர்    முத்தமொடு  வார்   துகிர் எடுக்கும் -
விளங்குகின்ற கடல் முத்துடனே   நீண்ட  பவளக்கொடிகளை அங்கு
வாழ்வோர் எடுத்துக்கொள்ளும்; தண் கடற் படப்பை மென்பா லனவும் 
- குளிர்ந்த கடற்பாங்கான நெய்தல் நிலமும் எ - று. 
 

ஞாழற்     பூக்களை வளையணிந்த மகளிர் விருப்பத்தோடு கொய்
தணிந்து  கொள்ப  வாதலின்,  இணர்  கொய்யப்பட்டுச்  சிதைவுற்றுத்
தோன்றுவது  பற்றி,  “இணர்  ததை  ஞாழல்”  என்றார். மகளிர் கூடி
விளையாட்டயரும்    பெருமையுடைமை   தோன்ற,   “பெருந்துறை”
யென்றும், அதன் கரைக்கண்ணே ஞாழல் நிற்குமாறு விளங்க, “ஞாழல்
கரைகெழு   பெருந்துறை”   யென்றும்  கூறினார். பெருந்துறையாகிய
பனிக்கழியென  இயையும.் நெய்தற்பூ நீலமணி போல்வதாகலின், அது
நிறைந்த   பனிக்கழியை   “மணிக்கலத்  தன்ன  நெய்தற்  பாசடைப்
பனிக்கழி”  யென்றார்.  பழையவுரைகாரரும், “மணிக்கல மென்றது நீல
மணியாலே செய்த பாத்திர” மென்றும், “மணிக்கலத் தன்ன கழியெனக்
கூட்டி, நெய்தற்பூவின் கருமையானும் அதன் பாசடைக்  கருமையானும்
மணிக்கலம் போன்ற கழியென வுரைக்க” வென்றும் கூறுவர்.

கழியிடத்தே     மீன் தேடி யுண்டு பசி தீர்ந்த குருகுகள்   பூவுந்
தளிரும் செறிந்து குளிர்ந்த நிழல் பரப்பி நிற்கும் புன்னைக் கிளையில்
தங்கியினிதிருக்கு    மென்பார்,   “பனிக்கழி   துழைஇப்   புன்னை
வாலிணர்ப் படுசினைக் குருகிறை கொள்ளும்” என்றும், ஏனை மாவும்
மக்களும்  இனிது  தங்குதற்கும்  இஃது  இனிய  இடமாம்  என்பார்,
“அல்குறு  கானல்”  என்றும்  சுட்டினார். இதனாற் பயன், இந்நிலத்து
வாழ்வார்    தம்    முயற்சி   பழுதுறாது    வேண்டுவன   பெற்று
இனிதிருக்குமாறு தெரிப்பதாவது.

கடற்    கானற்சோலை, ஓங்கு மணலடை கரைக்கண் உளதென்பது
விளங்க,  “கானல்  ஓங்கு  மணலடை கரை” யெனப்பட்டது. அக்கரை
யிடத்தே தாழ வளர்ந்திருக்கும் அடும்பினை யலைத்துவரும்  திரைகள்
கடலகத்   திருந்து   வளைகளைக்  கொணர்ந்தெறிதலின்,  அவற்றின்
முழக்கமும்  கானலிடத்தே  யுளதாயிற் றென்பார், “தாழடும்பு மலைந்த
புணரி    வளைஞரல”   வென்றார்.   தனது   வரவுகண்டு  தாழ்ந்த
அடும்பினை  மலைந்த  திரையாதலின்,  தன்னகத்தே  வாழ்ந்த சங்கு
அலறக்   கரையிடத்தே   அதனை   எறிவதாயிற்றென   ஒரு  நயந்
தோன்றுமாறு    காண்க.    “கானலென்றது    தன்னிடத்து   வந்து
இரைகொள்ளுதற்குக்  குருகு  தங்கி வாழும் கான” லென்றும், “புணரி
வளை   ஞரல  வென்றது,  கடல்  கொண்டுவந்த  சங்கு  திரையிலே
துவண்ட வருத்தத்தாலே ஈனுகைக்கு மெய் வருந்திக் கதற வென்றவா”
றென்றும்    பழையவுரைகாரர்    கூறுவர்.    வளையலறக்   கேட்டு
ஓடிப்போந்து   அதன்   முத்தையெடுப்பவர்   அவ்    வளையுடனே
யெறியப்படும் பவளத்தையும் எடுத்துக் கொள்வ ரென்பார், “இலங்குநீர்
முத்தமொடு  வார்துகி  ரெடுக்கும்”  என்றார்.  முத்தெடுக்க  வந்தவர்,
அதனோடு  பவளமும்  எளிதிற்  கொள்வரென இதனால் கடல் வளம்
கூறியவாறு.   எடுப்பாரது   வினை,   இடத்தின்மேனின்றது;    இனி, 
எடுக்குமென்பது    செயப்படுவினைப் பொருளதெனினும்    அமையும்.
பழையவுரைகாரர்  “முத்தமொடு  வார்துகி  ரெடுக்கு  மென்றது,  கரை
நின்றோரில்  வளைநரலக் கேட்டார் அம் முத்தெடுக்க வென்றது வந்து
முத்தையன்றி அதனோடு பவளத்தையும் எடுக்கும் என்றவா”  றென்பர்.
குறிஞ்சி   முல்லைகளை   வன்பா  லென்றும்,  மருத  நெய்தல்களை
மென்பா  லென்றும்  வழங்குப  வாதலின்,  இந்  நெற்தற்   பகுதியை
“தண்கடற் படப்பை மென்பாலன” என்றார். இது நெய்தல் கூறிற்று. 
 

9 - 13. காந்தளங்............வைப்பும்.

உரை : காந்தளங் கண்ணிக் கொலை வில் வேட்டுவர் -   காந்தட்
பூவால்    தொடுக்கப்பட்ட    கண்ணியினையும்   கொலை   புரியும்
வில்லினையுமுடைய  வேட்டுவர்  கொணர்ந்த;  செங்கோட்டு ஆமான்
ஊனொடு - செவ்விய கொம்பினையுடைய ஆமாவின்  இறைச்சியுடனே;
காட்ட   மதனுடை   வேழத்து  வெண்கோடு  கொண்டு  காட்டிடத்து
வாழ்வனவாகிய  வலியுடைய களிற்றி யானையின் கோட்டைப் பெற்றுக்
கொண்டு; பிழி நொடை கொடுக்கும் அவற்றின் விலைக் கீடாக வடித்த
கள்ளைக்  கொடுக்கும்;  பொன்னுடை  நியமத்து - பொன்னையுடைய
கடைத்தெரு  வமைந்த;  குன்று  தலை  மணந்த புன்புல வைப்பும் -
குன்றுகள் நெருங்கியுள்ள புன்புலமாகிய நிலப்பகுதியிலுள்ள ஊர்களும்
எ - று.

இப் புன்புல வைப்புக் குறிஞ்சியைச் சார்ந்து கிடத்தலானும், பூக்கள்
வந்த நிலத்தின் பயத்த வாதலானும் “காந்தளங் கண்ணி” கூறப்பட்டது.
இனி,  குறவராதலின்,  அவர்க்கேற்ப  இதனைக்  கூறினாரெனினுமாம்.
வேட்டுவர்   தாம்   வேட்டமாடிய  ஆமானின்  ஊனும்  வேழத்தின்
வெண்கோடும்   கொணர்ந்தமையின்   அவற்றைச்  சேரக்  கூறினார்.
வேட்டத்தின்  அருமைப்பாடு தோன்ற, “செங்கோட்டாமா” னென்றும்,
“மதனுடை   வேழ”   மென்றும்   சிறப்பித்தார்.  ஊனின்  சுவையும்
வெண்கோட்டின்       வன்மையும்        தோன்ற      இவ்வாறு
கூறினரென்பாருமுளர்.

இனி,     இப்  புன்புல  வைப்பின்  செல்வச்சிறப்புக்   கூறுவார்,
இங்கேயுள்ள   கடைத்தெருவைப்  “பொன்னுடை  நியமம்”  என்றார்,
இங்குள்ளார்  வேட்டுவர்க்கும்  பொன்னைத்  தந்து அவர் கொணரும்
ஊனும்  வேழ  வெண்கோடும்  பெறுதலே  யன்றி,  அவ் வேட்டுவர்
விரும்பும்   தேறலை  விலைப்பொருளாகத்  தருகின்றன   ரென்றற்கு,
“பொன்னுடை   நியமத்துப்   பிழிநொடை   கொடுக்கும்”   என்றார்.
“பொன்னுடை  நியம”  மென்றது, பொன்னைக் கொடுத்து வேண்டுவன
பெறுந்   திறம்  சுட்டி  நிற்கிறது;  உயிர்க்கொலை  புரியும் வேட்டுவ
ராதலின்,  பெறுதற்கரிய  பொன்னுடைய நியமம் புக்கும்  பொன்னைப்
பெறாது   வடித்த  கள்ளினையே  விரும்புவாராயினர்  என  அவரது
செயற்புன்மையை    யுணர்த்தியவாறாகக்    கோடலுமொன்று.   இது
முல்லையும்  குறிஞ்சியும்  சார்ந்த புன்புல வைப்பின் இயல்பு கூறிற்று.
புன்புல வைப்பில் வாழ்வார் வினை அவ் வைப்பின்மே னின்றது. 
  

14 - 21. காலமன்றியும்.............பழனப்பாலும்.

உரை : தேம்பாய் மருதம் முதல் படக் கொன்று -  தேன்  பாயும்
மருதமரத்தை அடியோடே சாய்த்து; வெண்டலைச் செம் புனல் பரந்து
-  வெள்ளிய  நுரை சுமந்து வரும் சிவந்த புது வெள்ளம் பரந்து வர;
மிகுக்கும்  வாய்  பல  சூழ் பதப்பர் - அது மிக்கு வரும் இடங்களில்
அணையாக  இடப்படும் பல வைக்கோற் புரிகள் சூழக் கட்டிய மணற்
கரிசைகள்;  பரிய  - கரைந்துகெட; வெள்ளத்துச் சிறை கொள் பூசலிற்
புகன்ற   ஆயம்  -  அவ்  வெள்ளத்தை  அணையிட்டுத்  தடுப்பார்
செய்யும்  ஆரவாரத்தில்விருப்புற்ற  மக்கட்  கூட்டம்;  முழவு  இமிழ்
மூதூர்  விழவுக்  காணூஉப்  பெயரும் முழவு  முழங்கும் பழைதாகிய
வூரிடத்து  நிகழும்  திருவிழாக்  கண்டு மீண்டு செல்லும்; செழும் பல்
வைப் பின் - செழுமையான பலவாகிய ஊர்களையும்; காலமன்றியும் -
காலமல்லாத  காலத்தும்; கரும்பறுத்து  ஒழியாது அரிகால் அவித்து -
விளைந்து  முதிர்ந்த  கரும்பினை  யறுத்துக் கொள்வதோடொழியாது
அதன்   அரிகாலையும்   அகழ்ந்து  சிதைத்து;  பலபூ  விழவின்  -
அவ்விடத்தே   மலரும்   பல்வகைப்  பூக்களைக்கொண்டு  எடுக்கும்
விழாவினையுமுடைய; பழனப் பாலும் - மருதநிலப் பகுதியும்  எ - று.

பல    பூ விழவினையும் செழும் பல்வைப்பினையுமுடைய பழனப்
பாலும்  என  இயையும். பழையவுரைகாரர், “பல பூ விழவினையுடைய
வைப்பு எனக் கூட்டுக” வென்பர்.

நீர் வளம் இடையறாமையின், காலமல்லாத காலத்தும் கரும்பு முற்றி
விளைவதும்    அறுக்கப்படுவதும்   உண்டென்பார்,   “காலமன்றியும்
கரும்பறுத்  தொழியாது”  என்றார். கரும்பறுத்த அரிகாலும் விளைந்து
முற்றுதலினாலும்,    கரும்பின்    பாத்தியில்   பல்வகைப்   பூக்கள்
மலர்தலினாலும்,  அப்  பூக்களின்  பன்மை  மிகுவது  குறித்து,  அரி
காலை  முற்றவும்  சிதைத்தன  ரென்பார், “அரிகா லவித்து” என்றார்.
அவித்து   என்னும்  வினையெச்சத்தைப்  பல  பூக்கொண்டெடுக்கும்
விழவின்  எனத்  தொக்கு  நிற்கும்  எடுக்கும் என்னும் வினையொடு
முடிக்க.  கரும்பின் பாத்தியிற் பல்வகைப் பூக்களும்  மலருமென்பதை,
“வயலே  நெல்லின்  வேலி  நீடிய  கரும்பின்,  பாத்திப்  பன்மலர்ப்
பூத்ததும் பின” (புறம். 386) என்று பிறரும் கூறுதலா லறிக. பல்வகைப்
பூக்களைக்கொண்டெடுக்கும்  விழா  இந்திர விழாவென வறிக; “இந்திர
விழாவிற்  பூவி  னன்ன” (ஐங். 62) எனச் சான்றோர் கூறுதல் காண்க.
இவ் விழா மென்புலத்தவர்க் குரியது.

நிரம்பப்  பூத்துத் தேன் சொரிய நின்ற மருதமரம் என்பார். “தேம்
பாய்   மருத”  மென்றும்,  வந்த  வெள்ளம்  அதனை  அடியோடே
சாய்த்துக்   கெடுத்த   தென்றற்கு  “முதல்படக்  கொன்று”  என்றும்
கூறினார்.  புதுப்புனல்  செந்நிறங்  கொண்டு  நுரைத்து வருமாதலின்,
அவ்வியல்பு    தோன்ற,    “வெண்டலைச்   செம்புனல்”   என்றார்.
பரந்தென்புழி  வர  என  ஒரு  சொல்  வருவிக்க  பழையவுரைகாரர்,
“புனல்  பரந்தென்றதனைப்  பரக்க  வெனத் திரிக்க” வென்பர். வாய்
மிகுக்கும்  என்பதனை  மிகுக்கும் வாய்  என மாறுக. நீர்ப்பெருக்கின்
வேகத்தால்         ஆழமாக    அறுக்கப்பட்ட       இடங்களில்
அப்     பெருக்கைத்     தடுத்து    அணையிடுவார்   வைக்கோற்
புரிகளைக்கொண்டு  மணற்கோட்டை  யமைத்து அணையாக நிறுத்துப
வாதலின்,     அவற்றைப்    “பல    சூழ்    பதப்பர்”    என்றார்.
பழையவுரைகாரரும்,  “பல  சூழ்  பதப்ப  ரென்றது,  பல  புரியாலும்
சூழப்பட்ட மணற்கோட்டை யென்றவா” றென்பர். இக் கோட்டையைக்
கரிசை   யென்றலும்   வழக்கு.   இம்  மணற்  கரிசைகளையும்  இச்
செம்புனல்  கரைத் தொழித்தலின் மக்கட் கூட்டம் பேராரவாரத்துடன்
மிக  உயரமும்  திண்மையும்  அமைந்த அணைசெய்தமைத்து நீரைத்
தடுத்து  வென்றி  கண்ட  இன்பத்தால்  அதனை  மேலும் விரும்பிப்
பலராய்க்  கூடி  அணையை  மிதித்து வன்மை செய்து மகிழும் நலம்
இனிது  விளங்க,  “சிறைகொள்  பூசலிற்  புகன்ற  ஆயம்”  என்றார்.
பெரும்படை  திரண்டு வரும் பகைவர் தானைப் பெருக்கை எதிரூன்றி
நின்று தடுத்துப் பற்றிச் சி்றை செய்து வென்றி பெற்று மகிழும் தானை
வீரர்   கூட்டம்   மேலும்   அச்  செயலையே  விரும்புதல்  போல,
நீர்ப்பெருக்கைச்  சிறை  செய்யும்  மக்கட் கூட்டத்தைச்  சிறப்பித்துக்
கூறிய   நயத்தால்   இப்   பாட்டிற்குப்   புகன்ற   வாயம்  என்பது
பெயராயிற்று.  பழையவுரைகாரர்,  “புகன்ற  ஆய  மென்றது,  முன்பு
மணலணைக்கு  நில்லாத பெருவெள்ளத்தினை அணைசெய்து  முடித்த
விருப்பத்தையுடைய  ஆயமென்றவா”  றென்றும்,  “இச் சிறப்புப்பற்றி
இதற்குப் புகன்ற வாயமென்று பெயராயிற்” றென்றும் கூறுவர்.
    

வெண்டலைச் செம்புனலை அணை நிறுவிச் சிறை செய்து மகிழ்ந்த
மக்கட்   கூட்டம்,  நாட்டின்  மூதூர்க்கண்  நிகழும்  திருவிழாவுக்குச்
சென்று   அதனைக்   கண்டு   திரும்புங்கால்,   மூதூர்க்  காட்சியும்
திருவிழாச்  சிறப்பும்  பேசிக்கொண்டு  ஆரவாரத்தோடு பெயர்தலின்,
அதனையும்  இதனோடியைத்து, “மூதூர் விழவுக் காணூஉப் பெயரும்”
என்றார்.  மூதூர்  என்பது  பெரிய ஊர்; வைப்பு, சீறூர்கள். சீறூரவர்
பேரூர்களில் நிகழும் விழாக் காணச் செல்வது மரபு.

22 - 25. ஏன லுழவர்........................வைப்பும்.

உரை : ஏனல் உழவர் - தினைக் கொல்லையை யுழுது     பயிர்
செய்யும்  குன்றவர்;  வரகு மீதிட்ட - வரகினது வைக்கோலை மேலே
வேயப்பட்ட;  கான்மிகு  குளவிய  அன்பு சேர் இருக்கை - மணமிக்க
காட்டு   மல்லிகை   வளரும்   அன்பு   பொருந்திய   மனைகளில்;
மென்றினை நுவணை முறை முறை பகுக்கும் - மெல்லிய தினைமாவை
வரும்  விருந்தினர்க்கு  முறை  முறையாக அளித்துண்ணும்; புன்புலம்
தழீஇயபுறவணிவைப்பும்  -  புன்செய் நிலங்களைத் தழுவிக் கிடக்கும்
முல்லைநிலத்தை யணித்தாகவுடைய குறிஞ்சிப் பகுதியும் எ - று.

மருத     நிலத் துழவர்க்கு நெல்போலக் குறிஞ்சி நிலத்தவர்க்குத்
தினையே சிறந்த தாகலின், அவர்களை “ஏன லுழவர்” என்றும், அவர்
இருக்கும்  வீடுகட்கு  வரகின்  வைக்கோலைக் கூரையாக வேய்வதும்,
மனைகளில்  காட்டு  மல்லிகை  வளர்ப்பதும்  இயல்பாதலின், “வரகு
மீதிட்ட  கான்மிகு  குளவிய  இருக்கை”  யென்றும்  கூறினார். கான்,
மணம்.     வில்லும்     அம்பும்     கொண்டு      விலங்குகளை
வேட்டையாடும்      வன்கண்மை               யுடையராயினும்,
குன்றவருடைய    மனைகளில்    அன்பும்    அறமும்    குன்றாது
பொருந்தியிருக்கும் திறத்தை, “அன்புசேர் இருக்கை” யென்றார். இனி,
இதனை  வன்புசேர்  இருக்கை  யென்று கொள்ளின், குன்றில் வாழும்
விலங்குகளாலும்   பிறவற்றாலும்  சிதைவுறாத  வன்மை  பொருந்திய
இருக்கை யென்று கொள்க. தினை நுவணை - தினைமா. இது தன்னை
யுண்டாரை  வேறெதுவும் உண்ண விரும்பாதவாறு பண்ணும் சுவையும்,
கருப்புக்   கட்டியைப்   பொடிசெய்து   கொழித்தெடுத்த   நுண்ணிய
பூழிபோலும் தோற்றமும் உடைய தென்பார், “விசையங் கொழித்த பூழி
யன்ன,  உண்ணுநர்த்  தடுத்த நுண்ணிடி நுவணை” (மலைபடு. 444-5)
என்று  சான்றோர்  கூறுதல்  காண்க.  என லுழவர் தம் அன்பு சேர்
இருக்கைக்   கண்ணிருந்து  ஆற்றும்  மனையறம்  கூறுவார்,  வரும்
விருந்தினர்க்கு  அவர் தகுதி யறிந்து முறை பிறழாமல் தினைமாவைப்
பகுத்துண்பர் என்றற்கு, “மென்றினை நுவணை முறைமுறை பகுக்கும்”
என்றார்.  புன்புலம்,  புன்செய்,  புறவு, முல்லைக்காடு. வைப்பென்றது,
ஈண்டு   வைப்புக்களையுடைய   நிலப்பகுதி   குறித்துநின்றது.  இது
குறிஞ்சியின் இயல்பு கூறிற்று.
  

26 - 29. பல்பூஞ்..............பிறவும்.

உரை : பல் பூஞ் செம்மற் காடு - பல்வகைப் பூக்களும்  உதிர்ந்த
வாடிக்  கிடத்தலையுடைய காடுகள்; பயம் மாறி - பயன்படும்  தன்மை
திரிந்து;  அரக்கத்  தன்ன  நுண்மணற் கோடு கொண்டு செவ்வரக்குப்
போன்ற  நுண்ணிய  மணல்  பொருந்திய மட்குன்றுகளைக் கொண்டு;
ஒண்ணுதல்  மகளிர்  கழலொடு  மறுகும்  -  ஒள்ளிய நுதலையுடைய
மகளிர்   காலிற்  செருப்பணிந்து  திரியும்;  விண்ணுயர்ந்  தோங்கிய
கடற்றவும்  பிறவும் - வானுற வோங்கிய மரங்கள் செறிந்த காடும் காடு
சார்ந்த பகுதியும் எ - று.

காடு   பயமாறி, அரக்கத் தன்ன கோடு கொண்டு, மகளிர் திரியும்
கடற்ற  என்றும்,  விண்ணுயர்ந்  தோங்கிய கடற்ற என்றும் இயையும்
முல்லைக்  காடுகள்  தழையும்  பூவும் உதிர்ந்து வெறுநிலமே தோன்ற
நிற்கும்  காட்சியை,  “காடு  பய  மாறி”  யென்றார். தழை முதலியன
வின்றி  நிற்கும்  கோடும்  அரக்குப்போற் சிவந்து நுண்மணல் பரந்து
தோன்றுதலின், “அரக்கத் தன்ன நுண்மணற் கோடுகொண்டு” என்றும்
அந்  நிலத்தே  இயங்கும்  மகளிர் காலிற் செருப்பணிந்து இருப்பதை
இன்றும்  காணலா  மாதலின்,  “மகளிர்  கழலொடு மறுகும்” என்றும்
கூறினார்.   கழல்,  ஈண்டுச்  செருப்பு.  “கழலிற்  செந்தாமரையடிகள்
புல்லி”  (சீவக.  1648)  என்புழிக் கழல் என்றதற்கு, நச்சினார்க்கினியர்
செருப்பெனப்  பொருள்  கூறியிருப்பது  காண்க. இனிக் கழலென்றது,
கழற்சிக்காய்  என்றும்  கூறுப.  இனிப் பழையவுரைகாரர், மணற்கோடு
கொண்டென்றது,   மணற்கோட்டைக்   கழலாடுதற்  கிடமாகக்கொண்
டென்றவாறென்றும்,   இனிக்   கழலென்றதனைக்  கழலை   யுடைய
தலைமகன்  காலாக்கி அக்காலொடு தலைமகளிர் புணர்ந்து உடன்போ
மென்பாரு    முளரென்றும்    கூறுவர்.    விண்ணுயர்ந்  தோங்கிய
கடறென்றது, வானளாவ    வுயர்ந்த      மரங்கள் செறிந்த காட்டை
யுணர்த்திநின்றது.    காட்டின் பயமாறிய பகுதியும் பயம்  பொருந்திய
பகுதியும்,  அக்காடு  சார்ந்த  பகுதியுமாகிய முல்லைப் புறவு  முற்றும்
அகப்பட    “கடற்றவும்   பிறவும்”   என்றார்.   “பிறவு   மென்றது
அவ்வாறொரு  நிலமாகச்  சொல்லப்படாத  பல  நிலப் பண்புமுடைய
இடங்களு  மென்றவா”  றென்து பழையவுரைகாரர் கூறுவர். இதுகாறும்
கூறிய   நிலப்பகுதிகளி   லெல்லாம்  அங்கு  வாழ்வோர்  வினையை
அவற்றின்   மேலேற்றிக்   கூறியதற்குப்  பழையவுரைகாரர்,  “முன்பு
எண்ணி நின்ற நிலங்களெல்லாம் ஆகுபெயரான் அந்நிலத்து வாழ்வார்
மேலனவாகக் கொள்க” என்று கூறுகின்றார். 
  

30 - 39. பணைகெழு............பருந்திருந்துஆர.

உரை : பணை கெழு வேந்தரும் வேளிரும் -   முரசினையுடைய
முடியுடைய  வேந்தரும் குறுநில மன்னரும்; ஒன்று மொழிந்து தம்முட்
கூடி  ஒரு  காரியமே  செய்வதாகத்  துணிந்து;  கடலவும்  காட்டவும்
அரண்வலியார்    நடுங்க    -   கடலிடத்தும்   காட்டிடத்தவுமாகிய
அரண்களைக் கொண்டும் வலியிலராய் நடுக்க மெய்துமாறு; முரண்மிகு
கடுங்குரல்  விசும்பு  அடைபு  அதிர  - மாறுபாடு மிக்க போரினைப்
புலப்படுத்தும்   முரசினது  கடிய  முழக்கமானது  சென்று  விசும்பக
மெல்லாம்  எதிரொலித்து முழங்க; கடுஞ்சினம் கடாஅய் - மறவர்பால்
மிக்க  சினத்தை  யெழுப்பி;  முழங்கும்  மந்திரத்து  - முழங்குகின்ற
மந்திர   வொலியால்;   அருந்திறல்  மரபின்  கடவுட்  பேணியர்  -
அரியதிறல்   படைத்த  முறைமையினையுடைய  முரசுறை  கடவுளை
வழிபடுவானாய்;  உயர்ந்தோன்  ஏந்திய  அரும்  பெறல்  பிண்டம் -
வழிபாட்டினைச் செய்வோனாகிய உயர்ந்தோன் படைத்த பெறுதற்கரிய
பலியினை;  கருங்கண்  பேய்மகள்  கைபுடையூஉ  நடுங்க  -  பெரிய
கண்களையுடைய    பேய்மகள்    தீண்டுதற்   கஞ்சிக்   கைகளைப்
புடைத்துக்கொண்டு  நடுங்க; நெய்த்தோர் தூய நிறைமகிழ் இரும்பலி -
குருதி  தூவிய  நிறைந்த  கள்ளொடு  கூடிய பெரிய அப் பலியானது;
எறும்பு   மூசா   இறும்பூது   மரபின்   -   எறும்பும்   மொய்க்காத
வியப்புத்தரும்        முறைமையினையுடைத்தாகவும்;      கருங்கண்
காக்கையொடு  பருந்து  இருந்து ஆர - தூவப்பட்ட அப் பலியினைக்
கரிய  கண்களையுடைய காக்கையுடனே பருந்துகள் இருந்துண்ணுமாறு
எ - று.

இது வெற்றி வாய்த்தற்பொருட்டு முரசுறை கடவுட்குப் பரவுக் கடன்
ஆற்றும்   திறம்   கூறுகிறது.   முரசுடைச்   செல்வராதலின்,   முடி
வேந்தரைப்  “பணைகெழு  வேந்தர்”  என்றார்;  அவர் பாண்டியரும்
சோழருமெனக்    கொள்க.   வேளி   ரென்றது,   அவ்விருவர்க்கும்
துணையாய்   வரும்  குறுநில  மன்னரை  என்க.  அவருள்  ஒருவர்
கருதியதே  ஏனை  யாவரும்  துணிந்  தொழுகினரென்றற்கு  “ஒன்று
மொழிந்”   தென்றார்.   பழையவுரைகாரர்,   “ஒன்றுமொழிந்தென்றது,
ஒருவர்     துணிந்ததே     காரியமாக    அனைவரும்    துணிந்து
சொல்லியென்றவா”  றென்பர்.  பாண்டி வேந்தர்க்கு மூன்று பக்கத்திற்
கடல்   அரணாகவும்,     சோழர்க்குக்   கிழக்கிற்   கடலரணாகவும்,
ஏனைப் பகுதிகளில்  காடு  அரணாகவும்  இருந்தமையின், “கடலவும்
காட்டவும்   அரண்”    என்றும்,  கடலும்  காடும்   பேரரண்களாக
விருப்பவும், அவ் வாற்றாலும்  மனத்திண்மை பெறாது நெஞ்சு கலங்கி
யஞ்சின   ரென்பது   தோன்ற, “அரண்  வலியார்  நடுங்க” என்றும்
கூறினார்.
 

சேரனது     போர்வன்மை குறித்துரைக்கும் முரசு    முழக்கினை,
“முரண்மிகு  கடுங்குரல்”  என்றும், அம் முழக்கம் வானத்தே  சென்று
எதிரொலித்   ததிர்வது   விளங்க,   “விசும்படைபு  அதிர”  என்றும்
விதந்தோதினார்.  இது  முரசுறை  கடவுட்குப்  பலியிடுவோர் செய்யும்
முரசு முழக்காகும்.

முரசுறை     கடவுட்குப் பலியிட்டு மந்திரம் கூறுவோன் அதனை
யோதுதற்குரிய   உயர்வுடைய  னாதலின்  அவனை  “உயர்ந்தோன்”
என்றும்,   முரசுறையும்   கடவுளின்  வெற்றி  பயக்கும்  சிறப்பினை,
“அருந்திறல்   மரபின்  கடவுள்”  என்றும்,  அவ்  வழிபாட்டிடத்தே
யோதப்படும்  மந்திரம்,  மானதம், மந்தம், உரை யென்ற  மூவகையுள்
உரையால்  முழக்கி  யோதப்படும்  வகையினைச்  சார்ந்த  தாதலின்,
“முழங்கு  மந்திரம்”  என்றும்,  அம்  மந்திர முழக்கம், கேட்கும் வீர
ருள்ளத்தே   பகைவர்பால்  மிக்க  சினத்தை  யெழுப்பும்  இயல்பிற்
றென்பார்  போல, “கடுஞ்சினங் கடாஅய் முழங்கும் மந்திர” மென்றும்
கூறினார்.   மந்திரத்  தென்புழி  ஆனுருபு  தொக்கது.   மந்திரத்தால்
கடவுட்குப்  பரவுக்  கடனாற்றும்  உயர்ந்தோன்,  அக் கடவுட்காக்கிய
பலியினைப்  பிறர்  பெறற்காகா  தென்பார்,  “அரும்பெறற் பிண்டம்”
என்றும,்   அது  குருதி  விரவிக்  கள்ளுடனே  கொடுக்கப் படுமாறு
தோன்ற,   “நெய்த்தோர்   தூஉய  நிறைமகி  ழிரும்பலி”  யென்றும்,
அதனால்,   பேய்மகள்   அதனைப்   பெறமாட்டாமையின்   அஞ்சி
நடுங்கின  ளென்பார்,  “கருங்கட்  பேய்மகள்  கைபுடையூஉ  நடுங்க”
வென்றும்,  அப்  பலியினை முரசுறை கடவுள் என்று  கொண்டதற்குச்
சான்றாக,  எறும்பும்  அதனை  மூசா  தென்றும் கூறினார். இஃதொரு
வியப்பாகலின், “இறும்பூது மரபின்” என்றார். பேய் மகளும்  எறும்பும்
பெறலாகாப்   பெருமை   யுடைத்தாயினும்,  இப்  பலி  காக்கைக்கும்
பருந்திற்கும் இடப்படும் என்பார், “கருங்கட் காக்கையொடு  பருந்திருந்
தார”   என்றார்.   காக்கையை   ஒடுக்கொடுத்   துயர்த்தியது,  அது
பருந்துபோல்  தனித்துண்ணாது  தன்னினத்தை  யழைத்து அவற்றோ
டிருந்துண்ணும்  உயர்  செய்கை  யுடையதாதலால்  என  அறிக. இப்
பகுதிக்கண்,   “முழங்கு   மந்திரமென்றது,  முழங்க  வுச்சரிக்கப்படும்
மந்திர   மென்றவா”  றென்றும்,  “மந்திரத்தானென  வுருபு  விரித்து
அதனைப்   பேணிய   ரென்பதனோடு  முடிக்க”  வென்றும்,  “கடவு
ளென்றது   முரசுறை  கடவுளை”  யென்றும்,  “கருங்கட்  பேய்மகள்
கைபுடையூஉ   நடுங்க,  உயர்ந்தோனேந்திய  அரும்பெறற்  பிண்டம்,
எறும்பு   மூசா   விறும்பூது  மரபின்,  நெய்த்தோர்  தூய  நிறைமகி
ழிரும்பலி,  கருங்கட்  காக்கையொடு பருந்திருந் தார வெனக் கூட்டுக”
வென்றும்,  “இறும்பூது  மரபிற்  பலியென மாறிக் கூட்டுக” வென்றும்,
“பேய்களும்    எறும்புகளும்    அஞ்சிச்    செல்லாத   பலிகளைக்
காக்கையொடு  பருந்திருந் தார வென்றது, அம் முரசுறை கடவுள் தன்
னாணையால்  தன்  பலிகளை  மேல்  தன்னருளாலே போர் வென்றி
விளைவது  அறிவித்தற்கு நிமித்தமாகக் காக்கையும் பருந்தும்  இருந்து
ஆர   வென்றவா”   றென்றும்,  “இவ்விடத்துக்குப்  பிறவாறு  கூட்டி
யுரைப்பாரு     முள”     ரென்றும்    கூறுவர்   பழையவுரைகாரர்.
“கடுஞ்சினங் கடாஅய்” என்ற   எச்சத்தைப் பழையவுரைகாரர் எறியும்
(வரி.  43)  முரசு என்பதனோடு முடிப்பர்.
 

40 - 44. ஓடா................முரசே.

உரை : கடுஞ் சின வேந்தே - மிக்க சினமுடைய வேந்தே;  ஓடாப்
பூட்கை   -  பகைவர்க்குப்  பிறக்கிடாத  மேற்கோளும்;  ஒண்பொறிக்
கழற்கால்  -  ஒள்ளிய பொறிகள் பொறித்த கழலணிந்த அடியுமுடைய;
பெருஞ்  சமம்  ததைந்த  -  பெரிய  போரிடத்தே பகைவர் செய்யும்
போரினைச்    சிதைத்துக்    கெடுத்த;    செருப்புகல்   மறவர்   -
போர்த்தொழிலை     விரும்பும்     வீரர்;    நிலன்    அதிர்க்கும்
உருமுக்குரலொடு   -  நிலத்தை  யதிரப்பண்ணும்  இடிபோலும்  தம்
குரலுடனே; கொளைபுணர்ந்து - இசை விருந்திற் கலந்து; பெருஞ்சோறு
உகுத்தற்கு  -  சோற்றுணவாகிய  பெரிய  விருந்துண்பித்தற்காக; நின்
தழங்கு  குரல்  முரசு  எறியும் - நினது முழங்குகின்ற  கொடைமுரசம்
எறியப்படுகின்றது எ - று.

பெருஞ்     சமம்  ததைந்த  செருவைப்  புகலும்  மறவ  ரெனப்
புகழ்கின்றாராகலின்,   அதற்குரிய   அவர்தம்   பண்பினை;  “ஓடாப்
பூட்கையொண்பொறிக்  கழற்கால்” என்பதனால் உணர்த்தினார். பொறி,
தொழிற்பாடு,  தாங்கள் செய்த போர்த்தொழிலின் வெற்றித் திறத்தைக்
கழலில்  பொறித்தலும் மரபாதலின், அப்பொறிகளை ஈண்டு ஒண்பொறி
யென்றாரெனினு   மமையும்.  “ஒண்பொறிக்  கழற்கால்”  (பதிற்.  34)
என்பதற்குப்   பழையவுரைகாரர்   கூறுவதனால்,   இம்   மரபுண்மை
அறியப்படும்.  உருமு  நிலன்  அதிர்க்கும்  குரல்  என்பதனை,  நில
னதிர்க்கும்  உருமுக்  குரல்  என  மாறுக. பழையவுரைகாரர், “மறவர்
குரலெனக்  கூட்டுக” வென்றும், “ஆகுபெயரான் உருமு நிலனதிர்க்கும்
குரலோடு   ஒத்த   மறவர்   குரலை  உருமு  நிலனதிர்க்கும்  குரல்
என்றானாகக்  கொள்க”  வென்பர்.  மறவர் குரலுக்கு உருமுக் குரலை
யுவமம்   கூறியது,  அவரது  முரண்மிகு  மறத்தைக்   குறித்துநின்றது.
பெருஞ்  சமம்  ததைந்த  வீரர்க்கு  இசை விருந்தும்  பெருஞ்சோற்று
விருந்தும்  செய்தல்  வேந்தர்க்கு  இயல்பாதலின்,   அவ்வியல்புபற்றி,
எறியப்படும்  முரசினை  ஈண்டு எடுத்தோதினார். இப் பெருஞ்சோற்று
நிலை,  “முதியர்ப்  பேணிய  வுதியஞ்சேரல்,  பெருஞ்சோறு கொடுத்த
ஞான்றை”    (அகம்.    233)   என்பதனாலும்,   “பிண்டம்   மேய
பெருஞ்சோற்று  நிலை” (தொல். பொ. 63) என ஆசிரியர் கூறுதலாலும்
உணரப்படும்.    இக்    கருத்தே   கொண்ட   நச்சினார்க்கினியரும்
இப்பாட்டினைப்  பெருஞ்சோற்று  நிலைத்  துறைக்கு   உதாரணமாகக்
காட்டுகின்றார்.

இதுகாறும்     கூறியது,  மென்பாலனவும்,  புன்புல    வைப்பும்,
பழனப்பாலும்,  புறவணி  வைப்பும்,  கடற்றவும்  பிறவுமாகிய ஐவகை
நிலத்து  மக்களும்,  அந்நிலத்து  வேந்தரும்  வேளிரும்  தங்களிலே
யொன்று மொழிந்து அரண் வலியாராய் நடுங்குமாறு, கடுங்குரல் விசும்
படைந்ததிர,  பேய்மகள்  கைபுடைத்து  நடுங்க, கடுங்சினங் கடாஅய்
முழங்கும் மந்திரத்தான்உயர்ந்தோ  னேந்திய பிண்டமாகிய, எறும்பு மூசா                      இறும்பூது                   சான்ற
மரபினையுடைய,   நெய்த்தோர்   கலந்த  நிறைமகி   ழிரும்பலியைக்
காக்கையொடு     பருந்திருந்     தார,     செருப்புகல்     மறவர்
குரலெடுத்துப்பாடும்     இசைவிருந்தோடு           பெருஞ்சோற்று
விருந்துண்பித்தற்கு,    வேந்தே,    நின்    தழங்கு   குரல்   முரசு
எறியப்படுகிறது   என்பதாம்.  இனிப்  பழையவுரைகாரர்,  “மென்பால்
முதலாகக்  கடறீறாக எண்ணப்பட்ட ஐவகை நிலத்து மக்களும் பிறவும்,
அந்நிலத்து  வேந்தரும்  வேளிரும்  தங்களிலே  யொன்று மொழிந்து,
அரண்வலியாதே    நடுங்காநிற்கும்படி,    கடுங்குரல்   விசும்படைந்
ததிரும்படி, கடுஞ்சினத்தைக் கடாவிப் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க,
உயர்ந்தோ   னேந்திய   பிண்டத்தினையும்,  எறும்பு  மூசா  மரபின்
நெய்த்தோர்     தூஉய     நிறைமகிழிரும்பலியினையும்    கருங்கட்
காக்கையொடு பருந்திருந் தாரா நிற்க, செருப்புகல் மறவரது குரலோடே
கோட்பாடு  பொருந்திப்  பெருஞ்சோறு உகுத்தற்கு எறியப்படாநின்றது
நின் முரசென வினைமுடிவு செய்க” வென்பர்.
 

இதனால்    சேரனது    வென்றிச்சிறப்புக்      கூறியவாறாயிற்று.

வேந்தரும்     வேளிரும் அஞ்சி நடுங்க, முரசிற்குப்    பலியிட்டு,
பெருஞ்சமம்   ததைந்த   செருப்புகல்   மறவர்க்குப்   பெருஞ்சோறு
வழங்குவது   குறித்து  நின்  முரசு  முழங்குகிறதெனப்  பல்யானைச்
செல்கெழு   குட்டுவன்,  தன்  வீரர்க்கு  வழங்கும்  பெருஞ்சோற்றுப்
பெருவிருந்து    இப்பாட்டின்கட்   பொருளாக   இருத்தலின்,   இது
பெருஞ்சோற்று நிலை என்னும் துறையாயிற்று.
 

ஆராத் திருவின் சேரலா தற்கு
வேளாவிக் கோமான்
பதுமன் தேவி யீன்ற மகன்முனை 
பனிப்பப் பிறந்து பல்புகழ் வளர்த்
தூழி னாகிய வுயர்பெருஞ் சிறப்பிற்
பூழி நாட்டைப் படையெடுத்துத் தழீஇ
உருள்பூங் கடம்பின் பெருவாயி னன்னனை
நிலைச்செருவி னாற்றலை யறுத்தவன்
பொன்படு வாகை முழுமுதல் தடிந்த 
குருதிப் செம்புனல் குஞ்சர மீர்ப்பச்
செருப்பல செய்து செங்களம் வேட்டுத்
துளங்குகுடி திருத்திய வளம்படு வென்றிக்

களங்காய்க்     கண்ணி  நார்முடிச்  சேரலைக்    காப்பியாற்றுக்
காப்பியனார்  பாடினார்  பத்துப்பாட்டு. அவைதாம், கமழ்குரற் றுழாய்,
கழையமல்   கழனி,   வரம்பில்  வெள்ளம்,  ஒண்பொறிக்  கழற்கால்,
மெய்யாடு  பறந்தலை,  வாள்  மயங்கு  கடுந்தார்,  வலம்படு வென்றி,
பரிசிலர்  வெறுக்கை,  ஏவல் வியன்பணை, நாடுகா ணவிர்சுடர். இவை
பாட்டின் பதிகம்.

பாடிப்   பெற்ற   பரிசில்   :  நாற்பது     நூறாயிரம்    பொன
ஒருங்கு கொடுத்துத் தான் ஆள்வதிற் பாகங் கொடுத்தான் அக்  கோ.

களங்காய்க்  கண்ணி  நார்முடிச்    சேரல்     இருபத்தையாண்டு
வீற்றிருந்தான்.


 மேல்மூலம்