முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
31. குன்றுதலை மணந்து குழூஉக்கட லுடுத்த
மண்கெழு ஞாலத்து மாந்த ரொராங்குக்
கைசுமந் தலறும் பூசன் மாதிரத்து
நால்வேறு நனந்தலை யொருங்கெழுந் தொலிப்பத்
  5 தெள்ளுயர் வடிமணி யெறியுநர் கல்லென
உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி
வண்டூது பொலிதார்த் திருஞெம ரகலத்துக்
கண்பொரு திகிரிக் கமழ்குரற் றுழாஅய்
அலங்கற் செல்வன் சேவடி பரவி
  10 நெஞ்சுமலி யுவகையர் துஞ்சுபதிப் பெயர
மணிநிற மையிரு ளகல நிலாவிரிபு
கோடுகூடு மதிய மியலுற் றாங்குத்
துளங்குகுடி விழுத்திணை திருத்தி முரசுகொண்
டாண்கட னிறுத்தநின் பூண்கிளர் வியன்மார்பு
  15 கருவி வானந் தண்டளி தலைஇய
வடதெற்கு விலங்கி விலகுதலைத் தெழிலிய
பனிவார் விண்டு விறல்வரை யற்றே
கடவு ளஞ்சி வானத் திழைத்த
தூங்கெயிற் கதவங் காவல் கொண்ட
  20 எழூஉநிவந் தன்ன பரேரெறுழ் முழவுத்தோள்
வெண்டிரை முந்நீர் வளைஇய வுலகத்து
வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து
வண்ட னனையைம னீயே வண்டுபட
ஒலிந்த கூந்த லறஞ்சால் கற்பிற்
  25 குழைக்குவிளக் காகிய வொண்ணுதற் பொன்னின்
இழைக்குவிளக் காகிய வவ்வாங் குந்தி
விசும்புவழங்கு மகளி ருள்ளுஞ் சிறந்த
செம்மீ னனையணின் றொன்னகர்ச் செல்வி
நிலனதிர் பிரங்கல வாகி வலனேர்பு
  30 வியன்பணை முழங்கும் வேன்மூ சழுவத்
தடங்கிய புடையற் பொலங்கழ னோன்றாள்
ஒடுங்காத் தெவ்வ ரூக்கறக் கடைஇப்
புறக்கொடை யெறியார்நின் மறப்படை கொள்ளுநர்
நகைவர்க் கரண மாகிப் பகைவர்க்குச்
  35 சூர்நிகழ்ந் தற்றுநின் றானை
போர்மிகு குருசினீ மாண்டனை பலவே

     துறை - செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. பெயர் -
கமழ்குரற்றுழாய் (8)

     (ப - ரை) ஒலிப்பப் (4) பரவி (9) என்ன முடிக்க.

     5-6. மணியெறிதலை உண்ணாப்பைஞ்ஞிலத்தின் தொழிலாக்கி
அவர்கள் மணியை எறிந்து தீர்த்தமாடுகின்றார்களாகக் கொள்க.

     6. உண்ணாப் பைஞ்ஞிலமென்றது அத்திருமால் கோயிலுள்
வரம்வேண்டி உண்ணாது கிடந்த மக்கட்டொகுதி யென்றவாறு.

     இனி எறியுநரென்பதனைத் தொழிற்பெயராக்கி,
மணியையெறிவார் 1தீர்த்தமாடுவேர் ஆடுதற்கு இது 2முகுத்தமென்று
அறிந்து வருதற் பொருட்டு அம்மணியை எறிந்து
ஆரவாரிப்பவென்றுரைப்பாரும் உளர்.

     8. கமழ்குரற்றுழாயென்றது நாறுகின்ற பூங்கொத்துக்களையுடைய
துழாயென்றவாறு. 3நாறாத பூவுடையதனை மிக நாறுவதொன்றுபோலச்
4சாதிபற்றிச் சொன்ன சொற்சிறப்பான் இதற்கு,
'கமழ்குரற் றுழாய்'
என்று பெயராயிற்று.

     9. செல்வனென்றது 5திருவனந்தபுரத்துத் திருமாலை.

     10. பதிப்பெயரவென்னும் எச்சத்திணை மதியம் இயலுற்றாங்கு
(12) என்னும் வினையொடு முடிக்க.

     உண்ணாப் பைஞ்ஞிலம் (6) நெஞ்சுமலியுவகையராய்த் தாம்
தாம் துஞ்சும் பதிகளிலே பெயரும்படி (10) மையிருள் அகலக் (11)
கோடுகூடு மதியம் இயலுற்றாங்குத் (12) துளங்கு குடி விழுத்திணை
திருத்தி (13) எனக்கூட்டி, உண்ணாது வரங்கிடந்த மக்கட்டொகுதி
வரம்பெற்று நெங்சுமலிந்த உவகையராய்த் தாம் தாம்
துஞ்சுபதிகளிலே பெயரும்படி இருள் அகல விரிந்து
கோடுகூடுதலையுடைய உவாமதியம்..................................

     இனி, துஞ்சுபதிப் பெயர (10) என்னும் எச்சத்தினை ஆண்கடன்
இறுத்த (14) என்னும் வினையொடுமுடித்து, 6வழி ஆறலை கள்வர்
முதலாய ஏதங்களின்றித் தாம்தாம் துஞ்சுபதிகளிலே பெயரும்படி தன்
ஆண்மைக் கடனை இறுத்தவென்று உரைப்பாரும் உளர்.

     13. முரசுகொண்டென்றது சிலகாலத்துப் பயன்கொள்வார்
இன்மையிற் பண்ணழிந்து கிடந்த பழமுரசினைத் தான் தோன்றி
அதன் அழிவு தீர்த்து அதன் பயன்கொண்டென்றவாறு.

     14. ஆண்கடன் இறுத்தவென்றது ஆண்மக்களாயுள்ளார்
தம் கீழ் வாழ்வாரைக் காத்தற்பொருட்டு அவர்க்கு அவர்செய்யும்
கடன்களெல்லாம் செய்துமுடித்தவென்றவாறு.

     16. விலங்கியென்றதனை விலங்கவெனத் திரிக்க.

     17. பனிவார் விண்டுவாகிய விறல்வரையென இருபெயரொட்டு.

     கூந்தலினையும் கற்பினையும் (24) நுதலினையும் (25)
உந்தியினையும் (26) உடைய தொன்னகர்ச் செல்லி (28) என மாறிக்
கூட்டுக.

     28. செம்மீன் - 7அருந்துதி.

     29. நிலனதிரவெனத் திரிக்க. 31. புடையலென்றது பனந்தார்.

     புடையலினையும் கழனோன்றாளினையுமுடைய (31) நின் படை
கொள்ளுநர் (33) என மாறிக் கூட்டுக.

     33. ஈண்டுப் படை கொள்ளுநரென்றது 8படைத்தலைவரை
யென்றவாறு. நின் மார்பு (14) பனிவார் விண்டு விறல்வரையற்று
(17) ; நின்றோள்கள்
எழுஉநிவந்தன்ன (20); நீ தான்
வண்டனென்பவனை அனையை (23); நின் செல்வி செம்மீனனையள்
(28); நின் மறப்படை கொள்ளுநர் புறக்கொடை யெறியார் (33); நின்
தானை (35) நகைவர்க்கு அரணமாகிப் பகைவர்க்குச் (34)
சூர்நிகழ்ந்தற்று (35); அவ்வாற்றாற் குருசில், நீ பலவும் மாட்சிமைப்
பட்டனை (36) என வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவற்குள்ள மாட்சிமையெல்லாம்
எடுத்து 9உடன் புகழ்ந்தவாறாயிற்று.

     (கு - ரை) 1 - 10. திருமாலை வழிபடுவார் செயல்.

     1. குன்றுகள் தம்மிற் கூடப்பெற்றுப் பல பொருள்களும்
திரளுதலை யுடைய கடலை ஆடையாக உடுத்த.

     2. மண்கெழு ஞாலத்து - மண் அணுக்கள் பொருந்திய
பூமியில் (பதிற்.69 : 12). ஓராங்கு - ஒருதன்மைப்பட.

     3. கைசுமந்து அலறும் பூசல் கைகளைத் தலைமேலேந்தித்
தம் குறையை எடுத்துக்கூறி வேண்டிக்கொள்ளும் ஆரவாரம். பூசல் :
எழுவாய். மாதிரத்து - திசைகளில். 3 - 4. பூசல் ஒலிப்ப.

     5. தெளிந்த ஓசையையுடைய உயர்ந்த திருந்திய
கைத்தொழிலையுடைய மணியை அடிப்பவர் கல்லென்னும் ஓசைபட
ஆரவாரிப்ப.

     6. உண்ணாப் பைஞ்ஞிலம் பட்டினி கிடக்கும் மக்களின்
தொகுதி; பைஞ்ஞலம் பஞ்ஞிலமெனவும் வழங்கும். பனித்துறை
மண்ணி -குளிர்ச்சியை யுடைய நீர்த்துறைகளில் நீராடி.

     7-9. திருமாலின் சிறப்பு.

     7. தார் திருமகளுக்கு அடை. திரு ஞெமரகலத்து - திருமகள்
பரவிய மார்பின்கண்; "திருஞெமர்ந் தமர்ந்த மார்பினை" (பரி. 1 : 8)

     8. கண்பொரு திகிரி - கண்ணை வெறியோடச் செய்யும்
சக்கரப் படையையும்; "கண்பொரா வெறிக்கும்" (மதுரைக். 665, உரை)

     8-9. நறுமணம் வீசும் பூங்கொத்துக்களையுடைய
துளவமாலையை அணிந்த திருமாலினது திருவடிகளைப் புகழ்ந்து
வணங்கி.

     10. துஞ்சு பதிப்பெயர - தாம் தாம் தங்குகின்ற ஊர்களுக்கு
மீட்டும் செல்ல.

     பூசல் ஒலிப்ப, கல்லென, பைஞ்ஞிலம் பரவி உவகையராகிப்
பெயர.

     11. நீலமணியின் நிறத்தைப்போன்ற கரிய இருள் நீங்கும்படி
நிலாவைப் பரப்பி.

     12. இருபக்கமும்ஒன்றுபட்ட முழுமதி வானத்திற் சஞ்சரித்தாற்
போல; கோடு கூடுமதியம்: "கோடுகொ ளொண்மதியை" (களவழி. 22).
பிறையை, "கோடுவாய் கூடாப் பிறை" (கலித். 142 : 24) எனக்
கூறுதல் காண்க.

     13. துளங்கு குடி விழுத்திணை திருத்தி - வறுமையால்
தளர்ந்த குடிகளையுடைய சிறந்த குடும்பங்களைப் பண்டுபோல
நிலைநிறுத்தி (பதிற். 32; 7, 37 : 7). முரசு கொண்டு - பகைவரை
வென்று களத்திலே அவரிட்ட முரசைக் கைக் கொண்டு; முரசு
கொள்ளல்: மதுரைக.் 129; அகறா. 36 : 21 - 2, புறநா 25 : 7,
72 : 8 - 9, 179 : 4 - 5. உரையாசிரியர் வேறு உரை கூறுவர்.

     14. ஆண் கடன் இறுத்த - வீரருக்குச் செய்யவேண்டிய
கடமைகளை ஒழுங்காகச் செய்துமுடித்த; என்றது பகைவரை
வெற்றிகொண்டு, அவ்வெற்றிக்குக் காரணமாக நின்ற வீரருக்கு
வரிசையும் பரிசுமளித்தான் என்றபடி. பூண்கிளர் வியன்மார்பு -
பேரணி விட்டு விளங்குகின்ற அகன்ற மார்பு; எழுவாய்.

     15. தண் தளி தலைஇய - தண்ணிய துளியைப் பெய்த.

     16-7. வடக்குத் தெற்காகச் செல்லும் மார்க்கத்தைத் தடுத்து
விட்டு விளங்குகின்ற சிகரத்தை உடையதாகி அழகுபெற்ற பனிமிக்க
இமயமலையினது, பிறமலைகளை வென்ற வெற்றியையுடைய பக்க
மலையை யொப்பது. விலகு தலை என்றது மின்னுகின்ற
இமயமலையின் பொற்கோட்டை; "மின்னுமிழ் வைரக் கோட்டு
விளங்கொளி யிமயமென்னும், பொன்னெடுங் குன்றம்" (சீவக. 2417)

     18-20. தேவருக்குப் பயந்து ஆகாயத்திலே அவுணர்
அமைத்த இயங்குகின்ற அரணத்தின் கதவைக் காக்கின்ற
கணையமரம் மேலேழுந்தாற் போன்றன பருத்த அழகிய
வலிமையையுடைய முழவனைய தோள்கள். நிவந்தன்ன: முற்று.
வானத்து இழைத்த தூங்கெயிலென்றது தேவர்களினின்றும் தம்மைப்
பாதுகாத்துக் கொள்ள அரசர் அமைத்த மூன்று அரணங்களை;
அவற்றை ஒரு சோழன் அழித்தான்; "திறல் விளங் கவுணர்
தூங்கெயி லெறிந்த, விறன்மிகு முரசின் வெல்போர்ச் சோழன்"
(தொல். களவு. 11, ந. மேற்)

     21. வளைஇய - வளைந்த.

     22. வண்புகழ் நிறுத்த - கொடையால் வரும் புகழைத்
தன்னிடத்தே நிறுத்திய; "வண்புகழ் மூவர்" (தொல். செய். 79).
வகைசால் செல்வத்து - கூறுபாடு மிக்க செல்வத்தையுடைய.

     23. வண்டன் : ஒரு கொடையாளிபோலும். வண்டுபட -
வண்டுகள் ஒலிக்கும்படி. 24 - 8. சேரன் மாதேவியின் சிறப்பு.

     24. ஒலிந்த - தழைத்த. அறஞ்சால் கற்பின் -
அறக்கற்பையுடைய.

     25-6. குழைக்கு விளக்காகிய ஒண் நுதல் - காதணிக்கு
விளக்கம் அளிப்பதாகிய ஒள்ளிய நெற்றி; "குழைவிளங் காய்நுதல்"
(குறுந். 34 : 7, பி - ம்.) பொன்னாலாகிய ஆபரணங்களுக்கு
விளக்கம் அளிப்பவளாகிய. அ வாங்கு உந்தி - அழகிய வளைந்த
கொப்பூழ்.

     28. செம்மீன் - அருந்ததி. தொன்னகர்ச் செல்வியென்றது
பெருந்தேவியை. கற்புக்கு அருந்ததியைக் கூறுதல்: பதிற். 89 : 19 -
20; பெரும்பாண். 302 - 4 குறிப்புரை.

     29-30. நிலன் அதிர்பு இரங்கலவாகி - பூமியிலுள்ளார் நெஞ்சு
நடுங்கும்படி முழங்காதனவாகி; அதிர்பு : எச்சத்திரிபு. வலனேர்பு
வியன்பணை முழங்கும் - வெற்றிக்களத்தே எழுச்சி பெற்று அகன்ற
முரசு முழங்கும்; வெற்றியை மேற்கொண்டு முழங்குமெனலுமாம்.
வேல்மூசு அழுபத்து - வேற்படை நெருங்கிய பரப்பில்.

     31. விரியாது அடங்கிய பனைமாலையையும் பொன்னாலாகிய
கழலை யணிந்த வலிய தாள்களையும் உடைய: புடையல் -
பனைமாலை (பதிற்.37 : 8, 42 : 1, 57 : 2; புறநா.99 : 5). இவை
சேரன் படையிலுள்ளாருக்குரியன.

     32. அடங்காத பகைவரது மனவெழுச்சி நீங்கும்படி அவர்களை
ஓட்டி.

     33. புறக்கொடை எறியார் - பகைவர் புறங்கொடுத்து
ஓடும்பொழுது அவர்மேல் ஆயுதங்களை எறியார்; இவ்வாறு எறியாது
நிற்கும் இயல்பைத் தழிஞ்சியென்னும் துறையின்பாற் படுத்துவர்;
"அழிகுநர் புறக்கொடையயில்வா ளோச்சாக், கழிதறு கண்மை காதலித்
துரைத்தன்று" (பு. வெ. 55). மறப்படை காள்ளுநர் - வீரத்தையுடைய
படைத்தலைவர்.

     34. நகைவர்க்கு அரணமாகி - தன்பால் அன்புடையாருக்குப்
பாது காப்பாகி; நகைவர்: பதிற். 37 : 4, 43 : 20; புறநா. 373 : 35.

     35. சூர் நிகழ்ந்தற்று - தெய்வம்பற்றி வருத்தியதுபோல்வது.
தானை - தானையிலுள்ள படைவீரர்: ஆகுபெயர், 36. பல
மாண்டனை- இவ்வாறு பல வகையால் நீ மாட்சிமைப்பட்டாய்.

     (பி - ம்.) 2. மாந்தரோங்குக. 20. நிமிர்ந்தன்ன. 34.
நயவர்க்கரணம். (1
)


     1இப்பொருளே சிறப்புடையதாகத் தோற்றுகின்றது.

     2முகுத்தம் - முகூர்த்தமென்பதன் சிதைவு.

     3"நக்கலர் துழாஅய் நாறிணர்க் கண்ணியை" (பரி.. 4 : 58)
எனத் துழாய் பூங்கொத்து மணமுடையதென்று கூறுவதனால் இவ்வுரை
சிறப்புடையதாகத் தோற்றவில்லை.

     4சாதியென்றது பூவென்னும் சாதியை.

     5ஆடக மாடத் தறிதுயி லமர்ந்தோன்" (சிலப். 26 : 62)
என்றவிடத்து 'ஆடகமாடம் - திருவனந்தபுரம்' என்று
அரும்பதவுரையாசிரியர் எழுதிய குறிப்பு இங்கே கருதற்குரியது.

     6செங்கோல் மன்னர் நாட்டில் ஆறலை கள்வரால் வரும்
ஏதமில்லையெனக் கூறுதல் மரபு; "அத்தஞ் செல்வோ ரலறத் தாக்கிக்
கைப்பொருள் வௌவுங் களவேர்்வாழ்க்கைக் கொடியோ ரின்றவன்
கடியுடைவியன்புலம்" (
பெரும்பாண். 39 - 41)

     7அருந்ததியை அருந்துதி எனலும்ஒரு வழக்கு; "இருந்துதி
வண்டன வாலெரி முன்வலஞ் செய்திடப்பால்,
அருந்துதி
காணுமளவுஞ் சிலம்ப னருந்தழையே" (திருச்சியிற். 300)

     8பின்னர், தானையெனப் படைவீரரைக் கூறுதலின் இங்கே
படைத் தலைவரெனக் கொள்ளவேண்டும்.

     9உடன் - ஒருங்கே.






பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

1. கமழ்குரல் துழாய்
 
31.குன்றுதலை மணந்து குழூஉக்கட லுடுத்த
மண்கெழு ஞாலத்து மாந்த ரொராங்குக்
கைசுமந் தலறும் பூசன் மாதிரத்து
நால்வேறு நனந்தலை யொருங்கெழுந் தொலிப்பத்
 

தெள்ளுயர் வடிமணி யெறியுநர் கல்லென
உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி
வண்டூது பொலிதார்த் திருஞெம ரகலத்துக்
கண்பொரு திகிரிக் கமழ்குரற் றுழா அய்
அலங்கற் செல்வன் சேவடி பரவி
10நெஞ்சுமலி யுவகையர் துஞ்சுபதிப் பெயர
மணிநிற மையிரு ளகல நிலாவிரிபு
கோடுகூடு மதிய மியலுற் றாங்குத்
துளங்குகுடி விழுத்துணை திருத்தி முரசுகொண்
டாண்கட னிறுத்தநின் பூண்கிளர் வியன்மார்பு
 
15கருவி வானந் தண்டளி தலைஇய
வடதெற்கு விலங்கி விலகுதலைத் தெழிலிய
பனிவார் விண்டு விறல்வரை யற்றே
கடவு ளஞ்சி வானத் திழைத்த   
தூங்கெயிற் கதவங் காவல் கொண்ட
 
20எழூஉநிவந் தன்ன பரேரெறுழ் முழவுத்தோள்
வெண்டிரை முந்நீர் வளைஇய வுலகத்து
வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து
வண்ட னனையைமன் னீயே வண்டுபட
ஒலித்த கூந்த லறஞ்சால் கற்பின்
 
25குழைக்குவிளக் காகிய வொண்ணுதற் பொன்னின்
இழைக்குவிளக் காகிய வவ்வாங் குந்தி
விசும்புவழங்கு மகளி ருள்ளுஞ் சிறந்த
செம்மீ னனையணின் றொன்னகர்ச் செல்வி
நிலனதிர் பிரங்கல வாகி வலனேர்பு
 
30வியன்பணை முழங்கும் வேன்மூ சழுவத்து
அடங்கிய புடையற் பொலங்கழ னோன்றாள்
ஒடுங்காத் தெவ்வ ரூக்கறக் கடைஇப்
புறக்கொடை யெறியார்நின் மறப்படை கொள்ளுநர்
நகைவர்க் கரண மாகிப் பகைவர்க்குச்
 
35சூர்நிகழ்ந் தற்றுநின் றானை
போர்மிகு குரிசினீ மாண்டனை பலவே.

துறை  : செந்துறைப்பாடாண்பாட்டு.
வண்ணம்  : ஒழுகு வண்ணம்.
தூக்கு  : செந்தூக்கு.
பெயர்  : கமழ்குரற் றுழாஅய்.

1 - 10. குன்றுதலை...........பெயர. 

உரை : குன்றுதலை மணந்து - குன்றுகள்   பல    தம்மிற் கூடித்
தொடர்ந்து;    குழூஉக்    கடல்    உடுத்த   -   அலைகள்   கூடி
முழங்குதலையுடைய  கடலை ஆடைபோலச் சூழக்கொண்ட; மண்கெழு
ஞாலத்து மண் பொருந்திய நிலவுலகத்தில்; மாந்தர் கைசுமந்து ஒராங்கு
அலறும்  பூசல்  -  வழிபட  வரும் மக்கள் தம் தலைமேற் கைகூப்பி
ஒருங்குகூடிச் செய்யும் பேராரவாரம்; நால் வேறு மாதிரத்து நனந்தலை
-  நான்காக  வேறுபட்ட  திசையிடத்தே  பரந்த இடங்களில்; ஒருங்கு
எழுந்  தொலிப்ப  -  ஒன்றாய்த்  திரண்டெழுந் தொலிக்க; உயர்வடித்
தெள்மணி  எறியுநர்  - உயர்ந்த மிகத் தெளிந்த ஓசையைக்  செய்யும்
மணியை  யியக்குபவர்;  கல்லென  -  கல்லென  வோசை யெழுமாறு
இயக்காநிற்ப;    உண்ணாப்    பைஞ்ஞிலம்    -  உண்ணாநோன்பு
மேற்கொண்ட    விரதியர்;    பனித்துறை   மண்ணி   -  குளிர்ந்த
நீர்த்துறைக்குச்  சென்று  படிந்து  நீராடி;  திருஞெமர்   அகலத்து -
திருவீற்றிருக்கும்    மார்பின்கண்    அணியப்பெற்றுள்ள;   வண்டூது
பொலிதார்  கமழ்குரல்  துழாஅய்  -  வண்டு  மொய்த்து  விளங்கும்
மாலையாகிய     மணம்    கமழும்    கொத்துக்களாற்    றொடுத்த
துளசிமாலையும்;  கண் பொரு திகிரி - காண்பவர் கண் கூசுமாறு ஒளி
திகழும்   ஆழிப்படையு   முடைய;   செல்வன்   சேவடி  பரவி  -
செல்வனான   திருமாலின்  செவ்விய  அடியில்  வணங்கி  வாழ்த்தி;
நெஞ்சு  மலி  உவகையர்  -  நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சி யுடையராய்;
துஞ்சு  பதிப் பெயர - தாந்தாம் இனி துறையும் ஊர்கட்குத்  திரும்பச்
செல்ல எ - று.

மாந்தர்    அலறும் பூசல் ஒருங்கெழுந் தொலிப்ப, மணி யெறியுநர்
கல்லென இயக்க, பைஞ்ஞிலமாகிய விரதியர், துறை மண்ணி, செல்வன்
சேவடி  பரவி,  உவகையராய்ப்  பதிப்  பெயர என முடிக்க கல்லென
இயக்க   என   ஒருசொல்  வருவிக்க.  குழூஉதல்,  அலைகள்  கூடி
முழங்குதல்.  பல  பொருள்களும்  திரளுதலையுடைய  கடல் குழூஉக்
கடல்  எனப்பட்ட  தென்றும்  கூறுவர்.  தலைமணத்தலாவது, தம்மிற்
கூடித்         தொடர்ந்திருத்தல்.     கடற்பகுதியை     நீக்குதற்கு
“மண்கெழு              ஞாலம்”        என்றார்.        உச்சிக்
கூப்பிய  கையராய்ப்  பலராய்  ஒருங்கு  கூடிச்  செய்து  கொள்ளும்
வேண்டுகோளின்கண்   குறையே  பெரிதெடுத்து  மொழியப்படுதலின்,
அதனை,    “அலறும்    பூசல்”   என்றார்.   குறையை   நினைந்து
மொழியுமிடத்து  மனம் கலங்கி அழுகை தோற்றுவித்தலின்,  “அலறும்
பூச”  லாயிற்றென  வறிக.  நால்வேறு  மாதிரத்து  நனந்தலை யென்க.
மக்கள்    நாற்றிசையிலும்    பூசலிட்டு   வருதலின்,    நாற்புறத்தும்
ஒருங்கெழுந்   தொலித்த  தென்றார்.  தெள்ளுயர்  வடிமணி  யெனக்
கிடந்தவாறே   கொண்டு   தெளிந்த   ஓசையும்  உயர்ந்த  திருந்திய
தொழிற்பாடும்   உடைய   மணியென்   றுரைப்பினு   மாம்.  எறியுந
ரென்பதை  வினையெச்ச  முற்றாக்கி,  கல்லென்னு  மோசை யுண்டாக
எறிந்துகொண்டு செல்ல என்றலுமொன்று. “மணி யெறிதலை உண்ணாப்
பைஞ்ஞிலத்தின்  தொழிலாக்கி  அவர்கள்  மணியை யெறிந்து தீர்த்த
மாடுகின்றார்களாகக்  கொள்க.  எறியுந  ரென்பது  வினையெச்ச முற்”
றென்றும்,  “இனி, எறியுந ரென்பதனைத் தொழிற்பெயராக்கி, மணியை
யெறிவார்   தீர்த்த   மாடுதற்கு   இது   முகுத்த  மென்று  அறிந்து
வருதற்பொருட்டு அம்மணியை யெறிந் தாரவாரிப்ப வென் றுரைப்பாரு
முளர்”  என்று  பழையவுரைகாரர்  கூறுவர்.  உண்ணாப் பைஞ்ஞிலம்
என்பதில்,  ஞிலமென்பது ஆகுபெயராய் மக்கட்டொகுதியை யுணர்த்த,
உண்ணாவென்பது அதனை விசேடித்து, உண்ணா நோன்பினையுடைய
மக்கட்  டொகுதி  யென்ப  துணர  நின்றது.  உண்ணாப்  பைஞ்ஞில
மென்றது “அத் திருமால் கோயிலுள் வரம் வேண்டி யுண்ணாது கிடந்த
மக்கட்   டொகுதி   யென்றவாறு”  என்பது  பழையவுரை  திருமகள்
வீற்றிருக்கும் மார்பினைத், “திருஞெம ரகலம்” என்றார். “திருஞெமர்ந்
தமர்ந்த  மார்பினை”  (பரி.  1)  என்றார் பிறரும். வண்டூது பொழிதா
ராகிய  துழாய்  என்று  இயைக்க. தாரையுடைய திரு வென இயைதலு
மொன்று.  துழாயும் திகிரியுமுடைய செல்வன் என்க. நறுமணங்கமழும்
இயல்பிற்றாதல்  தோன்ற,  “கமழ்  குரல்  துழாய்”  என்றார்; பிறரும்,
“நக்கலர்  துழா  அய் நாறிணர்க் கண்ணியை”(பரி. 4) என்பது காண்க.
தனித்தனிப் பூக்களாக எடுத்துத் தொடுக்கப்படாது கொத்துக் கொத்தாக
வைத்துத்  தொடுக்கப்படும்  சிறப்பும்,  மிகச் சிறிதாகிய  தன்னகத்தும்
தன்னைச் சூழ்ந்திருக்கும் இலைகளி னகத்தும் ஓரொப்ப  மணங்கமழும்
மாண்புமுடைய துழாயை, கமழ்குரற் றுழாய் எனச் சிறப்பித்த  செம்மை
கருதி,    இப்   பாட்டிற்கு   இது   பெயராயிற்று.   இனி,   “நாறாத
பூவுடையதனை  மிக  நாறுவ தொன்று போலச் சாதி பற்றிச்  சொன்ன
சொற்  சிறப்பான்  இதற்குக்  கமழ்குரற்  றுழா  யென்று  பெயராயிற்”
றென்பர்     பழையவுரைகாரர்.     அவரே,    செல்வ    னென்றது
“திருவனந்தபுரத்துத் திருமாலை” யென்றும் கூறுவர்.  

இதனால்,   உண்ணா  நோன்பிகளும்     பிறரும்     திருமாலை 
வழிபடுந்   திறம்   கூறப்படுமாறு  காண்க.

11 - 17. மணிநிற....................அற்றே.

உரை : மணி நிற மையிருள் அகல - நீலமணியின் நிறத்தையுடைய
கரிய  விருள்  நீங்கும்படி;  கோடு  கூடு மதியம் நிலா  விரிபு இயலுற்
றாங்கு  -  பக்கம்  நிரம்பிய முழுமதியம் வெண்ணிலவைப்  பொழிந்து
செல்வது போல; துளங்கு குடி விழுத்திணை  திருத்தி -  வருத்தமுற்ற  
குடிமக்களின்      நல்லொழுக்கம்   இனிது    நிலவப்பண்ணி; முரசு
கொண்டு  -  பகைவரை வென்று அவர்தம் முரசினைக் கைக்கொண்டு;
ஆண்    கடன்    இறுத்த    -   ஆண்மைக்குரிய   கடமைகளைச்
செவ்வையாகச் செய்து முடித்த; நி்ன் பூண் கிளர் வியன்  மார்பு நினது
பூணார  மணிந்த அகன்ற மார்பு; கருவி  வானம்  தண் தளிதலைஇய
-  தொகுதி  கொண்ட  மேகம்  குளிர்ந்த  மழையைப் பெய்தவற்றை;
வடதெற்கு  விலங்கி  -  வடக்கிலிருந்து தெற்காகக் குறுக்கிட்டு நின்று;
விலகு   தலைத்து   எழிலிய   -  தடுத்த  உச்சியினை  யுடைத்தாய்
எழுந்துள்ள;  பனிவார்  விண்டு விறல்வரையற்றே - குளிர்ந்த பெரிய
மலையையொப்பதாகும் எ - று. 

மதியம்     இருளகல நிலா விரித்து இயலுற் றாங்கு, குடி   திணை
திருத்தி  ஆண்  கடன்  இறுத்த நின் மார்பு வரையற்று என  முடிக்க.
பிறைமதியின்  இருகோடும்  கூடியவழி  முழு மதிய மாதலின், “கோடு
கூடு  மதியம்”  என்றார்.  எனவே, கோடு கூடாதது பிறையாதல் பற்றி,
“கோடு  வாய் கூடாப் பிறை” எனச் சான்றோராற் கூறப்படுதல் காண்க.
இருளகற்றி   நிலவைச்   சொரிந்து  செல்லும்  மதியம்  போல,  இச்
சேரமானும்   குடிமக்களுக்கு   உண்டாகியிருந்த   துளக்கம்    நீக்கி,
அருளைச்     செய்து,     திருமாலை     வழிபடுதல்      முதலிய
நல்லொழுக்கத்திலே   செல்வித்த  சிறப்புக்  குறித்து,  “துளங்கு  குடி
விழுத்திணை    திருத்தி”    என்றும்,    துளக்கத்துக்   கேதுவாகிய
பகைத்துன்பத்தை    நீக்கியவாற்றை,    “முரசுகொண்டு”    என்றும்,
மக்களைத்   தமக்குரிய  நல்லொழுக்கத்திலே  நிறுத்துதல்  ஆண்கட
னாதலின்,  அவ்வாறு  நிற்பித்த  சிறப்பை,  “ஆண்  கடன்  இறுத்த”
என்றும்  கூறினார்;  “நன்னடை  நல்கல் வேந்தற்குக் கடனே” (புறம்.
312)  என்று  பிறரும் கூறுதல் காண்க. மக்கட்கு உண்டாகிய துளக்கங்
கெடுத்து  விழுமிய ஒழுக்கத்தை மேற்கொள்வித்த இவனது மாண்பைப்
பிறாண்டும்,  “ஆன்றவிந்  தடங்கிய செயிர்தீர் செம்மால், வான்றோய்
நல்லிசை   யுலகமோ  டுயிர்ப்பத்,  துளங்குகுடி  திருத்திய  வலம்படு
வென்றியும்”   (பதிற்.   37)   என்று  பாராட்டுவர்.  இனி,  இதனை,
விழுத்திணை  துளங்குகுடி  திருத்தி  என இயைத்து உயர்ந்த குடியிற்
பிறந்தோருடைய     வறுமையால்    தளர்ச்சியுற்ற    குடும்பங்களை
அவற்றிற்கு  வேண்டுவன  வுதவி  நன்னிலைக்கண்  நிறுத்தி யென்று
உரைத்தலுமுண்டு;   ஈண்டு  அதனாற்  பொருள்  சிறவாமை காண்க.
தலைஇய என்பதனைப் பெயராக்கி, இரண்டாவது விரித்து முடிக்க. வட
தெற்காக   விலங்கி   நிற்பது  சேரநாட்டு  மலைத்  தொடர். கிழக்கு
நோக்கியும் மேற்கு நோக்கியும் செல்லும் மேகக் கூட்டத்தைக் குறுக்கே
நின்று  தடுக்கும்  சிகரத்தை  யுடைத்தாய்  உயர்ந்து  நிற்பது  பற்றி,
மேலை   மலைத்தொடரை,   “வட  தெற்கு  விலங்கி  விலகுதலைத்
தெழிலிய,    பனிவார்    விண்டு”    என்றார்.   வில   கென்னும்
முதனிலை,  பெயரச்சப்  பொருட்டு. எழிலிய, உயர்ச்சிப் பொருட்டாய
பெயரெச்சக்  குறிப்பு.  “பனிவார்  விண்டு” என்றது கொண்டு, இதற்கு
இமயமலை   யென்று   பொருள்   கூறுவாருமுளர்.   மேலைமலைத்
தொடரும்   அவ்  வியல்பிற்றாதல்  கோடைக்கானல், உதகமண்டலம்
முதலியவற்றால்  அறியப்படும்.  இனி, பழையவுரைகாரர், “பதிப்பெயர
(10)   வென்னும்   எச்சத்தினை   மதியம்  இயலுற்றாங்கு   என்னும்
வினையொடு  முடிக்க” என்றும், “உண்ணாப் பைஞ்ஞிலம் நெஞ்சுமலி
யுவகையராய்த்   தாம்  துஞ்சு   பதிகளிலே   பெயரும்படி  மையிரு
ளகலக்    கோடு   கூடுமதியம்  இயலுற்  றாங்குத்      துளங்குகுடி
விழுத்திணை  திருத்தி  எனக் கூட்டி முடிக்க” என்றும், “துஞ்சு பதிப்
பெயர  வென்னும் பெயரெச்சத்தினை ஆண் கடன் இறுத்த வென்னும்
வினையொடு முடித்து, வழி, ஆறலை கள்வர் முதலாய ஏதங்களின்றித்
தாந்  தாம்  துஞ்சுபதிகளிலே  பெயரும்படி  தன் னாண்மைக்கடனை
இறுத்த வென் றுரைப்பாரு முள” ரென்றும் கூறுவர். 

இனி,    முரசு கொண்டு வேறே உரை கூறலுற்ற பழையவுரைகாரர்,
“முரசுகொண்  டென்றது,  சிலகாலத்துப்  பயன்கொள்வா ரின்மையி்ன்,
பண்ணழிந்து  கிடந்த  பழைய  முரசினைத்  தான்  தோன்றி  அதன்
அழிவு   தீர்த்து   அதன்   பயன்கொண்டு”   என்றும்,   ஆண்கட
னிறுத்தலாவது   “ஆண்   மக்களாயுள்ளார்   தம்   கீழ்வாழ்வாரைக்
காத்தற்பொருட்  டவர்க்கு  அவர்  செய்யும் கடன்களெல்லாம் செய்து
முடித்த”  லென்றும்  கூறுவர்.  விலங்கியென்பதனை விலங்க வெனத்
திரித்து,  பனிவார்  விண்டுவாகிய  விறல்  வரையென இருபெயரொட்
டென்று பழையவுரை கூறும்.

18 - 23. கடவுள்................நீயே.

உரை :  பரே ரெறுழ் முழவுத் தோள் - பருத்த அழகிய வலிமிக்க
நின்னுடைய  முழவுபோலும் தோள்கள்; கடவுள் அஞ்சி - தேவர்கட்கு
அஞ்சி;  வானத்து  இழைத்த  தூங்கு  எயில்  கதவம்  - வானத்தில்
அவுணர்களால்    அமைக்கப்பட்டிருந்த   தொங்குகின்ற   மதிலினது
கதவுக்கு;    காவல்    கொண்ட    எழூஉ    நிவந்    தன்ன   -
காப்பாக  இடப்பட்ட  கணைய  மரத்தைத் தூக்கி நிறுத்தினாற் போல
வுள்ளன;  வெண்  திரை  முந்நீர்  வளைஇய  உலகத்து - வெள்ளிய
அலைகளையுடைய கடல் சூழ்ந்த நிலவுலகத்தில்; வண் புகழ் நிறுத்த -
வளவிய  புகழை  நிலை நாட்டின; வகை சால் செல்வத்து - பலவேறு
வகையினைக்  கொண்ட  செல்வங்களையுடையனாதலால்;  வண்டன் -
வண்டன்  என்னும்  வள்ளலை;  நீ  அனையை  மன் - நீ பெரிதும்
ஒத்திருக்கின்றாய் எ - று.

அவுணர்  தமக்குப் பகைவராகிய தேவர்கட்கு அஞ்சி வானத்திலே
தாம்  செல்லுமிடந்தோறும்  உடன்வருமாறு  அமைத்திருந்த மதிலைச்
சோழனொருவன்  தேவர்பொருட்டு  வென்  றிழித்தா னென்பது கதை.
இதனை,  “திறல்விளங் கவுணர் தூங்கெயி லெறிந்த, விறல்மிகு முரசின்
வெல்போர்ச்சோழன்”  (தொல்.  கள. 11. நச்.) என்றும், “வீங்கு தோள்
செம்பியன்    சீற்றம்    விறல்    விசும்பில்,    தூங்கு   மெயிலும்
தொலைத்ததால்”  (பழ.  49)  என்றும்  சான்றோர்  கூறுதல்  காண்க.
கடவுள்  என்புழி  நான்கனுருபு  விகாரத்தாற்றொக்கது. முழவு போலும்
தோள்,  முழவுத்தோ  ளெனப்பட்டது.  தோள்கள்  நிவந்தன்ன  என
முடிக்க.    எழூஉ,   கதவுக்குக்   காப்பாகக்   குறுக்கே  இடப்படும்
கணையமரம். குறுக்கே கிடக்கும் எழூஉ தோட்கு உவம மாகாமையின்,
“எழூஉ  நிவந்தன்ன”  என்றார். பழையவுரைகாரரும், “நின் தோள்கள்
எழூஉ   நிவந்தன்ன”   என்றே  கூறுவர்.  வண்புகழ்க்கு  நிலவுலகம்
ஆதாரமாதலின்,  “உலகத்து  வண்புகழ்  நிறுத்த”  என்றும்,  உலகம்
கடலாற் சூழப்பட்டுநிலைத்திருப்பது     அதன்கண் வாழ்வார் இசை
நடுதற்பொருட்டே யென்பது தோன்ற, “வெண்டிரை முந்நீர்  வளைஇய
உலகத்து” என்றும் சிறப்பித்தார். புகழ்  ஈவார்மேல்  நிற்ப தாகலானும்,
அதன் வண்மை ஈயப்படும்  செல்வத்தின்  பன்மை மேல  தாகலானும்,
செல்வத்துப் பயனே  ஈத (புறம்.  189) லாகலானும், “வண்புகழ் நிறுத்த
வகைசால்  செல்வத்து”   என்று   கூறினார்.  எனவே,   வண்புகழும்
செல்வமும்   வண்டன்   என்பான்   பால்   சிறப்புற    இருந்தமை
பெறப்படும். மன், மிகுதி குறித்து நின்றது. 

இனி,   நிவந் தன்ன என்பதை முற்றாக்காது நிவந் தன்ன முழவுத்
தோளால்  வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்தையுடைய வண்டன்
என்பானை    ஒப்பாய்   என்றுரைப்பின்,   சேரனுடைய   பலவகை
மாட்சிகளையும்  தெரித்துக் கூறும் ஆசிரியர் கருத்து விளக்கமுறாமை
காண்க.

24 - 8. வண்டுபட............செல்வி.

உரை : வண்டுபட ஒலித்த கூந்தல் - வண்டு மொய்க்கத் தழைத்த
கூந்தலையும்;  அறம்  சால்  கற்பின்  -  அறம் நிறைந்த கற்பையும்;
குழைக்கு   விளக்காகிய   ஒள்  நுதல்  -  காதிலணிந்த  குழைகட்கு
விளக்கத்தை  நல்கும்  ஒளி  பொருந்திய  நெற்றியையும்; பொன்னின்
இழைக்கு  விளக்காகிய  (மேனி)  -  தானணிந்த  பொன்னாற் செய்த
இழைகட்கு விளக்கந் தரும் மேனியையும்; அவ் வாங்கு உந்தி அழகிய
வளைந்த  உந்தியையு  முடைய;  தொல்  நிகர்  நின் செல்வி பழைய
பெருமனையிடத்தே யுள்ளவளாகிய நின் பெருந்தேவி; விசும்பு வழங்கு
மகளி ருள்ளும் - விண்ணுலகத்தே இயங்கும் மகளி ருள்ளே; சிறந்த -
சிறந்தவளான;  செம்  மீன்  அனையள்  -  சிவந்த  விண் மீனாகிய
அருந்ததி போன்றவளாவாள் எ - று.

குழலும்   கற்பும் நுதலும் மேனியும் உந்தியுமுடைய செல்வி என்க.
மனையறத்திற்குரிய   அறம்   பலவும்   கற்றுத்  தெளிந்த   அறிவும்
செயலுமுடைய  ளென்பது தோன்ற, “அறஞ்சால் கற்பு” என்றார். நுதல்
குழைக்கு   விளக்கம்   தருமெனவே,  இழைக்கு  விளக்கம்  தருவது
மேனியாதல்  பெற்றாம்.  நுதல் குழைக்கு விளக்கம் தருதலை,  “குழை
விளங்காய் நுதல்” (குறுந். 34) என்று பிறரும் கூறுதல் காண்க. சிவந்த
ஒளியுடைத்  தாதலின்,  அருந்ததி  மீன்  செம்மீன்  எனப்பட்டது. நீ
வண்டன்  அனையை;  நின்  மனைவி  அருந்ததியனையள்   என்றா
ராயிற்று.

29 - 33. நிலனதிர்பு...............கொள்ளுநர்.

உரை : வியன் பணை - நினது  பெரிய  முரசு;  நிலன்  அதிர்பு
இரங்கல  வாகி  -  நிலத்தவர் கேட்டு  வறிதே  மனம்  நடுங்குமாறு
முழங்காது;  வலன்  ஏர்பு  முழங்கும் - வெற்றி மிகுதி குறித்தெழுந்து
முழங்கும்;   வேல்   மூசு   அழுவத்து   -  வேற்படை  நெருங்கிய
போர்க்களத்தில்; அடங்கிய புடையல் - அடக்கமாகத் தொடுக்கப்பட்ட
பனை மாலையும்; பொலங் கழல் நோன்றாள் - பொற்கழல்  அணிந்த
வலிய       தாள்களையுமுடைய;      நின்           மறப்படை
கொள்ளுநர்    -    நின்னுடைய    மறம்    மிக்க    தானைக்குத்
தலைமைகொள்ளும் வீரர்; ஒடுங்காத் தெவ்வர் ஊக்கு அறக் கடைஇ -
நின்  போர்வன்மை  நினைந்து  அஞ்சி  யடங்கி  யொழுகா  தெழும்
பகைவர்  தம்  ஊக்கம்  கெட்டழியுமாறு படைகளைச் செலுத்தி;  புறக்
கொடை  எறியார்  -  ஆற்றாமையால்  அப்  பகைவர்  புறங்கொடுத்
தோடுங்கால் அவர்மேல் தம் வேல் முதலிய படைகளை எறிவது இலர்
எ - று.  

நின்     முரசின்   முழக்கம்   கேட்டவழி   நிலத்து    வாழும்
மக்களனைவர்க்கும்  பேரச்சம்  உண்டாதல் கண்டு, போரிடை யன்றிப்
பிறவிடத்து   முழங்கா  தாயிற்  றென்பார்,  “வியன்பணை,  நிலனதிர்
பிரங்கல  வாகி  வலனேர்பு முழங்கும்” என்றார். எனவே, சேரனுடைய
முரசுகளுள்,  போர்  முரசுகள்  போர்  குறித்தன்றி  வறிது  முழங்கா
என்றும்,  பிற  மண  முரசும் கொடை முரசுமே எக்காலத்தும் முழங்கு
மென்றும்  கூறியவாறாயிற்று.  செயவெனெச்சம்  அதிர்பெனத்  திரிந்து
நின்றது.  பழையவுரைகாரரும்  “நிலனதிர  வெனத்  திரிக்க”  என்பர்.
புடையலும்  நோன்றாளு  முடைய  கொள்ளுநர்  என்க. கோடற்குரிய
தலைமைப்    பொருள்   அவாய்   நிலையால்   வருவிக்கப்பட்டது.
“பகைவர்க்குச்   சூர்  நிகழ்ந்தற்று  நின்தானை”  (34-5)  என்கின்றா
ராகலின்,  கொள்ளுநர்  என்றது  தானைத்  தலைவரை யென்றாயிற்று.
“நிலைமக்கள்  சால வுடைத்தெனினும் தானை, தலைமக்களில்வழியில்”
(குறள்.    770)   என்ப   வாகலின்,   மறப்படைக்குத்    தலைவரை
விதந்தோதினார்.  தலைவர் இயல்பு கூறவே, அவர்வழி நிற்கும் மறவர்
இயல்பு  கூறவேண்டாவாயிற்று.  உடைய தம் வலி அறியாது ஊக்கமே
பொருளாக   எழுந்த   பகைவரை,  “ஒடுங்காத்  தெவ்வர்”  என்றும்,
அவர்தாம்  ஊக்கமழிந்தவழிநடுங்கி  யொடுங்குதல் ஒருதலையாதலின்,
ஊக்கறக்  கடைஇ”  என்றும்,  ஊக்கமிழந்து  நடுங்கி யோடுவார்மேல்,
மேற்கொண்ட   சினம்  தணியாது  படை  யெறிவது  கழிதறுகண்மை
யென்னும் குற்றமாதலின், “புறக் கொடை யெறியார்” என்றும் கூறினார்.
“சினனே காமம் கழிகண்ணோட்டம், அச்சம் பொய்ச்சொல்  அன்புமிக
வுடைமை,  தெறல் கடுமையொடு பிறவுமிவ்வுலகத், தறந்தெரி திகிரிக்கு
வழியடை யாகுந் தீது” (பதிற். 22) எனச் சான்றோர் கூறுதல்   காண்க

34 - 36. நகைவர்க்கு.........பலவே.

உரை : நின் தானை - நின் படைவீரர்; நகைவர்க்கு அரணமாகி -
தம்பால்    அன்பும்    நட்பு   முடையார்க்குப்   பாதுகாப்பாளராகி;
பகைவர்க்குச்  சூர்  நிகழ்ந்  தற்று  -  பகைவர்க்கு அச்சஞ் செய்யுந்
தெய்வந் தோன்றி வருத்தினாற் போல வுளர்; போர் மிகு குருசில் நீ -
போரிலே வெற்றி  மிகும் குரிசிலாகிய நீ; பல மாண்டனை - இவ்வாறு
பலவகையாலும் மாட்சியெய்தியுள்ளாய் எ - று.

நட்பும்    அன்பும் கொண்டு இனிய உவகையைச் செய்யும் மக்கள்
பலரையும்  நகைவர்  என்றார்.  இத்  துறையில்  சிறப்புடைய பாணர்
கூத்தர் புலவர் முதலிய பலரும் அடங்குவர். பிறாண்டும், “நகைவ ரார
நன்கலம் வீசி”  (பதிற்.     37) என்பது காண்க.  சூர்,  கண்டார்க்கு
வருத்தத்தைச்    செய்யும்  தெய்வம்.  தெய்வத்தால்   வருத்தப்படும்
ஊழுடையார்க்கு  யாதும்    அரணாகாதவாறு    போல,    நின்னாற்
பகைக்கப்படும்   நிலையுடையார்க்கு   எத்துணை   வலிய  அரணும் அரணாகாதவாறு  சிதைத்தழிக்கும்   ஆற்றலுடையது   நின்  தானை
என்றாராயிற்று, மார்பாலும் தோள்களாலும்  மனைவியாலும் முரசாலும்
படைத்தலைவராலும்   படை   வீரர்களாலும்  எனப்  பல்லாற்றாலும்
மாண்புடைய  னாயினை  யென  விரிந்தது  தொகுத்து, “மாண்டனை
பலவே” யென்றார்.  

இதுகாறும்     கூறியது, நின் மார்பு விறல் வரை யற்று; தோள்கள்
எழூஉநிவந்  தன்ன;  நீ  வண்டன் அனையை; நின் செல்வி செம்மீன்
அனையள்;  நின் மறப்படைக்குத் தலைமை கொள்ளுநர் புறக்கொடை
யெறியார்; நின் தானை பகைவர்க்குச் சூர் நிகழ்ந்தற்று; இவ்வாற்றல் நீ
பலவும்  மாண்டனை  யென்றவாறாம். இவ்வாறே பழையவுரைகாரரும்,
“நின்  மார்பு  பனிவார்  விண்டு  விறல்  வரையற்று; நின் றோள்கள்
எழூஉ  நிவந்தன்ன;  நீ  தான்  வண்டனென்பவனை யனையை; நின்
செல்வி  செம்மீ னனையள்; நின் மறப்படை கொள்ளுநர் புறக்கொடை
யெறியார்;   நின்   தானை   நகைவர்க்  கரணமாகிப்  பகைவர்க்குச்
சூர்நிகழ்ந்தற்று;     அவ்வாற்றாற்     குருசில்     நீ      பலவும
மாட்சிமைப்பட்டனை யென வினைமுடிவு செய்க” என்று கூறுவர்.

இதனாற்  சொல்லியது:  அவற்குள்ள  மாட்சியெல்லாம்   எடுத்து
உடன் புகழ்ந்தவா றாயிற்று.


 மேல்மூலம்