முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
32. மாண்டனை பலவே போர்மிகு குருசினீ
மாதிரம் விளக்குஞ் சால்புஞ் செம்மையும்
முத்துடை மருப்பின் மழகளிறு பிளிற
மிக்கெழு கடுந்தார் துய்த்தலைச் சென்று
  5 துப்புத்துவர் போகப் பெருங்கிளை யுவப்ப
ஈத்தான் றானா விடனுடை வளனும்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்
எல்லா மெண்ணி னிடுகழங்கு தபுந
கொன்னொன்று மருண்டனெ னடுபோர்க் கொற்றவ
  10 நெடுமிடல் சாயக் கொடுமிட றுமியப்
பெருமலை யானையொடு புலங்கெட விறுத்துத்
தடந்தா ணாரை படிந்திரை கவரும்
முடந்தை நெல்லின் கழையமல் கழனிப்
பிழையா விளையு ணாடகப் படுத்து
  15 வையா மாலையர் வசையுநர்க் கறுத்த
பகைவர் தேஎத் தாயினும்
சினவா யாகுத கலிரும்பூதற் பெரிதே.

     இதுவுமது. பெயர் - கழையமல் கழனி (13)

     (ப - ரை) 8. இடுகழங்கு தபுநவென்றது இடுகழங்கும்
1அலகுதபுதற்குக் காரணமாக இருப்பனவென்றாறு.

     தபுநவென்றது பெயர்த்திரிசொல்.

     10. நெடுமிடல் - அஞ்சியின் இயற்பெயராம். கொடுமிடல் :
மிடல் -வலி; என்றது வலியாற் செய்யப்படும் போரினை.

     13. முடமாகிய கழையென இருபெயரொட்டு. நெல்லின் கழை
- நெல்லினது கழை.

     நெற்றாளை அதன்பருமையாலே மூங்கிலொடு ஒப்புமைபற்றிக்
2கழை யென்று பெயர்கொடுத்த சிறப்பான் இதற்கு, 'கழையமல்
கழனி'
என்று பெயராயிற்று.

     15. வையா மாலையரென்றது ஒன்றில் வகைபடாத
இயல்பையுடைய ரென்றவாறு.

     15-6. வசையுநர்க் கறுத்த பகைவரென்றது தங்கள் பகைவரொடு
செற்றம் கொண்டாடாது ஒழிந்திருக்க வேண்டுமளவினும் ஒழியாது
அவர்களை அக்கடப்பாடன்றி வெகுண்டிருத்தாலே தொழிலாகவுடைய
பகைவரென்றவாறு.

     வசையுநர் - பகைவர்; வசையுநரென்றது பெயர்த்திரிச்சொல்.
இனிக் ககரவொற்றின்றி 'வசையுநர் கறுத்த' என்பது பாடமாயின்,
அதனை வினையெச்சவினைக்குறிப்புமுற்றுத் திரிசொல்லாக்கி,
வசைசொல்லுதலுடையவராய் வெகுண்ட பகைவரென்று
உரைப்பாருமுளர்.

     குருசில், நீ பல குணங்களும் மாட்சிமைப்பட்டனை (1); அப்
பல குணங்களும் எண்ணப்புகின் இடுகழங்கு தபும்
எல்லையவாயிருக்கும் (8); கொற்றவ, பல குணத்தினும் ஒன்றைக்
கொன்னே யான் வியந்தேன் (9); அப்பலவற்றுள்ளும் வியப்பான
குணம் யாதெனின், பகைவர் செய்த குற்றத்திற்குத் தண்டமாக
அவர் நாட்டை அகப்படுத்திக் கொண்டு (14) வையா மாலையராகிய
வசையுநர்க்கறுத்த (15) அப்பகைவரிடத்தாயினும் நீ (16)
சினவாதொழிகின்ற பொறை எமக்குப் பெரிதும் வியப்பாகா நின்றது
(17) என வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவற்குள்ள பல குணங்களையும்
உடனெண்ணிப் புகழ்ந்து அவற்றுட் பொறையுடைமையை மிகுத்துப்
புகழ்ந்த வாறாயிற்று.

     (கு - ரை) 2. மாதிரம் விளக்கும் - திசைகளை விளங்கச்
செய்கின்ற. சால்பும் செம்மையும் - நற்குணங்களும் நடுவுநிலைமையும்.
3. முத்தையுடைய மருப்பினையுடைய இளைய ஆண்யானைகள்
பிளிறும்படி.

     4. மிக்கு எழு கடுந்தார் துய்த்தலைச் சென்று - போரில்
வேட்கைமிக்குச் செல்லுகின்ற விரைவையுடைய தூசிப்படை பகைவர்
நாட்டின் கோடி வரையிற் சென்று.

     5. துப்பு துவர் போக - வலியின்கண் முற்றவும் உயர்ந்து
நிற்க. பெருங்கிளை உவப்ப - பெரிய சுற்றத்தார் உவக்கும்படி; கிளை
என்றது பாணர் முதலியோரை.

     6. ஈத்து ஆன்று ஆனா இடனுடை வளன் - தான் பெற்ற
அரிய பொருள்களைக் கொடுத்தலிலே அமைந்தும் குறையாத
செல்வத்தின் மிகுதியும்; இடன் - செல்வம்; "இடனில் பருவத்தும்"
(குறள், 218)

     7. துளங்கு குடி திருத்திய - நடுக்கமுற்ற தன் குடியை
மேம்படுத்திய. மு. பதிற். 37 : 7; 4-ம் பதிகம், 12.

     8. எல்லாம் எண்ணின்-சால்பும் செம்மையும் வளனும்
வென்றியும் ஆகிய நின் குணங்கள் எல்லாவற்றையும் எண்ணினால்.
இடு கழங்கு தபுந - எண்ணுதற்கு இடப்படும் கழற்சிக்காய்கள்
போதாமைக்குக் காரணமாயிருக்கும். கழங்கு தபுந; பதிற். 15 : 5,
குறிப்புரை.

     9. கொன் ஒன்று மருண்டனென் - அக்குணங்களுள்
பெரிதாகிய ஒன்றை வியந்தேன். கொன் : பெருமையைக் குறிக்கும்
இடைச்சொல்.

     10. நெடுமிடல் - அஞ்சி யென்னும் தலைவன். கொடு மிடல்
துமிய - கொடிய வலியாற் செய்யும் போர் கெடும்படி.

     11. பெரிய மலையைப் போன்ற யானைப் படையோடு பகைவர்
நாடு கெடும்படி சென்று தங்கி.

     12. தடந்தாள் நாரை-வளைந்த காலையுடைய நாரை. இரை
கவரும் (12) கழனி (13) என்க.

     13. முடந்தை நெல்லின்-கதிர்க்கனத்தின் மிகுதியால் வளைந்த
நெல்லினது (பதிற். 29 :3) நெல்லின் கழை - நெல்லின் தாள். அமல்
கழனி - செறிந்த வயல்களையுடைய

     14. பிழையா விளையுள் நாடு அகப்படுத்து - தப்பாத
விளைச்சலை யுடைய நாடுகளைக் கைப்பற்றி. அகப்படுத்தல் சேரன்
தொழில்.

     15-6. பகைவரது இயல்பு.

     15. வையா மாலையர் - ஒரு தன்மையிலே வைத்து
எண்ணப்படாதவராகி. வசையுநர்க் கறுத்த - தங்கள் பகைவரைக்
கோபித்த.

     16. பகைவர் தேஎத்தாயினும் - நின் பகைவரிடத்தாயினும்.

     17. சினவாயாகுதல் பெரிது இறும்பூது - கோபங
கொள்ளாயாயிருத்தல் மிகவும் வியப்பைத் தருவது.

     1-17. சேரன் பல இயல்புகளால் மாட்சிமைப் பட்டானாயினும்
அரசர் மாட்டு அரிதிற் காணப்படுவதும் எல்லாவற்றினும்
சிறந்ததுமாகிய பொறையைப் பாராட்டிக் கூறினார். அரசனுக்குப்
பொறை சிறப்பாதல். பதிற்.17 : 1 - 3; கலித்.133 : 14;
புறநா,.2 : 1
- 7; குறள்,151 , 579. பழ.19.

     (பி - ம்.) 14. பிழையாவிழையினாடு (2)


     1அலகு - கணக்கு.

     2கழையென்பதை மூங்கிலாக்கி அதனைப் போன்றநெற்றாளுக்கு
ஆகுபெயராக்கினர்.






பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

2. கழையமல் கழனி
 
32.மாண்டனை பலவே போர்மிகு குருசினீ
மாதிரம் விளக்குஞ் சால்புஞ் செம்மையும்
முத்துடை மருப்பின் மழகளிறு பிளிற
மிக்கெழு கடுந்தார் துய்த்தலைச் சென்று
 
5துப்புத் துவர்போகப் பெருங்கிளை யுவப்ப
ஈத்தான் றானா விடனுடை வளனும்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்
எல்லா மெண்ணி னிடுகழங்கு தபுந
கொன்னொன்று மருண்டெனெ னடுபோர்க் கொற்றவ
 
10நெடுமிடல் சாயக் கொடுமிட றுமியக்
பெருமலை யானையொடு புலங்கெட விறுத்துத்
தடந்தா ணாரை படிந்திரை கவரும்
முடந்தை நெல்லின் கழையமல் கழனிப்
பிழையா விளையு ணாடகப் படுத்து
 
15வையா மாலையர் வசையுநர்க் கறுத்த
பகைவர் தேஎத் தாயினும்
சினவா யாகுத லிறும்பூதாற் பெரிதே.
 

இதுவும் அது.

பெயர்   : கழையமல் கழனி. 

1 - 9. மாண்டனை..........கொற்றவ. 

உரை : போர் மிகு குருசில் நீ - போரில் வெற்றியால்  மேம்பட்ட
குரிசிலாகிய  நீ; பல மாண்டனை - முன் பாட்டிற் கூறியவாற்றால் பல
வகையாலும்  மாட்சிமைப்பட்டனை;  மாதிரம்  விளக்கும்  சால்பும் -
திசை   முழுதும்  சென்று  விளங்கித்  தோன்றும்  சால்புடைமையும்;
செம்மையும்  -  நடுவு நிலைமையும்; முத்துடை மருப்பின் மழ  களிறு
பிளிற   -   முத்துண்டான   மருப்பினையுடைய   இளங்  களிறுகள்
பிளிறுமாறு;  மிக்கு  எழு  கடுந்தார்  - போர்வேட்கை மிக்கெழுகின்ற
கடிய  தூசிப்படையானது;  துய்த்தலைச் சென்று - பகைவர்  நாட்டின்
எல்லை  முடியச்சென்று;  துப்புத்  துவர்  போக  -  வலிமை  தான்
தன்னெல்லை  காறும்  மிக்கெழப்  பொருது;  பெருங்கிளை யுவப்ப -
பாணர் முதலிய இரவலராகிய பெரிய கிளைஞருக்கு உவப்புண்டாமாறு;
ஈத்தான்று ஆனா இடனுடை வளனும் - பகைப்புலத்தே பெற்ற  அரிய
பொருள்களை  யீத்துப்  பெற்றவர்தாம்  இனி வேண்டா அமையுமென
அமைந்தொழியவும்  எஞ்சியவற்றால்  தன்னிட முற்றும் நிரம்பவுடைய
பெருஞ்  செல்வமும்;  துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும் -
தளர்ந்த   குடியிலுள்ளாரை   அத்   தளர்ச்சி   நீக்கி   முன்னைய
நிலைக்கண்ணே யுயர்த்தி நிறுத்திய வெற்றிச் செய்தியுமாகிய; எல்லாம்
எண்ணின்  எல்லாவற்றையும்  விடாது எண்ணிப் பார்க்குமிடத்து; இடு
கழங்கு  தபுந  -  எண்ணுதற்குப் பெய்யும் கழங்கு முடிவறிந்து பயன்
கூறமாட்டாது  ஒழிதற்குக் காரணமானவனே; அடு போர்க் கொற்றவ -
செய்கின்ற   போர்களில்  வெற்றியே  பெறுவோனே; கொன்  ஒன்று
மருண்டனென் - நின் குணங்களுள் மிக்குத் தோன்றுவ தொன்றனைக்
கண்டு அறிவு மருண்டேன், காண் எ - று..

மேலே     கூறிய   மாட்சிகள்   பலவற்றையும்     தொகுத்துப்
பெயர்த்துமுரைத்தார், களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலின் குணஞ்
செயல்கள்  பலவும்  ஆராய்ந்து  அவற்றுள்  மிக்கு நிற்கும் அவனது
பொறைக்   குணத்தைச்   சிறப்பிக்கும்  கருத்தின  ராதலின்.  சால்பு,
நற்குணங்களால்  நிறைதல்  நாற்றிசையினும் உறையும்  வேந்தர்களுள்,
குணநிறைவாலும்  செங்கோன்மையாலும்  இச் சேரமானின்  மிக்காரும்
ஒப்பாரும்  இன்மையின்,  “மாதிரம் விளக்கும் சால்பும்  செம்மையும்”
எடுத்  தோதினார்.  சால்பின்  கண்  செம்மையும்   அடங்குமாயினும்,
அன்பு,   நாண்,   ஒப்புரவு,   கண்ணோட்டம்,   வாய்மை   யென்ற
ஐந்தையுமே  சிறப்பாகக்  கொண்  டிலங்குதலால், செம்மையை வேறு
பிரித்  தோதினார்.  இளமையும்  சீரிய  வன்மையுமுடைய   களிற்று
மருப்பின்கண்  முத்துண்டா மென்ப வாகலின், “முத்துடை   மருப்பின்
மழகளி”  றென்றார்.  மழகளி  றாயினும்  மதஞ் செறிந்து போர் வெறி
மிக்குச்  செருக்குதல்  தோன்ற,  “பிளிற”  என்றார்.  கடுந்தார் - மிக
விரைந்து  முன்னேறிச்  செல்லும் தூசிப்படை. துய்த்தலை,  முடிவிடம்;
எல்லையுமாம்.  துவர் போக, கடை போக; முற்றவும் என்றபடி;  “துவர
முடித்த  துகளறு  முச்சி” (முருகு. 26) என்புழிப் போல துவர் போகப்
பொருது  என  ஒருசொல் வருவிக்க; பாணரும் பொருநரும் கூத்தரும்
பிறருமாகி   இரவலர்  சுற்றம்,  பொருது  பெறும்  அருங்கலம்  வீரர்
கொடுக்கப்  பெறுதலின்,  “பெருக்கிளை  யுவப்ப” என்றும்,  இரப்பவர்
இன்முகங்  காணு மளவும் ஈத்த வழியும் பெற்ற பொருள்  குறையாமை
தோன்ற  “ஈத்தான்  றானா  விடனுடை  வளன்”  என்றும்  கூறினார்.
துளங்கு குடி திருத்தல், செம்மையுடைமையின் பயனாகிய  இறைமாட்சி
எல்லாம் என்றது, குணம் பலவும் எஞ்சாமற் றழீஇ நின்றது. இவனொடு
பொரக்   கருதும்  பகைவேந்தர்,  இவனுடைய  குணஞ்  செயல்களை
எண்ணி,   தாம்   பெறக்   கருதும்   வெற்றி  குறித்துக்  கழங்கிட்டு
நோக்குமிடத்து,  அவர்க்கு  வெற்றியுண்டாமெனக்  காட்ட,  அதனால்
உளங்கொண்    டெழுந்து    முடிவில்   வெற்றி   பெறாது  கழங்கு
பொய்த்ததென் றெண்ணியஞ்சி யொடுங்குகின்றார்களாதலால், “எல்லாம்
எண்ணின்  இடுகழங்கு தபுந” என்றார். தபுதற்குக்  காரணமானவனைத்
தபுநன்   என்றார்   இக்காலத்தே   சிலவற்றை  யெண்ணுபவர்,  தம்
கைவிரலிட்டு   எண்ணுவது   போலப்  பண்டைக்காலத்தே  கழற்காய்
கொண்டு  எண்ணுதல்  மரபு  போலும்.  அதனால்  எண்ணுதற் கிட்ட
கழங்கினும்  இவன்  குணம்  பலவாய் விரிந்து நிற்றலால், “இடுகழங்கு
தபுந”  என்றா  ரென்றுமாம்.  தபுந  வென்பது,  பெயர்த்   திரிசொல்.
பழையவுரைகாரர்  “இடுகழங்கு  தபுந  வென்றது, இடுகழங்கும் அலகு
தபுதற்குக்   காரணமாக  இருப்பவ  னென்றவா”  றென்பர்.  வேந்தர்
தீப்போலும்  சினமுடையராதல்  பற்றி, அவரைச் சேர்ந்தொழுகுவோர்,
“அகலாது   அணுகாது   தீக்காய்வார்”   போல  ஒழுகுப  வாதலின்,
அவர்பால்  பொறைக்  குணம்  காண்டல்  அரிதென்பது  பெறப்படும்.
படவே,   அவர்பால்  அது  மிக்குத்  தோன்றுமாயின்  சான்றோர்க்கு
வியப்பு மிகுமாகலின், “கொன்னொன்று மருண்டனென்” என்றார்.  இது
பிறன்பால்  தோன்றிய புதுமை பொருளாகப் பிறந்த மருட்கை.  கொன்,
பெருமை,     சினம்     காரணமாகச்     செய்யும்     அடுபோர்க்
கொற்றவனாயினும்,  நின்பால்  சினவாமைக்  கேதுவாகிய  பொறுமைக்
குணம் மிக்கு நின்று என் அறிவை மருட்டுகின்ற தென்பார்,  “மருண்ட
னென்” என்றொழியாது “அடு போர்க் கொற்றவ” என்றார். 
   

10 - 17. நெடுமிடல்..............பெரிதே.

உரை : கொடு    மிடல்    துமிய -   தான்   செய்த  கொடிய
போர்த்தொழில் பயன்படாது  கெடவே;  நெடுமிடல்  சாய -  நெடுமிட
லஞ்சியென்பான் பட்டானாக;   பெரு   மலை   யானையொடு பெரிய
மலைபோன்ற யானைப்படை      கொண்டு    சென்று;  புலம்  கெட
இறுத்து - அவனாட்டு விளைபுலங்கள்  கெடுமாறு    தங்கி; தடந்தாள
நாரை  -  பெரிய கால்களையுடைய  நாரைகள்; படிந்து இரை கவரும்
-  கழனி  நீர்க்குட்  படிந்து  தமக்குரிய    இரையாகிய  மீன்களைக்
கவர்ந்துண்ணும்;    முடந்தை   நெல்லின்    கழையமல்கழனி  -
வளைந்த    கதிர்களையுடைய    நெல்லின்   மூங்கில்     போலும்
தாள்கள்  செறிந்த கழனிகள் பொருந்திய; பிழையா விளையுள் நாடு -
தப்பாத    வீளைபயனையுடைய    நாட்டை;   அகப்   படுத்து   -
தன்னடிப்படுத்தி;  வையா மாலையர் - ஒரு பொருளாக மதிக்கலாகாத
கீழ்மைத்   தன்மையுடையவர்களும்;   வசையுநர்  நாளும்   வசையே
மொழிபவர்களுமாகிய;  கறுத்த  -  நின்னால் வெகுளப்பட்ட; பகைவர்
தேஎத் தாயினும் - பகைவரிடத்தேயிருந்த காலையும்; சினவா யாகுதல்
-  சினங்  கொள்ளாது  நீ  பொறையே  பூண்டொழுகுதல்; இறும்பூது
பெரிது  - காணும்போதெல்லாம் எனக்குண்டாகும் வியப்பு மிகுகின்றது
எ - று. 
  

நெடுமிடல்  என்பது   நெடுமிடல்     அஞ்சியின்    இயற்பெயர்.
இவன் அதியமான்   நெடுமா  னஞ்சியின்  குலத்தவன்.  இவனது நாடு
மிக்க  வளஞ்  சிறந்ததாகும்.   இப்  பாட்டால்  களங்காய்க்  கண்ணி
நார்முடிச்    சேரல்  நெடுமிடலஞ்சியை  வென்று  அவனது நாட்டை
அகப்படுத்திக் கொண்ட  வரலாறு  குறிக்கப்படுவது  காண்க.    நீடுர்
கிழவனான எவ்வி யென்பவனது ஏவல் கேளாது அவனை   யெதிர்த்த
பசும்பூட் பொருந்தலர் என்பாரை, இந்   நெடுமிட  லஞ்சி  யென்பான்
அரிமணவாயில். உறத்தூரின் கண்  வென்றானென  ஆசிரியர் பரணர்
(அகம். 266)  கூறுகின்றார்.  நெடுமிடல்  சாயவென்றும்,  கொடு மிடல்
துமிய வென்றும் பிரித்தோதியதால், கொடு  மிடலை  அவன்    போர்
வினைக்கேற்றப்பட்டது. கொடுமிடல் என்புழி  மிடல்,  வலி   அதனாற்
செய்யப்படுதலின்,  போர்  வினை  மிடலாயிற்று.  பழைய   வுரையும்,
“மிடல் என்றது வலி” யென்றும்,  “என்றது  வலியாற்   செய்யப்படும்
போரினை”  யென்றும்  கூறிற்று.  யானை  புக்க  புலம்     அழிவது
ஒருதலையாதலின், இச் சேரமான் யானைப் படை   கொண்டு  சென்று
தங்கின   வளவிலே  புலம்     கெட்டமை  தோன்ற,   “பெருமலை
யானையொடு புலங்கெட விறுத்து” என்றார். யானை புக்கவழி,  அதன்
கை செய்யும் அழிவினும் “கால்   பெரிது   கெடுக்கும்”   (புறம். 184)
எனறிக.

மிக     வுயர்ந்த  நாரைகள்  என்றற்குத்  “தடந்தா    ணாரை”
யென்றமையின், அவை நெல் நின்ற கழனிக்குள் இனிது சென்று இரை
கவரும்   என்றற்குப்  “படிந்திரை  கவரும்”  என்றும்,  நெற்றாளின்
உயர்ச்சி  தோன்ற, “நெல்லின் கழையமல் கழனி” யென்றும் கூறினார்.
வளைந்த  கதிர்களுடன்  விளைந்து நிற்கும் நெல், தன் தாளில் நின்ற
நீரிற்   படிந்து   நாரைகள்   இரை  கவரச்  செய்யும்  என்றதனால்,
கொடுமிடல்  துமிப்புண்டு  நெடுமிடலஞ்சி  சாய்ந்தானாக,  அவன்கீழ்
உள்ள  நாட்டகத்துப்  பொருளை நின் படைவீரர் புகுந்து திறையாகப்
பெறுகின்றனர்  என  உள்ளுறுத் துரைப்பது காண்க. முடம், முடந்தை
யென வந்தது; பிறரும், “முடந்தை நெல்லின் விளைவயல்” (பதிற். 29)
என்பது  காண்க.  கழை  போலும்  தாளைக் கழை யென்றார்; பாவை
போல் வாளைப் பாவை யென்பது போல, கதிர்களின் பொறையாற்றாது
நெல்லினது  தாள்  வளைதலின்,  முடந்தையைக்  கழைக்  கேற்றுவர்
பழையவுரைகாரர்.
 

இனிப் பழையவுரைகாரர், “முடமாகிய கழை யென இருபெயரொட்டு
:என்றும்,  “நெல்லின்  கழை, நெல்லினது கழை” யென்றும்   கூறுவர்.
முடச்சினை,    முடக்கொம்பு    என்றாற்   போல,   இது   பண்புத்
தொகையாமன்றி  இருபெயரொட்டாகாமை  யறிக.  அவர், “நெற்றாளை
அதன்  பருமையாலே  மூங்கிலோடு  ஒப்புமைபற்றிக்  கழை  யென்று
பெயர்  கொடுத்த  சிறப்பான்  இதற்குக்  கழையமல்  கழனி  யென்று
பெயராயிற்று” என்பர்.

இந்  நாட்டைச் சேரமான் அகப்படுத்துக் கொண்டதற்குக்  காரணம்
இது  வென்பார், “பிழையா வினையுள்” எனச் சிறப்பித்தார்.  வைத்தல்
நன்கு  மதித்தலாகலின்,  வையா  மாலையர் என்றது ஒரு  பொருளாக
மதிக்கக்கூடிய   தன்மை   யில்லாதவ   ரென்னும்   பொருட்டாயிற்று.
பழையவுரை,  “ஒன்றில்  வகைபடாத  இயல்பை  யுடையவர்”  என்று
கூறும்.  நன்மதிப்பும்  இசையுமுடையராயின்,  பகை  வேந்தர்,   நின்
சால்பும்   செம்மையும்   பிற  மாண்புகளும்  அறிந்த   மாத்திரையே
பகைமை  நீங்கி  நகைவராய்க்  கூடி  மகிழ்வராகலின்  நின் பகைவர்
வையா   மாலையரும்  வசையுநரு  மாயினர்  என்கின்றார்;  எனவே,
வசையுநராவர்    நாளும்    பிற    வேந்தரை    வசை   கூறுதலே
தொழிலாகவுடையரென்பது பெறப்படும். வசையுநர் ;  பெயர்த்திரிசொல்.
கறுத்தல்,  சேரமான்  வினையாதலின், கறுத்த வென்னும்  பெயரெச்சம
செயப்பாட்டு   வினைப்பொருட்டாயிற்று.   இனி,   பழையவுரைகாரர்
வசையுநர்க் கறுத்த பகைவர்  எனக்கொண்டு, “தங்கள் பகைவரொடு
செற்றங்  கொண்டாடாது  ஒழிந்திருக்க  வேண்டுமளவினும்  ஒழியாது
அவர்களை  அக் கடப்பாடன்றி வெகுண்டிருத்தலே தொழிலாகவுடைய
பகைய  ரென்றவா”  றென்றும், “இனி,  ககர  வொற்றின்றி வசையுநர்
கறுத்த என்பது  பாடமாயின், அதனை வினையெச்ச  வினைக்குறிப்பு
முற்றுத் திரிசொல்லாக்கி,  வசை  சொல்லுதலையுடையராய் வெகுண்ட
பகைவரென் றுரைப்பாருமுள” ரென்றும் கூறுவர்.

இதுகாறும்   கூறியது, போர்மிகு குருசில், நீ பல மாண்டனை; நின்
மாண்பே  யன்றிச்  சால்பும்  செம்மையும் ஈத்தான் றானா  விடனுடை
வளனும்,   துளங்கு  குடி  திருத்திய  வலம்படு  வென்றியும்  ஆகிய
எல்லாம்  எண்ணின்  இடு  கழங்கு  தபுந;  அடு  போர்க்  கொற்றவ,
கொன்னொன்று   மருண்டனென்;   தன்   கொடு  மிடல்  துமிதலால்
நெடுமிடலஞ்சி  யென்பான்  சாய,  யானையொடு  அவன்  புலங்கெட
இறுத்து,   பிழையா  விளையுட்டாகிய  நாடு  அகப்படுத்து,  பகைவர்
தேஎத்தாயினும்  சினவாயாயினை;  இவ்வாறு  நீ  சினவா  யாகுதலால்
உண்டாகும்   இறும்பூது   பெரிது  என்பதாம்.   இக்   கருத்தையே
பழையவுரைகாரர்,     “குருசில்,     நீ     பல       குணங்களும்
மாட்சிமைப்பட்டனை;  அப்  பல  குணங்களும்  எண்ணப்புகின், இடு
கழங்கு  தபும்  எல்லையவாயிருக்கும்;  கொற்றவ,  பல  குணத்தினும்
ஒன்றைக்   கொன்னே   யான்   வியந்தேன்;  அப்  பலவற்றுள்ளும்
வியப்பான   குணம்   யாதெனின்,  பகைவர்  செய்த  குற்றத்திற்குத்
தண்டமாக     அவர்     நாட்டை         அகப்படுத்திக்கொண்டு
வையாமாலையராகிய வசையுநர்க் கறுத்த அப் பகைவரிடத்தாயினும் நீ
சினவா  தொழிகின்ற  பொறை எமக்குப் பெரிதும் வியப்பாகா நின்றது
என வினை முடிவு செய்க” என்பர்.

இதனாற்     சொல்லியது,  அவற்குள்ள  பல    குணங்களையும்
உடனெண்ணிப்  புகழ்ந்து  அவற்றுட் பொறை யுடைமையை மிகுத்துப்
புகழ்ந்தவாறாயிற்று.


 மேல்மூலம்