முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
33. இறும்பூதாற் பெரிதே கொடித்தே ரண்ணல்
வடிமணி யணைத்த பனைமரு ணோன்றாட்
கடிமரத்தாற் களிறணைத்து
நெடுநீர துறைகலங்க
  5 மூழ்த்திறுத்த வியன்றனையோடு
புலங்கெட நெரிதரும் வரம்பில் வெள்ளம்
வாண்மதி லாக வேன்மிளை யுயர்த்து
வில்லிசை யுமிழ்ந்த வைம்முள் ளம்பிற்
செவ்வா யெஃகம் வளைஇய வகழிற்
  10 காரிடி யுருமி னுரறு முரசிற்
கால்வழங் காரெயில் கருதிற்
போரெதிர் வேந்த ரொரூஉப நின்னே.

     துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். பெயர்
- வரம்பில் வெள்ளம்.

     (ப - ரை) 2-3. நோன்றாட் களிறென மாறிக் கூட்டுக.

     5. வியன்றானை யென்றது பகைவர்நாட்டு எல்லையின்
1
முற்பாடு சென்றுவிட்ட தூசிப்பெரும்படையை.

     6. வரம்பில் வெள்ளமென்றது அதனோடு கூடி நாட்டுள்ளுச்
சென்றுவிடும் பேரணிப் பெரும்படையை. கரையையுடைய கடலை
வரம்புடைய வெள்ளமென்றாக்கி இதனை வரம்பில் வெள்ளமென்று
கூறிய சிறப்பான் இதற்கு, 'வரம்பில் வெள்ளம்' என்று பெயராயிற்று.

     வெள்ளமென மகரவொற்றுக் கெடாமையன் 2இருபெயரொட்டுப்
பண்புத்தொகையன்றி ஒரு பொருளாக 3இருபெயர் நின்றதாக்கிக்
கொள்க.

     6-11. படைவெள்ளத்தை ஆரெயிலென்றது அரசன்றனக்கு
ஆரெயில்போல அரணாய் நிற்றலினெனக் கொள்க.

     இனிக் 4கால்வழங்காரெயிலெனக் காற்றல்லது வழங்கா
ஆரெயிலென்று பகைவர்மதிலாக்கி, அதனை வரம்பில்வெள்ளம்
கொள்ளக்கருதினென்று உரைப்பாருமுளர்.

     7. உயர்த்தென்பதனை உயர்த்தவெனத் திரித்து, அதனை
எஃகம் வளைஇய (9) என்பதனோடு முடிக்க.

     செவ்வாயெஃகம் வளைஇய அகழினையும் (9)
வில்லிசையுமிழ்ந்த அம்பாகிய வைம்முள்ளினையுமுடைய (8)
ஆரெயில் (11) என மாறிக் கூட்டுக.

     செவ்வாயெஃகமென்றது 5முனைமுகத்திற் செல்லாது ஒழிந்த
கூர்வேற் கருவிகளையெனக் கொள்க.

     இனி, வாள் மதிலாகவென்று வைத்துப் பின்னை
ஆரெயிலென்றது வாண்மதிலைச் சூழ்தலையுடைய ஆராகிய
எயிலினையெனக் கொள்க; ஈண்டு ஆராவது காலாள் வழங்கிச்
செல்கின்ற படையின் திரட்சி. இனி வரம்பில் வெள்ளமானது
வாள்மதிலாக வேல்மிளை உயர்த்துக் கால் வழங்கு ஆர்
எயிலாதலைக் கருதினென்றலும் ஒன்று.

     அண்ணல், இது பெரிதும் இறும்பூதாயிருந்தது (1); யாதெனின்,
வரம்பில் வெள்ளம் (6) கால்வழகாரெயிலெனச் சொல்லப்பட்ட
நின்படை போர்செய்யக்
கருதின் (11) நின்னோடு போரெதிர்ந்த
வேந்தர் பொரமாட்டாது நின்னை நீங்குவர் (12); இஃது அதுவென
வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன்வென்றிச் சிறப்புக்
கூறியவாறாயிற்று.

     வரம்பில் வெள்ளங் கருதினென எடுத்துச்செலவினை
மேலிட்டுக் கூறினமையான் வஞ்சித்துறைப் பாடணாயிற்று.

     'கடிமரத்தான்' (3) என்றது முதலாக மூன்றடி வஞ்சியடியாக
வந்தமையான் வஞ்சித் தூக்குமாயிற்று.

     (கு - ரை) 1. இறும்பூது - வியப்பு. ஆல்: அசை.

     2-3. திருந்திய மணியைப் பக்கத்திலே கொண்ட
துடியையொத்த வலியதாளையுடைய யானையைப் பகைவரது
கடிமரத்திலே கட்டி; நோன்றாட் களிறெனக் கூட்டுக. பகைவரது
காவல் மரத்தில் களிற்றைக் கட்டுதல் மரவு (புறநா. 57 : 10 - 11.
162 : 5 - 6. 336 : 4)

     4. நெடு நீர துறை கலங்க - ஆழமாகிய நீரையுடைய
குளங்களின் துறைகள் கலங்கும்படி. பகைவர் நாட்டிலுள்ள
நீர்நிலைகள் உடைத்தல் மரபு; "கரும்பொடு காய்நெற் கனையெரி
யூட்டிப், பெரும்புனல் வாய் திறந்த பின்னும்" (பு. வெ. 56)

     5. மொய்த்துச் சென்று தங்கிய பரந்த படையோடு. மூழ்த்தல்
- மொய்த்தல் (பரி. 10 : 18; பெருங். 1. 56 : 49)

     6. பகைவர் நாடு கெடும்படி வளைந்து செல்லும் எல்லையற்ற
வெள்ளம் போன்ற படை. வெள்ளம் - ஓரெண் எனலும் ஆம்.

     7. வாட்படையே மதிலாகும்படி வேலாகிய காவற்காட்டை
உயரச் செய்து. வேல்மிளை: "வேன்மிடைந்த வேலியும்" (சீவக. 279,
1846)

     8. விற்பொறிகள் விடுத்த கூரிய முள்ளைப்போன்ற
அம்பினையுடைய.

     9. சிவந்த வாயையுடை படைக் கருவிகள் வளைந்த
அகழையும். எஃகம் - ஆயுதப் பொது.

     10. மேகத்தினின்று இடிக்கும் இடியைப் போல முழங்கும்
முரசினையுடைய.

     11. காலால் நடக்கின்ற வெல்லுதற்கரிய அரண், போர்
செய்தலைக் கருதினால்.

     7-11. படையை அரணமாக உருவகம் செய்தார். மதில், மிளை,
அகழ் என்பன அரணத்தின் உறுப்பாதலால் வாட்படையையும் வேற்
படையையும் அம்பொடுகூடிய படையையும் அம்மூன்றாக
உருவகித்தார்.

     வரம்பில் வெள்ளமாகிய (6) கால் வழங்கு ஆரெயில் (11) என்று
கூட்டுக.

     12. போரை ஏற்றுக் கொண்ட பகையரசர் தம் கருத்தழிந்து
நின்னை விட்டு நீங்குவார்.

     போர் செய்ய வேண்டாதே எடுத்துச் சென்ற மாத்திரத்திலே
பகையரசர் அஞ்சி ஓடுதல் வியப்புத் தருவதாயிற்று.

     மு. இஃது இயங்குபடையரவம்: இயங்குகின்ற இருபடை
யெழுச்சியின் ஆர்ப்பரவம் (தொல். புறத். 8. ந.) (3)


     1முற்பாடு - முன்னே்; பிற்பாடு என்னும் சொல்லைப போன்றது.

     2படைவெள்ளமாகிய ஆரேயிலென்பதைக் கருதி இவ்வாறு
எழுதினார் போலும்.

     3வரம்பில் வெள்ளம், ஆரெயில் எனத் தனித்தனியே நிறுத்தி
வரம்பில் வெள்ளம் கருதின், ஆரெயில் கருதினெனக்கூட்டுதலை
இங்கே கருதினார்.

     4கால் - காற்று.

     5முனைமுகம் - போர்க்களம்.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

3. வரம்பில் வெள்ளம்
 
33.இறும்பூதாற் பெரிதே கொடித்தே ரண்ணல் 
வடிமணி யணைத்த வணைமரு ணோன்றாள்
கடிமரத்தாற் களிறணைத்து
நெடுநீர துறை கலங்க
 
5மூழ்த்திறுத்த வியன் றானையொடு
புலங்கெட நெரிதரும் வரம்பில் வெள்ளம்
வாண்மதி லாக வேன்மிளை யுயர்த்து
வில்விசை யுமிழ்ந்த வைம்முள் ளம்பிற்
செவ்வா யெஃகம் வளைஇய வகழிற்
 
10காரிடி யுருமி னுரறு முரசிற்
கால்வழங் காரெயில் கருதிற்
போரெதிர் வேந்த ரொரூஉப நின்னே.

துறை  : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு.
வண்ணம்  : ஒழுகு வண்ணம்.
தூக்கு  : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்.
பெயர்  : வரம்பில் வெள்ளம்.

1 - 5. இறும்பூதால்............வியன்றானையொடு.

உரை : கொடித் தேர் அண்ணல் - கொடியணிந்த தேர்களையுடைய
அரசே;  இறும்பூது  பெரிது  -  நின்  பொறையுடைமை  கண்டவழிக்
கொண்ட வியப்பினும் பெரு வியப்பாக வுளது; வடி மணி அணைத்த -
வடித்த ஓசையினையுடைய மணியைப் பக்கத்தே கட்டப்பெற்ற;  பணை
மருள்  நோன்றாள் - பணை போன்ற வலிய தாள்களையுடைய; களிறு
-  கடி  மரத்தான்  அணைத்து  - யானைகளைக் காவல் மரத்தோடே
பிணித்து;  நெடு  நீர  துறை  கலங்க  - கலங்காத மிக்க நீரையுடைய
துறைகள்  கலங்கும்படி;  மூழ்த்து  இறுத்த  வியன்  தானையொடு  -
பலவாய்த்   திரண்டு   மொய்த்து   விரைய   முன்னேறித்  தங்கும்
இயல்பிற்றாகிய பெரிய தூசிப் படையொடு கூடிய எ - று.

இறும்பூது     பெரிது என மீளவுங் கூறியது, பெரிதுற்ற முன்னைய
இறும்பூது,   போரெதிர்  வேந்தர்  பொராது  அஞ்சி  யொருவுதலால்,
மிகுதல்   தோன்ற   நின்றது.  எப்போதும்  போர்ச்  செலவுகுறித்துப்
பண்ணமைந்து  நிற்குமாறு  கூறுவார்,  “வடிமணி யணைத்த” என்றார்.
செல   வில்வழி   யானை   மணியணைப்   புண்ணாது  வறிதிருக்கு
மாதலாலும்,   நீராடற்குச்   செல்ல     வேண்டியவழி     முன்னே  பறை                  யறைந்து              செல்பவாதலாலும்,
உலாவரல்   முதலிய   செலவின்   கண்  கடுமை  வேண்டாமையின்
இருமருங்கும்  கிடந்து  இரட்டுமாறு நால விடுவ ராதலாலும் இவ்வாறு,
“அணைத்த”  எனக்  கூறினார் என்றுணர்க. அணைத்தல், பிணித்தல்.
பணை,   உரல்   போல்வதொரு  முரசு  வகை;  ஆனுருபு  ஒடுவின்
பொருட்டு. யானையைக் கடிமரத்தோடு பிணித்தல் பண்டையோர் மரபு;
“ஒளிறுமுகத் தேந்திய வீங்குதொடி மருப்பிற், களிறு கடி மரஞ் சேரா”
(புறம்.  336) என்று பிறரும் கூறுதல் காண்க. நீர, பெயரெச்சக் குறிப்பு;
“சினைய  சிறுமீன்”  (ஐங்.  1)  என்றாற்  போல.  கடிமரத்திற் களிறு
பிணித்தலும்   நீர்த்துறையைச்  சேறாகக்  கலக்கி  யழித்தலும்  பகை
வேந்தர்  செயலாகும்.  மூழ்த்தல்,  மொய்த்து வளைத்தல்; “முரணுடை
வேட்டுவர்  மூழ்த்தனர்  மூசி”  (பெருங்.  1,  56;  49) எனப் பிறரும்
இதனை  வழங்குதல்  காண்க.  சென்றிறுத்தலை  விரைந்து  செய்யுந்
திட்பமுடைமை  தோன்ற,  இறுத்த வென இறந்த காலத்தாற் கூறினார்.
ஈண்டுக்  கூறியன  தூசிப்படையின்  செயல்களாதலின், வியன் தானை
யென்றது   தூசிப்படையாயிற்று.  பழையவுரைகாரரும்,  “வியன்றானை
யென்றது,  பகைவர்  நாட்டெல்லையில் முற்பாடு சென்று விட்ட தூசிப்
பெரும்  படையை” என்றே கூறுவர். நோன்றாட் களிறணைத்து, துறை
கலங்க மூழ்த் திறுத்த வியன்றானையென வியையும். 
  

6 - 12. புலங்கெட................நின்னே.

உரை : புலங் கெட நெரிதரும் - தங்கிய புலன்கள்   விளைபயன்
கெட்டழியுமாறு  செறிந்து  தங்கும்;  வரம்பில் வெள்ளம் கரையில்லாத
கடல்  போன்றதும்;  வாள்  மதிலாக  -  வாட்படையே  மதிலாகவும்;
வேல்மிளை  உயர்த்து  -  வேற்படையே காவற்காடாகவும் நிற்ப; வில்
விசை   உமிழ்ந்த  அம்பு  வைம்முள்  -  வில்லினின்று  விசையுறத்
தொடுக்கப்படும்   அம்புகள்   கூரிய  முள்வேலியாகவும்;  வளைஇய
செவ்வாய்   எஃகம்   அகழின்  -  தானையைச்  சூழநின்ற  சிவந்த
வாயையுடைய  பிற  படைக்  கருவிகள் அகழியாகவும்; உரறு முரசின்
காரிடி  யுருமின்  -  முழங்குகின்ற  முரசங்கள் கார்காலத்து இடிக்கும்
இடியேறாகவும்;  வழங்கு  கால்  ஆர் எயில் - நடக்கின்ற காலாட்கள்
வெல்லுதற்கரிய    அரணாகவும்    கொண்ட    முழு   முதலரணம்
போன்றதுமாகிய   நின்   படை;   கருதின்  -  பகைமேற்  செல்லக்
கருதினால்;   போர்  எதிர்வேந்தர்  -  அதன்  போரை எதிரேற்றுப்
பொரவரும்  பகைவேந்தர்;  நின்  -  நின்னையும் நின் படையையும்;
ஒரூஉப  - கண்டமாத்திரையே  அஞ்சி யுளமழிந்து பொர நினையாது
புறந்தந்து ஓடுவர் எ - று.

தூசிப்படையை     “வியன்   றானையொடு”    எனப்     பிரித்
தோதினாராகலின்,    வரம்பில்   வெள்ள   மென்றது,   பின்னணிப்
பெரும்படையாயிற்று.  தானை  சென்று  பகைப்புலத்தே  தங்குங்கால்,
அப்  புலங்களின்  விளை  நலத்தை  யெரியூட்டிக்  கெடுத்தும்,  நீர்
நிலைகளைக்    கரையுடைத்துச்   சிதைத்தும்   அழிப்ப   ராதலின்,
“புலங்கெட நெரி  தரும்” என்றார். “கரும்பொடு காய்நெற் கனையெரி
யூட்டிப்,   பெரும்புனல்    வாய்திறந்த பின்னும்” (பு. வெ. 56) என்று 
பிறரும்     கூறுதல்  காண்க.  படையும்  அரசற்கு      அரணாகும்
சிறப்புடையதாகலின், வாள், வேல், வில், எஃகம் முதலியவற்றை  எயிற்
குறுப்பாகிய  மதிலும்  மிளையும்  வேலியும்  அகழியுமாக   உருவகம்
செய்தார்.  “படை  வெள்ளத்தை  ஆரெயி லென்றது, அரசன் தனக்கு
ஆரெயில்  போல  அரணாய்  நிற்றலின்  எனக் கொள்க; இனிக் கார்
வழங்கா ரெயில் எனக் காற்றல்லது வழங்கா ஆரெயில் என்று பகைவர்
மதிலாக்கி,   அதனை  வரம்பில்  வெள்ளம்  கொள்ளக்  கருதினென்
றுரைப்பாரு  முளர்” என்பது பழையவுரை. வரம்பில் வெள்ளமென்றும்
ஆரெயி  லென்றும்  நின்றன பின்னணிப் பெரும் படையையே சுட்டி
நின்றன.  கடல்  கரையுடையதாகலின்,  அதனின்  நீக்கற்கு “வரம்பில்
வெள்ள” மென்றார். அதுபோல் அளக்கலாகாப் பெருமை யுடைமையும்
உடன்தோன்ற     நிற்றலின்,     இதனானே    இப்    பாட்டிற்குப்
பெயரமைத்தனர்.     இனிப்,     பழையவுரைகாரர்,     “வரம்பில்
வெள்ளமென்றது,   அதனொடு   கூடி   நாட்டுள்ளுஞ்  சென்றுவிடும்
பேரணிப்   பெரும்படையை;  கரையையுடைய  கடலை  வரம்புடைய
வெள்ள  மென்  றாக்கி,  இதனை  வரம்பில்  வெள்ளமென்று  கூறிய
சிறப்பான்  இதற்கு  வரம்பில்  வெள்ளமென்று பெயராயிற்று” என்பர்.
மேலும்,  அவர், “வெள்ளம் என்பதில் மகர வொற்றுக் கெடாமையான்
இருபெயரொட்டுப்  பண்புத்  தொகையன்றி ஒருபொருளாக இருபெயர்
நின்றதாகக்  கொள்க”  என  வுரைப்பர். என்றது, வரம்பில் வெள்ளம்
என்பதும்,  ஆரெயில் என்பதும் ஒரு பொருள் குறித்து வேறு பெயர்க்
கிளவி என்றவாறாம். வரம்பில் வெள்ள மென்றது, தானையின் தொகை
மிகுதியும் பெருமையும் குறித்துப் பொதுப்பட நிற்ப, ஆரெயி லுருவகம்
அதன்   உறுப்புக்கள்   அரணாம்   சிறப்பை   விளக்கி   நிற்கிறது.
செயவெனச்சம்   செய்தென   நின்றது.   பழையவுரையும்,   “உயர்த்
தென்பதனை  உயர்த்தவெனத்  திரித்து, அதனை யெஃகம் வளைஇய
வென்பதனோடு  முடிக்க” என்று கூறும். போர் முனைக்குச் செல்லாது
ஒழிந்திருக்கும்  ஏனைக்  குந்தம்,  தோமரம் முதலிய படைத்திரளைப்
பொதுவாய்ச்,    “செவ்வா    யெஃகம்”    என்றொழிந்தார்.    இன்,
அல்வழிக்கண்  வந்தன.  பழையவுரைகாரர்,  “வாள் மதிலாக வென்று
வைத்துப்     பின்னை     ஆரெயி    லென்றது,    வாண்மதிலைச்
சூழ்தலையுடைய   ஆராகிய   எயிலினையெனக்   கொள்க;   ஈண்டு,
ஆராவது  காலாள்  வழங்கிச் செல்கின்ற படையின் திரட்சி” என்றும்,
“இனி,   வரம்பில்   வெள்ளமானது  வாள்  மதிலாக  வேல்  மிளை
யுயர்த்துக்  கால்  வழங்கு ஆரெயிலாதலைக் கருதினென்றலும் ஒன்று”
என்றும்  கூறுவர்.  இனி, “ஆரெயிலைப் பகைவரது படைநிலையாக்கி,
அதனை  நின்  வரம்பில்  வெள்ளமாகிய  தானை கொள்ளக் கருதின்
என்று  இயைத்  துரைப்பினுமாம்”  என்பர்.  நின் னென்புழி, ஐயுருபு
தொக்கது.
 

இதுகாறும்     கூறியது,  கொடித்தே  ரண்ணலே     முன்னைய
இறும்பூதினும்   இது   பெரிதாக  உளது;  யாங்ஙனமெனின்,  வியன்
றானையொடு    வரம்பில்    வெள்ளம்    போன்றதும்   ஆரெயில்
போன்றதுமாகிய    நின்   பின்னணிப்   பெரும்படை   மேற்சென்று
பகைவர்பால்  வென்றி கொள்ளக் கருதின்; போரெதிரும் பகைவேந்தர்
கண்ட   மாத்திரையே   யூக்க   மிழந்து   அஞ்சி   நடுங்கி   நீங்கி
யோடுகின்றன  ராகலான்  என்றவாறாம் பழையவுரைகாரர், “அண்ணல்
இது  பெரிதும்  இறும்பூதாயிருந்தது;  யாதெனின், வரம்பில் வெள்ளம்
கால்    வழங்       காரெயிலெனச்  சொல்லப்பட்ட   நின்   படை,
போர்செய்யக்    கருதின்    நின்னொடு    போரெதிர்ந்த   வேந்தர்
பொரமாட்டாது  நின்னை  நீங்குவர்;  இஃது அதுவென வினை முடிவு
செய்க”  என்றும் இதனால் அவன் வென்றிச் சிறப்புக்  கூறியவாறாயிற்
றென்றும் கூறுவர்.
   

“வரம்பில் வெள்ளம் கருதி னென எடுத்துச் செலவினை மேலிட்டுக்
கூறினமையான்,    வஞ்சித்துறைப்   பாடாண்   பாட்டாயிற்று.    கடி
மரத்தானென்றது   முதலாக  மூன்றடி  வஞ்சியடியாக   வந்தமையான்
வஞ்சித்தூக்கு மாயிற்று.”


 மேல்மூலம்