முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
34. ஒரூஉப நின்னை யொருபெரு வேந்தே
ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்கால்
இருநிலந் தோயம் விரிநூ லறுவையர்
செவ்வுளைய மாவூர்ந்து
  5 நெடுங்கொடிய தேர்மிசையும்
ஓடை விளங்கு முருகெழு புகர்நுதற்
பொன்னணி யானை முரண்சே ரெருத்தினும்
மன்னிலத் தமைந்த.....................................................
மாறா மைந்தர் மாறுநிலை தேய
  10 முரைசுடைப் பெருஞ்சமந் ததைய வார்ப்பெழ
அரைசுபடக் கடக்கு மாற்றற்
புரைசான் மைந்தநீ யோம்பன் மாறே.

     துறை - தும்பையரவம். வண்ணமும் தூக்கும் அது.
பெயர் - ஒண்பொறிக் கழற்கால் (2)

     (ப - ரை) ஒரூஉப (1) அறுவையர் (3) என முடிக்க.

     2. ஒண்பொறிக் கழற்காலென்றது தாங்கள் செய்த அரிய
போர்த் தொழில்களைப் பொறித்தலையுடைய ஒள்ளிய
கழற்காலென்றவாறு.

     இச்சிறப்பான் இதற்கு, 'ஒண்பொறிக் கழற்கால் என்று
பெயராயிற்று.

     வேந்தே (1) மாவூர்ந்து (4) அரைசுபடக் கடக்கும்
ஆற்றலையுடைய (11) புரைசான் மைந்த, அவ்வாற்றலிடத்து வரும்
1குறைகளுக்குப் பிறரை ஏவாது அவற்றை நீயே பாதுகாத்துச்
செய்தலால் (12) ஒரூஉப (1) அறுவையார் (3) எனக் கூட்டி
வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக்
கூறியவாறாயிற்று.

     2மாற்றார் நாடுகோடல் முதலாயினவன்றி 3வென்றிகோடலே
கூறினமையால் துறை தும்பையாய், ஒரூஉபவெனப் படையெழுச்சி
மாத்திரமே கூறினமையான், அதனுள்
4அரவமாயிற்று.

     'செவ்வுளைய' (4) என்பது முதலாக இரண்டும் வஞ்சியடியாய்
வந்தமையான் வஞ்சித்தூக்குமாயிற்று.

     (கு - ரை) 1. ஒரூஉப நின்னை - போர் செய்தற்கு வந்த
நிலை நீங்கி நின்னை விட்டுச் செல்வர்.

     2. ஓடாப் பூட்கை - புறங்கொடுத்து ஓடாத கோட்பாட்டையும்
(பதிற். 57 : 1; முருகு. 247; சிறுபாண். 83; அகநா. 100 : 8; புறநா.
165 ; 15). ஒண்பொறிக் கழற் கால் - ஒள்ளிய பொறித்தலையுடைய
கழலையணிந்த காலையும் உடைய; "ஓடாத் தானை யொண்டடொழிற்
கழற்கால்" (பெரும்பாண். 102)

     3. பெரிய பூமியிலே படுகின்ற விரிந்த நூலாகிய ஆடையை
அணிந்த வேற்றரசர். நிலத்திற் படும்படி ஆடையணிதல்
பெருமிதத்திற்கு உரிய அடையாளம்; "மருங்கிற் கட்டிய நிலனேர்பு
துகிலினன்" (முருகு. 214); "நிலந்தோய் புடுத்த நெடுநுண் ணாடையர்"
(பெருங். 1. 32 : 64)

     1-3. அறுவையர் நின்னை ஒரூஉப.

     4. உளை - பிடரி மயிர்; தலையாட்டமும் ஆம். மா - குதிரை.

     5. கொடியையுடைய தேர்.

     6. ஓடை - நெற்றிப்பட்டம். உருகெழு புகர் நுதல் - அச்சம்
பொருந்திய புள்ளியையுடைய நெற்றியையுடைய.

     7. பொன்னாற் செய்த இழைகளை அணிந்த யானையினது
வலிசேர்ந்த பிடரினும். பொன்னணி யானை: "இழையணி யானை"
(புறநா. 153 : 2)

     9. மாறா மைந்தர் - போரினின்றும் மாறுபடாத வலியையுடைய
வீரர்; மாற்றலரென்பது போல நின்றதெனலும் ஆம். மாறுநிலை தேய
- எதிராக நிற்கும் நிலை அழியும்படி.

     10. சமம் ததைய - போர் கெடும்படி. ஆர்ப்ப எழ - வீரர்களது
ஆரவாரம் எழ; வீரர்: சேரன் படையிலுள்ளார். போரில்
வெற்றிப்பெற்ற வீரர் ஆரவாரத்தில் இயல்பு; "அட்டமள்ள ரார்ப்பிசை"
(குறுந். 34:5)

     11. அரசர்கள் போர்க்களத்திலே அழியும்படி வஞ்சியாது
எதிர்நின்று வெல்லும் ஆற்றலையுடைய; "அரைசுபடக் கடந்தட்டு"
(கலித். 105 : 1)

     12. புரை சால் மைந்த - உயர்ச்சி மிக்க வலியையுடையோய்;
புரை- உயர்வு. நீ ஓம்பல் மாறு - நீ பாதுகாத்தலால். மாறு:
ஏதுப்பொருள் தருவதோர் இடைச்சொல் (புறநா. 4 : 17, உரை)

     பகையரசர்களை வென்று நீ நின் நாட்டைப் பாதுகாத்தலினால்
நின் வலியை அறிந்து பிறர் நின்னைப் பொருதலொழிந்து
நீங்குவரென்றார்.

     வேந்தே (1), மைந்த, நீ ஓம்பல் மாறே (12), அறுவையர் (3)
நின்னை ஒரூஉப (1) என்க. (4)


     1குறைகள் - காரியங்கள்.

     2மாற்றார் நாடு கோடல் காரணமாயின் வஞ்சியாய் விடும்;
"எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன், அஞ்சுதகத் தலைச்சென்
றடல்குறித்தன்றே" (
தொல். புறத். 7)

     3"அரசுபடக் கடக்கு மாற்றல்" என்று மாத்திரம் கூறினமைபற்றி
'வென்றி கோடலே கூறினமையால்' என்றார்; அது தும்பையாதல்,
"மைந்துபொருளாக வந்த வேந்தனைச், சென்றுதலை யழிக்குஞ்
சிறப்பிற்றென்ப" (
தொல். புறத். 15) என்பதனால் உணரப்படும்.

     4தும்பையரவம் - பு. வெ. 128.






பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

4. ஒண்பொறிக் கழற்கால்
 
34.ஒரூஉப நின்னை யொருபெரு வேந்தே
ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்கால்
இருநிலந் தோயும் விரிநூ லறுவையர்
செவ்வுளைய மாவூர்ந்து
 
5நெடுங்கொடிய தேர்மிசையும்
ஓடை விளங்கு முருகெழு புகர்நுதற்
பொன்னணி யானை முரண்சே ரெருத்தினும்
மன்னிலத் தமைந்த . . . . . . . .
மாறா மைந்தர் மாறுநிலை தேய
 
10முரைசுடைப் பெருஞ்சமந் ததைய வார்ப்பெழ
அரைசு படக் கடக்கு மாற்றற்
புரைசான் மைந்தநீ யோம்பன் மாறே.

துறை  : தும்பை யரவம்.
வண்ணமும் தூக்கு மது.
பெயர்  : ஒண்பொறிக் கழற்கால். 

1 - 3. ஒரூஉப...................அறுவையர். 

உரை : ஒரு பெரு வேந்தே - ஒப்பற்ற பெரிய வேந்தே;   ஓடாப்
பூட்கை  -  போரிற்  புறங் கொடாத கோட்பாட்டையும்; ஒண் பொறிக்
கழற்கால்  -  ஒள்ளிய  பொறிகள் பொறித்துள்ள வீரகண்டை யணிந்த
கால்களையும்;   இரு  நிலம்  தோயும்  -  பெரிய  நிலம்  வரையில்
தொங்குகின்ற;  விரி  நூல்  அறுவையர்  -  விரிந்த நூலான் இயன்ற
ஆடையினையுமுடைய  பகைவர்; நின்னை ஒரூஉப - நின்னை அஞ்சி
நீங்குவர் காண் எ - று.

பிறர்துணை  வேண்டாதே  தானே  தன்     படையைக்கொண்டு
சென்று தன்னைப் போரில் எதிர்ந்தவரைப் பொருது வென்றி யெய்தும்
சிறப்புடையனாதல்  பற்றி, “ஒரு பெரு வேந்தே” என்றார்.  மானமும்
வலியுமுடைய   வீரர்க்குப்   புறக்கொடை   மாசு   தருவதாகலானும்,
சேரமான் மாசுடையாரோடு பொரா னாகலானும் பகைவேந்தரை“ஓடாப்
பூட்கை”   யென்றும்,  “ஒண்பொறிக்  கழற்கால்”  என்றும்  சிறப்பித்
துரைக்கின்றார்.  போரில்  செய்த  அரிய  செயல்களைத் தம் கழலில்
பொறித்துக் கொள்ளுதல் பண்டையோர் மரபாதலின், அம் மரபு மாறா
மாண்புடைமை    தோன்ற,    “ஒண்பொறிக்   கழற்கால்”  என்றார்.
ஓடாமையும்,  கழலணியப்படுதலும்  சிறப்புடைச்  செயலாக வுடையன
வீரர்    கால்களாதலால்,    காலையே    விதந்தோதினார்.  ஓடாப்
பூட்கையாலும்    ஒண்பொறி    பொறித்த    கழலாலும்   பெருமை
யுடையராதலின்,      உடுக்கும்      ஆடையை       நிலந்தோய
உடுக்கின்றனரென்பார்,   “இரு  நிலந்தோயும்   விரிநூ   லறுவையர்”
என்றார். கொங்குவேளிரும்,“நிலந்தோய் புடுத்த நெடுநுண் ணாடையர்,
தானை  மடக்கா  மானமாந்தர்” (பெருங். 1, 36; 64-5) என்று கூறுதல்
காண்க.  பழையவுரைகாரர்,  “ஒண்பொறிக் கழற்கா லென்றது, தாங்கள்
செய்த  அரிய  போர்த் தொழில்களைப் பொறித்தலையுடைய ஒள்ளிய
கழற்கா  லென்றவா”  றென்றும்  “இச் சிறப்பான் இதற்கு ஒண்பொறிக்
கழற்கா  லென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். கழல்செய்த கம்மியர்
அமைத்த  பொறிகள் போலாது  போரிடையே புகழ் விளைத்த அரிய
செய்திகள்  பொறித்த பொறியாதல் பற்றி “ஒண் பொறி” யென்றாரென
வறிக.     ஒரு    பெரு    வேந்தே,    பூட்கையும்    கழற்காலும்
விரிநூலறுவையுமுடைய  பகைவர்  நின்னை யொரூஉப என இயைத்து
முடிக்க. பெருவேந் தென்புழிப் பெருமை, பொருளாலும் படையாலுமே
யன்றி,  அறிவாலும்  ஆண்மையாலுமாகிய  ஆற்றலின் மிகுதி குறித்து
நின்ற  தென்க;  இனி  மான  மாந்தராகிய பகைவர் தன்னைக் கண்டு
அஞ்சி  ஒருவும்  பெருமையுடைமை  பற்றிச்  சேரமானை, பெருவேந்
தென்றா ரென்றுமாம்.
 

4 - 12. செவ்வுளைய...............யோம்பன்மாறே.

உரை : மாறா மைந்தர் - போர்த்தொழிலில் கூறப்படும் அறத்துறை
மாறாத   வீரரது;   மாறு   நிலை  தேய  -  வலியானது  கெடுமாறு;
முரைசுடைப் பெருஞ் சமம் ததைய - முரசு முழக்கிச் செய்யும் பெரிய
போர்க்களத்தே    நெருங்கியவழி;    ஆர்ப்பு    எழ    பல்வகைப்
படையிடத்தும் ஆரவார முண்டாக; அரைசு படக் கடக்கும் ஆற்றல் -
பகை  மன்னர்  தம் வலி முற்றவும் அழியப் பொருது வென்றி பெறும்
ஆற்றலால்;   புரை   சால்   மைந்த   -  உயர்வமைந்த  வலியினை
யுடையோனே;    செவ்    வுளைய   மா   ஊர்ந்தும்   -   சிவந்த
பிடரியினையுடைய   குதிரைமீ   திவர்ந்தும்;  நெடுங்  கொடிய  தேர்
மிசையும்  -  நீண்ட  கொடியினையுடைய  தேர்மீ  தேறியும்;   ஓடை
விளங்கும்  உரு  கெழு புகர் நுதல் - முகபடாம் அணிந்து விளங்கும்
கண்டார்க்கு  உட்குப்பயக்கும் புள்ளி பொருந்திய நெற்றியினையுடைய;
பொன்னணி  யானையின் முரண்சேர் எருத்தினும் -  பொன்னரிமாலை
யணிந்த  யானையினுடைய வலிமை பொருந்திய  கழுத்தின்மீதிருந்தும்;
மன்நிலத்து  -  நிலைபெற்ற  நிலத்திடத்தும்;  அமைந்த.  .  .  .  . .
பொருந்திப்   போருடற்றுதற்கண்;   நீ   ஓம்பல்  மாறு  -  நீ  நின்
தானையைப் பாதுகாப்பதனால் எ - று.
   

மைந்தர் மாறு நிலை தேய, சமம் ததைய, ஆர்ப்பெழ, அரைசுபடக்
கடக்கும்  ஆற்றலாற்  புரைசான்ற  மைந்த,  நீ  நி்ன் தானையை, மா
வூர்ந்தும்,   தேர்மிசை   யேறியும்,   யானை  யெருத்தத்  திருந்தும்,
நிலத்திடை   நின்றும்  ஆங்காங்கு  நின்று  பொரும்  சான்றோர்க்கு
மெய்ம்மறையாய்   நின்று  ஓம்புகின்றா  யாதலால்,  அறுவையராகிய
பகைவர்  நின்னை  ஒரூஉப  என முடிக்க. வேந்தர்களைச் சான்றோர்
மெய்ம்மறை  (பதிற்.  14:12) என்பதும் இக் கருத்தே பற்றியென  வறிக.
போர் குறித்து  மேல்  வருவோர்க்கும் அவரை  எதிரூன்றுவோர்க்கும்
ஒருவர்க்   கொருவரது  வலி   நிலைகெடச்  செய்வது  போர்க்களத்
துட்கோளாதலின்,   “மாறா   மைந்தர்   மாறுநிலை   தேய”  எனப்
பொதுப்படக் கூறினார். ததைதல், நெருங்குதல். அரைசுபடக்  கடக்கும்
ஆற்றலுடைய  வேந்தர்க்கு  உயர்வு  உண்டாதல்  ஒருதலையாதலின்
“ஆற்றற்  புரைசால் மைந்த”  என்றார்.  குதிரைப்படை,  தேர்ப்படை,
யானைப்படை, காலாட்படை  எனப் படை நால்வகைத்தாதலின்,  அந்
நால்வகை  யிடத்தும் உண்டாகும் தளர்ச்சியினைப் போக்குவான்  பிற
தானைத்  தலைவரை  யேவாது தானே  நேரிற்  சென்று  ஓம்புதலை,
மாவூர்ந்தும்  தேரிவர்ந்தும்  யானை யேறியும்  நிலத்து நின்றும்,  “நீ
ஓம்பன்    மாறே”    என்றார்.   பழையவுரைகாரரும்,   “மாவூர்ந்து
அரைசுபடக்  கடக்கும்  ஆற்றலையுடைய  புரைசால் மைந்த,   அவ்
வாற்றலிடத்து வரும் குறைகளுக்குப் பிறரை யேவாது அவற்றை  நீயே
பாதுகாத்துச் செய்தலால் ஒரூஉப அறுவையர்” என்பர்.   

இதனாற் சொல்லியது, அவன் வென்றிச்சிறப்புக் கூறியவா றாயிற்று.   

“மாற்றாநாடு     கோடன்  முதலாயின வன்றி வென்றி கோடலே
கூறினமையால்  துறை  தும்பையாய்,  ஒரூஉப வெனப் படையெழுச்சி
மாத்திரமே  கூறினமையான்,  அதனுள் அரவமாயிற்று. தும்பையாவது,
“மைந்து  பொருளாக  வந்த  வேந்தனைச்,  சென்று  தலையழிக்கும்
சிறப்பிற்றென்ப” (தொல். புறத். 15) என்றார் ஆசிரியர் தொல்காப்பியர்.
பகைவரை    மாறா    மைந்தர்    என்றது,  மைந்து   பொருளாக
வந்தவாறாயிற்று;   அரைசுபடக்  கடக்கும்   ஆற்றலால்   மாவூர்தல்
முதலியவற்றால் ஓம்புதல் சென்று தலையழித்தலாயிற்று.

“செவ்   வுளைய”  வென்பது முதலாக  இரண்டும் வஞ்சியடியாய்
வந்தமையான் வஞ்சித்தூக்கு மாயிற்று.


 மேல்மூலம்