முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
35. புரைசான் மைந்தநீ யோம்பன் மாறே
உரைசான் றனவாற் பெருமைநின் வென்றி
இருங்களிற் றியானை யிலங்குவாள் மருப்பொடு
நெடுந்தேர்த் திகிரி தாய வியன்களத்
  5 தளகுடைச் சேவற் கிளைபுகா வாரத்
தலைதுமிந் தெஞ்சிய மெய்யாடு பறந்தலை
அந்தி மாலை விசும்புகண் டன்ன
செஞ்சுடர் கொண்ட குருதி மன்றத்துப்
பேஎ யாடும் வெல்போர்
  10 வீயா யாணர் நின்வயி னானே.

     துறை - வாகைத்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம்
அது. தூக்கு - செந்தூக்கு. பெயர் - மெய்யாடு பறந்தலை (6)

     (ப - ரை) 4. வியன்களமென்றது ஒன்றான போர்க்களப்
பரப்பை.

     5. 1அளகுடைச் சேவலென்றது பெடையோடு கூடின பருந்தின்
சேவலை.

     6. பறந்தலையென்றது அப்பெரும்பரப்பின் உட்களத்தை.

     2குறையுடலெழுந்தாடுவது ஒரு பெயருடையார் பலர்பட்ட
வழியன்றே; அவ்வாற்றாற் பலர் பட்டமை தோன்றக் கூறிய
சிறப்பான், இதற்கு, 'மெய்யாடு பறந்தலை' என்று பெயராயிற்று.

     8. மன்றென்றது அவ்வுட்களத்தின் நடுவை; அது
3மன்றுபோறலின மன்றெனப்பட்டது.

     9-10. வெல்போர் வீயா யாணரென்றது வெல் பேராகிய
இடையறாது வருகின்ற செல்வமென்றவாறு. ஆன் : அசை.

     மைந்த, நின் படை அழிவுபடாமை நீ ஓம்பு வினை
செய்தமையானே (1) நின் வென்றிகளின் பெருமை (2) பிறரிடத்தின்றி
நின்னிடத்தே (10) புகழ்ச்சியமைந்தன (2) என முடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக்
கூறியவாறாயிற்று.

     உரைசான்றன நின்வென்றியெனக் கூறினமையான் வாகைத்
துறைப பாடாணாயிற்று.

     (கு - ரை) 1. நீ ஓம்பல்மாறு - நீ பாதுகாத்தலால்.

     2. பெருமையையுடைய நின் வெற்றிகள் புகழ்ச்சியமைந்தன.

     3. வால் மருப்பு - வெள்ளிய கொம்பு

     4. உயர்ந்த தேரினது சக்கரம் தாவிய இடமகன்ற
போர்க்களத்தில்

     5. பெடையையுடைய சேவலினது இனம் தசையாகிய
இரையையுண்ண; புகா -உணவு.; "மரற்புகா வருந்திய
மாவெருத்திரலை" (குறுந். 232 : 3)

     6. தலை துமிந்து எஞ்சிய மெய் - தலை வெட்டப்பட எஞ்சி
நின்ற உடம்பு; கவந்தம்; துமிந்து - துமிய; எச்சத்திரிபு. பறந்தலை -
உட்களம்.

     7-8. அந்திமாலைப் பொழுதின்கண் ஆகாயத்தைக்
கண்டாலொத்த சிவந்த ஒளியைக் கொண்ட இரத்தத்தையுடைய
உள்ளிடத்தில்; குருதியாற்
சிவந்த போர்க்களத்துக்குச் செவ்வானம்
உவமை; "பருதிசெல் வானம் பரந்துருகி யன்ன, குருதியா றாவதுகொல்
குன்றூர்" (பு. வெ. 70)

     9-10. பேய் ஆடுதற்குக் காரணமாகிய வெல்லுகின்ற போராகிய
இடையறாது வருகின்ற புது வருவாயையுடைய நின்னிடத்து.

     நின் வயின் நின்வென்றி உரைசான்றன. பிறர் உதவியாற்
பெறும் வெற்றியன்றித் தானே பொருது தன் வலியாற்கொண்ட
வெற்றியாதலின், 'நின்னிடத்தே புகழ்ச்சி அமைந்த' என்றார்.

     (பி - ம்.) 2. பெருமநின் வென்றி. 5. அருகுடைச் சேவல்,
அருளுடைச் சேவல். (5)


     1அளகென்னும் பெயர் கோழி, கூகை, மயில் என்பவற்றிற்கு
வரும் (
தொல். மரபு. 55 - 6); இங்கே இடம்பற்றிப் பருந்தென்று
உரை கூறினர்.

     2கம்ப. மூலபலவதைப். 228.

     3மன்று - ஊருக்கு நடுவாய் எல்லாரும் இருக்கும் மரத்தடி.
(முருகு. 226, ந,)





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

5. மெய்யாடு பறந்தலை.
 
35.புரைசான் மைந்தநீ யோம்பன் மாறே
உரைசான் றனவாற் பெருமைநின் வென்றி
இருங்களிற்றி யானை யிலங்குவான் மருப்பொடு
நெடுந்தேர்த் திகிரி தாய வியன்களத்
 
5தளகுடைச் சேவற் கிளைபுகா வாரத்
தலைதுமிந் தெஞ்சிய மெய்யாடு பறந்தலை
அந்தி மாலை விசும்புகண் டன்ன
செஞ்சுடர் கொண்ட குருதிமன் றத்துப்
பேஎ யாடும் வெல்போர்
 
10வீயா யாணர் நின்வயி னானே.
 

துறை : வாகைத்துறைப் பாடாண்பாட்டு.
வண்ணம் : அது.
தூக்கு : செந்தூக்கு.
பெயர் : மெய்யாடு பறந்தலை.

3 - 6. இருங்களிற் றியானை...............பறந்தலை.

உரை :  இருங்களிற்றுயானை  இலங்கு வால் மருப்பொடு  பெரிய
களிற்றியானைகளின்   விளங்குகின்ற  மருப்புக்களுடன்;  நெடுந்தேர்த்
திகிரிதாய  -  நெடிய தேர்களின் சக்கரங்கள் சிதறிப் பரந்து கிடக்கும்;
வியன் களத்து - அகன்ற போர்க்களத்தில்; அளகுடைச் சேவல்  கிளை
-  பெடையையுடைய  சேவற்பருந்தினினம்;  புகா ஆர -  தசையாகிய
இரையையுண்ண;  தலை துமிந்தெஞ்சிய மெய்யாடு பறந்தலை -  தலை
துணிக்கப்படவே   எஞ்சிய   கவந்தம்  எழுந்தாடும் போர்க்களத்துப்
பறந்தலை எ - று.

யானையுந்   தேரும்  பட்டுக்  கிடத்தலின்,  அவற்றின் மருப்பும்
திகிரியும்  போர்க்களத்திற் சிதறிக் கிடக்குமாறு தோன்ற, “மருப்பொடு
திகிரி   தாயவியன்களத்”   தென்றார்.   மருப்பையும்   திகிரியையும்
களத்தையும்    தனித்தனியே    சிறப்பித்    தோதியது   போரினது
பெருமையும் கடுமையுந் தோற்றுதற்கு. ஆங்கே  பட்ட குதிரை, யானை,
வீரர்களின்   உடல்   துணிகள்   பருந்தினத்துக்கு   இரையாகின்றன
வென்பதாம்.   துமிந்து,   வினையெச்சத்  திரிபு;  “உரற்கால்  யானை
யொடித்துண்  டெஞ்சிய  யா”   என்புழிப்  போல.  பழையவுரைகாரர்,
“வியன்கள  மென்றது  ஒன்றான  போர்க்களப்  பரப்பை”  யென்றும்,
“அளகுடைச் சேவலென்றது, பெடையொடு கூடின  பருந்தின் சேவலை”
யென்றும்,  “பறந்தலை யென்றது, அப்பெரும்  பரப்பின் உட்களத்தை”
யென்றும்   கூறுவர்.   மேலும்,   “குறையுட   லெழுந்தாடுவது  ஒரு
பெயருடையார்  பலர் பட்டவழி யன்றே; அவ்வாற்றாற் பலர் பட்டமை
தோன்றக்  கூறிய  சிறப்பான்  இதற்கு  மெய்யாடு  பறந்தலை  என்று
பெயராயிற்று” என்று அவர் கூறுவர்.

7 - 10. அந்திமாலை.................நின்வயினானே.

உரை :  அந்தி  மாலை  விசும்பு  கண் டன்ன -  அந்திமாலைக்
காலத்தில் வானத்தைக் கண்டாற் போன்ற; செஞ் சுடர் கொண்ட குருதி
மன்றத்து  -  சிவந்த      ஒளியையுடைய      குருதி       படிந்த
போர்க்களத்து  நடுவிடத்தே;    பேஎய்  ஆடும்  வெல்  போர் வீயா
யாணர்  -  பேய்கள்  எழுந்தாடுகின்ற வெல்லும் போரிடத்துக் கெடாத
புதுமையினையுடைய; நின் வயினான் - நின்னிடத்தில் எ - று.
 

குருதி  படிந்த மன்றம், அந்தி மாலைப்போதிற் றோன்றும் செக்கர்
வானம்  போல்கின்ற  தென்பார், “அந்தி  மாலை விசும்புகண் டன்ன”
வென்றார்;  இடையறாது  பெருகும்  குருதியின்  நிறம்   ஒள்ளிதாய்த்
தோன்றலின்,  “செஞ்சுடர்  கொண்ட  குருதி”  என்றார்.  “பருதிசெல்
வானம்  பரந்துருகி யன்ன, குருதியா றாவது கொல்” (பு. வெ. மா. 70)
எனப்  பிறரும்  கூறுதல்  காண்க.  மன்று, போர்க்களத்தின் நடுவிடம்
பழையவுரைகாரர்,  “மன்றென்றது  உட்களத்தின் நடுவை; அது மன்று
போறலின்  மன்றெனப்பட்ட” தென்றும் கூறுவர். போரில் வெற்றியெய்
துந்தோறும் புதிய புதிய செல்வம் இடையறாது வருதலால் “வெல்போர்
வீயா  யாணர்”  என்றார். பழையவுரைகாரர், போரையே செல்வமாகக்
கொண்டு,  “வெல்போராகிய இடையறாது வருகின்ற செல்வம்” என்பர்.
செல்வத்துக்குப்   போர்   வருவாயாதலின்,   “செல்வத்தைப்  போர்
என்றார். நின் வயினான; ஆனும் அகரமும் அசை.

1 - 2. புரைசால்...............நின்வென்றி.

உரை :  புரைசால் மைந்த - உயர்ச்சியமைந்த வேந்தே; நீ ஓம்பல்
மாறு   -  படையழிவு  உண்டாகாவாறு  நீ  நின் தானையை  நன்கு
பாதுகாத்தலால்;  நின் வென்றி பெருமை - உன்னுடைய வென்றிகளும்
பொருளும்   படையும்;   உரை   சான்றன   -  சான்றோர்  புகழும்
புகழமைந்தன எ - று.

பிறரைத்     தனக்கு    மெய்ம்மறையாகக்   கொள்ளாது,    பிற
சான்றோர்க்குத்  தான் மெய்ம்மறையாய் நின்று வென்றியெய்தித்  தன்
பெருமைகளை  நிலைநாட்டுகின்றா  னென்பது  தோன்ற, “நின் வயின்
நின்  வென்றி  பெருமை  உரை  சான்றன”  என்றார். “நின் வென்றி
பெருமைகள்” என்றவர் மேலும் ‘நின் வயினான” என  வற்புறுத்தலின்,
உரைசான்ற  வென்றியும் பெருமைகளும் பிறரிடத்தின்றி  நின்னிடத்தே
யுளவாயின என்றாராயிற்று. பெருமை நின் வென்றி யென்பதனை,  நின்
வென்றி  பெருமையென  இயைத்து  உம்மைத் தொகையாகக் கொள்க.
பெருமை,  பொருளும்  படையும்  என்ற இரண்டன்பெருமை  மேற்று.
இனிப்  பழையவுரைகாரர்,  நின்  வென்றி  பெருமையென  வியைத்து,
“நின் வென்றிகளின் பெருமை” என்பர்.

இதுகாறும்     கூறியது,  மருப்பொடு திகிரி தாய வியன் களத்துப்
பறந்தலையது   மன்றத்தின்கண்  பேஎய்  ஆடும்  வெல்போர்  வீயா
யாணர்  நின்  வயின்,  புரைசால்  மைந்த,  நீ  யோம்பல் மாறு, நின்
வென்றி பெருமை உரைசான்றன என்பதாம். இனிப்  பழையவுரைகாரர்,
“மைந்த, நின் படையழிவு படாமை நீ யோம்புவினை செய்தமையானே
நின்  வென்றிகளின்  பெருமை பிறரிடத்தின்றி நின்னிடத்தே புகழ்ச்சி
யமைந்தன என வினைமுடிவு செய்க” என்பர்.
   

இதனாற் சொல்லியது : அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று.
உரை  சான்றன  நின் வென்றியெனக் கூறினமையான் வாகைத்துறைப்
பாடாணாயிற்று.


 மேல்மூலம்