முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
36. வீயா யாணர் நின்வயி னானே
தாவா தாகு மலிபெறு வயவே
மல்ல லுள்ளமொட வம்பமர்க் கடந்து
செருமிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று
  5 பனைதடி புனத்திற் கைதடிபு பலவுடன்
யானை பட்ட வாண்மயங்கு கடுந்தார்
மாவு மாக்களும் படுபிண முணீஇயர்
பொறித்த போலும் புள்ளி யெருத்திற்
புன்புற வெருவைப் பெடைபுணர் சேவல்
  10 குடுமி யெழாலொடு கொண்டுகிழக் கிழய
நிலமிழி நிவப்பி னீணிரை பலசுமந்
துருவெழு கூளிய ருண்டுமகிழ்ந் தாடக்
குருதிச் செம்புன லொழுகச் செருப்பல
செய்குவை வாழ்கநின் வளனே.


     துறை - களவழி. வண்ணமும் தூக்கும் அது. பெயர் -
வாண்மயங்கு கடுந்தார் (6)

     (ப - ரை) தலைச்சென்று (4) வம்பமர்க் கடந்து (3) என
மாறிக்கூட்டுக.

     1வம்பமரென்றது முன்பு செய்துவருகின்ற போரன்றிப் பகைவர்
புதிதாகப் பகைத்துச் செய்யும் போரினை.

     6. வாள் மயங்குதலாவது இரண்டு படையில் வாளும் தம்மில்
தெரியாமல் மயங்குதல்.

     இச்சிறப்பானே இதற்கு, 'வாண்மயங்கு கடுந்தார்' என்று
பெயராயிற்று.

     10. கிழக்கென்றது கீழான பள்ளங்களை.

     உள்ளமொடு வம்பமர்க் கடந்து (3) செருப்பல செய்குவை (14);

     அதனானே நினதுவலி (2) நின்னிடத்துக் (1)
கேடுபடாததாயிருந்தது (2); அதன் மேலும் இதற்கு 2அடியாகிய
நின் போர்வளம் வாழ்க (14) எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக்
கூறியவாறாயிற்று.

     மிகுதி வகையால் தன் போர்க்களச் சிறப்புக் கூறினமையின்
துறை 3களவழியாயிற்று.

     (கு - ரை) 1. கெடாத புதுவருவாயையுடைய நின்னிடத்தில்.

     2. மலிதல் பெற்ற வலி கெடாதாகும்; வயவு: வய என்னும்
அகர வீற்று உரிச்சொல் ஈறு விகாரப்பட்டு நின்றது.

     3. வளத்தையுடைய ஊக்கத்தோடு பகைவர் செய்த புதிய
போரை வென்று. உள்ளம் - மனவெழுச்சி. 4. முன்பு - வலி.
மறவர் - வீரர்.

     5. பனைமரத்தை வெட்டிய புனத்தைப்போலத் துதிக்கைகள்
வெட்டப்பட்டுப் பலவாகி ஒருங்கே. யானைக்குப் பனைமரம் உவமை.

     6. யானைகள் இறந்த, வாட்படைகள் தம்முட் கலந்த, கடிய
தூசிப் படையிலுள்ள. வாள் மயங்கு தார்: பதிற். 12 : 1.

     7. யானை குதிரையென்னும் விலங்குகளும் வீரருமாகிய பட்ட
பிணத்தை உண்ணும்பொருட்டு.

     8-9. பொறிக்கப்பட்டன போன்ற புள்ளிகளையுடைய
கழுத்தினையும், புல்லிய புறத்தினையுமுடைய எருவையினது,
பெடையைச் சேர்ந்த ஆண்பறவை. எருவை - தலைவெளுத்து
உடல் சிவந்திருந்தும் பருந்து (புறநா. 64 : 4, உரை); கழுகெனினும்
ஆம் (தக்க. 562, உரை). பொறித்த................புறம்: பதிற். 39 : 10 - 11.

     எருவையின் இயல்பு: "பொறித்த போலும் வானிற வெருத்தின்,
அணிந்த போலு மஞ்செவி யெருவை" (அகநா. 193 : 5 - 6)

     10. உச்சிக் கொண்டையையுடைய புல்லூறு என்னும் பறவையை
உடன்கொண்டு கீழே இறங்க. குடுமி கூறியமையின் ஆண் புல்லூறாகக்
கொள்க. இறங்கியது உன் உண்ணுதற்பொருட்டு. எருவை போர்க்
களத்தில் ஊனுண்ணுதல் "உயிர்திறம் பெயர நல்லமர்க் கடந்த,
தறுகணாளர் குடர்தரீஇத் தெறுவரச், செஞ்செவியெருவை யஞ்சுவர
விகுக்கும்" (அகநா. 77 : 9 - 11) என்பதனால் உணரப்படும். எழால்:
குறுந். 151 : :2, அகநா. 103 ; 1, திணைமொழி. 15.

     11. பூமி பாரத்தால் தாழ்வதற்குக் காரணமான
உயர்ச்சியையுடைய நீண்ட பிணவரிசைகள் பலவற்றைச் சுமந்து.

     12, அச்சம் எழுதற்குக் காரணமாகிய பேய்கள் ஊனை உண்டு
களித்து ஆட.

     13. இரத்தமாகிய செந்நீர் ஓட. 14. செரு - போர். (6)


     1வம்பு - புதுமை.

     2அடி - காரணம்.

     3களவழி - போர்க்களத்தில் நிகழும் 1நிகழ்ச்சியைச்
சிறப்பித்தல்; களவழி வாழ்த்தென்று கூறப்படும் (
பு. வெ. 207)






பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

6. வாண்மயங்கு கடுந்தார்
 
36.வீயா யாணர் நின்வயி னானே
தாவா தாகு மலிபெறு வயவே
மல்ல லுள்ளமொடு வம்பமர்க் கடந்து
செருமிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று
 
5பனைதடி புனத்திற் கைதடிபு பலவுடன்
யானை பட்ட வாண்மயங்கு கடுந்தார்
மாவு மாக்களும் படுபிண முணீஇயர்
பொறித்த போலும் புள்ளி யெருத்திற்
புன்புற வெருவைப் பெடைபுணர் சேவல்
 
10குடுமி யெழாலொடு கொண்டுகிழக் கிழிய
நிலமிழி நிவப்பி னீணிரை பலசுமந்
துருவெழு கூளிய ருண்டுமகிழ்ந் தாடக்
குருதிச் செம்புன லொழுகச்
செருப்பல செய்குவை வாழ்கநின் வளனே.

துறை  : களவழி
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்  : வாண்மயங்கு கடுந்தார்.

1 - 2. வீயா............வயவே.

உரை : வீயா யாணர் - ஒழியாத புது வருவாயினையுடைய;  நின்
வயின் -  நின்னிடத்தே; மலிபெறு வயவு - மிகுதி பெற்ற வலியானது;
தாவா தாகும் - கெடாது நிலைபெறுவதாகும் எ - று.

வலி     நிலைபெற்றது    காரணமாகச்    சேரமான்    செய்த
போர்த்திறத்தைப் பின்னர்க்  கூறுகின்றா ராதலின்,  முன்னர், “தாவா
தாகும் மலிபெறு வயவே”   யென்றார்.   மலி   பெறு   வயவினை 
வீயா  யாணரால்  நன்குணருமாறு   தோன்ற,   அதனை  முன்னே 
யெடுத்து மொழிந்தார். மலிதல், மிகுதல். வய வென்னும்  உரிச்சொல் 
பெயராயிற்று.

3 - 4. மல்லல்...............தலைச்சென்று.

உரை :   மல்லல்   உள்ளமொடு  -   வெற்றிவளம்    சிறந்த
மனவெழுச்சியால்; செருமிகு  முன்பின்  மறவரொடு  தலைச்சென்று -
போரில்   மேம்பட்ட   வலி  பொருந்திய  வீரர்களுடனே   கூடிச்
சென்று; வம்பு  அமர்  கடந்து  -  பகைவர்  புதுமுறை  புணர்த்துச்
செய்த போர்களை வஞ்சியாது பொருது வென்று எ - று.
    

உள்ளமொடு     மறவரொடு தலைச்சென்று கடந்து என இயையும்.
வெல்போர்  வீயா  யாணர் பெறுதற்கு  ஏதுவாதலாலும்,  அவ்  வீயா
யாணரால்    வளவிய   வூக்கம்   கிளர்ந்   தெழலாலும்,   “மல்லல்
உள்ளமொடு”  எனச்  சிறப்பித்தார்.  உள்ளமொடு என்புழி ஒடுவுருபு,
ஆனுருபின்  பொருட்டு. பல போர்களையும் பல காலங்களிற் பொருது
தமது  வலியினை நிலைநாட்டின வீரர் என்றற்கு, “செருமிகு  முன்பின்
மறவர்”  என்றார்.  தொன்றுதொட்டு  வரும்  முறையிற் போர் செய்து
பயின்றாரை   வேறற்குப்   பகைவர்  புது  முறைகளைப்  புணர்த்துப்
போருடற்றக்   கருதுவது   இயல்பே;  ஆயினும்,  இவனுடைய  வீரர்
பழமையிற்  பழமையும் புதுமையிற் புதுமையுமாகிய  முறை  யமைத்துப்
பொரும்வித்தகமும்,    பொருமிடத்து    வஞ்சியாமையும்    உடைய
ரென்பதற்கு,    “வம்பமர்   கடந்து”   என்று   குறித்தார்.  வம்பம
ரென்றதற்குப்   பழையவுரைகாரரும்,   “முன்பு   செய்து   வருகின்ற
போரன்றிப் பகைவர் புதிதாகப் பகைத்துச் செய்யும் போர்” என்றார்.

5 - 14. பனைதடி.............நின்வளனே.

உரை :  பனை  தடி புனத்தின் - நின்ற பனைமரங்கள் வெட்டப்
பட்டுக் கிடக்கும் புனத்தைப்போல; பலவுடன் கை தடிபு யானை பட்ட
பலவாய்க்  கை  துணிக்கப்பட்டு  யானைகள் வீழ்ந்து கிடக்கும்; வாள்
மயங்கு கடுந்தார்  -  இருதிறத்து  வாட்படைகளும்  தம்முட் கலந்து
போருடற்றும்  தூசிப்படை  நின்ற  களத்தின்கண்; மாவும் மாக்களும்
படுபிணம் உணீஇயர் - குதிரைகளும் யானைகளும் வீரரும் படுதலால்
உண்டாகிய   பிணத்தை   யுண்டற்பொருட்டு;  பொறித்த   போலும்
புள்ளியெருத்தின்   -   பொறித்தாற்  போன்ற  புள்ளி  பொருந்திய
கழுத்தினையும்;  புன்புறம்  -  புல்லிய  புறத்தினையுமுடைய; பெடை
புணர்  எருவைச்  சேவல் - பெடையொடு கூடி யுறையும் பருந்தினது
ஆணையும்;  குடுமிஎழாலொடு  - கொண்டையையுடைய  கழுகையும்;
கொண்டு   கிழக்  கிழிய  -  உடன்  அலைத்துக்கொண்டு  பள்ளம்
நோக்கியோட; நிலம் இழி நிவப்பின் நீள் நிரை பல சுமந்து - மேட்டு
நிலத்தினின்று  கீழ் நில  நோக்கி  விழும்  நீர் வீழ்ச்சிபோல நெடிய
பிணக்குவைகள் பலவற்றையும்  சுமந்து  கொண்டு; உருகெழு கூளியர்
உண்டு  மகிழ்ந்தாட  - உட்குப் பொருந்திய கூளிக்கூட்டம் வேண்டும்
பிணங்களையுண்டு மகிழ்ச்சிமிக்குக் கூத்தாட; குருதிச்செம்புனல் ஒழுக
-  குருதியாகிய  செந்நீர் வெள்ளம் பெருக்கெடுத் தோட; செருப் பல
செய்குவை - போர்கள் பலவற்றைச் செய்கின்றாய்; நின் வளன் வாழ்க
- நினது பெருவளன் நீடு வாழ்வதாக எ - று.

யானையின்  துணிக்கப்பட்ட கை பனந்துண்டம் போறலின், அவை
வீழ்ந்து   கிடக்கும்   போர்க்களத்துக்குப்  பனை  தடிந்த  புனத்தை
யுவமித்து “பனைதடி    புனத்தின் கைதடிபு பலவுடன் யானை  பட்ட
கடுந்தார்”  என்றார்.  தார்,  வாளேந்தி  முற்படச்  சென்று  பொரும்
தூசிப்படை.  தார்,  ஈண்டு ஆகுபெயராய்,  அத் தார் நின்று பொரும்
களத்தைக்  குறித்தது. ஏனைப்  படை   வகை  போலாது, வாட்படை
இருதிறத்தினும்  இனிது  நுழைந்து  தம்முட்  கலந்து  போருடற்றற்கு
வாய்ப்புடையதாகலின்,  அச்  சிறப்புத்    தோன்ற,  “வாள்  மயங்கு
கடுந்தார்”                 என்றார்.                    பின்னர்
அணிபெற்று   வரும்   வேற்படை,   குதிரைப்படை,  யானைப்படை,
தேர்ப்படை  முதலிய  பல்  படையும்  சேரப்  பொருது பிறப்பிக்கும்
குருதிச்    செம்புனலை    வாளேந்திச்   செல்லும்   தார்ப்படையே
பிறப்பிக்கும்   பீடுடைய  தென்பது  தோன்ற  நிற்கும்  சிறப்புப்பற்றி,
இப்பாட்டு “வாண்மயங்கு கடுந்தார்” எனப்  பெயர் பெறுவதாயிற்று.
இனிப்  பழையவுரைகாரர்,  “வாள் மயங்குதலாவது இரண்டு படையில்
வாளும்  தம்மிற்  றெரியாமல்  மயங்குதல்;  இச்  சிறப்பான்  இதற்கு
வாண்மயங்கு   கடுந்தார்   என்று  பெயராயிற்று”  என்பர். எருவை
பொறித்தது   போன்ற   கழுத்தினையுடைய   தென்பதைப்  பிறரும்,
“பொறித்த போலும்  வானிற வெருத்தின், அணிந்த போலு மஞ்செவி
யெருவை”  (அகம்.  193) என்பர். எருவைச்சேவல் தன் பெடையொடு
கூடிப்   பிணமுண்பது  குறித்து,  “எருவைப்  பெடைபுணர்  சேவல்”
என்றார்.   எழால்,  இராசாளி  யென்னுங்  கழுகு.  திணைமொழியின்
பழையவுரைகாரர்,  புல்லூறு  என்பர்.  இதன்  ஆணுக்குக் கொண்டை
யுண்டென்றற்கு,   “குடுமி  யெழால்”  என்றார்;  இவ்வியைபே பற்றி
ஆசிரியர்  தொல்காப்பியரும்,  “மயிலு மெழாலுமே பயிலத்தோன்றும்”
(மரபு.    44)    என்றமை   காண்க.   பிணத்தின்மேலிருந்துண்ணும்
எருவையும்  எழாலும், அப் பிணஞ்செல்வுழித் தாமும் உடன்சேறலின்,
“கொண்டு  கிழக் கிழிய” என்றார். கிழக்கு, கீழிடம்; “கிளைஇய குரலே
கிழக்குவீழ்ந்  தனவே” (குறுந். 337) என்றாற் போல. நீர்வீழ்ச்சிக்குரிய
நிவப்பினை,    “நிலனிழி    நிவப்பு”    என்றார்;   நீர்வீழ்ச்சிக்கண்
பெருமரங்கள்     புரண்டு     வீழ்ந்    தோடல்போலக்    குருதிச்
செம்புனலொழுக்கின்கண்  மாவும்  மக்களும்  பட்ட  பிணம் புரண்டு
வீழ்ந்தோடுகின்றன  வென்பார்,  “நிலமிழி  நிவப்பின்  நீணிரை  பல
சுமந்து   குருதிச்   செம்புன  லொழுக”  என்றார்.  உருகெழு  கூளி,
கண்டார்க்கு அச்சம் பயக்கும் பேய்க்கூட்டம்.
   

இதனாற்     சொல்லியது, இவ்வண்ணம் கடுந்தார் நின்று பொருத
போர்க்களத்தின்கண்  பிணம்  உணீஇயர்  சேவல்  எழாலொடு கிழக்
கிழிய,  குருதிச் செம்புனல் நீணிரை பலசுமந்து, கூளிகள் மகிழ்ந்தாட,
ஒழுகச்  செருப்பல  செய்குவை;  நின் பெருவளம் வாழ்க என்பதாம்.
இவ்வாறு   சேரனது   போர்க்களத்தைச்   சிறப்பித்துப்   பாடுதலின்,
இப்பாட்டுக்  களவழி  யென்னும்  துறை யமைந்த பாட்டாயிற்று. இனி,
பழையவுரைகாரர்,   “உள்ளமொடு   வம்பமர்க்   கடந்து  செரும்பல
செய்குவை;    அதனானே    நினது   வலி   நின்னிடத்துக்   கேடு
படாததாயிருந்தது;  அதன்மேலும்  இதற் கடியாகிய நின் போர் வளம்
வாழ்க எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர்.

“இதனாற்   சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்”
றென்றும்,    “மிகுதி    வகையால்   தன்   போர்க்களச்   சிறப்புக்
கூறினமையின்,   துறை   களவழி  யாயிற்”  றென்றும்  பழையவுரை
கூறுகிறது.


 மேல்மூலம்