7. வலம்படு வென்றி | 37. | வாழ்கநின் வளனே நின்னுடை வாழ்க்கை வாய்மொழி வாயர் நின்புக ழேத்தப் 1பகைவ ராரப் பழங்க ணருளி நகைவ ரார நன்கலஞ் சிதறி | 5 | ஆன்றவிந் தடங்கிய 2செயிர்தீர் செம்மால் வான்றோய் நல்லிசை யுலகமொ டுயிர்ப்பத் துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும் மாயிரும் புடையன் மாக்கழல் புனைந்து மன்னெயி லெறிந்து மறவர்த் தரீஇத் | 10 | தொன்னிலைச் சிறப்பி னின்னிழல் வாழ்நர்க்குக் கோடற வைத்த கோடாக் கொள்கையும் நன்றுபெரி துடையையா னீயே வெந்திறல் வேந்தேயிவ் வுலகத் தோர்க்கே.
| துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணமும் தூக்கும் அது. பெயர் : வலம்படுவென்றி. 1 - 5. வாழ்க............செம்மால். உரை : பகைவர் ஆரப் பழங்கண் அருளி - பகைவர்க்கு நிரம்பவும் துன்பத்தைச் செய்து; நகைவர் ஆர நன்கலம் சிதறி - பாணர் முதலாயினார்க்கு நிரம்பவும் நல்ல கலன்களை வழங்கி; ஆன்று அவிந்து அடங்கிய செயிர்தீர் செம்மால் - நற்குணங்களால் நிறைந்து பணிய வேண்டுமுயர்ந்தோ ரிடத்துப் பணிந்து ஐம்புலனு மடங்கிய குற்றமில்லாத தலைவனே; வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்த - வாய்மையே யுரைக்கும் சான்றோர் நின்னுடைய புகழைப் பரவ; நின் வளன் - நின்னுடைய பெருவளனும்; நின்னுடை வாழ்க்கை வாழ்க - நின்னுடைய இன்ப வாழ்வும் நிலைபெற்று வாழ்வன வாகுக எ - று. “பீடின் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச், செய்யா கூறிக் கிளத்தல் எய்யாத” (புறம். 148) நாவினையுடைய சான்றோர் என்றற்கு, “வாய்மொழி வாயர்” என்றார். வாய்மை யமைந்த மொழி, வாய்மொழி யெனவந்தது. வாய்மை யன்றிப் பிறசொற்களைப் பயிலாத சிறப்புக்குறித்து, “வாயர்” என்றார். ஏத்தல், உயர்த்துக் கூறல். புலவரையும் பாணரையும் கூத்தரையும் அருளு முகத்தால் முறையே இயலும் இசையும் நாடகமுமாகிய முத்தமிழும் வளர்த்துப் புகழ் நடுதற்கு ஆக்கமாதலின “வாழ்க நின் வளனே” என்றும், புகழாகிய வூதியம் நிறைந்த வாழ்க்கையாதலின், “வாழ்க நின்னுடைய வாழ்க்கை” யென்றும் கூறினார். பகைவர்க்குப் பழங்கண் ஆர அருளியென வியைப்பினுமாம். வேந்தன் எக் காலத்தும் பிறர்க்கு அருளுதலையே செய்கையாக வுடைய னாதலாலும், அவ்வருள் நட்டார்க்கு ஆக்கமாகவும், பகைவர்க்குத் துன்பமாகவும் பயன் செய்தல் பற்றி, பகைவர்க்குப் பழங்கண் “அருளி” யென்றார். பழங்கண், துன்பம் பகைவர்க்குப் பழங்கண் செய்தவழி, அவர் தெருண்டு திறை தந்து வேந்தரது அருளைப் பெறுபவாதலின், பழங்கண் அருளி யென்றாரென்றுமாம். பகைப்புலத்துப் பெற்ற நன்கலங்களைத் தான் விரும்பாது புலவர் முதலிய நகைப்புல வாணர்க்கு வரையாது வழங்குதலின், “நகைவ ரார நன்கலஞ் சிதறி” என்றார் “அருளி” யென்றதனால் சேரனது தகுதியும், “சிதறி” யென்றதனால் அவனது கொடையும் குறிக்கப்பெற்றன. பிறரும், “பகைப்புல மன்னர் பணி திறை தந்துநின், நகைப்புல வாணர் நல்குர வகற்றி, மிகப் பொலியர் தன் சேவடி” (புறம். 387) என்பது காண்க. சேரனுடைய சால்பும் செம்மையும் எடுத்தோதும் கருத்தினராதலின், “ஆன்றவிந் தடங்கிய” வென்றதனால் சால்பும், “செயிர்தீர் செம்மால்” என்றதனால் செம்மையும் விளக்கினார். | 6 - 11. வான்றோய்..............கொள்கையும். உரை : வான் தோய் நல்லிசை - வான் புகழ வுயர்ந்த நல்ல புகழானது; உலகமொடு உயிர்ப்ப - உலக முள்ளளவும் தான் உளதாமாறு நிலைபெற; துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும் - வீழ்ந்த குடியினரை உயரப்பண்ணிய வெற்றி பெறுதற்குக் காரணமான செய்கையும்; மா இரும் புடையல் - கரிய பெரிய பனந்தோட்டாலாகிய மாலையும்; மாக்கழல் பெரிய வீரக்கழலும்; புனைந்து - அணிந்து சென்று; மன் எயில் எறிந்து - பகை வேந்தருடைய மதில்களை யழித்து; மறவர்த் தரீஇ - அவருடைய சீரிய வீரர்களைக் கைப்பற்றிக் கொணர்ந்து; தொன்னிலை சிறப்பின் நின் நிழல் வாழ்நர்க்கு - பழைமையான நிலைபெற்ற சிறப்பினையுடைய நின் ஆதரவின் கீழ் வாழும் நன்மக்கட் கொப்ப; கோடு அற வைத்த கோடாக் கொள்கையும் - அவர் மனத் திருந்த கொடுமை யறவே யில்லையாமாறு செம்மையுறத் திருத்தி வைத்த அறக் கோட்பாட்டையும் எ -று. நிலவுலகை யாதாரமாகக் கொண்டு ஒன்றா வுயர்ந்த புகழைக் கண்டு வானோரும் பரவுதலின், “வான்றோய் நல்லிசை” யென்றார்; இனி, “வானுயர் தோற்றம்” என்றாற் போல இலக்கணையாகக் கொள்ளினுமமையும். அறநெறியாற் பெற்ற புகழென்றற்கு, “நல்லிசை” யெனப்பட்டது. உயிர்த்தல், உளதாதல். ஆதாரமாகிய உலகம் பொன்றுங்காறும் புகழ் பொன்றுதலில்லை யாதலால், “உலகமொ டுயிர்ப்ப” என்றார். வென்றி விரும்பும் வேந்தர்க்கு வலிமிக்க படையும் செல்வ மிக்க குடிகளும் ஆதாரமாதலின், அவன் தன் நாட்டில் துளங்கு குடிகளைச் செம்மை நெறிக்கண் திருத்தமுற வைத்தல் வலம்படு வென்றியாம் என்பார், “துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றி” யென்றார்; வென்றி தரும் செயல் வென்றி யெனப்பட்டது. அரசியல் முறைகள் பலவற்றுள் ஒன்றாகிய துளங்குகுடி திருத்தும் செய்கையின் சிறப்பை எடுத்தோதி, அஃது அரசற்கு நிலைத்த வெற்றியைப் பயக்கும் எனப் பயன்மேல் வைத்து “வலம்படு வென்றி” என்றதனால், இப் பாட்டு இப் பெயரினை யுடைத்தாயிற்று. இனி, பழையவுரைகாரர், “வலம்படு வென்றியென்றது மேன்மேலும் பல போர் வென்றிபடுதற்கு அடியாகிய வென்றி யென்றவா” றென்று கூறி, இச் சிறப்பான் இதற்கு ‘வலம்பட வென்றி’ என்று பெயராயிற்று” என்பர். சேரமன்னர்க்குரிய அடையாள மாலையாதலின், “மாயிரும் புடையல்” எனச் சிறப்பித்தோதினார் மன்னெயில் என்புழி, மன்னென்றதற்கு நிலைபெற்ற வென் றுரைப்பினுமாம். அழியா வலியுடைத்தென வெண்ணிச் செருக்கியிருந்த பகை மன்னர் மதிலை எறிந்தானாதலின், அவர் செருக்கினை யிகழ்ந்து “மன்னெயில்” என்றா ரென்றுமாம். பகைமன்னர் வழிநின்று தமது அறந்திரியா மறத்தை நிலைநாட்டி மேம்பட்டா ராதலின், அவரைச் செகுத்தல் அறமாகாமை யுணர்ந்து அவரைப் பற்றிக் கொணர்ந்து, அவரது உள்ளத்தே தன்பால் பகைமையின்றி, நட்பும் துணைமையும் பிறக்குமாறு அறம் புரிந்தாக்கிய திறத்தை,“கோடற வைத்த கோடாக் கொள்கை” யென்றார். நின் நிழல் வாழ்வார்க் கொப்ப வென ஒருசொல் வருவிக்க இது “பிழைத்தோர்த் தாங்கும் காவல்” (தொல். புறத். 21) என்ற வாகைத் துறைக்கண் அடங்கும். “தொன்னிலைச் சிறப்பின் நின்னிலை வாழ்நர்க் கொப்ப” வைத்தனை யென்றதனால், அறந் திரியா மறவரது வரிசையறிந்து பேணலும் வற்புறுத்தினா ராயிற்று. கோடுதல் கொடுமை யாதலின், கொடுமைக்குரிய பகைமையை நீக்குதலைக் “கோடற வைத்தல்” என்றார். அறங்கண்ட வழி அதனை யோம்பிப் பாதுகாத்தல் செங்கோன்மை யாதலின், அறத்திற் றிரியா மறவரைப் பேணிய கோட்பாட்டை, “கோடாக் கொள்கை” யென்பா ராயினர். கோடற வைத்த கோடாக் கொள்கை யென்பதற்குப் பழையவுரைகாரர், “கொடுமை யறும்படி வைத்த பிறழாக் கொள்கை” யென்பர். எனவே, பகைமன்னர்க்குரிய மறவரைக் கொணர்ந்து, நின் னிழல் வாழும் சான்றோராகிய மறவர்க்குக் கொடுமை செய்தற் கேதுவாகிய பகைமை அவர் நெஞ்சில் நிகழாத வண்ணம் போக்கினை யென்றும், அதனால் கொள்கை பிறழாயாயினை யென்றும் கூறினாருமாம். | 12 - 13. நன்று.................உலகத்தோர்க்கே. உரை : வெந் திறல் வேந்தே - வெவ்விய திறல் படைத்த அரசே; நீ நன்று பெரிது உடையையால் - நீ மிகப் பெரிதும் உடையனாயிருக்கின்றாயாதலால்; இவ்வுலகத்தோர்க்கு - இவ்வுலகத்தில் வாழ்வோரது ஆக்கத்தின் பொருட்டு (நின்னுடைய வாழ்க்கையும் நின் வளனும் வாழ்க) எ - று. வலம்படு வென்றியும், கோடாக் கொள்கையும் பலரும் கண்டு பாராட்டுமாறு விளங்க நிற்றலின், இவற்றிற் கேதுவாகிய அவனது திறலை வியந்து, “வெந்திறல் வேந்தே” என்றும், தான் செய்யும் மறச் செயல் பலவற்றுள்ளும் இவ் விரு கொள்கைகளும் மிகுதியும் சிறப்புற்று நிற்றலின், “நன்றுபெரி துடையையால்” என்றும் கூறினார். நன்று பெரி தென்பன, ஒரு பொருட் பன்மொழி. வலம்படு வென்றியாலும் கோடாக் கொள்கையாலும் குன்றா வளனும் இன்பவாழ்வு முறையே பயனாய் விளைந்து உலகத்தவர்க்கு ஆக்கமும் இன்பமும் உளவாக்கலின், “உலகத்தோர்க்கு” என்றார். குவ்வுருபு, பொருட்டு. உலகத்தோர் பொருட்டு நீ இவ்விரண்டினையும் நன்று பெரிது உடையை யாதலால், வாழ்க நின் வளனே நின்னுடைய வாழ்க்கை யென இயைத்துக் கொள்க. | இதுகாறுங் கூறியது, செயிர்தீர் செம்மால், வாய்மொழியாளர் நின் புகழேத்த, நின் வளனும் நின்னுடைய வாழ்க்கையும் வாழ்க; துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும், மன்னெயில் எறிந்து மறவரைத் தந்து நின்னிழல் வாழ்நர்க் கொப்பக் கோடற வைத்த கோடாக் கொள்கையுமாகிய இரண்டையும், வெந்திறல் வேந்தே, நீ நன்று பெரிதுடையை யாதலால், இவ்வுலகத்தோர் ஆக்கத்தின் பொருட்டு நின்னுடை வாழ்க்கையும் நின் வளனும் வாழ்க என்பதாம். இனிப் பழையவுரைகாரர், “செம்மால், துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும் மன்னெயில்களை யெறிந்து அவற்றில் வாழும் மறவர்களைப் பிடித்துக்கொண்டு பழைதான நிலைமைச் சிறப்பினையுடைய நின் நிழலில் வாழும் வீரர்க்குக் கொடுமை யறும்படி வைத்த பிறழாக் கொள்கையும் நீ மிகப் பெரி துடையையா யிராநின்றாய்; ஆதலால், வேந்தே, இவ்வுலகத்தோர் ஆக்கத்தின் பொருட்டு நின் செல்வமும் நின் வாழ்நாளும் வாழ்வனவாக எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது, அவற்குள்ள குணங்களை யெல்லாம் எடுத்துப் புகழ்ந்து அவன் செல்வத்தையும் அவனையும் வாழ்த்தியவாறாயிற்று.” |
1. பகைவராயினும். பா. வே 2. செயிர்தீர் செம்மல் - பா. வே |
|