முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
38. உலகத் தோரே பலர்மற் செல்வர்
எல்லா ருள்ளுநின் னல்லிசை மிகுமே
வளந்தலை மயங்கிய பைதிரந் திருத்திய
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
  5 எயின்முகஞ் சிதையத் தோட்டி யேவலிற்
றோட்டி தந்த தொடிமருப் பியானைச்
செவ்வுளைக் கலிமா வீகை வான்கழற்
செயலமை கண்ணிச் சேரலர் வேந்தே
பரிசிலர் வெறுக்கை பாணர் நாளவை
  10 வாணுதல் கணவ மள்ள ரேறே,
மையற விளங்கிய வடுவாழ் மார்பின்
வசையில் செல்வ வான வரம்ப
இனியவை பெறினே தனிதனி நுகர்கேம்
தருகென விழையாத் தாவி னெஞ்சத்துப்
  15 பகுத்தூண் டொகுத்த வாண்மைப்
பிறர்க்கென வாழ்தி நீ யாகன் மாறே.

     இதுவுமது. பெயர் - பரிசிலர் வெறுக்கை (9)

     (ப - ரை) 4. களங்காய்க்கண்ணி நார்முடியென்றது
களங்காயாற் செய்த கண்ணியும் நாராற் செய்த முடியுமென்றவாறு.

     தான் முடிசூடுகின்ற காலத்து ஒரு காரணத்தால் முடித்தற்குத்
தக்க கண்ணியும் முடியும் உதவாமையிற் களங்காயால் கண்ணியும்
நாரால் முடியும் செய்து கொள்ளப்பட்டனவென்றவாறு.

     9.பரிசிலர் வெறுக்கையென்றது பரிசிலர் வாழ்வென்றவாறு.

     இச்சிறப்பான் இதற்கு, 'பரிசிலர் வெறுக்கை' என்று
பெயராயிற்று.

     நாளவையுடைமையாற் பாணர்நாளவை யென்றும் அவற்குப்
பெயராயிற்று.

     சேரல் (4) சேரலர் வேந்தே (8) பரிசிலர் வெறுக்கை, பாணர்
நாளவை (9), வாணுதல் கணவ, மள்ளரேறே (10), வசையில் செல்வ,
வானவரம்ப (12), செல்வர் உலகத்தார் பலர்மன் (1);
(அச்செல்வத்தாரெல்லாம் பெற்றது ஈதெனத)் தாவில் நெஞ்சத்துப் (14)
பகுத்தூண் தொகுத்த ஆண்மையான (15) பிறர்க்கென வாழ்தி
நீயாகலான் (16), அவர்களெல்லாருள்ளும் நின் நல்லிசை மிகும் (2)
எனக் கூட்டி வினை முடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் கொடைச்சிறப்புக்
கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1. உலகத்தோர் செல்வர் பலர்மன் - உலகத்தோரிற்
செல்வத்தையுடையோர் பலர்; அவரது புகழ் தோன்றாமல் மறைந்தது;
மன்: ஒழியிசைப் பொருளில் வந்தது.

     2. அவ்வெல்லாருள்ளும் நினது நல்ல புகழ் மேம்பட்டுத்
தோன்றும்; இசை ஈகையால் வந்தது.

     3. செல்வங்கள் ஒன்றோடு ஒன்று கலந்த நாட்டைச்
செம்மைப்படுத்திய.

     4. களங்காயாற் செய்யப்பட்ட தலையிற் சூடும் மாலையினையும்
நாராற் செய்யப்பட்ட முடியையும் உடைய சேரனே.

     5-6. பகைவர் மதிலின் இடங்கள் அழியும்படி
அங்குசத்தையுடைய பாகன் ஏவுதலால் நாடுகாவலை நினக்குத் தந்த
பூணையணிந்த கொம்பையுடைய யானையையும். தோட்டி - அங்குசம்;
இங்கே அதனையுடைய பாகனுக்கு ஆயிற்று. தோட்டிதந்த; தோட்டி -
காவல்; "நீ, உடன்றோர் மன்னெயி றோட்டி வையா" (பதிற். 25 : 5)

     'தோட்டியையுடையானைத் தோட்டியென ஆகுபெயராயிற்று'
(தொல், வேற்றுமைமயங்கு.33, தெய்வச்.)

     7. செந்நிறம் ஊட்டப்பட்ட தலையாட்டத்தையணிந்த மனம்
செருக்கிய குதிரைகளையும், பொன்னாற் செய்த வீரக் கழலையும்;
ஈகை - பொன்.

     8. செயல் அமை கண்ணி - தொழிற்சிறப்பு அமைந்த
கண்ணியையும் உடைய.

     9. பரிசிலர் வெறுக்கை - பரிசில்பெற வருவாயையுடைய
செல்வமாக இருப்பாய் (பதிற். 15 : 21, 65 : 11). பாணர் நாளவை -
பாணரையுடைய நாளோலக்கத்தையுடையாய்; "பாண்முற்றுகநின்
னாண்மகிழிருக்கை" (புறநா. 29 : 5)

     10. வாணுதல் கணவ: பதிற். 14 : 15, உரை. மள்ளர் ஏறே -
வீரர்க்குள் ஆண்சிங்கம் போன்றாய்.

     11. குற்றமில்லாமல் விளங்கிய வடுக்கள் ஆழ்ந்த
மார்பினையுடைய.

     12. வசையில் செல்வ - பழியில்லாத செல்வத்தை யுடையாய்.

     13-5. 'இனிய பொருள்களை நின்பாற் பெற்றால் அவற்றை
வேறு வேறாக அனுபவிப்போம்; தருவாயாக' என்று விரும்புவதற்கு
முன்னே கெடுதியில்லாத மனத்தோடு பிறருக்குப் பகுத்துண்ணும்
உணவைச் சேரக் கொடுத்த ஆண்மையால். இனியவை என்பது
நோக்கித் தனி தனி என இயல்பாயிற்று.

     விழையாப் பகுத்தூண் எனக் கூட்டுக. ஆண்மையையுடைய
நீ எனக் கூட்டுதலும் ஒன்று.

     16. நீ பிறர்பொருட்டு வாழ்வாயாதலால்; "தனக்கென வாழாப்
பிறர்க்குரி யாளன்" (அகநா. 54 : 13: மணி. 5 : 73). மாறு: ஏதுப்
பொருள் தருவதோர் இடைச்சொல்; 'மாறென்பது ஆனென்னும்
உருபின் பொருள் படுவதோரிடைச் சொல்' (பதிற். 54, 9 : உரை)

     பிறர்க்கென நீ வாழ்தியாதலால் (16) எல்லாருள்ளும் நின்
நல்லிசைமிகும் (2)

     (பி - ம்.) 16. வாழ்கநீ. (8)






பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

8. பரிசிலர் வெறுக்கை
 
38.உலகத் தோரே பலர்மற் செல்வர்
எல்லா ருள்ளுநின் னல்லிசை மிகுமே
வளந்தலை மயங்கிய பைதிரந் திருத்திய
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
 
5எயின்முகஞ் சிதையத் தோட்டி யேவலின்
தோட்டி தந்த தொடிமருப் பியானைச்
செவ்வுளைக் கலிமா வீகை வான்கழற்
செயலமை கண்ணிச் சேரலர் வேந்தே
பரிசிலர் வெறுக்கை பாணர் நாளவை
 
10வாணுதல் கணவ மள்ள ரேறே
மையற விளங்கிய வடுவாழ் மார்பின்
வசையில் செல்வ வான வரம்ப
இனியவை பெறினே தனிதனி நுகர்கேம்
தருகென விழையாத் தாவினெஞ் சத்துப்
 
15பகுத்தூண் டொகுத்த வாண்மைப்
பிறர்க்கென வாழ்திநீ யாகன் மாறே.

இதுவு மது.

பெயர்  : பரிசிலர் வெறுக்கை.

3 - 4. வளம்.................சேரல்.

உரை :  வளம்  தலை  மயங்கிய  பைதிரம்  -  பல்வகைப்பட்ட
வளங்களும்  தம்மிற் கலந்துள்ள நாட்டை; திருத்திய - அதன்  வளம்
பலவும்   செம்மையுற  வருதற்கேற்பத்  திருத்திச்  செம்மை  செய்த;
களங்காய்க் கண்ணி - களங்காயாற் றொடுக்கப்பட்ட கண்ணியினையும்;
நார்  முடி  -  நாராற்  செய்யப்பட்ட  முடியினையுமுடைய;  சேரல் -
சேரமானே எ - று.

ஒருவகையான      செம்மை   நெறியின்றி    நாட்டிற்    படும்
செல்வமெல்லாம்    தம்முள்   தடுமாறி   மயங்கி    யிருந்தமையின்,
“வளந்தலை   மயங்கிய  பைதிரம்”  என்றும்,  அவற்றைத்  திருத்தி
யொழுங்கு    செய்து    வருவாயைச்    செம்மைப்படுத்தினமையின்,
“திருத்திய”    என்றும்   கூறினார்.   “காடு   கொன்று  நாடாக்கிக்,
குளந்தொட்டு   வளம்”   பெருக்குதலும்,  “கூலம்  பகர்நர்  குடிபுறந்
தராஅக்,  குடிபுறந் தருநர் பார மோம்பி” நோயும் பசியு மில்லையாகச்
செய்தலும்  பிறவும்  பைதிரம்  திருத்தும்  பண்புடைச்  செய்கைகளா
மென   வறிக.   சேரவேந்தர்  இமயத்தை  வரம்பாகக்  கொண்டதும்,
பகையரசர்  எழுவர்  முடிப்  பொன்னை  ஆரமாகச் செய்து  மார்பி
லணிந்து  கொண்டதும் போல, இச் சேரமான் களங்காயாற் கண்ணியும்
நாரால் முடியும் செய் தணிந்துகொண்டது பற்றி, “களங்காய்க்  கண்ணி
நார்முடிச்  சேரல்”  எனப்பட்டான்.  இனிப் பழையவுரைகாரர், “தான்
முடிசூடுகின்ற   காலத்து   ஒரு   காரணத்தால்   முடித்தற்குத் தக்க
கண்ணியும்  முடியும்  உதவாமையின் களங்காயாற் கண்ணியும் நாரால்
முடியும்   செய்துகொள்ளப்பட்டன   வென்றவா”   றென்பர்.  இவன்
இளையனாய் முடிசூடிக்கொண்ட காலத்தே தாமே சேர வரசுக் குரியோ
ரெனச் சிலர் நன்னன் என்பான் துணையால் சேரவேந்தரா யிருந்தனர்;
அவர்க்குத்  துணையாம்  வகையால் சேரநாட்டின் ஒருபகுதி நன்னன்
வசமிருந்தது;   அதனால்  அக்காலத்துச்  செய்துகொண்ட  சூளுறவுக்
கேற்பக்  களங்காய்க்  கண்ணியும்  நார்முடியும்  கொண்டான் என்று
கோடல் நேரிதாம். வாகைப் பெருந்துறை யென்னுமிடத்து இவன் அந்த
நன்னனை வென்று தான் பண்டிழந்திருந்த நாட்டை வென்று கொண்ட
செய்தியை,  ஆசிரியர் கல்லாடனார், “குடாஅது இரும்பொன் வாகைப்
பெருந்துறைச்  செருவிற், பொலம்பூ ணன்னன் பொருதுகளத் தொழிய,
வலம்படு  கொற்றந்  தந்த  வாய்வாட், களங்காய்க் கண்ணி நார்முடிச்
சேரல்,  இழந்த  நாடு தந்தன்ன, வளம்” (அகம். 199) என்று  கூறுவர்.
இப் பத்துக்குரிய  ஆசிரியரான     காப்பியாற்றுக்    காப்பியனாரும்,
இச்    சேரமான்  நன்னனை  வென்றதை,   “பொன்னங்  கண்ணிப்
பொலந்தேர் நன்னன், சுடர்வீ  வாகைக்  கடிமுதல்  தடிந்த,  தார்மிகு
மைந்தின்  நார்முடிச்சேரல்”  (பதிற்.  40)  என்று  பாராட்டுகின்றார்.
நன்னனது  கடிமரம்  தடிந்து  களங்காய்க்  கண்ணியையும் அவனைக்
கொன்று, தான் இழந்த நாட்டைப்   பெற்ற   பின்பு  நார்முடியையும்
மாற்றிக் கொண்டான். மாற்றிக்  கொண்ட பின்னரும், அவன் வென்றி
மாண்பு    குறித்துப்   பண்டைப்    பெயராலே    வழங்கப்படுவா
னாயினானென வறிக.
 

இந்த    நன்னன்  வசமிருந்த  சேரநாட்டுப் பகுதி இப்போதுள்ள
பொள்ளாச்சித்  தாலுகா  வாகும். இதன்கண் ஆனைமலை  யென்னும்
ஊர்  பண்டை நாளில் நன்னனூர் என்ற பெயர் கொண்டிருந்த தென
ஆனைமலைக்  கல்  வெட்டுக் (A.  R.  No. 214 of 1927 - 28; வீர
கேரள  வளநாட்டு  நன்னனூர்)  கூறுகின்றது. இவனொடு களங்காய்க்
கண்ணி  நார்முடிச்  சேரல்  போருடற்றி  வென்றி யெய்திய வாகைப்
பெருந்துறை, இப்போது ஈரோட்டுக் கருகிலுள்ள பெருந்துறை யாகலாம்.

5 - 8. எயில்முகம்..............வேந்தே.

உரை :  எயில்முகம்   சிதைய  -  பகைவருடைய  மதிலிடங்கள்
சிதைந்தழியுமாறு;   தோட்டி  ஏவலின்  -  நின்னால்  ஏவப்படுதலை
யுடைமையால்;  தோட்டி தந்த - நாடு காவலை நினக்கே தந்த; தொடி
மருப்பு   யானை   -  தொடியணிந்த  மருப்பினையுடைய  யானைப்
படையும்; செவ்வுளைக் கலிமா - சிவந்த பிடரியினையுடைய குதிரைப்
படையும்;   ஈகை   வான்  கழல்  -  பொன்னாற்  செய்த  உயர்ந்த
கழலையும்;  செயல்  அமைகண்ணி  - வேலைப்பாடமையத் தொடுத்த
கண்ணியையு   மணிந்த;  சேரலர்  -  சேரநாட்டுக்  காலாட் படையு
முடைய; வேந்தே - சேரமானே எ - று.

தோட்டி,     முன்னது  ஆகுபெயரால் தோட்டி கொண்டு யானை
மேலிருந்து  அதனைச் செலுத்துவோற் காயிற்று; பின்னது,  யானையை
நெறியறிந்து       செலுத்திக்       காத்தற்குக்      கருவியாதலின்
காவற்பொருட்டாயிற்று.   தோட்டி  யுடையானைத்  தோட்டி  யென்ப
தாகுபெயரென்பர் தெய்வச்சிலையார் (தொல். சொல். வேற். மயங். 33);
“நீயுடன்றோர்  மன்னெயில்  தோட்டி  வையா” (பதிற். 25) என்புழித்
தோட்டி  யென்பதற்குக்  காவல் என்றே பழையவுரைகாரரும் பொருள்
கூறினர்.  தோட்டி யென்றது பொதுப்பட யானைமேல் வீரர்க்காயினும்,
இச்  சேரமான்,  அவ்  வியானைப்  படைக்குத்  தலைவனாய் நின்று
(தலைமைத் தோட்டி  யாய்  நின்று)  பகைவர்  எயில் முகம் சிதைய
ஏவுதலின்,    “தோட்டி   யேவலின்”   என்றார்.  அச்   செயலால்
யானைப்படை   பகைவர்  மதில்களை  யெறிந்து  வேந்தன்  கருதிய
வென்றியைப்  பயந்து  நாடு காவலை  நிலை நாட்டுதலால், “தோட்டி
தந்த தொடிமருப்பியானை” யென்றார். பகைவர் எயில்  முகம் எளிதிற்
சிதையுமாறு  தோட்டியால்  நெறியறிந்து செலுத்தும் திறம் கண்டு அவ்
யானை   தாமே   நீ   மேற்கொண்டு  எம்மைச்  செலுத்துக”  எனத்
தோட்டியைத்   தந்தன   வென்றும்,   அதனால்   “தோட்டி   தந்த
தொடிமருப்     பியானை”     யென்றா      ரென்றுமாம்.   உளை,
தலையாட்டமுமாம்.    ஈகை,   பொன்,   யானையும்,     கலிமாவும
சேரலருமுடைய வேந்தே  என இயைக்க.   கழலும்  கண்ணியுமுடைய
சேரலர் என்க. சேரநாட்டுக் காலாட்படை வீரரை, சேரலர் என்றார். 
 

9 - 12. பரிசிலர்............வரம்ப.

உரை :  பரிசிலர் வெறுக்கை - பரிசில் மாக்கள் இனிது வாழ்தற்கு
வேண்டும்  செல்வமாயிருப்பவனே;  பாணர்  நாள்  அவைபாணர்கள்
இருக்கும்   நாளோலக்கத்தையுடையாய்;   வாள்   நுதல்   கணவ -
ஒளிபொருந்திய  நுதலையுடையாட்குக்  கணவனே;  மள்ளர்  ஏறு  -
போர்வீரர்க்கு  ஆண்சிங்கம் போல்பவனே; மையற விளங்கிய - குற்ற
மின்றாக   விளங்குகின்ற;   வடு   வாழ்   மார்பின்  படைப்புண்ணா
லுண்டாகிய  வடுப் பொருந்திய மார்பினையுடைய; வசையில் செல்வ -
குற்றமில்லாத  செல்வத்தையுடையவனே;  வான வரம்ப - வானவரம்ப
னென்னும் பெயருடையாய் எ - று.

பரிசிலர், பரிசில் பெற்ற வாழும் புலவர், பாணர், கூத்தர், பொருநர்
முதலாயினோர்.  இவர்கள்  பாடுதற்குரிய பண்புடைய செல்வர்களைப்
பாடி  அவர்  வரிசை  யறிந்து  நல்கும்  பரிசில்  பெற்று  வாழ்பவர்.
“பரிசிலர் வெறுக்கை  பாணர் நாளவை” யென்று பாணரைப் பிரித்துக்
கூறியது  போலவே, “பாணர் புரவல பரிசிலர் வெறுக்கை” (பதிற். 65)
எனப்  பிறரும்  கூறுதலின், ஏனைப் புலவர் கூத்தர் முதலாயினாரைப்
போலப்   பாணர்  பரிசிலராகும்  வகையில்  அத்துணைச் சிறப்பிலர்
என்பது  பெறப்படும்.  வெறுக்கை,  செல்வம்.  செல்வம் தருபவனைச்
செல்வம்  என்றார்.  இவ்வாறே முருகவேளையும் நக்கீரர், “அந்தணர்
வெறுக்கை”  (முருகு. 263) என்பர். இனிப் பழையவுரைகாரர்,“பரிசிலர்
வெறுக்கை   யென்றது,  பரிசிலர்  வாழ்வென்றவா”  றென்றும், “இச்
சிறப்பான்   இதற்குப்   பரிசிலர்   வெறுக்கை  யென்று  பெயராயிற்”
றென்றும் கூறுவர். செல்வப்பொருள் இல்லார்க்கு இவ்வுலகத்து வாழ்வு
இல்லை  யென்ப  வாகலின்,  அவ் வியைபுபற்றி வெறுக்கையை வாழ்
வென்ற  தொக்கு  மாயினும், பாட்டிற்குப் பெயராகும் வகையில் இஃது
ஏதுவாதல்  சிறவாமை  யறிக.  “வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்கை”
(பதிற்.    15)    எனப்   பிறரும்   வழங்குதலின்,   இது   பயின்ற
வழக்குடைத்தாதல்   பெறப்படும்.  ஏனைப்  பாட்டுக்களிற்  போலாது,
ஈண்டு,   இதனைத்   தொடர்ந்து   நிற்கும்   சிறப்புரைகளுள்   இது
பொருளாலும்     இடத்தாலும்     தலைமை     பெற்று    நிற்கும்
சிறப்புடைமையால்,  இப்  பாட்டு  இதனால்  பெயர்  பெறுவ  தாயிற்
றென்றல்  அமைவுடைத்து. சேரலர்க்கு வேந்தாய் அவர் வாழ்க்கைக்கு
அரணாதலேயன்றி,    “யாதும்    ஊரே    யாவரும்  கேளிர்”என்ற
கோட்பாட்டை   யுடையராகிய  பரிசிலர்  வாழ்க்கைக்கு  ஆக்கமாதல்
பொருளாற் றலைமை. வேந்தனாயினான் தன் புகழ் பாடும் பரிசிலர்க்கு
வேண்டுவன  நல்கி  அறம்  வளர்க்கும்  நலத்தை முதற்கண் ணோதி,
இன்பப்  பகுதிக்  குரிய  பாணர்களைப்  பேணலைப் பின்பும்,  அவர்
வாயிலாகப்  பெறும் இல்வாழ்க்கை யியைபை அதன் பின்பும்  கூறுதல்
இடத்தால் தலைமை. பரிசிலர் வெறுக்கை யாதலால் நிலைபெறும் புகழ்
இம்மைப்பயனும்,   வசையில்  செல்வமுடைமையால்  மறுமைப்பயனும்
சுட்டப்    படுதல் குறிக்கத்தக்கது. பாணர் எஞ்ஞான்றும்  தம் இசைத்
தமிழ்  நலத்தை நாளோலக்கத்திருந்து காட்டற்கே பெரிதும் விரும்புவ
ராதலின், அவரை  அவர்  விரும்புமாறே  நாளோலக்கத்தே யேற்றுச்
சிறப்பிக்கும்   பான்மையன்  என்பது  தோன்ற,  “பாணர்  நாளவை”
யென்றார்.  இனிப் பழையவுரைகாரர், “நாளவை யுடைமையாற் பாணர்
நாளவை யென்றும் அவற்குப் பெயராயிற்”றென்பர்.
 

நாட்காலத்தே   வேந்தன் திருவோலக்க மிருந்தவிடத்து  முதற்கண்
பாணரும்  பின்னர்  மகளிரும்  போந்து இன்புறுத்துவ ராதலின், அம்
முறையே,  “பாணர்  நாளவை”  யென்றவர் இடையீடின்றி, “வாணுதல்
கணவ”  என்றார்;  “பாண்முற் றுகநின் னாண்மகி ழிருக்கை, பாணமுற்
றொழிந்த  பின்றை  மகளிர்,  தோண்முற்  றுகநின்  சாந்துபுல ரகலம்”
(புறம்.   29)   என்று   சான்றோர்   கூறுதல்   காண்க.  இவற்றால்
வேந்தனுடைய  அருளும்  அன்பும் சிறப்பித்தார்; இனி, அவனது மற
மாண்பைக்   குறிப்பார்,   போர்  வீரரிடையே  மடங்கா வலியுடைய
அரிமாப்  போல்  விளங்குதலால், “மள்ள ரேறே” என்றும், மடங்குதற்
கேற்ப,   முகத்தினும்  மார்பினும்  விழுப்புண்  பல  பட்ட  வழியும்,
மடங்காது  பொருது வென்றி மேம்பட்ட திறத்தை, “மையற விளங்கிய
வடுவாழ் மார்பின், வசையில் செல்வ” என்றார். வடுவாழ் மார்பாயினும்
காட்சிக்  கின்பம்  பயத்தலின்,  “மையற  விளங்கிய வடு”  வென்றும்,
அறத்தாற்றிற்  பெற்ற  செல்வமாய்  இம்மையிற்  புகழும்  மறுமையில்
பேரின்பமும் பயக்கும் சிறப்புடைய செல்வ முடைமையின்,  “வசையில்
செல்வ”   என்றும்   கூறினார்.   சேர  மன்னர்க்குரிய  சிறப்புடைப்
பெயர்களுள்  வான  வரம்ப  னென்பது  சீரிதாதலால் “வான வரம்ப”
என  ஈற்றில்  வைத்தோதினார்;  “வான வரம்பன் என்ப” (பதிற். 58)
என்றும்,  “வான வரம்பனை நீயே பெரும” (புறம். 2) என்றும், “வான
வரம்பனெனப் பேரினிது விளக்கி” (பதிக. 6) என்றும் வருதல் காண்க.

13 - 16. இனியவை................மாறே.

உரை :    இனியவை   பெறினே   -  நுகர்தற்கு   இனிய  பல
பொருள்களைப்  பெற்றவழி; தனி தனி நுகர்கேம் தருக -  அவற்றைத்
தனித்தனியாக நுகருவேம் எம்பால் கொணர்க; என - என்று; விழையா
விரும்பாத;  தாவில்  நெஞ்சத்து  - கெடாத நெஞ்சத்தால்; பகுத்தூண்
தொகுத்த   ஆண்மை   -   பிறர்க்குப்  பகுத்துண்ணும்  உணவைத்
தொகுத்தளித்த  ஆண்மையுடைமையால்; நீ பிறர்க்கென வாழ்தியாகன்
மாறு - நீ பிறர்க்குப் பயன் உண்டாக வாழ்கின்றா யாதலால் எ - று.

தனித்தனி நுகர்கே மெனற்பாலது எதுகை நோக்கித் தனி தனியென
வியல்பாயிற்று. பெறுதற்கு அரியனவும் நுகர்தற்கு  இனியனவும் ஆகிய
பல்வகைப்    பொருளும்    பெற்றவழி,    பெற்றார்க்கு   அவற்றை
ஒவ்வொன்றாகத்  தனித்தனி நுகர்தற்கு விழைவு சேறல் இயல்பாதலின்,
“இனியவை  பெறினே”  யென்றும்,  “தனிதனி  நுகர்கேம் தருக என”
என்றும் கூறினார், அவ்வாறு விழைவு சென்றவழி, அதனைக் கெடுத்து,
பிறரை நுகர்வித்தற்கண் ணெழுந்த வேட்கை கெடாது நுகரக் கொடுத்த
சேரமானது அருள் நிறைந்த நெஞ்சத்தை,“விழையாத்தாவில்  நெஞ்சம்”
என்றார்.                  இவ்வாறு                  தனக்கென
விழையாது  பிறர்க்கென விழையும் நெஞ்சுடையார்க் கன்றி, இனியவை
தொகுத்தலும்,  தொகுத்தவற்றைப்  பகுத்துண்டலும்  இல்லையாதலால்,
தாவில்  நெஞ்சத்தாற்  “பகுத்தூண்  தொகுத்த  ஆண்மை” யென்றார்.
பாத்துண்டலை   விழையாது  தனித்  தனியே  உண்டற்கு  விழையும்
இனியவை  பெற்ற வழியும், விழைவுவழி யோடும் நெஞ்சினை  யடக்கி,
அவ்   விழைவினை  யறுத்தலினும்  ஆண்மைச்  செயல்  பிறிதியாது
மின்மையின்,  “பாத்தூண்  தொகுத்த ஆண்மை” யென்றார்.தொகுத்த
வூண்   முற்றும்   பகுத்தூணாகப்  பயன்  படுத்துகின்றா  னாதலால்,
சேரமானை,  “நீ  பிறர்க்கென  வாழ்தி” யென்றார். இனி, “இனியவை
நின்பாற் பெறின் தனி தனி நுகர்கேம்; தருக என விழைதற்கு முன்பே
தாவில்  நெஞ்சத்தோடு பகுத்தூண் தொகுத்தளித்த ஆண்மையால் நீ
பிறர்க்கென  நீ  வாழ்தி” யென இயைத்துரைப்பினு மமையும். “தாவில்
நெஞ்சத்துப் பகுத்தூண் தொகுத்த ஆண்மைப் பிறர்க்கென நீ வாழ்தி”
என்றதனால்,  களங்காய்க்  கண்ணி  நார்முடிச்சேரல்  பிறர்க்குரியாள
னாதலை  விளக்குதலின்,  அவன் தனக்கென வாழா னாதலை, அவன்
நெஞ்சின்மேல்  வைத்து,  “இனியவை  பெறினே தனி தனி நுகர்கேம்
தருகென  விழையாத்  தாவில்  நெஞ்சத்” தென்றார். எனவே, இவன்
“தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்” (அகம். 54) என்றவாறாயிற்று.
மாறு,   “அனையை   யாகன்  மாறே”  (புறம்.  4)  என்புழிப்போல,
ஏதுப்பொருள்படுவதோரிடைச்சொல்;     இனிப்    பழையவுரைகாரர்,
“மாறென்பது  ஆனென்னுமுருபின்  பொருள்படுவதோ  ரிடைச்சொல்”
(பதிற். 54, உரை)என்பர்.
 

1 - 2 உலகத்தோரே....................மிகுமே.

உரை : உலகத்தோர் செல்வர் பலர்மன் - உலகத்தில் வாழ்பவருள்
செல்வமுடையோர்   பலர்உளர்;  எல்லா  ருள்ளும்  அவரெல்லாரும்
பெற்றுள்ள  புகழ்களுள்;  நின்  நல்லிசைமிகும்  நினது  நல்ல புகழே
மேம்பட்டு நிற்கும் காண் எ - று.

உலகத்துச் செல்வர்பலரும் பெற்றுள்ள புகழினும் நின் புகழே மி்க்கு
நிற்கும்;  இதற்கு  ஏது  நீ பிறர்க்கென வாழ்கின்றா யாதலால் என்பது
எனவே,   ஏனை   யெல்லாரும்  பிறர்க்கென வாழ்தலை  யொழிந்து
தமக்கென  வாழ்தலே  பொருளாகக்  கொண்ட  ரென்பதாம். இம்மை,
மறுமை,  வீடு  என்ற  மூன்றுக்குமுரிய  நலஞ்செய்து கோடற்கு உரிய
இடமாதலின்,  உலகத்தை  மேற்கொண்டு,  இம்மையில் இன்பவாழ்வும்
புகழும்,   மறுமையில்   துறக்கவின்பமும்   வீடுபெறும்  பெறுதற்குத்
துணையாவது  செல்வமாதலின்,  அதனை  யுடையோரையே  விதந்து
“செல்வர்  பலர்மன்” என்றார். “அறனீனு மின்பமு மீனும் திறனறிந்து,
தீதின்றி  வந்த பொருள்” (குறள். 754) என்றும், “அறனும் பொருளும்
இன்பமு மூன்றும், ஆற்றும் பெருமநின் செல்வம்” (புறம். 28) என்றும்
சான்றோர்   கூறுதல்   காண்க.   எல்லாரும்   பெற்ற  புகழ், அவர்
பொருளனவாய்  நின்று மாய்ந்தன என்பார், “பலர்மன்” என்றார் மன்:
ஒழியிசை  கெடுவதின்மையின் “நல்லிசை” யென்றார். “மிகுமே” யென்
றதனால்,  ஏனையோர் பு கழெல்லாம்  கெட்டழிய, இவனது  நல்லிசை
யொன்றே    நிலைபெற்று  நிற்கு மென்றா ராயிற்று, “இந்திர ரமிழ்தம்
இயைவதாயினும்,  இனிதெனத்  தமிய  ருண்டலு  மிலரே”  யென்றும்,
“அன்னமாட்சி   யனைய   ராகித்,  தமக்கென  முயலா  நோன்றாட்,
பிறர்க்கென   முயலுநருண்மை  யானே”  யென்றும் “உண்டா  லம்ம
வுலகம்”  என்றும்  கடலுள்  மாய்ந்த இளம்பெருவழுதி பாடிய பாட்டு
(புறம். 182) ஈண்டுக் கருதத் தக்கது.
  

இதுகாறுங் கூறியது, களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், சேரலர்
வேந்தே,  பரிசில்  வெறுக்கை,  பாணர்  நாளவை,  வாணுதல் கணவ,
மள்ளரேறே,  வசையில்  செல்வ,  வான வரம்ப, தாவில் நெஞ்சத்தால்
பகுத்தூண்  தொகுத்த ஆண்மையால் நீ பிறர்க்கென வாழ்தியாகலான்,
உலகத்தோர் செல்வர்  பலர்மன்; அவரெல்லாருள்ளும் நின் நல்லிசை
மிகும்  என்பதாம்.  இனிப் பழையவுரைகாரர், “வான வரம்ப, செல்வர்
உலகத்தார்  பலர்மன்;  அச் செல்வத்தாரெல்லாம்  பெற்றது ஈதெனத்
தாவில்    நெஞ்சத்துப்    பகுத்தூண்  தொகுத்த   ஆண்மையானே
பிறர்க்கென  வாழ்தி நீ யாகலான் அவரெல்லாருள்ளும் நின் நல்லிசை
மிகும் எனக் கூட்டி வினை முடிவு செய்க” என்பர்.

“இதனாற் சொல்லியது; அவன் கொடைச்சிறப்புக் கூறியவாறாயிற்று”


 மேல்மூலம்