துறை : வாகை வண்ணமும் தூக்கும் அது. பெயர் : ஏவல் வியன்பணை. 3 - 8. துப்புத்துறை.....................முன்ப. உரை : வெப்புடைத் தும்பை - வெம்மையையுடைய தும்பை சூடிப பொரும் போரின்கண்; கறுத்த தெவ்வர் கடிமுனை யலற வெகுண் டெழுந்த பகைவர் அச்சம் பொருந்திய முனையிடத்தே கேட்டு உளங்கலங்கி யலறும்படி; எடுத்தெறிந்து இரங்கும் கடிப்பினை யோச்சி யறைதலால் முழக்கும்; ஏவல் வியன் பணை போர் வீரரை முன்னேறிச் செல்லுமாறு ஏவுதலைச் செய்யும் பெரிய முரசமானது ; உரும் என அதிர்பட்டு - இடிபோல அதிர்ந்து; முழங்கி - முழங்குதலைச் செய்ய; செரு மிக்கு-போர் வேட்கைமிக்குற்று; அடங்கார் ஆர் அரண்வாடச் செல்லும் - பகைவரது அரிய அரணழியுமாறு மேற் செல்லும்; காலன் அனைய - கூற்றுவனை யொத்த; துப்புத்துறை போகிய - போர்த்துறையெல்லாம் முற்றவும் கடைபோகிய; கடுஞ்சின முன்ப - மிக்க சினமும் வன்மையும் உடையோனே எ - று. தும்பை சூடிப் பொரும் போரைத் தும்பை யென்றும், போர் வீரரது வெம்மையைப் போர்மே லேற்றி, “வெப்புடைத் தும்பை” யென்றும் கூறினார். பகைமையுடைய ராயினும், சினம் மிக்குற்றவழி யல்லது போரின்கண் எதிரா ராதலின், “கறுத்த தெவ்வர்” என்றார். கறுப்பு, வெகுளி; “கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள்” (சொல். உரி. 76) என்ப கடிப்பினைக் கடிதோச்சி யெறிதலால் பெருமுழக்கமுண்டா மாதலால், “எடுத்தெறிந்திரங்கும்” என்றார். எறிந்தென்னும் செய்தெ னெச்சம் காரணப்பொருட்டு ; பழையவுரைகாரர், “எடுத் தெறிய வெனத் திரிக்க” என்பர். நெடுந்தொலைவிற் பரந்து பல்வகைப் படைகளின் இடையே நின்று பொரும் வீரர் செவிப்படுமாறு சென்றொலிக்கும் பெரு முரசு என்றற்கு, “வியன் பணை” யென்றும், அதனை முழக்கொலி செவியிற் கேட்கும் போர் மறவரை முன்னேறிச் சென்று பொருமாறு ஏவி யூக்கும் குறிப்பிற் றாதலால் “ஏவல் வியன் பணை” என்றும் சிறப்பித்தார். வேந்தன் பணிக்கும் ஏவலைத் தன் முழக்கத்தால் உணர்த்தும் பெருமையுடைமை தோன்றப் போர் முரசை “ஏவல் வியன்பணை” யெனச் சிறப்பித் துரைத்த இச் சிறப்பால் இப் பாட்டிற்கு ஏவல் வியன்பணை யெனப் பெயராயிற்று. பழைய வுரைகாரர், “ஏவல் வியன்பணை யென்றது, எடுத்த வினை முடிந்த தெனாது மேன்மேலும் படையைக் கடிமுனைக்கண் ஏவுதலையுடைய முரசு என்றவா” றென்றும், “இச் சிறப்பான் இதற்கு ஏவல் வியன்பணை யென்று பெயராயிற்று” என்றும் கூறுவர். இவ் வியன்பணையின் முழக்கிசையின் இயல்பு தெரித்தற்கு, “உருமென வதிர்பட்டு முழங்கி” யென்றார் கடிப்பினைக் கடிதோச்சி யெறிதலால் அதன்கண் அதிர்குர லெழுந்து முழங்குவது இடியேறு போல்கின்ற தென்பதாம். முழங்க வென்பது, முழங்கியெனத் திரிந்தது. அதன் முழக்கோசையுடனே சேரலன், ஊக்கம் கிளர்ந்தெழுந்து பொரு மாற்றினை, “செருமிக்கு” என்றார.் ஊக்கம் கிளர வுண்டாகும் செருவேட்கை செருவெனப்பட்டது. செரு மிக்குச் சென்று பொருதலின் பயனாகப் பகைவருடைய அரணங்கள் வலி யழிகின்றன வென்பார், “அடங்கார் ஆரரண் வாட” என்றார். பசுமை வற்றிய பைங்கொடியை வாடிய கொடி யென்றாற்போல, கைப்பற்றுதற்கரிய காவலும் வலியு மழிந்த அரணங்களை, “ஆரரண் வாட” என்றார். “வீயாது நின்ற உயிரில்லை” (புறம். 363) என்பதனால் சாக்காடு பயக்கும் கூற்றுவனை வெல்லுதல் எவ்வுயிர்க்கும் அரிதென்பது பெற்றாம். அவ்வாறு பகைவர் வேறற் கருமைபற்றி, இச் சேரமானைக் “காலன் அனைய முன்ப” என்றார். “கால முன்ப” (புறம். 23) என்றார் பிறரும். காலன் அனைய முன்ப, துப்புத்துறை போகிய கடுஞ்சின முன்ப என இயையும். துப்பு, வலி, பகையும் போருமாம் வில்லும் வாளும் வேலும் கொண்டு, தேர் குதிரை களிறுகளை யூர்ந்து மறவரைத் தக்காங்குச் செலுத்திப் பொருந் திறம் பலவாதலின், “துப்புத்துறை,” யென்றும், அத் துறை போகக் கற்றுச் செய்யும் போரி லெல்லாம் வெற்றியே யெய்தினமையால், “துப்புத் துறை போகிய” என்றும் கூறினார். வெப்புடைத் தும்பைப் போர்க்கண், ஏவல் வியன்பணையானது, தெவ்வர் கடிமுனை யலற, உருமென அதிர்பட்டு முழங்க; அடங்கார் அரண்வாடச் செல்லும் காலன் அனைய கடுஞ்சின முன்ப, துப்புத்துறை போகிய முன்ப என இயையும். 9 - 17. வாலதின்...........புகன்றே. உரை : அலந்தலை வேலத்து உலவை யஞ்சினை - சிதைந்த தலையையுடைய வேல மரத்தின் உலர்ந்த கிளைகளில்; பொறித்த போலும் புள்ளி எருத்தின் - பொறித்தது போன்ற புள்ளிகளையுடைய கழுத்தையும்; புன்புறப் புறவின் கணநிரை யலற - புல்லிய முதுகையுமுடைய புறாக் கூட்டம் கண்டு அஞ்சித் தம் ஒழுங்கு சிதைந்து கெட ; வாலிதின் நூலின் இழையா - வெண்மையான நூலாக இழைக்கப்படாத; நுண் மயிர் இழைய - நுண்ணிய மயிர்போன்ற இழையையுடைய; சிலம்பி கோலிய அலங்கற் போர்வையின் - சிலந்திப் பூச்சி தொடுத்த அசைகின்ற வலையைப் போல; இலங்கு மணி மிடைந்த பசும்பொற் படலத்து விளங்குகின்ற மணிகள் விளிம்பிலே கோத்த பசிய பொற்றகட்டாற் செய்த கூட்டின் புறத்தே; அவிர் இழை தைஇ - விளங்குகின்ற இழையணிந்து; மின் உமிழ்பு இலங்க - ஒளி சொரிந்து விளங்குமாறு; சீர் மிகு முத்தம் தைஇய - சிறப்பு மிக்க முத்துவடம் கோத்த ; நார்முடிச் சேரல் - நாரால் தொடுக்கப்பட்ட முடியணிந்த சேரமானே எ - று. இலை முற்றும் உதிர்ந்து வறிது நிற்கும் வேலமரம் என்றற்கு, “அலந்தலை வேலத் துலவை யஞ்சினை” யென்றார். அதன் கொம்பிடத்தே சிலந்திப்பூச்சி தொடுத்திருக்கும் வலைக்கண்ணுள்ள இழை பருத்தி நூலிழை போலாது மயிரிழை போல்கின்றமையின், “நூலின் இழையா நுண்மயிரிழைய” என்றும், அச் சிலம்பி வலையைக் காணும் புறாக் கூட்டம் அஞ்சவேண்டாவாயினும் அஞ்சி நீங்குகின்றன என்றற்கு, “புறவின் கணநிரை யலறச் சிலம்பி கோலிய வலங்கற் போர்வை”என்றும் கூறினார். இழைய வென்னும் பெயரெச்சம், போர்வை யென்னும் பெயர்கொண்டது. வேல மரத்தின் கொம்பெல்லாம் சூழ்ந்து போர்த்தது போலத் தோன்றுதலின், சிலம்பி வலை “அலங்கற் போர்வை” யெனப்பட்டது.“கொலைவில் வேட்டுவன் வலை பரிந்து போகிய, கானப் புறவின் சேவல் வாய்நூல், சிலம்பி யஞ்சினை வெரூஉம், அலங்க லுலவையங் காடு” (நற். 189) எனப் பிறரும் கூறுதல் காண்க. பழையவுரைகாரர், “இழைய போர்வை யெனக் கூட்டுக” என்றும், “புறவின் கணநிரை யலறுதல் அப் போர்வையை வலையெனக் கருதி யலறுதல்” என்றும், “உலவை யஞ்சினை யென்றது, உலந்த சிறு கொம்பினையுடைய பெருங் கொம்பினை” யென்றும் கூறுவர். இனி, சரமானது நார்முடியின் அமைதி கூறுவார், நாராற் றொடுக்கப்படுமது முடிபோல் இனிது நின்று விளங்குதற்கு விளிம்பிலே மணிகள் இழைத்த பொற்றகட்டாற் கூடொன் றமைத்து, அதன் மேற்புறம் நாராற் பின்னப்பட்டு விளங்குதல் தோன்ற, “இலங்குமணி மிடைந்த பசும்பொற் படலம்” என்றும், “நார்முடிச் சேரல்” என்றும் கூறினார். “இலங்குமணி மிடைந்த பசும்பொற் படலமென்றது, விளிம்பு மணியழுத்திய பொற்றகட்டாற் செய்த கூட்டினை” யென்பது பழையவுரை.இவ்வாறமைந்த முடியின்மேல் நாரால் போர்வை போலப் பின்னி வைத்த முடியின் தோற்றம் சிறக்குமாறு முத்து வடங்கள் நூலிற்கோத்து அணியப்பட்டன வென்பார், “சீர்மிகு முத்தந் தைஇய நார்முடி” யென்றார். இம் முத்து வடங்கள் அழகிய ஒளிகான்று சிறக்கவேண்டி விளங்குகின்ற இழைகள் பல இடையிடையே வைத்துப் புனையப்பட்டமை தோன்ற, “அவிரிழை தைஇ மின்னுமிழ் பிலங்க” என்றார். இனிப் பழையவுரைகாரரும், போர்வையின் முத்தம் தைஇய வென்றது, அப் போர்வையை முத்தாற் சூழுமாறு போல அக் கூட்டினைச் செறிந்த நார்முடியின் பொல்லாங்கு குறைதற்கு முத்துவடங்களைச் சூழ்ந்தவென்றவா” றென்றும், “போர்வையின் முத்தந் தைஇய பசும்பொற் படலத்து நார் முடி என்று மாறிக் கூட்டுக” என்றும் கூறுவர். நார்முடிமேற் சூழ்ந்து கிடந்த முத்து வடத்துக்கு, சிலம்பி கோலிய வலையுவமம். அவிரிழை தைஇ யென்பதற்குப் பழையவுரைகாரர், “விளங்கின நூலாலே முத்தைக் கோத் தென்றவா” றென்பர். வேலத்து உலவை யஞ்சினைக்கண், புறவின் கணநிரைகண்டு அலறிச் சிதையுமாறு, சிலம்பி கோலிய நுண்மயிர் இழைய அலங்கற் போர்வையின், மணிமிடைந்த பொற்படலத்து, அவிரிழை தைஇ மின்னுமிழ் பிலங்க, முத்தந் தைஇய நார்முடியினை யணிந்த சேரமானே என இயைத் துரைக்க போர்வையின் என்புழி, இன்னுருபு ஒப்புப் பொருட்டு. வேலத்தின் சிலம்பி கோலிய அலங்கற் போர்வை, புறவின் கணநிரை கண்டு அலறிக் கெடுதற்கு ஏதுவாதல் போல,நின் பெரும் படை மாண்பும், சேய்மைக்கட் கண்ட துணையானே நின் பகை வேந்தர் அஞ்சிக் கெட்டொழிதற் கேதுவாம் என உள்ளுறுத்துவாறு பெற்றாம். பெறவே, இதனால் சேரமானது வென்றிச் சிறப்பு உடன் கூறியவாறு விளங்கும். 1 - 2. பிறர்க்கென............குழாத்தர். உரை : நின் மறங் கூறு குழாத்தர் - நின் வீரமே யெடுத்தோதிப் பரவி மறம் சிறக்கும் நின் படை வீரரும் ; நின் போர் நிழல் புகன்று - நின்னுடைய போராகிய நிழலையே விரும்பி வாழ்வாராயினும் ; நீ பிறர்க்கென வாழ்தி யாகன்மாறு - நீ பிறர்க்குரியாளனாய் வாழ்கின்றாயாதலால் ; எமக்கு இல் என்னார் - தம்பால் இரக்கும் எம் போல்வார்க்கு இல்லையென்னாது வேண்டுவன நல்குவர் எ - று. எனவே,நின் படைவீரரும் நின்னைப் போலவே பிறர்க்குரியாளராய் வாழ்கின்றனர் என்பதாம். மறஞ் செருக்கும் வீரர் தம்முடைய தலைவர் வீரமே எடுத்தோதி மேம்படுதல் இயல்பாதலால், “நின் மறங் கூறு குழாத்தர்” என்றார். “என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை, முன்னின்று கன்னின் றவர்” (குறள். 771) எனப் படைவீரர் தம் தலைவன் வீரத்தையெடுத்தோதுதல் காண்க. போருழந்து பெறும் வென்றியே வாழ்வின் பயனாகக் கொண்டு அதனையே விரும்பி வாழ்தல் மறவர் மாண்பாயினும், நின்னைத் தலைவனாகக் கொண்டு செய்யும் போர் அவர் தம் குறிக்கோளாகிய வென்றியைத் தப்பாது பயத்தலின் “நின் போர்நிழல் புகன்று” என்றார். தாள்வழி வாழ்வாரைத் தாணிழல் வாழ்வார் (புறம். 161) என்பதுபோல, போர்வழி வாழ்வாரைப் போர்நி்ழல் வாழ்வார் என்றார். போர் நிழல் புகன்றென்பதற்குப் பழையவுரைகாரர், “நின் போராகிய நிழலை என்றும் உளவாக வேண்டுமென்று விரும்பி யென்றவா” றென்பர். போரை நிழ லென்றதற்குப் பழையவுரைகாரர், “போரை நிழலென்றது, அப் போர்மறவரது ஆக்கத்துக்குக் காரணமாகலின்” என்றார். தலைமகன் போல அவன் போர்நிழல் வாழும் வீரரும் கொடையுள்ளத்த ராயினரென்றற்கு, “பிறர்க்கென வாழ்திநீ யாகன்மாறு” என்பர். நின் படைகொண் மாக்கள்.............வருநர்க் குதவியாற்றும் நண்பிற் பண்புடை யூழிற்றாக நின் செய்கை” (புறம். 29) எனச் சான்றோர் கூறுதல் காண்க. இதுகாறும் கூறியது, வெப்புடைத் தும்பைப் போர்க்கண் தெவ்வர் கடிமுனை யலறுமாறு இரங்கும் ஏவல் வியன்பணை உருமென அதிர்பட்டு முழங்குதலால் செருமிக்கு, அடங்கார் ஆரரண் வாடச் செல்லும் காலன் அனைய முன்ப, துப்புத்துறை போகிய கடுஞ்சின முன்ப, வேலத்து உலவையஞ்சினைக்கண் சிலம்பி கோலிய நுண்மயி ரிழைய அலங்கற் போர்வை போல, மணிமிடைந்த பசும்பொற் படலத்து, இழை தைஇ மின்னுமிழ் பிலங்க, முத்தம் தைஇய நார்முடிச் சேரல்,நீ பிறர்க்கென வாழ்தி யாகலான் நின் மறங்கூறு குழாத்தர் நின் போர் நிழற் புகன்று வாழ்வாராயினும் எமக்கு இல்லென்னாது உதவுவரென்பதாம் இனிப் பழையவுரைகாரர், “முன்ப, சேரல், நீ பிறர்க்கென வாழ்தியாகலான், நின் மறங்கூறு குழாத்தர் நின் போர்நிழற் புகன்று எமக்கு இல்லை யென்னார் எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்றும், “இனி இதற்குப் பிறவாறு கூட்டி வேறு பொருள் உரைப்பாருமுள” ரென்றும் கூறுவர். “இதனாற் சொல்லியது, அவன் கொடைச் சிறப்பும், அவன் வென்றிச் சிறப்பும் உடன் கூறியவா ராயிற்று. அம் மறவரது கொடைக்குக் காரணம் அவன் வென்றியாகலின், துறை வாகை யாயிற்று.” |