துறை : விறலியாற்றுப்படை. வண்ணமும் தூக்கும் அது. பெயர் : நாடுகா ணவிர்சுடர். 1 - 9. போர்நிழல் ............ தேய. உரை : பெரும - பெருமானே ; இன்னிசை இமிழ் முரசியம்ப - இனிய இசையைச் செய்கின்ற முரசு முழங்க ; கடிப்பு இகூஉ குணிலோச்சிப் புடைத்துக்கொண்டு ; புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப - தோளிற் புண்பட்ட போர் வீரர் போரின் முன்னணியில் நிற்க ; தானை - தூசிப் படை ; காய்த்த கரந்தை மாக்கொடி விளை வயல் - காய்த்த கரந்தையின் கரிய கொடி படர்ந்த விளை புலத்தே ; வந்து இறை கொண்டன்ற வந்து தங்கிற்றாதலான் ; நின் தானை - நின்னுடைய பெரிய சேனை வீரர் ; போர் நிழற் புகன்ற சுற்றமொடு - போரிடத்தேயுண்டாகும் ஆக்கத்தை விரும்பும் சுற்றத்தாருடனே ; ஊர் முகத்து இறாலியர் போர்நிகழும் முனையிடத்தே தங்கா தொழிவாராக ; இனி - இப்பொழுது; களைநர் யார் பிறர் - எமக்குப் புகலாய் அரண் தந்து காப்பவர் வேறே பிறர் இலர் ; எனப் பேணி என்றெண்ணி நின்னை விரும்பி ; ஒன்னார் தேய - பகை யரசர் வலி தேய்ந்து நீங்குதலால் ; மறவர் - அப் பகை மன்னருடைய சிற்றரண்களில் இருந்து காக்கும் வீரர் ; மன்னெயில் ஒலி யவிந்து அடங்க - நிலைபெற்ற மதிலிடத்தே ஊக்கமிழந்து ஆரவாரமின்றி ஒடுங்கி யடங்க எ - று. போரெனிற் புகலும் மறவராதலின், அவர் வேட்கைக் கொப்பப் போர்மேற் செலவினை ஏவும் குறிப்பிற்றாதலின், முரசின் முழக்கத்தை விதந்து, “இன்னிசை யிமிழ் முரசு” என்றார். புண்தோ ளாடவ ரென்றதனால் முன்னே பல போர்களைச் செய்து வெற்றிப் பேற்றால் மேம்பட்டவரென்பது பெற்றாம். தோளாடவர் போரேற்று முன்னிற்ப, தூசுப்படை வயலிற்றங்குதலின், நின்னைச் சூழ்ந்து வரும் மூலப்படையாகிய சுற்றத்தாருடன் நீ போர்க்களம் சேறல் வேண்டா என்பார்,“நின் தானை இறாலியரோ” என்றார். சுற்றமென்றது, தானைத் தலைவரையும், தானை யென்றது மூலப்படையினையும் குறித்து நின்றன. புண்தோ ளாடவரும் ஏனைத் தூசிப்படையுமே வென்றி பெறுதற்கு அமைந்திருப்ப, நீ நின் தானையும் சுற்றமும் வர ஊர்முகஞ் சென்றிறுத்தல் வேண்டா என்பார், “போர்நிழற் புகன்ற சுற்றமொடு ஊர் முகத்து, இறாலியரோ பெரும நின் தானை” யென்றார். போர்நிழல் என்பதற்குப் போரிடத் துண்டாகும் புகழாகிய ஒளியென்றலுமொன்று ; இதனை “ஆற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை, உளனென வரூஉம் ஓரொளி” (புறம் . 309) எனச் சான்றோர் கூறுதல் காண்க. ஊர்முக மென்றது போர்க்களத்தை. அடுத்தூர்ந் தடும் இடமாதலின், போர்க்களம் ஊர்முக மெனப்பட்டது. இனிப் பழையவுரைகாரரும், “போர் நிழற் புகன்ற சுற்ற மென்றது படைத்தலைவரை” யென்றும், “ஊர்முக மென்றது படை பொரும இடத்தை” யென்றும் கூறுவர். அந்தில் ; அசைநிலை ; “அந்தி லாங்க அசைநிலைக் கிளவியென், றாயிரண்டாகு மியற்கைத் தென்ப” (சொல். இடை. 19) என்பது தொல்காப்பியம். தானைப் பெருமையும் தமது சிறுமையும் தம்முடைய தலைவர் வலியின்மையும் தேர்ந்து ; இனித் தமக்குக் களைகணாதற்குச் சேரமானே தக்கோனெனக் கண்டு அவனைப் புகலடையும் கருத்தினராதலின், “களைநர் யாரினிப் பிறர் எனப் பேணி” யொழுகுகின்றார் என்றார். மன்னெயில் மறவர்க்குத் தலைமை தாங்கி, எதிரூன்றி நின்ற பகை வேந்தர் தம் வலியழிந்து அவரைக் கைவிட்டு நீங்கினமையின், “ஒன்னார் தேய” என்றார். செயவெனச்சம், காரணப்பொருட்டு. மன்னெயில் மறவர் ஒலியவிந் தடங்கே, அவரல்லாத தானைத் தலைவரும் வேந்தரும் வலிதேய்ந் தழிந்து அவரைக் கைவிட்டோடினமை பெறப்படுமாயினும், முடியுடைப் பெருவேந்தனாகிய இச் சேரன்முன், மறவர் அவிந்தொடுங்கின ரென்றல் சீரிதன்மையின், “ஒன்னார் தேய” வென்பது கூறப்படுவதாயிற்று. அதனால் ஊக்கமிழந்து வலியிழந்து எயிலிடத்தே யடங்கிக் கிடந்த மறவர், நார்முடிச் சேரலை வணங்கி, “பெரும, ஆடவர் போர்முகத் திருப்ப, தானை வயலிடத்து வந்த இறை கொண்டதாகலின், நீ நின் தானையுடன் ஊர்முகத்து இறாலியர்; இறைகொள்வையாயின், எமக்குக் களைகணாவார் பிறர் யாவருளர்” என்பாராய், “களைநர் யார் இனிப் பிறர்” என வேண்டுகின்றா ராயிற்று. இவ்வாறு வேண்டும் மறவர், போர் முகத்துத் தோன்றாது எயிலிடத்தே போர்க்குரிய ஆரவாரமின்றி யவிந்து கிடக்கின்றா ரென்பார், “மறவர் மன்னெயிலிடத்து ஒலியவிந்து அடங்க” என்றார். ஒலி யவியாதாயின், போர்வினை தொடர்ந்து அவர்தம் உயிர்க்குக் கேடு செய்யுமாதலால், “ஒலியவிந் தடங்” குவது இன்றியமையாதாயிற்று. ஒன்னாரென்றதற்கு மறவர்க்குத் தலைவராகிய பகை வேந்த ரென்னாது, பழையவுரைகாரர், “ஒன்னா ரென்றது, முன்சொன்ன மன்னெயில் மறவரல்லாத பகைவரை” யென்பர். மன்னெயில் என்றதனால், எயிற்புறத்தே போர் நிகழுமாறும், எயில் மட்டில் சிதையாது நிலைபெறுமாறும் பெறப்பட்டன. இக்கருத்தே தோன்றப் பழையவுரைகாரரும், “ஆடவர் போர்முகத் திறுப்ப, வயலிலே வந்து இறைகொண்டன்று தானை ; களைநர் யார் இனிப் பிறர் ; பெரும நின் தானை சுற்றமொடு ஊர் முகத்து இறாலியரெனச் சொல்லிப் பேணி என மாறிக் கூட்டுக” என்பர். 9 - 16. பூமலைந்துரைஇ ........... சேரல். உரை : பூ மலைந்து உரைஇ - போர்க்குரிய தும்பைப் பூவைச் சூடிச் சென்று ; வெண்தோடு நிரைஇய வேந்துடை அரும் சமம் கொன்று - வெள்ளிய பனந்தோட்டால் நிரல்படத் தொடுத்த மாலை யணிந்து சேரவரசுக் குரியோரெனப் போந்தெதிர்ந்த வேந்தருடைய எளிதில் வெல்லுதற்கரிய போரை யழித்து ; புறம் பெற்று அவ்வேந்தர் புறந்தந்தோடச் செய்து மன்பதை நிரப்பி அவராற் போக்கப்பெற்ற நன்மக்களை நாட்டிற் குடிபுகச் செய்து நிரப்பி ; வென்றி யாடிய தொடித்தோள் மீகை - வெற்றியாற் குரவையாடி மகிழ்ந்த தொடியணிந்த மேம்பட்ட கையினையும் ; எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து - பகையரச ரெழுவர் முடிப் பொன்னாற் செய்த ஆரமணிந்த திருமகள் விரும்பியுறையும் மார்பினையும் ; பொன்னங்கண்ணி - பொன்னாற் செய்த கண்ணியும் ; பொலந் தேர் நன்னன் - பொன்னாற் செய்த தேருமுடைய நன்னன் என்பானது ; சுடர்வீ வாகைக் கடி முதல் தடிந்த - ஒளிபொருந்திய பூவையுடைய வாகையாகிய காவல்மரத்தை அடியோடு வெட்டி வீழ்த்தற்கேதுவாகிய ; தார் மிகு மைந்தின் - தூசிப்படையோடே மிக்குச் செல்லும் - வலியினையும் ; நார்முடிச் சேரல் - நாராற் செய்யப்பட்ட முடியினையுமுடைய சேரமான் எ - று. சேரர் குடிக் குரிய ரல்லாதார் உரிமை யுடைய ரெனச் சொல்லிப் பனந்தோட்டுக் கண்ணியும் முடியு முடையரா யிருந்தமையின், களங்காய்க் கண்ணியும் நார்முடியும் அணிந்தெழுந்த இச் சேரமான், அவர்பால் தும்பை மலைந்து போர் தொடுத்த வரலாற்றை, “பூமலைந் துரைஇ” என்று குறிக்கின்றார். உரிமையிலராகவும் உடையரெனத் தோற்றுவித்தற் பொருட்டுப் பனந்தோட்டுக் கண்ணியுந் தாரும் நிரை நிரையாக அணிந்திருக்குமாறு தோன்ற, “வெண் தோடு நிரைஇய வேந்து” என்றார். “வெண்தோடு நிரைத்த” என்ற பாடம் இதற்குக் கரியாத லறிக. பனந்தோடு வெள்ளிதாகலின் வெண்தோ டெனப்பட்டது. “கொம்மைப் போந்தைக் குடுமி வேண்டோ” (குறுந். 281) டென்றும், “வட்கர் போகிய வளரிளம் போந்தை, உச்சிக் கொண்ட வூசிவெண் டோடு” (புறம். 100) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. “போந்தை வெண்டோடு” (பதிற். 51) என்றாற் போலத் தெரித்து மொழியாராயினார், இருதிறத்தார்க்கும் ஒத்த உரிமையுடைத் தாதலால், இனிப் பழையவுரைகாரர், வெண்டோடு நிரைஇய பூ மலைந்து என மாறிக் கூட்டுக” வென்பர். “பூமலைந் துரைஇ” யென்றும், “வெண்டோடு நிரைஇய” வென்றும் பிரித் தோதினமையின், அஃது ஆசிரியர் கருத்தன்மையுணர்க. வேந்தர் தாமே தம் மைந்து பொருளாக வந்து போர் தொடுத்தலின், “வேந்துடை யருஞ்சமம் என்றார்; அவரை யெதிரேற்றுச் சென்று பொருதலின், பூ வென்றது தும்பை யாயிற்று; மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் றென்ப” (புறத் . 15) என ஆசிரியர் தொல்காப்பியனார் தும்பையி னிலக்கணங் கூறுமாற்றா னறிக. வேந்தாதற் குரிய ரல்லாதாரை வேந்தென்றார். அவ்வுரிமையினை நிலை நாட்டவே பொருகின்றா ரென்பதனை வற்புறுத்தற்கு பெரும் படையுடன் வந்து பொருதமை தோன்ற, “அருஞ்சமம்” என்றும், மீள ஒருகாலும் போர் தொடுக்காதவாறு அழித்தமை தோன்ற, “கொன்று” என்றும், வேந்தர் முடியும் கண்ணியு மிழந்து ஓடி யெரழிந்தன ரென்றற்குப் “புறம் பெற்று” என்றும் கூறினார். அவர் வேந்தராயிருந்த காலத்து இச் சேரமான்பால் உரிமையுண்மை தெரிந்திருந்த நன்மக்களை நாட்டினின்றும் போக்கினராதலின், அவரனைவரையும் மீளக் கொணர்ந்து நிறுத்தி வேண்டுவன நல்கிச் செம்மை செய்தன னென்பார், “மன்பதை நிரப்பி” யென்றார். இனிப் பழையவுரைகாரர், “மன்பதை நிரப்பி யென்றது, தன் படையை யவ் வேந்தர் நாட்டுத் தன்னாணையானே நிரப்பி யென்றவா” றென்பர். வென்றி யெய்திய வேந்தன் மகிழ்ச்சியால் தானைத் தலைவருடன் கூடித் தேர்த்தட்டிலே நின்று குரவைக் கூத்தயர்தல் மரபாதலால், “வென்றி யாடிய தொடித்தோள் மீகை” யென்றார் இதனை முன்தேர்க் குரவை யென்ப ; “தேரோர், வென்ற கோமான் முன்தேர்க் குரவை” (புறத். 21) என ஆசிரியர் தொல்காப்பியர் கூறுதல் காண்க.இவ்வாறு வெற்றிக்காலத்து வேந்தா குரவையாடுதல் மரபேயன்றி, ஏனை விழாக்காலங்களில் ஆடுதல் இல்லையென வறிக. மீ கை யென்பதற்குப் பழையவுரைகாரர், “மேலெடுத்தகை” யென்றும், “வென்றி யாடிய வென்னும் பெயரெச்சத்திற்கு மீ கை யென்னும் பெயரினை அவன் தான் வென்றியாடுதற்குக் கருவியாகிய கை யெனக் கருவிப் பெயராக்குக” என்றும் கூறுவர். விறலியை யாற்றுப்படுப்போன் கூற்றாதலின், அவனது கொடைச் சிறப்புந் தோன்ற, சேரலன் கையை, “மீ கை” யெனச் சிறந்தெடுத்துக் கூறினான். பொன் விளையும் கொண்கானநாட்டுக் குரிய னாதலின், நன்னனை, “பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன்” என்றார் ; பிறரும், “பொன்படு கொண்காள நன்னன்” (நற். 391) என்பது காண்க. நன்னனது காவல்மரம் வாகை யென்பதை இப்பத்தின் பதிகமும், “நன்னனை, நிலைச்செருவினாற்றலை யறுத்தவன், பொன்படு வாகை முழுமுத றடிந்து” என்று கூறுவதும் ஈண்டு நோக்கத்தக்கது. பொன்னிறங் கொண்டு விளங்குதலின், வாகைப்பூவைச் “சுடர் வீ வாகை” யென்றார். இவ்வாறே விளங்கும் வேங்கைப் பூவையும், “சுடர் வீ வேங்கை” (பதிற். 41) எனப் பிறரும் கூறுப. கடி, காவல், தார்,“தார் தாங்கிச் செல்வது தானை” (குறள். 767) என்றாற் போலத் தூசிப் படைமேற்று. முந்துற்றுச் செல்லும் தூசிப்படையொடு போகாது அகப் படையின் நடுவே சேறல் வேந்தர்க் கியல்பாயினும், இந் நார்முடிச் சேரல் தூசிப்படைக்கு முன்னே சென்று செரு மேம்படும் செய்கை யுடையனென்றதற்கு, “தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்” என்றார். தார்க்கு முந்துறச் சென்று மிகுதற்கு ஏது அவனது மிக்குற்ற வலியேயா மென்பார், “தார்மிகு மைந்” தென்றா ரென வறிக. “பொன்னங் கண்ணியும் பொலந்தேரும் நன்னற் கடையாக்குக” வென்பர் பழையவுரைகாரர். தடிந்த வென்னும் பெயரெச்சம் அதற் கேதுப் பெயராகிய மைந் தென்பதனோடு முடிந்தது ; சேரல் என்பதனோடு முடித்துத் தடிந்த சேரல், நார்முடிச் சேரல் என இயைப்பினுமாம். இது, பூமலைந்துரைஇ, அருஞ்சமம் கொன்று, புறம் பெற்று, மன்பதை நிரப்பி, வென்றி யாடிய மீ கையையும், திருஞெம ரகலத்தையும், நன்னன் வாகைக் கடிமுதல் தடிந்த மைந்தினையும் நார்முடியினையுமுடைய சேரல் என இயையும். 17 - 20. புன்கா லுன்னம் ......... நேரியோனே. உரை : தெண் கள் வறிது கூட்டு அரியல் - தெளிந்த கள்ளிலே களிப்பு இறப்ப மிகாவாறு கலத்தற்குரிய பொருள்களைச் சிறிதே கலந்து வடிக்கப்பட்ட கள் ; இரவலர்த் தடுப்ப - தன்னையுண்டு மகிழும் இரவலர்களை வேறிடம் செல்லவிடாது தடுத்து நிறுத்த ; தான் தர வுண்டநனை நறவு மகிழ்ந்து - அவருடனிருந்து தான் உண்டல் வேண்டித் தனக்கெனக் கொணரப்பட்ட பூவரும்புகளாற் சமைக்கப்பட்ட நறவினையுண்பதனால் களிப்புற்று; புன் கால் உன்னம் சாய - புல்லிய காலையுடைய உன்னமரம் வாடிய வழியு மஞ்சாது ; நீர் இமிழ் சிலம்பின் நேரியோன் - அருவி நீர் வீழ்தலால் ஒலிக்கின்ற மலையாகிய நேரிமலை யிடத்தேயுள்ளான் எ - று. வறிது, சிறிது. களிப்பு மிகுவிக்கும் பொருள்களைப் பெரிது கூட்டியவழி உண்டார்க்கு மிக்க மயக்கத்தைச் செய்யுமென்பது கருதி, “வறிதுகூட் டரியல்” என்றார். அரியல், வடித்த கள். தெண் கள் என்றதனால், அரியல் பெறுவது கருதுவார் தெளிந்த கள்ளோடே களிதரும் பொருள்களைக் கூட்டுவ ரென்பது பெறப்படும். உண்டு களிக்குந் தோறும் மேன்மேலும் அதனை யுண்டற்கே கள்ளுண்பார் விரும்புவராதலின், இரவலர் கள்ளுணவால் எழுந்த வேட்கையால் பிரியா துறைவாராயின ரென்றற்கு, “இரவலர்த் தடுப்ப” என்றார். எனவே, அவன் தரும் பெருவளத்தி்னும் கள்வளம் இரவலர்க்கு மிக்க விருப்பத்தை யுண்டுபண்ணு மென்பதாம். “களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றால்” (குறள். 1145) என்பதனால் கள்ளுண்பார் மேலு மேலு மதனையே விரும்புமாறு துணியப்படும். இரவலரைக் கள்ளுண்பிப்பவன் மிக்க களிப்புள்ளதனை நல்கின் அவர் அறிவு மயங்கிச் செம்மை நிலை திரிவராதலாலும், அவருடனே வேந்தனு மிருந்துண்ணுதல் மரபாதலாலும் தெண்கள் வறிது கூட் டரியலே தரப்படுவதாயிற்றென வறிக. இரவலர்க்கு அரியலும். தனக்கு நனைநறவும் தரப்படுதலின், “தான் தரவுண்ட நனை நறவு மகிழ்ந்து” என்றார். நறவாவது, பழச்சாறுகளாலாக்கப்பட்டு நறிய பூக்களால் மணமூட்டப் பெற்றுக் களிப்பு மிக மிகக் குறைவாக உள்ளது. உன்னம், ஒருவகை மரம். இது வேந்தர்க்கு ஆக்க முண்டாயின், முன்பே நற்குறியாகக் குழைந்து காட்டுமென்றும், கேடு விளைவதாயின் தீக்குறியாகக் கரிந்து காட்டுமென்றும் கூறுப. இந் நார்முடிச் சேரல், உன்னம் கரிந்து காட்டியவழியும் அஞ்சாது இருக்குமாறு தோன்ற, “புன்கா லுன்னஞ் சாய” என்றார். சிறப்பும்மையும் அஞ்சாதெனவொரு சொல்லும் வருவிக்கப்பட்டன. கரிந்து காட்டியவழியும் பகைவர்மேற் சென்று வென்றி யெய்தியுள்ளா னாதலின், உன்னஞ் சாயவும் அஞ்சாது நேரியிலேயிருப்பானாயின னென்க. இதனால் இம்மேற்கோளுடைய வேந்தரை, உன்னத்துப் பகைவ ரென்றலும் வழக்கு. செல்வக் கடுங்கோ வாழியாதனை ஆசிரியர், கபிலர், “புன்கா லுன்னத்துப் பகைவன் எங்கோ” (பதிற். 61) என்பது காண்க. இனிப் பழையவுரைகாரர், “உன்னம் சாய வென்றது, தன்னொடு பொரக் கருதுவார் நிமித்தம் பார்த்தவழி அவர்க்கு வென்றியின்மையிற் கரிந்து காட்ட வென்றவா” றென்பர். எனவே, பகைவர் காணுந்தோறும் கரிந்து காட்ட வேண்டி வேந்தர் உன்னத்தை யோம்பாது பகைப்ப ரென்பது பட்டுப் பொருள் சிறவாமையறிக. “வறிது கூட்டரியலென்றது, களிப்பு விறக்க விடும் பண்டங்கள் பெருகக் கூட்டின் களிப்பு மிகுமென்று அவையளவே கூட்டின அரிய லென்றவா” றென்றும், “கானென்பதனைச் சேரல்தான் எனக் கூட்டித் தர வுண்ட வென்பதனை வரையாது கொடுத்தற்பொருட்டு உண்ட வென வுரைக்க” வென்றும், “இனியிதற்குப் பிறவாது உரைப்பாரு முள” ரென்றும் பழையவுரைகாரர் கூறுவர். நார்முடிச் சேரல், அரியல் இரவலர்த் தடுப்ப, தான் நனைநறவு மகிழ்ந்து, உன்னம் சாயவும், அஞ்சாது நேரிமலையில் உள்ளான் என முடித்துக் கொள்க. 21 - 31. செல்லாயோதில் ................... பலவே. உரை : சில் வளை விறலி - சிலவாகிய வளைகளையணிந்துள்ள விறலியே; மலர்ந்த வேங்கையின் - பூக்கள் மலர்ந்துள்ள வேங்கை மரத்தைப் போல; மெல்லியல் மகளிர் - மென்மையான இயல்பினையுடைய ஏனைய விறலியர்; வயங்கு இழையணிந்து எழில் நலம் சிறப்ப - விளங்குகின்ற இழைகளையணிந்து உயர்ந்த அழகு சிறந்து விளங்கவும்; பாணர் பைம்பூ மலைய - பாணர்கள் பொன்னாற் செய்த பசிய பூக்களை யணிந்து கொள்ளவும்; இளையர் இன்களி வழா மென்சொல் அமர்ந்து - ஏவல் இளையர் இனிய களிப்பாற் குன்றாத மெல்லிய சொற்களை விரும்பிச் சொல்லி; நெஞ்சுமலி யுவகையர் - நெஞ்சு நிறைந்த உவகையினை யுடையராய்; வியன் களம் வாழ்த்த - நார்முடிச் சேரலின் பெரிய போர்க்களத்தின் சிறப்பை யெடுத்தோதி வாழ்த்தவும்; தோட்டி நீவாது - பாகர் தோட்டியாற் குறிக்கும் குறிப்புத் தவறாமல்; தொடி சேர்பு நின்று - தொடியாகிய பூண்செறிந்து நின்றே; ஒண்பொறி சிதற - தம்மால் எழுப்பப்படும் ஒள்ளிய புழுதித் துகள் தீப்பொறி போலச் சிதறுதலால்; காடுதலைக் கொண்ட காட்டிடத்தே யெழுந்த; நாடுகாண் அவிர் சுடர் அழல் விடுபு நாட்டவரால் இனிது காணப்பட விளங்கும் காட்டுத் தீப் போலும் சினமாகிய தீயைக் கைவிட்டு; பாகர் ஏவலின் மரீஇய மைந்தின் அப் பாகரது ஏவலைப் பொருந்தியமைந்த வலியினையும்; தொழில் புகல் யானை - வேண்டுந் தொழில்களைச் செய்தற்கு விரும்பும் விருப்பத் தினையுமுடைய யானைகள்; பல நல்குவன் - பலவற்றை வழங்குவனாதலால்; செல்லாய் - செல்வாயாக எ - று. மெல்லியல் மகளிர் இழை யணிந்து நலஞ்சிறப்ப, பாணர் பூ மலைய ஏவலிளையர் வியன் களம் வாழ்த்த, மைந்தினையும் புகற்சியினையடைய யானை பல நல்குவன்; செல்லாய் என இயைக்க. மலரணிந்த வேங்கை மரத்தின் எம்மருங்கும் பைந்தழையும் பூவும் பொலிந்து தோன்றும் தோற்றம், தலை, காது, மூக்கு, கழுத்து, மார்பு, தோள், கை. இடை, கால் ஆகிய எம்மருங்கும் இழை யணிந்து விளங்கும் மகளிர் போல விருத்தலின், “மலர்ந்த வேங்கையின் வயங்கிழை யணிந்து மெல்லியல் மகளிர் எழினலஞ் சிறப்ப” வென்றார். மலர்ந்த வேங்கைக் கண்ணிருந்த தோகையைக் கண்ட சான்றோர், “எரிமருள் வேங்கை யிருந்த தோகை, இழையணி மடந்தையிற் றோன்றும்” (ஐங். 294) என்பது காண்க. அரசன் புகழ் பாடிய விறலி இழை பெறுதலும், பாணன் பொற்பூப் பெறுதலும் மரபு; இதனை, “வயவேந்தன் மறம் பாடிய பாடினியும்மே, ஏருடைவிழுக் கழஞ்சிற், சீருடைய விழைபெற்றிசினே......... பாண்மக னும்மே, ஒள்ளழல் புரிந்த, வெள்ளி நாராற் பூப் பெற்றிசினே” (புறம். 11) என்றும்,“வேந்துவிடு தொழிலொடு சென்றனன் வந்துநின், பாடினி மாலை யணிய, வாடாத் தாமரை சூட்டுவனினக்கே” (புறம். 319) என்றும் வருவனவற்றா லறிக. இளையராவார், பாண் தொழிற்குரிய கல்வி நிரம்பக் கல்லாது ஏவின செய்தொழுகும் இளைஞர். இவர் வேந்தனது களம் பாடுதலால் கள் பெற்றன ரென்பார், “இளையர் இன்களி வழாஅ மென்சொல் அமர்ந்து வியன்களம் வாழ்த்த” என்றார். இனிப்புண்ட கள்ளை யுண்டலால் எய்தும் களிப்பு மிகாமையின், பாடுவன பிழையுறாவாறு எளிய பாட்டுக்களைப் பாடுகின்றா ரென்றற்கு, “இன்களி வழாஅ மென்சொல்லமர்ந்து” என்றும், இளமையின் பயன் நகையு முவகையுமே யாதலின், “நெஞ்சுமலி யுவகைய” ரென்றும் கூறினார். இளமைக்கண் பயின்ற எளிய சொற்களாலாகிய பாட்டுக்களை, “மென் சொல்” என்றார். பெரும்படையுடையனாதலால், அது நின்று போரூடற்றும் களம், “வியன் களம்” எனப்பட்டது. தலைமை சான்ற பாணன் தாமரையும், விறலி இழைகளும் பெறுவ ரெனவே, இளையர் அவர்தம் தகுதிக்கேற்ப, உரியன பெற்றாரென வறிக. தலைவன் தாமரைபெறுதலை, “தலைவன் தாமரைமலைய விறலியர், சீர்கெழு சிறப்பின் விளங்கிழை யணிய” (மலைபடு. 569 - 70) என்பதனாலறிக. இது விறலியாற்றுப்படை யாதலின், விறலியரை முற்படக் கூறினார் ; அவர் பாடி யாடற் கேற்பக் குரலும் சீரும் புணர்த்தலின், பாணரை அவர் பின் கூறினார். “இழைபெற்ற பாடினிக்குக் குரல் புணர்சீர்க் கொளைவல் பாண்மகனும்மே, எனவாங்கு, ஒள்ளழல் புரிந்த தாமரை, வெள்ளி நாராற் பூப்பெற்றிசினே” (புற. 11) எனச் சான்றோர் கூறுதல் காண்க. காட்டிலே தோன்றிப் பரந்துயர்ந்து நின்று, நாட்டவர் இருந்து காண விளங்கும் தீயினை, “காடுதலைக் கொண்ட நாடுகாண் அவிர் சுடர்” என்றார்; சுடரென்றது ஈண்டு ஆகுபெயராய்த் தீக் காயிற்று. காடுதலைக் கொண்ட சுடர், நாடுகாண் அவிர்சுடர் என இயையும். காட்டிற் பிறந்து பரந்து உயர்ந்து நின்று விளங்குந் தீ, நாட்டவர் தம்மிடத்தேயிருந்து காணுமாறு தன் விளங்குகின்ற சுடரால் காட்டி நிற்கும் சிறப்பினை “நாடுகாணவிர் சுடர்” எனச் சுருங்க வோதி விளக்கிய நலத்தினால், இப்பாட்டும் இத் தொடராற் பெயர்பெறுவ தாயிற்று. இனிப் பழையவுரைகாரர், “நாடுகாணவிர்சுடரென்றது, நாடெல்லாம் நின்று காணும்படி நின் றெரிகின்ற விளங்கின சுடர் என்றவா” றென்றும், “இச் சிறப்பானே யிதற்கு நாடுகாணவிர்சுட ரெனப் பெயராயிற்” றென்றும் கூறுவர். நாடுகா ணவிர்சுடராகிய காட்டுத்தீப் போலும் சினம் என்றற்கு “அவிர் சுடர் அழல்” என்றார். அழல், இலக்கணையால் சினத்துக் காயிற்று. காட்டுத்தீ சுடர்விட் டவிர்வது போல, யானையின் சினத் தீ “ஒண்பொறி பிசிர” நிற்கு மெனக் கொள்க. ஈண்டுச் சினமின்றாக, பாகரது தோட்டி வழிநின்றியங்கும் யானை யெடுக்குந் துகள் ஒண்பொறியாய்ப் பிசிரநின்ற தென்பார், “தோட்டி நீவாது தொடி சேர்பு நின்று, ஒண்பொறி பிசிர” என்றார். தொடி, யானைக்கோட்டிற்கு வலிமிகுமாறு இடையே செறிக்கப்படும் பூண் ; நுனியிற் செருகப்படும் கிம்புரியன்று. தோட்டி நீவாதே தொடிசேர்பு நின்றதாயினும் ஒண்பொறி பிசிர இயங்குதலால் கடுங்சினமுடையது போலும் என அதனைப் பரிசிலாகப் பெறும் பாணர் அஞ்சாமைப் பொருட்டு, சினத்தின் இயல்பை, “நாடுகாணவிர்சுடர் அழல்” என விளக்கி, அச் சினமின்றிப் பாகர் ஏவல் வழியொழுகும் இயல்பிற் றென்றற்கு, “அழல் விடுபு,பாகர் ஏவலின் மரீஇய” தென்றும், சினமுற்றவழியும் பாகல் ஏவலின் மரீஇயதனால், சினத்தைச் செயற்படுத்தும் வலி குறைந்தது போலும் என அயிராமைப் பொருட்டு, “மரீஇய மைந்தின்” என்றும் கூறினார். பாகரேவலின், மரீஇய மைந்தின் யானை, தொழில்புகல் யானை யென இயையும். இனிப் பழையவுரைகாரர், “சுடரழ லென்றதனைச் சுடர்போலும் அழலென வுவமத் தொகையாக்கி அழலை அந்த யானையின் சீற்றத்தீ யாக்குக” வென்றும், “மரீஇயவென்றது, அவ்வாறழல் விட்டும் பாக ரேவலொடு மரீஇயவென்றவா” றென்றும் கூறுவர். தோட்டி நீவுதற்கேற்றசின முண்டாகிய வழியும் அச்சினத்துவழியோடாது அடக்குவதும், மரீஇய நெறிவழிப் பிறழா தொழுகுதலும் வன்மையின் நற்பயனாதலின், “மரீஇய மைந்” தென்றார். மருவுதற்கேதுவாகிய மைந்து ஏதுப்பெயராய் மரீஇய வென்னும் பெயரெச்சத்தை முடித்து நின்றது. பாணர் பெறும் பரிசிலாகிய யானை மறம் புகல் யானையாயின் பயனின் றாதலால், பல தொழிலும் பயின்ற யானையென்றும், மறத் தொழிலினும் பிற தொழில்களை விரும்புவதென்றும் தோன்ற, “தொழில் புகல் யானை” யென்றார். புகல், ஈண்டு முதனிலைத் தொழிற்பெயராய், மைந்தினையும், புகலினையுமுடைய யானை யென இயைய நின்றது. இனிப் புகல் யானையைப் புகலும் யானையாகக் கொண்டு வினைத்தொகை யாக்கலுமொன்று; அல்ல தூஉம், பல தொழிலும் பயின்ற தென் எல்லாரானும் விரும்பிப் பாராட்டப்படும் யானை யென்றுமாம் ; பிறரும் “தொழில் நவில் யானை” (பதிற். 84) என்ப ; அதற்குப் பழையவுரைகாரர், “போர்க்குரிய யானை யென்று எல்லாராலும் சொல்லப்படுகின்ற யானை” யெனப் பொருள் கூறுவர். செல்லாய், செய்யயென்னும் முன்னிலை வினைமுற்று, (தொல். சொல். எச்ச. 54) ; எதிர்மறைப் பொருளாகாது செல்லென்னும் பொருள்பட வந்தது - ஓ ; அசைநிலை. தோட்டி நீவாது தொடி சேர்பு நின்றே தம்மால் எழுப்பப்படும் துகள் ஒண்பொறி பிசிர, அது கண்டு, அவிர் சுடர் அழல் விடுபு, பாகர் ஏவலின் மரீஇய மைந்தினையும் தொழில் புகற்சியினையுமுடைய யானை பல நல்குவன் என இயையும். இதுகாறுங் கூறியது, நார்முடிச் சேரல், நீரிமிழ் சிலம்பின் நேரியோன் ; சில்வளை விறலி, நீ செல்லின், அவன் வயங்கிழை யணிந்து மகளிர் நலஞ் சிறப்ப, பாணர் பைம்பூ மலைய, இளையர் உவகையராய், வியன் களம் வாழ்த்த, மைந்தினையும் தொழில் புகற்சியினையுமுடைய யானை பல நல்குவன் ; ஆதலால், செல்லாய் என்பதாம். பழையவுரைகாரர், “சேரல் தான், நேரியோன், இளையர் களம் வாழ்த்த. மகளிர் மலர்ந்த வேங்கையின் இழை யணிந்து நலஞ் சிறப்ப, பாணர் பூமலைய யானையைப் பல நல்குவன் ; ஆனபின்பு, விறலி நீ, செல்லாயோ எனக் கூட்டிவினை முடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது, அவன் கொடைச் சிறப்புக் கூறியவாறாயிற்று”.
1. ‘நிரைத்த’ என்றும் பாடம். 2. ‘தெண்கண்’ என்றும் பாடம். |