துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணமும் தூக்கும் அது. பெயர் : தசும்பு துளங்கிருக்கை. 1 - 8. இரும்பனம் புடையல் .......... குட்டுவ. உரை : இரும்பனம் புடையல் - கரிய பனந்தோட்டாலாகிய மாலையும்; ஈகை வான்கழல் - பொன்னாற் செய்த பெரிய வீரக் கழலுமுடையராய் ; மீன்தேர் கொட்பின் - மீனைப் பிடிக்கும் சூழ்ச்சியால்; சிரல் பனிக்கயம் மூழ்கிப் பெயர்ந்தன்ன - சிரற்பறவை குளிர்ந்த குளத்துட் பாய்ந்து மூழ்கி மேலே யெழுகின்ற காலத்து அதன் வாயலகை யொப்ப; நெடுவள்ளூசி - மார்பிற் புண்களைத் தைக்குங் காலத்து அப்புண்ணின் குருதியிலே மூழ்கி மறைந்தெழுகின்ற நெடிய வெண்மையான வூசியினாலாகிய ; நெடுவசி - நீண்ட தழும்பும்; பரந்த வடுவாழ் மார்பின் - பரந்த வடுவும் பொருந்திய மார்பினையும்; அம்பு சேர் உடம்பினர் நேர்ந்தோர் அல்லது - அம்புகளால் புண்பட்டவுடம்பினையுமுடையராய்ப் பொர வந்தாரோடு தும்பை சூடிப் பொருவதல்லது அன்னரல்லாத பிறருடன் ; தும்பை சூடாது மலைந்த மாட்சி - தும்பை சூடாமல் புறக்கணித்துப் போய்ப் போருடற்றும் போர்மாட்சியு முடையராகிய; அன்னோர் பெரும- அத்தகைய தூய சான்றோர்க்குத் தலைவனே; நன்னுதல் கணவ - நல்ல நெற்றியையுடைய இளங்கோ வேண்மாட்குக் கணவனே; அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ - பெரிய யானைகளையும் வெல்லுகின்ற போரையு முடைய செங்குட்டுவனே எ - று. புடையலும் கழலும் மாட்சியு முடைய அன்னோர் என இயைக்க. வசியும் வடுவும் வாழ்கின்ற மார்பினையும் உடம்பினையு முடையராய் நேர்ந்தோர் என இயையும். புடையல், மாலை. ஈகை, பொன். “ஈகை வான் கழல்” (பதிற். 38) என்று பிறரும் கூறுதல் காண்க. “ஈகையங் கழற்கால் இரும்பனம் புடையல்” (புறம். 99) என ஒளவையார் கூறுவர். மீன் பிடிக்கும் சிச்சிலிப் பறவை தன் அலகைக் கீழ் நாட்டிக்கொண்டு நீர்க்குட் பாய்ந்து மூழ்கி மறைந்து அலகை மேனோக்கி நிறுத்தி வெளியேறுவது, வீரர் மார்பிற் கிழிந்த புண்ணைத் தைக்கும் ஊசிக்கு உவமம். இது வடிவும் தொழில் விரைவும் பற்றியதென்க. வசி, தழும்பு ; வடு, புண் ஆறியதனால் உண்டாயது. உடம்பினர் ; முற்றெச்சம். நேர்ந்தோரல்லது எதிர்மறை வாய்பாட்டாற் கூறியது. விழுப்புண் பட்டாரோடன்றிப் பிறரொடு பொரற்கு விரும்பாத மறமிகுதியை யாப்புறுத்தற்கு. தும்பை சூடாத மாட்சி யென்னாது, தும்பை சூடாது மலைந்த மாட்சி யென்றதனால், விழுப்புண் பட்டாரோடு பொருவதன்றிப் பிறர் எதிர்ந்த வழி வீறின்றெனத் தும்பை சூடாது, அவரைப் புறக்கணித் தொதுக்கி, ஒத்தாரொடு பொருத சிறப்புத் தோன்ற, “மலைந்த மாட்சி அன்னோர்” என்றார். அம்பு : ஆகுபெயர். இனிப் பழைய வுரைகாரர், “கயம் மூழ்கிச் சிரல் பெயர்ந்தன்ன நெடு வெள்ளூசி யென்றது, கயத்திலே மூழ்கிச் சிரல் எழுகின்ற காலத்து அதன் வாயலகை யொக்கப் புண்களை இழை கொள்கின்ற காலத்து அப்புண்ணின் உதிரத்திலே மறைந்தெழுகின்ற வூசியென்றவாறு” என்றும், “இனி நெடுவெள்ளூசியை நெட்டை யென்பதோர் கருவி யென்பாருமுள” ரென்றும், “அம்புசேர் உடம்பினர்ச் சேர்ந்தோரல்லது தும்பை சூடாது மலைந்த மாட்சியென்றது, அரசன் வீரரில் அம்புசேர் உடம்பினாராய்த் தம்மோடு வீரமொத்தாரோ டல்லாது போர் குறித்தார் தம்மோடு தும்பை சூடாமல் மாறுபட்ட மாட்சியை யுடையவ ரென்றவா” றென்றும் கூறுவர். இவ்வாறு கூறற்குக் காரணம், “அம்புசே ருடம்பினர்ச் சேர்ந்தோ” ரென்று பாடங் கொண்டதென அறிக. செங்குட்டுவன் மனைவியை இளங்கோவடிகள் இளங்கோ வேண்மாளென் றாராகலின், நன்னுத லென்றதற்கு இவ்வாறு கூறப்பட்டது; “இளங்கோ வேண்மா ளுடனிருந் தருளி” (சிலப். 25:5) என வருதல் காண்க. அன்னோரென்றது அவ்வியல்பினை யுடைய வீரச் சான்றோர் என்னும் சுட்டு மாத்திரையாய் நின்றது. 9 - 15 மைந்துடை...........எண்ணின் உரை : மைந்துடை நல்லமர் கடந்து - பகைவரது வலியுடைந்து கெடுதற் கேதுவாகிய நல்ல போரை வஞ்சியாது எதிர்நின்று செய்து; வலம் தரீஇ - வெற்றியைத் தந்து ; இஞ்சி வீ விராய பைந்தார் பூட்டி - இஞ்சியும் நறிய பூவும் விரவத் தொடுத்த பசிய மாலை யணிந்து; புறத்து சாந்து எறிந்த தசும்பு - புறத்தே சந்தனம் பூசப்பெற்ற கட்குடங்கள் ; துளங்கு இருக்கை அசைகின்ற இருக்கைகளில் வைத்து ; தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்டம் அவற்றில் நிறைத்த தீவிய சுவை நிறைந்த நீலமணி போலும் கள்ளினை ; ஓம்பா ஈகையின் - தனக்கெனச் சிறிதும் கருதாது ஈயும் இயல்பினால் ; வண்மகிழ் சுரந்து - மிக்க மகிழ்ச்சியினை வீரர்க்கும் போர்க்களம் பாடும் பொருநர் பாணர் முதலியோர்க்கும் அளித்து; கொடியர் பெருங்கிளை வாழ - கூத்தரது பெரிய சுற்றம் உவக்கும் படியாக; பொழிந்தவை - வழங்கப்பட்டனவாகிய, ஆடு இயல் உளையவிர் கலிமா - அசையும் இயல்பினையுடைய தலையாட்டமணிந்து விளங்கும் குதிரைகளை; எண்ணின் எண்ணலுற்றால் எ - று. வலம் தரீஇ, மகிழ் சுரந்து, பொழிந்தவையாகிய கலிமா எண்ணின் என இயைக்க. மைந்து, வன்மை. தம்மோ டொத்த வன்மையும் படையும் ஆற்றலும் உடையாரொடு செய்யும் போரே அவரவரும் தம் புகழை நிறுத்தற்குரிய நலமுடைமையின் “நல்லமர்” என்றார். மைந்து, ஈண்டு பகைவர்மேல் நின்றது. மைந்துடை அமர் என்றது, “மதனுடை நோன்றா” (முருகு. 4) ளென்புழிப்போல நின்றது. போருடற்றும் சான்றோர்க்கு மெய்ம்மறையாய் நின்று பொருது வெற்றி பெற்றானாகலின், “வலம்தரீ இ” என்றார். பகைவரொடு பொருமிடத்து நடு நிற்கும் வெற்றியினைப் பகைவர்க்கன்றித் தமக்கேயுரித்தாமாறு பொருது கோடலின் “தரீஇ” யென்றாரென்றுமாம். சேறு, சுவை ; “தகைசெய் தீஞ்சேற் றின்னீர்ப் பசுங்காய்” (மதுரை. 400) என்று பிறரும் கூறுதல் காண்க. கட்குடத்தின் கழுத்தில் இஞ்சியும் நறிய பூவும் கலந்து தொடுத்த மாலையைக் கட்டி, புறத்தே சந்தனத்தைப் பூசி, குடம் அசையுமிடத்து அதற்கேற்ப இடந் தந்து நிற்கும் இருக்கையில் வைத்து, கள்ளை நிரப்பி, உண்பாரை நிரையாக அமர்வித்து வழங்குப. கள்ளுண்பார் களிப்பினை மாற்ற இஞ்சியைத் தின்று பூவின் மணம் தேர்வராதலால், “இஞ்சி வீ விராய பைந்தார் பூட்டி” யென்றார். புறத்தே சாந்தெறிதலும் நறுமணங் குறித்தேயாகும். பழையவுரைகாரரும், “மது நுகர்வுழி இடையிடைக் கறித்து இன்புறுதற் பொருட்டு இஞ்சியும், மோந்து இன்புறுதற் பொருட்டுப் பூவுமாக விரவித் தொடுத்த மாலையினைப்பூட்டி, அவ்வாறு பயன்கோடற்குச் சாந்தும் புறத்தெறிந்த என்றவாறு, “என்பர். “தசும்பு துளங்கிருக்கை யென்றது தன் களிப்பு மிகுதியால் தன்னை யுண்டாருடல் போல அத்தசும்பிருந்து ஆடும்படியான இருப்பென்றவாறு” என்றும், “இச் சிறப்பான் இதற்குத் தசும்பு துளங்கிருக்கை யென்று பெயராயிற்று” என்றும் பழையவுரை கூறும். கள் நிரம்பிய குடங்கள் களிப்பேறிய வழி அசைவதும் சீறுவதும் உண்டென்றும், அசையுங்கால் இருக்கையி னின்று உருண்டொழியாமைப் பொருட்டு இருக்கைகளும் அதற்கேற்ப அமைந்திருக்குமென்றும், கள் விற்போரும் உண்போரும் கூறுவர். மட்டு, கள்; அது மட்டமென வந்தது. கள்ளின் தெளிவு நீலமணியின் நிறம் பெறுதலால், “மணி நிற மட்டம்” எனப்பட்டது. பெரி துண்டு மகிழ் சிறக்குமளவு கள்ளினை வழங்கியது தோன்ற, “வண்மகிழ் சுரந்து” என்றும், ஈத்துவக்கும் பேரின்பத்தால் தனக்கென வோம்பாமை கண்டு, “ஓம்பா வீகையின்” என்றும் கூறினார். இவ்வாறே அதியமான் ஓம்பாவீகையின் வண்மகிழ் சுரந்த செய்தியை, ஒளவையார், “சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே, பெரியகட் பெறினே, யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே” (புறம். 235) என்று கூறுதல் காண்க. இனி, மணிநிற மட்டத்தை நல்குவதோ டமையாது வளவிய செல்வம் தந்து மகிழ் சுரந்து, கோடியர் கிளை வாழக் கலிமாப் பொழிந் தானென் றுரைத்தலு மொன்று. இது பழைய வுரைகாரர்க்கும் கருத்தாதலை, “மட்டத்தினையும் வளவிய மகிழ்ச்சியினையும் சுரந்து என இரண்டாக வுரைத்தலுமாம்” என்பதனா லறிக. இனி, செங்குட்வன் தன் வீரர்க்கு வலமும், பொருநர் பாணர் முதலாயினார்க்கு மணிநிற மட்டமும், கோடியர்க்குக் கலிமாவும் வழங்கினானென்று உரைப்பினு மமையும். 16 - 23. மன்பதை மருள..............................பலவே. உரை : மன்பதை மருள அரசு படக் கடந்து - காணும் மக்கள் வியப்பெய்தும் வண்ணம் பகையரசரை வென்றமையின் ; முந்துவினை எதிர்வரப் பெறுதல் காணியர் - முன்னேறிச் செய்யும் போர்வினை இல்லாமையால் அஃது எதிர்வரப் பெறுவதை விழைந்தவராய் ; நின் தேரொடு சுற்றம் - நின் தேர் வீரரும் ஏனை வீரரும் ; உலகுடன் மூய - நிலமெல்லாம் பரந்து நெருங்கி நிற்ப ; ஒளிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களி றூர்ந்து - விளங்குகின்ற நிலையினையுடைய உயர்ந்த மருப்புக்களையேந்திய யானை மேல் இவர்ந்து செல்லும் ; மான மைந்தரொடு மன்னர் ஏத்த மானமுடைய வீரரும் வேந்தரும் அஞ்சி ஏத்திப் பாராட்ட ; மாயிருந்தெண் கடல் - பெரிய கரிய தெளிந்த கடலினது ; மலி திரைப் பௌவத்து மிக்க திரைகளையுடைய நீர்ப்பரப்பிலே ; வெண்தலைக் குரூஉப்பிசிர் உடைய - வெள்ளிய நுரையாகிய தலை நிறம் பொருந்திய சிறு சிறு திவலைகளாக வுடைந்து கெட ; தண் பல வரூஉம் - தண்ணிய பலவாய் மேன்மேல்வரும் ; புணரியிற் பல அலைகளினும் பலவாகும் எ - று. முந்து வினை யெதிர் வரப் பெறுதல் காணியர் தேரொடு சுற்றம் உலகுடன் மூய, அதுகண்டு, களிறூர்ந்து செல்லும் மைந்தரொடு மன்னர் அஞ்சி ஏத்த, நீ பிறக்கோட்டிய தெண்கடல் பௌவத்து, பிசிருடைய, வரூஉம் புணரியினும் பலவாம் என இயைத்து முடிக்க. இதனாற் சொல்லியது, மன்பதை மருளப் பகையரசுகளை வஞ்சியாது பொருது வெல்லும் மாண்பினால், போர் பெறுவது இல்லாமையால், அது பெறுதற்கு நின் படைவீரர் நாடெங்கும் பரந்து நெருங்க, அவர் கருத்தறிந் தஞ்சும் வேந்தரும் பிறரும் நின் அருள் நாடி யேத்த, நீ வேற்படை கொண்டு கடல்பிறக் கோட்டினை யென்றும், நீ வழங்கிய மாக்களை யெண்ணின் அவை அக் கடலிடத் தலையினும் பலவாம் என்றும் கூறியவாறாம். தன்னொடு பொர வந்த வேந்தர் செய்யும் சூழ்ச்சி யனைத்தும் நுனித்தறிந்து அற நெறியே நின்று போருடற்றி வென்றி யெய்துவது காணின் மக்கட்கு வியப்புண்டாதல் இயல்பாதலால், “மன்பதை மருள அரசுபடக் கடந்து” என்றார். கடந்து என்னும் வினையெச்சம் காரணப் பொருட்டு. வேந்தன் கடலிற் போர் செய்வான் சென்றானாக நிலத்தே நின்ற வீரர், அற்றமறிந்து பகையரசர் தாக்காமைக் காப்பார் நாடு முற்றும் நெருங்கிப் பரந்தவர், போர் பெறாமையால் வெறிகொண்டு அதனை நாடுவாராய்க் காணப்பட்டமையின், முந்துவினை யெதிர்வரப் பெறுதல் காணியர் தேரொடு சுற்றம் உலகுடன் மூய” என்றார். மூய, நெருங்க. உயர்ந்த களிறூர்ந்து செல்லும் செல்வமும் பெருமையுமுடைய வீரமைந்தரும் சிற்றரசரும் குட்டுவனது ஆண்மையும் வெற்றியும் வியந்து பாராட்டுவது தோன்ற, “மான மைந்தரொடு மன்ன ரேத்த” என்றார். பிறர்பால் காணப்படும் ஆண்மை முதலிய நலங்கண்டவழிப் பாராட்டுவது மானமுடைய மக்கட்கு மாண்பாதல்பற்றி, “மான மைந்தரொடு மன்னர்” எனச் சிறப்பித்துரைத்தார் என அறிக. வில்லும் வாளும் வேலும் கொண்டு பொரும் காலாட்களில் பலர் வேந்தனுடன் கடலிற் சேறலால், ஏனைத் தேர், யானை, குதிரை முதலிய படை செலுத்தும் வீரர், நாடுகாத்தலில் ஈடுபட்டமை தோன்ற, “தேரொடு சுற்றம் உலகுடன் மூய” என்றார். ஏத்த, மூய என நின்ற வினையெச்சங்களை நீ பிறக்கோட்டிய என ஒருசொல் வருவித்து முடிக்க. இனி, அரசுபடக் கடந்து என்புழி, அரசு, கடலகத்தே யிருந்து கொண்டு குறும்பு செய்த பகையரச ரென்றும், அவரை வென்று மீளும் செய்தியை, “முந்து வினை” யென்றும், அக்காலை அவனை யெதிர்கொள்ளும் பொருட்டுக் கடற்கரைக்கண் வந்திருந்த வேந்தரும் மைந்தரும் ஏத்த, அவனோடு ஒப்பத் தேரேறி யுடன்வரும் அரசியற் சுற்றத்தாரும் ஏனைச் சான்றோரும் மொய்த்து நின்றதை “மூய” என்றும் கூறுலுமாம். இவ்வாறு கூறுமிடத்து மூய வென்பது பெயரெச்சம். உலகு, சான்றோர் மேற்று. பௌவம், ஈண்டு நீர்ப்பரப்பின்மேற்று, பலவாய் நெருங்கித் திரைத்து வருதலின், நுரை பிசிராக வுடைவது தோன்ற, “வெண்டலைக் குரூஉப்பிசிருடைய” என்றார். புணரி, அலைகள். கடற்போர் செய்து பெற்ற வென்றியைப் பாராட்டிப் பாடி யாடி மகிழ்வது குறித்து, கோடியர்க்கு அக்கடலிற் போந்த குதிரைகளையே வழங்கினா னென்றற்கு, கடலிற் புணரியொடு, உறழ்ந்து கூறினார் போலும். “நீரி்ன் வந்து நிமிர்பரிப் புரவியும்” (பட்டினப். 185) என்று சான்றோர் கூறுதலால், கடற்கப்பாலுள்ள நாடுகளிலிருந்து கலங்களிற் குதிரைகள் கொணரப்பட்டமை யறியலாம். இனி, பழையவுரைகாரர், “மன்னர் ஏத்தக் களிறூர்ந்து என முடித்து அதனைக் களிறூர வெனத் திரித்து மூய வென்னும் வினையொடு முடிக்க” என்பர். எனவே, “முந்துவினை எதிர்வரப் பெறுதல் காணியர்” என்பதைப் பெயராக்கி, காண்பவர் களிற்றினை யூர, தேரொடு சுற்றம் உலகுடன் மூய என்றுரைக்குமாறு பெறுதும். இதுகாறும் கூறியது. பெரும, கணவ, குட்டுவ, வலம் தரீஇ, மகிழ்சுரந்து பொழிந்தவையாகிய கலிமா எண்ணின், முந்துவினையெதிர்வரப் பெறுதல் காணியர், நின் தேரொடு சுற்றம் உலகுடன் மூய, களிறூர்ந்து செல்லும் மைந்தரொடு மன்ன ரேத்த, நீ பிறக்கோட்டிய தெண்கடற் பௌவத்து வரூஉம் புணரியிற் பலவாம் என்பதாம். “இதனாற் சொல்லியது ; அவன் கொடைச் சிறப்பும் வென்றிச்சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று.”/font>
1. சேர்ந்தோ ரல்லதென்றும் பாடம். |