முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
43. கவரி முச்சிக் கார்விரி கூந்தல்
ஊசன் மேவற் சேயிழை மகளிர்
உரல்போற் பெருங்கா லிலங்குவாண் மருப்பிற்
பெருங்கை மதமாப் புகுதரி னவற்றுள்
 5 விருந்தின் வீழ்பிடி யெண்ணுமுறை பெறாஅக்
கடவு ணிலைய கல்லோங்கு நெடுவரை
வடதிசை யெல்லை யிமய மாகத்
தென்னங் குமரியொ டாயிடை யரசர்
முரசுடைப் பெருஞ்சமந் ததைய வார்ப்பெழச்
 10 சொல்பல நாட்டைத் தொல்கவி னழித்த
போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ
இரும்பணை திரங்கப் பெரும்பெய லொளிப்பக்
குன்றுவறங் கூரச் சுடர்சினந் திகழ
அருவி யற்ற பெருவறற் காலையும்
 15 அருஞ்செலற் பேராற் றிருங்கரை யுடைத்துக்
கடியேர் பூட்டுநர் கடுக்கை மலைய
வரைவி லதிர்சிலை முழங்கிப் பெயல்சிறந்
தார்கலி வானந் தளிசொரிந் தாஅங்
குறுவ ரார வோம்பா துண்டு
 20 கைவ ரார நன்கலஞ் சிதறி
ஆடுசிறை யறுத்த நரம்புசே ரின்குரற்
பாடு விறலியர் பல்பிடி பெறுக
துய்வீ வாகை நுண்கொடி யுழிஞை
வென்றி மேவ லுருகெழு சிறப்பிற்
 25 கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக
மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக்
கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும்
அகவலன் பெறுக மாவே யென்றும்
இகல்வினை மேவலை யாகலிற் பகைவரும்
 30 தாங்காது புகழ்ந்த தூங்குகொளை முழவில்
தொலையாக் கற்பநின் நிலைகண் டிகுமே
நிணஞ்சுடு புகையொடு கனல்சினந் தவிராது
நிரம்பகல் பறியா வேறா வேணி
நிறைந்து நெடிதிராத் தசும்பின் வயிரியர்
 35 உண்டெனத் தவாஅக் கள்ளின்
வண்கை வேந்தேநின் கலிமகி ழானே.

     துறை - இயன்மொழி வாழ்த்து. வண்ணமுந் தூக்கும்
அது. பெயர் - ஏறா வேணி (33)

     (ப - ரை) 1. முச்சி - கொண்டைமுடி கவரிபோலும்
கூந்தலெனக் கூட்டுக.

     5. விருந்தின் வீழ்பிடியென்றது எண்ணுகின்ற மகளிர்க்கு
விருந்தாகி அம்மகளிர் விரும்பிய பிடியென்றவாறு.

     இனிக்காட்டியானைக்கு விருந்தாகிய அவ்வியானைகள்
விரும்பும் 1பார்வைப்பிடியென்பாருமுளர். பிடியினையே எண்ணியது,
தங்கள் நடையொப்புமைபற்றியென்க.

     மகளிர் (2) என்னும் எழுவாய் பெறா (5) என்னும்
பயனிலைகொண்டது.

     5. பிடியது எண்ணென்க. எண்ணுமுறையாவது 2சங்கு 3பற்ப
முள்ளிட்ட தொகை.

     கல்லோங்குநெடுவரையாகிய (6) இமயம் (7)
தென்னங்குமரியொடு (8) வடதிசையெல்லையாக (7) வென மாறிக்
கூட்டுக.

     எல்லையாகவென்னும் வினையெச்சத்திற்கு இவ்வாறு
எல்லையானவென ஒரு பெயரெச்சச்சொல் வருவித்து
அப்பெயரெச்சத்திற்கு 4ஆயிடை (8) என்புழி அவ்வென்னும்
வகரவீற்றுப் பன்மைச் சுட்டுப் பெயரை முடிபாக்குக.

     10. சொல்பல நாடென்றது ஆயிடை அரசர்
நாடெல்லாவற்றையும்.

     12-4. பணை திரங்கும்வண்ணம் பெயல் ஒளித்தலானும் குன்று
வறங்கூரும்வண்ணம் சுடர் சினம் திகழ்கையானும் அருவியற்றவெனக்
கூட்டியுரைக்க.

     15. அருஞ்செலற் பேராறு - புனல் நிறைந்த ஆறு; யாறென்பது
ஆறென மருவிற்று.

     15-8. கரையையுடைத்துத் தளி சொரிந்தாங்கென
உடைத்தற்றொழிலை வானத்தின் தொழிலாக்குக; இந்நீரென ஒரு
பெயர்வருவித்து உடைக்கவெனத் திரிக்கவுமாம்.

     17. சிலைமுழங்கியென்றது சிலைத்தலொடு முழங்கியென்றவாறு.

     21. ஆடு சிறையறுத்த நரம்பென்றது கின்னரமென்னும் புள்ளின்
இசையெழுகின்ற சிறகினைத் தோற்பித்த யாழ்நரம்பென்றவாறு.

     இனிச் சிறையென்றதை அந்நரம்பின் ஒலியெழாமற்
சிறைப்படுத்தி நிற்கும் அதன் குற்றமென்பாரும் உளர்.

     23. வாகையுழிஞையென்றது வாகையை முடிவிலேயுடைய
உழிஞை யென்றவாறு.

     இனி வாகையும் உழிஞையுமென இரண்டாக்கலுமாம். 25.
கொண்டி - கொள்ளை.

     27. 5நுண்கோல் - பிறப்புணர்த்துங்கோல்; நரம்பென்பது
மொன்று.

     28. அகவலன் - பாடும் பாணன்.

     என்றுமென்புழி உம்மையை இசைநிறையும்மையாக்கி,
அவ்வென்றென்பதனை முன் எண்ணிநின்ற வியங்கோட்களுடன்
கூட்டிப்பின் அதனை இகல்வினை மேவலை (29) என்னும்
வினையொடு முடிக்க.

     இனி, என்றுமென்பதனை முன்னின்ற வியங்கோட்களுடன்
கூட்டலும் ஒன்று.

     முன்னின்ற உண்டு (19) சிதறி (20) என்னும் எச்சங்களையும்
மேவலை (29) என்பதனோடு முடிக்க.

     30. தூங்குகொளை முழவென்றது மந்தகதியையுடைய
ஆடற்கேற்ற முழவு.

     31. கற்பவென்றது கல்வியுடையாயென்றவாறு; பிறிதும் உரைப்ப.
நின்னிலை கண்டிகுமென்றது நின்செல்வத்தின் பெருமை
நிலையெல்லாம் கண்டேமென்றவாறு.

     32. தவிராதென்றது குறைதலறியாதென்றவாறு.

     33. 6ஏறா ஏணியென்றது கோக்காலி.

     அதனை ஏறவேணியென்று வெளிப்படுத்த சிறப்பான் இதற்கு,
'ஏறாவேணி'
என்று பெயராயிற்று.

     34, நிறைந்து நெடிதிராவென்றது உண்பார்க்கு வார்த்தலால்
நிறைந்து நெடும்பொழுதிராதவென்றவாறு.

     நிரம்பகல்பறியாத (33) நிறைந்து நெடிதிராத தசும்பு (34) எனப்
பெயரெச்சமறையடுக்காக்குக.

     35. உண்டெனத் தவாவென்றது உண்ணவுண்ண அக்குடங்களை
மேன்மேலும் நிறைத்தலிற் 7குறையாதவென்றவாறு.

     குட்டுவ (11), தொலையாக் கற்ப (31), வேந்தே, நின் கலிமகிழின்
கண்ணே (36) நின்னிலை கண்டேம் (31) என மாறிக் கூட்டியுரைக்க.

     வேந்தேயென்னும் விளி முன்னின்ற விளிகளோடு கூடுதலின்
மாறாயிற்று.

     இதனாற் சொல்லியது அவன் செல்வமகிழ்ச்சி கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1. கவரியை அணிந்த உச்சிக்கொண்டையையும்
மேகத்தைப் போன்ற விரிந்த கூந்தலையும்.

     2. ஊசலை விரும்புதலையும் செவ்விய ஆபரணங்களையும்
உடைய மகளிர்; இவர் இமயமலைச் சார்பிலுள்ளார்.

     3. உரல்போன்ற பெரிய காலையும் விளங்குகின்ற
ஒளியையுடைய கொம்பையும்; "உரற்கால் யானை" (குறுந். 232 : 4)

     4-5. பெரிய துதிக்கையையும் மதத்தையும் உடைய யானைகள்
புகுந்தால் அவற்றினிடையே, தமக்கு விருந்தாக விரும்பப்பெறும்
பிடிகளை எண்ணுதற்குரிய முறையின்கண் அடக்கப்பெறாத. மகளிர்
(2) பெறா (5) என்க.

     1-5. இமயமலைச் சார்பிலுள்ள மகளிர் அங்கே உலவும்
யானைக் கூட்டத்தைக் கண்டு அக்கூட்டத்தே பெண்யானை
எத்துணையுளவென எண்ணப்புகுங்கால் அவை மிகுதியால் எண்ணில்
அடங்காது நின்றன.

     மகளிர் பிடியின்மீதே ஊருதல் வழக்கமாதலின் அவற்றை,
'விருந்தின் வீழ்பிடி' என்றார். மகளிர் விலங்கு முதலியவற்றை
எண்ணிப் பார்த்தல் இயல்பு; "கோடுதுணர்ந் தன்ன குருகொழுக்
கெண்ணி" (நற். 159 : 4)

     6. தெய்வங்களின் நிலையையுடைய கற்கள் ஓங்கிய உயர்ந்த
பக்க மலைகளையுடைய. 'கடவு ணிலைஇய' என்று பாடம் இருப்பின்
சிறக்கும். கடவுள் - முனிவரெனினுமாம்.

     6-7. நெடுவரையையுடைய இமயம் வடதிசை எல்லையாக.

     7-8. இமயம் குமரியென்னும் அவற்றின் இடையிலே உள்ள
அரசர். இமயமும் குமரியும்; பதிற். 11 : 23 - 4, உரை.

     9. முரசையுடைய பெரிய போர் கெடும்படி ஆரவாரம் எழ.
மு. பதிற்
.
34 : 10.

     12-5. பேராற்றின் சிறப்பு. 12. பெரிய மூங்கில் வாடவும் மிக்க
மழை பெய்யாமல் மறையவும் (பதிற். 41 : 14)

     13. குன்று வறுமை மிகவும் சூரியன் வெம்மை மிக்கு
விளங்கவும்

     14. அருவி நீரின்றி அற்றுப் போன பெரிய வறட்சிக்காலத்தும்.
வறன் - வளப்பமில்லாத வறுமை.

     12-4. 'கன்மிசை வேய்வாடக் கணைகதிர் தெறுதலால்' (கலித்.
11 : 14)

     15-8. மேகத்தின் இயல்பு.

     15. அரிய செலவையுடைய பேராற்றின் பெரிய கரையை
உடைத்து. மழையில்லாமல் வறட்சி மிக்க காலத்தும் பேராறு நீரறாது
பாயுமென்றபடி. இவ்வியல்பு பிற நதிகள் பலவற்றிற்கு இன்மையின்,
'அருஞ் செலற் பேராறு' என்றார்.

     16. புதிய ஏரைப் பூட்டி உழும் உழவர் கார்காலத்தில் பூத்த
கொன்றைப்பூவைச் சூட. ஆடவர் கொன்றையை அணிதல்: பதிற்.
67 : 13 - 14.

     17. கணக்கில்லாத அதிர்கின்ற முழக்கங்களைச் செய்து
பெய்தல் மிக்கு.

     18. நிறைந்த முழக்கத்தையுடைய மேகம் துளியைச் செரிந்தாற்
போல.

     19. தன்னை உற்றவர் நிரம்ப உண்ணும்படி தனக்கென்று
ஒன்றும் பாதுகாவாமல் அவரோடு சேர்ந்து உண்டு.

     20. இன்பத்திற்குக் காரணமான பாணர் முதலியோர் நிறையப்
பெறும்படி நல்ல அணிகலங்களைக் கொடுத்து. மு. பதிற். 37 : 4.

     18-20. கொடைக்கு வானம் : மலைபடு. 75 - 6. குறிப்புரை.

     21. அசைகின்ற சிறையையுடைய கின்னரத்தை வென்ற யாழ்
நரம்பின் இசையொடு ஒன்றுபட்டுச் சேர்ந்த இனிய குரலையுடைய.
ஆடுசிறை - வெற்றி பெற்ற சிறை எனலுமாம். சிறை : ஆகுபெயர்;
இங்கே பறவைக்காயிற்று. யாழ் நரம்பின் இசையும் குரலும் ஒத்தல் :
"விரல்கவர்ந் தெடுத்த கீத மிடறெனத் தெரித றோற்றார்" (சீவக. 723)

     22. 'பாடுவல் விறலியர்' என்ற பாடம் இருப்பின் ஓசை
சிறக்கும் (புறநா. 172 : 3) மகளிர் பிடியை .ஊர்தலே மரபாதலின்
விறலியாருக்குப் பிடி அளிக்கப் பெற்றது.

     23. உளையையுடைய பூக்களையுடைய வாகையை முடிவிலே
பெற்ற நுண்ணிய கொடியாகிய உழிஞையின் பூவையும்; என்றது
மதில்வளைத்தலைச் செய்தற்கு அடையாளமாகிய
பூவையணிந்தாரென்றபடி. அவர் முயற்சி வெற்றியாக முடியுமாதலின்
வெற்றிப்பூவை முடிவிலே உடையதாயிற்று.

     24. எப்பொழுதும் வெற்றியை விரும்பும் விருப்பத்தையும்,
பகைவர்க்கு அச்சம் பொருந்திய சிறப்பினையும்.

     25. கொண்ட மள்ளர் - பகைப்புலத்தே கொள்ளும்
கொள்ளையை யுமுடைய படைவீரர்; கொண்டி - கொள்ளை;
"கொண்டி யுண்டித் தொண்டை யோர்" (பெரும்பாண். 454)

     26. ஊரிலுள்ள பொதுவிடத்தே சென்று மறுகுசிறையென்னும்
இசைத்துறையிலே தொடங்கி; பதிற். 23 : 5 - 6, உரை.

     27-8. துணிக்கப்பட்ட [?] நுண்ணிய கோலைக் கைக்கொண்டு
போர்க்களத்தை வாழ்த்தும் பாணன் குதிரைகளைப் பெறுக. களம்
வாழ்த்தல்:
பதிற். 40 : 26. அகவலன்: குலத்தோரெல்லோரையும்
அழைத்துப் புகழ்தல் பற்றிப் பாணர்க்கு இப்பெயராயிற்று (மதுரைக்
.223, ந.)   
        
     நுண்கோல் அகவலன்: அகநா. 152 : 4. 208 : 3. அகவலர்க்கு
மா அளித்தல்: "நாளீண்டிய நல்லகவர்க்குத் தேரோடு மாசிதறி"
(மதுரைக். 223 - 4). என்று - என்று கூறி; உம்மை இசைநிறை பற்றி
வந்தது.

     29. இகல்வினை மேவலை ஆகலின் - போராகிய வினையை
விரும்புதலையுடைய ஆதலால்.

     29-31. பகைவர்களும் மனம் அடங்காமற் புகழ்ந்த, மந்த
ஓசையையுடைய முழவினையுடைய அழியாத கல்வியை உடையோய்,
நின் நிலைமையைக் கண்டோம். கற்பு - கல்வி (பதிற். 80 : 17)

     32. நிணத்தைச் சுடுதலால் உண்டான புகையொடு நெருப்பு
வெம்மையை நீங்காமல்.

     33. நிரம்புதலையும் அகலுதலையும் அறியாத
கோக்காலியினிடத்தே.

     34. நிறைந்து நெடுநேரம் இராத பானைகளில் உள்ள.

     34-6. கூத்தர் உண்டனராகக் குறையாத கள்ளை
அளித்தலையுடைய வளவிய கையையுடைய அரசே, நின் ஆரவாரம்
மிக்க மகிழ்ச்சிக் காலத்தே கண்டிகுமெனக் கூட்டி முடிக்க.

     
(பி - ம்.) 5. எண்ணுமெய். 10. சொல்புனனாட்டை. 12.
பனைதிரங்க. 18. தளிபொழிந்தாஅங்கு. (3)


     1பார்வைப்பிடி - காட்டுயானைகளைப் பிடிக்கும்பொருட்டு
வேட்டுவர்களால் வைக்கப்பெறும் பெண்யானை; இத்தகைய
விலங்குகளைப் பார்வை மிருகமென்பர்; "பார்வை யாத்த பறைதாள்
விளவின்" (
பெரும்பாண். 95)

     2சங்கு - ஒரு பேரெண்; 'சங்கு முதலாகிய பேரெண்ணினை
உடைத்தாக நினது வாழ்நாள்' (
புறநா. 18 : 5-6. உரை)

     3பற்பம் - பத்மம்; தாமரையென்னும் பேரெண் (தொல். புள்ளி
மயங்கு. 98)

     4பதிற். 11:24. உரை.

     5'நமது பிறப்புணர்த்தும் கரியகோலைக் கையின் கண்ணே
தாருங்கோள் (
புறநா. 152 : 18, உரை)

     6இங்ஙனம் கூறியது வெளிப்படையென்னும்
இலக்கணத்தின்பாற்படும்.

     7"அறாஅ நிலைச்சாடி யாடுறு தேறல்" (பு. வெ. 2)





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

3. ஏறா வேணி
 
43.கவரி முச்சிக் கார்விரி கூந்தல்
ஊசன் மேவற் சேயிழை மகளிர்
உரல்போற் பெருங்கா லிலங்குவாண் மருப்பிற்
பெருங்கை மதமாப் புகுதரி னவற்றுள்
 
5விருந்தின் வீழ்பிடி யெண்ணுமுறை பெறாஅக்  
கடவு ணிலைஇய கல்லோங்கு நெடுவரை
வடதிசை யெல்லை யிமய மாகத்
தென்னங் குமரியொ டாயிடை யரசர்
முரசுடைப் பெருஞ்சமம் ததைய வார்ப்பெழச்
 
10சொல்பல நாட்டைத் தொல்கவி னழித்த
போரடு தானைப் பொலவந்தார்க் குட்டுவ
இரும்பணை திரங்கப் பெரும்பெய லொளிப்பக்
குன்றுவறங் கூரச் சுடர்சினந் திகழ
அருவி யற்ற பெருவறற் காலையும்
 
15அருஞ்செலற் பேராற் றிருங்கரை யுடைத்துக்
கடியேர் பூட்டுநற் கடுக்கை மலைய
வரைவி லதிர்சிலை முழங்கிப் பெயல்சிறந்
தார்கலி வானந் தளிசொரிந் தாஅங்
குறுவ ரார வோம்பா துண்டு
 
20நகைவ ரார நன்கலஞ் சிதறி
ஆடுசிதை யறுத்த நரம்புசே ரின்குரற்
பாடு விறலியர் பல்பிடி பெறுக
துய்வீ வாகை நுண்கொடி யுழிஞை
வென்றி மேவ லுருகெழு சிறப்பிற்
 
25கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக
மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக்
கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும்
அகலவன் பெறுக மாவே யென்றும்
இகல்வினை மேவலை யாகலிற் பகைவரும்
 
30தாங்காது புகழ்ந்த தூங்குகொளை முழவின்
தொலையாக் கற்பநின் னிலைகண் டிகுமே
நிணஞ்சுடு புகையொடு கனல்சினந் தவிராது
நிரம்பகல் பறிய வேறா வேணி
நிறைந்து நெடி திராத் தசும்பின் வயிரியர்
 
35உண்டெனத் தவாஅக் கள்ளின்
வண்கை வேந்தேநின் கலிமகி ழானே.
 

துறை  : இயன்மொழிவாழ்த்து.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்  : ஏறா வேணி.

1 - 11. கவரிமுச்சி ____ குட்டுவ.

உரை :   கவரி   முச்சி  -  கவரிமான்  மயிர்  கலந்து  முடித்த
கொண்டையினையும்  ;  கார் விரி  கூந்தல்  -  கரிய மேகம்போன்ற
கூந்தலையும்  ;  ஊசல்  மேவல்  -  ஊசலாட்டு  விருப்பத்தையும்  ;
சேயிழை  மகளிர்  -  செவ்விய இழைகளையுமுடைய மகளிர் ; உரல்
போல்  பெருங்கால்  -  உரல்போன்ற  பெரிய காலும் ; இலங்குவாள்
மருப்பின்  - விளங்குகின்ற ஒளி பொருந்திய கொம்பும் ; பெருங் கை
-  பெரிய கையும்; மத மா - மதமு முடைய யானைகள் ; புகுதரின் -
தாம்   இருக்கும்  காட்டகத்தே  புகுமாயின்  ;  அவற்றுள்  -  அவ்
யானைகளிடையே   ;  விருந்தின்  வீழ்  பிடி  -  புதியவாய்   வந்து
களிறுகளால்  விரும்பப்பட்டுவரும்  பிடியானைகளையே  வரைந்து   ;
எண்ணுமுறை பெறா - எண்ணலுற்று   அப்   பிடிகளின்    தொகை
எண்ணிக்கைக்  கடங்காமையால் எண்ணும் முறைமையைக் கைவிடும் ;
கடவுள்  நிலைய  - கடவுளர் தங்கும் நிலைகளையுடைய ; கல் ஓங்கு
நெடு வரை - கற்களாலுயர்ந்த நெடிய மலையாகிய ; இமயம் வடதிசை
யெல்லையாக  -  இமயமலை  வடக்கெல்லையாக  ; தென்னம் குமரி
யொடு   -   தெற்கெல்லை   குமரியாக  ;  ஆயிடை  - அவற்றின்
இடையேயுள்ள  நிலத்தின்கண்  ;  அரசர்  முரசுடைப் பெருஞ் சமம்
ததைய  -  பகை  அரசர்  செய்யும்  முரசு  முழங்கும் பெரிய போர்
கெடுதலால் ; ஆர்ப்பு  எழ - வெற்றி யாரவார முண்டாக; சொல் பல
நாட்டை - அவ்வரசரது புகழமைந்த நாட்டை யடைந்து ; தொல்கவின்
அழித்த - அதன் புகழ்க்கேதுவாகிய பழைய நலத்தைக் கெடுத்தழித்த;
போர்    அடுதானை    -    போரில்    நேர்வாரை அடுதலையே
தொழிலாகவுடைய தானையினையும் ; பொலம் தார்க் குட்டுவ -பொன்
மாலையினையுமுடைய குட்டுவனே எ - று.

மகளிர்   தம்  கூந்தலிடையே  கவரிமானின்  மயிரையும் வைத்து
முடியிட்டுக்  கொள்பவாதலின்,  “கவரி  முச்சி”  யென்றார். கார் விரி
கூந்தல்  என்றதற்குக்  கரிதாய்  விரிந்த  கூந்தல்  என்றுமாம். முச்சி,
கொண்டை முடி. “துவர முடித்த துகளறு முச்சி” (முருகு. 1 - 26) என
வருதல்  காண்க. இம் மகளிர் தம் கரிய கூந்தலைச் சீவிக் கவரி மயிர்
கலந்து  கொண்டையிட்டுக்கொண்டு,  செவ்விய  அணிகளைப் பூண்டு,
காட்டிடத்தே  ஊசலாடி  மகிழ்வ  ரென்பது  கருத்தாயிற்று.  மேவல்,
விருப்பம்.   இனிப்   பழையவுரைகாரர்,  “முச்சி,  கொண்டை  முடி”
யென்றும்,  கவரி  முச்சியென்றதற்குக்  “கவரிபோலும்  கூந்த லெனக்
கூட்டுக” என்றும் கூறுவர்.

யானையின்   கால்  உரல்  போறலின், “உரல்போற்  பெருங்கா”
லெனப்பட்டது. “உரற்கால் யானை” (குறுந். 232) என்று பிறரும் கூறுப.
வெண்ணிறமும் மழமழப்பால் ஒளியுமுடைமையின், அவ்  யானைகளின்
மருப்பு,  “இலங்குவாண்  மருப்பு”  எனச்  சிறப்பிக்கப்பட்டது.  வேறு
காடுகளிலிருந்து    புதியவாய்    வந்து    ஈண்டுள்ள   களிறுகளால்
விருந்தோம்பப்படுவது   கண்டும்,  “விருந்தின்  வீழ்பிடி”   யென்றும்,
களிறுகளால்   காதலிக்கப்படுவது   தோன்ற   “வீழ்பிடி”   யென்றும்
கூறினார்.  இவ்  யானைக்  கூட்டத்தைக்  கண்ட  மகளிர், நடையால்
தம்மை  யொத்திருக்கும்  இயைபுபற்றி,  அப்  பிடிகளையே வரைந்து
எண்ணலுற்று,  அவற்றின்  தொகை  எண்ணுக் கடங்கப் பெறாராயினர்
என்பார்,  “அவற்றுள்  விருந்தினன்  வீழ்பிடியெண்ணு  முறைபெறா”
என்றார்.   புகுதரின்  என்பது  நாம்  வாழும்  காட்டகத்தே  குறவர்
கூட்டத்துக்  கஞ்சிப்  புகுதாமை பெற்றாம். குறிஞ்சி மகளிர்  பிடிகளை
யெண்ணலும்,  முல்லை  மகளிர்  மான்பிணை யெண்ணலும்,  பரதவர்
மகளிர் கலமும் குருகு முதலாயின எண்ணலும் இயல்பு.

இனிப்     பழைய   வுரைகாரர்  “விருந்தின்  வீழ்பிடி யென்றது,
எண்ணுகின்ற   மகளிர்க்கு   விருந்தாகி   அம்   மகளிர்  விரும்பிய
பிடியென்றவாறு.    இனிக்   காட்டியானைக்கு   விருந்தாகிய   அவ்
யானைகள் விரும்பும்பார்வைப் பிடி யென்பாரு முளர்.  பிடியினையே
யெண்ணியது, தங்கள் நடையொப்புமை பற்றி யென்க.

மகளிரென்னும்   எழுவாய் பெறா என்னும் பயனிலை கொண்டது.
பிடியது  எண்ணென்க. எண்ணு  முறையாவது  சங்கு பற்பமுள்ளிட்ட
தொகை” என்பர்.

கடவுள்   நிலை, முனிவர்கள்  இருந்து  தவம் செய்யும் இடங்கள்.
கடவுள்,  தெய்வமுமாம்.  நிலைய  வென்னும்  குறிப்புப் பெயரெச்சம்
வரையென்னும்   பெயர்  கொண்டது.  கடவுள்  நிலைய  நெடுவரை,
கல்லோங்கு நெடுவரை  யென இயையும். குமரியொடு, ஒடு  எண்ணுப்
பொருட்டு.

இனிப்  பழையவுரைகாரர் “கல்லோங்கு நெடுவரை யாகிய இமயம்
தென்னங்  குமரியொடு  வடதிசை யெல்லையாக என மாறிக் கூட்டுக”,
என்றும்,   “எல்லையாக  வென்னும்  வினையெச்சத்திற்கு  இவ்வாறு
எல்லையான   என   ஒரு  பெயரெச்சச்  சொல்  வருவித்து,  அப்
பெயரெச்சத்திற்கு   ஆயிடை  என்புழி அவ்வென்னும்  வகரவீற்றுப்
பன்மைச் சுட்டுப் பெயராக முடிவாக்குக” என்றும் கூறுவர்.

பெருஞ்சமம்   ததைய   வென்றது, பகையரசர்   செய்த  பெரிய
போர்களைச் சிதைத்த  செயல்  குறித்து  நின்றது  ; “மாறா மைந்தர்
மாறுநிலை  தேய,  முரைசுடைப்  பெருஞ்சமம்  ததைய”  (பதிற். 34)
என்று  பிறரும்  கூறுதல் காண்க.  சொல், புகழ். இனி இமயத்துக்கும்
குமரிக்கு மிடையேயுள்ளனவென்று சொல்லப்பட்ட பல  நாடுகளையும்
“சொல் பல  நாடு” என்றாரெனினுமாம். பழைய வுரைகாரரும், “சொல்
பல  நாடென்றது  ஆயிடை  அரசர்  நாடெல்லாவற்றையும்” என்றே
கூறுதல் காண்க.

12 - 18. இரும்பணை.................சொரிந்தாஅங்.

உரை :  பெரும்  பெயல்  ஒளிப்ப  -  பெரிய மழை பெய்யாது
பொய்த்தலால்; இரும்பணை திரங்க - காட்டிடத்தே மிக்க மூங்கில்கள்
வாடியுலரவும் ; குன்று வறம் கூர - குன்றங்கள் பசும்புல்லும் இன்றிக்
கெடவும்; சுடர்சினம் திகழ - ஞாயிற்றினது வெயில் வெப்பம் மிக்குத்
தோன்றவும்   ;  அருவியற்ற  பெருவறற்  காலையும்  - அருவிகள்
நீரற்றொழிந்த  பெரிய வற்கட  காலத்தும்;  அருஞ்செலல்  பேராறு -
கடத்தற்கரிய செலவினையுடைய பெரிய யாற்றிலே நீர்ப்பெருக்கானது ;
இருங்கரை   உடைத்து   -  பெரிய  கரைகளையுடைத்துக்கொண்டு
செல்லுமாறும்; கடிஏர் பூட்டுநர் கடுக்கைமலைய -புதிய ஏரைப்பூட்டும்
உழவர் கொன்றைப் பூவைச் சூடிக்கொள்ளுமாறும் ; ஆர்கலி வானம்
நிறைந்த முழக்கத்தையுடைய  மழை மேகம் ; வரைவில் அதிர் சிலை
முழங்கி பன்முறையும் மின்னியதிர்கின்ற இடி முழக்கத்தைச் செய்து ;
பெயல் சிறந்து -பெய்தற்குமிக்கு ; தளி சொரிந்தாங்கு - மழை நீரைப்
பொழிந்தது போல எ - று.

பெரும்     பெயல்  பொய்த்தலால்  குன்றுகளில் செறிந்திருக்கும்
மூங்கில்கள்  வாட,  ஏனைப்  பசும்  புல்லும்  தலை  காண்பரிதாய்க்
கெடுதலால்“குன்று  வறம் கூர” என்றும், அக்காலத்தே நிலம் புலரக்
காற்றும் வெப்பமுற்று  வெயிலின் வெம்மையை நன்கு புலப்படுத்தலின்,
“சுடர்   சினம்   திகழ”   என்றும் கூறினார்.வெப்ப    மிகுதியைச்
சினமென்றது   இலக்கணை ; குன்று  வறம்  கூர்ந்த வழி, அருவிகள்
நீரற்றொழிதலால்,  “அருவியற்ற  பெருவறற் காலையும்” என்றார். இக்
காலத்தே   பெருஞ்  "செல்வமுடையாரும்    கொடை    புரிதற்குப்
பின்னிடுவரென்பது   படநிற்றலின்,   உம்மை  சிறப்பு.  இக்காலத்தும்
செங்குட்டுவன்  ஓம்பா  வீகையினை மேற்கொண்டிருந்ததனை    இது
வற்புறுத்தி நிற்றல் பின்வரும் கூற்றுக்களால் அறிக.

இனிப்     பழையவுரைகாரர்,   “பணை   திரங்கும்   வண்ணம்
பெயலொளித்தலானும்,   குன்று  வறங்கூரும்  வண்ணம்  சுடர்சினம்
திகழ்கையானும்   அருவியற்றவெனக்   கூட்டி  யுரைக்க”  வென்பர்.
“கன்மிசை  வேய்வாடக்  கனைகதிர்  தெறுதலால்”  (கலி.  11) எனச்
சான்றோர்  கூறுதலால்,  பெயலொளித்தலும்  சுடர் தினம் திகழ்தலும்
என்ற இரண்டும் ஒருங்கே  பெருவறற் காலைக்கு ஏதுவாய்க் கோடல்
அமையு மென்க. எனினும், பெயலொளித்த வறற்காலையே சுடர்தினம்
திகழ்தற்கும் இடமும் ஏதுவுமாதல் தெற்றென வறிக. “ஆர்கலி வானம்
தளிசொரிந்தாங்கு”    (18)   என்பதை   நோக்கின்,  பெயலொளித்த
காலத்துப்புன்மையும்,  அது  சிறந்து  சொரிந்த  காலத்து நன்மையும்
எடுத்தோதுதலே ஆசிரியர் கருத்தாதலை யறிக.

வானம்   பொய்யாது  மழை  பெய்தவழி யுண்டாகும் நலங்களைக்
கூறுவார்,  ஆறுகள்  நீர்  நிரம்பப்  பெருகிக்  கரைகளை  யுடைத்து
அலைத்துக்கொண்டோடுதலால்   கடத்தலரிதாம்  நிலைமையுண்டாதல்
குறித்து,  “அருஞ்  செலற்  பேராற்  றிருங்கரை  யுடைத்து” என்றார்.
பெரிய  கரையினை யுடைத்தாயினும் பயனின்றென்றற்கு,  “இருங்கரை”
யென்று  சிறப்பித்தார்.  அவ்யாண்டின்  விளைவு  குறித்து  முதற்கட்
பூட்டும்   ஏராதல்பற்றி,   “கடியேர்  பூட்டுநர்”  என்றார்.  இதனைப்
பொன்னேர்  பூட்டுதல் என்று இக்காலத்து வழங்குப. மழைக்காலத்தே
கொன்றை  மலருமாதலின்,  “கடுக்கை  மலைய”  என்றார். உடைத்து
என்புழிச் செல்ல என ஒரு சொல் வருவித்து முடிக்க.

இனிப்   பழையவுரைகாரர், “அருஞ்செலற்  பேர்   ஆறு,  புனல்
நிறைந்த  ஆறு  ;  யாறு  ஆறென  மருவிற்று”  என்றும், “கரையை
யுடைத்துத் தளிசொரிந்து தாங்கென உடைத்தற் றொழிலை வானத்தின்
றொழிலாக்குக”   என்றும்,   “இந்நீர்  என  ஒரு  பெயர் வருவித்து
உடைக்கவெனத்  திரிக்கவுமாம்”  என்றும்,  “சிலை முழங்கி யென்றது
சிலைத்தலொடு முழங்கி யென்றவா” றென்றும் கூறுவர்.

பெயலொளிப்பதால்,   குன்று  வறம்  கூர,  சுடர்  சினம்  திகழ,
அருவியற்ற  வறற்காலையிலும் வானம் பேராற் றிருங்கரை யுடைத்துச்
செல்லவும்,  ஏர்  பூட்டுநர்  கடுக்கை  மலையவும்  முழங்கிப் பெயல்
சிறந்து தளிசொரிந்தாங்கு என இயையும்.

இனி,   பேராறு  என்பதனை  மலையாள  நாட்டுப் பேராறெனக்
கொண்டு,  “அருஞ் செலற் பேராற் றிருங்கரை யுடைத்து” என்பதற்கு,
“அரிய  செலவையுடைய  பேராற்றின்  பெரிய  கரையை  யுடைத்து”
என்று  உரைத்து, “மழையில்லாமல்  வறட்சி மிக்க காலத்தும் பேராறு
நீரறாது  பாயும் என்றபடி  ;  இவ்வியல்பு பிற நதிகள் பலவற்றிற்கும்
இன்மையின்

அருஞ்   செலற்  பேராறு   என்றார்”   என்று  டாக்டர்  உ.  வே.
சாமிநாதையர் கூறுவர்.

பெருவறற்   காலத்தும்,   வானம்    மழை  சொரிவது  போலச்
செங்குட்டுவன் கொடை வழங்கும் திறம் இனிக் கூறப்படுகிறது.

19 - 20. உறுவர்..........சிதறி.

உரை : உறுவர் - தன்னை யடையும் புலவர்களை ; ஓம்பாது ஆர
உண்டு  -  உண்பனவற்றை  ஓம்பாது  நிரம்ப  வுண்பித்துத்  தானும்
அவருடனுண்டு ; நகைவர் ஆர இன்பச் சுவை நல்கும் பாணர் கூத்தர்
முதலாயினார்   நிரம்பப்  பெறுமாறு   ;  நன்கலம்  சிதறி  -  நல்ல
பொற்கலன்களை வரைவின்றி வழங்கி எ - று.

உறுவர்,    இன்மையால்  வாடி  வருபவர்.  பாடல் ஆடல்களால்
இன்புறுத்தும்  பாணர்  கூத்தர் முதலாயினார் நகைவராதலின், உறுவர்
புலவர்  மேற்றாதலை  யறிக.  அவரை யுண்பித்துத் தான் உண்டலின்,
“உறுவர்   ஓம்பாது  ஆர  வுண்டு”  என்றார்.  சிதறி  யென்றதனால்,
வரைவின்றி  நல்குதல்  பெற்றாம். பாணர் முதலாயினார்க்கு வழங்கும்
வழக்குப்  பிற்காலத்தும்  அரசர்பால் காணப்படுகிறது. பன்னிரண்டாம்
நூற்றாண்டிலிருந்த   மூன்றாங்   குலோத்துங்க   சோழன்,  “பெரும்
புலவரும் அருங் கவிஞரும் நாப்புறு நல்லிசைப் பாணரும் கோடியரும்
குயிலுவரும்   நாடு   நாடு  சென்று  இரவலராய்  இடும்பை  நீங்கிப்
புரவலராய்ப்  புகழ்  படைப்பக்”  (S.  I. I. Vol. V. No. 645) கொடை
வழங்கிய செய்தி கல்வெட்டுக்களால் தெரிகிறது.

21 - 22. ஆடு சிறை..........பெறுக.

உரை :  ஆடு சிறை யறுத்த நரம்பு சேர் இன்குரல் - ஆடுகின்ற
சிறையையுடைய   கின்னரப்  பறவையை  இசையால்  வென்ற  யாழ்
நரம்பின் இசையுடன் ஒன்றாய் இயைந்து செல்லும் இனிய மிடற்றால் ;
பாடு விறலியர்  - பாடுதலையுடைய விறலியர் ; பல்பிடி பெறுக - பல
பிடியானைகளைப் பெறுக என்றும்;

ஆடு   சிறை : ஆகுபெயர். பழையவுரைகாரர், “கின்னரமென்னும்
புள்ளின்    இசை    யெழுகின்ற   சிறகினைத்   தோற்பித்த  யாழ்
நரம்பென்றவாறு”  என்றும்,  “இனிச்  சிறை யென்றதை அந்நரம்பின்
ஒலி  யெழாமற் சிறைப்படுத்தி நிற்கும் அதன் குற்றமென்பாரு முளர்”
என்றும் கூறுவர். குரல், மிடற்றிசை. பாணனுக்குக் களிறும் விறலிக்குப்
பிடியும் கொடுத்தல்  மரபு.  “களிறு பெறுவல்சிப் பாணன்” (நற். 350)
என்றும் பிறாண்டும் இவ்வாசிரியர் கூறுதல் காண்க.

23 - 25. துய்வீ..........பெறுக.

உரை :  துய்வீவாகை - மேலே துய்யினையுடைய வாகைப் பூவும்;
நுண்கொடி  உழிஞை  -  நுண்ணிய  கொடியாகிய வுழிஞையும் சூடும்;
வென்றி  மேவல்  -  வென்றி  விருப்பும்  ;  உருகெழு  சிறப்பின் -
பகைவர்க்கு  உட்குதலைப்  பயக்கும்  சிறப்பும்;  கொண்டி மள்ளர் -
பகைப்புலத்தே கொள்ளையாடுதலுயுடைய  வீரர்   ;   கொல்  களிறு
பெறுக - கொல்கின்ற களிற்றியானைகளைப் பெறுக என்றும்;

வென்றியே   விரும்பும்    இயல்புபற்றி    “வென்றி    மேவல்”
என்றதற்கேற்ப  வாகை  மாலை  சூடுப  வென்பார்,  “துய்வீ வாகை”
யினையும்,   பகைவரது  முழுமுத  லரணத்தை  முற்றலும்  கோடலும்
செய்தல்பற்றி  உருகெழு  சிறப்பினை  யுடையராதலால்,   “நுண்கொடி
யுழிஞை”   யினையும்   எடுத்தோதினார்.   பிறாண்டும்  “நுண்கொடி
யுழிஞை”  யினையும்  (பதி்ற்.  44)  என்பர். “நெடுங்கொடி யுழிஞைப்
பவரொடு  மிலைந்து”  (புறம்.  77)  என்று  பிறரும்  கூறுதலால் இவ்
வுழிஞைக்கொடி    நுண்ணிதாயும்    நெடிது    படர்வதாயுமிருத்தல்
அறியப்படும்.  இதனுடைய இலை சிறியதாயிருக்குமென்பது, “சிறியிலை
யுழிஞைத் தெரியல் சூடி” (பதிற். 63) என்பதனால் விளங்கும்.  வீரருள்
உயர்ந்தோர்     பொன்னால்    உழிஞைப்பூச்    செய்து    மாலை
தொடுத்தணிதலுமுண்டு  ;  “பொலங் கொடி யுழிஞையன்” (பதிற் . 56)
என வருதல் காண்க.

இனிப்  பழையவுரைகாரர், “வாகை யுழிஞை  யென்றது,  வாகையும்
முடிவிலே  யுடைய  உழிஞை யென்றவாறு” என்றும், “இனி வாகையும்
உழிஞையுமென  இரண்டாக்கலுமாம்”  என்றும், “கொண்டி கொள்ளை”
யென்றும்   கூறுவர்.   கொண்டி   பெறுதலை   வீரர்  விரும்புவதை
“கொண்டியுண்டித்  தொண்டையோர்”  (பெரும்.  பாண.  445)  எனச்
சான்றோர் கூறுப.

26 - 29. மன்றம்..............யாகலின்.

உரை :  கண்டி  நுண்  கோல்  கொண்டு -  கணுக்களையுடைய
நுண்ணிய  கோலை  யேந்திக்கொண்டு  ;  மன்றம்  படர்ந்து - ஊர்
மன்றத்தேயிருந்து  பாடுதற்குரிய  தலைவன்  புகழ்களை  யெண்ணி ;
மறுகு  சிறை  புக்கு  - தெருக்களின்  இருமருங்கும் சென்று ;  களம்
வாழ்த்தும்    -   தலைவன்   பொருது   வென்ற  போர்க்களத்தை
வாழ்த்திப்பாடும்  ;  அகலவன்  மா பெறுக - பாணன் குதிரைகளைப்
பெறுக   ;   என்றும்  -  என்றும்  வழங்கும்  கொடைத் தொழிலை
விரும்பியிருப்பதே  யன்றி  ; இகல்வினை மேவலை யாகலின் - போர்
வினையையும் ஒப்ப விரும்பி யிருக்கின்றா யாதலால்.

உண்ணப்படுவது     உண்டி    யென்றும்,     கொள்ளப்படுவது
கொண்டியென்றும்  வருதல்போலக் கண்கண்ணாகத் துண்டிக்கப்படுவது
கண்டியென்று  வந்தது.  குலத்தோர்  புகழெல்லாம் தொகுத்தெடுத்துப்
பாடுவோர்   அகவலர்   என்ப.   அவர்   நுண்ணிய  கோலேந்திக்
கொண்டுவரும்   இயல்பினராதலைப்  பிறாண்டும்,  ஆசிரியர், “யாம
விரவின்  நெடுங்கடை  நின்று,  தேமுதிர்  சிமையக்  குன்றம் பாடும்
நுண்கோ  லகவுநர்”  (அகம்.  208) என்று கூறுதல் காண்க. இவர்கள்
முதற்கண்  ஊர்மன்றத்தை  யடைந்து தலைவன் புகழ்களை யெல்லாம்
தொகுத்துரைத்துப்  பின்னர்த் தெருக்களிலும் இருமருங்கிலும் சென்று
பாடுவரென்பது,  தோன்ற, “மன்றம் படர்ந்து மறுகுசிறை புக்குக் களம்
வாழ்த்தும் அகவலன்” என்றார். என்றும் என்பதுமேலே “பிடிபெறுக”
(வரி. 22) “கொல் களிறு பெறுக” (வரி. 25) என்புழியும் கூட்டப்பட்டது.
“என்றும்  எனவும் ஒடுவுந் தோன்றி, ஒன்று வழியுடைய வெண்ணினுட்
பிரிந்தே”  (தொல். சொல்.   இடை. 46)  என்பது   தொல்காப்பியம்.
“இகல்வினை  மேவலை”  யென்றதனால்,  “கொடைவினை  மேவல்”
வருவிக்கப்பட்டது.   எச்சவும்மை  தொக்கு  நின்றது.  அகவலர்க்குக்
குதிரை கொடுப்பதுவழக்காதலை,“நாளீண்டிய நல்லகவர்க்குத் தேரொடு
மா சிதறி” (மதுரை. 223) என்பதனா லறிக.

இனி,    பழையவுரைகாரர், “நுண்கோல் பிறப்புணர்த்துங் கோல் ;
நரம்பென்பது   மொன்று”  என்றும்,  “அகவலன்,  பாடும்  பாணன்”
என்றும்,  “என்றும்  என்புழி  உம்மையை இசைநிறை யும்மை யாக்கி,
அவ்வென்றென்பதனை   முன்னெண்ணி  நின்ற வியங்கோட்களுடன்
கூட்டிப் பின் அதனை இகல்வினை மேவலை யென்னும் வினையொடு
முடிக்க”  என்றும்  கூறுவர்.  என்றென்பதனை இகல்வினை மேவலை
யென்பதனோடு கூட்டியவழி,  என்று வழங்குதல் குறித்து இகல்வினை
மேவுவா யாயினை யென்றுரைத்துக்கொள்க. போரிற் பெற்ற களிறு பிடி,
மா  முதலியவற்றை  வீரர்  முதலாயினார்க்கு வழங்குதல் மரபு என்று
மென்றே கோடற்கும் இசைந்து, “இனி என்று மென்பதனை முன்னின்ற
வியங்கோட்களுடன்   கூட்டலுமொன்று”   என்று  பழையவுரைகாரர்
கூறுவர்.   “முன்னின்ற  உண்டு,  சிதறி  யென்னும்   எச்சங்களையும்
மேவலை யென்பதனோடு முடிக்க” என்பது பழையவுரை.

இனி,     “மறுகு சிறை” என்பதற்கு, திரு. உ. வே. சாமிநாதையர்
“மறுகுசிறை யென்றது ஆரோகண அவரோகணக் கிரமம் போன்ற ஓர்
இசை  முறை போலும்” என்பர். ஆரோகண அவரோகணக் கிரமத்தை
ஆளத்தியென்பவாகலின்,  இதற்கு  வேறு பொருள் கொள்ளப்பட்டது.
மறுகு   சிறை   இசைவகையாயின்,  மன்றத்தே  இருந்து  பாடுவதும்,
தெருவிலே   நடந்து   பாடுவதுமாகிய  பாடல்  வகையுள் ஒன்றாகக்
கருதுவது பொருத்தமாம்.

இவ்வகவலர்   முதலாயினாரைப் புரப்பதே தமக்குப் பேரிசையாகப்
பண்டைப்  பெருமக்கள்  கருதினமையின், இவர்களை விதந்தோதினர்,
“நுண்கோ  லகவுநர்ப் புரந்த பேரிசைச், சினங்கெழு தானைத் தித்தன்
வெளியன்” (அகம். 152) எனச் சான்றோர் கூறுதல் காண்க.

29 - 31. பகைவரும்............கற்ப.

உரை :  பகைவரும் தாங்காது புகழ்ந்த - பகைவராயினாரும் தம்
மனத்தெழுந்த   வியப்பினைத்   தாங்காது   புகழ்ந்து  பாராட்டும் ;
தொலையாக் கற்ப - கெடாத கல்வி யறிவு ஒழுக்கங்களை  யுடையாய் 
எ - று.

“தூங்கு    கொளை முழவின்” என்பதனைத் “தவாஅக் கள்ளின்”
(வரி.  35)  என்பதனோடு  கூட்டிக்  கலிமகிழ் என்றதனோ டியைக்க.
கேளாரும்  வேட்ப  மொழிவது  சொல்வன்மையின் சிறப்பாதல்போல,
பகைவராயினாரும்  வியந்த  பரவுவது கல்வி யறிவுக்கு மாண்பாதலின்,
“பகைவரும்  தாங்காது புகழ்ந்த கற்ப” என்றார். கேடில் விழுச்செல்வ
மென்பது பற்றி, ஈண்டுக் கல்வியறிவு,“தொலையாக்கற்” பெனப்பட்டது.
கற்றல்வினை   கல்வியாதலின்,  கற்பன  கற்றுங்  கற்றாங் கொழுகும்
ஒழுக்கம் கற்பென வறிக. “நிலவரைநிறீஇய  நல்லிசைத் தொலையாக்
கற்ப” (பதிற். 80)  என்று  பிறரும் கூறுதல்  காண்க. இனி, கற்பாவது,
கல்வி  கேள்விகளினால்  ஆய செயற்கை  யறிவால்  உண்மை யறிவு
தூய்மை   யெய்தப்   பிறக்கும்   மனத்திட்பம்  எனினுமாம்.  இனிப்
பழையவுரைகாரர், “கற்ப வென்றது கல்வியுடையாய் என்றவாறு;பிறிதும்
உரைப்ப” என்பர்.

31 - 36. நின்நிலை..........கலிமகிழானே.

உரை : வண்கை வேந்தே -வளவிய கொடையினையுடைய அரசே;
தூங்கு  கொள்ளை  முழவின் - தூங்கலோசைத்தாகிய பாட்டிற்கு ஏற்ப
முழங்கும்  முழவினையும்;  நிணம்  சுடு  புகையொடு  -  நிணத்தைச்
சுடுகின்ற  புகை  நாற்றத்துடன்;  கனல்  சினம்  தவிராது  நெருப்பின்
வெப்பம்   நீங்காமல்   ;  நிரம்பு  அகல்பு  அறியா  ஏறா    ஏணி-
நிரம்புதலும்     அகலுதலும்    இல்லாத    கோக்காலியின்    மேல்
வைக்கப்பட்டுள்ள  ;  நிறைந்து  நெடிது  இராத்  தசும்பின் - பெய்த
கள்ளால்  நிறைந்து  நெடிது  நேரம்  அந்நிறைவு குறையாதிருத்தலை
யறியாத  குடங்களிலிருக்கும்;  வயிரியர்  உண்டெனத் தவாஅ பாணர்
முதலாயினார்    உண்ட    வழியும்   குறையாத   ;   கள்ளின்  -
கள்ளினையுமுடைய  ;  நின் கலி மகிழான் - நின் திருவோலக்கத்தின்
கண்ணே ; நின் நிலை கண்டிகும் - நின் செல்வப் பெருமையெல்லாம்
கண்டேம் எ - று.

முழவினையும்     கள்ளினையுமுடைய கலிமகிழின்கண் நின் நிலை
கண்டிகும்   என   இயையும்   தூங்கலோசை,   மத்திம   சுருதியை
ஆதாரமாகவுடைய   இசை. “மந்த கதியையுடைய ஆடற்கேற்ற முழவு”
“ஈண்டுத்  தூங்கு கொளை முழவு” என்பதற்குப் பொருளாக வுரைப்பர்
பழையவுரைகாரர்.     கள்ளுண்பார்க்கு     நிணமும்    உடனுண்ண
வழங்குபவாதலின்,  அது  தோன்ற, “நிணங்சுடு புகையொடு”  என்றார்.
கட்குடம்   வைக்கும்  கோக்காலிக்கும்  ஏணியென்பது  பெயராதலின்,
அதனை  ஏனை  ஏணியின் வேறுபடுத்த  ஏறா ஏணியென்றார். “ஏறா
ஏணி  யென்றது  கோக்காலி”  யென்றும், “அதனை ஏறா ஏணியென்று
வெளிப்படுத்த  சிறப்பான்  இதற்கு  ஏறா  ஏணியென்று   பெயராயிற்”
றென்றும்    பழையவுரைகாரர்    கூறுவர்.    நிரம்புதல்,   முழுதும்
பொருந்துதல் ; அகலுதல், இடைவெளி மிக விரிதல.்  குடமிருக்குங்கால்
முழுதும்  நிரம்பியிராமல்  சிறிது  இடைவெளி  யுளதாகக்  கோக்காலி
அமைந்திருக்குமாறு   தோன்ற,   “நிரம்பகல்  பறியாத  ஏறா  ஏணி”
என்றார்.    இவ்வேறா   வேணிகள்   முன்னெல்லாம்    புகைவண்டி
நிலையங்களில்   வடிகட்டிய   தண்ணீர்   பொருட்டுக்  குடத்தோடே
நிறுத்தப்பட்டிருந்தமை   நினைவார்க்கு   “நிரம்பகல்  பறியா  வேறா
வேணி”  யின்  வடிவம் தெளிய விளங்கும்......இனி, நிரம்பகல் பறியாத
நிறைந்து  நெடிதிராத தசும்பு என இயைத்துரைப்பர்  பழையவுரைகாரர்.
நிரம்பகல்   பறியாத   குடம்  நிறைதல்  கூறுவது முரணாதலினாலும்
நாற்கோண     முக்கோண     வடிவினவாகிய       கோக்காலியில்
கோளவடிவிற்றாய   குடம்  இடை  வெளியின்றி  நிரம்பப்  பொருந்த
இராமை   தோன்றற்கு   “நிரம்பகல்   பறியா   வேணி”   யென்பது
கருத்தாதலினாலும் அவருரை பொருந்தாமையறிக.

கள்ளை     நிறைப்பதும் வழங்குவதும் ஒருங்கு  நிகழ்தல்  பற்றி,
“நிறைந்து   நெடிதிராத்   தசும்பு”   என்றார்.   பழையவுரைகாரரும்,
“உண்பார்க்கு வார்த்தலால் நிறைந்து நெடும்பொழுதிராத வென்றவாறு”
என்றார்.  தசும்பினை  இவ்வாறு  சிறப்பித்தவர், அதனிடத்துள்ள கள்
உண்ண  உண்ணக்  குறைபடாது நிரப்பப்பட்டமை தோன்ற, “வயிரியர்
உண்டெனத்  தவாஅக்  கள்ளின்”  என்று சிறப்பித்தார். புகையொடும்
சினம் தவிராது தவாக் கள்ளின் என இயையும்.

போரடு     தானைப்  பொலந்தார்க்  குட்டுவ, தொலையாக்  கற்ப,
வண்கை  வேந்தே,  நின்கலி  மகிழின்கண்  நின்நிலை கண்டேம் என
மாறிக்கூட்டிக்   கொள்க.   “வேந்தே  யென்னும்  விளி  முன்னின்ற
விளிகளோடு  கூடுதலின்  மாறாயிற்று.  இதனாற்  சொல்லியது அவன்
செல்வ மகிழ்ச்சி கூறியவாறாயிற்று.


 மேல்மூலம்