முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
44. நிலம்புடைப் பன்னவார்ப் பொடுவிசும்பு துடையூ
வான்றோய் வெல்கொடி தேர்மிசை நுடங்கப்
பெரிய வாயினு மமர்கடந்து பெற்ற
அரிய வென்னா தோம்பாது வீசிக்
 5 கலஞ்செலச் சுரத்த லல்லது கனவினும்
களைகென வறியாக் கசடி னெஞ்சத்
தாடுநடை யண்ணனிற் பாடுமகள் காணியர்
காணி லியரோநிற் புகழ்ந்த யாக்கை
முழுவலி துஞ்சு நோய்தபு நோன்றொடை
 10 நுண்கொடி யுழிஞை வெல்போ ரறுகை
சேண னாயினுங் கேளென மொழிந்து
புலம்பெயர்ந் தொளித்த களையாப் பூசற்
கரண்கடா வுறீஇ யணங்குநிகழ்ந் தன்ன
மோகூர் மன்னன் முரசங் கொண்டு
 15 நெடுமொழி பணித்தவன் வேம்புமுத றடிந்து
முரசு செய முரச்சிக் களிறுபல பூட்டி
ஒழுகை யுய்த்த கொழுவில் பைந்துணி
வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை
கவலை கவற்றுங் குராலம் பறந்தலை
 20 முரசுடைத் தாயத் தரசுபல வோட்டித்
துளங்குநீர் வியலக மாண்டினிது கழிந்த
மன்னர் மறைத்த தாழி
வன்னி மன்றத்து விளங்கிய காடே.

     துறை - செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணமும்
தூக்கும் அது. பெயர் - நோய்தபு நோன்றொடை (9)

     (ப - ரை) ஆர்ப்பொடு (1) அமர்கடந்து (3) எனக் கூட்டுக.

     5. கலமென்றது தான் அணிந்த ஆபரணங்களை.

     8. நிற்புகழ்ந்த யாக்கையென்றது நின்னை எல்லா வீரரும்
சொல்லிப் புகழ்தற்குக் காரணமாகிய யாக்கையென்றவாறு.

     யாக்கையாகிய (8) நோய்தபு நோன்றொடை (9) என்க.

     யாக்கையை இங்ஙனம் சிறப்பித்துக் கூறினமையான் இதற்கு.
'நோய்தபு நோன்றொடை' என்று பெயராயிற்று.

     10. அறுகையென்பான் மோகூர்மன்னனுக்குப் பகையாய்ச்
சேரனுக்கு நட்பாயிருப்பானோர் குறுநிலமன்னன்.

     11. சேணனாயினும் கேளென மொழிந்தென்றது அக்கோ நீ
செய்கின்ற வலிக்கு உதவிசெய்தற்குச் சேயனாயினும் எனக்கு
அவன்தான் நட்பெனச் சொல்லி யென்றவாறு.

     12. களையாப் பூசல் - ஒருவரால் மாற்றவொண்ணாத வருத்தம்.

     13. அரண்கள் 1தா உறீஇயென்றது மாற்றார் அரண்களை
அழித்தற் றொழிலைத் தன்பாலே உறுவித்தென்றவாறு.

     16. முரசுசெய 2முரச்சியென்றது அவ்வேம்பினை முரசாகச்
செய்யும்படி

     முற்றுவித்தென்றவாறு. முற்றுவித்தலாவது ஒழுகையேற்றலாம்படி
துண்டங்களாகத் தறிப்பித்தல். களிறென்றது மோகூர்மன்னன்
களிற்றினை. களிறுபலபூட்டியென்றது அவனேறும் யானைகளை
அவனை அவமதித்துச் 3சாட்டிற்குக் 4கடாவோபாதியாகப்
பூட்டியென்றவாறு.

     பூட்டியென்றதற்கு, "வாலிழை கழித்த நறும்பல் பெண்டிர்,
பல்லிருங் 5கூந்தன் முரற்சியாற், குஞ்சர வொழுகை பூட்டி" என
இதன் பதிகத்து வந்தமையால், அம்மகளிர் கூந்தல் மயிர்க்கயிற்றாற்
பூட்டியெனக் கொள்க.

     ஒழுகையுய்த்த (17) ஆடுநடையண்ணல் (17) என மாறிக்
கூட்டுக.

     18. கூகையையென இரண்டாவது விரிக்க.

     17-9. பைந்துணிகள் வைத்த இடமறந்த கூகையை அதன்
பெடையாகிய குரால் கவற்றுமென்க.

     வைத்தலை: 6விகாரம். கவலென்னும் பெயரைத் தாவென்பது
போல வருத்தமென்றுரைக்க. 7கவலை கவற்றல் - வருத்தல்.
8
பறந்தலை யென்றது இடுகாட்டிற் பிணஞ்சுடுமிடத்தை.

     23. வன்னிமன்றமென்றது அக்காட்டில் வன்னிமரத்தையுடைய
இடத்தினை. அதுதான் பிணத்தொடு சென்றாரெல்லாரும் இருந்து
மன்று போறலின் மன்றெனப்பட்டது. விளங்கிய காடென்றது தன்
தொழிலில் விளங்கிய காடென்றவாறு.

     ஒழுகையுய்த்த (17) ஆடுநடையண்ணல் (17), நின் நோய்தபு
நோன் றொடையினை (9) நிற்பாடுமகள் காண்பாளாக (7); காடு (23)
காணா தொழிவதாக (8) என மாறிக்கூட்டி வினை முடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவனை நீ நெடுங்காலம் வாழ்கவென
வாழ்த்தியவாறாயிற்று.

     (கு - ரை) 1. நிலத்தைப் புடைப்பதைப்போன்ற முழக்கத்தோடு.

     1-2. ஆகாயத்தைத் துடைத்து, மிக உயர்ந்த வெல்லுகின்ற
கொடிகள் தேரின்மேலே அசைய.

     3-4. பெருமையையுடையனவாயினும், போரில் வஞ்சியாது
எதிர்நின்று வென்று பெற்ற பொருள்களைக் கிடைத்தற்கு
அரியனவென்று கருதாமலும் அவற்றைத் தனக்கென்று
பாதுகாவாமலும் பிறருக்குக் கொடுத்து; "அரிய வெல்லா
மெளிதினிற்கொண், டுரிய வெல்லா மோம்பாது வீசி" (மதுரைக்.
145 - 6)

     5-6. தான் அணிந்த ஆபரணங்களை இரவலர்க்கு மிகக்
கொடுத்த லல்லாமல் கனவினிடத்தாயினும், 'என்னுடைய துன்பத்தை
நீக்குக' என்று கூறுதலை அறியாத குற்றமில்லாத மனத்தையும்;
"செல்லுறழ் தடக்கை, இரப்போர்க்குக் கவித லல்லதை யிரைஇய,
மலர் பறியாவெனக் கேட்டிகு மினியே" (பதிற். 52 : 10 - 12). அரசர்
தாம் அணிந்த ஆபரணங்களை அளித்தல்: "மார்பிற் பூண்ட
வயங்குகாழாரம், மடைசெறி முன்கைக் கடகமொ டீத்தனன்" (புறநா.
150 : 20 - 21)

     கலம்: பகைவர்பால் திறையாகப் பெற்ற ஆபரணங்கள்
எனலுமாம்; "வென்றுகலந் தரீஇயர் வேண்டுபுலத் திறுத்து" (பதிற்.
53 - 1); "நன்கலங் களிற்றொடு நண்ணா ரேந்தி, வந்துதிறை
கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து" (அகநா. 124 : 1 - 2)

     7. ஆடு நடை அண்ணல் - வெற்றியைத் தோற்றுவிக்கும்
நடையையும் உடைய பெருமையோய்.

     7-9. நின்னைப் பாடும் மகள், நின்னை வீரரெல்லாரும்
புகழ்தற்குக் காரணமன யாக்கையாகிய நிரம்பிய மெய்வலி தங்கும்,
நோய் நீங்கிய வலிய கட்டைக் காண்பாளாக. யாக்கையென்பதனைப்
போலத் தொடை என்பதும் உடம்பிற்கு ஒருபெயராயிற்று.

     காணிலியர் - காணாதொழிவதாக. இது காடு (23)
காணிலியரென முடியும்.

     9-10. பெரும்பாண். 243 - 5, ந. மேற்.

     10-16. மோகூர்மன்னனை வென்றமை கூறப்படும்.

     10-11. நுண்ணிய கொடியாகிய உழிஞையினது பூவைச்சூடிய
வெல்லும் போரைச் செய்யும் அறுகை யென்னும், பெயரையுடைய
குறுநில மன்னன் நெடுந்தூரத்திலுள்ளானாயினும், தனக்கு
நட்பினனென்று நின்னைச் சொல்லி.

     12. அறுகை தன் நாட்டைவிட்டு நீங்கி மோகூர் மன்னனுக்கு
அஞ்சி ஒளித்த பிறரால் களையப்படாத வருத்தத்தைப் போக்கும்
பொருட்டு.

     13-4. அரண்கள் தா உறீஇ அரண்களை வருத்தமுறச் செய்து.
தெய்வம் வருத்தினாற் போன்ற மோகூர் மன்னனான
பழையனென்பானது முரசத்தைக் கைப்பற்றிக் கொண்டு. மோகூருக்கு
அரசன் பழையனென்பது, "பழையன் காக்குங் கருஞ்சினை வேம்பின்
முழாரை முழுமுதறுமியப் பண்ணி" (5-ஆம் பதிகம். 13 - 4)
என்பதனாலும், "பழையன் மோகூ ரவையகம் விளங்க" (மதுரைக்.
508) என்பதனாலும் அறியப்படும்.

     15-6. பழையன் தன் மேம்பாட்டைக் கூறும் மொழிகளைக்
குறையச் செய்து அவனுடைய காவல்மரமான வேம்பினது அடிமரத்தை
வெட்டிமுரசு செய்வதற்கு அதனைச் சிறுதுண்டுகளாகச் செய்து
முற்றுவி்த்து அவற்றைக் கொண்டு வருவதற்கு ஆண்யானைகள்
பலவற்றைப் பூட்டி. முரச்சி - முற்றுவித்து.

     வண்டியைச் செலுத்திய (17) ஆடுநடையண்ணல் (7) என
இயைக்க.

     17-9. கொழுப்பு இல்லாத பசிய இறைச்சித் துண்டங்களை
வைத்த இடத்தை மறந்த, துய்போன்ற உச்சிக்கொண்டையையுடைய
தலையையுடைய கோட்டானினது சேவலை வருத்துகின்ற
பெண்கோட்டானையுடைய இடுகாட்டிடத்தில்; "குடுமிக் கூகை
குராலொடு முரல" (மதுரைக். 170). பறந்தலை யென்றது பிணஞ்சுடும்
இடத்தை.

     20-23. முரசையுடைய பழையதாய் வருகின்ற உரிமையையுடைய
பகையரசர் பலரை வென்று, அசைகின்ற நீரையுடைய கடலால்
சூழப்பட்ட இடம் அகன்ற உலகத்தை இனிமையாக ஆண்டு இறந்த
மன்னரைக் கவித்த தாழிகளையும், வன்னிமரம் நிற்கும்
மன்றத்தையுமுடைய விளங்கிய இடுகாடு.

     காடு (23) நோன்றொடையைக் (9) காணிலியர் (8) என முடிக்க.

     மன்னர்மறைத்த தாழி: "நெடுமா வளவன், தேவ ருலக
மெய்தினனாதலின், அன்னோற் கவிக்குங் கண்ணகன் றாழி" (புறநா.
228 : 10 - 12). வன்னிமன்றம்: "சுடலை நோன்பிக ளொடியா
வுள்ளமொடு, மடைதீ யுறுக்கும் வன்னி மன்றமும்" (மணி. 6 : 86 - 7)

     யாக்கையாகிய நோன்றொடையைப் பாடுமகள் காண்பாளாக;
காடு காணாதொழிவதாக நீ நீடூழி வாழ்கவென்பது கருத்து.

     (பி - ம்.) 11. சேணோனாயினும் 18. வைத்துத் தலைமறந்த. (4)


     1தா - வருத்தம் (தொல். உரி. 46)

     2முரச்சி - முரஞ்சியென்பதன் பிறவினை; "முரஞ்சன் முதிர்வே"
(தொல். உரி. 35)

     3சாடு - சகடம்.

     4கடாவோபாதியாக - கடாக்களை ஒப்ப.

     5கூந்தல் முரற்சி: "வேந்த ரோட்டிய வேந்துவேனன்னன்,
கூந்தன் முரற்சியிற் கொடிதே" (
நற். 270 : 9 - 10)

     6விகாரமென்றது, வைதலையென்னும் வினைத்தொகை
துய்த்தலை யென்பதற்கு ஏற்ப வைத்தலையென்று வந்ததனை.
வைத்த தலை வைத்தலை யாயிற்றெனலும் ஆம்.

     7கவலைகவற்றல் : பதிற். 67 : 11.

     8"கள்ளியம் பறந்தலை யொருசிறை யல்கி, ஒள்ளேரி நைப்ப
வுடம்பு மாய்ந்தது" (
புறநா. 240 : 9 - 10)





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

4. நோய்தபு நோன்றொடை
 
44.நிலம்புடைப் பன்னவார்ப் பொடுவிசும்பு துடையூ
வான்றோய் வெல்கொடி தேர்மிசை நுடங்கப்
பெரிய வாயினும் அமர்கடந்து பெற்ற
அரிய வென்னா தோம்பாது வீசிக்
 
5கலஞ்செலச் சுரத்த லல்லது கனவினும்
களைகென வறியாக் கசடி னெஞ்சத்
தாடுநடை யண்ணனிற் பாடுமகள் காணியர்
காணிலி யரோநிற் புகழ்ந்த யாக்கை
முழுவலி துஞ்சு நோய்தபு நோன்றொடை
 
10நுண்கொடி யுழிஞை வெல்போ ரறுகை   
1சேண னாயினுங் கேளென மொழிந்து
புலம்பெயர்ந் தொளித்த களையாப் பூசற்
கரண்கடா வுறீஇ யணங்குநிகழ்ந் தன்ன
மோகூர் மன்னன் முரசங் கொண்டு
 
15நெடுமொழி பணித்தவன் வேம்புமுத றடிந்து
முரசுசெய முரச்சிக் களிறுபல பூட்டி
ஒழுகை
2யுய்த்தோய் கொழுவில் பைந்துணி
3வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை
கவலை கவற்றுங் குராலம் பறந்தலை
 
20

முரசுடைத் தாயத் தரசுபல வோட்டித்
துளங்குநீர் வியலக மாண்டினிது கழிந்த
மன்னர் மறைத்த தாழி
வன்னி மன்றத்து விளங்கிய காடே.
 

துறை  : செந்துறைப்பாடாண்பாட்டு.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்   : நோய்தபு நோன்றொடை.

1 - 7. நிலம்புடைப்பன்ன.......அண்ணல் 

உரை :  நிலம்புடைப் பன்ன ஆர்ப்பொடு - நிலத்தை   யிடிப்பது
போன்ற   முழக்கத்துடன்   ;   விசும்பு   துடையூ   -  வானத்தைத்
தடவுதற்கென;   வான்தோய்   வெல்கொடி   -  வானளாவ  உயர்ந்த
வெற்றிக்கொடி;  தேர் மிசை நுடங்க - தேர்மீது நின்று அசைய; அமர்
கடந்து  பெற்ற  -  பல  போர்  களைச்  செய்து பெற்ற பொருள்கள்;
பெரிய  வாயினும்  -  பெருமையுடைய வாயினும்; அரிய என்னாது -
எளிதிற்  பெறற்கு  அரியவை  என்று  கருதாமல்; ஓம்பாது - தனக்கு
வேண்டும்  எனப்  பேணிக்கொள்ளலும்  செய்யாமல்; வீசி - பிறர்க்கு
நிரம்பவும் நல்கி; கலம் செலச் சுரத்தல் அல்லது - இவ்வாறு பல்வகை
அருங்கலங்களை   மிகக்  கொடுத்தலன்றி;  கனவினும்  களைக  என
வேண்டி யறியாத; கசடு இல் நெஞ்சத்து குற்றமில்லாத  நெஞ்சினையும்;
ஆடு    நடை    அண்ணல்   -   வெற்றியாற்   பிறந்த  பெருமித
நடையினையுமுடைய அண்ணலே எ - று.

போர் முரசின் முழக்கமும் வீரர் ஆரவாரமும் கலந்து நிலம் அதிர
முழங்குமாறு  தோன்ற,  “நிலம்புடைப்  பன்ன ஆர்ப்பொடு” என்றார்.
குளம்பினை  யூன்றி  விரைந்தேகும்  குதிரையின்  செலவையும்  பிற
சான்றோர்,  “நிலம்பிறக்  கிடுவதுபோற்  குளம்பு கடையூ” (புறம்.303)
என்று  கூறுப.  ஆர்ப்பொடு அமர்கடந்து என இயைக்க. வானளாவிய
கொடி  ஆங்கு  நுடங்கி  யசையும்  தோற்றத்தை, “விசும்பு துடையூ”
என்றும்,   உயர்ச்சியை   “வான்றோய்   வெல்   கொடி”  யென்றும்
சிறப்பித்தார்.  போரிற்  பெற்றவை  யென்னாது “அமர்கடந்து பெற்ற”
என்றதனால்,  போரில்  வஞ்சனையின்றி அறநெறியே நின்று பொருது
எளிதாகப்  பெற்றவை  யென்பது  பெற்றாம்.  “வென்றுகலந்  தரீஇயர்
வேண்டுபுலத்  திறுத்து”  (பதிற்.  53)  என்பவாதலின், பகைப்புலத்தே
அரும்  பொருள் பெறுமாறும், “நன்கலம் களிற்றொடு நண்ணா ரேந்தி,
வந்து   திறைகொடுத்து  வணங்கினர்  வழிமொழிந்து”  (அகம்.  124)
என்பதனால்  தோற்ற  வேந்தர்  பொருள்  தருமாறும் காண்க. அமர்
கடந்து   பெற்றவை  பெரியவாய்  வழியும்  ஈதல்  அமையுமாயினும்,
அவற்றின்  அருமை  நோக்கியவழி அவற்றை யோம்புதற்கே உள்ளம்
செல்லுமாதலின்,  அவ்வியல்பு  செங்குடடுவன்பால் இல்லையென்றற்கு;
“அரிய  வென்னாது  ஓம்பாது  வீசிக் கலஞ்செலச் சுரத்தல் அல்லது”
என்றார். பிறரும், “அரிய வெல்லாம்எளிதினிற்     கொண்டு, உரிய
வெல்லாமோம்பாது வீசி”  (மதுரைக். 145-6) என்றார். கலம், மார்பணி,
ஆரம்,  கடகம்   முதலியன.  “மார்பிற்  பூண்ட  வயங்குகா  ழாரம்,
மடைசெறி முன்கைக் கடமொ டீத்தனன்” (புறம். 150)என்று வன்பரணர்
கூறுதல் காண்க.

இனி,     “கனவினும்  களைக  என    வறியா”    என்பதற்குக்
“கனவினிடத்தாயினும்   என்னுடைய   துன்பத்தை  நீக்குக  வென்று
கூறுதலை    யறியாத”   என்றுரைப்பாரு   முளர்.   தான்  பிறரால்
இரக்கப்படுவதல்லது  பிறரைத்  தான் இரத்தல் இன்மை  வேந்தர்க்குச்
சிறப்பெனக்   காக்கை   பாடினியார்   நச்செள்ளையார்,   “தடக்கை
இரப்போர்க்குக் கவிதலல்லதை யிரைஇய, மலர்பறியா வெனக் கேட்டிகு
மினியே” (பதிற். 52) என்று உரைப்பது ஈண்டு நோக்கற்பாலது.

10 - 17. நுண்கொடி யுழிஞை..............யுய்த்தோய்.   

உரை : நுண்கொடி யுழிஞை-நுண்ணிய  கொடியாகிய உழிஞையின்
பூவைச்  சூடிய  ;  வெல்போர்  அறுகை  -  வெல்லுகின்ற போரைச்
செய்யும்   அறுகை   யென்பான்;  சேணனாயினும்  -  சேணிடத்தே
இருந்தானாயினும்; கேள் என மொழிந்து - நண்பனென மேற்கொண்டு
பலருமறியச்  சொல்லி;  புலம்  பெயர்ந்து  -  பகைவனான  மோகூர்
மன்னனுக்கு  அஞ்சித்  தன் நாட்டினின்றும் நீங்கி யோடி; ஒளித்த -
ஒளித்துக்  கொண்டதனா  லுண்டாகிய  ;  களையாப்  பூசற்கு - நீக்க
முடியாத  பழிப்புரையின் பொருட்டு ; மோகூர் மன்னன் அரண்கள் -
அம்  மோகூர்  மன்னனுடைய அரண்களை ; அணங்கு  நிகழ்ந்தன்ன
தாவுறீஇ  - தெய்வத்தால் கேடு நிகழ்ந்தாற்போல வலியழித்து ; முரசம்
கொண்டு  - அவன் காவல் முரசைக் கைப்பற்றி ;நெடுமொழி பணித்து
-   அவன்   உரைத்த   வஞ்சினத்தைச்    சிதைத்துத்  தன்னையும்
பணிவித்து; அவன்  வேம்பு  முதல்  தடிந்து  - அவனுடைய  காவல்
மரமாகிய  வேம்பினையும் அடியோடு  வெட்டி  வீழ்த்து; முரசு  செய
முரச்சி - முரசு செய்தற்கேற்பச் சிறு துண்டங்களாகத்தறித்து ; ஒழுகை
களிறு பல பூட்டி யுய்த்தோய் - வண்டியிலேற்றி யானைகளை அதனை
யீர்க்கும் பகடுகளாகப் பூட்டிச் செலுத்தியவனே எ - று.

உழிஞை,     ஒருவகை  நுண்ணிதாய்  நெடிது  வளருங்  கொடி
“நெடுங்கொடி  யுழிஞைப் பவர்” (புறம். 76) என்று சான்றோர் கூறுதல்
காண்க.

உழிஞை     சூடிய அறுகை யென்பதனால், மோகூர்   மன்னனது
முழுமுத லரணம் முற்றி அதனைக் கோடல் குறித்துப்  போர்செய்வான்
சென்றமை  பெற்றாம்.  தான்  செய்த  பல  போர்களிலும் வெற்றியே
பெற்றுப்   போந்த   பெருமிதங்  காரணமாக  மோகூர்க்குச்  சென்று
உழிஞை   சூடி  முற்றுகையிட்டமை  தோன்ற, “வெல் போர் அறுகை”
யென்று  சிறப்பித்தார். குட்டுவனோடு  அண்மையிலிருந்து புணர்தலும்
பழகலும்  இலனாய் நெடுஞ்சேணிடத்தே   யிருந்தானாயினும், அறுகை
யென்பான்    அக்   குட்டுவன்பால்    உண்மை    நண்பனாதலால்,
செங்குட்டுவனும்,அவன் துணைமையினை வேண்டானாயினும் அவற்குத்
துணை செய்யும் கருத்துடையனாய், மோகூர் மன்னனொடு பொருவான்
தான் பொருதற்குக்  காரணங்கூறுவது  போல, “சேணானாயினும் கேள்
என மொழிந்தான்” என்றும்,    இவ்வாறே    அறுகையும்   தனக்குச்
செங்குட்டுவன்   கேண்மையனென்   றுரைத்துக்  கொண்டு   சென்று,
மோகூர்   மன்னனொடு   பொருது   தோற்று   வேற்றுப்  புலத்துக்
கோடியொளிந்து  கொண்டா  னென்பார்,  “புலம் பெயர்ந் தொளித்த”
என்றும்,     அஃது     அவ்வறுகைக்கு     இளிவரவே     யன்றி,
செங்குட்டுவதற்குப்  பெருநாணம்  பயந்தமையின், “களையாப்  பூசல்”
என்றும்  கூறினார்.  தம்மைச்  சேர்ந்தார்குளவாகும்  இளிவரவுகளைத்
தமக்கு  உளவாயினவாகக் கருதி நாணலும், அவற்றைப் போக்கி  நலம்
செய்தலும்   தலைமக்கட்குப்   பண்பாதலால்,   குட்டுவன்   மோகூர்
மன்னன்பால் போர்குறித்துச் செல்வானாயினானென வறிக.

மோகூர்     மன்னனைப் பழையன் என்று இப்பத்தின்  பதிகமும்
சிலப்பதிகாரமும்   (27:  124-6)  கூறுகின்றன.  இவனுடைய  மோகூர்
நலத்தை   ஆசிரியர்   மாங்குடிமருதனார்,  “மழை  யொழுக்கறாஅப்
பிழையா  விளையுள்,  பழையன்  மோகூர்” (மதுரைக். 507-8)  என்று
கூறுவர்.  மதுரைக்கு  வட கிழக்கில் உள்ள திருமோகூர் இது போலும்.
பழையன் என்பான் ஒருவன் காவிரி பாயும் நாட்டுப் போஒர்  என்னும்
ஊரிடத்தே  யிருந்து  சோழர் கீழ் வாழ்ந்தான். சோழர் ஒரு காலத்தே
கொங்கு  நாட்டவரைப்  பணிவிக்கக் கருதிப் போர் தொடுத்த ஞான்று,
அவர்  பொருட்டு  இப் போஒர்ப் பழையன் அதனைச்  செய்தானென
நற்றிணை  (10)  கூறுகின்றது. இவன் வழியினனாதலால் இம் மோகூர்ப்
பழையன்  பால்  அறுகைக்கு வெறுப்பும் பகைமையும்  உண்டானதால்,
மோகூரை  முற்றுகையிட்டு  ஆற்றாமையால்,  அறுகை  புலம்பெயர்ந்
தொளித்தான் என அறிக.

தா,  வருத்தம். தாவுறீஇ யென்றது வருத்தம் உறுவித்  தென்றவாறு
என்றது,  அரண்களின் வலியழித்துச் சிதைவித்தவாறாயிற்று.  அணங்கு,
தெய்வம்.   சிறிதும்   விலக்கொணா   வகையில்  திடீரென்று  தாக்கி
அரண்களையழித்தமை  தோன்ற, “அணங்கு நிகழ்ந்தன்ன  அரண்கள்
தாவுறீஇ”  என்றார்.  பகைவர்  விலங்கு முதலிய உயிர்களால் நிகழும்
கேட்டினும்  தெய்வத்தால்  நிகழ்வது விலக்கொணா வீறுடைமை பற்றி,
“அணங்கு நிகழ்ந்தன்ன” என்றார். பழையன் வேல் வல்லனாதல் பற்றி
இத்துணையுங் கூறல் வேண்டிற்று.

தோற்ற  வேந்தனது முரசினைக் கோடல், பண்டைத் தமிழ் வேந்தர்
மரபாதல்பற்றி,   “முரசங்கொண்டு”   என்றும்,  எதிர்ந்த  வேந்தனை
ஈடழித்து  அவனுரைக்கும்  வஞ்சினத்தைப் பொய்ப்படுத்திப்  பணியச்
செய்தல் வேந்தரது வீரத்துக்குச் சிறப்பாதலால், “நெடுமொழி  பணித்து”
என்றும்  கூறினார்.  பழையனது காவல் மரம் வேம்பாதலின், “வேம்பு
முதல் தடிந்து” என்றார்.

இனிப்    பழைய   வுரைகாரர்,   “அறுகை  யென்பான்  மோகூர்
மன்னர்க்குப் பகையாய்ச் சேரனுக்கு நட்பா யிருப்பானோர்     குறுநில
மன்னன்”    என்றும்,  “சேணனாயினும்  கேளென  மொழிந்தென்றது.
அக்  கோ  நீ  செய்கின்ற வலிக்கு உதவி செய்தற்குச்  சேயனாயினும்
எனக்கு  அவன்தான்  நட்பு  எனச்  சொல்லி யென்றவாறு”  என்றும்,
“களையாப்  பூசல், ஒருவரால் மாற்றவொண்ணாத வருத்தம்”  என்றும்,
“அரண்கள்   தாவுறீஇ  யென்றது  மாற்றார்  அரண்களை  அழித்தற்
றொழிலைத் தன்பாலே யுறுவித் தென்றவாறு” என்றும் கூறுவர்.
 

தான்  தடிந்த வேம்பினை இன்னது செய்தானென்பார், “முரசு செய
முரச்சிக்   களிறு  பல  பூட்டி,  ஒழுகை”  யுய்த்தானென்றார்.   இனி,
இப்பத்தின்  பதிகம்,  “பழையன்  காக்கும்  கருஞ்சினை    வேம்பின்,
முழாரை   முழுமுத  றுமியப்  பண்ணி,  வாலிழை  கழித்த  நறும்பல்
பெண்டிர்,  பல்லிருங்  கூந்தல் முரற்சியால், குஞ்சர வொழுகை பூட்டி”
யுய்த்தான் என்று கூறும்.

இனிப்    பழைய  வுரைகாரர்,  “முரசு  செய  முரச்சி  யென்றது,
அவ்வேம்பினை  முரசாகச் செய்யும்படி முற்றுவித் தென்றவாறு. முற்று
வித்தலாவது  ஒழுகை  யேற்றலாம்படி  துண்டங்களாகத்  தறிப்பித்தல்.
களிறென்றது   மோகூர்  மன்னன்  களிற்றினை,  களிறு   பல  பூட்டி
யென்றது,    அவனேறும்   யானைகளை   அவனை    யவமதித்துச்
சாகாட்டிற்குக்   கடாவோ   பாதியாகப்  பூட்டி  யென்றவாறு.   பூட்டி
யென்றதற்கு, ‘வாலிழை கழித்த நறும்பல் பெண்டிர், பல்லிருங்  கூந்தல்
முரற்சியால்,   குஞ்சர   வொழுகை   பூட்டி’  என  இதன்  பதிகத்து
வந்தமையால்,  அம்  மகளிர்  கூந்தல்மயிர்க் கயிற்றாற் பூட்டி  யெனக்
கொள்க”  என்றும், “ஒழுகை யுய்த்த” என்று பாடங்கொண்டு, “ஒழுகை
யுய்த்த ஆடு நடையண்ணல் என மாறிக் கூட்டுக” என்றும் கூறுவர்.

7 - 9. நிற்பாடுமகள்.............நோன்றொடை. 

உரை : நிற்புகழ்ந்த-நின்னை வீரர் பலரும்   புகழ்தற்குப் பொருளா
யமைந்த;  முழுவலி துஞ்சும் - மிக்க வன்மை பொருந்திய ;  நோய்தபு
-  நோயில்லாத;  யாக்கை  நோன்றொடை  -  யாக்கையாகிய  பெரிய
உடம்பை;  நிற்பாடு  மகள்   காணியர் - நின்னைப் பாடும் பாடினியே
காண்பாளாக எ - று.

காணிலியரோ    வென்பதற்கு, “வன்னி மன்றத்து விளங்கிய காடு”
(வரி.   23)  என்பதனோடு  கூட்டுப்  பொருள்  கூறப்படும்.  தமக்கு
மெய்புகு  கருவி  போறலின்,  இவன்  யாக்கையே  வீரர் புகழ்தற்குப்
பொருளாயிற்  றென்றறிக.  அவர் புகழ்தற்குக் காரணமாகிய மெய்யின்
வலிக்கு யாக்கை இடமாதலின், “முழுவலி துஞ்சும் யாக்கை” யென்றும்,
அதற்கு   நோயின்மை   ஏதுவும்  பயனுமாய்  இயைந்து  நிற்றலால்,
“நோய்தபு   யாக்கை”   யென்றும்  சிறப்பித்தார்.  புகழ்வார் புகழும்
பாத்தொடையும்,   பூத்தொடையும்,  வீரரெறியும்  அம்புத்தொடையும்
ஏற்று  வலி சிறந்து நிற்றலின், குட்டுவன் யாக்கையை “நோன்றொடை”
யென்று சிறப்பித்தனர் போலும்.

இனிப்     பழைய வுரைகாரர்,  “நிற்புகழ்ந்த யாக்கை   யென்றது,
நின்னை   யெல்லா   வீரரும்   புகழ்தற்குக்  காரணமாகிய  யாக்கை
யென்றவா”   றென்றும்,  “யாக்கை  யாகிய  நோன்றொடை  யென்க”
என்றும்,  “யாக்கையை இங்ஙனம்  சிறப்பித்துக் கூறினமையால் இதற்கு
“நோய்தபு நோன்றொடை” யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர்.

17 - 23. கொழுவில்..................காடே.

உடை :  கொழுவில்  பைந்துணி - கொழுமை  யில்லாத   பசிய
இறைச்சித்  துண்டத்தை;  வைத்தலை  மறந்த   துய்த்தலைக் கூகை -
வைத்த   இடத்தை   மறந்தொழிந்த   உச்சிக்  கொண்டையையுடைய
கூகையை;  கவலை  கவற்றும்  - கவலையுறுவித்து வருத்தும் ; குரால்
அம்   பறந்தலை  -  கூகைப்  பெடைகளையுடைய    சுடுகாட்டிலே;
முரசுடைத் தாயத்து அரசு பல ஓட்டி - முரசினையுடைய வழிவழியாக
உரிமையுற்று  வரும்  அரசர்  பலரை வென்று; துளங்கு நீ்ர் வியலகம்
ஆண்டு  -  அசைகின்ற  கடல் சூழ்ந்த பரந்த நிலவுலகத்தை ஆட்சி
புரிந்து ; இனிது கழிந்த மன்னர் - தம் வாழ்நாளை இனிது

கழித்திறந்த     வேந்தரை யி்ட்டுப் புதைக்கும்; வன்னி மன்றத்து
விளங்கிய  காடு  -  வன்னி  மரம் நிற்கும் மன்றத்தால் விளக்கமுற்ற
இடுகாட்டின்கண்; தாழி  - மட்குடமானது; காணிலியர் - நின் யாக்கை
யாகிய நோய்தபு நோன்றொடையினைக் காணாதொழிவதாக  எ - று.

கொழு -கொழுமை; கொழுப்புமாம். கொழுவில் பைந்துணியெனவே,
கொழுப்புடைய  துணிகளை  நாய்  நரிகள் கவர்ந்தும் பிற புள்ளினம்
தின்றும்   கழிந்தனவென்பது  பெற்றாம்.  பைந்துணி,  கொழுப்பின்றி
வற்றிய  பசிய  உடற்றுண்டங்களுமாம். வைத்ததலை வைத்தலையென
வந்தது. துய்போறலின், கொண்டையைத் துய்யென்றார். “குடுமிக்கூகை”
(மதுரைக்.  170)  என்று பிறரும் கூறுப. கவலை, வருத்தம் ; “அவலக்
கவலை  கையாறழுங்கல்” (மணி. 4-118) என்பது மணிமேகலை. பழைய
வுரைகாரரும்,  “பைந்துணிகள் வைத்த இடம் மறந்த கூகையை அதன்
பெடையாகிய  குரால் கவற்று மென்க” என்றும், “வைத்தலை விகாரம்”
என்றும்,  “கவலென்னும்  பெயரைத் தாவென்பது போல வருத்தமென்
றுரைக்க,  “கவலை கவற்றல், வருத்தல்” என்றும், “பறந்தலையென்றது
இடுகாட்டிற் பிணஞ்சுடுமிடத்தை”யென்றும் கூறுவர்.

தொன்று     தொட்டு   வரும்   அரசுரிமை     பெற்றொழுகிய
பெருவேந்தரையும்   பொருதழித்துத்  தமது  ஒருமொழியே  வைத்து
உலகாண்ட  நெடுவேந்தர்   என்பார்,  “முரசுடைத்  தாயத்  தரசுபல
வோட்டித்  துளங்கு  நீர்வியலக  மாண்டு  இனிது  கழிந்த  மன்னர்”
என்றார்.  இனிது  கழிதலாவது,  நோய்  முதலியன  வுற்று  மடியாது
பொருது  புகழ்  நிறுவி  மாள்வது. “நோற்றோர் மன்ற தாமே கூற்றம்,
கோளுற விளியார்” (அகம். 61) என்று சான்றோர் கூறுதல் காண்க.

குரால், கூகைப்பெடை.அலையால் அலைப்புண்பதுபற்றிக் கடலைத்
“துளங்குநீர்”  என்றார்.  தாழி, மன்னர்  இறந்தவழி  அவர் உடலை
மண்ணாற்  செய்த  பானைக்குள் வைத்துப் புதைப்பது பண்டையோர்
மரபு.  இதனை  முதுமக்கட்  டாழி  யென்றும்  வழங்குப.  “வளவன்
தேவருலக   மெய்தினனாதலின்,  அன்னோற்  கவிக்கும்  கண்ணகன்
தாழி” (புறம். 228) என  வருதல் காண்க. காடு தாழி காணிலியர் என
முடித்தலு மொன்று.வன்னி மன்றம், சுடலை நோன்பிகள் மடையிட்டுப்
பரவுமிடம்  என்று மணிமேகலை கூறும்; “சுடலை நோன்பிகள் ஒடியா
உள்ளமொடு,  மடைதீ   யுறுக்கும்  வன்னி  மன்றம்”  (மணி.  6:86)
என்பது காண்க. பழையவுரைகாரர்,  “வன்னி  மன்ற  மென்றது, அக்
காட்டில் வன்னி  மரத்தை  யுடைய  இடத்தினை”  யென்றும், “அது
தான் பிணத்தொடு சென்றார்  எல்லாரு  மிருந்த  மன்று  போறலின்
மன்றெனப்பட்டது” என்றும், “விளங்கிய காடென்றது, தன் தொழிலில்
விளங்கிய காடென்றவாறு” என்றும் கூறுவர்.

இதுகாறும் கூறியது, ஆடுநடை யண்ணல், ஒழுகை யுய்த்தோய், நிற்
புகழ்ந்த   யாக்கையாகிய  நோய்தபு  நோன்றொடை,  நிற்பாடு  மகள்
காணியர் ; வன்னி மன்றத்து விளங்கிய காட்டின்கண் தாழி காணிலியர்
என்று கூட்டி வினை முடிவு செய்க.

“இதனாற்  சொல்லியது ; அவனை, “நீ  நெடுங்காலம் வாழ்க” என
வாழ்த்தியவாறாயிற்று”.


1. சேணோனாயினு மேணென - பா
2. யுய்த்த - பா
3. வைத்துத்தலை - பா


 மேல்மூலம்