முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
45. பொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணிப்
புற்றடங் கரவி னொடுங்கிய வம்பின்
நொசிவுடை வில்லி னொசியா நெஞ்சிற்
களிறெறிந்து முரிந்த கதுவா யெஃகின்
  5 விழுமியோர் துவன்றிய வகன்க ணாட்பின்
எழுமுடி மார்பி னெய்திய சேரல்
குண்டுக ணகழிய மதில்பல கடந்து
பண்டும் பண்டுந்தா முள்ளழித் துண்ட
#496559 நாடுகெழு தாயத்து நனந்தலை யருப்பத்துக்
  10 கதவங் காக்குங் கணையெழு வன்ன
நிலம்பெறு திணிதோ ளுயர வோச்சிப்
பிணம்பிறங் கழுவத்துத் துணங்கை யாடிச்
#496559 சோறுவே றென்னா வூன்றுவை யடிசில்
ஓடாப் பீட ருள்வழி யிறுத்து
  15 முள்ளிடு பறியா வேணித் தெவ்வர்
சிலைவிசை யடக்கிய மூரி வெண்டோல்
அனைய பண்பிற் றானை மன்னர்
இனியா ருளரோநின் முன்னு மில்லை
மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது
  20 விலங்குவளி கடவுந் துளங்கிருங் கமஞ்சூல்
வயங்குமணி யிமைப்பின் வேலிடுபு
முழங்குதிரைப் பனிக்கடன் மறுத்திசி னோரே.


          இதுவுமது. பெயர் - ஊன்றுவை யடிசில் (13)

     (ப - ரை) மதில்பல கடந்து (7) உள்ளழித்து உண்ட (8)
அருப்பத்துப் (9) பிணம் பிறங்கழுவத்துத் (12) தோளோச்சிப் (11)
பண்டும் பண்டும் (8) துணங்கையாடி (12) என மாறிக் கூட்டுக.

     13. 1சோறுவேறென்னா அடிசிலென்றது அரசனுக்கு
அடுசோற்றில் இச்சோறு வேறென்று சொல்லப்படாத
அடிசிலென்றவாறு.

     இவ்வடைச்சிறப்பானே இதற்கு, 'ஊன்றுவையடிசில்' என்று
பெயராயிற்று.

     16-7. தோல் அனைய பண்பென்றது தான் அம்புபடில் தளராது
பிறர்க்கு அரணமாகும்தோற்கடகு போன்ற பண்பென்றவாறு. குறையாது
நிறையாது (19) என்னும் எச்சங்களைக் கடவும் (20)
என்னும்
வினையொடு முடித்து அதனைக் கடவப்படுமெனவுரைக்க.

     21. மணியிமைப்புப்போலும் மின்னுக்கு மணியிமைப்பென்பது
பெயராயிற்று. 2வேலிடுபென்றது வேலை ஏற்றி நடப்பித் தென்றவாறு.

     22. கடன்மறுத்தலென்றது கடலிற் புக்கு ஒருவினை செய்தற்கு
அரிதென்பதனை மறுத்தலை.

     சேரல் (6), கடன்மறுத்திசினோராகிய (22) தானைமன்னர் (17)
இனியாருளரோ? நின்முன்னுமில்லை (18) எனக் கூட்டி வினை முடிவு
செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக்
கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1-2. பொன்னாற் செய்யப்பட்ட அழகிய தும்பைப்
பூவினையும், தீப்பொறிகள் மேலே எழுகின்ற தூணியில், புற்றில்
அடங்கிய பாம்பைப் போல ஒடுங்கிய அம்புகளையும் உடைய.
பொலம்பூந் தும்பை: புறநா. 2 : 14.

     பலவகைச் சித்திரங்கள் கிளரந்த தூணியெனலுமாம். தூணிக்குப்
புற்றும், அம்புகளுக்குப் பாம்பும் உவமை. அம்புகளுக்கு அரவு:
"புற்றினூடு நுழை நாக மன்னபுகை வேக வாளிகள்" (கம்ப. நாகபாசப்.
86)

     3. வளைதலையுடைய வில்லையும், ஒடுங்காத
மனவெழுச்சியையும்; நொசிவு - துவளுதல்.

     4. ஆண்யானைகளைக் குத்தி வளைந்த, வடுக்களைப்பெற்ற
வேலையுமுடைய. தும்பையையும், அம்பினையுடைய வில்லையும்,
நெஞ்சினையும் எஃகினையுமுடைய விழுமியோர் (5) என முடிக்க.

     யானைப் போருக்கு வேல் உரியதாதலின் களிறெறிந்து முரிந்த
என்றார்; "கைவேல் களிற்றோடு போக்கி" (குறள், 774). கதுவாய் -
வடு; "கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு" (புறநா. 353 : 15)

     5. நிலையாமை எப்பொழுதும் நெஞ்சில் தங்குதலால் வீரத்தில்
சிறந்தோராகிய படைஞர் நிறைந்த போர்க்களத்தில்; வீரரை, "காஞ்சி
சான்ற வயவர்" (பதிற். 58 : 65 : 4) என்று கூறுதல் பற்றி
விழுமியோர் என்றார்

     6. ஏழுமுடிகளாற் செய்யப்பட்ட ஆரத்தை மார்பின் கண்ணே
அணிந்த சேரனே ( பதிற். 14 :11, உரை)

     7. ஆழ்ந்த இடத்தையுடைய அகழியையுடைய மதில்கள்
பலவற்றை வஞ்சியாது எதிர் நின்று வென்று கைக்கொண்டு.

     8. முற்காலங்களில் தாம் உள்ளே புகுந்து அழித்து
அவ்விடத்தே சோறுசமைத்து உண்ட (பதிற். 58 : 6 - 7). இது
முற்றுமுதிர்வென்னும் துறையாகும் (பு. வெ. 117)

     9. நாட்டில் பொருந்திய பழையனவாய் வரும்
உரிமையையுடைய அகன்ற இடத்தையுடைய அரண்களில்; அருப்பம்
- அரண்; "அம்புமிழயிலருப்பம்" (மதுரைக். 67). நாட்பின் (5) கடந்து
(7) உண்ட (8) அருப்பத்துக் (9) கதவம் (10) என்க.

     10-11. கதவுகளைக் காக்கும் திரண்ட கணைய
மரத்தைப்போன்ற, பகைவர் நிலத்தைப் பெறுதற்குக் காரணமான
திணிந்த கையை உயர வீசி; தோள் - கை; "தோளுற்றொர் தெய்வந்
துணையாய்த்துயர் தீர்த்த வாறும்" (சீவக. 10) கையை வீசி ஆடுதல்:
பதிற். 40 : 10 - 12.

     தோளுக்குக் கணையமரம்: பதிற். 31 : 19-20, உரை.

     12 .பிணங்கள் உயர்ந்த போர்க்களப்பரப்பில் துணங்கைக்
கூத்தை ஆடி; "மன்பதை பெயர வரசுகளத் தொழியக்,
கொன்றுதோளேச்சிய வென்றாடு துணங்கை" (பதிற். 77 : 3-4)

     13. அரசனுக்குச் சோறு வேறு உளதென்று சொல்லாத
எல்லோருக்கும் ஒருபடித்தாக உயர்ந்த ஊனையும் துவையலையும்
உடைய உணவை உண்ட; சோற்றை வேறாகப்பிரித்து அறிய இயலாத
ஊனும் துவையுமெனலுமாம்; "செவ்வூன் றோன்றா வெண்டுவை
முதிரை" (பதிற். 55 : 7). இது பிண்டமேய பெருஞ்சோற்று நிலையைக்
கூறியபடி (பதிற். 30 உரை). ஊன்றுவையடிசில்: “அமிழ்தன மரபினூன்
றுவை யடிசில்” (புறநா. 390 : 14. புறங்கொடுத்து ஓடாத
பெருமையையுடைய வீரர் உள்ளவிடத்தே விட்டுத் தங்கி.

     15. அரிய வழிகளை அடைத்தற்கு முள்ளிடுதலை யறியாத
எல்லையையுடைய பகைவரது; "இனநன்மாச் செலக்கண்டவர்,
கவைமுள்ளிற் புழையடைப்பவும்" (புறநா. 98 : 7 - 8)

     16-7. வில்லிலிருந்து வரும் அம்பின் வேகத்தை அடங்கச்செய்த
வன்மையையுடைய, வெள்ளிய கிடுகுபடையைப்போன்ற
பண்பினையுடைய சேனையையுடைய அரசர். அடக்கிய தானை,
அனைய தானையென்க. "கழிப்பிணிக் கறைத்தோல்" (அகநா. 24 : 14)
எனக்கருங்கடகும் உண்டாதலின் வெண்டோல் என்பது இனமுள்ள
அடை.

     அசையாமைக்குத் தோலுவமை: "தோல், துவைத்தம்பிற்றுளை
தோன்றுவ, நிலைக்கொராஅ விலக்கம்போன்றன" (புறநா. 4 : 5 - 6)

     17-8. மன்னர் இனி யார் உள்ளார்? நினக்கு முன்னும் இல்லை.

     19-21. மேகம் முகந்துகொள்ளக் குறையாமலும், ஆற்றுநீர்
புகமிகாமலும், குறுக்காக வீசுகின்ற காற்றுச் செலுத்துகின்ற அசையும்
பெரிய நிறைந்த நீரினிடத்தே, விளங்குகின்ற மணி
விட்டுவிளங்குதலைப் போல வேலை ஏற்றி முழங்குகின்ற
அலையையுடைய கடலிற்புக்கு ஒருதொழிலைச் செய்தற்கு
மறுத்தோராகிய மன்னர் (17) என இயைக்க.

     19-22. "மழைகொளக் குறையாது புனல்புக மிகாது,
கரைபொருதிரங்கு முந்நீர் போல" (மதுரைக். 424 - 5)

     மன்னராகிய (17) மறுத்திசினோர் (22) நின் முன்னும் இல்லை;
இனியார் உளர் (18) என முடிக்க. (5)


     1"இடம்படு புகழச்சனகர் கோனினிது பேணக், கடம்படுகளிற்ற
ரசராதியிடை கண்டோர், தடம்படு புயத்தசிறு தம்பியர்கள் காறும்,
உடம்பொடு துறக்கநக ருற்றவரை யொத்தார்" (
கம்ப. கடிமணப். 1)

     2வேலுக்கு மின்னல்: “கூர்நுனை, வேலு மின்னின் விளங்கும்”
(புறநா. 42 : 3 - 4)




பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

5. ஊன்றுவை யடிசில்
 
45.பொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணிப்
புற்றடங் கரவி னொடுங்கிய வம்பின்
நொசிவுடை வில்லி னொசியா நெஞ்சிற்
களிறெறிந்து முறிந்த கதுவா யெஃகின்
  
5விழுமியோர் துவன்றிய வன்க ணாட்பின்
எழுமுடி மார்பி னெய்திய சேரல்
குண்டுக ணகழிய மதில்பல கடந்து
பண்டும் பண்டுந்தா முள்ளழித் துண்ட
நாடுகெழு தாயத்து நனந்தலை யருப்பத்துக்
 
10கதவங் காக்குங் கணையெழு வன்ன
நிலம்பெறு திணிதோ ளுயர வோச்சிப்
பிணம்பிறங் கழுவத்துத் துணங்கையாடிச்
சோறுவே றென்னா வூன்றுவை யடிசில்
ஓடாப் பீட ருள்வழி யிறுத்து
  
15முள்ளிடு பறியா வேணித் தெவ்வர்
சிலைவிசை யடக்கிய மூரி வெண்டோல்
அனைய பண்பிற் றானை மன்னர்
இனியா ருளரோநின் முன்னு மில்லை
மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது
 

20

விலங்குவளி கடவுந் துளங்கிருங் கமஞ்சூல்
வயங்குமணி யிமைப்பின் வேலிடுபு
முழங்குதிரைப் பனிக்கடன் மறுத்திசி னோரே.
  

இதுவுமது.

பெயர்  : ஊன்றுவையடிசில்.

1 - 6. பொலம்பூ........சேரல்.

உரை : பொலம்பூந் தும்பை - பொன்னாற்   செய்யப்பட்ட அழகிய
தும்பைப்  பூவையும்  ;  பொறி கிளர் தூணி - பொறிகள் பொருந்திய
தூணியின்கண்  ;  புற்று  அடங்கு அரவின் - புற்றின் கண் அடங்கிய
பாம்பு   போல   ;   ஒடுங்கிய   அம்பின்   -   ஒடுங்கியிருக்கின்ற
அம்புகளையும்  ;  நொசிவு  உடை  வில்லின்  -  வளைதலையுடைய
வில்லையும்  ;  நொசியா  நெஞ்சின் - பகை முதலியவற்றிற்கு அஞ்சி
யொடுங்காத   மனவெழுச்  சியையும்  ;  களிறு  எறிந்து  முரிந்த  -
களிறுகளைக்   கொல்வதால்  நுனி  மடிந்த  ;  கதுவாய்  எஃகின்  -
வடுப்பட்ட  வேலையுமுடைய  ; விழுமியோர் துவன்றிய - சீரிய வீரர்
நெருங்கிச்   செய்கின்ற   ;   அவன்கண்   நாட்பின்   -   அகன்ற
போர்க்களத்தையுடைய  ;  எழு  முடி  மார்பின்  எய்திய  சேரல்  -
பகைவர்  எழுவர்  முடிப்பொன்னாற்  செய்த ஆரத்தை  மார்பின்கண்
அணிந்த சேரமானான செங்குட்டுவனே எ - று.

பொரும்   வீரரணியும் தும்பைப்பூ பொன்னாற்  செய்யப்படுதலால்,
“பொலம்பூந்  தும்பை” யென்றார். பொறி, பூத்தொழில் வேலைப்பாடு ;
இனி,  தீப்பொறி  கக்கும்  அம்புகளை  யுடைமையின்,  பொறி கிளர்
தூணியெனப்பட்ட   தென்றுமாம்.   பாம்புபோற்   சீறிச்  சேறல்பற்றி,
அம்பிற்குப்  பாம்பும், தூணிக்குப் பாம்புறையும் புற்றும்  உவமமாயின.
வில்லிற்கு  வளைவும் நெஞ்சிற்கு வளையாமையும்  சிறப்பியல்பாதலின்,
“நொசிவுடை  வில்லின்  நொசியா நெஞ்சின்” என்றார். எறிந்தென்னும்
வினையெச்சம்  காரணப்பொருட்டு.  முரிதல்,  ஒடிதலுமாம்;  ஆயினும்,
ஒடிந்த   வேல்   ஏந்தப்படாதாதலின்,   நுனி   மடிதலே   ஈண்டுப்
பொருளாயிற்று.  கதுவாய்,  வடு;  “குருதி யோட்டிக் கதுவாய் போகிய
நுதிவாய்  எஃகமொடு” (புறம். 353) எனச் சான்றோர் கூறுதல்  காண்க.
வீரர்க்குரிய    சால்பனைத்தும்    நிரம்பிய   சான்றோ   ரென்றற்கு,
“விழுமியோர்”  என்றார்.  ஞாட்பென்பது  நாட்பென  வந்தது.  இனி,
நாட்பின்  என்பதற்கு  நாட்பின்கண்  என  விரித்து  ஆங்கு எதிர்ந்த
வேந்தர்   எழுவரை   வென்று   அவர்   முடிப்பொன்னாற்  செய்த
ஆரமணிந்த  மார்பு  என இயைப்பினு மமையும். தும்பையும்  அம்பும்
வில்லும் நெஞ்சும் எஃகமுமுடைய விழுமியோர் என இயையும்.

7 - 12. குண்டுகண்..........ஆடி.

உரை :  குண்டு  கண் அகழிய   மதில்   பல கடந்து - ஆழ்ந்த
அகழிகளையுடைய  மதில்கள் பலவற்றைக் கைப்பற்றிக் கடந்து சென்று;
உள் உண்டு அழித்த - உட்புகுந்து    ஆங்குள்ள    பொருள்களைக்
கொண்டழித்த ; நாடு கெழு தாயத்து - நாடாட்சிக் குரியதாக அமைந்த;
நனந்தலை அருப்பத்து - அகன்ற உள்ளிடத்தையுடைய  அரண்களின்;
கதவம்   காக்கும்   கணை   எழு   அன்ன  -  வாயிற்  கதவுகட்கு
வன்மையுண்டாகக்  காக்கும்  திரண்ட  கணைய மரத்தை   யொக்கும்;
நிலம் பெறு திணி தோள் - பகைவர் நாடுகளைப் பெறும் வலியமைந்த
திண்ணிய  தோள்களை;  உயர்  ஓச்சி  - உயரத் தூக்கி வீசி ; பிணம்
பிறங்கு   அழுவத்து   -   பிணங்கள்  குவிந்து  உயர்ந்து  கிடக்கும்
போர்க்களத்திலே ; பண்டும் பண்டும் துணங்கை யாடி - முன்னே  பல
காலங்களிற் பன்முறை துணங்கைக் கூத்தினை யாடி எ - று.

அகழிய மதில் என்பதில், அகழிய என்பது பெயரெச்சக்குறிப்பு. புற
மதிலும்  அக  மதிலும்  எனப்  பலவாதலின்,  “மதில் பல” என்றார்.
அழித்துண்டென்றதனை,  உண்டழித்த  என மாறி யியைக்க. உண்டல்,
கைக்கோடல் இவ்வாறு கொள்ளாது உள்ளழித்துண்ட என்றே கொண்டு,
“முற்காலங்களில்  தாம்  உள்ளே  புகுந்தழித்து  அவ்விடத்தே சோறு
சமைத்துண்ட”   என்பாரு   முளர்.   இக்   கருத்துக்கு”  அம்புடை
யாரெயிலுள்ளழித்  துண்ட,  அடாஅ  வடுபுகை  யட்டுமலர் மார்பன்”
(பதிற்.  20)  என்பது ஆதரவு தருகிறது. அருப்பம், உள்ளரண். “அக
நாடு  புக்கவர்  அருப்பம்  வவ்வி”  (மதுரை.  149) எனச் சான்றோர்
கூறுதலால்      அறிக.      நாட்டின்      அரசியற்கு      இஃது
இன்றியமையாவுறுப்பாதலின், “நாடுகெழு தாயத்து அருப்பம்” என்றார்.
“படைகுடி  கூழமைச்சு  நட்பர  ணாறும், உடையான் அரசருள் ஏறு”
(குறள்.  381)  என்று  திருவள்ளுவனார் கூறுதல் காண்க. சிறுகாப்பிற்
பேரிடத்ததாதல்    அரணுக்கு    இலக்கணமாதல்பற்றி,  “நனந்தலை
யருப்பம்” என்றார். மதிற்கதவுகளின் பின்னே மேலும் கீழும் குறுக்கே
கிடந்து உரம் தந்து நிற்றலின், “கதவம் காக்கும் கணையெழு” என்றார்.
இதனை  வீரர்  தோட்கு  உவமமாகக்  கூறினார். பல மதிற்கதவுகளை
யுடைத்துச்  சென்ற  குட்டுவன்  பயிற்சி குறித்து, “தூங்கெயிற் கதவம்
காவல்  கொண்ட,  எழூஉ  நிவந்தன்ன  பரேரெறுழ்  பணைத்தோள்”
(பதிற். 31) எனப் பிறரும் கூறினர். பகைவரொடு அறத்தாற்றிற் பொருது
அவர் நிலத்தைக் கொள்ளும் தோள் வன்மையைச் சிறப்பித்து,  “நிலம்
பெறு  திணிதோள்” என்றார். “மன்பதை பெயர அரசுகளத்  தொழியக்,
கொன்றுதோ    ளோச்சிய   வென்றாடு   துணங்கை”  (பதிற்.   77)
என்பதனால்,  வென்ற அரசர் போர்க்களத்தே துணங்கையாடும்  திறம்
காண்க.

இனி,     பழையவுரைகாரர், “மதில் பல கடந்து, உள்ளழித் துண்ட,
அருப்பத்துப் பிணம் பிறங் கழுவத்து, தோளோச்சிப் பண்டும் பண்டும்
துணங்கையாடி என மாறிக் கூட்டுக” என்பர்.

13 - 14. சோறுவேறு..................இறுத்து.

உரை :  சோறு வேறு என்னா - சோறு வேறு ஊன் வேறு எனப்
பிரித்துக்  காணமாட்டாதபடி  யமைந்த ; ஊன் துவை யடிசில் - ஊன்
குழையச்  சமைத்த  சோற்றினை;  ஓடாப்  பீடர்  உள்வழி   இறுத்து
பகைவர்க்குப்      புறங்கொடாத     பெருமையுடைய   வீரருள்ளம்
விரும்புமாறு பெருவிருந்தளித்துச் சிறந்த; என்க.

சிறந்த   என ஒருசொற் பெய்து முடிக்க. சோற்றினை ஊன் கலந்து
சமைத்தல்  பண்டையோர்  முறை.  “செவ்வூன் றோன்றா வெண்டுவை
முதிரை”  (பதிற்.  55)  எனச்  சான்றோர்  கூறுதல்  காண்க. வென்றி
யெய்திய  வேந்தர்  வீரர்க்கும்  பாணர்க்கும்  ஊன் சோறு வழங்கும்
சிறப்பினை,   “ஊன்சோற்  றமலை  பாண்கடும்  பருத்தும்,  செம்மற்
றம்மநின்  வெம்முனை  யிருக்கை”  (புறம். 33) எனக் கோவூர் கிழார்
சோழன் நலங்கிள்ளியைப் பாடுமிடத்துக் கூறியிருப்பதைக் காண்க.

இனி,    இதற்குப் பழையவுரைகாரர், “சோறு வேறென்னா அடிசில்
என்றது,   அரசனுக்கு   அடு   சோற்றில்   இச்  சோறு  வேறென்று
சொல்லப்படாத    அடிசில்   என்றவாறு”   என்றும்,   “இவ்வடைச்
சிறப்பானே  இதற்கு ஊன்றுவை யடிசில் என்று பெயராயிற்”  றென்றும்
கூறுவர.்   ஊன்றுவை   யடிசில்  மிக்க  சுவையுடைத்தென   வியந்து,
“அமிழ்தன   மரபின்   ஊன்றுவை  யடிசில்”  (புறம்.  390)   என்று
சான்றோர் கூறுப.

15 - 17. முள்ளிடுபு....................மன்னர்.

உரை :  முள் இடுபு அறியா ஏணி - பகைவரது குதிரை முதலிய
படைகளைத்   தடுத்தற்பொருட்டு  முள்  வேலி  யிடுவதை  யறியாத
எல்லைப்புறத்தையும்;  தெவ்வர்  சிலை  விசை அடக்கிய மூரி வெண்
தோல்  -  பகைவரது வில்லில் தொடுக்கப்படும் அம்பின் கடுமையைக்
கெடுத்த  வலிய  வென்மையான  கேடகத்தையும்; அனைய பண்பின்
தானை   மன்னர்   -   அவற்றிற்   கேற்ற   மறப்பண்பு  படைத்த
தானையையுமுடைய வேந்தருள்ளே; எ - று.

பகைவரது  குதிரைப்படை தம் மெல்லைக்குட் புகாதவாறு வழியில்
முள்வேலி  யிடுதல்  மரபாயினும்,  குட்டுவனைப்  பகைத்துப் போந்து
பொருவார்  இன்மையின், அவன் நாட்டெல்லைப் புறத்தை, “முள்ளிடு
பறியா  வேணி”  என்றார்  ; “பொருநர்த்  தேய்த்த போரரு வாயில்”
(முருகு.  1-69)  என்றாற்  போல. முள்ளிடும் மரபினை, “இனநன்மாச்
செலக்  கண்டவர்,  கவை  முள்ளிற்  புழையடைப்பவும்”  (புறம். 98)
என்று  சான்றோர்  கூறுதலாலறிக.  சிலை  :  ஆகுபெயர். எத்துணை
விசையாக  அம்புகளை  விடுக்கினும்,  அவற்றை இக்கேடகம் தடுத்து
விடுதலின்,   “சிலைவிசை   யடக்கிய  மூரி  வெண்டோல்”  என்றார்.
“மழைத்தோற்     பழையன்”     (அகம்.     186)       என்றும்
வழங்குவதுண்மையின்,  “வெண்டோல்”  என்றார்.  ஏணியும் தோலும்
தானையு முடைய மன்னர் என இயைக்க.

இனிப்  பழைய வுரைகாரர், தோலனைய பண்பின் என்று கொண்டு,
“தோலனைய  பண்பென்றது  தான்  அம்பு  படில்  தளராது பிறர்க்கு
அரணமாகும்  தோற்கடகு  போன்ற  பண்பென்றவாறு” என்பர். ஏணி,
எல்லை. “நளியிரு முந்நீ ரேணியாக” (புறம். 35) என்றாற்போல.

18 - 22. இனியாருளரோ........மறுத்திசினோரே.

உரை : மழை கொளக் குறையாது -முகில் படிந்து முகத்தலால் நீர்
குறையாமலும்;  புனல்  புக  நிறையாது  -  யாறுகளின்  வரவால் நீர்
நிரம்பிக்  கரை  கடவாமலும்;  விலங்கு  வளி  கடவும்  -  செல்லும்
செலவைத்   தடுத்து   மோதும்   காற்றுத்   திரட்டும்;   துளங்கு  -
அலைகளால்  அசைதலையுடைய;  இருங்கமஞ்சூல்  முழங்கு  திரைப்
பனிக்கடல்  - மிக நிறைந்த நீரையுடைய முழங்குகின்ற அலைகளோடு
கூடிய    குளிர்ந்த   கடலிடத்தே;   வயங்குமணி   இமைப்பின்   -
விளங்குகின்ற   மணி  போலும்  ஒளியினையுடைய  ;  வேல்  இடுபு
வேற்படையைச்   செலுத்தி;   மறுத்திசினோர்   -   அக்கடலிடத்தே
யெதிர்ந்த   பகைவரை   யெதிர்த்துப்  பொருதழித்த  வேந்தர்;  நின்
முன்னும்  இல்லை  - நின் முன்னோருள் ஒருவரும் இலர்; இனி யார்
உளரோ - இப்பொழுதும் நினக்கு ஒப்பானவர் இல்லை எ - று.

முகில்  படிந்து முகத்தலால் குறைதலும், ஆறுகளால் நீர் புகுதலால்
மிகுதலுமின்றி  எஞ்ஞான்றும்  நிறைந்தே  யிருத்தல்  பற்றிக்  கடலை
“மழைகொளக்   குறையாது  புனல்புக  நிறையாது”  என்றார்.  “மழை
கொளக்  குறையாது  புனல்புக  மிகயாது. கரை பொருதிரங்கு முந்நீர்”
(மதுரை.  424-5)  என்று  பிறரும்  கூறுதல்  காண்க.  கடலில்  கலம்
செலுத்திச்  செல்வோர்க்கு  எதிரே  குறுக்கிட்டு மோதுதலால், காற்றை,
“விலங்குவளி”   யென்றார்.   வளி   மோதுதலால்  அலை யெழுந்து
அசைவது  பற்றி, “வளிகடவும் துளங்கிருங்கமஞ்சூல்” என்பாராயினார்.
ஓகாரம் : எதிர்மறை. வேல் : ஆகுபெயர்.

இனிப்      பழையவுரைகாரர், “குறையாது,    நிறையாது என்னும்
எச்சங்களைக்  கடவும்  என்னும்  வினையொடு   முடித்து,  அதனைக்
கடவப்படும்  என  வுரைக்க”  என்றும்,  “மணி  யிமைப்புப்  போலும்
மின்னுக்கு  மணியிமைப்பென்பது  பெயராயிற்று”  என்றும்,   “வேலிடு
பென்றது  வேலை  ஏற்றி  நடப்பித்  தென்றவாறு”  என்றும்,  “கடல்
மறுத்த   லென்றது,  கடலிற்  புக்கு  ஒரு  வினை  செய்தல்   அரிது
என்பதனை மறுத்தலை,” யென்றும் கூறுவர்.

எழுமுடி மார்பின் எய்திய சேரல், பண்டும் பண்டும் துணங்கையாடி,
ஊன்றுவை யடிசில் பீடர் உள்வழி இறுத்துச் சிறந்த மன்னருள்;  பனிக்
கடல்  மறுத்திசினோர்  நின்  முன்னும்  இல்லை; இனி யார் உளரோ,
இல்லை   எனக்   கூட்டி   முடிக்க.  இதனாற்  சொல்லியது  அவன்
வெற்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று.


 மேல்மூலம்