இதுவுமது. பெயர் : கரைவாய்ப் பருதி. 1 - 7. இழையர்.........சுரத்தலின். உரை : இழையர் குழையர் நறுந் தண் மாலையர் -இழையினையும் குழையினையும் நறிய தண்ணிய மாலையினையும் ; சுடர் நிமிர் அவிர் தொடி செறித்த முன் கை - ஒளி மிக்கு விளங்குகின்ற தொடியைச் செறிய அணிந்த முன் கையினையும்; திறல் விடு திருமணி - மிக்க வொளி திகழும் அழகிய மணி மாலை கிடந்து; இலங்கு மார்பின் - விளங்குகின்ற மார்பினையுமுடைய; வண்டுபடு கூந்தல் - வண்டு மொய்க்கும் கூந்தலை ; முடி புனை மகளிர் - கொண்டையாக முடித்துக் கைசெய்து கொண்டுள்ள பாடல் மகளிர் ; தொடைபடு பேர் யாழ் - நரம்புத் தொடையினையுடைய பேரியாழின்கண் ; பாலை பண்ணி - பாலைப் பண்ணையமைத்து; பணியா மரபின் உழிஞை பாட - பகைவர்க்குப் பணியாத முறைமையினையுடைய உழிஞைத் திணைச் செயலைப் புகழ்ந்து பாட ; இனிது புறந் தந்து -அவர்களை நன்கு ஓம்பி ; அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின் - அவர்கட்கு இனிய மகிழ்ச்சியினைத் தன் கொடையாலும் முகமலர்ச்சியாலும் செய்தலாலே எ - று. இழையரும் குழையரும் மாலையரும் ஆகிய மகளிர் பாட என இயையும். முன் கையினையும் மார்பினையுமுடைய மகளிர் என முடிக்க. திருமணியின் சீரிய வொளி, தொடியினும் இழையினும் பிறவற்றினும் தோன்றும் நல்லொளியின் மேம்பட்டுத் திகழ்தல்பற்றி, “திறல்விடு திருமணி” யென்றார் “பிறவொளியிற் றிறலுடைமையால் இவ்வொளிக்கு ஆகுபெயரால் திறலென்று பெயராயிற்” றென்பது பழையவுரை. பூக்களை இடையறவின்றிச் சூடுதல்பற்றி, கூந்தல் “வண்டுபடு கூந்தல்” எனப்பட்டது. அக் கூந்தலைச் சிறப்புடைய கொண்டையாக முடித்துப் பூவும் பொன்னுமணிந்து கை செய்தல் இயல்பாதல் தோன்ற,“முடிபுனை மகளிர்” என்றார். பேரியாழ் ஆயிரம் நரம்புகளையுடைய தாய் ஆதி யாழ் எனச் சிறப்பித்து ஓதப்படுவது. “அது கோட்டின தளவு பன்னிருசாணும் வணரளவு சாணும், பத்தரளவு பன்னிருசாணும், இப் பெற்றிக்கேற்ற ஆணிகளும், திவ்வும், உந்தியும் பெற்று ஆயிரங்கோல் தொடுத்தியல்வது” (சிலப். உரைப்பாயிரம்) என்பர் அடியார்க்கு நல்லார். பிறிதோரிடத்தே அவர், யாழ் நால்வகைப்படுமென்றும், அவற்றுள் பேரியாழ் என்பதும் ஒன்றென்றும், அஃது இருபத்தொரு நரம்பினை யுடையதென்றும் கூறுவர். இவற்றுள் ஈண்டுக் கூறிய பேரியாழ் இன்னதெனத் தெரிந்திலது, ஒருகால் இருபத்தொரு நரம்பு சிற்றெல்லையும், ஆயிர நரம்பு பேரெல்லையுமாகவுடைய யாழ் பேரியாழ் எனப்பட்டன போலும். நரப்படை வுடைத்தாய் மங்கலப் பண்ணாகவுமிருத்தலால் உழிஞை பாடுமிடத்து முதற்கண் “பாலை பண்ணி” யென்றார். வேந்தர் பகைவருடைய முழுமுத லரணங்களை முற்றிலும் கோடலும் உழிஞைத் திணையாதலின், அச் செயல் குறித்த பாட்டினை யாழில் அமைத்துப் பாடினா ளென்றற்கு, “பணியா மரபின் உழிஞைபாட” என்றார். வேற்று வேந்தன் அரணத்தை முற்றும் உழிஞைச் செயல் பணிவு தோற்றுவியாப் பெருஞ்செயலாதலால், “பணியா மரபின் உழிஞை”யெனப்பட்டது. “இன் மகிழ் சுரத்தல் - இனிய மகி்ழ்ச்சியைச் சுரத்தல்: இதனாற்பயன், முற்கூறிய புறந்தருதலாகிய கொடையோடே இவர்களை மயக்கிய முகனமர்தலும் உடைய னென்றவாறு” என்பது பழையவுரை. 8 - 10. சுரம்பல...........................யானை. உரை : சுரம் பல கடவும் - காடுகள் பலவற்றினும் செலுத்தப்படும்; கரை வாய்ப் பருதி - குருதிக்கறை தோய்ந்த விளிம்பையுடைய தேராழி ; ஊர் பாட்டு - தன் பாட்டிற் செல்லுங்கால்; எண்ணில் பைந்தலை துமிய - எண்ணி - லடங்காத வீரருடைய பசிய தலைகள் கீழே அகப்பட்டு நசுங்க ; பல செருக்கடந்த - பல போர்களை வஞ்சியாது பொருது சென்றி சிறந்த; கொல் களிற்றுயானை கொல்லுகின்ற யானைகள் பலவும் உடைய (குட்டுவன்) எ - று. செல்லுதற்கரிய காடுகளிலும் இனிது சென்று திரியும் கால் வலிய தேராதல் தோன்ற, “சுரம்பல கடவும்” என்றும், அச் செலவால் மடிந்தாரது குருதிக்கறை தோய்ந்து படிந்திருப்பது குறித்துக் “கரைவாய்ப் பருதி” யென்றுங் கூறினார். கறை, கரை யென வந்தது. இனிப் பழையவுரைகாரர், “சுரம்பல வென்றது, பகைவரொடு பொருங்களத்தில் தேர் செல்லுதற்கு அரிதாம்படி படையொடு விலங்கும் அரிய இடங்கள் பலவற்றினும் என்றவாறு” என்பர். வீரரைக் கொல்வதற்கென்று செல்லாது தன் பாட்டிற் செல்லும்போதே, அதன் ஆழியில் வீரர்பலர் வீழ்ந்து தலை துமிந்து மடிவது தோன்ற, “கரைவாய்ப் பருதியூர் பாட்டு,எண்ணில் பைந்தலை துமிய” வென்றார். பருதியூர் பாட்டில் வீரர் வீழ்ந்து மடிந்து தலை துமியப்படுதற்குக் கொல்களிற்று யானையை யேதுவாக்கி, “பைந்தலையைத் துமித்தற்கென்று தேரை வலியச் செலுத்துவதன்றி, அப் பருதி தான் ஊர்கின்ற பாடுதன்னிலே, யானை செய்கின்ற போர்க்கு அஞ்சி ஓடி மடிந்தாருடைய அளவிறந்த பைந்தலை துமிய என்றவாறு” என்றும், “இவ்வாறு பின்வந்த அடைச்சிறப்பான் இதற்குக் கரைவாய்ப் பருதி யென்று பெயராயிற்” றென்றும் பழையவுரைகாரர் கூறுவர். பல்செருக் கடந்த குட்டுவன், கொல் களிற்றுயானைக் குட்டுவன் என இயையும். 11 - 14. கோடுநரல்....................பெயர்ந்தே. உரை : கோடுநரல் பௌவம் கலங்க-சங்கு முழங்கும் கடலானது கலங்குமாறு; வேல் இட்டு - வேற்படையைச் செலுத்தி; உடை திரைப் பரப்பின் - உடைந் தலையும் அலைகளையுடைய நீர்ப் பரப்பாகிய ; படு கடல்-ஒலிக்கின்ற கடலையிடமாகக்கொண்டு போர் செய்தோரை; ஓட்டிய - தோற் றோடச் செய்த; வெல் புகழ்க் குட்டுவன்- வெற்றியாலுளதாகிய பெரும்புகழையுடைய செங்குட்டுவனை; பாடுபுகண்டோர்-பாடிச் சென்று அவனைக் கண்டு அவனால் அளிக்கப் பெற்றோர்; பெயர்ந்து -மீண்டும்; செல்குவம் என்னார் - தமமூர்க்குச் செல்வோம் என்று நினையார்,அவன்பக்கலிலே எப்போதும் இருக்கவே நினைப்பர் எ-று. கோடு, சங்கு : “கோடுமுழங் கிமிழிசை” (பதிற். 50) என வருதல் காண்க. வேல், ஆகுபெயராய் அதனை யேந்திய படைவீரர் மேலதாயிற்று. கடலிடத்தே யிருந்துகொண்டு குறும்பு செய்து திரிந்த கடற் குறும்பராகிய பகைவரை, வேலேந்திய படைவீரரொடு சென்று தாக்கிப் பெரும் புகழ் பெற்ற செய்தியை விதந்து, “வேலிட்டு உடைதிரைப் பரப்பிற் படுகடலோட்டிய வெல்புகழ்க் குட்டுவன்” என்றார். இனி, பழையவுரைகாரர் “கடலோட்டிய வென்றது, தன்னுள் வாழ்வார்க்கு அரணாகிய கடல் வலியை அழித்த வென்றவா” றென்பர். செங்குட்டுவன் கடலிடத்தே வேலேந்திய படைகொண்டு சென்று, அக் கடலிற் செல்லும் கலங்கட்குத் தீங்கு செய்த குறும்பரை வென்றழித்த செய்தியைப் பிறாண்டும், “மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன், பொருமுரண் பெறாது விலங்குசினஞ் சிறந்து, செருச்செய முன்பொடு முந்நீர் முற்றி, ஓங்கு திரைப் பௌவம் நீங்க வோட்டிய, நீர்மா ணெஃகம்” (அகம். 212) என்ற ஆசிரியர் பரணர் வியந்து பாராட்டுவர். இச் செயலால், கடற்குறும்பு செய்த பகைவர் அழிந்தனரென்றும், பிற நாட்டுக் கலங்களும் அச்சத்தால் கடலிடத்தே யுலவுவ தொழிந்தன வென்றும் மலையமான் திருமுடிக்காரியைப் பாடிய மாறேக்கத்து நப்பசலையார், “சின மிகு தானை வானவன் குடகடற், பொலந்தரு நாவா யோட்டிய தவ்வழிப், பிறகலஞ் செல்கலா தனையேம்” (புறம். 126) என்று குறித்துள்ளார். இதுகாறுங் கூறியது, மகளிர் உழிஞை பாட மகிழ் சுரத்தலின், குட்டுவர் பாடிக் கண்டோர் பெயர்ந்து செல்குவ மென்னார், நிற்கவெனக் கருதுவர் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. இதனால் அவன் கொடைச்சிறப்புக் கூறியவாறாயிற்று. |