முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
47.



  5
அட்டா னானே குட்டுவ னடுதொறும்
பெற்றா னாரே பரிசிலர் களிறே
வரைமிசை யிழிதரு மருவியின் மாடத்து
வளிமுனை யவிர்வருங் கொடிநுடங்கு தெருவிற்
சொரிசுரை கவரு நெய்வழி புராலிற்
பாண்டில் விளக்குப் பரூஅச்சுட ரழல
நன்னுதல் விறலிய ராடும்
தொன்னகர் வரைப்பினவ னுரையா னாவே.

     இதுவுமது. பெயர் நன்னுதல் விறலியர் (7)

     (ப - ரை) தெருவின் (4) தொன்னகர் (8) எனக் கூட்டுக.

     5. சொரி சுரை கவரும் நெய்யென்றது நெய்யைச் சொரியும்
உள்ளுப்புடையுண்டாயிருக்கின்ற திரிக்குழாய் தான் ஏற்றுக்கொண்ட
நெய்யென்றவாறு.

     சுரையென்றது திரிக்குழாய்க்கு ஆகுபெயர்.

     6. பாண்டில் விளக்கு - கால்விளக்கு.

     7. நன்னுதல் விறலியரென்றது தமது 1ஆடல்பாடற்கேற்ப
நூலுட் சொல்லப்பட்ட அழகையுமுடையாரென்றவாறு.

     அவ்வழகினை நுதன்மேலிட்டுக் கூறியவாற்றான் இதற்கு,
'நன்னுதல் விறலியர்' என்று பெயராயிற்று.

     8. தொன்னகர் - 2அரசுடைய பழைய நகரிகள்.

     நெய் வழிபு உராலிற் (5) சுடரழல (6) ஆடும் (7) என்றதனாற்
சொல்லியது அந்த நகரிகளது செல்வமுடைமை.

     குட்டுவன் அட்டு ஆனான்; அடுதொறும் (1) பரிசிலர் களிறு
பெற்று ஆனார் (2); தொன்னகர் வரைப்புகளில் அவன் உரை ஆனா
(8) எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் கொடையினையும்
அக்கொடைக்கு வருவாயாகிய பகைவரைக் கோறலையும்
உடன்கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1. 'அட்டானானே குட்டுவன்' என்றாற்போல்வன
கடைச்சங்கத்திற்காயின சொற்கள் இக்காலத்திற்கு ஆகாவாயின
(தொல். செய். 80, ந.)

     1-2. குட்டுவன் பகைவரைக் கொன்று அச்செயல் போதுமென்று
அமையான்; இஃது, "ஐயைந் திரட்டி சென்றதற் பின்னும், அறக்கள
வேள்வி செய்யா தியாங்கணும், மறக்கள வேள்வி செய்வோ
யாயினை" (சிலப். 28 : 130 - 32) என்பதனாலும் அறியப்படும்.
அங்ஙனம் அவன் அடுந்தோறும் பரிசிலர் களிறுகளை ஓரளவில்
அமையாது பெற்றனர்; 'துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்த, வேழ
முகவை நல்குமதி' (புறநா. 369 : 26 - 7)

     3-4. மலையின்மேலிருந்து வீழ்கின்ற அருவியைப்போல,
மாடத்தில் காற்றினிடத்தே விளங்குகின்ற கொடிகள் அசைகின்ற
தெருவினையுடைய.

     5-6. சொரியப்பட்ட நெய்யையுடைய திரிக்குழாயானது தான்
ஏற்றுக் கொண்ட அந்நெய் மேலே வழிந்து பரவுதலால், காலையுடைய
விளக்கினது பருமையையுடைய சுடர் ஒளியை வீச; "சுடரும்
பாண்டிற்றிருநாறு விளக்கத்து" (பதிற். 52 : 13); "நெய்யுமிழ் சுரையர்
நெடுந்திரிக்கொளீஇக், கையமை விளக்க நந்துதொறு மாட்ட"
(முல்லைப் 48 - 9)

     6. மு. நெடுநல். 175; "துகிலின் வெண்கிழித் துய்க்கடை நிமிடி
உள்ளிழு துறீஇய வொள்ளழற் பாண்டில்" (பெருங். 1.33 : 92 - 3)

     7-8. அழகிய நெற்றியையுடைய விறலியர் ஆடுகின்ற பழைய
நகரங்களின் எல்லையில் சேரனைப் பற்றிய புகழ்ச்சியமைந்த
வார்த்தைகள் அமையா.

     மகளிர்க்கு நெற்றி சிறுத்திருத்தல் உத்தம இலக்கணமாதலின்
அழகிய நுதலென்றது சிறிய நுதலை; "நுதலடி நுசுப்பென மூவழிச்
சிறுகி" (கலித். 108 : 3)

     இப்பாட்டில், அமையாத செய்திகள் மூன்று சொல்லப்பட்டன.
(7)


     1"ஆடலும் பாடலு மழகு மென்றிக் கூறிய மூன்றி னொன்று
குறைபடாமல்"
(சிலப்.3 : 8 - 9)

     2இவை பகையரசர் நகரங்கள்.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

7. நன்னுதல் விறலியர்
 
47.அட்டா னானே குட்டுவ னடுதொறும்
பெற்றா னாரே பரிசிலர் களிறே
வரைமிசை யிழிதரு மருவியின் மாடத்து
வளிமுனை யவிர்வருங் கொடிநுடங்கு தெருவிற்
 
5சொரிசுரை கவரு நெய்வழி புராலின்
பாண்டில் விளக்குப் பரூஉச் சுடரழல
நன்னுதல் விறலிய ராடும்
தொன்னகர் வரைப்பினவ னுரையா னாவே.
 

 1 - 2. அட்டானானே...........................களிறே.

உரை :  குட்டுவன் - சேரன் செங்குட்டுவன்;  அட்டு  ஆனான் -
பகைவரை  வேரொடு  பொருதழித்தும்  அதனோடமையா னாயினான்;
அடுதொறும்  -  அதனால் அவன் பகைவரை நாடிச் சென்று  பொருந்
தோறும்  ;  பரிசிலர்  -  பரிசில்  மாக்கள் ; களிறு பெற்று ஆனார் -
களிறு  பல பரிசிலாகப் பெற்றும் அமையாது அவன்  போர்ச்சிறப்பைப்
பாடுதலே செய்வாராயினர் எ - று.

தன்னைப்  பகைத்த பகைவரை அவர் குலத்தோடும் தொலைத்தும்,
போர்மேற் சென்ற உள்ளம் மாறாமையின், அவர் தாமே முன்வாராமை
கண்டு  அவரை நாடிச்சென்று பொருவா னாயினா னென்றற்கு, “அட்டு
ஆனானே  குட்டுவன்”  என்றார.்  போர்  நிகழுந்தோறும் வெற்றியே
பெற்றானாக,  பரிசிலரும்  அவ்வெற்றி  யெய்துந்தோறும் விடாது பாடி
அப்பகைப்   புலத்துப்  பெற்ற  களிறு  முதலியவற்றைப்  பரிசிலாகப்
பெற்றமையின்,  “பெற்றா  னாரே  பரிசிலர் களிறே” என்றார். பரிசிலர்
களிறு  பெறுதற்கு  ஏதுவாகிய  பாட்டும், அதற்கேதுவாகிய வெற்றியும்
மேன்மேலும் நிகழ்ந்தவண்ண மிருத்தல் பெற்றாம். பெறவே, குட்டுவன்
ஆட்சியில்   போர்  பல  நிகழ்ந்தனவென்றும்,  அவற்று  ளெல்லாம்
அவன்  வெற்றியே  பெற்றுச்  சிறப்புற்றானென்றும் அறிகின்றாம். இக்
குட்டுவற்    கிளவலாகிய    இளங்கோவடிகளும்,   இக்   குட்டுவன்
அட்டானானாதலைக்  கண்டு,  மாடலன்  கூற்றில்  வைத்து,  “ஐயைந்
திரட்டி     சென்ற  தற்பின்னும்,  அறக்கள    வேள்வி    செய்யா
தியாங்கணும்,  மறக்கள  வேள்வி  செய்வோ  யாயினை”  (சிலப். 28:
130-2)  என்று  கூறுவது  இப்பாட்டின்  பொருளை வற்புறுத்துகின்றது.
பிறாண்டும்,   இவ்வாசிரியர்   இக்குட்டுவனை,   “துடியடிக்  குழவிய
பிடியிடை   மிடைந்த,   வேழ  முகவை  நல்குமதி,  தாழா  வீகைத்
தகைவெய் யோயே” (புறம். 369) என்று பாடுதல் காண்க. சிறப்பும்மை
தொக்கது.

3 - 8. வரைமிசை...................ஆனாவே.

உரை :  வரைமிசை இழிதரும்   அருவியின் -   மலைமேலிருந்து
வீழும்  அருவிபோல;  மாடத்து  -  மாடங்களின்  மேலிடத்திலிருந்து;
வளிமுனை   அவிர்வரும்   கொடி  நுடங்கு  தெருவில்  -  காற்றால்
அலைக்கப்  படும் கொடிகள் அசையும் தெருவின் கண்;  சொரிசுரை -
நெய்  சொரியப்படும்  விளக்குச் சுரையின்கண் ; கவரும்  நெய் வழிபு
உராலின்  -  எரிக்கப்படும்  நெய்  வழியுமாறு  பெய்து நிரப்புதலால்;
பாண்டில் விளக்கு - கால் விளக்கினது; பரூஉச் சுடர் அழல - பருத்த
திரியானது  பேரொளி  காட்டி  யெரிய;  நன்னுதல்  விறலியர்- நல்ல
நெற்றியையுடைய  விறலியர்  ;  ஆடும்  -  கூத்தாடும்;  தொல் நகர்
வரைப்பின்-பழைமையான  மாளிகைகளையுடைய  வூர்களில் ; அவன்
உரை   ஆனா   -   அவனைப்   புகழும்   புகழுரைகள்  நீங்காது
நிலவுவவாயின எ - று.

துகிற்கொடிக்கு     அருவியும், அருவிகட்கு அக்கொடியும் உவமம்
கூறுதல்     சான்றோர்    மரபாகும்.    “வேறு    பல்    துகிலின்
நுடங்கி..........இழுமென  விழிதரும்  அருவி”  (முருகு. 296-316) என்று
நக்கீரர்    கூறுமாறு    காண்க.   மாடங்களின்   உச்சியிற்  கட்டிய
துகிற்கொடிகள்   காற்றால்   அசைந்தொழுகும்   தோற்றம்  கூறுவார்,
“வரைமிசை  யருவியின்  மாடத்து  வளி  முனையவிர் வரும் கொடி”
யென்றார்.   மாடங்களின்   செல்வ   மிகுதியும்   இதனால்   குறித்
தவாறாயிற்று.  அகல்போல்  இடம்  விரிந்து  ஒரு பக்கத்தே குவிந்து
சுரைபுடைத்தாய்   உள்ளே  திரி  செறிக்கப்பட்ட  கால்  விளக்கினை
“பாண்டில்  விளக்கு”  என்றார்.  திரி  யெரியுங்கால், அதனால் நெய்
கவரப்படுதலால்,  “சொரிசுரை  கவரும்  நெய்”  என்றார்.  கூத்தாடும்
களரிக்கு  வேண்டும்  ஒளியின் பொருட்டுப் பருத்த திரியிட்டு எரிப்ப
வாதலின்,   “பாண்டில்   விளக்குப்   பரூஉச்  சுட  ரழல”  என்றார்.
இவ்விளக்கு    சேலம்   சில்லாவிலும்   வடார்க்காடு   சில்லாவிலும்
இக்காலத்து   மண்ணெண்ணெ   யெரிக்கும்   பேரொளி  விளக்குகள்
வருவதற்குமுன்   வழக்கிலிருந்தன.   மூங்கில்களை  உயரமாக  நட்டு
அவற்றின்  தலையை  மூன்று  வரிச்சல்களாகப்  பகுத்து  அவற்றின்
இடையே  மட்  பாண்டிலைச் செறித்துப் பருத்த திரியிட்டு எண்ணெய்
பெய்து   எரிப்பர்.   கூத்தாடும்  களரியின்  வலப்பக்கத்  தொன்றும்
இடப்பக்கத்  தொன்றுமாக  இரண்டு பாண்டில்கள் நிறுத்தப்படும். திரி
முழுதும்   எரிந்து  போகாவண்ணம்  தடுத்தற்கே  கரை  பயன்படும்.
பரூஉச்   சுடர்   அழல்   போல்   பேரொளியிட்   டெரியுமிடத்துச்
சொரியப்படும்   நெய்   விரையக்  கழியாமைப்  பொருட்டு  வழியப்
பெய்கின்றன   ரென்பார்,   “நெய்   வழிபு   உராலின்”    என்றும்,
பாண்டில் முழுதும் பரவி வழிதலின்,  “உராலின்”  என்றும்  கூறினார்.
இனிப்  பழையவுரைகாரர்,  “சொரிசுரை  கவரும்  என்றது, நெய்யைச்
சொரியும்   உள்ளுப்புடை   யுண்டாயிருக்கின்ற   திரிக்குழாய்  தான்
ஏற்றுக்கொண்ட   நெய்யென்றவாறு”   என்றும்,   “சுரை   யென்றது
தி்ரிக்குழாய்க்கு ஆகுபெய” ரென்றும் கூறுவர்.

கூத்தும்     குரவையும்  விழவும்   நடக்குந்தோறும் நாட்டரசனை
வாழ்த்துவதும்  அவன் புகழோதிப் பாராட்டுதலும் மரபாதலின்,  “உரை
யானா” என்றார். சிலப் - குரவைகள் காண்க.

விறலியராவார் விறல்படப் பாடி யாடும் மகளிர் என்ப.  அம் மகளிர்
ஆடல்பாடல்களோடு  அழகும் நன்கு பெற்றவர் என்றற்கு   “நன்னுதல்
விறலியர்”    என்றார்.    இனிப்    பழையவுரைகாரர்,    “நன்னுதல்
விறலியரென்றது,  தமது  ஆடல்  பாடற்கேற்ப  நூலுட் சொல்லப்பட்ட
அழகையுமுடையா   ரென்றவாறு”   என்றும்,  “அவ்வழகினை  நுதல்
மேலிட்டுக்   கூறியவாற்றான்   இதற்கு  நன்னுதல்  விறலிய   ரென்று
பெயராயிற்”   றென்றும்  “நெய்  வழிபு  உராலின்  சுடரழல  ஆடும்
என்றதனால்   சொல்லியது   அந்த  நகரிகளது  செல்வ   முடைமை”
யென்றும் கூறுவர்.

இதுகாறும்     கூறியது, குட்டுவன் அட்டு ஆனான்,  அடுதொறும்
பரிசிலர்  களிறு பெற்று ஆனார்; தொன்னகர் வரைப்புக்களில்  அவன்
உரை ஆனா என்று கூட்டி வினை முடிவு செய்க.


 மேல்மூலம்