துறை : இயன்மொழிவாழ்த்து. வண்ணமும் தூக்கும் அது. பெயர் : பேரெழில்வாழ்க்கை 1 - 4. பைம்பொற்றாமரை....................பரதவ. உரை : பாணர் - பாணர்களுக்கு; பைம்பொன் தாமரை சூட்டி - பசிய பொன்னாற் செய்த தாமரைப் பூவை யணிந்து; ஒள் நுதல் விறலியர்க்கு - ஒள்ளிய நெற்றியையுடைய விறலியர்க்கு; ஆரம் பூட்டி - பொன்னரிமாலைகள் பூணத் தந்து; கெடலரும் பல்புகழ் நிலைஇ - கெடாத பலவாகிய புகழை நிலை நாட்டி; நீர் புக்கு கடலகத்து நீர்ப் பரப்பில் சென்று - கடலொடு உழந்த - கடற் பகைவரொடு அரிய போரைச் செய்த; பனித்துறைப் பரதவ - குளிர்ந்த துறையினையுடைய பரதவனே ; புகழ்பாடும் பாணர்களுக்கும் விறலியருக்கும் வேந்தரும் பிற செல்வரும் முறையே பொற்றாமரையும் பொன்னரி மாலையும் வழங்குவது பண்டையோர் மரபு. “பாணன் சூடிய பசும்பொற் றாமரை, மாணிழை விறலி மாலையொடு தயங்க” (புறம். 141), “மங்குல் வானத்துத் திங்க ளேய்க்கும், ஆடுவண் டிமிரா வழலவிர் தாமரை, நீடிரும் பித்தை பொலியச் சூட்டி, உரவுக் கடன் முகந்த பருவ வானத்துப், பகற்பெயற்றுளியின் மின்னுநிமிர்ந் தாங்குப், புனையிருங் கதுப்பகம் பொலியப் பொன்னின் தொடையமை மாலை விறலியர் மலைய” (பெரும்பாண். 480-6) என்று பிறரும் கூறுதல் காண்க. விறலியர்தம் அழகினை, ஈண்டும் நுதல்மே லேற்றி, “ஒண்ணுதல் விறலியர்” என்றார். நிலத்தின்மேல் அரிய போரைச் செய்து தன் புகழை நாட்டியதேயன்றிக் கடலகத்தும் அதனைச் செய்து அழியாப் புகழ் பெற்றானென்பதை, “கெடலரும் பல் புகழ் நிலைஇ” என்றார். பல் புகழ் என்றது, வெற்றியாலும் கல்வியாலும் கொடையாலும் உளவாய புகழ்களை நிலைஇ, நிலைபெறு வித்து, பழையவுரைகாரரும் “நிலைப்பித்தென்னும் பிற வினை” என்பர். கடலிடத் தெழுந்த பெருங் காற்றும் பேரலைகளும் அவனை மேற் செல்லாவாறு தகைந்தும் அஞ்சாது நீர்ப்பரப்பிற் சென்று ஆண்டு எதிர்ப்பட்ட பகை யரசரைக் கடலிடத்தே பொருதழித்து வென்றி சிறந்தது கூறுவார், “நீர்ப்புக்குக் கடலொடு உழந்த பரதவ” என்றார். கடலிலே நாவாய் இடைநின்று பொரும் சிறப்புப்பற்றிப் பகைவரைக் கடலென ஆகுபெயராற் கூறினார். கலத்திற் செல்லும் பரதவர் போல, கலத்திற் சென்று போருடற்றி வென்றி யெய்தினமையின் “பரதவ” என்றார். மேலைக் கடற்கரையை யுடைமை பற்றி, இங்ஙனம் கூறினாரெனினுமாம். “நாட னென்கோ வூரனென்கோ, பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்ப னென்கோ” எனச் சேரமானைச் சான்றோர் கூறுவது காண்க. (புறம். 49) இனிப் பழையவுரைகாரர், “கடலொடு உழந்த” என்று கூட்டி, “ஒடு வேறு வினையொடு” என்றும், “பரதவ என்றதனாற் சொல்லியது, அக்கடலின் உழத்தற்றொழி லொப்புமை பற்றி, அக் கடற்றுறை வாழும் நுளையற்குப் பெயராகிய பரதவ னென்னும் பெயரான் இழித்துக் கூறினான் போலக் குறிப்பான் உயர்த்து வென்றி கூறினானாகக் கொள்க” என்பர். இதன்கண் பரதவன் என்னும் பெயராற் கூறுவது இழிப்புரை யென்பது பழையவுரைகாரர் கருத்தாதலைக் காணலாம்; அது பொருந்தாது; இறைவனது நுதல்வழி போற் சிறப்புடைய பாண்டியரைத் “தென்பரதவர் போரேறே” (மதுரை. 144) என்று சான்றோர் கூறுதல் காண்க. 5 - 8. ஆண்டுநீர்........................நிரப்ப. உரை : ஆண்டு -அக்கடலகத்தே ; நீர்ப்பெற்ற தாரம்- பகைவர் கடல் வழியாகக் கொணரப்பெற்ற பொருள்களை ; ஈண்டு இவ்விடத்தே ; இவர் கொள்ளாப் பாடற்கு - இப்பரிசிலருடைய நின் புகழ் முழுதினையும் தன்னகத்தே அடக்கிக் கொள்ள மாட்டாத பாட்டிற்காக ; எளிதினின் ஈயும் - மிக எளிதாகக் கருதிக் கொடுக்கும்; இவன்- இச் செங்குட்டுவன்; கல்லா வாய்மையன் என - எதனையும் எளிதில் ஈதலை யன்றித் தனக்கென அரியவற்றை யோம்புதலைக் கல்லாத வாய்மையுடையன் என்று ; கைவல் இளையர் - இசைத்தொழில் வல்ல இளையர்கள் பாராட்டி ; தத்தம் நேர்கை நிரப்ப - தங்களுடைய ஒத்த கைகளை வரிசையாக நீட்ட எ - று. கடலிடத்தே பகைவரைப் பொருதழித்தவழி அவர்தம் கலங்களிற் கொணர்ந்த பொருள்கள் செங்குட்டுவனாற் கைக்கொள்ளப்படுவது குறித்து, “ஆண்டு நீர்ப்பெற்ற தாரம்” என்றார்.அவற்றின் பெறலருமை நினையாது இளையர் பாடும் கொள்ளாப் பாடற்கு வழங்குவதனால், “கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும் கல்லா வாய்மையன் இவன்” என்று இளையர் தம்முட் கூறிப் பாராட்டுகின்றா ரென்க. “விரிப்பி னகலும் தொகுப்பினெஞ்சும், மம்மர் நெஞ்சத் தெம்மனோர்க் கொருதலை கைம்முற் றலநின் புகழே” (புறம். 53) என்று சான்றோர் கூறுதலின், இளையர் பாட்டுக் கொள்ளாப் பாடலாயிற்று. இனி, “யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா, பொருளறிவாரா” (புறம் 92) இளையர் பாட்டாதலின், “கொள்ளாப் பாட”லென்றுமாம். இனிப் பழையவுரைகாரர், கொள்ளாப் பாடலை “மனங் கொள்ளாப் பாட” லென்றும், “கல்லாவாய்மைய னென்றது கல்லாத தன்மையை யுண்மையாக வுடைய” னென்றும் கூறுவர். மேலும், அவர், “தாரத்தை யென விரித்து ஈயும் என்பதனோடு முடித்து, ஈயுமென்னும் பெயரெச்சத்தி்னைக் கல்லா வாய்மையன் என்னும் காரணப் பெயரொடு முடித்து, அப்பெயரை இக் கவி கூறுகின்றான் பிறர் கூற்றினைக் கொண்டு கூறுதற்கண் வந்த எனவொடு புணர்த்து, கடலுட் போர் செய்து அரிதிற் பெற்ற பொருள்களை எளிதாக, மனங்கொள்ளாப் பாடலையுடைய தரம் போதாதார்க்குக் கொடுக்கும் பேதை யிவன் என இழித்துக் கூறற்கேற்பக் கைவல் இளையர் அடைவே தத்தம் கையைச் சுட்டி நிரைக்கும்படி இரவலரிடத்து வணங்கிய மென்மையென வுரைக்க. ஆண்டு நீர்ப்போந்து பெற்ற தாரத்தை யென்றான் இக்கவி கூறுகின்றான்; அவ்வுருபிற்கு முடிபாகிய ஈயுமென்றது கூறுகின்றார் கைவல் இளையர். அக் கைவல் இளையர் கூறிற்றாக இக்கவி கூறுகின்றானுக்குக் கொண்டு கூட்டாகப் புகுந்தமையால், அவ்விரண்டாவதற்கு அவ்வீயு மென்னும் வினை முடிபாம் எனக் கொள்க. இதற்குப் பிறவாறும் கூறுப” என்பர். “இளையர், தரம் போதாதார்” என்பது பழையவுரை. 9 - 12. வணங்கிய..........மார்ப. உரை : வணங்கிய சாயல் - நட்டோர்க்கும் மகளிர்க்கும் வணங்கிய மென்மையினையும்; வணங்கா ஆண்மை - பகைவர்க்கு வணங்காத ஆண்மையினையும்; முனை சுடு கனையெரி எரித்தலின் - பகைவர் ஊர்களைச் சுடுகின்ற மிக்க எரி எரித்தலால்; இதழ் கவின் பெரிதும் அழிந்த மாலையொடு - பூவிதழ் கரிந்து அழகு மிகவும் கெட்ட மாலையும்; புலர் சாந்து - புலர்ந்த சந்தனமும் கொண்டு; பல்பொறிமார்ப - பலவாகிய பொறிகளையுடைய மார்பனே; அன்புடைய மகளிர்பாலும் நட்டோர்பாலும் அயரா அன்புடையனாய் மிக்க எளியனாய் ஒழுகுதல்பற்றி, “வணங்கிய சாயல்” என்றார். “மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து” (புறம். 221) என்று கோப்பெருஞ் சோழன் நலத்தைப் பொத்தியார் கூறுதலாலும், “ நட்டோரை யுயர்பு கூறினன்” (புறம். 239) என்று நம்பி நெடுஞ்செழியனைப் பேரெயின் முறுவலார் கூறுதலாலும் அறிக. சாயல் - மென்மை. மென்மைக்கு வணக்கம்போல ஆண்மைக்கு வணங்காமை சிறப்பாதலின், “வணங்கா ஆண்மை” யென்றார். பகைவர் ஊர்களைச் சுடுமிடத்தெழுந்த பெருந் தீயின் வெம்மையால் மார்பிலணிந்த மாலை கரிதலும் சாந்து புலர்தலும் இயல்பாதலால், “பெரிதும் இதழ் கவினழிந்த மாலையொடு சாந்துபுலர் மார்ப” என்பாராயினர். ஆடவர் மார்பிடத்தே பொறிகிடந்து அழகு செய்தல் சீரிய விலக்கணமாதல் பற்றி, “பல்பொறி மார்ப” என்றார். “மாண்பொறிப் பொலிந்த சாந்தமொடு தண்கமழ் கோதை சூடிப் பூண்சுமந்து.....அருவரையன்ன மார்பின்” (பதிற். 88) என்று பிறரும் கூறுவதும் “பொறி யென்றது உத்தம விலக்கணங்களை” யென்று பழையவுரை கூறுவதும் ஒப்புநோக்கற்பாலன. புலர்சாந்து என மாற்றி மாலையொடு கூட்டிக் கொள்க. ஒடு, எண்ணொடு, மாலையும் சாந்தும் செயற்கையணி யாதலின், அவற்றைப் பிரித்தற்குக் கொண்டென ஒரு சொல் வருவிக்க. இனிப் பழையவுரைகாரர், “மாலையொடு என்னும் ஒடு வேறு வினையொடு” என்றும், “சாந்துபுலர் மார்ப வெனக் கூட்டுக” வென்றும் கூறுவர். மாலையொடு சாந்துபுலர் மார்பு என்றவழிப் புலர்தல் வினை, மாலைக்கு இயையாமையின் வேறு வினையொடு என்றார் என வறிக. 12 - 18. நின் பெயர்............பலவே. உரை : நின் மலைப் பிறந்து - நினக்குரிய மலையிலே தோன்றி; நின் கடல் மண்டும் - நினக்குரிய கடலிடத்தே சென்று கலக்கும்; மலிபுனல் நிகழ்தரும் - நீர்நிறைந்த யாற்றில் நிகழ்த்தப்படும்; தீ நீர் விழவில் - இனிய புனலாட்டு விழாவும்; பொழில் வதி வேனில் பேரெழில் வாழ்க்கை - சோலையிடத்தே இனிதிருந்து செய்யும் வேனில் விழாவு முடைய பெரிய அழகிய வாழ்க்கைக்கண்; மேவரு சுற்றமொடு - நின்னை விரும்பிச் சூழும் சுற்றத்தாருடன்; உண்டு உடனுண்டு; இனிது நுகரும் - ஏனை இன்பப் பகுதி பலவும் துய்க்கும்; ஆயம் ஆடும் - செல்வ மக்கள் கூடி விளையாடும் ; தீம்புனல் காஞ்சியம் பெருந்துறை மணலினும் - இனிய நீரையுடைய காஞ்சியென்னும் யாற்றின் பெருந்துறைக்கண் பரந்த நுண்ணிய மணலினும், பல - பல யாண்டுகள் ; நின் பெயர் வாழியர் - நின்னுடைய பெயர் நிலைபெறுவதாக எ - று. மலையையும் கடலையும் உரிமை செய்யவே இடைக்கிடந்த நிலப்பகுதி சொல்லவேண்டாதாயிற்று. மலையிற் பிறந்து கடலில் மலிபுனல் என்றது யாறாயிற்று. தீநீர் விழவு என்றது புதுப்புனல் விழா. பழையவுரையும், “மலிபுனலை யுடைமையின், யாறு மலிபுன லெனப்பட்டது” என்றும், “நிகழ்தருந் தீநீர் என்றது அவ் யாறுகளிலே புதிதாக வருகின்ற இனிய புது நீரென்றவாறு” என்றும் கூறும். வேனில் விழா, தட்பம் வேண்டிக் குளிர்ந்த சோலையிடத்தே தங்கிச் செய்யப்படுவது தோன்ற, “பொழில்வதி வேனில் விழா” என்றார். “பொய்கைப் பூந்துறை முன்னித், தண்பொழில் கவைஇய சண்பகக் காவிற் கண்டோர் மருளக் கண்டத் திறுத்த, விழாமலி சுற்றமொடு” (பெருங். 1 38: 277-80) என்று கொங்குவேளிர் கூறுவது காண்க. பழையவுரைகாரர், “பொழில்வதி வேனிற் பேரெழில் வாழ்க்கையென்றது வேனிற் காலத்து மனையில் வைகாது பொழில்களிலே வதியும் பெரிய செல்வ அழகையுடைய இல்வாழ்க்கை யென்றவாறு” என்றும் “இச்சிறப்பானே இதற்கு, பேரெழில் வாழ்க்கையென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். “வேனிற் பொழில்வதி வாழ்க்கை யென்க” என்றும், “வாழ்க்கையையுடைய ஆயம்” என்றும் பழையவுரை இயைத்துக் காட்டும். விழவினை வேனிலொடும் கூட்டுக. “இனிப் பொழில் வயவேனி லென்பது பாடமாயின், பொழில் வயப்படுவதான பொருளுண்டாகிய வேனிலென வுரைக்க” என்பர் பழையவுரைகாரர். மேலும் அவர், உண்டு இனிது நுகரும் என்றற்கு, “சுற்றத்தோடு உண்டலே யன்றிச் செல்வமுடையார் அச் செல்வத்தாற் கொள்ளும் பயன்களெல்லாம் கொள்ளும் என்றவா” றென்றும், “புனலாயம், புனலாடற்கு வந்த திரள்” என்றும் கூறுவர். காஞ்சியாறு, பேரூர்க் கருகிலோடும் யாறு. நம்பியாரூரர், “மீகொங்கிலணி காஞ்சிவாய்ப் பேரூர்ப் பெருமானை” என்று இவ் யாற்றைச் சிறப்பித்துள்ளார். இதனை இப்போது நொய்யலாறு என வழங்குகின்றனர். இதுகாறும் கூறியது, பரதவ, மார்ப, காஞ்சியம் பெருந்துறை மணலினும் பல நின் பெயர் வாழியரோ எனக் கூட்டி வினை முடிவு செய்க. இதனால் செங்குட்டுவனை நீடு வாழ்கவென வாழ்த்தியவாறாயிற்று. |