முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
49. யாமுஞ் சேறுக நீயிரும் வம்மின்
துயலுங் கோதைத் துளங்கியல் விறலியர்
கொளைவல் வாழ்க்கைநுங் கிளையினி துணீஇயர்
களிறுபரந் தியலக் கடுமா தாங்க
  5 ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப
எஃகுதுரந் தெழுதருங் கைகவர் கடுந்தார்
வெல்போர் வேந்தரும் வேளிரு மொன்றுமொழிந்து
மொய்வளஞ் செருக்கி மொசிந்துவரு மோகூர்
வலம்படு குழூஉநிலை யதிர மண்டி
  10 நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர்
நிறம்படு குருதி நிலம்படர்ந் தோடி
மழைநாட் புனலி னவற்பரந் தொழுகப்
படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து
படுகண் முரச நடுவட் சிலைப்ப
  15 வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்படக்
கருஞ்சினை விறல்வேம் பறுத்த
பெருஞ்சினக் குட்டுவற் கண்டனம் வரற்கே.

     துறை - விறலியாற்றுப்படை. வண்ணமும் தூக்கும்
அது. பெயர் - செங்கை மறவர் (10)

     (ப - ரை) 4. 1கடுமா தாங்கவென்றது கால் கடிய குதிரைமேல்
ஆட்கள் வேண்டிய அளவுகளிலே செலவை விலக்கிச்
செலுத்தவென்றவாறு.

     5. திரிந்து கொட்பவென்றது மறிந்து திரியவென்றவாறு.

     6. கைகவர் கடுந்தாரென்றது மாற்றார்படையில் வகுத்து
நிறுத்தின 2கைகளைச் சென்று கவரும் கடிய தூசிப்படையென்றவாறு.

     கடுந்தாரையுயை (6) வேந்தர் (7) எனக் கூட்டுக.

     8. மொய்வளஞ் செருக்கியென்றது வலியாகிய செல்வத்தானே
மயங்கி யென்றவாறு. மொய் என்பது ஈண்டு வலி.

     10. நெய்த்தோர் தொட்ட செங்கை மறவரென்றது
பகைவருடலில் தாங்கள் எறிந்த 3வேல்முதலிய கருவிகளைப்
பறிக்கின்ற காலத்து அவருடைய உடலுகு குருதியை அளைந்து
சிவந்த கையையுடைய மறவரென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'செங்கை மறவர்' என்று பெயராயிற்று.

     மறவரது (10) குருதி (11) எனக் கூட்டுக.

     குழூஉநிலை அதிர மண்டிக் (9) குருதி (11) ஒழுகப் (12பிணம்பிறங்கப் பாழ்பல செய்து (13) முரசம் நடுவட்சிலைப்ப (14)
வளனற நிகழ வாழுநர் பலர்பட (15) விறல்வேம்பறுத்த (16) என
முடிக்க.

     15. வளன் அற நிகழ்ந்தென்றது செல்வமானது அறும்படியாகக்
கொள்ளை நிகழவென்றவாறு. நிகழவெனத் திரிக்க.

     இனி வளனறவெனவும் நிகழ்ந்து வாழுநரெனவும் அறுத்து,
நிகழ்தலை வாழ்வார்மேலேற்றி நிகழ்ந்துவாழ்தலென்றலுமாம்.

     ஆண்டு, நிகழ்தல் - விளக்கம்.

     குட்டுவற்கண்டனம் வரற்கு (17) யாமும் சேறுகம் (1); நும்
கிளை இனிது உணீஇயர் (3); விறலியர் 92), நீயிரும் வம்மின் (1)
எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

     (கு - ரை) 1. யாமும் செல்லுவோம்; நீங்களும் வாருங்கள்.

     2. அசைகின்ற மாலையணிந்த அசைகின்ற இயல்பையுடைய
விறலியரே; விறலியர் : விளி.

     3. இசைப்பாட்டில் வல்ல நும் சுற்றத்தார் இனிதாக உண்ணுக;
உணீஇயர்: முற்று.

     4-9. மோகூர் மன்னனை வென்றமை கூறப்படும்.

     4, களிறுகள் பரந்து செல்லவும், விரைந்து செல்லும்
குதிரைகளை அவற்றின்மேல் உள்ள வீரர் அடக்கிச் செலுத்தவும்.

     5. விளங்குகின்ற கொடிகள் அசையும்படி தேர் மறிந்து
சுழலவும்.

     6. வேலைச் செலுத்தி எழுகின்ற, பகைவர் படையின்
கையென்னும் உறுப்பைக் கவர்கின்ற விரைந்த தூசிப்படையையுடைய;
கை - பக்கப் படை.

     7. வெல்லும் போரைச் செய்யும் முடியுடையரசரும் குறுநில
மன்னரும் வஞ்சினம் கூறி.

     8-9. வலிமிகுதியால் மனம் செருக்குக் கொண்டு தம்மிற்
கூடிவரும் மோகூருக்கு அரசனான பழையனென்பானது வெற்றி
பெறுதற்குக் காரணமான ஒன்றாகக் கூடிய கூட்டத்தி்ன் நிலை
நடுங்கும்படி மிக்குச் சென்று. மோகூர்: ஆகுபெயர். 10 - 13.
போர்க்கள வருணனை.

     10. பகைவரது உடலிற் புக்க ஆயுதங்களைப் பறிக்கும்போது
அவருடைய இரத்தத்தை அளைதலால் சிவந்த கையையுடைய வீரரது;
வீரர் மோகூர் மன்னனது படையிலுள்ளார்.

     11. நிறம் உண்டாகின்ற இரத்தம் நிலத்தில் தவழ்ந்து ஓடி.

     12. மழை பெய்யும் நாளிலுண்டான செங்கலங்கல் நீரைப்
போலப் பள்ளங்களிலே பரவிப் பாய.

     11-2. குருதிக்குச் செம்புனல்: "செந்நில மருங்கிற் செஞ்சால்
சிதைய, மரஞ்சுமந் திழிதருங் கடும்புனல் கடுப்பக், குருதிச் செம்புனல்
போர்க்களம் புதைப்ப" (பெருங். 1. 46 : 67 - 9)

     13. இறந்த பிணம் உயரும்படி பாழ்பலவற்றைச் செய்து.

     14. ஒலிக்கின்ற கண்ணையுடைய வீரமுரசம் போர்க்களத்தின்
நடுவே ஒலிப்ப. மு. பதிற், 54 : 13.

     15-7. நாட்டின் வளன் அழியவும், விளங்கி வாழ்வார் பலர்
இறப்பவும், கரிய கொம்புகளையும் மற்றக்காவல்மரங்களை வென்ற
வெற்றியையும் உடைய வேம்பை வெட்டிய பெரிய சினத்தையுடைய
குட்டுவனைக் கண்டு வருவதற்கு. விறலைப் புலப்படுத்தும்
வேம்பெனலுமாம். வேம்பு மோகூர் மன்னனது காவல் மரம் (பதிற்.
44 : 14 - 5; 5-ஆம் பதிகம், 13 - 4); "பழையன் காக்கும் குழைபயி
னெடுங்கோட்டு, வேம்புமுதறடிந்த வேந்துவாள் வலத்துப், போந்தைக்
கண்ணிப் பொறைய" (சிலப். 27 : 124 - 6). நிகழ்ந்து - நிகழ;
எச்சத்திரிபு.

     குட்டுவற் கண்டனம் வரற்கு (17) யாமும் சேறுகம் (1); விறலியர்
(2), நீயிரும் வம்மின் என முடிக்க.

     வளஞ்செருக்கிய மோகூர் மன்னனது நாட்டை அழித்ததைக்
கூறினார் நம்போன்ற இரவலர்க்கு வரையாது கொடுக்க அவ்வளம்
உளதாயிற்றென்னும் கருத்துப்பற்றி. (9)


     1"நீரழுவ நிவப்புக்குறித்து, நிமிர்பரிய மாதாங்கவும்" (புறநா.
14 : 6 - 7)

     2கை - சேனையின் இருபுறத்தும் அதன் கைபோலுள்ள வீரர்.

     3வேல் சிறப்புடைய கருவியாதலின், 'வேல் முதலிய' என்றார்;
"முருகற்கு வேல் படையாதலானும், சான்றோர் வேற்படையே சிறப்பப்
பெரும்பான்மை கூறலானும்" (
தொல். புறத். 21, )




பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

9. செங்கை மறவர்
 
49.யாமுஞ் சேறுக நீயிரும் வம்மின்
துயலுங் கோதைத் துளங்கியல் விறலியர்
கொலைவல் வாழ்க்கைநுங் கிளையினி துணீஇயர்
களிறுபரந் தியலக் கடுமா தாங்க
 
5ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப
எஃகுதுரத் தெழுதருங் கைகவர் கடுந்தார்
வெல்போர் வேந்தரும்வேளிரு மொன்றுமொழிந்து
மொய்வளஞ் செருக்கி மோசிந்துவரு மோகூர்
வலம்படு குழூஉநிலை யதிர மண்டி
  
10நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர்
நிறம்படு குருதி நிலம்படர்ந் தோடி
மழைநாட் புனலி னவற்பரந் தொழுகப் 
படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து
படுகண் முரச நடுவட் சிலைப்ப
 
15வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்படக்
கருஞ்சின விறல்வேம் பறுத்த
பெருஞ்சினக் குட்டுவற் கண்டனம் வரற்கே.
 

துறை : விறலியாற்றுப்படை.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர் : செங்கை மறவர்.

4 - 9. களிறு...........மண்டி. 

உரை : -களிறு பரந்து இயல -யானைப் படையிலுள்ள  யானைகள்
பரந்து   செல்ல  ;  கடுமா  தாங்க  -  விரைந்த  செலவினையுடைய
குதிரைகள் தம்மைச் செலுத்தும் வீரர் குறிப்பின்படி அணி  சிதையாதே
அவரைத்  தாங்கிச்  செல்ல  ;  ஒளிறு  கொடி நுடங்கத் தேர் திரிந்து
கொட்ப  -  விளங்குகின்ற  கொடி  யசைய  வருந் தேர்கள் செல்லும்
நெறிக்  கேற்ப  விலகிச்  சுழன்று செல்ல ; எஃகு துரந்து   எழுதரும்-
வேற்படையைச்  செலுத்தி  யெழும்;  கை  கவர் கடுந்தார் -  பகைவர்
முன்னணிப்  படையின்  இரு  மருங்கினும் வரும் பக்கப்   படையைப்
பொருது  கவரும் கடிய தூசிப் படையினையும்; வெல்போர்  வேந்தரும்
வேளிரும்  ஒன்று  மொழிந்து  -  வெல்கின்ற  போரினையு  முடைய
முடிவேந்தரும்   குறுநில  மன்னரும்  தம்மில்  ஒற்றுமை   மொழிந்து
உடன்வர ; மொய்வளம் செருக்கி மொசிந்து வரும்- மிகுகின்ற வலியால்
மனஞ் செருக்கி அவரொடு கூடிவரும்; மோகூர் - மோகூர் மன்னனான
பழையனுடைய ;  வலம்படு குழூஉ நிலை அதிரமண்டி - வெற்றி தரும்
படைத்திரளின் கூட்டம் கலைந்து சிதையுறுமாறு நெருங்கித் தாக்கி ;

பருத்த    வுடம்பும் அசைந்த நடையு முடைய வாதலின், களிறுகள்
இனிது  செல்லும்  நிலை  கூறுவார்,  “பரந்து  இயல” என்றும், அமர்
செய்தற்குரிய  திறம்  பலவும் கற்ற குதிரை என்றற்குக் “கடுமா தாங்க”
என்றும்  கூறினார்.  கல்லா  மா வாயின் செலுத்தும் வீரரைத் தாங்கிச்
செல்லாது  ஆற்றறுக்கு மென்ப ; “அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா”
(குறள். 814) எனச் சான்றோர் கூறுதல் காண்க. செல்லும் நெறிக் கேற்ப
ஒன்றுக்  கொன்று  விலகியும் சூழ்ந்தும் செல்வது பற்றி, “தேர் திரிந்து
கொட்ப”   என்றார்.   பக்கப்   படையைத்  தாக்கிக்  கவருமிடத்துத்
துணைப்படை  விலக்கப்  படுதலும்  அகப்படை நெருக்குண்டழிதலும்
நிகழ்தலின்,  அது  செய்யும்  தூசிப்படையைக்  “கைகவர்  கடுந்தார்”
என்றார்.  இனிப்  பழைய  வுரைகாரர்,  “கடுமா தாங்க வென்றது கால்
கடிய  குதிரைமேலாட்கள் வேண்டிய அளவுகளிலே செலவை விலக்கிச்
செலுத்த”   என்றும்,   “திரிந்து  கொட்ப  வென்றது,  மறிந்து  திரிய
வென்றவா”   றென்றும்,   கைகவர்   கடுந்தார்  என்றற்கு  “மாற்றார்
படையில்   வகுத்து  நிறுத்தின  கைகளைச்  சென்று  கவரும்  கடிய
தூசிப்படை” யென்றும் கூறுவர்.

தாரையும்     போரையு  முடைய  வேந்தர்  என்க.    வேந்தர்,
சோழவேந்தர்.  வேளிர், ஏனைக் குறுநில மன்னர். இவர் அனைவரும்
தம்மிற்  கலந்து ஒற்றுமை மொழிந்து கொங்கு நாட்டை அடிப்படுத்துங்
கருத்தால்    அறுகையொடு   பொர   வந்தவராவர்.  முடிவேந்தரது
பெரும்படையும்  குறுநில  மன்னரது  திரள்படையும்  துணையாதலால்
வலி   மிகுதி  நினைந்து  உள்ளஞ்  சிறந்து  வரும்  பழையன்  மன
நிலையினை,   “மொய்  வளஞ்  செருக்கி  மொசிந்துவரும்  மோகூர்”
என்றார்.  மோகூர்  :  ஆகுபெயர்.  பழையன், வேந்தரும்  வேளிரும்
உடன்  வரக்  கண்ட  அருகை  அஞ்சி யொளித்துக்  கொண்டதனால்,
பெரு  மகிழ்வு  கொண்டு  செருக்கினமை  விளங்க,  “மொய்  வளஞ்
செருக்கி” யென்றா ரென்றுமாம்.

இனி,  அவன் செருக்கி யிருந்த நிலைமையினை, “வலம்படு குழூஉ
நிலை”  யென்றும்,  அது  செங்குட்டுவன்  செய்த போரால் சிதைந்து
வேறு  வேறாகத்  திரிந்தழிந்தமை தோன்ற, “அதிர மண்டி” யென்றுங்
கூறினார்.  இனிப் பழைய வுரைகாரர், “மொய்வளஞ் செருக்கியென்றது
வலியாகிய  செல்வத்தானே  மயங்கி  யென்றவா”  றென்றும்  “மொய்
யென்பது  ஈண்டு  வலி”  யென்றும்  கூறுவர். கூறவே, வளம் என்றது
செல்வ  மென்பதும் பெற்றாம். ஆகவே, வலியாகிய செல்வக் களிப்பே,
அறுகைக்குக்  கேளாய்த்  துணை  செய்ய  விருக்கும்  செங்குட்டுவன்
திறலை  நினைந்து  தற்காவாது  பழையன்  அழிதற்குக்  காரணமாயிற்
றென்பது கூறியவாறாம்.

10 - 17. நெய்த்தோர்.........வரற்கே.

உரை :    நெய்த்தோர்    தொட்ட    செங்கை      மறவர்-
குருதியளைந்ததனால்  சிவந்த  கையினையுடைய  போர்  வீரருடைய;
நிறம்படு குருதி -மார்பிற் புண்ணிடத் தொழுகும் குருதியானது ; நிலம்
படர்ந்தோடி-நிலத்திற் பரவியோடி ; மழை நாள் புனலின் அவல் பரந்
தொழுக -  புது  மழை  பொழியும் நாளில் பெருகி யோடும் கலங்கல்
நீரைப்போலப் பரந்து பள்ளம் நோக்கிப் பாய ; படு பிணம் பிறங்க -
பட்டு வீழும் பிணங்கள் குவியுமாறு; பல பாழ் செய்து - பலவற்றையும்
பாழ்படுத்தி;   படுகண்   முரசும்  நடுவண்  சிலைப்ப  - ஒலிக்கின்ற
கண்ணையுடைய வெற்றிமுரசு  படை  நடுவே  முழங்க; வளன் அற-
அப்பழையனது செல்வம் முற்றவும் கெட்டழிய  ;  நிகழ்ந்து  வாழுநர்
பலர்  பட-  இருந்து  வாழ்தற்குரியவர்  பலர் இராது இறப்ப ; ககுஞ்
சினை விறல் வேம்பு அறுத்த -கரிய கொம்புகளையும் வன்மையினையு
முடைய காவல்  மரமான  வேம்பினை  வெட்டி  வீழ்த்திய ; பெருஞ்
சினக்   குட்டுவன்   கண்டனம்   வரற்கு  -  மிக்க சினத்தையுடைய
குட்டுவனைக் கண்டு வருதற்காக எ - று.

பகைவர்    மார்பிற் செலுத்தி யழுத்திய படையினைப் பறித்தலால்
வழியும்  குருதி  படிந்து  சிவந்த  கையினை  யுடைய  மறவர் எனப்
பழையனுடைய  வீரரது  மாண்பு  தெரித்தற்கு  “நெய்த்தோர் தொட்ட
செங்கை   மறவர்”   என்றார்.   இவ்வாறே   பழைய   வுரைகாரரும்,
“பகைவருடலில்   தாங்கள்   எறிந்த   வேல்  முதலிய  கருவிகளைப்
பறிக்கின்ற  காலத்து அவருடைய உடலுகு குருதியை யளைந்து சிவந்த
கையை   யுடைய   மறவர்  என்றவாறு”  என்றும்,   “இச்சிறப்பானே
இதற்குச்   செங்கை  மறவரென்று  பெயராயிற்”   றென்றும்  கூறுவர்.
இத்தகைய   சிறப்பமைந்த  வீரரையும்  குட்டுவன்  தானை   வென்று
மேம்பட்டதென அவன் வெற்றியை விளக்கினாரென வறிக.

இச்செங்கை     மறவர் குட்டுவன் வீரரால் புண்பட்டு வீழ்ந்தாராக
அவர்   மார்பினின்   றொழுகிப்   பெருகிய   குருதிப்பெருக்கினைச்
சிறப்பித்தற்கு,  “மறவர்  நிறம்படு குருதிநிலம் படர்ந்தோடி, மழைநாட்
புனலின்   அவல்பரந்  தொழுக”  என்றார்.  இவ்வாறே,  “கடும்புனல்
கடுப்பக்  குருதிச்  செம்புனல்  போர்க்களம்  புதைப்ப”  (பெருங்.  1:
468-9)  என்று  கொங்கு  வேளிரும்,  “ஒண்  குருதி  - கார்ப்பெயல்
பெய்தபின்  செங்குளக்  கோட்டுக்கீழ், நீர்த்தூம்பு நீருமிழ்வ போன்ற”
(கள. 2) என்று பொய்கையாரும் கூறுதல் காண்க. வீரரே யன்றி மாவும்
களிறும்  பட்டு  வீழ்தலின், “பாழ்பல செய்து” என்றார். பொருவார்க்கு
மறத்தீக்  கிளர்ந்தெழச்  செய்தற்கு  முரசு,  படை நடுவண் முழங்குவ
தாயிற்றென வறிக.

இவ்வண்ணம்     போர்க்களத்தே   பழையன் தானை  முழுதும்
பட்டழியவே, பொருவாரைப்  பெறாது  குட்டுவன் தானை வீரர் பலர்
மோகூர்க்குட்புகுந்து வாழ்வோருடைய செல்வங்களைச் சூறை யாடியது
தோன்ற  “வளன் அற” என்றும், அதனால், செல்வ வாழ்வு வாழ்பவர்
வளன்  அழிந்தமையின்  வேறு  வகையின்றி உயிரிழந்தன  ரென்பார்,
“நிகழ்ந்து  வாழுநர்  பலர்”  என்றும்,  கூறினார். நிகழ்ந்து  என்பதை
நிகழவெனத்  திரித்துக்  கொள்க  என்றும், “வளனற  நிகழ்ந்தென்றது
செல்வமானது அறும்படியாகக் கொள்ளை நிகழ வென்றவாறு” என்றும்,
“இனி   வளனற   வெனவும்  நிகழ்ந்து  வாழுந  ரெனவும்  அறுத்து
நிகழ்தலை வாழ் வார்மேலேற்றி நிகழ்ந்து வாழ்தலென்றுமாம் ; ஆண்டு
நிகழ்தல் விளக்கம்” என்றும் பழைய வுரைகாரர் கூறுவர்.

வீரர்    சூறையாட்டால் வாழ்வோர் பலர் கெடுதற்கும் வேம்பினை
முதலொடு  தடிதற்கும்  ஏதுக்  கூறுவார்,  “பெருஞ்சினக்  குட்டுவன்”
என்று சிறப்பித்தார்.

குழூஉநிலை  யதிர மண்டி, குருதி யொழுகப் பிணம் பிறங்கப் பாழ்
பல  செய்து,  முரசம்  நடுவண்  சிலைப்ப வளனற, வாழுநர்  பலர்பட
விறல்  வேம்பறுத்த குட்டுவனைக் கண்டனம் வரற்கு   என இயைத்துக்
கொள்க. கண்டனம் : முற்றெச்சம்.

1 - 3. யாமும் ...............உணீஇயர்.  

உரை : துயலும் கோதை - அசைகின்ற கூந்தலையும், துளங்கியல்-
அஞ்சுகின்ற இயல்பையு முடைய ; விறலியர் - விறலியர்களே ; யாமும்
சேறுகம்  -  யாங்களும் செல்கின்றோம் ; நீயிரும் வம்மின்  - நீவிரும்
வருக  ;  கொளைவல்  வாழ்க்கை  -  பாடல்  வன்மையால்  வாழும்
வாழ்க்கையினையுடைய  ;  நும்  கிளை  - நும்முடைய  சுற்றத்தவர் ;
இனிது  உணீஇயர்  -  உடுப்பனவும்  அணிவனவும்  பெறுவதேயன்றி
உண்பனவும் மிகுதியாய்ப் பெற்று உண்பார்களாக எ - று.

கை     செய்து பின்னி நாலவிட்டமை தோன்ற, “துயலும் கோதை”
யென்றும்,    பெண்மைக்குரிய   அச்சத்தால்   உளம்   துளங்குவது
மெய்ப்பட்டுத்  தோன்றுவது  கண்டு, கூறலின், “துளங்கியல்  விறலியர்”
என்றும்  கூறினார். விறலியர் : அண்மை விளி. பெருவளம்  பெறற்கண்
சிறிதும்  ஐயமின்மை  தோன்ற,  “யாமும் சேறுகம் நீயிரும்   வம்மின்”
என்றார்.  கொளை,  பாட்டு.  பாடிப்பெற்ற  பரிசில் கொண்டு வாழ்தல்
பற்றி,    “கொளைவல்    வாழ்க்கை”   யென்றும்,   உடை,   அணி
முதலியவற்றினும்  உணவு  தலைமை  யுடைத்தாதல்  பற்றி,   “இனிது
உணீஇயர்” என்றும் கூறினான்.

இதுகாறும்   கூறியது, குட்டுவற் கண்டனம் வரற்கு யாமும் சேறுகம்,
நும்  கிளை  இனிது  உணீஇயர்,  விறலியர்,  நீயிரும் வம்மின்  எனக்
கூட்டி முடிவு செய்க.

இதனால் அச் செங்குட்டுவனுடைய வரையா ஈகை கூறியவாறாயிற்று.


 மேல்மூலம்