முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
50. மாமலை முழக்கின் மான்கணம் பனிப்பக்
கான்மயங்கு கதழுறை யாலியொடு சிதறிக்
கரும்பமல் கழனிய நாடுவளம் பொழிய
வளங்கெழு சிறப்பி னுலகம் புரைஇச்
 5 செங்குணக் கொழுகுங் கலுழி மலிர்நிறைக்
காவிரி யன்றியும் பூவிரி புனலொரு
மூன்றுடன் கூடிய கூட லனையை
கொல்களிற், றுரவுத்திரை பிறழ வவ்வில் பிசிரப்
புரைதோல் வரைப்பி னெஃகுமீ னவிர்வர
 10 விரவுப்பணை முழங்கொலி வெரீஇய வேந்தர்க்
கரண மாகிய வெருவரு புனற்றார்
கன்மிசை யவ்வுங் கடலவும் பிறவும்
அருப்ப மமைஇய வமர்கடந் துருத்த
ஆண்மலி மருங்கி னாடகப் படுத்து
 15 நல்லிசை நனந்தலை யிரிய வொன்னார்
உருப்பற நிரப்பினை யாதலிற் சாந்துபுலர்பு
வண்ண நீவி வகைவனப் புற்ற
வரிஞிமி றிமிரு மார்புபிணி மகளிர்
விரிமென் கூந்தன் மெல்லணை வதிந்து
 20 கொல்பிணி திருகிய மார்புகவர் முயக்கத்துப்
பொழுதுகொண் மரபின் மென்பிணி யவிழ
எவன்பல கழியுமோ பெருமபன்னாட்
பகைவெம் மையிற் பாசறை மரீஇப்
பாடரி தியைந்த சிறுதுயி லியாலாது
 25 கோடுமுழங் கிமிழிசை யெடுப்பும்
பீடுகெழு செல்வ மரீஇய கண்ணே.

     துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு - செந்தூக்கு.
பெயர் - வெருவரு புனற்றார் (11)

     (ப - ரை) மாமலைக்கண்ணே (1) உறை சிதறி (2) எனக் கூட்டி
அதனைச் சிதறவெனத் திரிக்க.

     4. உலகம் புரைஇயென்றது உலகத்தைப் புரந்தென்றவாறு.

     7. மூன்றுடன் கூடிய கூடலென்றது அக்காவிரிதானும்
ஆன்பொருநையும் 1குடவனாறுமென 2இம்மூன்றும் சேரக்கூடிய
கூட்டமென்றவாறு.

     காவிரி அனையையாவதேயன்றி (6) மூன்றுடன் கூடிய
கூட்டத்தனையை (7) எனக் கொள்க.

     8. உரவுத்திரை பிறழவென்றது வலிய திரைகள் தம்மில்
மாறுபட்டுப் புடைபெயரவென்றவாறு.

     அவ்வில் பிசிரவென்றது அவ்விற்கள் அத்திரைக்குப் பிசிராக
வென்றவாறு. பிசிரவென்றது பெயரடியாகப் பிறந்த வினை.

     பிறழ (8) என்றது முதலாக நின்றசெயவெனெச்சங்களை
நிரப்பினை (16) என்னும் பிறவினையோடு முடிக்க.

     பணையாகிய முழங்கொலியென இருபெயரொட்டு.

     ஒலியையுடைய (10) புனல் (11) எனக் கூட்டுக.

     10. வெரீஇய வேந்தரென்றது தம் பகையை வெருவி
இவன்றன்னுடன் நட்பாகிய வேந்தரென்க.

     11. வெருவரு புனற்றாரென்றது தன்னை அடைத்தார்
வெருவரத்தக்க புனற்றாரென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'வெருவரு புனற்றார்' என்று
பெராயிற்று.

     புனற்றாரென்றதனைச் தார்ப்புனலென்றவாறாகக் கொள்க.

     16. உருப்பென்றதனைச் சினத்தீயென்றவாறாகக் கொள்க.

     ஆதலினென ஏதுப்பொருட்கண் நின்ற ஐந்தாவதற்கு யான்
நின்னை ஒன்று கேட்கின்றேனென்று ஒரு சொல் வருவிக்க.

     சாந்து புலர (16) வண்ணம் நீவ (17) எனத் திரிக்க.

     18. மார்புபிணி மகளிரென்றது மார்பாற் பிணிக்கப்பட்ட
மகளிரென்றுவாறு.

     வதிந்து (19) என்னும் எச்சத்தினைப் பொழுதுகொள் (21)
என்னும் வினையொடு முடிக்க.

     முயக்கத்துப் (20) பொழுதுகொண் மரபின் மென்பிணி (21)
என்றது முயக்கத்திலே இராப்பொழுதைப் பயன் கொண்ட
முறைமையினையுடைய மெல்லிய உறக்கமென்றவாறு.

     மென்பிணியென்றது புணர்ச்சி 3யவதிக்கண்
அப்புணர்ச்சியலையலான் வந்த சிறுதுயிலை; 4கண்ணைப் பூவென்னும்
நினைவினனாய்ப் பிணியவிழவெனப் பூத்தொழிலாற் கூறினானென்க.

     22. நாள்பல எவன்கழியுமோவென நாளென்பது வருவிக்க.

     பின்னின்ற பன்னாள் (22) என்பதனைப் பாசறை மரீஇ (23)
என்பதனோடு கூட்டுக. மரீஇ யென்பதனை மருவவெனத் திரித்து
மருவுகையாலென்க.

     24. பாடரிது இயைந்த சிறுதுயிலென்றது 5இராப்பொழுதெல்லாம்
பகைவரை வெல்கைக்கு உளத்திற்சென்ற சூழ்ச்சி முடிவிலே
அரிதாகப்படுதல் இயைந்த சிறுதுயிலென்றவாறு,

     சிறு துயிலையுடைய (24) கண் (26) எனக் கூட்டுக.

     25. இயலாது (24) இசையெடுப்பும் (25) எனக் கூட்டுக.

     இமிழிசையென்றது இமிழிசையையுடைய 6இயமரங்களை

     கோடு - சங்கு. முழங்கென்றது அவ்வியமரங்களுக்கு
இடையிடையே முழங்குகின்றவென்றவாறு.

     26. பீடுகெழு செல்வமென்றது படைச்செல்வம்; வீடு - வலி.

     மரீஇய கண்ணென்றது அப்படைமுகத்திலே நாள்தோறும்
அமர்ந்தும் துயிலெழுந்தும் உலவிப் பழகின கண்ணென்றவாறு.

     நீ கூடலனையை (7); பெரும (22), தார்ப்புனலை (11) ஒன்னார்
(15) உருப்பற நிரப்பினையாகயைாலே (16), யான் நின்னை ஒன்று
கேட்கின்றேன்; பீடுகெழு செல்வம் மரீஇய கண் (26) முயக்கத்துப்
(20) பொழுது கொண்மரபின் மென்பிணி அவிழ (21) நாள்பல நினக்கு
எவன் கழியுமோ (22) எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது 7அவன் காமவேட்கையி்ற் போர்வேட்கை
மிகுத்துக் கூறியவாறாயிற்று.

     தார்ப்புனலை (11) ஒன்னார் (15) உருப்பற நிரப்பினை (16) என
எடுத்துச் செலவினை மேலிட்டுக் கூறினமையால், துறை வஞ்சித்துறைப்
பாடாண் ஆயிற்று. 8. 'கொல்களிறு' என்பது கூன்.

     (கு - ரை) 1-7. குட்டுவனுக்கு முக்கூடல் உவமை.

     1-6. காவிரியின் வெள்ளச் சிறப்பு.

     1. பெரிய மலையின் கண்ணே இடியோசையால் விலங்கின்
கூட்டங்கள் நடுங்கும்படி.

     2. காற்றோடு மயங்கிய விரைந்த துளிகளை ஆலங்கட்டியோடு
சிதறி.

     3. கரும்பு தழைத்து நெருங்கிய வயல்களையுடைய நாடு
வளத்தை மிகக் கொடுக்கும்படி.

     4. வளம் பொருந்திய சிறப்பினையுடைய உலகத்தைப்
பாதுகாத்து சிதறிப் (2) புரைஇயென இயைக்க.

     5-6. "காவிரிப்பாவை, செங்குணக் கொழுகி" (மணி. பதி. 12-3)

     5.7. நேர்கிழக்கே ஒழுகுகின்ற கலங்கலாகிய நிறைந்த
வெள்ளத்தையுடைய காவிரியொன்று அல்லாமலும், பூக்கள் விரிந்த
நீரையுடைய மூன்று ஆறுகளும் ஒருங்கு கூடிய முக்கடலைப்
போன்றாய்.

     8-11. சேனையைப் புலனாக உருவகம் செய்கின்றார்.

     8. கொல்லுகின்ற களிறாகிய உலாவுதலையுடைய அலைகள்
தம்மில் மாறுபட்டுப் புடைபெயர, அவற்றிற்கு ஏற்ப அழகிய விற்கள்
அலைகளின் பிசிர்போல விளங்க.

     9. உயர்ந்த கேடகத்தின் எல்லையின்மேல் வேலாகிய
மீன்விளங்க. கேடகமும் வேலும் சேர்த்துக் கூறப்படும் (பட்டினப்.
78; குறிப்புரை); கேடகத்திற்கு ஆமையை உவமையாகக் கொள்க;
"கமடமாம் பரிசை வாங்கி;" (குற்றாலப். திருநதிச். 21). வேலுக்கு மீன்:
"உறழ்வேலன்ன வொண்கயன் முகக்கும்", "வயற்கெண்டையின்
வேல்பிறழினும்" (புறநா. 249 : 8, 287 : 4.)

     10. ஒன்றோடு ஒன்று கலத்தலையுடைய முரசின் ஒலியாகிய
ஓசையைக் கேட்டு அஞ்சிய, பின் நினக்கு நட்பான அரசர்க்கு.
முரசொலி புனலின் ஒலிக்கு உவமை.

     11. பாதுகாவலாகிய அஞ்சத்தக்க தூசிப்படையாகிய புனலை;
புனற்றாரென்பதனைத் தார்ப்புனலென்று மாற்றிக்கொள்க.

     12-4. மலைகளின் மேலுள்ளனவும் கடலின் கண்ணுள்ளனவும்
ஆகிய அரண்களை அமைத்த, போரின் கண்ணே வஞ்சியாது
எதிர்நின்று போர் செய்து கோபித்த வீரர் மிக்க இடங்களையுடைய
நாடுகளை நின்னுடையனவாகக் கொண்டு; ஆள் - வீரர்; "ஆளமர்
வெள்ளம்" (பு. வெ. 32)

     15-6. அப்பகையரசரது நல்ல புகழ் அகன்ற இடத்தையுடைய
உலகத்தினின்றும் கெட்டு ஓட, பகைவரது சினமாகிய தீ அழியும்படி
நிரப்பினை யாதலால், சேனையைப் புலனாக உருவகித்ததற்கேற்ப,
பகைவரது சினத்தைத் தீயாகக் கூறினார். புனற்றாரை (11) நிரப்பினை
(16) என முடிக்க.

     16-9. சேரனது இன்பச் சிறப்புக் கூறப்படும்.

     பூசிய சந்தனம் புலரவும், வண்ணம் துடைக்கப்படவும், பல
வகையான அழகு பொருந்திய கோடுகளையுடைய வண்டுகள்
ஒலிக்கும் மார்பாற் பிணிக்கப்பட்ட மகளிரது, விரிந்த மெல்லிய
கூந்தலாகிய மெல்லிய படுக்கையிலே தங்கி. கூந்தல் மெல்லணை:
குறுந்.
254 : 5, ஒப்பு.

     20-22. வருத்துகின்ற காமமாகிய நோயை நீக்கும் பொருட்டு,
அவரது மார்பை விரும்பிச் சேர்ந்த புணர்ச்சியால் இராப்பொழுதைப்
பயன்கொண்ட முறைமையினால் உண்டான மெல்லிய சிறுதுயில்
நீங்குவதற்குப் பெரும, நாள் எவ்வளவு பல செல்லுமோ? பாசறையில்
இன்னும் எவ்வளவு காலம் இருக்க நேருமோ என்றபடி. திருகிய -
திருக.

     22-6. பகைவரது கொடுமையினால் பலநாள் பாசறையிலே
தங்கிப் பழகுதலால் தூங்குதல் அரிதாகப் பொருந்தும் சிறுதுயிலும்
இயலாமல் சங்கொலியும், பிறவாத்தியங்களின் ஓசையும் எழுப்புகின்ற
பெருமை பொருந்திய படையாகிய செல்வத்திற் பழகிய கண்கள்.

     மரீஇய கண் (26) எவன்பல கழியுமோ (22) என இயைக்க. (10)

     இதன் பதிகத்துக் கடவுட்பத்தினி (4) என்றது கண்ணகியை.

     9. இடும்பில் என்றது இடும்பாதவனத்தை. புறம் - அவ்விடம்.

     15. வாலிழை கழித்த பெண்டிரென்றது அப்பழையன்
பெண்டிரை.

     16. கூந்தன்முரற்சி என்றது அவர் கூந்தலை அரிந்து திரித்த
கயிற்றினை.

     17. குஞ்சரவொழுகை பூட்டியது அப்பழையன் வேம்பினை
ஏற்றிக் கொண்டுபோதற்கு.

     18. குடிக்குரியோரென்து அரசிற்குரியாரை.


     1குடவனெ்றாற் போல்வதோர் யாறுமெனவும் பிரதிபேதமுண்டு.

     2இத்தலம் திருமுக்கூடலென்று வழங்கப்படும் இங்கே
பழையதாகிய சிவாலயம் ஒன்றுண்டு.

     3அவதி - எல்லை.

     4இது சமாதியென்னும் குணவணியின் பாற்படும்; "கொழுநகைக்
குறும்போது குறிப்பிற் பிரியாப், புணர்ச்சி மகளிர் போகத்துக் கழுமித்,
துயிற்கண் டிறந்த தோற்றம் போல, நறவுவாய் திறந்து நாண்மதுக்
கமழ" (
பெருங். 2. 15 : 21 - 4)

     5"நெடிதுநினைந்து, பகைவர் சுட்டிய படைகொ
ணோன்விரல்..............இன்றுயில் வதியுநற் காணாள்" (
முல்லைப்
.76 - 80)

     6இயமரம் - வாத்தியம்; சங்கும் வாத்தியங்களும் சேர்த்துக்
கூறப்படும்; "சிலம்பின வியமரந் தெழித்த சங்கமே" (
சீவக. 779)

     7"மூதில்வாய்த் தங்கிய முல்லைசால் கற்புடைய, மாதர்பாற்
பெற்ற வலியளவோ - கூதிரின், வெங்கண் விறல்வேந்தன் பாசறையன்
வேனிலான், ஐங்கணை தோற்ற வழிவு" (
தொல். புறத். 21, ந. மேற்.);
பு. வெ. 169-70.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

10. வெருவரு புனற்றார்
 
50.மாமலை முழக்கின் மான்கணம் பனிப்பக்
கான்மயங்கு கதழுறை யாலியொடு சிதறிக்
கரும்பமல் கழனிய நாடுவளம் பொழிய
வளங்கெழு சிறப்பி னுலகம் புரைஇச்
 

5

செங்குணக் கொழுகுங் கலுழி மலிர்நிறைக்
காவிரி யன்றியும் பூவிரி புனலொரு
மூன்றுடன் கூடிய கூட லனையை
கொல்களிற்று, உரவுத்திரை பிறழ வல்வில் பிசிரப்
புரைத்தோல் வரைப்பி னெஃகுமீ னவிர்வர
 
10விரவுப்பணை முழங்கொலி வெரீஇய வேந்தர்க்
கரண மாகிய வெருவரு புனற்றார்
கன்மிசை யவ்வும் கடலவும் பிறவும்
அருப்ப மமைஇய வமர்கடந் துருத்த
ஆண்மலி மருங்கி னாடகப் படுத்து
 
15நல்லிசை நனந்தலை யிரிய வொன்னார்
உருப்பற நிரப்பினை யாதலிற் சாந்துபுலர்பு
வண்ணம் நீவி வகைவனப் புற்ற
வரிஞிமி றிமிரு மார்புபிணி மகளிர்
விரிமென் கூந்தன் மெல்லணை வதிந்து
 
20கொல்பிணி திருகிய மார்புகவர் முயக்கத்துப்
பொழுதுகொண் மரபின் மென்பிணி யவிழ
எவன்பல கழியுமோ பெரும பன்னாள்
பகைவெம் மையிற் பாசறை மரீஇப்
பாடரி தியைந்த சிறு துயி லியலாது
 
25கோடு முழங் கிமிழிசை யெடுப்பும்
பீடுகெழு செல்வ மரீஇய கண்ணே.
 

துறை  : வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு.
வண்ணம்  : ஒழுகுவண்ணமும்சொற்சீர்வண்ணமும்.
தூக்கு  : செந்தூக்கு.
பெயர்  : வெருவருபுனற்றார்.

 1 - 7. மாமலை.........அனையை.

உரை :  மாமலை -  பெரிய மலையின் கண்ணே ;    முழக்கின்-
மேகம்  தன்  முழக்கத்தினால்  ;  மான்  கணம் பனிப்ப - விலங்குக்
கூட்டம்  அஞ்சி நடுங்க ; கால் மயங்கு கதழ் உறை - காற்றுக் கலந்து
மோதுதலால்   விரைவுடன்  பொழியும்  மழை  ;  ஆலியொடு சிதறி
ஆலங்கட்டியோடு  சிதறிப்  பொழிய ; கரும்பு  அமல் கழனிய  நாடு-
கரும்புகள் நெருங்கிய கழனிகளையுடைய நாடுகள் ;  வளம்  பொழிய-
வளம்  பெருகிச்  சுரக்க ;  வளம் கெழு சிறப்பின் உலகம்  புரைஇ -
வளம்    பொருந்திய   சிறப்பினையுடைய    நிலவுலகைப்   புரந்து;
செங்குணக் கொழுகும்- நேர்கிழக்காக   ஓடும்; கலுழி மலிர்   நிறைக்
காவிரியன்றியும்  - கலங்கலாகிய   நிறைந்த     வெள்ளத்தையுடைய
காவிரியை யொப்பதேயன்றி; பூவிரி  புனல்  ஒரு  மூன்றுடன்  கூடிய
கூடல் அனையை - பூக்கள் விரிந்த புனலையுடைய ஆறுகள் மூன்றும்
கூடிய முக்கூடலையும் ஒப்பாவாய் எ - று.

மலைமேல்   தவழும் மழையின் முழக்கம் அதனால் எதிரொலிக்கப்
பட்டு    மிகுதலால்    அங்கு   வாழும்   விலங்கினம்   அஞ்சுதல்
இயல்பாதலால்,  “மாமலை  முழக்கின்  மான்கணம் பனிப்ப” என்றும்,
ஆண்டு  மோதும்  காற்றால்  அலைப்புண்டு  மழை  கடு விசையுடன்
பொழிவது    தோன்ற,    “கான்முழங்கு    கதழுறை”    யென்றும்,
ஆலங்கட்டியும்  உடன் பெய்தமையின், “ஆலியொடு சிதறி” யென்றும்
கூறினார்.  சிதற  வென்பது  சிதறி யென நின்றது. மாமலைக்கண்ணே
உறை  சிதறியெனக்  கூட்டி  அதனைச்  சிதறவெனத் திரிக்க” என்று
பழைய வுரைகாரரும் கூறினார்.

காவிரி     செங்குணக்  கொழுகுதலால்  அது  பாயும் நிலத்தின்
விளைபயன்  கூறுவார்,  “கரும்பமல்  கழனிய  நாடுவளம்  பொழிய”
என்றார்.  கழனிய  ;  பெயரெச்சக்குறிப்பு. செல்வம் மிக வுண்டாமாறு
தோன்ற, “வளம் பொழிய” என்றார். காவிரி பாயும் நாட்டிற்குச் சிறப்பு
அதன் குன்றா வளமாதலின், அதனை “வளங்கெழு சிறப்பின் உலகம்”
என்றும்,    தீமை    கெடு்த்து   நல்லதன்   நலத்தை   யோம்புதல்
புரத்தலாதலால், அது செய்யும் காவிரியின் செயலை, “உலகம் புரைஇச்
செங்குணக்  கொழுகும் காவிரி” யெனச் சிறப்பித்தும் உரைத்தார். நேர்
நிற்றலைச்    செந்நிற்றல்    என்றாற்போல   நேர்கிழக்காக  ஓடுதல்
“செங்குணக்  கொழுகும்”  எனப்பட்டது.  புரைஇ  -  புரந்து. உலகம்,
ஈண்டு  நாட்டின்  மேற்று ; “வேந்தன் மேய தீம்புன லுலகம்” (தொல்.
அகத் 5) என்றாற்போல, காவிரி செங்குணக் கொழுகி யுலகம் புரத்தற்கு
அதன்     தலையிடமாகிய     மலைக்கண்     மழை     பெயல்
இன்றியமையாமையின்,    அதனை    முதற்கண்    எடுத்தோதினார்.
அல்லதூஉம்,  இப் பாட்டின்கண் செங்குட்டுவனுடைய போகச்சிறப்பை
விதந்     தோதுவதால்     அதற்கு     ஆக்கமாகும்    மழையும்
செல்வப்பெருக்கும் தொடக்கத்தே எடுத்தோதுகின்றாரென்றலுமாம்.

செங்குட்டுவனும்  செம்மை நெறிக்கண் ஒழுகி நாடு வளம் பெருகத்
தண்ணளி  சுரந்து இனிது புரத்தல் பற்றி, காவிரி யனையை  யென்பார்.
“காவிரி   யனையை”   என்றார்.   மூன்று   ஆறுகள்   கூறுமிடத்து
மூன்றிடத்துப்  பொருள்களும்  ஒருங்கு  தொகுவதுபோல்,  கடல்பிறக்
கோட்டிக்   கடல்படு   பொருளும்,   சேரநாடுடைமையால்  மலைபடு
பொருளும்  பழையன்  முதலியோரை  வென்று,  காவிரி  செங்குணக்
கொழுகும்  நாடுடைமையால் அந்நாட்டுப் பொருளும் என்ற மூவகைப்
பொருளும் ஒருங்கு தொக நிற்கின்றனை யென்பார். “பூவிரி புனலொரு
மூன்றுடன்   கூடிய   கூடலனையை”  என்றார்.  மூன்றுடன்  கூடிய
கூடலைப் பழைய வுரைகாரர், “அக் காவிரி தானும் ஆன்

பொருநையும்  குடவனாறு மென இம் மூன்றும் சேரக்கூடிய கூட்ட”
மென்பர்.   காவிரி  யனையை  யாவதே  யன்றி  மூன்றுடன்  கூடிய
கூட்டத்தனையை என முடிக்க. கடுகி வரும் காவிரிப் பெருக்கு, “கலுழி
மலிர்    நிறை”    யெனப்பட்டது.    பனிப்ப,    சிதற     வென்ற
செயவெனெச்சங்கள்    காரணப்பொருளினும்,   பொழிய   வென்பது
காரியப்பொருளினும் வந்தன.

இனி,    இம் முக்கூடலைப்  பவானி  கூட  லென்பாரும்  உண்டு.
ஆண்டுக்  குடவனாறு காணப்படாமையானும், காவிரி ஆங்குத்  தெற்கு
நோக்கி யொழுகுதலானும், அது பொருந்தாமை யுணரப்பாடும்.

8 - 16. கொல்களிற்று.........நிரப்பினை.

உரை :  கொல் களிற்று உரவுத்   திரை பிறழ -   கொல்லுகின்ற
களிறுகளாகிய  பரந்த  கடலலைகள்  அசைந்துவர ; வல் வில் பிசிர -
வலிய  வில்லாகிய  படை  பிசிர்  போலப்  பரவ  ;  புரைத்  தோல்
வரைப்பின்  -  உயர்ந்த  கேடகத்தின்  விளிம்பின் மேல்; எஃகு மீன்
அவிர்வர  -  வேற்படையாகிய  மீன்கள்  விளங்க  ; விரவுப்  பணை
முழங்கொலி   -  போர்ப்பறை  முதலியவற்றோடு  கலந்து  முழங்கும்
முரசொலி  கேட்டு;  வெரீஇய  வேந்தர்க்கு  -  அஞ்சிப்  புகலடைந்த
அரசர்கட்கு; அரணமாகிய வெருவருதார்ப் புனல் - காப்பாகிய அச்சம்
தரும்   தூசிப்படையாகிய  வெள்ளம்;  கன்மிசை  யவ்வும்   கடலவும்
பிறவும்  -  மலையிடத்தும் கடலிடத்தும் பிறவிடத்து   முள்ளனவாகிய ;
அருப்பம்  அமைஇய  - அரணிடத்தே பொருந்திய ;  அமர் கடந்து -
போர்களை  வஞ்சியாது  பொருது  வென்று  ;  உருத்த  ஆள்  மலி
மருங்கின்  -  உட்குப் பொருந்திய வீரர் மலிந்த   இடங்களையுடைய ;
நாடு  அகப்படுத்து - நாடுகளைக் கைப்பற்றி ; நனந் தலை -  அகன்ற
இடத்தையுடைய உலகின் கண்; ஒன்னார் நல்லிசை இரிய -  பகைவரது
நல்ல   புகழ்  கெட்டழிய  ;  உருப்பு  அற  நிரப்பினை  -  அவரது
சினமாகிய தீ முற்றும் அவியச் செய்தனை எ - று.

இதன்கண்,     செங்குட்டுவனுடைய  படையினை   ஒரு   பெரு
வெள்ளத்தோடு    உருவகம்   செய்கின்றார்.   தூசி்ப்   படையினை
வெள்ளத்தின்   புனலாகவும்,   களிற்றியானைகளை  அலைகளாகவும்,
விற்படையைப்     பிசிராகவும்,     வேற்படையை    மீன்களாகவும்,
விரவுப்பணை  யொலியை  முழக்கமாகவும்  சென்று  பகை வேந்தரது
சினமாகிய  தீயை அவித்தவாறு கூறுமாற்றால் அவனுடைய படையின்
சிறப்புக்   கூறியவாறாகிறது.   பெருவெள்ளத்திலெழும்   பேரலைகள்
அணியணியாய்ச் சென்று சேர்தல் போல, யானைகள் பரந்து அசைந்து
சென்றன   என்றற்கு,   “கொல்களிற்றுரவுத்  திரை  பிறழ”  என்றார்.
“உரவுத்  திரை  பிறழ வென்றது, வலிய திரைகள் தம்மில் மாறுபட்டுப்
புடைபெயர     வென்றவா”     றென்பர்     பழைய    வுரைகாரர்.
யானைப்படைக்கு  மேலே  வில்லேந்திய  வீரர்  தாமேந்திய வில்லின்
தலை  தோன்ற மேம்பட்டு வருவதை, அலைமேல் தோன்றும் பிசிராக
நிறுத்தி,  “வல்வில்  பிசிர”  என்றார்.  பிசிர், நீர்த்திவலை. “வல் வில்
பிசிர  வென்றது  விற்கள்  அத்திரைக்குப் பிசிராக” வென்றும், “பிசிர
வென்றது   பெயரடியாகப்  பிறந்த  வினை”  யென்றும்  பழையவுரை
கூறும்.   வேற்படையின்  காம்பு  கேடகத்தில்  மறைய  இலைப்பகுதி
மட்டில்   தோன்றுவது   அவ்வெள்ளத்தில்  திகழும்  மீன்போறலின்,
“புரைத்தோல்    வரைப்பின்    எஃகுமீ    னவிர்வர”    வென்றார்.
போர்ப்பறையும்    முரசும்    பிற    இசைக்    கருவிகளுங்   கூடி
யிசைத்தலின்,     அம்  முழக்கத்தை   “விரவுப்பணை முழங்கொலி”
யென்றார்.    யாறு   பெருகி   வருமிடத்து   அதனைச்   சிறைத்து
வாய்க்கால்களின்   வழியாக   வயல்களுக்கும்   ஏரி  குளங்களுக்கும்
பாய்ச்சக்   கருதும்   உழவர்  பறை  முதலிய  கருவிகளை  முழக்கி
மக்களைத்   தொகுத்துச்   செய்வன  செய்து  கொள்ளுமிடத்தெழும்
முழக்கமு    முண்மையின்,    இதனை    விதந்தோது   வாராயினர்.
“பணையாகிய   முழங்கொலி   யென   இருபெயரொட்டு”   என்றும்,
“ஒலியையுடைய  புனல்  எனக் கூட்டுக” என்றும் பழையவுரை கூறும்.
நட்பரசராயின்  வெருவுதற்குக்  காரணமின்மையானும், “அரணமாகிய”
என்றதனாலும்,   ஈண்டுக்   கூறும்  வேந்தர்  பகையாயிருந்து  புகல்
பெற்றவரென்பது    பெறுதும்.    வெரீஇய    வேந்த   ரென்றற்குப்
பழையவுரைகாரர், “தம் பகையை வெருவி இவன் றன்னுடன் நட்பாகிய
வேந்த   ரென்க”   என்றும்,   “வெருவரு   புனற்றார்”  என்றற்குத்
“தன்னையடைந்தார்   வெருவரத்தக்க   புனற்றார்”   என்றும்,  “இச்
சிறப்பானே இதற்கு வெருவரு புனற்றார் என்று பெயராயிற்” றென்றும்
கூறுவர்.  புனற்றார்  என்பதனைத்  தார்ப்புன  லென மாறிக் கொள்க.
மலையையும்    கடலையும்    பிறவற்றையும்    அரணாகக்கொண்டு
செருக்கியிருந்தோரோடு   பொருது  வென்றா  னென்பார், “கன்மிசை
யவ்வும்    கடலவும்   பிறவும்   அருப்பம்”   என்றார்.   மலையை
யரணாகக்கொண்டு  செருக்கியவர்  வடவாரியரும்,  கடலை யரணாகக்
கொண்டிருந்தவர்    கடற்பகைவருமாவர்.    வடவாரியரை   வென்று
மேம்பட்டதை,   “கடவுட்  பத்தினிக்  கற்கோள்  வேண்டி,  கானவில்
கானம்  கணையிற்  போகி, ஆரிய வண்ணலை வீட்டி” என்று பதிகங்
கூறுதலும்,  கடலரணை  வென்றது  கடல்பிறக்  கோட்டிய  செய்தியும்
வற்புறுத்துகின்றன.  உருத்த, உருவையுடைய உரு, உட்கு. கண்டார்க்கு
நெஞ்சிலே  உட்குதலைப்  பயத்தல்பற்றி,  “உருத்த  ஆள்” என்றார்.
ஆள்,  போர்  வீரர்.  இவ்  வீரர்  தொகை  மிக்குள்ள  நாடென்றது,
அவற்றை    அகப்படுத்தும்    அருமை   புலப்படுக்கு    முகத்தால்
தார்ப்படையின்    பெருமையைச்   சிறப்பித்தவாறு.      நனந்தலை:
ஆகுபெயர்.  கெடாப்  புக  ழென்றற்கு  நல்லிசையென்று  கூறி, அது
கெட்ட  தென்றற்கு,  “நல்லிசை  இரிய”  என்றார்.  புகழ் கெடாமைக்
கேதுவாகிய  வன்மை இப்படைப் பெருமையால் அழிந்தமை தோன்ற,
“நல்லிசை”  என்று  குறிப்பால்  விதந்தோதினார். உருப்பு, வெப்பம் ;
ஈண்டு   வெகுளிக்காயிற்று.  புனல்  என்றதற்  கேற்ப,  “நிரப்பினை”
யென்றார்.  பழைய  வுரைகாரர், “உருப்பென்றதனைச் சினத்தீ யென்ற
வாறாகக் கொள்க” என்பர்.

“பிறழ வென்றது, முதலாக நின்ற செயவெனெச்சங்களை நிரப்பினை
யென்னும் பிறவினையொடு முடிக்க” என்பது பழையவுரை.

16 - 22. ஆதலின்...............கழியுமோ.

உரை : ஆதலின் -ஆதலினாலே;  சாந்து புலர்பு - பூசிய சந்தனம்
புலர;  வண்ணம்  நீவி - நுதலிலிட்ட திலகமும் கண்ணிலிட்ட மையும்
பிறவுமாகிய  வண்ணங்கள்  நீங்க ; வகை வனப்புற்ற - பல்வகையாகக்
கைபுனையப்பட்ட   அழகு   பொருந்திய  ;  வரிஞிமிறு    இமிறும்-
வரிகளையுடைய  வண்டினம்  ஒலிக்கும் ; மார்பு பிணி மகளிர் - நின்
மார்பினால்  பிணிக்கப்பட்ட  மகளிரது விரிமென் கூந்தல் மெல்லணை
வதிந்து     - விரிந்த மெல்லிய கூந்தலாகிய மெல்லிய படுக்கையிலே
கிடந்து  ;  கொல்  பிணி  திருகிய  மார்பு  கவர்  முயக்கத்து  -மிக
வருத்தம்  பயக்கும்  காம வேட்கை மிகுதலால் மார்படைய முயங்கும்
மயக்கத்தால்;  பொழுது  கொள்  மரபின்  - இராப்பொழுதைப் பயன்
கொள்ளும்  முறைமையினையுடைய;  மென்  பிணியவிழ -  சிறுதுயில்
பெறாதொழியுமாறு  ;  பெரும  - பெருமானே ; பல - நாள்  பலவும்;
எவன் கழியுமோ - எவ்வாறு கழியுங் கொல்லோ எ - று.

புலர்பு,     நீவி என நின்ற எச்சவினைகளைப் புலர, நீவ  எனத்
திரிக்க,  வகை  வனப்புற்ற  மகளிர், வரிஞிமி றிமிரும் மகளிர், மார்பு
பிணி   மகளிர்  என  இயையும்.  கூந்தலாகிய  மெல்லணை வதிந்து
பொழுது  கொள்ளும்  என முடிக்க. புணர்ச்சிக்கண் சாந்து புலர்தலும்
வண்ணம்  நீங்கலும்  இயல்பாதலின்,  “சாந்து  புலர  வண்ணம் நீவ”
என்றார்.  இனி,  வகை  வனப்புற்ற புணர் துணை மகளிர்பால் எழும்
நறுமணம்  குறித்து வண்டு மொய்த் திசைக்கும் என்பது பற்றி, “வகை
வனப்புற்ற வரிஞிமி றிமிரும் மகளிர்” எனல் வேண்டிற்று. இனி, வகை
வனப்புற்ற  வரிஞிமி றிமிரும் கூந்தலெனக் கூந்தலொடு இயைப்பினும்
அமையும்  ;  மகளிர்  கூந்தல்  ஐவகையாகக் கை புனையப்படுதலும்,
வண்டு    மொய்த்    திசைத்தலும்   இயற்கையாதலின்,   புணர்ச்சி
பெற்றொழுகும்   மகளிர்பால்   எழும்   மணம்   மான்மதச்  சாந்து
முதலியனவும் பல பூக்களும் விரவி நாறு மென்பர்  நச்சினார்க்கினியர்.
“தாங்கரு   நாற்றந்   தலைத்தலை   சிறந்து,   பூங்கொடிக் கிளர்ந்த
புகற்சியென வாங்கிற், பகலுங் கங்குலு மகலாதொழுகும்” (தொல். பொ.
114 நச். மேற்.) என்று சான்றோர் கூறுதல் காண்க.

காதலர்     மார்பிற்  றுஞ்சும்  உறக்கமே  பெரிதாகக்  கருதியும்,
அதனையடைய     முயங்கிப்     பெறும்     அயரா    வின்பமே
பேரின்பமென்றெண்ணியும்   மகளிர்   அவர்   மார்பையே  நினைந்
தொழுகுதல்  பற்றி, “மார்பு  பிணி  மகளிர்” என்றார். காதலர் மார்பு
“வேட்டோர்க்   கமிழ்தத்  தன்ன  கமழ்  தார்மார்பு”  (அகம்.  332)
என்றும்,   “காதலர்   நல்கார்  நயவாராயினும்,  பல்காற்  காண்டலும்
உள்ளத்துக்   கினிதே”  (குறுந்.  60)  என்றும்,  “ஆர்கலி  வெற்பன்
மார்புநயந்  துறையும்  யானே”  (நற்.  104)  என்றும்,  “நின்  மார்பு
புளிவேட்கைத்  தொன்றிவள்  மாலுமா  றாநோய் மருந்து” (திணைமா.
142)  என்றும்  சான்றோர் கூறுவன பலவும், காதலர் மார்பு மகளிர்க்கு
இன்பவூற்றாய்      இன்றியமையாவியல்பிற்றாதல்      துணியப்படும்.
புணர்துணைக்    காதலியோடு   உடன்கிடந்துறங்கும்   உறக்கத்தைக்
கதுப்பிற்  பாயலென்ப  வாகலின், ஈண்டு அதனை “விரிமென் கூந்தல்
மெல்லணை  வதிந்து”  என்றார்.  கூடியுறையும்  தலைமகனொருவன்,
“செய்வினை  முடித்த  செம்ம  லுள்ளமொடு, இவளின் மேவினமாகிக்
குவளைக்,   குறுந்தாள்   நாண்மலர்   நாறும்,   நறுமென்   கூந்தல்
மெல்லணை  யேமே”  (குறுந். 270) என்று கூறுதல் காண்க. இடங்கழி
காமத்தால்  அடங்கா  வேட்கை  மீ  தூர  எய்தும்  ஆற்றாமையைக்
“கொல்பிணி”  என்றும்,  அதன் வயப்பட்டு ஒருவர் மெய்யில் ஒருவர்
புகுவதுபோலக்   கைகவர்  முயக்கம்  பெறுவது  பற்றி,  “கொல்பிணி
திருகிய  மார்பு  கவர் முயக்கத்து” என்றும், அப் புணர்ச்சி யிறுதியிற்
பிறக்கும்  அவசத்தால்  எய்தும்  சிறு துயிலை “மென்பிணி” என்றும்
கூறினார்.

இனிப்     பழையவுரைகாரர், “மார்பு பிணி மகளிரென்றது மார்பாற்
பிணிக்கப்பட்ட மகளி” ரென்றும், “முயக்கத்துப் பொழுதுகொள்  மரபின்
மென்பிணி  யென்றது முயக்கத்திலே இராப்பொழுதைப்  பயன்கொண்ட
முறைமையினையுடைய   மெல்லிய  வுறக்க”  மென்றும்,   “மென்பிணி
யென்றது புணர்ச்சி யவதிக்கண் அப்புணர்ச்சி யலையலான்  வந்த  சிறு
துயிலை” யென்றும், “கண்ணைப் பூவென்னும் நினைவினனாய்ப்  பிணி
யவிழவெனப் பூத்தொழிலாற் கூறினா” னென்றும் கூறுவர்.

இனி,     பொழுதுகொள் மரபு என்பதற்குக் காம வின்பத்துக்குரிய
இளமைப்பொழுதினைப்   பயன்கொண்ட  என்றுரைப்பினு   மமையும்.
நாளென ஒரு சொல் வருவிக்கப்பட்டது. கொல்களிறு என்பது கூன்.

சாந்துபுலர,    வண்ணம் நீவ, மகளிர் கூந்தல் மெல்லணை வதிந்து
மார்புகவர்    முயக்கத்துப்    பொழுதுகொள்   மரபின்   மென்பிணி
அவிழுமாறு நாள் பல எவன்கழியுமோ எனக் கூட்டி முடிக்க.

இக்கூற்று, குட்டுவனது மனத்திண்மையைக் கலக்குறுக்கும் நிலையில்
அமைந்திருக்கும் திறம் காண்க.

22 - 26. பன்னாள் ............ கண்ணே.

உரை : பன்னாள் - பல நாட்கள் ; பாசறைமரீஇ -பாசறையிடத்தே
யிருத்தலால்;  கோடு முழங்கு இமிழிசை எடுப்பும் - சங்கு   முழங்கும்
முழக்கமும்  பிற  கருவிக  ளிசைக்கும் ஒலியும் எழுப்பும் ; பீடு கெழு
செல்வம் - பெருமை பொருந்திய போர் விளைக்கும் செல்வத்தின்கண்
;  மரீஇய  கண்  -  பொருந்திய  நின்  கண் ; பகை வெம்மையின் -
பகைவர்  பாலுண்டாகிய  சினமிகுதியால்;  பாடு அரிது இயைந்த  சிறு
துயில்  இயலாது  -  உறங்குதல்  அரிதாகப் பொருந்திய சிறு துயிலும்
செவ்வே கொண்டிலதாகலான் ; எ - று.

பன்னாள்   மரீஇ, செல்வம் மரீஇய கண் சிறுதுயில் இயலாதாகலான்,
எவன்  பல  கழியுமோ  எனக்  கூட்டி  வினை முடிபு கொள்க. மரீஇ
யென்னும்     செய்தெ     னெச்சம்    காரணப்        பொருட்டு;
பழையவுரைகாரரும்,  “பின்னின்ற  பன்னா  ளென்பதனைப்   பாசறை
மரீஇ  யென்பதனோடு  கூட்டுக” என்றும், “மரீஇ யென்பதனை மருவ
எனத்  திரித்து  மருவு  கையா  லென்க”  என்றும்  கூறுவர்.  கோடு
முழங்கும்  முழக்கமும்  பிற  இசைக்  கருவிகள் இசைக்கும்  ஓசையும்
கண்ணுறங்கா     வண்ணம்     முழங்குதலால்,    “கோடு    முழங்
கிமிழிசையெடுப்பவும்”  என்றார். ஏனைச் செல்வ வருவாயினும்  போர்
செய்து   பெறும்  செல்வத்தையே  அரசர்  புகழ்தரும்   செல்வமாகக்
கருதினமையின்,   “பீடு   கெழு  செல்வம்”  என்றும்,   பகைவர்பால்
இக்குட்டுவற்   குண்டாகிய   சின   மிகுதியால்,  அவரை  முற்றவும்
வேறற்கண்  அவனதுள்ளம்  வினைக்குரியவற்றைச் சூழ்ந்த  வண்ணம்
இருந்தமையின்,   சிறு   துயிலும்   இலதாயிற்   றென்றற்கு,  “பகை
வெம்மையின் பாடரிதியைந்த சிறு துயில் இயலாது” என்றும் கூறினார்.
சிறு  துயில்  என்புழிச்  சிறப்பும்மை  விகாரத்தால்  தொக்கது.  பாடு,
கண்படுதல்.

இனிப் பழையவுரைகாரர், “கோடு, சங்கு” என்றும், “முழங்கென்றது
அவ்   வியமரங்களுக்கு   இடையிடையே   முழங்குகின்ற  என்றவா”
றென்றும்,  பீடு கெழு செல்வ மென்றற்கு “படைச் செல்வ” மென்றும்,
“பீடு,  வலி” யென்றும், “மரீஇய கண்ணென்றது அப்படை முகத்திலே
நாடோறும்   அமர்ந்தும்   துயிலெழுந்தும்  உலவிப்  பழகின  கண்”
ணென்றும்   கூறுவர்.   மேலும்   அவர்,   “பாடரி   தியைந்த சிறு
துயிலையுடைய  கண்”  எனவும்,  “இயலாது இசையெடுப்பும்” எனவும்
கூட்டுவர்.   பாடரி  தியைந்த  சிறுதுயில்  என்றதற்கு,  “இராப்பொழு
தெல்லாம்   பகைவரை   வெல்கைக்கு  உள்ளத்திற்  சென்ற  சூழ்ச்சி
முடிவிலே அரிதாகப்படுதல் இயைந்த சிறு துயில்” என்று கூறுவர்.

இனி     எவ்வாறு கூட்டினும்  பாசறைக்கண்ணும்  மலையிடத்துப்
போலக்  குட்டுவன்  சிறுதுயிலே  பெறுகின்றானென்ற  முடிபெய்துவது
காண்க.  பாசறைக்கண்  சூழ்ச்சியிற் சென்ற உள்ளத்தால்  சிறு துயிலே
பயின்ற   கண்ணாதலான்,  மென்பிணி  யவிழ்ந்தவழிச்   சூழ்தற்குரிய
திண்மையின்,  அந்நாள்  பலவும் நினக்கு எவ்வாறு கழியும்  என்பார்,
“எவன் பல கழியுமோ பெரும” என்றார். பல நாட்கள் பாசறை மரீஇக்
கழிதலால்,    “கொல்பிணி    திருகிய    மார்புகவர்   முயக்கத்துப்
பொழுதுகொள்   மரபிற்”   கழியும்   நாள்  சிலவென்பது  பெறுதும்.
அச்சிலவும் சிறு துயிலே பெறுதலின், ஏனைப் பொழுது கழியுந் திறமே
ஆசிரியர்  அறியக்  கருதுவார்  போலச்  சிறுதுயிலே பெறும் சிறப்புக்
செங்குட்டுவன்பால்    உண்மையும்,    அதனால்    அவன்    காம
வேட்கையினும்     போர்     வேட்கை     மிக்கவன்    என்பதை
வற்புறுத்தினமையும் பெற்றாம்.

இதுகாறும்     கூறியது, பெரும, நீ காவிரியன்றியும் கூடலனையை ;
வெருவரு தார்ப்புனலை ஒன்னார் உருப்பற நிரப்பினை ; முயக்கத்துப்
பொழுதுகொள்  மரபின்  மென்பிணி  எவன்பல  கழியுமோ; பீடுகெழு
செல்வம் மரீஇய நின்கண் பாசறை மரீஇப் பாடரி தியைந்த சிறு துயில்
இயலாதாகலான் என்று வினை முடிபு செய்து கொள்க.

இனிப்     பழையவுரைகாரர்,  “நீ  கூட  லனையை  ;  பெரும,
தார்ப்புனலை  ஒன்னார்  உருப்பற  நிரப்பினை  யாகையாலே  யான்
நின்னையொன்று  கேட்கின்றேன்  ;  பீடுகெழு  செல்வம் மரீஇயகண்,
முயக்கத்துப்  பொழுதுகொள்  மரபின்  மென்பிணி  யவிழ,  நாள்பல
நினக்கு எவன் கழியுமோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர்.

“தார்ப்புனலை     ஒன்னார் உருப்பற நிரப்பினை யென எடுத்துச்
செலவினை   மேலிட்டுக்   கூறினமையால்,   துறை,  வஞ்சித்துறைப்
பாடாணாயிற்று.”


 மேல்மூலம்